மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பி. ராஜீவ் மாநிலங்களவையில் பேசியது :-.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வெள்ளியன்று மாலை ஊடகங்களின் சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு ஏற்படுத்திடும் முயற்சிகளால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து குறுகிய கால விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் கலந்து கொண்டு பி. ராஜீவ் பேசியதாவது: சமீபத்தில் 2014 ஜூலை 27 அன்று நியூயார்க் டைம்ஸ் இதழில் ஒரு தலையங்கம் வந்திருந்தது. இது குறித்து இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். நம் நாட்டின் பத்திரிகை சுதந்திரம் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்று தலையங்கம் தீட்டியிருப்பது இதுவே முதல்தடவை என்றே நான் கருதுகிறேன். தலையங்கத்தின் தலைப்பு, “முற்றுகைக்கு உள்ளாகியுள்ள இந்தியப் பத்திரிகைகள்’’ என்பதாகும்.
தலையங்கத்தின் முதல் பத்தியை மேற்கோள் காட்டுகிறேன். “இந்திராகாந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த சமயத்தில் 1975ம் ஆண்டு ஜூன் 25 அன்று நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக பத்திரிகைகள் மீது தணிக்கையைத் திணித்தார். ஒருசில ஏடுகள் எதிர்ப்பினைத் தெரிவித்தது தவிர, பெரும்பாலான பத்திரிகைகள் அரசாங்கத்தின் புதிய விதிகளுக்கு ஏற்றாற்போல சரணடைந்தன. அப்போது பாஜகவின் நிறுவனர்களில் ஒருவரான எல்.கே. அத்வானி சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் ஒரு தடவை பத்திரிகைகளின் சரணாகதி குறித்து அவர், “நீங்கள் கொஞ்சம் வளைந்து கொடுங்கள் என்றுதான் உங்களைக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் நீங்களோ மண்டியிடுவதே உசிதம் என்று தேர்ந்தெடுத்து விட்டீர்கள்,’’
யதார்த்தம் என்ன?
பாஜகவின் தலைவரான அத்வானிஜியின் விமர்சனங்கள் இவை. ஆனால் இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது? மும்பையிலிருந்து வெளியாகும் டிஎன்ஏ நாளேடு தன்னுடைய இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த ஒரு கட்டுரையை அகற்றிவிட்டது. ராணா அயூப் என்பவர் எழுதியிருந்த அக்கட்டுரையில், “நரேந்திர மோடியால் பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமித் ஷா மீது கொலை உட்பட பல்வேறு கிரிமினல் குற்றங்களுக்காக இப்போதும் விசாரணை நடைபெற்று வருகிறது,’’ என்று எழுதியிருந்தார். அந்தக் கட்டுரைதான் அகற்றப்பட்டு விட்டது. நம்நாட்டில் இப்போது இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது.
நியூயார்க் டைம்ஸ் ஏடு தலையங்கத்தில் எழுதியுள்ள மேலும் சில பகுதிகள்: “சமீபத்தில் ஊடக முதலாளிகள் செய்தியாளர்கள் எப்படி எப்படி செய்திகளைத் தர வேண்டும் என்றும், தலையங்கத்தின் திசைவழி எப்படி இருக்க வேண்டும் என்றும் நேரடியாகவே நிர்ப்பந்தம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். மிகவும் பிரபலமான பல செய்தியாளர்கள் தங்கள் வேலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார்கள் அல்லது தங்கள் மீதான நிர்ப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாங்களாகவே ராஜினாமா செய்திருக்கிறார்கள்.’’ உண்மையில் நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி எவ்விதமான ஊடக சுதந்திரமும் நமக்குக் கிடையாது.
அரசியமைப்புச்சட்டம் பேச்சுச் சுதந்திரம் மற்றும் அதனை வெளிப்படுத்தும் சுதந்திரம் தொடர்பாக 19(1)ஆவது பிரிவின் கீழ் கொடுத்திருக்கும் அதிகாரத்தின் ஒரு விரிவாக்கம்தான். ஆனால் நாம் இப்போது பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். பத்திரிகைகள் என்பவை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கருதப்படுகிறது. ஆனால் இது ஒரு “வணிகத்தூண்’’ மட்டுமேயாகும். ஊடகங்களும் இப்போதெல்லாம் கார்ப்பரேட்டுகளின் சொத்துக்கள்தான். இவ்வாறு கார்ப்பரேட்டுகளின் சொத்துக்களாக மாறிவிட்ட ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்படும் என்றெல்லாம் நாம் எதிர்பார்க்க முடியாது. இதுதான் இன்றைய எதார்த்தமாகும்.
திணிக்கப்படும் செய்திகள்
சமீபத்தில் என்ன நடந்திருக்கிறது? ரிலையன்ஸ் நிறுவனம் டிவி18 தொலைக்காட்சி நிறுவனத்தைத் தனதாக்கிக் கொண்டுவிட்டது. நாம் என்ன பார்க்க வேண்டும், நாம் என்ன கேட்க வேண்டும், அல்லது நாம் எந்தத் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று யார் தீர்மானிப்பது? டிவி18 தொலைக்காட்சி நிறுவனத்தின் கீழ் 18 அலைவரிசைகள் இருக்கின்றன. வானொலி அலைவரிசை, 92.7 எப்.எம். ரிலையன்சால் நடத்தப்படுகிறது. பிக் ஸ்கிரீன் மற்றும் பிக் சினிமா என்னும் நாட்டின் மிகப் பிரம்மாண்டமான திரைப்படத்தயாரிப்பாளர்கள் வேறு யாருமில்லை, ரிலையன்ஸ்தான். இவர்கள் பாலிவுட் படங்களை மட்டும் அல்ல பிராந்திய மொழிப் படங்களையும் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இவை அனைத்தும் ரிலையன்சால் கட்டுப்படுத்தப்படுகின்றன. டிட்டிஎச் சிஸ்டம் ரிலையன்சுக்கே சொந்தமானது. இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் ஜாம்பவானாகத் திகழும் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரும் ஊடக நிறுவனமாகவும் திகழ்கிறது. உண்மை நிலை இவ்வாறிருக்கையில் இவர்களின் ஊடகங்கள் வாயிலாக நம் கருத்துக்கள் மக்களைச் சென்றடையுமா அல்லது இவர்கள் திணிக்கும் செய்திகள் மக்களைச் சென்றடையுமா?நம் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்ன? வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பு. இதுவே இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியமான பகுதி. ஆனால் ஊடகங்கள் கார்ப்பரேட்டுகளின் ஏகபோகமாக மாறியுள்ள நிலையில் அவைகளிடமிருந்து ஜனநாயகப்பூர்வமான செயல்பாடுகளை எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்?
2008இல், டிராய் எனப்படும் டெலிகாம் முறைப்படுத்தும் அதிகாரக்குழுமம் நமது நாட்டில் மூன்றுவிதமான உரிமதாரர்களுக்கு அனுமதி அளித்தது. பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகிய மூன்றும் ஒருவிதம். இதற்கு படுக்கைநிலையில் உள்ளவை என்று பெயர். செங்குத்தான உரிமதாரர்கள் என இன்னொரு வகை உண்டு. இவர்கள் தொலைக்காட்சி அலைவரிசையும் வைத்திருப்பார்கள் டிட்டிஎச்சையும் பெற்றிருப்பார்கள். இவர்கள் டெலிகம்யூனிகேசன் மற்றும் இதர துறைகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். இவ்வாறு பலவிதமான உரிமதாரர்கள் நமது நாட்டில் உண்டு. உலகில் வேறெந்த நாட்டிலும் இவ்வாறு பலவிதமான உரிமதாரர்கள் அனுமதிக்கப்படவில்லை.
நிலைக்குழு அறிக்கை
மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக நிலைக்குழு ஓர் அறிக்கை அளித்துள்ளது. அதன் தலைவராக தற்போது அமைச்சராகயிருக்கும் ஸ்ரீராவ் இந்தர்ஜித் சிங் இருந்தார். அக்குழுவில் நானும் ஓர் உறுப்பினர். அக்குழு மூன்று விதமான உரிமதாரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. அந்தப் பரிந்துரையை இந்த அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு மிகவும் முக்கியமான பிரச்சனையாகும்.நாட்டில் ஒரு பகுதியில் இரு தொலைக்காட்சி அலைவரிசைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றன. இதனை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்.
நாங்கள் பத்திரிகை சுதந்திரத்திற்காக நிற்கிறோம். நாட்டில் இன்னொருவிதமான ஏற்பாடும் இருந்து கொண்டிருக்கிறது. கேபிள் டிவி அமைப்புகள், வானொலி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏதேனும் ஒரு தொழிற்சங்கம் கிளர்ச்சிக்கு அழைப்பு விடுத்தால் அனைத்து ஊடகங்களும் அதற்கு எதிராக எழுதுகின்றன. இது இவ்வமைப்புகளின் மற்றொருவிதமான ஏகபோகமாகும் . அரசாங்கம் இதனையும் பரிசீலிக்க வேண்டும்.
ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்
மற்றொரு முக்கியமான பிரச்சனை. காசு கொடுத்து செய்தி போட வைப்பது. `பெயிட் நியூஸ்’. இது பத்திரிகை சுதந்திரத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் ஜனநாயகத்திற்கே ஆழமான அச்சுறுத்தல் என்று நமது குடியரசுத் துணைத் தலைவரே கூறினார். இதுதொடர்பாக நிலைக்குழு சில ஆழமான பரிந்துரைகளை அளித்திருக்கிறது. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உள்ளடக்கம் குறித்து அறிஞர்கள் குழு அடங்கிய ஊடகக் கவுன்சில் பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஒரு பரிந்துரை. அடுத்து, இப்போது பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா என்பது பத்திரிகைகள் குறித்து மட்டுமே அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது. ஊடகங்கள் தொடர்பாகவும் இதுபோன்றதொரு அமைப்பு உருவாக்கப்படவேண்டும்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக