ஞாயிறு, 3 ஜூன், 2012

பாரதீய ஜனதா கட்சியின் இலட்சணம் கொடிகட்டிப் பறக்கிறது பாரீர்...!

              
        2009 பாராளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன், முதல் பாதி ஆட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாய் ஊழல் பேய்களெல்லாம் காங்கிரஸ் மற்றும் அதன் நேசக் கட்சிகளின் ஊழல் பெரிச்சாளிகளோடு கைகோர்த்து ஆட்டம் போட்டதையும் அதன் காரணமாக அந்த பெரிச்சாளிகள் எல்லாம் பொறி வைத்து பிடிக்கப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டதையும் இந்த நாடே பார்த்து வெட்கி தலை குனிந்தது. எதோ ஊழலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போலவும், தாங்கள் ஊழல் கரையற்ற புனிதமான கட்சியைப் போலவும், ஊழலை ஒழிப்பதற்காகவே தாங்கள் அவதாரம் எடுத்தது போலவும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் துள்ளிக்குதித்து வந்ததையும் இந்த நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்கள்.   
       இப்போது இரண்டாம் பாதி ஆட்டம் துவங்கி இருக்கிறது. இம்முறை காங்கிரஸ் - திமுகவைப் போல் ஊழலோடு ஓட்டிப் பிறந்த பாரதீய ஜனதா கட்சியின் ஊழல் பெரிச்சாளிகளும், ஊழல் பேய்களும் சேர்ந்தாடிய ஆட்டம். இவர்களை பொறி வைத்தெல்லாம் பிடிக்கவில்லை. ஊழல் குற்றம் புரிந்த பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் முறையான விசாரணை நடத்தப்பட்டு ஒவ்வொருவராக சிறைக்குள் தள்ளப்படுகிறார்கள்.
             ஒரு மாதத்திற்கு முன்பு தான், பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சியின் போது இந்திய இராணுவத்திற்கு ஆயுதம் வாங்கியதில் ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதற்காக, அன்றைய பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பங்காரு இலட்சுமணன் மீதான வழக்கு விசாரணை முடிந்து நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பரிசாக அளிக்கப்பட்டு இப்போது தண்டனையை அனுபவித்து  வருகின்றார். 
         சென்ற ஆண்டு தான் சட்டவிரோத சுரங்க ஊழல் விவகாரத்தில் சிக்கி மத்திய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு, 25 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின் வெளியே வந்து இன்று தலைமையை மிரட்டிக்கொண்டிருக்கும், காங்கிரஸ் கட்சிக்கு        தாவுவதற்கு நாள் பார்த்துக் கொண்டிருக்கும்,  பாரதீய ஜனதா கட்சி ஆளும் கர்நாடக  மாநிலத்தின் பதவியிழந்த முதல்வர் எடியூரப்பா மீது இன்றும் சி. பி. ஐ. நீதிமன்றத்தில் விசாரணை  நடைபெற்றுக்கொண்டு வருகிறது.
           அதுமட்டுமல்ல   கர்நாடக மாநிலத்தில் சட்ட விரோத சுரங்க தொழிலில் ஜாம்பவான்களாக விளங்கிய ரெட்டி சகோதரர்கள் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி ஆகிய இருவரும் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக பாரதீய ஜனதா மந்திரிசபையில் மந்திரிகளாக பதவி வகித்தவர்கள். இவர்களும் சட்டவிரோத சுரங்க ஊழல் புகாரில் பதவி இழந்து கைது செய்யப்பட்டனர். இவர்களின்  மற்றொரு சகோதரரான சோமசேகர ரெட்டி தற்போது பாரதீய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
           ரெட்டி சகோதரர்களுக்கு சொந்தமான, ஓபுலாபுரம் சுரங்க நிறுவனத்துக்கு கர்நாடக மாநிலத்திலும் ஆந்திர மாநிலத்திலும் பல ஏக்கர் பரப்பளவுக்கு  நிலங்கள் உள்ளன. அங்கு நடைபெற்ற கனிம சுரங்க முறைகேடு தொடர்பாக, பா. ஜ. க. - வின் முன்னாள் மந்திரி  ஜனார்த்தன ரெட்டி கடந்த செப்டம்பர் மாதம் சி.பி.ஐ. - யினால் செய்யப்பட்டார்.
            அவர் மீதான வழக்கு விசாரணை ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் உள்ள சி.பி.ஐ. தனி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கடந்த மே மாதம் 11-ந்தேதி அன்று, சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி பொறுப்பு வகித்த முதல் கூடுதல் செசன்சு நீதிபதி டி.பட்டாபி ராமராவ் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கி, ரூ.5 லட்சம் சொந்த ஜாமீனிலும் அதே தொகைக்கு இரு நபர் ஜாமீனிலும் ஜனார்த்தன ரெட்டியை விடுவித்தார்.
             ஜனார்த்தன ரெட்டியை ஜாமீனில் விடுதலை செய்வதற்கு  சி.பி.ஐ நீதிபதி பட்டாபி ராமராவிடம்  ரூ.15 கோடி தரவேண்டும் என்று பேரம் பேசப்பட்டு, அதன்படி முதல் கட்டமாக ரூ.5  கோடி நீதிபதிக்கு வழங்கப்பட்டு, பின்  ஜாமீனில் விடுவிக்கப்பட்டதும் மீதி தொகையை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விஷயங்கள் அனைத்தும் சி. பி. ஐ - யின் காதுகளுக்கு எட்ட, அதிரடியாக இறங்கிய சி. பி. ஐ., இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை  நீதிபதியின் மகன் பெயரில் ஐதராபாத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து கைப்பற்றி நீதிபதியை கைது செய்தது. 
              இதேப் போல் 2009 - இல் இதே கர்நாடக மாநிலம், கோலார் தங்கவயல் நகரப் பகுதியைச் சேர்ந்த ஒரு  தொழிலதிபர் ஹுசேன் மொஹீன் பாரூக் என்பவர்  தனக்கு ஏற்பட்டிருந்த சொத்துப் பிரச்னையைத் தீர்த்து வைக்குமாறு, அந்தத் தொகுதி பா. ஜ. க  சட்டமன்ற உறுப்பினரான  ஒய்.சம்பங்கியை அணுகி இருக்கிறார். அதற்கு ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று எம்எல்ஏ ஒய்.சம்பங்கி கூசாமல் கேட்டாராம். இதுதொடர்பாக நடைபெற்ற தொலைபேசி உரையாடலை லோக் ஆயுக்த போலீஸாரிடம் பாரூக் அளித்திருக்கிறார். சட்டப்பேரவை விடுதியில் 2009-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதியில் சம்பங்கியிடம் தொகையை பாரூக் வழங்கியபோது போலீஸார் சம்பங்கியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு லோக் ஆயுக்த சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பாஜக எம்எல்ஏ - வான  ஒய். சம்பங்கி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, சம்பங்கிக்கு மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு நேற்று சனிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டார். 
             அப்பப்பா.... தலை சுத்துதடா சாமீமீமீ... காங்கிரஸ் கட்சிக்காரனுங்க செய்த ஊழல்கள் எல்லாம் இராமாயணம் போல் நீண்டுகொண்டே போகிறது என்றால், இந்த பாரதீய ஜனதா கட்சிக்காரனுங்க செய்த ஊழல்கள் எல்லாம் மகாபாரதம் போல் நீண்டுகொண்டே போகிறதே...! 

கருத்துகள் இல்லை: