தேசியக்கொடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேசியக்கொடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 நவம்பர், 2012

அட மூடர்களே....மும்பை தாதாவை மகாத்மா ரேஞ்சிக்கு உயர்த்துகிறீர்களே... நியாயமா...?

                அம்மாடியோ.... இன்னிக்கு இந்தியாவில யாரு வீட்டுக்குப் போனாலும் ஒரே ஒப்பாரி சத்தமாக தான் இருக்கிறது. எல்லா தொலைக்காட்சிகளிலும் பால் தாக்கரேவின் இறுதி ஊர்வலம் தான் காட்டுகிறார்கள். ஒரு மும்பை தாதாவின் பெருமைகளையும், மகிமைகளையும் அவர்களால் சொல்லி சொல்லி மாளவில்லை. பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் சேர்ந்து பால் தாக்கரேவை ஒரு மகாத்மா ரேஞ்சிக்கு - ஒரு மகான் ரேஞ்சிக்கு உயர்த்திக் காட்டி இந்திய மூளைகளுக்கு அவர்களுக்கே தெரியாமல் காவி வண்ணம் பூசுகிறார்கள்.
          பால் தாக்கரே யாரு...? தேசத்திற்கு தியாகங்கள் செய்து சுதந்திரம் வாங்கிக்கொடுத்தவரா...? அல்லது தேச பக்தி, ஒற்றுமை, ஒருமைப்பாடு - இவைகளை உயர்த்திப் பிடித்த உத்தமத் தலைவரா....? அல்லது தொழிலாளர்களின் உரிமைகளுக்காக - பெண்விடுதலைக்காக போராடிய போராளியா...? அல்லது மும்பையிலுள்ள  ஏழை - எளிய மக்களின் தோழனா...? இதுல எதுவுமே இல்ல... இதற்கு எதற்கு இத்தனைக் கூப்பாடு...?
          யார் இந்த பால் தாக்கரே...? மில் தொழிலாளர்களையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் அடக்கி - ஒடுக்கி, முதலாளிகளுக்கும், நிர்வாகத்திற்கும் விசுவாசம் காட்டும் அடிவருடியாய், அடியாளாய்  இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதியான கோடீஸ்வரன் தானே இவர்.  மும்பை - மராத்தி என்ற பிராந்திய உணர்வும் இன உணர்வும் கொண்டு மும்பையில் குடியேறிய தமிழர்களையும், குஜராத்திகளையும், பீகாரிகளையும் அடித்து விரட்டி தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவித்த தாதா தானே இவர்...? இஸ்லாமியர்களுக்கு எதிராக விஷம் கக்கியவர் தானே இந்த பால் தாக்கரே...?
இவரது இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் தான், நமது நாட்டின் மிக சிறந்த ஓவியர் 
எம். எப். ஹுசைன் இந்தியாவிற்குள் நுழையமுடியாமல் வெளிநாட்டிலேயே செத்து மடிந்தார். இதையெல்லாம் நாடு மறந்திருக்குமா என்ன....? நாடு மறந்திருக்கலாம். நம்மால் மறக்க முடியுமா...?
               இப்படிப்பட்ட ஒரு தாதாவைத் தான் - ஹிட்லரின் மறு உருவமாய் வாழ்ந்து மடிந்த ஒருவரைத் தான் இன்றைக்கு பத்திரிகை உலகமும், தொலைக்காட்சிகளும், ஆட்சியாளர்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். ஒரு தேசத்தலைவர்  அளவுக்கு உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது நமக்கே கோபம் வருகிறது.
         பால் தாக்கரே நேற்று இறந்ததிலிருந்து தொலைக்காட்சிகளின் பார்வை அனைத்தும் மும்பை பக்கம் திரும்பிவிட்டது. பத்திரிக்கைகளுக்கும் சொல்லவே வேண்டாம். ஒரு மாதத்திற்கு இந்த படம் தான் ஓடும். முகநூலில் கூட பால் தாக்கரே பற்றி தான் தாக்கு தாக்குன்னு தாக்குறாங்க. எதைப்பார்த்தாலும் பால் தாக்கரேவின் புராணங்கள் தான். பாசிச குணம் படைத்த முதலாளித்துவ ஊடகங்கள் ஒரு பக்கம் மூளைச்சலவை செய்துகொண்டிருக்கிறது.
      இன்னொரு பக்கம், இந்த தேசத்திற்காக பாடுபட்ட தேசத்தலைவர் இறந்துவிட்டது போன்ற பிரம்மிப்பை இந்திய குடியரசுத் தலைவரும், பிரதமரும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் சோககீதம் வாசித்திருக்கிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங்கோ விருந்து சாப்பிடாமல் பண்ண ஆர்டரை கேன்சல் பண்ணிட்டு வெளிநாட்டுக்கு போய்விட்டார். என்னயா நடக்குது நாட்டுல...? புரியவே இல்லை....!
        இது எல்லாவற்றிலும் கேவலமான விஷயம் என்னவென்றால்...? மறைந்த அந்த மாபெரும் மனிதரை அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்படுவது தான் ஒரு புரியாத புதிராக இருக்கிறது. பால் தாக்கரேவின் உடலின் மீது காவல் துறையினர் முழு அரசு மரியாதையுடன் தேசியக்கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்துகிறார்கள். ஒரு தாதா  என்கிற பெருமையைத் தவிர அவர் இந்நாள் - முன்னாள் முதலமைச்சரோ அல்லது அமைச்சரோ அல்லது எம்.எல்.ஏ - எம். பி யோ அல்லது கவுன்சிலரோ கூட இல்லை. ஒரு சாதாரண மனித உடலுக்கு மூவர்ணக்கொடியை போர்த்தலாமா....? அது தேசியக்கொடியை அவமரியாதை செய்தது போல் ஆகாதா....? அதற்கென்று கட்டுப்பாடுகள் கிடையாதா...?
               அதேப்போல் பொது சுடுகாட்டில் தகனம் செய்யாமல், பொது மக்கள் கூடும் இடமான  ''சிவாஜி பூங்காவில்'' தகனம் செய்து, நினைவுச் சின்னம் எழுப்புகிறார்கள். சிவாஜி பூங்கா பால் தாக்கரேவுக்கு மிகவும் பிடித்த இடமாம். இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு, மும்பை நகரில் பொது மக்கள் கூடும் பகுதியில் - பொது மக்கள் மத்தியில் ஒரு அரசியல் தலைவருக்கு இது போல் தகனம் செய்வது என்பது இதுவே முதல் தடவையாம். அப்படியொரு பெருமைக்கு உரியவரா இவர்...? என்பது தான் நமது கேள்வி.

ஞாயிறு, 24 ஜூன், 2012

தேசியக்கொடியை காப்பாற்றிய பாரத அன்னையின் திருக்குமாரர்களை தேசம் பாராட்டுகிறது...!

                 மகாராஷ்டிர மாநில தலைமைச்செயலகமான மந்த்ராலயாவில் கடந்த வியாழக்கிழமை மதியம் 2.45 மணியளவில் அலுவலகம் நடந்து கொண்டிருந்த போதே பாதுகாப்பு  குறைபாடுகள் காரணமாக திடீரென்று  தீவிபத்து ஏற்பட்டது. தலைமைச்செயலக கட்டிடத்தின் 4வது மாடியில் பற்றிய தீ, மளமளவென்று ஆறாவது மாடியை வெகு விரைவாக எட்டி எரியத்தொடங்கியது. அந்த சமயத்தில்  தலைமைச் செயலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் அச்சமடைந்து  தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக படியிறங்கி அங்கும் இங்கும்  ஓடினார்கள். அப்படியும்  வெளியே வரமுடியாதவர்களை தீயணைப்புப் படையினர் ஏணிகளை பயன்படுத்தி வெளிப்புற ஜன்னல்கள்  வழியாக காப்பாற்றி இறக்கினார்கள். காற்றின் வேகத்தால் தீப்பிழம்பு   கரும்புகையுடன்மந்த் ராலயா கட்டிடத்தையும் தாண்டி எரிந்துகொண்டிருந்தது. 
       
 


    இந்த சூழ்நிலையில், அந்த தலைமைச்செயலகக்  கட்டிடத்தின் உச்சியில் வழக்கமாக காலையில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி பறந்துகொண்டிருந்தது. எல்லோரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு பறந்து ஓடிக்கொண்டிருக்கும் பரபரப்பான வேளையில், தங்கள் உயிரையும் காப்பாற்றிக்கொள்ள முற்படாமல் கட்டிடத்தின் உச்சியில்   பறந்து கொண்டிருந்த தேசிய கொடி எரிந்து நாசமாகாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்ற அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் சுரேஷ் பாரியா மற்றும் அவரது உதவியாளர்கள் என மொத்தம் ஆறு பேரும்  கட்டிடத்தின் உச்சியை நோக்கி ஓடினார்கள். அந்த ஆறு பேரும்   தீயையும், ஆபத்தையும், உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த ஆறு பேரும் சுமார் 2 மணிநேரம் போராடி மந்த்ராலயா கட்டிடத்தின் உச்சியில் அமைந்துள்ள கம்பத்தில் பறந்துகொண்டிருந்த தேசியக்கொடியை காப்பாற்றி பத்திரமாக இறக்கினார்கள் என்பதை தொலைக்காட்சியிலும், பத்திரிக்கைகளிலும் பார்க்கும் போது மெய்சிலிர்க்கிறது.   
              சுதந்திரப்போராட்டக் காலத்தில், அந்நியர்களின் தடியடிக்கும் அஞ்சாமல், தன் உயிரையும் பொருட்படுத்தாமலும் உயிர் போகும் நேரத்திலும் தான் பிடித்த இந்த தேசத்தின் கொடியை  தாழவிடாமல் காத்த திருப்பூர் குமரனை நாம் பார்த்ததில்லை. தங்கள் உயிரையும்  பொருட்படுத்தாமல், தங்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல், தீப்பிழம்பிலிருந்து நம் தேசக்கொடியை காப்பாற்றிய பாரத அன்னையின் திருக்குமாரர்களை பார்க்கும் போது நமக்கெல்லாம் பெருமையாய் இருக்கிறது. உண்மையுடனும் உறுதியுடனும்  தங்களது கடைமையாற்றிய இவர்களை நாடு சிலிர்ப்புடன் பாராட்டுகிறது. வணங்குகிறது.