பொன்னுலகை நோக்கிய பயணத்தில் ''தீக்கதிர்''...
''தீக்கதிர் நமது கட்சியின் ஒளிவிளக்கு.
தீக்கதிர் நம்மை கட்டி வளர்க்கும் தாய். தீக்கதிர் மாரீச மானல்ல! கட்சிப் பணிகளை கொண்டுள்ள கஸ்தூரிமான். இதை மறவாதீர்கள்! இனி தீக்கதிர் பரப்பப்போகும் கோடிச் சூரிய பிரகாசத்திலே உழைக்கும் வர்க்கம் புது முறுக்குகொள்ளும். ஏட்டின் செந்நாக்குகள் தெறித்து விழும் திசை எங்கும் அறிவுத் தீ தெறித்துவிழும். திசை எங்கும் அறிவுத் தீ வான்முட்டக் கிளம்பும்” 1963ஆம் ஆண்டு ஜூன் 29ந்தேதி உதயமான முதல் தீக்கதிர் ஏட்டின் தலையங்கத்தில் தெறித்து விழுந்த வரிகளில் சிலவே மேலே சுட்டப்பட்டவை. பேரெழுச்சிமிக்க இந்தப் பிரகடனத்துடன் தனது பயணத்தை துவக்கிய தீக்கதிர், 50 ஆண்டுகளை எட்டியுள்ளது. எத்தகைய மகத்தான லட்சியத்துடன் தீக்கதிர் தனது பயணத்தை துவக்கியதோ, அதிலிருந்து சற்றும் தடுமாறாமல், தடம் மாறாமல் நடைபோட்டு வந்துள்ளது. உலகத்தை தனது உள்ளங்கையில் வைத்து உருட்டி விளையாட நினைக்கும் ஏகாதிபத்தியங் களின் முகத்திரையை கிழிப்பதில் முன்னின்று வருகிறது தீக்கதிர். இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற போதும், தொடர்ச்சியாக வந்த ஆட்சியாளர்களின் முதலாளித்துவ சார்பு கொள்கைகளால், மக்களின் வாழ்க்கையை நோக்கி சுதந்திர வெளிச்சத்தின் வீச்சு வரவேயில்லை. விடுதலையின் பலன் கடைக் கோடி குடிசை வரை வரவேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக இடைவிடாத போராட்டத்தை இந்திய, தமிழக தொழிலாளி வர்க்கம் நடத்தி வந்துள்ளது. அந்தப் போராட்டக்களத்தில் உழைக்கும் மக்களின் போர்வாளாகவும் கேடயமாகவும் திகழ்ந்தது, திகழ்கிறது தீக்கதிர் என்றால் அது மிகையல்ல. இந்தியா பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு பூக்காடு. மதத்தால், மொழியால், இனத்தால் வேறுபட்டிருந்தாலும் உணர்வால் அனைவரும் இந்தியரே. ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி என்ற உயரிய கோட்பாடுகளால் பின்னப்பட்டிருக்கிறது இந்த தேசம். அவசரநிலைக் காலம் துவங்கி எத்தனையோ முறை, இந்த விழுமியங்களை அறுத்தெறிய ஆளும் வர்க்கம் முயற்சிகளை மேற்கொண்டபோதெல்லாம், அதை தடுத்து நிறுத்தும் பேராயுதமாக தீக்கதிர் சுழன்று வந்துள்ளது. தீண்டாமைக் கொடுமை உள்ளிட்ட சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சமரசமற்ற போராட்டத்தை நடத்தி வந்துள்ளது நமது ஏடு. தீக்கதிரின் பேரொளிபட்ட பிறகே மறைக்கப்பட்டிருந்த பல தீண்டாமைச் சுவர்கள் வெளிச்சத்திற்கு வந்து பொடிப் பொடியாக நொறுக்கப்பட்டன என்பது நேற்றைய வரலாறு மட்டுமல்ல; இன்றைக்கும் நீளும் நிஜம். பெண்களுக்கு எதிராக காலம் காலமாக தொடுக்கப்பட்டு வரும் பாலியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நின்று பாலின சமத்துவத்திற்காக படை நடத்துகிறது தீக்கதிர். சமூக நீதிக்கான சமர்க்களத்தில் ஒடுக்கப்பட்ட அனைத்துப் பகுதி மக்களின் போர்க்குரலாக முழங்கி வந்துள்ளது தீக்கதிர். அறுக்கப்பட்ட நாவுகளிலிருந்து வெடித்துக் கிளம்பும் பேரோசையாக, திசைகள் அதிர ஒலித்து வருகிறது தீக்கதிர் ஏடு. விடுதலை பெற்ற இந்தியாவில் கூட்டாட்சி நிலை பெற வேண்டுமானால், மொழிவழி மாநிலங்கள் அமைய வேண்டும் என்று அழுத்தமாக குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். மாநிலங்களின் உரிமைக்காக மங்காத பேரொளியாக சுடர்கிறது தீக்கதிர். தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் தமிழே தலைமை தாங்க வேண்டும். மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளிட்ட மொழிகள் மலர்ந்திட வேண்டும் என்று போராடும் அதே நேரத்தில் இன, மொழி அடிப்படையிலான பிரிவினைவாத திருகல்களை எதிர்கொண்டு, இந்திய ஒருமைப் பாட்டை உறுதியோடு பற்றி நிற்கிறது நமது ஏடு. அரசியல், சமூக, பண்பாட்டுத் தளத்தில் புதிய வெளிச்சம் தேடும் போராளிகளின் கையில் ஒளி விளக்காக திகழ்கிறது தீக்கதிர் ஏடு. மார்க்சியம், லெனினியம் எனும் மகத்தான வெளிச்சத்தின் விளைச்சலாய் வெளிவந்த தீக்கதிர் தனது லட்சியப் பயணத்தில் அரை நூற்றாண்டை எட்டிப்பிடித்திருப்பது சாதாரணமானதல்ல; சாதனைச் சரித்திரம். நெருப்பாறுகளை கடந்து நீந்தி வந்த இந்த பொன்விழா பயணத்தில் தோள் கொடுத்த அனைத்து தோழர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் தீக்கதிர் தனது நன்றியை காணிக்கையாக்குகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிற பொன்னுலகை நோக்கிய பயணத்தில் தீக்கதிர் பீடுநடை போடும் என இந்நாளில் மீண்டும் உறுதியேற்கிறது. வீட்டுக்கொரு தீக்கதிர் வாங்குவோம்....! |
வெள்ளி, 29 ஜூன், 2012
பொன்னுலகை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் நாளேடு ''தீக்கதிர்'' -க்கு வயது 50...!
லேபிள்கள்:
தீக்கதிர்,
பொன்விழா,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக