தற்போதைய குடியரசுத்தலைவரின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடையும் சூழலில், ஆறு மாதத்திற்கு முன்பே இந்திய நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை ஊடகங்கள் ஆரூடம் சொல்ல ஆரம்பித்தது. இந்த இடைப்பட்ட காலங்களில் ஒவ்வொரு ஊடகங்களும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை எல்லாம் ஜனாதிபதியாக்கிப் அழகு பார்த்தார்கள். ஆனால் ஒரு பக்கம் மத்தியில் கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி செய்துகொண்டிருக்கும் - ஆளும் கூட்டணியின் தலைமைக் கட்சியான காங்கிரஸ் கட்சியோ குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை இதுவரை அறிவிக்காமலேயே காலதாமதம் செய்து வருகிறது. இன்னொரு பக்கம் குழம்பியக் குட்டையில் குடியரசுத்தலைவர் என்ற பெரிய மீன் இல்லாவிட்டாலும், ஒரு ''குடியரசுத் துணைத்தலைவர்'' என்ற சின்ன மீனையாவது பிடிக்க முடியுமா என்று ''வாடியிருக்கும் கொக்கைப்'' போல பாரதீய ஜனதா கட்சி நடப்பவைகளை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தான் நாட்டில் ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்தேறியது. தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே தனது கட்சி வேட்பாளரை அறிவிப்பது போல குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வருவதற்கு முன்பே தன்னுடைய கட்சி ஆதரிக்கும் வேட்பாளராக நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரும், பழங்குடி இனத்தை சேர்ந்தத் தலைவருமான பி.ஏ.சங்மா அவர்களை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திடிரென அறிவித்தார். மற்றக் கட்சிகளையும் அவரது வேட்பாளரை ஆதரிக்கும் படியும் வேண்டுகோள் விடுத்தார். ஒடிஷா மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரும் ஆதரவுக்கரம் நீட்டினார். 2014 - ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்தே ஜெயலலிதா இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் களம் இறங்கியிருக்கிறார் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
காங்கிரஸ் கட்சித் தலைமையோ தன்னுடைய வேட்பாளரை அறிவிக்க முடியாமல் தினறிக்கொண்டு, கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களிடம் ஆலோசனை கேட்டு வருகிறார். சோனியா அம்மா ஒரு கழுதையைக் காட்டினாலும் நாங்கள் ஓட்டுப்போட தயாராக இருக்கிறோம் என்ற தகவலை தன் ''அடுத்த வாரிசு'' மூலம் சொல்லியனுப்பி திமுக தலைவர் மு. கருணாநிதி தெரிவித்துவிட்டார்.
ஆனால் நேற்று இன்னொரு திருப்பமாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூட்டணித் தலைவர் சோனியாவை சந்தித்த போது வாய்ப்புள்ள வேட்பாளராக பிரணாப் முகர்ஜி மற்றும் ஹமீது அன்சாரியின் பெயர்களை சோனியா மம்தாவிடம் முன்மொழிந்திருக்கிறார். மேற்குவங்கத்தில் ஆரம்பக் காலம்தொட்டு அரசியலில் தனக்கு எதிர் துருவத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பிரணாப் முகர்ஜி- யை வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மம்தா தயாராக இல்லை.
அதே சமயம் ஜெயலலிதாவைப் போல் குடியரசுத் தலைவர் தேர்தலில் தானும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று நினைத்த மம்தா பானர்ஜி சோனியாவை சந்தித்தப் பிறகு, ஜெயலலிதா நிதிஷ் குமாரோடு இணைந்தது போல் இவர் முலாயம் சிங்கோடு இணைந்து கொண்டு, தன் பங்குக்கு மூன்று பேர்களின் பெயர்களை வேட்பாளராக தன்னிச்சையாகவே அறிவிக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி போன்றப் பெயர்களை மம்தா தடாலடியாக அறிவித்தார். இந்தப் பெயர்களை அறிவிப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்லாமலேயே - அவர்களுக்கு தெரியாமலேயே அறிவித்தது என்பது வேடிக்கையானது. மம்தா தன் பெயரையும் அறிவித்ததைக்கண்டு சோம்நாத் சட்டர்ஜியே அதிர்ந்து போய்விட்டார்.
மம்தாவின் இந்த சித்து வேலைகள் எதற்காக என்றால்...? மத்திய அரசிடம் அவர் கோரிக்கை வைத்து இதுவரை கைக்கெட்டாமல் இருக்கும் ''சிறப்பு நிதிக்காக'' தான் இந்த சித்து வேலைகள் என்பதை நாடே அறியும். மம்தா தான் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் மக்களை கவருவது போல் எந்த ஒரு திட்டங்களையும் கொண்டுவரமுடியாமல் திண்டாடிப் போய்விட்டார். கடந்த 33 ஆண்டுகளாக மேற்குவங்கத்தை ஆட்சி செய்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி அரசு மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களையும் செய்து முடித்து விட்ட சூழ்நிலையில், மம்தா தான் ஆட்சிக்கு வந்து மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு என்ன செய்வது என்று புரியாமல் திணறிப் போய்விட்டார். இந்த சூழ்நிலையில் தான் , தமிழ்நாட்டைப் போல் பல இலவசங்களை கொடுத்து மக்களை கவரலாம் என்ற முயற்சியில் இறங்கிய மம்தா அதற்கான நிதியை பிரதமரிடம் கேட்டார்... சோனியாவிடம் கேட்டார்.... திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவிடம் கேட்டார்.... யாரிடமும் மம்தாவின் கோரிக்கை நிறைவேறவில்லை. இறுதியில் குடியரசுத்தலைவர் தேர்தலை நிதியைப் பெறுவதற்கான ஒரு ஆயுதமாக மம்தா தன் கையில் எடுத்துக் கொண்டார் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.
சோனியா அறிவிக்கும் வேட்பாளருக்கு தன் கட்சியின் ஓட்டு வேண்டுமென்றால், தான் கேட்கும் அதற்கான நிதியை தந்தாக வேண்டும் என்பது தான் மம்தாவின் இந்த பேரமாகும். அதுமட்டுமல்ல, இது போன்ற குழப்பத்தை உண்டுபண்ணி, அதன் மூலம் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாக் கட்சியும் நெருங்கி வருவதற்கான வாய்ப்பையும் மம்தா உருவாக்கி, அதன் மூலம், ஜனாதிபதி பதவியை காங்கிரசும், துணை ஜனாதிபதி பதவியை பாரதீய ஜனதாக் கட்சியும் பங்குப்போட்டுகொள்ளவும் மம்தா பிஜேபி- க்கு ஆதரவாக மறைமுகமான வேலைகளில் இறங்கியிருக்கிறார் என்பதையும் யாராலும் மறுக்க முடியாதது.
சோனியா அறிவிக்கும் வேட்பாளருக்கு தன் கட்சியின் ஓட்டு வேண்டுமென்றால், தான் கேட்கும் அதற்கான நிதியை தந்தாக வேண்டும் என்பது தான் மம்தாவின் இந்த பேரமாகும். அதுமட்டுமல்ல, இது போன்ற குழப்பத்தை உண்டுபண்ணி, அதன் மூலம் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாக் கட்சியும் நெருங்கி வருவதற்கான வாய்ப்பையும் மம்தா உருவாக்கி, அதன் மூலம், ஜனாதிபதி பதவியை காங்கிரசும், துணை ஜனாதிபதி பதவியை பாரதீய ஜனதாக் கட்சியும் பங்குப்போட்டுகொள்ளவும் மம்தா பிஜேபி- க்கு ஆதரவாக மறைமுகமான வேலைகளில் இறங்கியிருக்கிறார் என்பதையும் யாராலும் மறுக்க முடியாதது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக