திமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 பிப்ரவரி, 2016

மக்களை மறக்கடிக்கும் வேலையில் திமுகவும் அதிமுகவும்....!


      கடந்த இரண்டு நாட்களாக செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், வலைத்தளங்களிளும்  திமுகவும் அதிமுகவும் மாறிமாறி ''முதலமைச்சரை அங்க பார்த்திருப்பீங்க... இங்க பார்த்திருப்பீங்க...'' - ன்னு திமுகவும், பதிலுக்கு ''திமுக தலைவரை அங்க பார்த்திருப்பீங்க... இங்க பார்த்திருப்பீங்க...'' - அதிமுகவும் லாவணி பண்ணிக்கொண்டு திரிவதைப் பார்த்திருப்பீர்கள். 
         இதில என்ன விசேஷம் என்றால்.... இவிங்க ரெண்டு பேருமே ரொம்ப சர்வ ஜாக்கிரதையா அவரவர்கள்  செய்த ஊழல்களை மட்டும் சொல்லி லாவணி பண்ணவில்லை. அதில இரண்டு  பேருமே திரை மறைவில் ஒற்றுமையை கடைபிடித்திருக்கிறார்கள். கருணாநிதியும், ஜெயலலிதாவும் மிகப்பெரிய ஊழல் பேர்வழிகள் என்று உலகத்திற்கே நன்றாக தெரியும். பிறந்த குழந்தையை கேட்டால் கூட சரியா சொல்லும். அப்படிப்பட்ட உண்மையை சொல்லி இருவருமே குற்றம் சாட்டிக்கொள்ளவில்லை என்பது திரைமறைவு உண்மை. 
           நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் - கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் இரகசிய ஒப்பந்தம் இருக்கிறது என்பதும், இரகசிய கூட்டணி இருக்கிறது என்பதும் உண்மை. 
         ஊழலை ஒழிப்போம்... நல்லாட்சித் தருவோம்... என்ற முழக்கமிட்டு உதயமான மக்கள் நலக் கூட்டணி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று முன்னேறிச் சென்றுக்கொண்டிருக்கிற சூழ்நிலையில், வழக்கம் போல் தாங்கள் இருவர் மட்டுமே களத்தில் இருப்பதைப் போன்ற கருத்தாக்கத்தை மக்களின் புத்தியில் திணிப்பதற்காகவும், தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை மக்கள் மறந்துவிடுவதற்காகவும் திமுகவும் அதிமுகவும் திட்டமிட்டு யோக்கியர்களைப் போன்று இதுபோன்ற விளம்பரங்களை போட்டிப்போட்டுக்கொண்டு வெளியிடுகின்றன என்பது தான் உண்மை. 
         மக்கள் தான் புரிந்துகொண்ட இவர்களை விரட்டியடிக்கவேண்டும். 

செவ்வாய், 21 ஜூலை, 2015

மதுவிலக்கு - மக்களை ஏமாற்ற கருணாநிதி போடும் புதிய முகமூடி...!


                இந்திய அரசியல்வாதிகளுக்கு திடீரென்று மக்களின் மீது அக்கறை வருகிறதென்றால் - அவர்கள் திடீரென்று கவர்ச்சி அறிவிப்பு பலூன்களை பறக்கவிடுகிறார்கள் என்றால் சட்டமன்றத்தேர்தலோ அல்லது பாராளுமன்றத்தேர்தலோ வருகிறதென்று அர்த்தம். அப்படித்தான்  நேற்று தமிழகத்தில் ஒரு ''கவர்ச்சி அறிவிப்பு'' வெளியாகியிருக்கிறது. ''தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு தீவிரமாக அமல்படுத்தப்படும்'' என்ற மக்களை ''மயக்கும்'' அறிவிப்பு இன்று காலை பத்திரிகைகள் முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது. இந்த மயக்கும் அறிவிப்பை வெளியிட்டவர் வேறு யாருமல்ல...! திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி தான். தேர்தல் நெருங்குகிறது அல்லவா...? திடீரென்று மக்களை பற்றிய அக்கறை அவருக்கு வந்துவிட்டது. தன்னுடைய   ஆட்சிக்காலங்களில் தமிழக மக்களுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்தவர் இப்போது மதுவிலக்கைப் பற்றிப் பேசுகிறார் என்பதை பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது. தேர்தலில் வெற்றிபெறுவதற்கு கருணாநிதி எந்த ஒரு அதிசயத்தையும் கூசாமல் செய்துகாட்டுவார். தேர்தலுக்கு தேர்தல் ஏதாவது ஒரு சாட்டையை எடுத்து சுழற்றுவார். இந்தி எதிர்ப்பு என்பார். இலங்கை தமிழர் என்பார். சொத்து சேர்ப்பு - ஊழல் என்பார். தேர்தலுக்கு தேர்தல் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் வேஷம் போடுவார். முகமூடியை மாற்றிக்கொள்வார்.
              அதேப்போல் வருகிற தேர்தலில் மக்களை கவரவேண்டுமே என்ன செய்யலாம் என்று யோசனை செய்தார். இப்போது மக்கள் பிரச்சனையாக இருப்பது ''டாஸ்மாக்'' தான். பார்த்தார்... இது பெண்கள் பிரச்சனை மட்டுமல்ல. நீண்ட நாளைய சமூக பிரச்சனை. பெண்களின் வாக்கு வங்கியை கவருவதற்கு, ''நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம்''   என்ற அறிவிப்பை கொடுத்திருக்கிறார். 
         தமிழக மக்களும்  இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

சனி, 19 ஏப்ரல், 2014

தில்லி கோட்டைக்குச் சென்று திமுகவும், அதிமுகவும் இதுவரை செய்தது தான் என்ன?



  கட்டுரையாளர் : தோழர். டி. கே. ரங்கராஜன், எம்.பி                
           தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் நடத்தும் தேர்தல் பிரச்சாரத்தைக் கவனித்தால், நடப்பது நாடாளுமன்றத்தேர்தலா அல்லது சட்டமன்றத்தேர்தலா....? என்ற சந்தேகம் தான் வருகிறது. இரண்டு கட்சிகளும், பரஸ்பரம் சொத்துப்பட்டியலையும், ஊழல் பட்டியலையும் மக்கள் முன்னால் வைத்து, திகில் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. திமுகவைப் பொறுத்தவரை, காங்கிரஸ், பாஜகவை விட- வேறெந்த மாநிலக் கட்சியையும் விட, கூடுதலான காலம் மத்திய அமைச்சரவையில் இருந்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மூன்று தவணைகளாக 6 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இரண்டு தவணையாக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. இதில், இரண்டு கூட்டணியிலும் மாறி, மாறி திமுக மட்டும் 14 ஆண்டுகாலம் மத்திய அமைச்சரவையில், ''வலுவான- வளமான'' இலாகாக்களைப் பெற்று, ஆட்சியில் இருந்துள்ளது.
          அதிமுக, பாஜக கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டவுடன், “அண்ணன் எப்போது சாவான்; திண்ணை எப்போது காலியாகும்?” என்று காத்திருந்த திமுக, ஓடோடிச் சென்று, அந்த ஆட்சியில் ஒட்டிக் கொண்டது. திமுக இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்று மறைந்த காங்கிரஸ் தலைவர் சி.சுப்பிரமணியம் சொன்னதாக கலைஞர் தன்னுடைய நிலையை நியாயப்படுத்தினார். இக்கட்டான நிலை வரும்போதெல்லாம், இறந்துபோன தலைவர்களை மேற்கோள் காட்டுவது, கலைஞருக்கு வாடிக்கை. “இந்தியா ஒளிர்கிறது” என்று கூறிய பாஜக கூட்டணி ஆட்சி மங்கிப்போனது. உடனே அணி மாறிய திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசில் சேர்ந்தது. காங்கிரசின் “பி” டீமாகவே, திமுக இருந்தது. எல்லா பருவநிலைகளுக்கும் ஒத்துப்போகும் ஒரு கட்சி, இந்தியாவில் உண்டென்றால், அது திமுகதான். எங்கு சேர்ந்தாலும், அதற்கான வியாக்யானங்களை, விளக்கங்களைத் தருவதில் அவர்களை மிஞ்ச முடியாது. பதினான்கு ஆண்டுகாலம் மத்திய ஆட்சிப் பொறுப்பில் தொடர்ந்து பதவி வகித்த திமுக, தமிழகத்திற்கு செய்தது என்ன...? “வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” என்று ஒரு காலத்தில் குரல் கொடுத்தவர்கள், டாடா, பிர்லா, அம்பானிகளின் சேவகர்களாக மாறிப் போனார்கள்.
             “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்“ என்றார் அண்ணா. இவர்களோ, அம்பானியின் சிரிப்பில் அண்ணாவையே கண்டார்கள். இவர்கள் அண்ணா கண்ட கனவை நிறைவேற்றவில்லை. மாறாக, அதிகாரத் தரகர் நீரா ராடியா கண்ட கனவையே நிறைவேற்றினார்கள். மத்திய ஆட்சி அதிகாரம் கையில் இருந்ததைப் பயன்படுத்தி, தமிழை மத்திய ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஆக்கினார்களா? நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழைக் கொண்டுவந்தார்களா? மாநிலத்தில் சுயாட்சி,மத்தியில் கூட்டாட்சி என்று முழக்கமிட்ட வர்கள்; மாநில சுயாட்சிக்காக ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டார்களா? ராஜமன்னார் குழு பரிந்துரைகளை நிறை வேற்றப் பாடுபட்டார்களா? எதுவுமில்லை. மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்து, இவர்கள் சாதித்தது, அலைவரிசைக் கற்றை ஊழல் மட்டுமே.டி.ஆர்.பாலு, கப்பல்துறை அமைச்சராக இருந்தபோதுதான் சேது சமுத்திரத் திட்டத் துவக்க விழா நடைபெற்றது. இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவோடு அந்த அரசு செயல்பட்டதால்தான், அது சாத்தியமானது. ஆனால், அந்த திட்டத்தை எதிர்த்து, சுப்பிரமணியசாமியால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்ட நிலையில், திட்டம் முடக்கப்பட்டது.
         பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்த அதிமுக, அதற்குச் சொன்ன காரணங்களில் ஒன்று, ‘சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வாஜ்பாய் அரசு மறுக்கிறது’ என்பதாகும். ஆனால், அதே அதிமுக அரசு இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று மனு போட்டிருப்பது விசித்திரமானதாகும். சேதுசமுத்திரத் திட்டம் முடக்கப்பட்டதை எதிர்த்து, திமுகவும் அங்கம் வகித்த மத்திய அரசு, நீதிமன்றத்தில் முறையாக வாதாடியதா? வாய்தா வாங்கி, அந்த வழக்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதற்கும், திட்டம் முடக்கப்பட்டதற்கும், திமுகவுக்கும் பொறுப்பு உண்டு. இந்த திட்டம் முடங்கியதில், அதிமுகவுக்கு மட்டுமல்ல, திமுக வுக்கும் பங்கு உண்டு. 1983-ல் ‘தமிழ் ஈழத்தை ஏற்காதவர்கள் தமிழர்களே அல்ல’; என்று கலைஞர் பேசினார். ஆனால், திமுக அங்கம் வகித்த மத்திய ஆட்சி நடந்தபோதுதான், இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.
        அதைத் தடுத்து நிறுத்த, தனது அதிகாரத்தை, அரசியல் செல்வாக்கை திமுக பயன்படுத்தவில்லை. இந்த குற்றச்சாட்டுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். அதன்பிறகு டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, இலங்கைக்குச் சென்று ராஜபக்சேவுடன் அளவளாவிவிட்டு வந்தது. இது என்ன தமிழர் பாசம்? என்று தமிழக மக்களுக்குப் புரியவில்லை. மத்திய அரசில் நீண்டகாலம் இருந்து விட்டு, “எங்கள் சாதனை இது” என்று எதனையும் உருப்படியாக சொல்ல முடியாத தால்தான், தேர்தல் களத்தில் அதிமுக-வை மட்டும் திமுக விமர்சிக்கிறது. கலைஞர் மட்டுமல்ல, அவருடைய மகன் - சகோதரர் மு.க.ஸ்டாலினும் இதைத்தான் செய்து வருகிறார். தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல.

நாளை நமதே; நாற்பதும் நமதே

          நாளை நமதே; நாற்பதும் நமதே என்று அதிமுகவினர் தேர்தலுக்கு முன்பிருந்தே உற்சாகமாக கூறி வந்தனர். நாடாளுமன்றத்தை வரைந்து, அதன் முன்பு, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நிற்பது போல, டிஜிட்டல் பேனர்களை வைத்து அகமகிழ்ந்தனர். இடதுசாரிக் கட்சிகளுடன் தான் எங்களது கூட்டணி என்று கூறிய அதிமுக, கடைசியில் சந்தோஷமாக பிரியலாம் என்று சென்றது. இந்த தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள், சந்தோஷமாக மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றன.
        ஆனால், அதிமுகவின் சந்தோஷம்தான் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. முதல்வர் ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் பறந்து பறந்து சென்று சாமானிய மக்களைச் சந்திக்கிறார். ஒவ்வொரு கூட்டத்திலும், திமுகவையும், காங்கிரசையும் கடுமையாக விமர்சிக்கிறார். மோடியையும், பாஜகவின் மதவெறியையும் விமர்சிக்க மறுப்பது ஏன்..? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பியது. மோடி வேறு மாநில முதல்வர்; அவரை ஏன் விமர்சிக்க வேண்டும்? என்று அவர்களது ஏடான ‘நமது எம்ஜிஆர்’ பெட்டிச் செய்தியில் கெட்டிக்காரத்தனம் என நினைத்துக் கொண்டு பதில் எழுதியது. இந்த நிலையில் கரூர் கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருந்த போது, நடிகர் ரஜினிகாந்த்தை மோடி சந்திக்க இருப்பதாக தகவல் வந்தது.
           உடனே பூமியில் காய்ந்து கிடந்த, காவிரி, அமராவதி நதிகளும், காவிரி பிரச்சனையில் பாஜக செய்த துரோகமும், முதல்வருக்கு நினைவுக்கு வந்துள்ளது. காவிரிப் பிரச்சனையில் காங்கிரசும், பாஜகவும் துரோகம் இழைத்ததாகப் பேசினார் முதல்வர். அடுத்து நடிகர் விஜய்யை, மோடி சந்தித்தவுடன், குஜராத்தை விட தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளது என்று பட்டியலிடுகிறார் முதல்வர். இப்போது கூட, குஜராத்தில் இஸ்லாமிய மக்களை மோடி நரவேட்டை ஆடியது குறித்தோ, பாஜக தேர்தல் அறிக்கையில் காணப்படும் மதவெறி குறித்தோ எதுவும் கூறவில்லை. இன்னும் சொல்லப்போனால், தன்னுடைய கட்சியின் தேர்தல் அறிக்கையில், கூறியுள்ள விஷயங்களைக் கூட அதிமுகவினரால் எடுத்துச் சொல்ல முடியவில்லை.

இருவரும் பொறுப்பு

           தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள்தான் மாறி மாறிஆட்சி செய்து வருகின்றன. ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆனாலும் வேலைவாய்ப்பு பெருகவில்லை. இந்த ஆண்டு ஜனவரி மாத கணக்குப்படி தமிழ்நாட்டில் 90லட்சம் பேர் வேலையின்றி காத்திருக்கின்றனர்.  இவர்களில் 45லட்சம் பேர் பெண்கள். இதில் தான் பாலின சமத்துவம் ஏற்பட்டுள்ளது. 3லட்சத்திற்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர். வளாகத் தேர்வில் தேர்வு பெறும் பொறியியல் பட்டதாரிகள் தவிர மற்றவர்களுக்கு நல்ல வேலைகிடைப்பதில்லை. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். சிறு, குறு தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயத்துறை நாளுக்கு நாள் நலிந்துவருகிறது.
        மின்வெட்டு தமிழகத்தை மிரட்டுகிறது. திமுக -அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒன்றையொன்று குற்றம்சாட்டுகின்றன. ஆனால் இரண்டு கட்சிகளுமே இந்த நிலைமைக்கு காரணம். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இரு கட்சிகளுக்கும் உண்டு. ஆனால் இந்த கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு, என்ன செய்யும்? என்று யாரும் இப்போது கூற முடியாது. அனைத்து வாய்ப்புக் களுக்குமான வாசல்களை இவர்கள் திறந்தே வைத்துள்ளனர்.
        ஆனால், அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு இடம் தராமல், மத்தியில் அமைகிற அரசு மதச்சார்பற்ற- மாற்று அரசாக அமைய வேண்டும் என்று கம்பீரமாக களத்தில் நிற்பவர்கள் இடதுசாரி வேட்பாளர்களே... அவர்களை ஆதரிப்பதன் மூலம்தான் தேச நலனை மட்டுமல்ல; தமிழக நலனையும் பாதுகாக்க முடியும்.
 

புதன், 19 மார்ச், 2014

மு.க.ஸ்டாலின் விழுங்கிய சூடம்...!



கட்டுரையாளர் : க.சுவாமிநாதன்                             

              தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் “சில்லரை வியாபாரத்தில் அந்நிய முதலீட்டை என்றுமே தி.மு.க ஆதரித்ததில்லை” என்று ஓங்கி அடித்துள்ளார்.
                இவர் போகிற ஊரில் எல்லாம் இனிமேல் ஒரு சூடத்தை ஏற்றிவைத்து கையால் அடித்து சத்தியம் செய்வார் போலிருக்கிறது. ஒரு படத்தில் வடிவேல் வாய்க்குள் சூடத்தை ஒருவர் தட்டிவிட்டவுடன் வெந்துபோய் காதுகளில் எல்லாம் புகைவரும். அதுபோன்றுதான் ஸ்டாலினின் நகைச்சுவைக்கும் தூத்துக்குடி சில்லரை வியாபாரிகள் சிரித்திருப்பார்கள்.
சில்லரை வியாபாரத்தில் அந்நிய முதலீட்டிற்கு முதலில் பி.ஜே.பி யோடு கைகோர்த்து ரோடு போட்டவர்களே தி.மு.க காரர்கள்தான். முரசொலி மாறன் மத்திய வர்த்தக அமைச்சராக வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது மத்திய அமைச்சரவையில் சில்லரை வணிகத்தில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கான குறிப்பை மாறன் முன்வைத்து அது ஏற்றுக் கொள்ளவும்பட்டது.
     ஆனால் இடதுசாரிகள் மற்றும் சிறுவணிகர்களின் கடும் எதிர்ப்பால் அமலாக்கப்படவில்லை. அப்போது பி.ஜே.பியின் மூத்த அமைச்சர் “ பெப்சி , கொக்க கோலா வந்தாலும் பெட்டிக்கடை சர்பத் காணாமலா போய்விட்டது? “என்று கேலி பேசினார். இப்படி பி.ஜே.பி வால்மார்டிற்கு வால்பிடித்தபோது சேர்ந்து ஒரு கை கொடுத்தது திமுக.
             மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்குத்தான் காங்கிரசுக்கு ஆதரவாக சில்லரை வணிகப் பிரச்சனையில் நாடாளுமன்றத்தில் கைதூக்கியதாக தூத்துக்குடியில் ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார். ஸ்டாலின் அவர்களே! நீங்கள் 1999-2004 காலத்தில் மதவாதத்திற்கு ஒரு கை.. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு இன்னொரு கை.. என்று தூக்கியதற்கு என்ன விளக்கம் தரப் போகிறீர்கள்?இடதுசாரிகள் ஆதரவோடு மத்திய ஆட்சி இருந்தபோது ஒரு தடவையாவது இடதுசாரிகள் அந்நிய முதலீடு, தனியார்மயம் போன்ற பிரச்சனைகளில் சமரசம் செய்ததுண்டா? சோதனை வந்த காலத்தில் யார் உறுதியாக அவர்கள் பக்கம் நின்றார்கள் என்பது சிறு வியாபாரிகளுக்கு தெரியும்.
                 மு.க.ஸ்டாலின் அவர்களே! ஊருக்கு ஏற்றாற்போல் எழுதிவைத்து பொய் சொல்லும் உங்களைப் பார்த்து சிறுவியாபாரிகள் சிரிக்கிறார்கள். தொண்டையில் உள்ள சூடத்தை வெளியே துப்பிவிடுங்கள். சுட்டுவிடப்போகிறது.
நன்றி :  


சனி, 15 மார்ச், 2014

பாவம் அழகிரிக்கு பொழுது போகலையாமா...!

                
          2009 - ஆம் ஆண்டு ''அஞ்சாநெஞ்சன்'' அழகிரிக்கும், 2014 - ஆம் ஆண்டு ''அமுங்கிய மூஞ்சன்'' அழகிரிக்கும் என்னமா வித்தியாசம் தெரியுது. சென்ற 2009 தேர்தலில் இந்த அஞ்சா நெஞ்சனின் ஆட்டமென்ன...! ஆர்ப்பாட்டமென்ன...! 2009 நாடாளுமன்றத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர்.மோகன் அவர்களுக்குக்காக பிரச்சாரம் செய்யும் போது இவர் காட்டிய  மிரட்டல்கள் தான் என்ன...! அய்யய்யோ தாங்க முடியலடா சாமி.  ஆனால் இப்போது 2014 தேர்தலில் இவைகளெல்லாம் எங்கே போனது....? ''ஆடி அடங்கும் வாழ்க்கையாடா...'' என்றல்லவா அஞ்சாநெஞ்சன் ஆடிப்போயிருக்கிறார். 
      அண்மையில்  தன் தந்தையாலேயே ''குடும்பத்திலிருந்தும் குடும்பக்கட்சியிலிருந்தும் துரத்தியடிக்கப்பட்ட பின், தன்னையே சுற்றிக்கொண்டிருந்த தொண்டர்களும், குண்டர்களும் இவரை விட்டு ஓடிவிட ''யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க...'' என்று தனிமையில் பாடிக்கொண்டிருந்தார். அப்படியும் பொழுது போகல.  இவரும்  யார் வீட்டிற்கும் போகவும் முடியல. யாரும் இவரை சேர்த்துக்கொள்ளவும் மாட்றாங்க. என்ன பண்ணுவாரு பாவம்  பொழுதும் போகமாட்டேங்குது. ''பழைய நெனப்புடா பேராண்டி'' என்று தனக்கு தெரிந்த பழைய நண்பர்களை  சந்திக்க கிளம்பிவிட்டார்.
           தன் அப்பாவின் எதிரியான வைகோ, பிரதமர் பதவியிலிருந்து  இறங்கப்போகும் மன்மோகன் சிங், ஆட்சிக் கனவில் மிதக்கும் பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங், திரைப்பட நடிகர் ரஜினி காந்த் என இத்தனை பேரையும் கடந்த ஒரு வார காலமாக இந்த அஞ்சாநெஞ்சன் சந்தித்திருக்கிறார். இது என்ன வேண்டுதலா..? இப்படி உங்க அப்பாவுக்கு சம்பந்தமே இல்லாதவங்க எல்லோரையும் சந்திக்கிறீங்களே...? என்று கேட்டாக்கா. பொழுது போகமாட்டேங்குதாமா... இப்படி யாரையாச்சும் சந்தித்து பேசினாக்கா மனசில பாரம் குறையுதாமா...! பாவம் அஞ்சாநெஞ்சன் பொழப்பு இப்படி ஆயிடுச்சி....!  

வெள்ளி, 29 ஜூலை, 2011

கருணாநிதியின் மற்றுமொரு நாடகம் - வெட்கமாக இல்லை..?

        தமிழக மாணவ - மாணவியர்களின் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்டு,  சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்திட வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று சமச்சீர் பாடப்புத்தக விநியோகத்தை உடனே துவக்கிட வேண்டும் என்றும் கோரிக்கையை வலியுறுத்தி  தமிழகம் முழுவதும் ஜூலை 26 அன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்துமாறு இந்திய மாணவர் சங்கம் அறைகூவல் விடுத்திருந்தது. அந்த அறைகூவலை  ஏற்று தமிழகம் முழுவதும் சென்ற ஜூலை 26 அன்று சென்னை துவங்கி கன்னியாகுமரி வரை பள்ளி - கல்லூரி மாணவர்கள் பெருமளவில் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தை வெற்றிகரமாக  நடத்தினர்.
                இதைப் பார்த்து பொறுத்துக்கொள்ள   முடியாத திமுக தலைவர் கருணாநிதி இப்பிரச்சனையை அரசியலாக்கி தேர்தல் வியாபாரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில்,    சமச்சீர் கல்வியை பாதுகாக்க வரும் ஜூலை 29 - ஆம் தேதி திமுக மாணவரணி என்ற பெயரில், மாநிலம் முழுவதும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாகவும், பல்வேறு அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதற்காக தான் இந்தப் போராட்டம் எனவும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆதரவு தரவேண்டும் எனவும் திமுக தலைவர் கருணாநிதி வழக்கமான உருக்கத்துடன்  வேண்டுகோள் விடுத்தார்.
                அதன்படி திமுக-வினர் இன்று வகுப்புப் புறக்கணிப்புக்கு அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல் மாணவ - மாணவியர்களிடையே ஆதரவு கிடைக்கவில்லை. சென்னை, வேலூர், திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மட்டும்  ஒருசில மாணவர்களே  பள்ளிகளை புறக்கணித்தனர். அதுவும் திமுக கட்சிக்காரர்களும் - குண்டர்களும் தங்களுக்கு வேண்டியப் பிள்ளைகளை தங்களுடன் சேர்த்துக்கொண்டு அரசுப் பள்ளிகளின் வாசல்களில் கோஷங்களை எழுப்பி இருக்கின்றனர்.
                மாணவர்கள் மீது அக்கறையோடு போராட்டம் நடத்திய திமுக மாணவரணி என்று  ஒன்று இதுவரை இருந்ததா..? அப்படி இருந்திருந்தால், இன்றுவரை எங்கே போனது..?  அதுமட்டுமல்லாமல், திமுக மாணவரணி சமச்சீர் கல்விக்காக இதுவரை போராட்டம் நடத்தாதது ஏன்?
               ‘பல்வேறு அமைப்புகளின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவே இந்தப் போராட்டம்’ என்றால், அறிவிப்பு வெளியானவுடன், கலைஞர்  தொலைக்காட்சியில், அது வரை காட்டப்பட்ட இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு, ஏதோ மாணவர் திரள் தன்னெழுச்சியாய் போராட்டம் நடத்தியது போல் காட்டப்பட்டதே... அதற்கு என்ன பொருள்..?
                அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக  சமச்சீர் கல்வி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று திமுக கூறுகின்றது. இப்பிரச்சனையின் தொடக்கத்திலிருந்தே இந்திய மாணவர் சங்கத்திற்கு இக்கூற்றில் உடன்பாடில்லை. தனியார்மயத்திற்கு ஆதரவான நிலைபாடே இதற்குக் காரணம் என்பது தான் வெளிப்படையான உண்மை. பல தனியார் பள்ளி நிர்வாகங்களின் நிர்ப்பந்தமே இதற்கு காரணம் என்றும்  இந்திய மாணவர் சங்கம் கருதுகிறது.
             சமச்சீர்கல்வி அமலானால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதை  தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள்  உறுதியாக நம்புகிறார்கள். அதனால் பாகுபாடுகள் தொடர வேண்டும் என்பதே அவர்கள் விருப்பம்.
ஆட்சியிலே இருந்தபோது, தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்களுக்கு ஆதரவான இதே  நிலைப்பாட்டைத்தான் திமுகவும் எடுத்தது என்பதை தமிழக மக்கள் மறந்திருக்க முடியாது. இன்றைய சமச்சீர்கல்வி பிரச்சனைக ளுக்கு அடித்தளம் இட்டது திமுக ஆட்சி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
              இப்போது சமச்சீர் கல்விக்காக நாடகமாடும் திமுக தலைவர் கருணாநிதி தான் ஆட்சி செய்த காலத்தில், கடந்த 2009 - ஆம் ஆண்டு ஜூன் 5 - ஆம் தேதி இதே சமச்சீர் கல்விக்காக அமைதியான பேரணி நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் மீது தடியடி நடத்தி, கடுந்தாக்குதலுக்கு உள்ளாக்கி, பொய் வழக்கை போட்டதை இன்று வசதியாக மறந்திருப்பார். அதுமட்டுமல்லாமல், சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் கருணாநிதி, ‘சமச்சீர் கல்விக்காக அவசரப்படக்கூடாது. அதனால், சிலர் பாதிக்கப்படுவார்கள். யாரும் பாதிக்காமல் அதை நிறைவேற்ற காலதாமதம் ஆகும்’ என்று நா கூசாமல் கூறினார் என்பதை தமிழக  மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
                இப்படியாக, தான் ஆட்சியிலிருந்த  போது, கல்வி வியாபாரத்திற்கு சாமரம் வீசிவிட்டு, இப்போது, சமச்சீர் கல்வி கேட்டு போராட வாருங்கள் என அழைக்கும் திமுக தலைவர் கருணாநிதியின்  நாடகத்தை தமிழக மாணவர்கள் நன்கு அறிவார்கள்.     1967-இல் திமுக ஆட்சியமைக்க மாணவர்கள் போராட்டம் உதவியதைப்போல் இப்போதும் உதவும் என்று 
கனவு காண்கிறார் போலும். மீண்டும் மீண்டும் தமிழக மாணவர்கள் ஏமாறமாட்டார்கள் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது.