இந்திய திட்டக்கமிஷன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய திட்டக்கமிஷன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 டிசம்பர், 2014

செங்கொடியின் பக்கம் வாருங்கள் இளைஞர்களே...!

தோழர் டி.கே.ரங்கராஜன், எம்.பி.,                
20-12-2014 அன்று நடைபெற்ற, சிபிஎம் மதுரை புறநகர் மாவட்ட 21-ஆவது மாநாட்டுப் பொதுக்கூட்ட உரையில் இருந்து                
 
                     நிரஞ்சன் ஜோதி என்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பேச்சால் ஐந்து நாட்களாக முடங்கியது நாடாளுமன்றம். ராமனுக்குப் பிறந்தவர்களைத் தவிர யாரும் நாட்டில் இருக்கக் கூடாது என்று மதவெறியுடன் அவர் பேசியுள்ளார். ராமனுக்கு லவன், குசன் என்ற இரண்டு மகன்கள் மட்டும்தான் இருந்தனர். நிரஞ்சன் ஜோதி கூற்றுப்படி, ராமனுக்குப் பிறக்காத பரமசிவன், அவருடைய பிள்ளைகள் விநாயகர், முருகன் ஆகியோர் எங்கே போவது? பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் கணக்குப்படி அவர்கள் இந்திய பிரஜையே இல்லை.
             கடந்த ஏழு மாதங்களுக்கு முன் பாஜக, தேர்தல் வாக்குறுதி தந்தது. ஆட்சிக்கு வந்த நூறு நாட்களில் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றுவோம் என நரேந்திர மோடி கூறினார். அப்படி கைப்பற்றும் பணத்தில் தலைக்கு 35 லட்சம் ரூபாய் கிடைக்கும் என வெங்கைய்யா நாயுடு கூறினார். அவர்கள் கூறியபடி நூறு நாட்களைக் கடந்து 7 மாதங்கள் முடிந்து விட்டன. ஏன் கறுப்புப்பணம் வரவில்லை எனக் கேட்டால் கமிட்டி போட்டிருக்கிறோம் என்கிறார்கள். இதையேதான் காங்கிரசும் சொன்னது. மன்மோகன்சிங்கும் சொன்னார்.
             பாஜக ஆட்சிக்கு வந்து 7 மாதங்களில் சாமானிய மக்கள் பயன்படுத்தும் பல பொருட்களின் விலை ஏற்றப்பட்டிருக்கிறது. மானியங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. கிராமப்புற வேலை உறுதித் திட்டம் படிப்படியாகக் கைவிடப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை சந்தைக்கு தள்ளிவிடப்பட்ட பின்னும், அரசு சார்பில் கடுமையாக வரி விதிக்கபடுகிறது. 
               திட்டக்கமிஷன் கலைக்கப்பட்டு விட்டது. அப்படியென்றால் இதற்கான திட்டங்களை யார் தீட்டுவது...? ஒரு காலத்தில் டாட்டா, பிர்லா என்றால் இப்போது அதானி, முருகப்பா, அம்பானி ஆகியோர் தான் இத்திட்டங்களைத் தீட்டுகிறார்கள். உலகத்தில் யாரும் கடன் தர மறுத்த பின்பும் அதானியின் பக்கம் மோடி நிற்கிறார்; ஆஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தை வாங்கிவதற்கு 1 லட்சம் டாலரை ஸ்டேட் பாங்க் மூலம் கடனாக வழங்க உத்திரவிடுகிறார். எந்த ஆட்சியிலாவது இந்த அநியாயத்தைப் பார்த்ததுண்டா?
              இப்படிப்பட்ட பாஜக, அரசு எப்படி மக்கள் நலனைப் பாதுகாக்கும்? கடந்த 7 மாதங்களாக மக்கள் பிரச்சனை குறித்து பிரமரான நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசவில்லையே, ஏன்...?
                இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்க வேண்டும் என்றும், சமஸ்கிருதத்தை பாடமொழியாக்க வேண்டும் என்ற இரண்டு அஜண்டாக்களை மட்டும் பாஜக வைத்துள்ளது. இதைச் சொன்னால் கம்யூனிஸ்ட் கட்சிகள் தூண்டி விடுவதாக போஸ்டர் போடுகிறார்கள். பொதுத்துறையைக் காப்பதற்கும், மக்கள் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கும் எங்கள் கொள்கையைச் சொல்ல ஒருமுறையல்ல, பலமுறை தூண்டிவிடுவோம்.
        சிறுபான்மை மக்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ள பாஜக, முஸ்லீம் ஒருவர் இந்துவாக மாறினால் அவரை என்ன சாதியில் சேர்க்கும்...? இந்து மதத்தில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் வேறு மதத்திற்குப் போனது வர்ணாசிரமக் கோட்பாடுதான் காரணம். வர்ணாசிரமவாதிகள் செய்யும் வேலையைத் தான் உசிலம்பட்டியில் முருகன்ஜி செய்து கொண்டிருக்கிறார்.
                128 கோடி மக்கள் வாழக்கூடிய இந்தியாவில் சமஸ்கிருதம் படித்து ஒருவர்கூட பி.எச்.டி பட்டம் வாங்கவில்லை. எம்.ஏ படித்த ஒருவரும் இல்லை. பாடமொழி சமஸ்கிருதம் என்றால் இதற்குப் புத்தகங்கள் எங்கே...? இல்லாத ஒன்றை கற்பனையில் உருவாக்குவதுதான் பாஜகவின் வேலை.
நன்றி :

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

திட்டக்குழுவுக்கு மூடுவிழா நியாயமில்லை....!

             கடந்த சுதந்திர தினத்தன்று செங்கோட்டைக் கொத்தளத்தில், பிரதமர் நரேந்திரமோடி அஞ்சா நெஞ்சனாய் திறந்தவெளி மேடையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்துவிட்டு கூடியிருந்த மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், இந்திய பெருமுதலாளிகள், அந்நிய நாட்டு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் - குழந்தைகள் மத்தியில் சுதந்திர தின உரையாற்றும் போது, ''நான் இங்கு பிரதம மந்திரியாக பேசவில்லை. பிரதம சேவகனாகவே பேசுகிறேன்'' என்று தான் தொடங்கினார். மோடி ஒரு பிரதமமந்திரியாகத் தான் வேலை செய்கிறார் என்று நாம் இத்தனை நாட்களாக  நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் அவர் வாயாலேயே சொல்லிவிட்டார். '' சீ... சீ... நான் உங்களுக்கு சேவை செய்யும் பிரதமமந்திரி இல்லை. இந்திய பெருமுதலாளிகளுக்கும், அந்நிய பன்னாட்டு கம்பெனி முதலாளிகளுக்கும் மட்டுமே சேவை செய்யும் பிரதம சேவகன்'' என்று வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.
             அதனால் தான் கடந்த 64 ஆண்டுக்காலமாக இந்த நாட்டின் மக்களுக்கான திட்டங்களுக்கும், வளர்ச்சிக்கும், உற்பத்திகளுக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் மத்திய - மாநில அரசுகளுக்கு நிதி ஆதாரத்தை பெருக்கிக்கொடுத்த மத்திய திட்டக்குழுவையே கலைத்துவிடப்போவதாகவும், அதற்கு பதில் வேறு ஒரு அமைப்பை உருவாக்கப்போவதாகவும்,   ஒரு ''பொறுப்பான பிரதம சேவகனாக'' அந்த முதலாளிகளுக்கு ஒரு இனிப்பான சுதந்திர தின செய்தியாக அறிவித்துவிட்டு,  தான் ஒரு ''பொறுப்பில்லாத பிரதமமந்திரி'' என்பதை வெளிப்படையாகவே காட்டியிருக்கிறார் என்று சொன்னால் யாராலும் மறுக்கமுடியாது.
          இந்திய திட்டக்கமிஷன் என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அமைப்பு இல்லையென்றாலும், விவசாயம், தொலைத்தொடர்பு, கல்வி, வேலைவாய்ப்பு, தொழிற்சாலை, தொழிலாளர் நலம், அடிப்படை கட்டுமானம், உள்ளாட்சி, மனிதவளம், இயற்கை வளம், வருவாய், காடுகள் மற்றும் சுற்றுச்சூழல், மருத்துவம், சுகாதாரம், ஊட்டச்சத்து, குடும்ப நல்வாழ்வு, சிறுபான்மையோர், மின் உற்பத்தி, கிராமப்புற வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், ஆராய்ச்சி, போக்குவரத்து, சுற்றுலா, நீர்வளம், குடிசை மற்றும் சிறு தொழில்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி, மாநிலங்களின் திட்டங்கள் என நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான நிதியை  சேகரிப்பதும், வளர்ச்சித்திட்டங்களுக்கும், மாநில திட்டங்களுக்கும் தேவையான நிதி வழங்குவதும்,  ஒதுக்கப்பட்ட நிதி அல்லது கொடுக்கப்பட்ட நிதி சரியான முறையில் கண்காணிப்பதுமான வேலைகளை செய்யக்கூடிய ஒரு சட்டப்பூர்வமான அமைப்பே இந்த திட்டக்கமிஷன் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். 
                மழை நீரை அணைகளில் தேக்கி வெவ்வேறு வாய்க்கால்கள் வழியாக திறந்துவிட்டு நாட்டின் கடைமடை வரை நீர் பாய்ச்சுவது போல நிதி ஆதாரங்களை தேக்கி, நாட்டின் திட்டங்களுக்கும் வளர்ச்சிக்கும் தேவையான நிதியை திறந்துவிடும்ஒரு ''தேசிய கருவூலமாக'' திகழ்ந்துவரும் அமைப்பை - திட்டக்கமிஷனை கலைத்துவிடுவது என்ற நரேந்திர மோடியின் அறிவிப்பு என்பது, மேற்சொன்ன தேச நலப்பணிகள் முழுமையும் தனியார் முதலாளிகளின் கைகளில் சேர்க்கப்படும் என்பதை தான் ''முதலாளிகளின் பிரதம சேவகன்'' சுதந்திர தின செய்தியாக சொல்கிறார் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். 
            இதனால் நாட்டுக்கும், மக்களுக்கும்  என்னாவாகும்...? என்றால், ஐந்தாண்டு திட்டங்கள் உள்ளிட்ட மக்கள் நலப்பணிகள் முடங்கிப்போகும், நாட்டின் வளர்ச்சி சீரழிக்கப்படும், மாநிலங்கள் நிதிச்சுமையால் அவதிப்படும், மக்கள் அல்லல்படுவார்கள். அப்போதும் வளர்ச்சி என்பது இருக்கும், இந்திய - அந்நிய பெருமுதலாளிகள் மேலும் மேலும் வளர்ச்சியை காண்பார்கள். ''வளர்ச்சி நாயகன்'' நரேந்திர மோடியின் ஆட்சியில் மக்களிடம் வளர்ச்சி என்பதை பார்க்கமுடியாது. ஆனால் இந்திய - அந்நிய பெருமுதலாளிகள் ''மாபெரும் வளர்ச்சியை'' காண்பார்கள்.