சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கி பணியாளர் தேர்வு வாரியம் -
BSRB (Banking Service Recruitment Board) என்ற மத்திய அரசு நிறுவனம்
இந்தியாவிலுள்ள அனைத்து அரசுடமை செய்யப்பட்ட வங்கிகளுக்கு தேவையான
பணியாளர்களை (கிளார்க் மற்றும் அதிகாரிகளை) ஆண்டுதோறும் +2 அல்லது அதற்கு
இணையாக படித்தவர்களுக்கு ஒரே நாளில் ஒரே மாதிரியான எழுத்துத் தேர்வுகளை
நடத்தி மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுத்து தேவைக்கேற்ப
வேலைவாய்ப்பை அளித்து வந்தது. அந்த தேர்வு என்பது ஒரே நாளில் காலையும்
மதியமும் என இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. அனைவருக்கும் ஒரே மாதிரியான
பாரபட்சமற்ற கேள்வித்தாள்களாக தயாரிக்கப்பட்டன. தேர்வு எழுதுபவர்கள்
காப்பியடிக்கக்கூடாது என்பதற்காக கேள்விகள் மட்டும் இடம் மாற்றப்பட்டு 4
அல்லது 6 வெவ்வேறான கேள்வித்தாள்களாக தயாரித்துத் தந்தார்கள்.
எல்லாருக்கும் ஒரே மாதிரியான கேள்வி தாள் மற்றும் ஒரே மாதிரியான
மதிப்பீடு என ஒரே சீரான - சமதளமான தேர்வு முறையாக இருந்தது.
|
|
ஆனால் 1991 - ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் நுழைந்த
தாராளமயம் - தனியார்மயம் - உலகமய சூறாவளியில் நம் நாட்டில் காணாமல்
போனவைகளில் அந்த BSRB என்று சொல்லப்பட்ட வங்கி பணியாளர் தேர்வு வாரியமும்
ஒன்று. படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுப்பது என்பது அரசின் வேலை அல்ல என்று
ஒதுங்கிக்கொண்ட மத்திய அரசு மத்திய - மாநில அரசு துறைகளில் வேலைக்கு
ஆட்கள் எடுப்பதை நிறுத்திக்கொண்டது மட்டுமல்லாமல் அந்த நடவடிக்கைகளையே
தடைசெய்து உத்திரவு பிறப்பித்தது. இதன் காரணமாக வேலைக்கு ஆட்களை தேர்வு
செய்ய முடியாமல் ஒரு தேர்வு வாரியம் எதற்கு என்ற ''நல்லெண்ணத்தில்'' வங்கி
பணியாளர் தேர்வு வாரியம் கலைக்கப்பட்டது.
பிறகு அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணமாக வங்கிகளில்
VRS என்ற பெயரில் நடத்தப்பட்ட ஆட்குறைப்பு, ஊழியர்களின் இறப்பு மற்றும் பணி
நிறைவு காரணமாக ஏற்பட்ட காலி இடங்களினால் வங்கிப் பணிகள் மிகவும்
பாதிக்கப்பட்டன. சொற்ப எண்ணிக்கையில் வேலையிலிருந்த ஊழியர்களும்
அவதிக்குள்ளானார்கள். வாடிக்கையாளர் சேவைகளும் பாதிப்புக்குள்ளானது.
வாடிக்கையாளர்களுக்கான நிறைவான வங்கிச்சேவைக்கு தேவையான ஆட்களை
தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தவேண்டும் என்று வங்கி ஊழியர்
சங்கங்களெல்லாம் போராடியதன் விளைவாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்கிகளின்
தேவைக்கேற்ப போட்டித் தேர்வுகள் நடத்தி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு
பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனால் பணியாளர்களை தேர்வு செய்வதற்கு BSRB -
வங்கி பணியாளர் தேர்வு வாரியம் இல்லாத சூழ்நிலையில், ஏற்கனவே மத்திய
அரசாங்கத்தால் கடந்த 1984 - ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு ஒரு ''டம்மி பீசாக''
செயல்பட்டு வந்த IBPS என்ற வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனத்திற்கு
2012 ஜூன் மாதம் உயிர் கொடுக்கப்பட்டது.
இந்த நிறுவனம் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து
தேசவுடமை செய்யப்பட்ட வங்கிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்து பணியில்
அமர்த்தியது. இந்த நிறுவனம் பாரத ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குனர்
ஒருவரும், முன்னிலையிலுள்ள தேசவுடமையாக்கப்பட்ட வங்கிகளின் தலைவர்கள்
சிலரும், இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவன இயக்குனர் ஒருவரும், தேசிய
வங்கி மேலாண்மை நிறுவன இயக்குனர் ஒருவரும் மற்றும் இந்திய வங்கிகளின்
சங்கத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரும் என 15 பேர் கொண்ட ஒரு
சுதந்திரமான அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் இந்த ஐ.பி.பி.எஸ் நிறுவனம்
பி.எஸ்.ஆர்.பி.-யை போலவே ஒரே நாளில் ஒரே மாதிரியான ''பொது எழுத்துத்
தேர்வுகளை'' - ஒரு சமதள போட்டித்தேர்வாக நடத்தி பணியாளர்களை தேர்வு
செய்துவந்தனர். இந்தத் தேர்வில் பங்குபெற்று பணியில் சேர்வதற்கு
கிராமப்புற இளைஞர்களும், வசதியற்ற தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட
இளைஞர்களும் மற்ற இளைஞர்களோடு போட்டிப்போட்டு தேர்வு எழுத சமவாய்ப்பு
பெற்றனர். அதில் திறமையின் அடிப்படையில் - மதிப்பெண்கள் அடிப்படையில்
கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு
வங்கிப்பணியில் அமர்த்தப்பட்டனர். இது அனைவரும் வரவேற்கவேண்டிய நடைமுறையே
என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் அண்மைக் காலமாக அனைத்து கிராம வங்கிகளுக்கான
கிளார்க்குகள் மற்றும் அதிகாரிகள் தேர்வுக்கும், அனைத்து
தேசவுடமையாக்கப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள் மற்றும் கிளார்க்குகள்
தேர்வுக்கும் ஐ.பி.பி.எஸ் நிறுவனமானது தன்னுடைய வழக்கமான பணியாளர் தேர்வு
முறையை மாற்றி ''ஆன்லைன் தேர்வு முறைக்கு'' தாவியது.
இது எந்த ''புண்ணியவானின்'' கண்டுபிடிப்போ தெரியவில்லை. இந்த ஆன்லைன்
தேர்வு முறை என்பது ஒரு சமதள தேர்வாக நடப்பதற்கு வாய்ப்பில்லை என்பது தான்
உண்மை. ஏனென்றால் இந்த வங்கி தேர்வுகளுக்கு பல இலட்சம் வேலை தேடும்
இளைஞர்கள் விண்ணப்பிக்கிறார்கள். எழுத்து தேர்வு என்றால் ஒரே நாளில் ஒரே
மாதிரியான கேள்வித்தாள்களை பயன்படுத்தி ஒரே மாதிரியான சமதள தேர்வாக நடத்தி
முடிக்கலாம். அதிக எண்ணிக்கையிலான தேர்வாளர்கள் இருப்பதால், ஒரே நேரத்தில்
ஒரே தளத்தில் போட்டியில் ஈடுபட்டு வெற்றிபெறுவது என்பது தான் முறையான
தேர்வாக இருக்கமுடியும். அதுமட்டுமல்லாமல், இந்தியாவைப்போன்ற பின்தங்கிய
நாடுகளுக்கு அல்லது வளரும் நாடுகளுக்கு இது தான் சிறந்த முறையாகவும்
இருக்கமுடியும்.
ஆனால் தற்போது ''ஆன்லைன் தேர்வு முறைக்கு'' மாறியதால்
விண்ணப்பித்த அத்துனை இலட்சம் பேர்களுக்கும் கம்ப்யூட்டர்களை ஒரே நேரத்தில்
அளிப்பது என்பது சிரமமான காரியமாகும். கம்ப்யூட்டர்கள் சில நூறு
எண்ணிக்கைகளில் சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே கிடைக்கிறது.
எனவே விண்ணப்பித்தவர்களை சில நூறு பேர்களாக 16 குழுக்களாக பிரித்து சனி
மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை - மதியமென கிடைத்த பொறியியல்
கல்லூரிகளில் நிரப்பி தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு ஆன்லைன் தேர்வு
நடத்துகிறார்கள். இது சரியான முறையல்ல என்பது மட்டுமல்ல. சமதள தேர்வு
முறையும் ஆகாது. ஏனென்றால் 16 வகையான கேள்வி தொகுப்புகள் வெவ்வேறான
தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டு கொடுக்கப்படுவதால் இது ஒரு சமதள
போட்டித்தேர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது. வெவ்வேறு கிழமைகளில் வெவ்வேறு
வேளைகளில் தேர்வு எழுதும் மாணவர்களின் அனுபவத்திலிருந்து பார்க்கும் போது,
இந்த முறையிலான தேர்வில் சில நாட்களில் சுலபமான கேள்விகளாகவும், சில
நாட்களில் கடினமான கேள்விகளாகவும் கேட்கப்படுவதாக சொல்லப்படுகிறது. எனவே
தான் ஆன்லைன் தேர்வு முறை என்பது ஒரு சமசீரான - சமதளமான தேர்வு முறையாக
ஏற்றுக்கொள்ளமுடியாது.வெவ்வேறு நாட்களில் ஆன்லைன் போட்டித்தேர்வு
நடைபெறுவதால் விண்ணப்பித்த அனைத்து இளைஞர்களின் திறமைகளையும் ஒரே மாதியாக
எடைபோடுவது என்பது இயலாத காரியமாகும். சுலபமான கேள்விகளைப் பெறுபவர்கள்
வெற்றிபெறுவதும், கடினமான கேள்விகளை பெறுபவர்கள் தொல்வியடைவதுமான ஒரு
நியாயமற்ற - நேர்மையற்ற தேர்வு முறையாகத் தான் இது அமைகிறது என்பதை
ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.
இது ஆன்லைன் தேர்வு என்பதால் ஆன்லைனில் தான்
விண்ணப்பிக்கவும் வேண்டும் என்ற கட்டாயமும் இதில் உள்ளது. ஆன்லைன்
விண்ணப்பம் என்பதால் கம்ப்யூட்டரைப் பற்றி அறியாத - கம்ப்யூட்டரையே
பார்க்காத கிராமப்புற மற்றும் வசதியற்ற நகர்ப்புற இளைஞர்கள்
வங்கிப்பணிகளுக்கு விண்ணப்பிப்பது என்பது முடியாமல் போய்விடுகிறது.
குறிப்பாக தலித் பிரிவு இளைஞர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வாய்ப்பே
கிடைக்காமல் போய்விடுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் விண்ணப்பம் மற்றும்
ஆன்லைன் தேர்வு என்பதால் பெரும்பாலான கிராமப்புற மற்றும் தலித் இளைஞர்கள்
விண்ணப்பம் போடுவதற்கே தயங்குகிறார்கள். இதனால் வேலைதேடும் ஒரு பகுதி
படித்த இளைஞர்களுக்கு ''வேலை உரிமை'' மறுக்கப்படுகிறது என்பது தான் உண்மை.
இது அடித்தட்டு மக்கள் போராடிப்பெற்ற ''இடஒதுக்கீட்டுக்கு'' எதிரானது
மட்டுமல்ல, அரசியல் சாசனத்திற்கே எதிரானது என்பதையும் யாராலும்
மறுக்கமுடியாது. இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் சூழ்ச்சியும் இதில்
அடங்கியிருக்கிறது என்பதும் யாராலும் மறுக்கமுடியாத உண்மை.
மேலும் இதில் கீழ்கண்டவாறான பல்வேறு சிரமங்களும் உள்ளன.
1) ஆன்லைன் தேர்வு மையமாக எங்கோ தொலைதூரத்தில் ஒரு ஒதுக்குபுறத்தில்
நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகள் தேர்வு மையமாக
தேர்ந்தெடுக்கப்படுவதால், அந்த மையத்தை கண்டுபிடித்து சென்றடைய தேர்வு
எழுதுபவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். இதனால் பலபேர் நேரம்
கடந்து தேர்வு மையத்தை சென்று அடைகிறார்கள். இவர்கள் நெடுந்தூரம் கலைத்து
போய் தேர்வு மையத்திற்கு வந்து ''ஆன்லைன்'' தேர்வை எப்படி சிறப்பாக
எழுதமுடியும்.
2) அதுமட்டுமல்லாமல், வங்கிப் போட்டித்தேர்வில் தேர்ச்சிப்
பெறுவது என்பது தேர்வு எழுதுபவர்களின் திறமை மட்டும் சம்பந்தப்பட்டதல்ல.
அவர்களின் ''நேர மேலாண்மை ஆற்றலும்'' சம்பந்தப்பட்டிருகிறது. நேர மேலாண்மை
ஆற்றலைப் பயன்படுத்தி இவர்கள் தேர்ச்சிபெற எழுத்துத்தேர்வு தான் சிறந்த
முறையாக இருக்கமுடியும். ஆன்லைன் தேர்வு முறையில் நேரம் விரயமாகும். அங்கு
நேர மேலாண்மை ஆற்றலுக்கே இடமில்லாமல் போய்விட்டது. எனவே எழுத்துத் தேர்வை
விட ஆன்லைன் தேர்வில் குறைந்த எண்ணிக்கையிலான கேள்விகளுக்கே தேர்வாளர்களால்
பதிலளிக்க முடியும். இதனால் திறமைசாலிகள் கூட தேர்ச்சிபெறுவது என்பது
கடினமாக இருக்கிறது.
3) பல்வேறு நாட்களாக நடைபெறும் ஆன்லைன் தேர்வுகளுக்கு ஒரே
மாதிரியான கேள்விகளாக இல்லாமல், ஒவ்வொரு வேளை தேர்வுக்கும் அழைக்கப்படும்
கேள்வித் தொகுப்பு என்பது வெவ்வேறு நிபுணர்கள் தங்களின் திறமைகளுக்கேற்ப
தயாரிக்கும் கேள்வித் தொகுப்பு என்பதால் இது ஒரு சமதள போட்டியாக அமையாது.
ஒரு நாள் தேர்வு சுலபமான தேர்வாகவும், இன்னொரு நாள் தேர்வு கடினமான
தேர்வாகவும் தான் அமைகிறது. சுலபமான தேர்வில் பங்கேற்றவர்கள் சுலபமாக
வெற்றிபெற்றுவிடுவார்கள். கடினமான தேர்வில் பங்கேற்றவர்கள் தோல்வி
அடைவார்கள். எனவே தான் இந்த ஆன்லைன் தேர்வு முறையை சமதளமற்ற தேர்வு முறை
என்று சொல்லவேண்டியிருக்கிறது.
4) ஆன்லைன் தேர்வு என்பது எழுத்துத் தேர்வைப் போல் அதிக
செலவில்லாத தேர்வு முறையாகும். எழுத்துத்தேர்வென்றால் கேள்வித்தாள்
குறிப்பவருக்கு தரவேண்டிய சம்பளம், கேள்வித்தாள் தயாரிக்கும் செலவு,
கேள்வித்தாள்களை தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படும் பார்சல் செலவு, தேர்வு
மைய செலவு, மேற்பார்வையாளர்கள் செலவு, விடைத்தாள்களை திரும்ப அனுப்ப
இன்னொரு பார்சல் செலவு, விடைத்தாள்களை திருத்துவோருக்கான சம்பளம், தேர்வு
எழுதுவோருக்கு தேர்வு அனுமதி சீட்டு தயாரிப்பு செலவு, அதற்கான தபால் செலவு,
வெற்றிப்பெற்றவர்களுக்கு தேர்ச்சி அறிவிப்பு கடிதம் தயாரிப்பு செலவு,
அதற்கான தபால் செலவு என பல்வேறு வகையான செலவுகள் செய்யவேண்டியிருப்பதால்
எழுத்துத்தேர்வுக்காக இதுவரை வாங்கப்பட்ட தேர்வுக்கட்டணம் என்பது
நியாயமானதே ஆகும். ஆனால் மேலே சொன்ன செலவுகளில் கேள்வி தயாரிப்பாளருக்கான
சம்பளம், கம்ப்யூட்டர் தேர்வு மையத்திற்கான செலவு, மேற்பார்வையாளர்கள்
செலவு போன்ற ஒரு சில செலவுகள் மட்டுமே செய்யப்படுகிற ஆன்லைன் தேர்வுக்கு
எதற்காக இவ்வளவு அதிகமான கட்டணத்தை வசூலிக்கிறார்கள் என்பது
கேள்விக்குறியாக இருக்கிறது. தேர்வு நுழைவு சீட்டு கூட தேர்வு எழுதுபவர்களே
ஆன்லைனில் எடுத்துக்கொள்கிறார்கள். தேர்வு முடிவுகளையும் ஆன்லைனில்
அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். இதற்கு எதற்கு இவ்வளவுத் தொகையை
இவர்களிடமிருந்து கட்டணமாக வசூல் செய்கிறார்கள் என்பது தான் புரியவில்லை.
இது ஒரு பகல் கொள்ளையாகத் தான் தெரிகிறது.
இப்படிப்பட்ட குறைபாடுகளைக்கொண்ட ஆன்லைன் தேர்வு முறை நம்
நாட்டிற்கு அவசியம் தானா...? என்ற கேள்வியே எழுகிறது. ஐ.பி.பி.எஸ்
கடைபிடிக்கும் இந்த ஆன்லைன் தேர்வு முறையைப் பார்த்து, இன்சூரன்ஸ்
கம்பெனிகள், ஸ்டேட் வங்கி மற்றும் மத்திய அரசு போட்டிதேர்வுகளும் ஆன்லைனில்
நடத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்பது தான் கொடுமையான விஷயமாக இருக்கிறது.
எனவே ஒரு சமதளமற்ற, நேர்மையற்ற ''ஆன்லைன்'' முறையிலான
வங்கிப் போட்டிதேர்வு முறையை மாற்றி அனைவரும் பங்குகொள்ளும் வகையில்
மீண்டும் ''பொது எழுத்துத் தேர்வுகளை'' அனுமதிக்க வேண்டும். எழுத்துத்
தேர்வுகளுக்கு ஆகின்ற செலவுகளும் நேரமும் அதிகமாக இருக்கலாம். ஆனால்
ஏற்றத்தாழ்வுகள் கொண்ட நம் நாட்டின் சூழலுக்கு அது தான் ஏற்ற முறையாக
இருக்கும். இந்தக் கோரிக்கைகளுக்காக வங்கி மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர்
சங்கங்களும், ஜனநாயக சக்திகளும் போராடவேண்டும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக