தீக்கதிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீக்கதிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 டிசம்பர், 2015

எழுதித் தீராத வாதை - தமிழகத்தின் அவலநிலை...!


 கட்டுரை ஆக்கம் : தோழர். த. ஜீவலட்சுமி                                                                  


                   வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கூரையற்ற வீட்டில் உடல் முழுவதும் கொப்புளங்களோடு அசைவற்றுக் கிடந்த இரண்டு மாதக் குழந்தையின்  முகம் மனதில் ஏற்படுத்தும் வாதை எழுதித் தீராது தான். தமிழக அரசின் அலட்சிய வெள்ளம் ஏற்படுத்தியிருக்கும் இப்பேரழிவையும் அவலத்தையும் பார்த்தும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், உணவிற்கும், ஒரு பாட்டில் தண்ணீருக்கும் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட சகமனிதர்களை, சிறுநீர் கழிக்க மறைவிடமின்றித் தவிக்கும் சகப்  பெண்களை சந்தித்தும் வருவதில் ஏற்பட்டிருக்கும் உள்ளக் குமுறலைக்   கொட்டித்தீர்க்க முடியாதது. பேரழிவைச் சந்தித்திருக்கும் சென்னை நகரின் நடுவே, கண்டுபிடிக்க இயலா நிலையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு நடுவே, மழை நின்று ஆறு நாட்களுக்குப்பின்னும் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த குடிசைகள் நினைவில் ஆடுகின்றன. இப்பருவத்தின் முதல் மழையை எப்பொழுதும் போல் மகிழ்ச்சியாகத்தான் சென்னைவாசிகளும் வரவேற்றோம் என்றாலும் நவம்பர் முதல்வாரத்திலேயே இது வழக்கமாகப் பெய்யும் பருவமழையில்லையென உணர முடிந்தது.சென்னையிலும் கடலூரிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது அம்மழை. அப்போதே அரசாங்கம் முன்னெச்சரிக்கையோடு இருந்திருக்க வேண்டும் .
              ஆனால் அரசின் செயல்பாடு மிகுந்த மெத்தனத்தோடு இருந்தது. நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய இரு நாட்கள் பெய்த மழை மனதில் ஏற்படுத்திய அச்சம் விவரிக்க இயலாதது. அம்மழையின் வேகமும் அடர்த்தியும் அழிவின் சமிக்ஞை போல் இருந்தது . அவ்வுணர்வு மழையால் விளைந்ததல்ல. கடந்த மழையில் சாலைகளில் ஏற்பட்ட வெள்ளம், உயிரிழப்பு, அதை அரசு எதிர்கொண்ட அலட்சியமான விதம் இவற்றால் விளைந்தது.வெள்ளம் பற்றி மக்களுக்கு முறையாக அறிவிப்பு கொடுக்காத நிலையில் ஏற்பட்டிருக்கும் இழப்பிற்கு அரசு நிர்வாகத்தின் அலட்சியமே முழுமுதற் காரணம். மழை கண்டு மகிழ்ந்து மாமழை போற்றிய தமிழக மக்களை மழை கண்டு அச்சங்கொள்ளச் செய்தது தான் இத்தனை ஆண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சி செய்த சாதனை. தூர்வாரப்படாத நீர்நிலைகள், மணற்கொள்ளை, நீர் மேலாண்மையில் நிர்வாகத் துறையின் பின்தங்கிய நிலை, முறையான திட்டமிடல் இன்றி விஸ்தரிக்கப்பட்ட நகரம் என வெள்ளத்திற்கான காரணங்கள் ஆயிரம் என்றாலும், எல்லாம் தம் ஆணைக்கிணங்க நடக்க வேண்டுமென்ற தமிழக முதல்வரின் ஆணவப்போக்கே இந்த அழிவிற்கு பிரதான காரணம். அதனால் தான் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை படிப்படியாக மழை குறைந்த நவம்பர் இரண்டாம் வாரத்தில் திறந்து விட பொதுப்பணித்துறை கொடுத்த ஆலோசனை கிடப்பில் கிடத்தப்பட்டு பேரழிவிற்கு இட்டுச்சென்றுள்ளது.
            மக்கள் அச்சங்கொண்டது போலவே நவம்பர் 30 ல் மழைபெய்த சில மணிநேரத்திலேயே வெள்ளமும் இருளும் நகரைச் சூழ்ந்தது . சில மணிநேரத்தில் வீட்டிலும் சாலைகளிலும் பெருக்கெடுத்த வெள்ளத்தில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் துடிதுடித்து இருளிலும் நீரிலும் இரண்டு நாட்கள் போராடி பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் நின்றனர்.அசோக் நகர் பகுதியில் வெள்ளத்தில் மிதந்து வந்த உடலைத் தேடி உறவினர்கள் வரக்கூடும் என மரத்தில் கட்டி வைத்து விட்டு வந்ததாக ஒரு நண்பர் சொன்னார். சென்னை மேற்கு நமசிவாயபுரம் பகுதியில் வெள்ளம் அடித்துப் போன ஒருவரின் உடல் நாகப்பட்டினத்தில் கிடைத்ததாக நிவாரணப் பணியின் போது இறந்தவரின் உறவினர்கள் கூறினார்கள் . இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் அரசு சொல்லும் உயிரிழப்பு எண்ணிக்கை முழுமையானதல்ல என்பதையும் உணர முடிகிறது.புகைப்படத்தோடு வீதியில் உறவினர்களைத் தேடி அலையும் மக்கள், பசியிலும் குளிரிலும் வாடிய குழந்தைகள், அடையாளம் காணப்படாமல் மருத்துவமனைகளில் கிடக்கும் பிணங்கள் என சென்னை கடந்த இரு வாரங்களாக துயரத்தின் உருவமாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே முகாம்கள், உணவுப் பொட்டலங்கள்.
         விரையும் வாகனங்கள், சூழும் மக்கள். இந்த சூழலில் பணியாற்றவும் மக்களின் தேவைகளை உணரவும் மக்களுக்கான தத்துவப் பின்னணி கொண்டவர்களாலேயே இயலும். ஆம், இங்கு கொடுப்பது பெருமைக்குரியதாகவோ பெற்றுக் கொள்வது மகிழ்ச்சிகரமானதாகவோ இருக்கவில்லை .மழையில் உயிரைப் பணயம் வைத்து பிறரைக் காப்பாற்றியவர்கள், இரவு பகலாக முகம் பாரா மனிதர்களுக்கு உணவு சமைத்தவர்கள், அதை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்தவர்கள், பெரிய அளவில் இல்லையென்றாலும் பத்து பிஸ்கட் பாக்கெட்டுகளை வழியில் அமர்ந்து இருக்கும் மனிதர்களுக்கு கொடுத்துப் போனவர்கள் என சென்னை மக்கள் தாமே அரசாங்கமாக செயல்படத்தொடங்கினார்கள்.ஆளுங்கட்சி டிசம்பர் ஐந்து வரை நிவாரணக் களத்தில் இல்லை. ஆறாம் தேதி சாப்பாட்டுப் பொட்டலத்தில் ஸ்டிக்கர் ஒட்டி நிவாரணப் பணிகளைத் துவக்கினர்.திமுகவினரோ தாங்கள் குறி வைத்திருக்கிற, அரசியல் ரீதியாகப் பலனளிக்கும் என நம்பிக்கையுடைய மிகச் சில இடங்களிலேயே நிவாரணப் பணி செய்தனர்.
           இடதுசாரிக்கட்சிகளின் வெகுஜன அமைப்புகள், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் நிவாரணப் பணிகளை இன்று வரை முனைப்போடு செய்து வருகின்றனர். முகாம்களில் இருந்து வீடு நோக்கிப் போகும் எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டாலும் கூரையில்லாத, சுவரில்லாத சேறும் சாக்கடையும் நிரம்பிய வீட்டைப் பகல் முழுவதும் சுத்தம் செய்ய முயன்று சோர்ந்து, இரவு முகாமுக்குத் திரும்பும் நிலை தான் நீடிக்கிறது. ‘சென்னை இயல்புக்கு திரும்பியது’ என்று கூறுவதெல்லாம், ‘வெள்ளத்தை’ ராட்சத மோட்டார் கொண்டு இறைத்து வேலையாட்களை அமர்த்தி வீட்டை சரி செய்யும் திராணி கொண்ட மேல்தட்டு வர்க்கத்தின் கூற்றே.“நம்ம வீடுகளில் கூட அதெல்லாம் இருக்காது; அவங்க டிவி, பிரிட்ஜ் எல்லாம் அந்தக் குடிசைக்குள்ள வச்சிருக்காங்க” என மக்களை வேடிக்கை பார்த்தபடி ஒருவர் சொன்னார். நிவாரணப் பணியின் போது ஒரு பெண் சொன்னார், “ஒரு வருசம் சீட்டு கட்டி வாங்குன பிரிட்ஜ்ம்மா, எட்டு வருசமா ஆசப்பட்டு இப்பதான் வீட்டு வேலைக்குப் போன காச சேத்தி வாங்கினேன்“ என்றார்.நடுத்தர வர்க்கக் குடும்பங்களே தீபாவளிக்கும் பொங்கலுக்கும் மட்டுமே பொருள் வாங்கும் நிலை கொண்ட நம் சமூகத்தில் இம்மக்களின் இழப்பை எப்படி ஈடு செய்வது?எல்லாம் போன நிலையில் எங்கிருந்து தொடங்குவது என்ற கேள்வியை அவர்கள் எப்படி எதிர் கொள்வது? இக்கேள்வி தரும் அழுத்தம் அம்மக்களின் மனங்களை அழுத்திக் கொண்டிருப்பதை எப்படி சரி செய்வது? குடிசைப் பகுதிகளில் பார்க்குமிடங்களிலெல்லாம் பெண்கள், வீட்டில் புகுந்திட்ட சாக்கடைச் சேற்றையும் அழுக்கையும் கழுவியே ஓய்கிறார்கள். அன்றாடம் சுரண்டலை சந்தித்த பெண்களின் உழைப்பை இவ்வெள்ள பாதிப்பும் சுரண்டுகிறது.வேறென்ன செய்வதென்பதறியா நிலையில் அவர்கள் துணி துவைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதில் அவர்கள் தம் மனஅழுத்தத்தை துவைப்பது போல் இருக்கிறது.சாதி, மதம் கடந்து சோறு போட களத்தில் நின்றவர்கள் கூட அவர்களோடு வீடுகளை, வீதிகளை சுத்தம் செய்யவில்லை. மீண்டும் அதே ஒடுக்கப்பட்ட வர்க்கமே பாதுகாப்பற்ற இவ்வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறது.இவையெல்லாம் இயல்பென வழக்கம் போல் கடந்து போய்க் கொண்டிருக்கிறது சமூகம்.போதாக்குறைக்கு ‘இதுதான் சரியான சமயமென்று ஆற்றோர குடிசைகளை அரசு அகற்றி விட வேண்டும்‘ என்ற விசமத்தனமான கோரிக்கையை ஒரு கூட்டம் முன் வைக்கிறது . அப்படி சென்னை நகரிலிருந்து தூக்கியெறியப்பட்ட செம்மஞ்சேரி, கண்ணகி நகர் பகுதி மக்கள் வெள்ளத்தால் அடைந்த பாதிப்புகள் அளவிட முடியாதது. ஆற்றோரத்தில் இருக்கும் மக்களை வீடு கொடுக்கிறோம் என பள்ளத்தாக்கில் தள்ளும் வேலையைத் தான் அரசுகள் செய்திருக்கின்றன என்பதை இவர்கள் உணராதவர்கள் அல்ல. சென்னை குடிசைகளுக்கானதல்ல என்ற அவர்களின் முதலாளித்துவக் கண்ணோட்டத்தின் பிரதிபலிப்பு அது.சூர்யா நகர் பகுதியை சேர்ந்த வீட்டு வேலை செய்யும் தோழி, வீட்டுப் பொருட்கள் முழுவதும் இழந்த நிலையில், தனக்கு உதவ முன் வந்த வேலை கொடுக்கும் வீட்டாரை தன் பகுதிக்கு அழைத்து வந்து தன்னை விட பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு உதவுமாறு வேண்டினார். அவர்கள் அப்பெண்ணின் கோரிக்கையை ஏற்று உதவ முன் வந்திருக்கின்றனர். இதுதான் உழைக்கும் வர்க்கத்தின் மனநிலை. இப்படி மக்கள் நமக்கு நாமே என உதவி செய்து வருகின்றனர். நிவாரணப் பணி சற்றே ஓய்ந்து பல பகுதிகளில் மாணவர்கள்,இளைஞர்களால் தூய்மைப்பணி தொடங்கிவிட்டது.பள்ளிகளில் இருக்கும் மக்கள் தம் இருப்பிடங்களுக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் . இனி அவர்கள் முதலில் இருந்து தொடங்க வேண்டும். அதற்கான மூலதனம் ஏதும் அவர்களிடம் இல்லை. கணக்கெடுப்பு முடிந்து வங்கிக் கணக்கிற்கு பணம் வரும் வரை நாங்கள் வாழ்வதெப்படி என்ற அம்மக்களின் கேள்விக்கு அரசு என்ன பதில் வைத்திருக்கிறது?நிவாரணப் பணிகளில் செயலற்றுக் கிடந்தது போல், ஆயிரம் ஆயிரம் கோடிகளை வைத்துக்கொண்டு செயலற்று கிடக்க இந்த அரசாங்கத்தை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.மக்கள் நலன் காக்கும் சக்திகள் ஒருங்கிணைந்து நிவாரணப் பணி செய்த அதே வீச்சில் அரசை இயங்கச் செய்ய வேண்டும். சொந்த நாட்டில் அகதிகளாக அல்லாடுமளவு மக்களை வஞ்சித்தவர்கள் மக்களிடம் பாடம் கற்பார்கள் என்ற நம்பிக்கையோடு மக்கள் பணி செய்வோம்! 

நன்றி : 
தீக்கதிர் 

புதன், 15 அக்டோபர், 2014

ஊர் கூடி ஊழலை எதிர்ப்போம்...!


 கட்டுரையாளர் : தோழர். ஜி.ராமகிருஷ்ணன்,               
                                      மாநிலச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                                     
             “லஞ்சம் ஊழல் முன்பிருந்ததை விட மோசமாகிவிட்டது. அதனைத் தவிர்ப்பது என்பதற்கான முயற்சியே இல்லாமல் போய்விட்டது. லஞ்ச ஊழலில் ஈடுபடும் ஏராளமானவர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். தேசம் என்பது அவர்களின் சுரண்டலுக்காக வாழவில்லை. மாறாக, அவர்கள் தேசத்துக்கு தொண்டு புரிவதற்காக வாழ்கிறார்கள்’’ என அண்ணல் காந்திஜி 26.1.1948 அன்று பிரார்த்தனை கூட்டத்தில் பேசினார். நாடு சுதந்திரமடைந்த 5 மாதங்களுக்குள் ஊழல் நடைபெற்றதைக் கண்டு மனம்நொந்து காந்திஜி பேசியது இன்றும் பொருத்தமாகயிருக்கிறது. ஆனால், கடந்த 67 ஆண்டுகளில் காந்தி கண்டதைவிட ஊழல்கள் என்பது பன்மடங்கு அதிகரித்துவிட்டது. 1991 -ஆம் ஆண்டில்  நவீன தாராளமயக் கொள்கையின் அமலாக்கம் தொடங்கிய பிறகு ஊழல்கள் புதிய பரிமாணத்தை அடைந்தது.
             மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பல தலைவர்கள் செய்த ஊழல் கணக்கிலடங்கா. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் உள்ளார். சிறையில் உள்ள ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். நீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கப்பட்ட தேதியிலிலிருந்து இதுவரையில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பல வடிவங்களில் இயக்கங்கள் நடத்தி வருகின்றனர். தீர்ப்பை விமர்சிப்பதோ, இயக்கம் நடத்துவதோ அவர்களது உரிமையென்றாலும், அவர்கள் முன்வைக்கும் கோஷங்கள் ஊழலை நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளது. “ தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்: தர்மம் மீண்டும் வெல்லும்’’ என அதிமுகவினர் தட்டி போர்டு வைத்துள்ளனர்.
                  ஊழல் செய்வதை தர்மம் என்றும், ஊழலுக்காக நீதிமன்றம் அளித்த தண்டனையை சூது என்றும் வாதிடுவதைப் போல் மேற்கண்ட வாசகங்கள் அமைந்துள்ளன. இதைப்போலவே, “ நீதிக்கு அநீதியா’’, “தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா’’ என்றெல்லாம் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும், அவரது ஆதரவாளர்களும் சுவரொட்டிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தத் தீர்ப்பு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டதால், தேவையில்லாமல் இன அடிப்படையில் இந்தப்பிரச்சனையை திசை திருப்பவும் முயன்றனர். ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிரான தீர்ப்பை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆளுங்கட்சியான அதிமுகவினர் வன்செயல்களில் ஈடுபட்டனர். அரசுப் பேருந்துகள் கொளுத்தப்பட் டன.
                    ஆளுங்கட்சியின் நிர்ப்பந்தம் காரணமாக பல்வேறு தரப்பினர் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்தனர். இதில் தனியார் பள்ளி முதலாளிகளும் அடக்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இவர்கள் பின்வாங்கினர். அதிமுக தொடங்கப்பட்ட  போது அதனுடைய நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழலை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் மனுக்கொடுத்தார். அப்படிப்பட்ட கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா தற்போது ஊழலுக்காக தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
               1970 களில் ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் பீகார், குஜராத் போன்ற வடமாநிலங்களில் ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் நடைபெற்றன. இதில், லாலு பிரசாத் போன்ற தலைவர்கள் கலந்து கொண்டு பிரபலமானார்கள். பிற்காலத்தில், லாலு பீகார் முதல்வரானார். ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் கலந்து கொண்ட அவர், ஊழலுக்காக தண்டிக்கப்பட்டு தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். தங்களது கட்சி வித்தியாசமானது என்று கூறிக்கொள்ளும் பாஜகவின் அகில இந்திய தலைவராக இருந்த பங்காரு லெட்சுமணன் ஊழல் வழக்கில் சிக்கி கையும், களவுமாக பிடிபட்டு தண்டிக்கப்பட்டார். மத்தியில் பாஜக ஆட்சியின் போது கார்கில் ராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் நடைபெற்ற ஊழல் வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருந்த எடியூரப்பா, லோக் அயுக்தா நீதிமன்ற விசாரணையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முதலமைச்சர் பதவியை இழந்த அவர் மீதான ஊழல் வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால், அவர் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார். இதைப் போலவே, எடியூரப்பா அமைச்சரவையில் இருந்த ரெட்டி சகோதரர்கள் ஊழல் வழக்கில் சிக்கி ( இரும்பு தாதுப்பொருள் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததில் 20ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ) சிறையில் உள்ளனர். மராட்டிய மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர், சட்டவிரோதமாக மின்சாரம் திருடிய வழக்கில் பதவியை இழந்து சிறையில் உள்ளார். திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்வகணபதி அதிமுக ஆட்சியின் போது அவர் செய்த ஊழலுக்காக தற்போது தண்டிக்கப்பட்டுள்ளார். திராவிட முன்னேற்றக்கழகத்தினுடைய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி ஆகியோர் மீதான 2ஜி அலைக்கற்றை வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படும் கட்டத்தில் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் மீதான ஏர்செல் - மேக்சிஸ் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. அவரது சொத்துக்களில் ஒரு பகுதியை முடக்கப்போவதாக செய்திகளும் வெளியாகியுள்ளன.
              தன்னுடைய கட்சி முக்கியப் பிரமுகர்கள் மீதான ஊழல் வழக்குகள் விசாரணையில் உள்ளதால் தான் கடந்த 8.10.2014அன்று நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதும், ஊழல் குறித்து ஒரு தீர்மானம் கூட வெளியிடப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் ஊழலைப் பற்றிச்சொல்லத் தேவையில்லை. அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மசூது, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு தனது பதவியை இழந்துள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிக்கியுள்ளனர். ஏர்செல்-மேக்சிஸ் ஊழல் வழக்கில் அன்றைய மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரத்தை ஏன் விசாரிக்கவில்லையென்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்தவர்கள்  ஊழலில் ஈடுபடுவது தொடர்ச்சியாக நிகழ்ந்த ஒன்று.
               இருப்பினும், 1991 ஆம் ஆண்டு நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் அமலாக்கம் துவங்கிய போது, ஊழலின் பரிமாணம் புதிய வடிவத்தைப் பெற்றது. இக்காலத்தில் பெரும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர் கூட்டணி அமைத்து கோடி கோடியாகக் கொள்ளையடித்து வருகின்றனர். அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் உள்ள அரசியல் தலைவர்களும், அலைக்கற்றையை கையூட்டு கொடுத்து பெற்ற பெருமுதலாளிகளும், இத்தகைய வேலையில் ஈடுபட்ட அதிகாரிகளும் இணைந்தது தான் புதுவடிவிலான ஊழல். இது தான் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிலும் நடைபெற்றது. இயற்கை வளத்தை பயன்படுத்த பன்னாட்டு, உள்நாட்டு கம்பெனிகளுக்கு உரிமம் வழங்குகின்ற போது இத்தகைய ஊழல்கள் நடைபெறுகின்றன. அன்னா ஹசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கம் 2 ஜி அலைக்கற்றை ஊழல் மற்றும் பிற பெரும் ஊழலை எதிர்த்து ஒரு சீற்றத்தை உருவாக்கியது. ஆனாலும், நவீன தாராளமயக்கொள்கையினால் பெரும் தொழிலதிபர்கள் - அரசியல்வாதிகள் - அதிகார வர்க்கத்தினர் இணைந்து செய்த ஊழல் குறித்து அவர் குறிப்பிடவில்லை.
               இச்சூழலில் தான், 2011 ஜுலை 15 முதல் 21 ம் தேதி வரை நாடு முழுவதும் ஜன்லோக்பால் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்றும், தேர்தல்களில் பணபலத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தேர்தல் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், தேசிய நீதித்துறை ஆணையத்தின் மூலம் நீதித்துறையை மேற்பார்வையிடுவதற்கான சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத் தியது.ஊழல் என்பது சமூகத்திற்கெதிரான குற்றமென்றும், அதிகாரத்தை ஊழல் செய்வதற்கான தொழிற்கூடமாகப் பயன்படுத்தக்கூடாதென்றும் உச்சநீதிமன்றம் ஊழலைப் பற்றிய தீர்ப்புகளில் கடுமையாகச் சாடியுள்ளது. ஊழலை எதிர்ப்பது மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் இயக்கத்தலைவர்கள் மாநில ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது நடைமுறையில் ஊழலற்ற நிர்வாகத்தையும் அளித்துள்ளனர் என்பதற்கு மேற்குவங்கம், கேரளம் மற்றும் திரிபுரா மாநிலங்கள் சான்றாக உள்ளன.
           கேரளாவில் முதலமைச்சராக இருந்த இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், இ.கே.நாயனார், அச்சுதமேனன், வி.எஸ்.அச்சுதானந்தன், மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா, திரிபுராவில் நிருபன் சக்கரவர்த்தி, தசரவ்தேவ், தற்போது முதலமைச்சராக உள்ள மாணிக் சர்க்கார் உள்ளிட்டோர் அதிகாரத்திற்கு வருவது மக்களுக்குச் சேவை செய்வதற்காகத்தான் என்பதை நடைமுறையில் நிரூபித்துக் காட்டியுள்ளனர். இந்திய அரசியலில் ஊழல் கறை படியாதவர்கள் இடதுசாரி கட்சிகள் மட்டுமே. காங்கிரஸ், பாஜக, தமிழகத்தில்அதிமுக, திமுக ஆகிய அனைத்துக்கட்சிகளுமே ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளன. இந்த நிலையில் அனைத்து வகையான ஊழலுக்கு எதிராகவும் போராடும் தார்மீக தைரியம் பெற்றவர்கள் இடதுசாரிகளே ஆவர். இத்தகைய பின்னணியில், தமிழகத்தில் ஊழலை எதிர்த்து இயக்கம் நடத்துவதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.
          மாநிலத்தில் லோக் அயுக்தா சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும், தாதுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை ஆகியவற்றை விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி உ.சகாயம் விசாரிக்க மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அரசு நிர்வாகத்தில் எல்லா மட்டத்திலும் ஊழலை ஒழித்திடவும், மேலும் ஊழலின் ஊற்றுக்கண்ணாக உள்ள நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை நடத்த உள்ளது.
நன்றி : தீக்கதிர்

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

நினைவுகள் அழிவதில்லை - திரைப்படம்

 
 கட்டுரையாளர் : அ. குமரேசன்     
                             ஆசிரியர், தீக்கதிர்     
                   இன்று தங்களது உரிமைகளைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடுகிற எளிய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் அழியாமல் இருக்க வேண்டிய நினைவு, கேரளத்தின் கையூர் தோழர்கள் போராட்டம். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நடந்த நாட்டு விடுதலைப் போராட்டம், ஆட்சியாளர் ஆசியோடு வட்டார ஜமீன்தார்களும் பண்ணையார்களும் வளைத்துப் போட்டிருந்த நிலங்களை மீட்பதற்கான போராட்டம் இரண்டும் இணைந்த மகத்தான வரலாறு அது. 1940களில் பரவிய அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கையூர் கிராமத்துக்கு அனுப்பப்பட்ட ஒரு காவலரை மக்கள் சூழ்ந்து கொள்ள, தப்பித்து ஓடிய அவர் ஒரு ஆற்றில் குதித்ததும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதும், அதை ஒரு சாக்காகப் பயன்படுத்திக்கொண்ட காவல்துறையினர் பெரும்படையாக ஊருக்குள் புகுந்து வேட்டையாடியதும், கொலைக்குற்றம் சாட்டப்பட்ட அப்பு, சிறுகண்டன், குஞ்ஞாம்பு நாயர், அபுபக்கர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டதும், இந்திய விவசாயிகள் இயக்கத்தின் முதல் தியாகிகளாக அவர்கள் வீர முழக்கமிட்டதும் மக்களுக்காகப் போராட முன்வருவோருக்கெல்லாம் மிகப்பெரும் ஈர்ப்பு விசையாக அமைந்த அத்தியாயங்கள்.
           இறுதி நாட்களின்போது தங்களைச் சந்திக்க வந்த தோழர்களிடமும் குடும்பத்தினரிடமும் அவர்கள் கேட்டுக்கொண்டது: “எங்களுக்காக யாரும் அழ வேண்டாம். ஆனால் நாங்கள் எதற்காகத் தூக்குமேடை ஏறினோம் என்ற கதையை எல்லோருக்கும் சொல்லுங்கள்.” நாடு முழுவதும் எடுத்துச் சொல்லப்பட வேண்டிய அவர்களது கதையை, அன்று எழுத்தாளர் நிரஞ்சனா கன்னடத்தில் எழுதினார். கன்னடத்திலிருந்து மலையாளத்திற்குச் சென்றது, தமிழில் தோழர் பி.ஆர். பரமேஸ்வரன் மொழிபெயர்ப்பில் ‘நினைவுகள் அழிவதில்லை’ என்ற நாவலாக வந்தது. தமிழகத்தில் பெரும்பகுதி மக்களிடம் இவர்களது கதையைச் சொல்கிற நோக்கத்துடன் வந்திருக்கிறது இந்தப் படம். தமிழகப் பின்னணியில் கச்சிதமாகப் பொருத்திக் கூறப்பட்டிருப்பது படத்தின் ஒரு சிறப்பு.
          தாங்கள் கஞ்சி குடிப்பதற்கு வழியில்லாதவர்களாக, அதன் காரணம் என்னவென்றும் தெரியாதவர்களாக இருந்த மக்களிடம் அரசியல் உண்மைகள் முதல் உழைப்புச் சுரண்டல் ரகசியம் வரையில் விளக்குகிறார்கள் இளம்தோழர்கள். கிராமப்பள்ளிக் குழந்தைகளின் ஆசிரியராக வருகிறவர் பள்ளிக்கு வெளியே பெரியவர்களுக்கு இந்தப் பாடங்களை விளக்குகிறார். உண்மையின் ஒளியில் உள்ளம் தெளிவாகும் விவசாயத் தொழிலாளிகளின் போர்க்குரல் அரசுக் கோட்டைக் கதவுகளோடு வட்டார நில முதலையின் மாளிகைச் சுவரையும் உடைக்கவல்லதாய் எழுகிறது... அந்தப் போராளிகள் தாக்குதல்களை எதிர்கொள்வதும், காதல் - திருமணம் - குடும்பம் ஆகிய வாழ்க்கை இன்பங்களை இழக்க நேரிடுவதும் அன்று அவர்கள் தங்கள் முதுகைக் கொடுத்துப் போட்ட சாலையில்தானே நாம் இன்று பயணிக்கிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, பல இடங்களில் கண் கலங்கச் செய்கின்றன.
           திரைப்பட ஆக்கத்தின் முக்கியமான வெற்றி இது. எதற்காக அன்றைய தலைமுறையின் கதையை இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும்? இக்கால நகரம் ஒன்றில், வீட்டுமனை கொள்ளை வர்த்தகத்துக்காக, இன்றைய சுயநல அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்தோடும், அதிகாரவர்க்கத்தின் துணையோடும் எளியவர்களின் குடியிருப்பிடங்களைக் கைப்பற்றுகிறது ஒரு கும்பல். அதைத் தட்டிக்கேட்கும் சில இளைஞர்கள் மீது வன்முறை வழக்கு பாய்கிறது. தப்பிப்பதற்காக ஊரைவிட்டு ஓடுகிற அந்த இளைஞர்கள் ஒரு நண்பனின் கிராமத்தை வந்தடைந்து, அங்கே இந்த வரலாற்று வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவரான ஒரு பெரியவரைச் சந்திக்கிறார்கள். அவர், இவர்களுக்கு தன் நினைவில் அழியாத கதையைக் கூற, வரலாறு திறக்கிறது. பெரியவர் கதையைச் சொல்லி முடிக்கிறபோது, அந்த இளைஞர்கள் தாங்கள் தொடர்ந்து இயங்க வேண்டிய களம் எது என்ற ஞானம் பிறந்தவர்களாக நகரத்திற்குத் திரும்புகிறார்கள். படத்தின் இந்த முடிப்பு, இடையுறாமல் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரட்சிகர மக்கள் இயக்கங்களில் பங்கேற்பதன் தேவையை உணர்த்துகிறது. “எங்கள் கதையை எல்லோருக்கும் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டவர்களின் எதிர்பார்ப்பு இதுவாகத்தானே இருக்க முடியும்?
            போராளியின் காதலி போராட்டத் தகவல்களைக் கொண்டுசேர்க்கிற தொண்டராகவும் பங்களிப்பது கிராமத்துப் பசுமையின் ஈரம். இவர்களுக்கு வழிகாட்டுகிற ஆசிரியர் எல்லா ஊர்களிலும் தேவைப்படுகிற தோழர். போராளிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை இறுக்கமாக அமைத்து, ஏழைகளின் உழைப் பையும் அவர்கள் வீட்டுப் பெண்களையும் சூறையாடுகிற ஜமீன்தார் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நகைச்சுவையை சேர்த்திருப்பது இறுக்கத்தைத் தளர்த்த உதவுவதோடு, சுரண்டல் கும்பல்களை எள்ளலுக்கு உரியவர்களாகச் சித்தரிப்பதாகவும் அமைந்திருக்கிறது
            குகன், அருண், காயத்ரி, அமரமணி உள்ளிட்டோர் கதாபாத்திரங்களின் முக்கியத் துவத்தை மனதில் உள்வாங்கிக்கொண்டு நடித்திருக்கிறார்கள். கூடவே ஒத்துழைத்துள்ள கூத்துக் கலைஞர்களும் நாடகக் கலைஞர்களும் கையூர் மக்களைக் கண்முன் நிறுத்துகிறார்கள்.காதலின் மென்மை, செங்கொடி இயக்கத்தின் கம்பீரம் இரண்டையும் கவித்துவச் சொற்களோடு பதிவு செய்திருக்கும் தனிக்கொடி, நா.வே. அருள், சி.எம்.குமார் ஆகியோரின் உயிர்ப்பான பாடல்களுக்கு இசையால் உடல் வார்த்திருக்கிறார் இசையமைப்பாளர் பி.ஆர். ரஜின். நாற்பதாம் ஆண்டுகளின் கிராமத்தைக் காட்டியிருக்கிறார் கலை இயக்குநர் இளஞ்செழியன்.
                மேலிருந்து பார்க்கிற கோணத்தில் நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. கதைமாந்தர்களின் சொந்த வாழ்க்கைக் கோணத்திலிருந்து பகிர்ந்து கொள்வதாகத் திரைக்கதை அமைக்கப்படவில்லை. ஆயினும் செய்தியைச் சொல்கிற ஆவணப் பதிவாகிவிடாமல் உணர்வைப் பகிர்ந்து கொள்கிற கலைப் படைப்பாக வந்திருப்பது தொகுப்பாளர் பீ.லெனின் பங்களிப்பு.
          பிரச்சாரத்திற்காகத்தான் இந்தப் படைப்பு என்பதை ஒளிவு மறைவில்லாமல் ஒப்புக்கொண்டு, ஆனால் பிரச்சார நெடி அளவு மிஞ்சிடாமல் உருவாக்கியிருப்பது இயக்குநர் பகத்சிங் கண்ணன் உழைப்பு.
            ஒரு பாடல் காட்சிக்கே கோடிக்கணக்கில் செலவிடப்படுகிற, ஒரு முகத்தை நெருக்கமாகக் காட்டுவதற்கே பல்லாயிரம் ரூபாய் தேவைப்படுகிற தொழில்நுட்ப வணிகச் சூழலில் ஒரு சவால்மிக்க பணியைச் செய்திருக்கிறார்கள் அக்னி கலைக் கூடத்தினர்.
            மக்களின் நினைவில் அழியாமல் பதிய வைக்க வேண்டிய கதையைச் சொல்கிற இந்த ஆக்கம் மக்களிடம் பரவலாகச் செல்வது மாற்றத்திற்காகப் போராடுகிற இயக்கங்களின் கையில் இருக்கிறது.

(‘நினைவுகள் அழிவதில்லை’ திரைப்படம் இன்று திரையரங்குகளுக்கு வருகிறது. ‘தீக்கதிர்’ ஏப்ரல் 9 இதழில் வெளியான எனது பட அறிமுகக் கட்டுரை இது.)

வெள்ளி, 29 ஜூன், 2012

பொன்னுலகை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் நாளேடு ''தீக்கதிர்'' -க்கு வயது 50...!

 

பொன்னுலகை நோக்கிய பயணத்தில்  ''தீக்கதிர்''...


''தீக்கதிர் நமது கட்சியின் ஒளிவிளக்கு.

தீக்கதிர் நம்மை கட்டி வளர்க்கும் தாய்.

தீக்கதிர் மாரீச மானல்ல!

கட்சிப் பணிகளை கொண்டுள்ள

கஸ்தூரிமான்.

இதை மறவாதீர்கள்!

இனி தீக்கதிர் பரப்பப்போகும் கோடிச் சூரிய பிரகாசத்திலே உழைக்கும் வர்க்கம் புது முறுக்குகொள்ளும். ஏட்டின் செந்நாக்குகள் தெறித்து விழும் திசை எங்கும் அறிவுத் தீ தெறித்துவிழும். திசை எங்கும் அறிவுத் தீ வான்முட்டக் கிளம்பும்”
            1963ஆம் ஆண்டு ஜூன் 29ந்தேதி உதயமான முதல் தீக்கதிர் ஏட்டின் தலையங்கத்தில் தெறித்து விழுந்த வரிகளில் சிலவே மேலே சுட்டப்பட்டவை.
            பேரெழுச்சிமிக்க இந்தப் பிரகடனத்துடன் தனது பயணத்தை துவக்கிய தீக்கதிர், 50 ஆண்டுகளை எட்டியுள்ளது.
                 எத்தகைய மகத்தான லட்சியத்துடன் தீக்கதிர் தனது பயணத்தை துவக்கியதோ, அதிலிருந்து சற்றும் தடுமாறாமல், தடம் மாறாமல் நடைபோட்டு வந்துள்ளது.
            உலகத்தை தனது உள்ளங்கையில் வைத்து உருட்டி விளையாட நினைக்கும் ஏகாதிபத்தியங் களின் முகத்திரையை கிழிப்பதில் முன்னின்று வருகிறது தீக்கதிர்.
          இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற போதும், தொடர்ச்சியாக வந்த ஆட்சியாளர்களின் முதலாளித்துவ சார்பு கொள்கைகளால், மக்களின் வாழ்க்கையை நோக்கி சுதந்திர வெளிச்சத்தின் வீச்சு வரவேயில்லை. விடுதலையின் பலன் கடைக் கோடி குடிசை வரை வரவேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக இடைவிடாத போராட்டத்தை இந்திய, தமிழக தொழிலாளி வர்க்கம் நடத்தி வந்துள்ளது. அந்தப் போராட்டக்களத்தில் உழைக்கும் மக்களின் போர்வாளாகவும் கேடயமாகவும் திகழ்ந்தது, திகழ்கிறது தீக்கதிர் என்றால் அது மிகையல்ல.
            இந்தியா பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு பூக்காடு. மதத்தால், மொழியால், இனத்தால் வேறுபட்டிருந்தாலும் உணர்வால் அனைவரும் இந்தியரே. ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி என்ற உயரிய கோட்பாடுகளால் பின்னப்பட்டிருக்கிறது இந்த தேசம். அவசரநிலைக் காலம் துவங்கி எத்தனையோ முறை, இந்த விழுமியங்களை அறுத்தெறிய ஆளும் வர்க்கம் முயற்சிகளை மேற்கொண்டபோதெல்லாம், அதை தடுத்து நிறுத்தும் பேராயுதமாக தீக்கதிர் சுழன்று வந்துள்ளது.
                தீண்டாமைக் கொடுமை உள்ளிட்ட சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சமரசமற்ற போராட்டத்தை நடத்தி வந்துள்ளது நமது ஏடு. தீக்கதிரின் பேரொளிபட்ட பிறகே மறைக்கப்பட்டிருந்த பல தீண்டாமைச் சுவர்கள் வெளிச்சத்திற்கு வந்து பொடிப் பொடியாக நொறுக்கப்பட்டன என்பது நேற்றைய வரலாறு மட்டுமல்ல; இன்றைக்கும் நீளும் நிஜம்.
                  பெண்களுக்கு எதிராக காலம் காலமாக தொடுக்கப்பட்டு வரும் பாலியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நின்று பாலின சமத்துவத்திற்காக படை நடத்துகிறது தீக்கதிர்.
             சமூக நீதிக்கான சமர்க்களத்தில் ஒடுக்கப்பட்ட அனைத்துப் பகுதி மக்களின் போர்க்குரலாக முழங்கி வந்துள்ளது தீக்கதிர். அறுக்கப்பட்ட நாவுகளிலிருந்து வெடித்துக் கிளம்பும் பேரோசையாக, திசைகள் அதிர ஒலித்து வருகிறது தீக்கதிர் ஏடு.
               விடுதலை பெற்ற இந்தியாவில் கூட்டாட்சி நிலை பெற வேண்டுமானால், மொழிவழி மாநிலங்கள் அமைய வேண்டும் என்று அழுத்தமாக குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். மாநிலங்களின் உரிமைக்காக மங்காத பேரொளியாக சுடர்கிறது தீக்கதிர்.
              தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் தமிழே தலைமை தாங்க வேண்டும். மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளிட்ட மொழிகள் மலர்ந்திட வேண்டும் என்று போராடும் அதே நேரத்தில் இன, மொழி அடிப்படையிலான பிரிவினைவாத திருகல்களை எதிர்கொண்டு, இந்திய ஒருமைப் பாட்டை உறுதியோடு பற்றி நிற்கிறது நமது ஏடு.
             அரசியல், சமூக, பண்பாட்டுத் தளத்தில் புதிய வெளிச்சம் தேடும் போராளிகளின் கையில் ஒளி விளக்காக திகழ்கிறது தீக்கதிர் ஏடு.
              மார்க்சியம், லெனினியம் எனும் மகத்தான வெளிச்சத்தின் விளைச்சலாய் வெளிவந்த தீக்கதிர் தனது லட்சியப் பயணத்தில் அரை நூற்றாண்டை எட்டிப்பிடித்திருப்பது சாதாரணமானதல்ல; சாதனைச் சரித்திரம். நெருப்பாறுகளை கடந்து நீந்தி வந்த இந்த பொன்விழா பயணத்தில் தோள் கொடுத்த அனைத்து தோழர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் தீக்கதிர் தனது நன்றியை காணிக்கையாக்குகிறது.
                  எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிற பொன்னுலகை நோக்கிய பயணத்தில் தீக்கதிர் பீடுநடை போடும் என இந்நாளில் மீண்டும் உறுதியேற்கிறது.

வீட்டுக்கொரு தீக்கதிர் வாங்குவோம்....!