மாநில மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாநில மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 மார்ச், 2015

சென்னை சி.பி.எம் மாநாடு - ஆச்சரியப்பட்டுப்போன துப்புரவு தொழிலாளர்கள்..!

                    
          அண்மையில் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-ஆவது மாநில மாநாடு கடந்த 16-ஆம் தேதியிலிருந்து 19-ஆம் தேதி வரையில் நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நாளான 19-ஆம் தேதியன்று மாலை  சென்னை இராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாநாட்டு பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் மட்டுமல்லாது கட்சியின் விருப்பமுள்ள அனைத்து தோழர்களும், ஊழியர்களும் கலந்து கொண்ட மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  காலை 10 மணியிலிருந்தே வகை வகையான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாலை ஆறு மணிக்கு கட்சித்தலைவர்களின் சிறப்புரை வரை சிறு மணித்துளிகள் கூட வீணடிக்காமல் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
                  இந்நிகழ்ச்சிகளுக்கு காலையிலிருந்தே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்  ஆயிரக்கணக்கான பேர் கூடிய வண்ணம் இருந்தார்கள். அந்த மைதானத்தில் வயிற்றுப்பசிக்கு குறைந்த விலையில் உணவும், குடிநீரும் மாநாட்டு வரவேற்புக்குழு மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. அறிவுப்பசியை தீர்ப்பதற்கும் குறைவில்லாமல் ஏராளமான புத்தகங்கள் கால் பகுதி பொதுக்கூட்ட மைதானத்தில் குறைந்த விலைக்கு தாராளமாக கொட்டிக்கிடந்தன. ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த மைதானமோ மிகப்பெரிது. அங்கே ஆடம்பரமில்லாத மிகப்பெரிய பொதுக்கூட்டப் பந்தல். ப்ந்தலுக்குள்ளே பெரிய பொதுக்கூட்ட மேடை. பந்தலுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆயிரக்கணக்கான இருக்கைகள். பந்தலுக்கு வெளியே அமர்ந்திருப்பவர்களுக்கு மேடையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை காண்பதற்கு பந்தலின் இருப்பக்கமும் நேரடி ஒலி - ஒளிப்பரப்பு செய்யும் இரு பெரும் திரைகள். அப்பப்பா... ஏராளமான கூட்டம்.  மனைவி - மக்களுடன், குழந்தைகளுடன், நண்பர்களுடன் குடும்பம் குடும்பமாய் கூடிய கூட்டம். ஏற்கனவே வந்தவர்கள் அனைத்து இருக்கைகளையும் ஆக்கிரமித்து விட, நின்று கொண்டே பொதுக்கூட்டத்தை கவனித்தவர்கள் ஆயிரக்கணக்கானோர்.  கூட்டம் பெருகிப்போனதால் மைதானம் சிறுத்துப்போனது. ஆனால் கட்டுக்கடங்காத கூட்டமல்ல. ஆண்களும் பெண்களுமாய் கட்டுப்பாடுடன் கட்சிக்கடமை ஆற்றிய கூட்டம்.
               மக்கள் கூடும் இடம் என்பதால், கடலை, சம்சா போன்ற திண்பண்டங்களும், உணவுப்பொட்டலங்களும், டீ - காபியும் மைதானம் முழுதும் பரவலாக விற்கப்பட்டன. வந்திருந்த தோழர்களும், பொதுமக்களும் அவைகளை வாங்கி சாப்பிட்டுவிட்டு மைதானம் முழுதும் இரைத்து போட்டிருந்தனர். அவைகளை அந்த மைதானத்தை சுத்தம் செய்வதற்கு அமர்த்தப்பட்ட துப்புரவு தொழிலாளிப் பெண்கள் ஐந்தாறு பேர் மைதானத்தில் போடப்பட்ட குப்பைகளை சுத்தம் செய்துகொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் தான் அந்த மாநாட்டின் ''ஹைலைட்'' என்று சொன்னால் மிகையாகாது. அவர்கள் நம்மிடையே சொன்ன தகவல் என்னவென்றால்....
           ''மற்றக்கட்சிகளின் மாநாடு அல்லது பொதுக்கூட்டம் என்றால், அங்கே மேடையில் தலைவர்கள் ஒருபக்கம் பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த மாநாட்டிற்கு அல்லது பொதுக்கூட்டத்திற்கு வந்தவர்கள் அந்த மைதானத்தில் ஆங்காங்கே குழு குழுவாக உட்கார்ந்துகொண்டு தண்ணி அடிச்சிகிட்டு இருப்பார்கள். பிரியாணி பொட்டலங்கள் இரைந்து  கிடக்கும். போதையில் மானங்கெட்டு மைதானத்திலேயே விழுந்தும் கிடப்பார்கள். கூட்டம் முடிந்து மைதானம் முழுதும் காலியான பிறகு, வந்திருந்தவர்கள் குடித்துவிட்டு காலியாக போட்டுவிட்டு சென்ற மது பாட்டில்களை பொறுக்கியெடுத்து சேர்ப்பதற்கே எங்களுக்கு நேரம் சரியாக இருக்கும். அப்படி எடுத்து சேர்த்து வைத்த காலி பாட்டில்களை கடையில் போட்டால், எங்களுக்கு 2000 - 3000ன்னு ஏதாவது துட்டு கிடைக்கும். நாங்க எல்லோரும் பிரிச்சி எடுத்துப்போம். ஆனால் இது என்ன வித்தியாசமான கூட்டமா இருக்கு. அந்த மாதிரியான காட்சிகளை இங்க பார்க்கவும் முடியல. இதுவரையில் ஒரு பாட்டில் கூட எங்களுக்கு கிடைக்கல'' என்று ஆச்சரியப்பட்டு சொன்னார்கள்.
               அதைக்கேட்டதும், எங்களுக்கு பெருமை தாங்கல... இந்த ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் தான் என் கட்சி எனக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறது என்று மனதிற்குள்ளே பெருமைப்பட்டுப் போனேன்.   

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

இடதுசாரிகளே நம்பகமான மாற்று...!

     
              மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர், தோழர் பிரகாஷ் காரத் அவர்கள் கட்சியின் 21-ஆவது மாநில மாநாட்டில் ஆற்றிய உரை :-                            
       
              உலக அளவில் 6 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் எத்தகைய உத்திகளைக் கையாண்டன என்பதைப் பார்த்தோம்.

இடதுசாரிகளே நம்பகமான மாற்று!                             

           ஐரோப்பாவின் கிரீஸ் நாட்டில் இடதுசாரி சக்திகள் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. நெருக்கடியின் மையமாகவே இருந்த அந்த நாட்டில் நிகழ்ந்துள்ள இந்த மாற்றம், இடதுசாரிகள்தான் நம்பகமான மாற்று என்ற செய்தியை உலகத்திற்குச் சொல்கிறது.

          லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க சவால்களைச் சந்தித்து இடதுசாரிகள் முன்னேறுகிறார்கள். இவ்வாறு நெருக்கடிகள் அதிகரிக்க அதிகரிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் அரசியல், பொருளாதாரம் இரண்டு தளங்களிலும் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறது. ஆசியாவில் தனது முனைப்பைக் காட்டுகிற அமெரிக்கா, அதற்குத் தடையாக இருப்பது சீனா தான் என்று நினைக்கிறது. சீனாவுக்கு எதிராக இந்தியாவை தன் பக்கம் இழுத்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுகிறது.

             ஒபாமா-மோடி உடன்பாடுகளில் முக்கியமான ஒன்று, ஆசிய பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் முயற்சிகளில் இந்தியா ஒரு கூட்டாளியாக இருக்கும் என்பது.

மோடி அரசின் குணாம்சம்                    

               காப்பீட்டுத் துறையில் 49 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதிக்கும் சட்டத்திருத்தம், நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியாருக்கு விடுவதற்கான அவசரச் சட்டம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக நிலங்களைக் கையகப்படுத்தி ஒப்படைப்பதற்கான அவசரச் சட்டம் ஆகிய மூன்று அவசரச்சட்டங்கள் உள்பட கார்ப்பரேட்டுகளுக்குத் தொண்டூழியம் செய்வதே தன் கடமையாக, மோடி அரசு நாடாளுமன்றத்தைப் புறக்கணித்து இதுவரையில் 9 அவசரச் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. இவ்வாறு நாடாளுமன்றத்தைப் புறக்கணித்து அவசரச் சட்டம் கொண்டுவருவது மோடி அரசின் சர்வாதிகார குணாம்சத்தைக் காட்டுகிறது.

               கிராமப்புற மக்களுக்கான 100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு வெட்டு, சுகாதாரம் உள்ளிட்ட சமூகத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு வெட்டப்படுகிறது. விவசாயிகளைக் கைவிடும் வகையில் இந்திய உணவுக் கழகத்தை மூடுவதற்கான திட்டம், மக்களைக் கைவிடுகிற வகையில் பொதுவிநியோக முறை ஒழிப்பு ஆகிய நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன. எளியோரைக் கைவிட்டு நாட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கும் பெருமுதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும் அள்ளித் தருகின்றன. அவர்களுக்கு சேவை செய்வதற்காகவே, தொழிலாளர்களை நினைத்தால் வேலைக்குச் சேர்க்கலாம், நினைத்தால் வெளியேற்றலாம் என்று தொழிலாளர் சட்டங்களிலும் கை வைத்து முதலாளிகளுக்கு சேவை செய்து வருகிறது.

ஆர்.எஸ்.எஸ் நாட்டாமை                        

             மோடி அரசு, ஆர்எஸ்எஸ் தலைமை இரண்டுக்கும் இடையே ஒரு ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அமைப்பில் ஆர்எஸ்எஸ் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசின் அனைத்து அமைப்புகளிலும் ஆர்எஸ்எஸ் ஊடுருவுவதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

            தாய் மதம் திரும்புதல், பசுவதை தடைச் சட்டம், சமஸ்கிருதப் பாடம் உள்ளிட்ட இந்துத்துவ சித்தாந்தத் திணிப்பு, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்கள் என்று சங் பரிவார கூட்டத்தின் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

               ஆகவே, கார்ப்பரேட் சுரண்டல் சக்திகள், சங் பரிவார இந்து மதவெறி கோட்பாடு ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயம் உழைக்கும் வர்க்கத்தின் முன்னால் உள்ளது.

                நிலக்கரிச் சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து தொழிலாளர்கள் ஒன்றுபட்ட மாபெரும் வேலைநிறுத்தத்தை நடத்துகிறார்கள். மோடி அரசின் தேச விரோத நடவடிக்கைகளை எதிர்த்து பல்வேறு அமைப்புகளுடன் தொழிலாளர்களும் களம் இறங்கியுள்ளனர். கார்ப்பரேட் ஆதிக்கம், மதவெறி அரசியல் இரண்டிற்கும் எதிராக ஒரு விரிவான ஒற்றுமை நாட்டில் கட்டப்பட்டாக வேண்டும்.

தமிழகத்தில் ஒரு மாற்று                       

             திராவிட இயக்கப் பாரம்பரியம் என்று கூறும் அஇஅதிமுக, திமுக இரண்டுமே தமிழக மக்களைக் கைவிட்டுவிட்டன. இரண்டுமே பெரும் ஊழல்களில் சம்பந்தப்பட்டுள்ளன. மத்திய ஆட்சியில் காங்கிரஸ், பாஜக என யார் வந்தாலும் அவர்களுடைய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை இவ்விரு கட்சிகளும் ஆதரித்து வந்துள்ளன.

              தங்களுடைய சுயநலனுக்காக காங்கிரஸ், பாஜக இரண்டோடும் கூட்டுச் சேரவும் இவ்விரு கட்சிகளும் தயங்கியதில்லை.

                 ஆகவே ஒரு புதிய மாற்று தேவைப்படுகிறது. தமிழக மக்கள் முன் அரசியல் மாற்றை முன்வைக்கிற கடமையை நிறைவேற்றுவோம். மாநாடு இது குறித்து விவாதிக்கும்.

                  தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரின் போராட்டங்களுக்கும் துணை நிற்போம். தீண்டாமை எதிர்ப்பு, சாதியப்பாகுபாடுகள் எதிர்ப்பு ஆகியவற்றை இரண்டு திராவிடக் கட்சிகளும் கைவிட்டு விட்டாலும் நாம் உறுதியாக நின்று போராடுவோம்.

                அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வலுவாக கட்டுகிற கடமை நம்முன் உள்ளது. வலுவான இடதுசாரி இயக்கத்தையும், இடதுசாரி-ஜனநாயக மாற்றையும் வலுவாக முன்வைப்பதன் மூலமே தமிழகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
 
ஆங்கில உரையின் தமிழாக்கம் :             
தோழர் உ.வாசுகி           
மத்தியக் குழு உறுப்பினர், சிபிஐ(எம்)      
           
நன்றி : தீக்கதிர்                

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கிடுக - சி.பி.ஐ(எம்) மாநாடு கோரிக்கை...!

               
         சென்னை காமராஜ் அரங்கத்தில் நேற்று தொடங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நான்கு நாள் - 21-ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில் மக்கள் நலன் சார்ந்த - தொழிலாளர்கள் நலன் சார்ந்த - மாநிலம் சார்ந்த - தேசம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் மாநாட்டிலேயே அதற்கான தீர்மானங்களும் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. 
              அப்படி ஒரு தீர்மானமாக புதுச்சேரி மக்களின் நிறைவேற்றப்படாத நீண்ட நாள் கோரிக்கையான ''மாநில அந்தஸ்தின்'' இன்றைய தேவையையும் அவசரத்தையும் வலியுறுத்தி, மத்திய அரசு உடனடியாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கிட கோரி இன்று இரண்டாம் நாள் மாநாட்டில் ஆறாவது தீர்மானமாக முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 

             ''பிரஞ்சு காலனியாக இருந்த புதுச்சேரி 1954ல் விடுதலைப் பெற்றது. இந்திய ஒன்றியத்துடன் இணைந்தபோது புதுச்சேரி மத்திய அரசின் நேரடிப்பார்வையில் நிர்வகிக்கப்படும் என்றும், தேவையான நிதியும், அதிகாரமும் வழங்கப்படும் என்றும் இந்திய அரசு உறுதியளித்தது. இந்திய பிரதமராக அப்போது இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள் புதுச்சேரி பிரஞ்சு இந்திய கலாச்சாரத்தின் சன்னல் என்று வர்ணித்ததோடு புதுச்சேரியின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார். இந்தப் பின்னணியில் புதுச்சேரியில் 1963 முதல் தனிச்சட்டப்பேரவை தொடங்கி செயல்பட்டு வருகிறது.
           புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில திட்ட ஒதுக்கீட்டில் 70 சதவிகிதம் மானியம் மற்றும் கொடையாக வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பின்னணியில் 2007ல் திரு..ரங்கசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மாநிலத்திற்கு தனிக்கணக்கு தொடங்கியது. இதனால் மத்திய அரசு புதுச்சேரிக்கு வழங்கிவந்த 70 சதவிகித மானியத்தை 30 சதவிகிதமாக குறைத்தது. 2007-2008 நிதியாண்டில் 23.82 சதவிகிதமாக மானியம் வழங்கியது. தொடர்ந்து 30 சதவிகிதத்திற்கும் குறைவான மானியமே வழங்கப்பட்டுவருகிறது.
         மாநிலத்திற்கு தனிக்கணக்கு தொடங்கிய நிலையிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் நிதிக்கமிஷனின் மாநிலப் பட்டியலிலும் இல்லை. யூனியன் பிரதேசங்களுக்கான பட்டியலிலும் இடம் பெறவில்லை. இதனால் புதுச்சேரி 2007 தொடங்கி நடப்பாண்டு வரையில் ரூ.6200 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியும், மக்களின் சமூகப் பொருளாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
            மாநில அரசுக்கு வழங்குகிற திட்ட செலவில் 30 சதவிகிதம் நிதியை முழுமையாக வழங்குவதில்லை. மேலும் மத்திய வரிவருவாயில் பங்கிட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்குரிய சிறப்பு நிதி வழங்குவதில்லை. வெளிக்கடன் பெறுவதற்கும் உரிமையில்லை.
         புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இருந்தபோதிலும் மத்திய அரசின் அனுமதிப்பெற்றே மாநில பட்ஜெட் போடவேண்டியுள்ளது. சட்டம் இயற்றும் அதிகாரம், கொள்கை முடிவெடுக்கும் அதிகாரம், நிதி நிர்வாகத்தில் அதிகாரமற்ற அரசாகவே உள்ளது.
            புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டுமென 1987 முதல் 2012 வரையில் 13 முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான அதிகாரம் குறித்த ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு 2006ல் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. சட்டப்பேரவையைக் கொண்ட யூனியன் பிரதேசங்களின் துரித வளர்ச்சிக்கு சட்டம், நிதி மற்றும் நிர்வாகம் தொடர்பான அரசு அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்ற கூற்று ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்று என்று சர்க்காரியா கமிஷன் ஏற்கெனவே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் மாறியுள்ள நிலைமையிலும் மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காமல் இருப்பதை இம்மாநாடு கண்டிக்கிறது.
           இந்திய விடுதலைக்குப் பிறகு சிக்கிம், அருணாசலப்பிரதேசம், மிசோரம், திரிபுரா, கோவா ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கவும், மத்திய கடன் தொகையை ரத்து செய்யவும் மார்க்சிஸ்ட் கட்சியின் 21வது தமிழ் மாநில மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது

முன்மொழிந்தவர் : தோழர். வி. பெருமாள், புதுச்சேரி
வழிமொழிந்தவர் : தோழர். சிவக்குமார் , திருவண்ணாமலை