விடுதலைப்போராட்டக் காலத்தில் தேச விடுதலைக்காக போராடியப் பல்வேறுத் தலைவர்களில், தேச விடுதலைக்கு மட்டுமின்றி சமூக விடுதலைக்கும், பெண் விடுதலைக்கும் சேர்த்துப் போராடிய ஒரே மாமனிதன் புரட்சிக்கவிஞன் பாரதி என்று சொன்னால் அது மிகையாகாது. அரசியல் விடுதலை மட்டும் அடைந்துவிட்டால் போதாது, சமூக விடுதலையும், பெண் விடுதலையும் சேர்ந்தது தான் இந்த தேச விடுதலை என்று உணர்ந்தவன் பாரதி. அதனால் தான் பாரதி தான் படைத்த பாடல்களில் பெண்களை உயர்த்தும் பாடல்களை நிறைய கொடுத்திருக்கிறார். அவர் எழுதிய புதிய ஆத்திச்சூடியில் ''தையலை உயர்வு செய்'' என்று சமூகத்திற்கு பாடம் சொல்லியிருப்பார். அதுமட்டுமல்ல, ''மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்'' என்று பெண்களை இழிவு செய்யும் சமூகத்தை கடுமையாக சாடியிருப்பார்.
அப்படியெல்லாம் பெண்களை உயர்த்திப் பாடியது மட்டுமல்லாமல், பாரதி அவ்வாறே வாழ்ந்தும் காட்டினார் என்பது தான் உண்மை. அதற்கு சான்றுகளும் இருக்கின்றன. நீங்கள் மேலே இருக்கும் இரண்டு புகைப்படங்களையும் பார்த்தாலே புரியும். ஒரு புகைப்படத்தில் பாரதி தன் மனைவியுடன் பக்கத்தில் நிற்பது போலவும், மற்றொன்றில் குடும்பத்தோடு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பாரதி நின்றுகொண்டும், அவரது மனைவி செல்லம்மாள் அவரின் அருகில் உட்கார்ந்து கொண்டும் இருப்பது போலவும் இருக்கும் அந்த இரண்டு புகைப்படங்களையும் பார்க்கும் போதே ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ளலாம். அதாவது முதலில் உங்கள் தாத்தா காலத்து புகைப்படங்களை கையில் எடுங்கள். அந்த படத்தையும், பாரதியின் இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப்பாருங்கள். அந்த படங்களில் ஒரு வித்தியாசத்தை நீங்கள் உணர்வீர்கள். அதாவது உங்கள் தாத்தாப் படத்தைப் பாருங்கள். அதில் தாத்தா உட்கார்ந்திருப்பார். பாட்டி அவருக்கு அருகில் பவ்வியமாக நின்றுகொண்டிருப்பார். அந்த காலத்து பெரியவர்களின் எந்தப் படங்களை எடுத்துப் பார்த்தாலும் இப்படித்தான் நீங்கள் பார்ப்பீர்கள். அதாவது அந்தக் காலத்தில் பெண்கள் மரியாதை நிமித்தமாக தன் கணவருக்கு எதிரில் சமமாக உட்காரவோ அல்லது நிற்கவோ மாட்டார்கள். அதை தான் அந்தக்கால படங்களும் நமக்கு உணர்த்துகின்றன. புகைப்படம் எடுக்கும் போதும்கூட பெண்கள் அப்படித் தான் நடந்துகொண்டிருக்கிறார்கள். அந்தக் காலம் என்பது பெண்ணடிமைத்தனம் உச்சத்தில் இருந்த காலம். பெண்ணென்பவள் மற்றவர்கள் எதிரில் கணவனிடம் சமமாக நிற்பதோ, கணவன் நிற்க மனைவி நாற்காலியில் உட்காருவதோ குற்றச்செயல். அதையெல்லாம் சமூகம் ஏற்றுக்கொள்ளாத காலம். அப்படிப்பட்ட காலத்தில் தான் நம் பாட்டன் பாரதி அந்த பெண்ணடிமைத்தனத்தை உடைத்தெறிந்தார் என்பது மட்டுமல்ல பெண்ணை உயர்வு செய்து வாழ்ந்தும் காட்டினார். இதைத்தான் அந்த இரு புகைப்படங்களும் நமக்கு உணர்த்துகின்றன. அந்த இரண்டு படத்திலும் பாரதி தன் மனையின் தோளின் மீது தோழமையாக கைப்போட்டுக்கொண்டிருப்பார். அவரது மனைவி பயந்து போய் உட்கார்ந்து கொடிருப்பார். அப்படி எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படங்களை, அடிமைப் புத்தி மேலோங்கி இருந்த அந்தக் கால சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆச்சாரமாக நடக்கும் நம் சமூகத்திற்கு இதெல்லாம் கூடாது... நம் சமூகத்திற்கு ஒத்துவராது என்று பாரதியின் சுற்றம் அவரை சீற்றமுடன் சாடியது. ஆனால் பாரதி அவர்களிடம் தேசம் வெறும் விடுதலை மட்டும் பெற்றால் போதாது ''பெண் விடுதலையும் வேண்டும்'' என்பதை வலியுறுத்தினார்.
''பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!''
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!''
என்று பாரதி பெண்களுக்கு தைரியத்தைக் கற்றுக்கொடுத்தார். பெண்கள் அநியாயங்களை எதிர்த்துப் போராட வீரத்தைக் கற்றுக்கொடுத்தார். பெண் விடுதலைக்கு மிக முக்கியமானது அவர்கள் அறியாமையிலிருந்து விடுதலைப் பெறவேண்டும். அதற்கு அவர்கள் பட்டங்கள் பெறும் இடங்களுக்கும், சட்டங்கள் இயற்றும் இடங்களுக்கும் முன்னேறிச் செல்லவேண்டும் என்று தேசம் அடிமையாய் இருந்தகாலத்திலேயே கனவு கண்டார். இது காலத்தை மீறியக் கனவு. அதனால் தான் ''பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்'' என்ற கனவு மெய்ப்படப் பாடினார். பெண் விடுதலை வேண்டும் பாரதியின் கனவு மெய்ப்பட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக