கடந்த சுதந்திர தினத்தன்று செங்கோட்டைக் கொத்தளத்தில், பிரதமர் நரேந்திரமோடி அஞ்சா நெஞ்சனாய் திறந்தவெளி மேடையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்துவிட்டு கூடியிருந்த மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், இந்திய பெருமுதலாளிகள், அந்நிய நாட்டு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் - குழந்தைகள் மத்தியில் சுதந்திர தின உரையாற்றும் போது, ''நான் இங்கு பிரதம மந்திரியாக பேசவில்லை. பிரதம சேவகனாகவே பேசுகிறேன்'' என்று தான் தொடங்கினார். மோடி ஒரு பிரதமமந்திரியாகத் தான் வேலை செய்கிறார் என்று நாம் இத்தனை நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் அவர் வாயாலேயே சொல்லிவிட்டார். '' சீ... சீ... நான் உங்களுக்கு சேவை செய்யும் பிரதமமந்திரி இல்லை. இந்திய பெருமுதலாளிகளுக்கும், அந்நிய பன்னாட்டு கம்பெனி முதலாளிகளுக்கும் மட்டுமே சேவை செய்யும் பிரதம சேவகன்'' என்று வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.
அதனால் தான் கடந்த 64 ஆண்டுக்காலமாக இந்த நாட்டின் மக்களுக்கான திட்டங்களுக்கும், வளர்ச்சிக்கும், உற்பத்திகளுக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் மத்திய - மாநில அரசுகளுக்கு நிதி ஆதாரத்தை பெருக்கிக்கொடுத்த மத்திய திட்டக்குழுவையே கலைத்துவிடப்போவதாகவும், அதற்கு பதில் வேறு ஒரு அமைப்பை உருவாக்கப்போவதாகவும், ஒரு ''பொறுப்பான பிரதம சேவகனாக'' அந்த முதலாளிகளுக்கு ஒரு இனிப்பான சுதந்திர தின செய்தியாக அறிவித்துவிட்டு, தான் ஒரு ''பொறுப்பில்லாத பிரதமமந்திரி'' என்பதை வெளிப்படையாகவே காட்டியிருக்கிறார் என்று சொன்னால் யாராலும் மறுக்கமுடியாது.
இந்திய திட்டக்கமிஷன் என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அமைப்பு இல்லையென்றாலும், விவசாயம், தொலைத்தொடர்பு, கல்வி, வேலைவாய்ப்பு, தொழிற்சாலை, தொழிலாளர் நலம், அடிப்படை கட்டுமானம், உள்ளாட்சி, மனிதவளம், இயற்கை வளம், வருவாய், காடுகள் மற்றும் சுற்றுச்சூழல், மருத்துவம், சுகாதாரம், ஊட்டச்சத்து, குடும்ப நல்வாழ்வு, சிறுபான்மையோர், மின் உற்பத்தி, கிராமப்புற வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், ஆராய்ச்சி, போக்குவரத்து, சுற்றுலா, நீர்வளம், குடிசை மற்றும் சிறு தொழில்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி, மாநிலங்களின் திட்டங்கள் என நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான நிதியை சேகரிப்பதும், வளர்ச்சித்திட்டங்களுக்கும், மாநில திட்டங்களுக்கும் தேவையான நிதி வழங்குவதும், ஒதுக்கப்பட்ட நிதி அல்லது கொடுக்கப்பட்ட நிதி சரியான முறையில் கண்காணிப்பதுமான வேலைகளை செய்யக்கூடிய ஒரு சட்டப்பூர்வமான அமைப்பே இந்த திட்டக்கமிஷன் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
மழை நீரை அணைகளில் தேக்கி வெவ்வேறு வாய்க்கால்கள் வழியாக திறந்துவிட்டு நாட்டின் கடைமடை வரை நீர் பாய்ச்சுவது போல நிதி ஆதாரங்களை தேக்கி, நாட்டின் திட்டங்களுக்கும் வளர்ச்சிக்கும் தேவையான நிதியை திறந்துவிடும்ஒரு ''தேசிய கருவூலமாக'' திகழ்ந்துவரும் அமைப்பை - திட்டக்கமிஷனை கலைத்துவிடுவது என்ற நரேந்திர மோடியின் அறிவிப்பு என்பது, மேற்சொன்ன தேச நலப்பணிகள் முழுமையும் தனியார் முதலாளிகளின் கைகளில் சேர்க்கப்படும் என்பதை தான் ''முதலாளிகளின் பிரதம சேவகன்'' சுதந்திர தின செய்தியாக சொல்கிறார் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
இதனால் நாட்டுக்கும், மக்களுக்கும் என்னாவாகும்...? என்றால், ஐந்தாண்டு திட்டங்கள் உள்ளிட்ட மக்கள் நலப்பணிகள் முடங்கிப்போகும், நாட்டின் வளர்ச்சி சீரழிக்கப்படும், மாநிலங்கள் நிதிச்சுமையால் அவதிப்படும், மக்கள் அல்லல்படுவார்கள். அப்போதும் வளர்ச்சி என்பது இருக்கும், இந்திய - அந்நிய பெருமுதலாளிகள் மேலும் மேலும் வளர்ச்சியை காண்பார்கள். ''வளர்ச்சி நாயகன்'' நரேந்திர மோடியின் ஆட்சியில் மக்களிடம் வளர்ச்சி என்பதை பார்க்கமுடியாது. ஆனால் இந்திய - அந்நிய பெருமுதலாளிகள் ''மாபெரும் வளர்ச்சியை'' காண்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக