சனி, 23 ஆகஸ்ட், 2014

''சென்னை - 375'' - பொன்னான நகரமா சென்னை...?

              
 
 
                     ஆகஸ்ட் - 22-ஆம் தேதி சென்னைக்கு 375-ஆம் பிறந்தநாள். முன்பு ஒரு காலத்தில் புலியூர் என்ற சிறிய கடற்கரை கிராமமாக உருவெடுத்து, இன்று பறந்து விரிந்த சென்னை மாநகரமாக உருமாறியிருக்கிறது. சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலத்தில் ஆங்கிலேயர்கள் கட்டிய கட்டிடங்கள் ஆரம்பத்தில் சென்னையின் அடையாளங்களாக காணப்பட்டு, பின்பு சுதந்திரம் அடைந்தபிறகு, 60, 70 மற்றும் 80-ஆம் ஆண்டுகளில் அண்ணா சாலையில் ஓங்கி உயர்ந்து நின்றுகொண்டிருக்கும் எல்.ஐ.சி கட்டிடம் தான் சினிமாக்காரர்களால் சென்னையின் அடையாளமாக காட்டப்பட்டது. பின்பு 90-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தான் சென்னையின் அடையாளங்கள் மாறத்தொடங்கின. 
               உலகமயமும், தனியார்மயமும் சென்னையையும் விட்டுவைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். உலகமயச் சூழலுக்கேற்ப சென்னையும் தனது அடையாளங்களை மாற்றிக்கொண்டது. ஆரம்பத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று வர ''ட்ராம்'' என்ற வாகனத்தை பயன்படுத்திய மக்கள் காலத்திற்கு ஏற்றார்  போல், வசதிக்கு தகுந்தார் போல் கை ரிக்சாவையும்,  பின்னர் மிதி ரிக்சாவையும் பின்னர் கார், பஸ், பறக்கும் இரயில் என்று படிப்படியாக மாறி இன்று மெட்ரோ இரயில் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள். இன்றைக்கு பகலிலும், இரவிலும் கார்களும், பஸ்களும், இரயில்களும் சென்னை மாநகரின் இரத்த ஓட்டங்களாக நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இவைகள் அனைத்தும் சில மணித்துளிகள் நின்றுவிட்டாலே போதும் சென்னை மாநகரின் நாடித்துடிப்பே நின்றுவிடும். 
                 ஒருகாலத்தில் எல்.ஐ.சி கட்டிடம் மட்டுமே சென்னையில் மிக உயர்ந்த கட்டிடமாக இருந்திருக்கிறது. முன்பெல்லாம் தமிழகத்தின் மற்றப்பகுதிகளில்  வசிப்பவர்கள் சென்னைக்கு வருவதென்பது அரிதான - அதிசயமான நிகழ்வாகத்தான் இருந்துவந்தது.  தமிழகத்தின் மற்றப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கே சென்னை என்பது ஒரு சுற்றுலா நகரமாகவே பார்க்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பள்ளிக்குழந்தைகள்,  கல்லூரி மாணவ-மாணவியர் மற்றும் பெரியவர்கள் அடங்கிய சுற்றுலா குழுக்களாக சென்னைக்கு வருவார்கள். அப்படி சுற்றுலா வரும்போது சென்னையில் மெரினா பீச், அண்ணா சமாதி, வள்ளுவர் கோட்டம், கிண்டி பாம்பு பண்ணை, காந்தி மண்டபம் ஆகிய வரிசையில் எல்.ஐ.சி பில்டிங்-கையும் பார்க்கவேண்டிய இடப்பட்டியலில் சேர்த்துக்கொள்வார்கள். சுற்றுலாவுக்கோ அல்லது பேருந்து நிலையத்திற்கோ அண்ணா சாலை வழியாக  வேகமாக செல்லும்  பஸ்களில் இருந்து எல்லா தலைகளும் உயர்ந்துநிற்கும் எல்.ஐ.சி கட்டிடத்தை தான் அண்ணாந்து ''ஆவென்று'' பார்த்துக்கொண்டே செல்வார்கள். இவ்வளவு பெரியக் கட்டிடத்தை எப்படிக் கட்டியிருப்பார்கள் என்று அதிசயித்து போவோர்களையும், அதன் 14 மாடிகளையும் எண்ணி எண்ணி மாய்ந்து போவோர்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றோ சென்னை அண்ணா சாலையில் மட்டுமல்ல சென்னையில் பார்க்குமிடமெல்லாம் எல்.ஐ.சி கட்டிடத்தை விட உயர்ந்து நிற்கும் மால் என்ற கூட்டு அங்காடிகள், தனியார் மருத்துவமனைகள், நட்சத்திர ஓட்டல்கள், ஐ.டி கம்பெனிகள், பல மாடி குடியிருப்புகள் என உயர உயரமான கட்டிடங்களை தான் பார்க்கமுடிகிறது.
               என்ன ஒரு பிரம்மாண்டமான அசூர வளர்ச்சி...? முன்பெல்லாம் இரண்டு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் மிகக்குறைவாகவே ஓடிக்கொண்டிருந்த சாலைகளில்,  இன்றோ  இலட்சக்கணக்கில் விலைபோகும் இருசக்கர வாகனங்கள் முதல் கோடிக்கணக்கில் விலைபோகும் ஆடி, பி.எம்.டபுள்யூ போன்ற கார்கள் வரை ஆயிரக்ககணக்கான வாகனங்கள் இடைவெளியில்லாமல் ஓடிக்கொண்டிருப்பதை பார்க்கும் போது  சென்னையின் பொருளாதார வளர்ச்சி நம் கண் முன்னால் தெரிகிறது.
            இவைகள் எல்லாம் 375 வயதே ஆகும் அழகிய சென்னை மாநகரின் பெருமைகளாக கருதப்படுகின்றன. இவைகளைத்தான் இந்த நாளைக் கொண்டாடும் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், சினிமாக்காரர்களும், எழுத்தாளர்களும் சொல்லி சொல்லி மாய்த்துப்போகிறார்கள். ஆனால் இவர்கள் இதே சென்னையின் இன்னொரு பக்கத்தையும் பார்க்கவேண்டும்.
             இப்படியாக அதிசயமாய் மாறிப்போய்விட்ட இந்த சிங்கார சென்னையில், குழந்தையின் பாலுக்காக சிக்னலில் குறுக்கும் நெடுக்கமாக கையில் குழந்தையை ஏந்திக்கொண்டு பிச்சையெடுக்கும் தாய்மார்களையும், கடற்கரையில் பள்ளிக்கு செல்ல வசதியின்றி குடும்பச்சுமையை சுமந்து சுண்டல் மற்றும் கடலை விற்கும் சிறுவர்களையும், படித்துவிட்டு வேலைக்கிடைக்காமல் தன் சொந்த வீட்டைவிட்டு - ஊரைவிட்டு ஓடிவந்து கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கும் இளைஞர்களையும், சாக்கடைகளாய் மாறிவிட்ட கூவம் மற்றும் அடையாறு போன்ற நதிகளின் துர்நாற்றமும், இந்த ஆற்றோரங்களிலும், சாலையோரங்களிலும், ஓங்கி உறைந்து கட்டப்பட்ட கட்டிடங்களை ஒட்டியும் அடித்தளமில்லாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் ஓட்டைக் குடிசைகளும், அதில் வாழும் மக்களின் தரமும், பொருளாதாரமும் ஏன் இன்னும் மாறவில்லை என்பதை இந்த கொண்டாட்ட நேரத்தில் ஏன் யாரும் சிந்தித்துப் பார்க்கவில்லை...?  சிங்கார சென்னை என்பது இவைகள் எல்லாவற்றையும் மறைத்து ''ஒப்பனை செய்யப்பட்ட சென்னையா...?''  இவைகள் மாறவேண்டாமா...?  இவைகள் மாறாமல் 1000-ஆவது பிறந்தநாள் கூட அர்த்தமற்றது தான். பெருமைக்குரியதல்ல.
               பழைய எம்.ஜி.ஆர் படத்தில் ஒரு பாடல் தான் என் நினைவுக்கு வருகிறது. ''அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி.... அதன் அருகினில் ஓலைக் குடிசைக் கட்டி.... பொன்னான உலகென்று பெயருமிட்டால்... இந்த பூமி சிரிக்கும்... அந்த சாமி சிரிக்கும்...''

கருத்துகள் இல்லை: