புதன், 13 ஆகஸ்ட், 2014

பாராளுமன்றத்தை அவமதிக்கும் சச்சின்...!

              
             இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஆரம்பக்காலத்திலிருந்தே ஒரு மரபு இருக்கிறது. மக்களால் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமல்லாது, ஆட்சியாளர்களுக்கு  வேண்டியவர்களையும்  மற்றும் மக்கள் மத்தியில் பேரோடும், புகழோடும் விளங்கக்கூடிய பிரபலங்களையும்  ''நியமன உறுப்பினர்கள்'' என்றப் பெயரில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இடமளிக்கப்படுகிறது. இவர்களும் மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களைப் போல் அவை கூட்டங்களிலும், விவாதங்களிலும் கலந்துகொள்ளலாம். அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள அனைத்து சலுகைகளும் இவர்களுக்கும் உண்டு. ஆனால் இவர்கள் மத்திய அமைச்சராக முடியாது. பாராளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பிலோ அல்லது குடியரசு தேர்தலிலோ பங்கெடுக்கமுடியாது.
                  இப்படிப்பட்ட மரியாதைக்குரிய அதே சமயத்தில் பொறுப்புள்ள இந்த நியமன உறுப்பினர் பதவிக்கு மக்களவைக்கு இரண்டு பேர்களையும், மாநிலங்களவைக்கு இரண்டு பேர்களையும் ஆளுங்கட்சி நியமிக்கவேண்டும். நாடு விடுதலை அடைந்தபிறகு, இந்த நாட்டை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயர்களில் சிலரும், அவர்களின் வாரிசுகள் சிலபேரும் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர். இந்திய மக்களோடும், குடும்பம், பண்பாடு, கலாச்சாரம் இவைகளோடும் கலந்துவிட்டனர். அவர்கள் ஆங்கிலோ-இந்தியர்கள் என்ற ஒரு தனி சமூகமாக இந்தியாவில் வாழ்ந்துவருகிறார்கள். இந்த தேசத்தை அடிமைப்படுத்தி ஆண்டவர்கள் என்கிற காரணத்திற்காக அவர்களை கவுரவப்படுத்தவேண்டி மரியாதை நிமித்தமாக ஆங்கிலோ - இந்தியர்கள் இரண்டு பேர்கள் அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
              அதேப்போல் மாநிலங்களவைக்கு கலை, இலக்கியம், விளையாட்டு போன்றத்துறைகளில் உள்ள பிரபலங்களில் இரண்டு பேர்களை ஆளுங்கட்சியால் தேர்ந்தடுக்கப்பட்டு மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்களின் நியமனத்திற்கு பெரும்பாலும் திரைப்பட கலைஞர்கள், விளையாட்டுவீரர்கள் என நாட்டில் இரசிகர்களை ஏராளாமாக பெற்றிருக்கும் இவர்களுக்கு தான் ஆட்சியாளர்கள் முன்னுரிமை தருவார்கள். அவர்களின் பின்னால் நிற்கும் இரசிகர்களின் கையிலிருக்கும் ஒட்டுமொத்த ஓட்டுகளையும்  குறிவைக்கும் ஆட்சியாளர்களின் தந்திரம் தான் இது.
           அப்படியாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாநிலங்களவையின் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தான் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும், திரைப்படக்கலைஞர் ரேகாவும் ஆவார்கள். ஆனால் அப்படியாக  பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள்  பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். அங்கு  மக்கள் பிரச்சனைகள் பற்றிய விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்ற பொதுபுத்தி கூட அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. குறைந்த பட்சம் பாராளுமன்றக் கூட்டத்தொடரிலாவது பங்கேற்கவேண்டும் என்ற எண்ணம் கூட இவர்களுக்கு தோன்றவில்லை. இவர்கள் இருவரும் நியமன உறுப்பினர்களாக பதவியேற்ற காலத்திலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் சச்சின் மூன்று நாட்களும், ரேகா அம்மையார் ஏழு நாட்களும் மட்டுமே அவைக்கு வந்திருக்கிறார்கள். இவர்களிருவரும் இப்பதவியை ஏதோ ''அலங்கார'' பதவியாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
             அவர்கள் அவைக்கு வருவதில்லையே என்று அவர்களை நியமித்த அரசும் கவலைப்படவில்லை. மிகக்குறைவான வருகைப்பதிவை கொண்ட அவர்களை மாநிலங்களவைத் தலைவரும் கண்டிக்கவும் இல்லை. அவைக்கு வராத இந்த இருவரின் செயல் என்பது பாராளுமன்றத்தையும், பாராளுமன்ற ஜனநாயகத்தையும் அவமதிக்கும் செயலாகும். இவர்கள் கூட்டத்தொடரின் போது அவைக்கு வருகைபுரியவேண்டும் என்று மத்திய அரசும், அவைத்தலைவரும் அறிவுறுத்தவேண்டும். அப்படி  அவர்களால் வரமுடியவில்லை என்றால் அப்பதவியிலிருந்து அவர்கள் நீக்கப்படவேண்டும். இவர்களெல்லோரும் விளையாட்டையும் நடிப்பையும் தங்களுடைய பேருக்கும், புகழுக்கும்,  கோடிகோடியாய் பணங்களை சேர்ப்பதற்கு பயன்படுத்தக்கூடியவர்கள். பாராளுமன்றத்திற்கு வருவதால் கோடிக் கோடியாய் வருமான இருக்கிறதென்றால் கூச்சப்படாமல் வருவார்கள். சில ஆயிரங்களே வருமானத்தை கொடுக்கக்கூடிய பாராளுமன்றத்திற்கு வந்து தங்களுடைய ''பொன்னான'' நேரத்தை இவர்கள் வீணடிக்கவிரும்பவில்லை என்பதை தான் இவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள். எதிர்காலத்திலாவது ஆட்சியாளர்கள் இவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது. மக்களைப் பற்றி - சமூகத்தைப் பற்றி - நாட்டைப் பற்றியெல்லாம் அக்கறையுள்ள நந்திதிதாதாஸ் போன்ற திரைக்கலைஞர்களை நியமித்தால் அரசுக்கும் நாட்டுக்கும் உபயோககரமானதாக இருக்கும். 

 மத்திய அரசுக்கு சில ஆலோசனை :                      

                (1) மக்களவை நியமன உறுப்பினர்களாக ஆங்கிலோ-இந்தியர்களை நியமனம் செய்வதை விட பிரச்சனைகளை தலையில் சுமந்துகொண்டு தீர்வுகளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மக்கள் பாராளுமன்றத்தில் தங்கள் பிரச்சனைகளை பேசுவதற்கும் அதற்கேற்ற தீர்வுகளை பெறுவதற்கு போராடுவதற்கும் பிரதிநிதிகள் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வாய்ப்பில்லாதவர்களாக சில இலட்சம் திருநங்கையினரும், பல கோடி மாற்றுத்திறனாளியினரும்  பாவப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்காக பாராளுமன்றத்திற்கு வெளியில் வீதிகளில் போராடிவருகிறார்கள். இவர்கள் போராட்டக்குரல் ஆட்சியாளர்களின் காதுகளில் விழுவதே இல்லை. எனவே இவர்களுக்கு நியமன உறுப்பினர்களாக வாய்ப்புக்கொடுத்தால் கோடீஸ்வரர்கள் மட்டுமே கூடிப்பேசும் பாராளுமன்றத்தில் உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களின் குரல் ஒலிக்கும்.
              (2) மாநிலங்களவையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு என்பதே இல்லை. இங்கே இடதுசாரிகட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மாநிலங்களவையில் பிரநிதித்துவமே தருவதில்லை. இடதுசாரிகட்சிகள் மட்டுமே நியாயமாக நேர்மையாக தலித் மக்களுக்கும் வாய்ப்புக்கொடுத்து தேர்ந்தெடுக்கிறார்கள். மற்றக் கட்சிகள் இடஒதுக்கீட்டை வசதியாக  மறந்துவிடுகின்றன. எனவே விளையாட்டு வீரர்களுக்கும், திரைப்படக் கலைஞர்களுக்கும் கொடுக்கப்படுகிற பிரதிநிதித்துவத்தை பழங்குடி இனமக்களுக்கும், தலித் இனமக்களுக்கும் அளிக்கப்படவேண்டும். அப்போது தான் சக்தியில்லாமல் அடங்கிக்கிடக்கும் இந்த மக்களின் குரல் மாநிலங்களவையிலும் ஒலிக்கும்.
                 ஒத்துவராத அல்லது மலட்டுத்தன்மையுள்ள நியமன பாரம்பரியத்தை தூக்கியெரிவதால் அரசுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமானதும் அல்ல. வசதியும், பெரும்பான்மையும் கொண்டவர்கள் மட்டுமே பேசக்கூடிய பாராளுமன்றத்தில் சமூகத்தால் ஒடுக்கப்பட்டும், உரிமைகளும் வாழ்வாதாரங்களும் பறிக்கப்பட்டும், வாழ்க்கையே சீரழிக்கப்பட்டும் நிலைதடுமாறி வாழ்கின்ற மக்களின் குரலும் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கச் செய்யவேண்டும். அனைத்துப்பகுதி மக்களும் பங்கேற்கும் களமாக பாராளுமன்றம் திகழவேண்டும். அப்போது தான் உண்மையான ஜனநாயகம் தழைத்தோங்கும். 

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

பாராளுமன்றத்தை அவமதித்தது காங்கிரஸ்தான். இளைஞர்களின் வாக்குகளை அள்ளிவிடலாம் என்ற சின்னத்தனமான நோக்கத்தில்தான் சச்சினுக்கு பாரத் ரத்னா, ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகள் காங்கிரசால் வழங்கப்பட்டது. தயான் சந்திற்கு வழங்கப்படாத விருது ஏன் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது?.

விசு சொன்னது…

நல்ல பதிவு. ஒரு சிறு சந்தேகம். கோடிகோடியா சம்பாதிக்கும் இவர்கள், குறைந்த பணம் தருவதால் இங்கே வருவதிலையோ என்று எழுதியுள்ளீர்கள். ஆனால் எனக்கு என்னமோ இவர்கள் இந்த சிறு தொகையையும் (இவர்களை பொறுத்தவரையில் சிறு தொகை தான், மற்றபடி, கூட்டி கழித்து பார்த்தால் பல லட்சம் வருகின்றது) வேண்டாம் என்று சொன்னது போல தெரியவில்லை. இவர்கள் வேலைக்கே போகாமல் ராஜ்யாசபாவில் எவ்வளவு பணம் பெற்று வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள விருப்பம் இருந்தால் இங்கே சொடுக்கவும்.

http://vishcornelius.blogspot.com/2014/08/blog-post_7.html