“உணர்வுகளோடு கலந்து நின்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு” - 83வது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் சேகுவேராவுக்கு புகழாரம் |
சேகுவேராவின் 83-வது பிறந்தநாள் உலகெங்கும் கொண்டாடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் இந்தக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்திருக்கின்றன. இந்தக் கொண்டாட்டங்கள் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் அதனதன் தன்மைக்கேற்றபடி அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு ஆசியாவில் மக்கள் எழுச்சி நடைபெற்று வரும் நாடுகளில் ''சே'' படம் உள்ள பெரிய, பெரிய அட்டைகளோடு போராட்டக்காரர்கள் வீதிகளில் வலம் வந்துள்ளனர். வெனிசுலா, பொலிவியா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் விடுதலையைப் பாதுகாப்போம் என்ற முழக்கங்களை மக்கள் எழுப்பினர். கியூபாவில் சான்க்டி ஸ்பிரிட்டஸ் என்ற இடத்தில் சே குவேராவின் பிறந்தநாள் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. கியூபாவின் மத்தியப் பகுதியில் உள்ள இந்த மாகாணத்தில் நடந்த பல்வேறு நடவடிக்கைகளில் சேகுவேரா முன்னின்றார். ஃபோமென்டோ என்ற நகரில் சேகுவேராவைக் கவுரவிக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் கொண்ட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ஃபோமென்டோ நகர்தான் கியூபாப் புரட்சியாளர்களால் விடுவிக்கப்பட்ட முதல் பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக்கண்காட்சியை நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருந்து பார்வை யிட்டனர். வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூரும் வண்ணம் அந்தக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது என்று பார்த்தவர்கள் சொல்கிறார்கள். சேகுவேராவின் பிறந்தநாளை நினைவுகூரும் வண்ணம் கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான கிரான்மா குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. தனது வாழ்நாளில் எந்த கொள்கைகளில் நம்பிக்கை வைத்திருந்தாரோ, அதற்கு விசுவாசமாக அவர் உள்ளார். உறுதியான மனநிலை, அசாதாரணமான தைரியம், உயர்ந்த மனிதாபிமானம் கொண்டவர். தனது நாட்டிற்காகக் கடைசிவரை போராட வேண்டும் என்ற உறுதி அவரிடம் இருந்தது. அவரது செயல்கள், சாகசங்கள் மற்றும் செயல்திறன் ஆகியவை புரட்சிகர மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகளோடு கலந்திருந்ததால் நியாயமான விஷயங்களுக்காக அவரைப் போராட வைத்தது. இவ்வாறு கிரான்மா குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பொலிவியாவின் லாஹிகுரா நகரில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கியூபாவுக்கான பொலிவியத் தூதர் ரபேல் டவுசா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அமெரிக்காவின் தாக்குதல்களை மீறி கியூபா, வெனிசுலா மற்றும் பொலிவியப் புரட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இதற்காகவே சே குவேராவின் பிறந்தநாளை நாம் சிறப்பாகக் கொண்டாட வேண்டிய அவசியம் உள்ளது என்று குறிப்பிட்டார். அப்போது பேசிய பலரும், கியூபா, வெனிசுலாவைத் தொடர்ந்து, மக்கள் நலக் கொள்கைகளை நோக்கி நடைபெறும் அரசை பொலிவியாவில் மக்கள் கொண்டு வந்ததற்கு சேகுவேரா போன்ற புரட்சியாளர்களின் அர்ப்பணிப்பு செயல்களும் காரணம் என்று குறிப்பிட்டனர். ஸ்பெயின் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளிலும் சே குவேராவின் ஆவணப்படங்களைத் திரையிட்டு பிறந்தநாளைநினைவு கூர்ந்துள்ளனர். வெனிசுலாவில் நாடாளுமன்றக்கூட்டத் தொடர் நடந்து வருகிறது. ஒரு நாள் கூட்டத்தில் கிட்டத்தட்ட பாதி நேரத்தை சேகுவேரா நினைவைக் கொண்டாட ஒதுக்கி விட்டார்கள். இடுப்பில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையால் ஓய்வு பெற்று வரும் வெனிசுலா ஜனாதிபதி சாவேசால் இந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள இயலவில்லை. மக்களுக்கு வாழ்த்துச் செய்தியை அவர் அனுப்பினார். உத்வேகம் அளிக்கும் சே : ஏமன் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் எழுச்சிகரமான போராட்டம் நடத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் சமரசப் பாதையில் சென்ற போதும் தங்கள் போராட்டத்தை அவர்கள் கைவிடவில்லை. இதனால் தங்கள் போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்க சேகுவேராவின் படங்கள் அடங்கிய அட்டைகளோடு வீதிகளில் வலம் வருகிறார்கள். அரபு லீக் அளித்த சமரசத்திட்டத்தில் சலேவுக்கு மன்னிப்பு வழங்கும் அம்சம் இருந்தது. இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொண்டாலும் எழுச்சியோடு போராடி வரும் மக்களில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். ஆட்சி மாற்றத்தோடு கொள்கை மாற்றம் வேண்டும் என்பது மக்களின் கருத்தாகும். நாட்குறிப்பு வெளியீடு : இதுவரை வெளிவராத சேகுவேராவின் டைரிக்குறிப்புகள் நூல் வடிவத்தில் வெளியாகியுள்ளது. கியூபாவின் தலைநகர் ஹவானாவில் சே-யின் பிறந்தநாளான ஜூன் 14 ஆம் தேதியன்று ‘வீரனின் டைரி’ என்ற தலைப்பில் அந்த நூல் வெளியிடப்பட்டது. 1956 டிசம்பர் 2, அன்று கிரான்மாவிற்குச் சென்று மற்ற போராளிகளோடு இணைந்து கொண்ட திலிருந்து, அப்போதிருந்து மூன்று ஆண்டுகள் நடைபெற்ற ஆயுதந்தாங்கிய போர் முடியும் வரையிலான டைரிக்குறிப்புகள்தான் தற்போது வெளியாகியுள்ளன. இந்த நூலை வாங்குவதற்கு ஏராளமான நபர்கள் வரிசையில் காத்திருந்தனர். வெளியானவுடன் பல நூறு பிரதிகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் இந்த நூல் குறிப்பிடத்தக்க தாக்கத் தை ஏற்படுத்தும் என்று வெளியீட்டு விழாவில் பேசியவர்கள் குறிப்பிட்டனர். |
சேகுவேரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேகுவேரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 16 ஜூன், 2011
உலகத்தை நேசித்தவனை உலகம் கொண்டாடுகிறது....
லேபிள்கள்:
ஏகாதிபத்திய எதிர்ப்பு,
சேகுவேரா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)