சீத்தாராம் யெச்சூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீத்தாராம் யெச்சூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

வீரஞ்செறிந்த போராட்டங்களை நோக்கி முன்னேறுவோம்...!


கட்டுரையாளர் : சீத்தாராம் யெச்சூரி,          
                                     பொதுச்செயலாளர்,               
                                     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                     
             மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது 21-வது அகில இந்திய மாநாட்டில், இந்திய ஆளும் வர்க்கங்களால் பின்பற்றப்படும் தற்போதைய கொள்கைகளுக்கு மாற்றாக திட்டத்தின் அடிப்படையில், தற்போதைய முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியை, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான மக்கள் ஜனநாயக முன்னணியால் அகற்றும் குறிக்கோளுடன், கட்சியையும், வர்க்க-வெகுஜன அமைப்புகளையும் வலுப்படுத்துவதற்கான உறுதியையும், இடது ஜனநாயக முன்னணியை உருவாக்குவதற்காக வலுவான மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்துவதற்கான உறுதியையும் இரட்டிப்பாக்கியுள்ளது.
                  நாட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள பன்முகத் தாக்குதல்களிலிருந்து அவர்களை விடுவித்திட இது ஒன்றே வழியாகும்.

முழுமையான உட்கட்சி விவாதம்                

           கட்சியின் மாநாடு, அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கை மற்றும் அரசியல் தீர்மானம் ஆகிய இரு முக்கிய தீர்மானங்களை முழுமையாக விவாதித்து நிறைவேற்றியுள்ளது. இவற்றின் வரைவுகள் இரு மாதங்களுக்கு முன்பே `பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ இதழில் வெளியிடப்பட்டு, முழுமையாக உட்கட்சி விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தன. கட்சி உறுப்பினர்களிடமிருந்தும், கட்சிக் கிளைகளிலிருந்தும் அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கை மீது முறையே 1432 திருத்தங்களும், 136 திருத்தங்களும் வரப்பெற்று அவை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, அகில இந்திய மாநாடு அவற்றில் 29-ஐ ஏற்றுக்கொண்டிருக்கிறது.
             அதேபோன்று வரைவு அரசியல் தீர்மானத்தின் மீது 2,552 திருத்தங்களும், 248 பரிந்துரைகளும் வரப்பெற்றன. அவற்றில் 74 ஏற்றுக்கொள்ளப்பட்டன. அகில இந்திய மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கையில், மாநாட்டுப் பிரதிநிதிகள், அரசியல் - நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கை மீது 259 திருத்தங்களையும், வரைவு அரசியல் தீர்மானத்தின் மீது 473 திருத்தங்கள் மற்றும் 5 பரிந்துரைகளையும் முன் வைத்தனர். இவற்றில் அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கை மீது 11 திருத்தங்களும், வரைவு அரசியல் தீர்மானத்தின் மீது 55 திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ஸ்தாபன பிளீனம்                  

            இத்தீர்மானங்கள் மீதான பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஏராளமாக எழுத வேண்டியது அவசியமாகும். சாராம்சத்தில், அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கையானது, இடது ஜனநாயக முன்னணியைக் கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் கூறியிருக்கிறது. போராட்டங்களில் இடதுசாரி சக்திகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும். கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகள் சுயேச்சையான முறையில் வலுவாக இருந்தால் தான், இவ்வாறு இடது ஜனநாயக முன்னணியை வலுவாகக் கட்டுவதும் சாத்தியமாகும். எனவே, இத்தீர்மானங்களின் அடிநாதமாக இருப்பது, கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளின் செயல்பாடுகளை இன்னும் வலுப்படுத்துவது என்பதேயாகும். எனினும் இந்தக் குறிக்கோளை எய்த வேண்டுமானால், கட்சி ஸ்தாபனத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும், வர்க்க, வெகுஜன அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் ஒரு முழுமையான ஆய்வினை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கையின்கீழ் மேற்கொண்டுள்ள முடிவுகளின்படி கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு, அத்தகைய ஆய்வு மிகவும் அவசியமாகும். இந்தக் குறிக்கோளை எய்துவதற்காக, கட்சியின் அகில இந்திய மாநாடு இந்தாண்டு இறுதிக்குள் ஸ்தாபனம் குறித்து ஒரு பிளீனத்தை (சிறப்பு மாநாடு) நடத்திடவும் தீர்மானித்திருக்கிறது.

சுரண்டல்களுக்கு எதிராகஇரண்டு கால்கள்            

        மக்கள் எதிர்கொள்ளும் பன்முகப்பட்ட பிரச்சனைகள் மீது பெரும் போராட்டங்களை வலுப்படுத்துவதற்கு, பொருளாதாரச் சுரண்டல் சார்ந்த பிரச்சனையுடன் சமூக ஒடுக்குமுறைப் பிரச்சனையையும் ஒன்றிணைத்து கூர்மையான திட்டமிடலை மேற்கொள்வது அவசியமாகும். தற்போதைய இந்திய சமூகத்தில், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மதச்சிறுபான்மையினர் ஆகியோர் மீது ஏவப்பட்டுள்ள சமூக ஒடுக்குமுறை வடிவங்களுக்கு எதிரான போராட்டங்கள் அத்தகைய வலுவான மக்கள் இயக்கங்களைக் கட்டுவதற்கு ஒரு முக்கிய அம்சம் ஆகும். இந்தியாவில் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் ஒரு கால் என்றால், சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மற்றொருகால் ஆகும்.
       இவ்விரு போராட்டங்களும் பின்னிப்பிணைந்து வலுப்படுத்தி முன்னெடுத்துச் செல்லப்படுவது அவசியம் என்கிற நமது புரிதலை கட்சியின் 21-வது மாநாடு மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தி இருக்கிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு முக்கிய கவனம் தரப்படவில்லையெனில் அது, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை, பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களுடன் இணைக்க முடியாத நிலையை ஏற்படுத்திவிடும். விளைவு, நாட்டு மக்களில் சுரண்டப்படும் பெருவாரியான மக்களை விடுவிப்பதற்குரிய விதத்தில் வர்க்கப் போராட் டங்களை நடத்த முடியாத நிலையை ஏற்படுத்தி விடும்.
            எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன் குறிக்கோளை விரைவில் எய்த வேண்டுமானால் இவ்விரு கால்களின் மீதும் முதலில் நின்று, நடந்து, பின்னர் ஓட வேண்டியது அவசியம் என்று கட்சியின் அகில இந்திய மாநாடு அழுத்தமாக வலியுறுத்திக் கூறி இருக்கிறது. 

மக்கள் இயக்கமே நமது பலம்!                   

          கட்சியின் சுயேச்சையான பலம் மற்றும் அதன் தலைமையின்கீழ் கட்டமைக்கப்படும் மக்கள் இயக்கங்களின் பலம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தேர்தல்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடங்கள் கிடைத்திருக்கின்றன என்று மீண்டும் ஒருமுறை அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கை உறுதி செய்திருக்கிறது. கடந்த கால அனுபவம் நமக்கு அதைத்தான் எவ்விதப் பிசிறுமின்றி நடைமுறைப்படுத்திக் காட்டி இருக்கிறது. அத்தகைய பலத்தின் அடிப்படையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரளம், மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க முறையில் தேர்தல் வெற்றிகளைப் பதிவு செய்ய முடிந்தது.

தேர்தல் உடன்பாடுகள்              

          அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கையானது, மாநிலங்களில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகளுடனான தேர்தல் கூட்டணிகள் மட்டுமே ஆளும் வர்க்கங்களின் தற்போதைய ஆட்சிக்கு அடிப்படை மாற்றாகஅமைந்திட முடியாது என்பதையும் காட்டியிருக்கிறது. மாநிலக் கட்சி களுடன் தொகுதி உடன்பாடுகள்கூட கட்சியின் சுயேச்சையான வலுவின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகின்றன.
          எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன பலம் மற்றும் போராட்டங்களில் வலுவான தலையீடுகள் ஆகியவற்றுக்கு அதிமுக்கியத்துவம் கொடுப்பதன் அடிப்படையிலேயே கட்சியின் அரசியல் நடைமுறை உத்தி அமைந்திட வேண்டும். தேர்தல் நடைபெறும் காலங்களில் சில மாநிலங்களில் மாநிலக்கட்சிகளுடன் சில உடன்பாடுகள் தேவைப்படலாம். ஆயினும், அத்தகைய தேர்தல் உத்தி அடிப்படையில் இடது ஜனநாயக முன்னணியை வலுப் படுத்துவதற்கான குறிக்கோளை எய்துவது நோக்கி முன்னேற முடியாது.
              இதனை நமது சுயேச்சையான பலம் மற்றும் போராட்டங்களில் தலையிடக் கூடிய தகுதியை ஒருமுகப்படுத்துவதன் அடிப்படையில் மட்டுமே எய்திட முடியும். மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசியல் தீர்மானமானது, ஒரு பக்கத்தில் மிகவும் மூர்க்கமான முறையில் பின்பற்றப்படும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும், மறுபக்கத்தில் மிகவும் வெறித்தனமாகக் கட்டவிழ்த்துவிடப்படுகிற மதவெறிக்கெதிராகவும் மக்கள் போராட்டங்களை வலுப்படுத்தவேண்டியதன் தேவையை அழுத்தமாகத் தெரிவித்துள்ளது.
          மோடி அரசாங்கமானது, நாட்டு மக்களில் பெரும்பான்மையோரின் அடிப்படை வாழ்வாதாரங்களைக் காவு கொடுத்து சர்வதேசமற்றும் இந்திய மூலதனம் கொள்ளை லாபம் ஈட்ட வழிவகை செய்து தருகிறது. அதே சமயத்தில், அந்நிய நேரடி மூலதனம் ஆதிக்கம் செலுத்தக்கூடிய விதத்தில் அனைத்துத்துறைகளையும் அவசர அவசரமாகத் திறந்து விட்டுக்கொண்டும் இருக்கிறது. “வளர்ச்சி’’ “வளர்ச்சி’’ என்று ஆட்சியாளர்கள் என்னதான் தம்பட்டம் அடித்தாலும், இதன்பின்னே மறைந்திருக்கும் உண்மையான நோக்கம் என்னவெனில், நாட்டையும், நாட்டின்வளங்களையும் அந்நிய மற்றும் இந்திய கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம்ஈட்டுவதற்காகத் தங்குதடையற்ற சுரண்டலுக்கு முழுமையாகத் திறந்துவிடுவதேயாகும். இவற்றின் காரணமாக நம் நாட்டு மக்களில் பெரும்பான்மையோரின் வாழ்க்கை மிக வேகமாக வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. இத்தகைய கொள்ளை லாப வேட்டையால் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் ஆதாயம் அடைந்திருக்கிறார்கள்; பெரும்பணக்காரர்களுக்கும், ஏதும் இல்லாதவர்களுக்கும் இடையேயான இடைவெளி மிகவும் அபாயகரமான முறையில் விரிவடைந்து கொண்டிருக்கிறது. 

விவசாயியின் துயரம்                       

             நம் விவசாயத்தைப் பற்றிக்கொண்டுள்ள நெருக்கடி தொடர்வதிலிருந்து இதனை நன்கு காண முடியும். வட இந்தியாவின் பல மாநிலங்களில் பருவமழை காலம் தவறி பெய்திருப்பதன் காரணமாக, பயிர்கள் முழுமையாக நாசம் அடைந்து, விவசாயிகளுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கு ஒரு முன்நிபந்தனை, கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிற விவசாயிகளைப் பாதுகாப்பதே ஆகும். ஆனால் அதற்குப் பதிலாக, மோடி அரசாங்கமானது மிகவும் கருணையற்ற முறையில் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இது விவசாயிகளின் வாழ்வில் மேலும் கூடுதலாக துன்பதுயரங்களை ஏற்படுத்துவதுடன், நம் ஒட்டுமொத்த விவசாயத்துறையில் காணப்படும் நெருக்கடியை மேலும் ஆழமாக்கிடும்.
தொழிலாளியின் அவலம்
           நாட்டிலுள்ள தொழிலாளர் நலச் சட்டங்களில், உழைக்கும் மக்களுக்கு இதுநாள்வரை இருந்து வந்த கொஞ்சநஞ்ச உரிமைகளைக்கூடப் பறிக்கும் விதத்தில், பெரிய அளவில் மாற்றங்களைக் கொண்டுவருதல் உட்பட எண்ணற்ற தொழிலாளர்நல விரோதச் சட்டங்களைக் கொண்டுவர ஆட்சியாளர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்காலத்தில் மோடி அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை உக்கிரப்படுத்திடும்.

விஷம் கக்கும் மோடி அரசு             

            அதேபோன்று, மோடி அரசாங்கமானது, இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களுக்கு எதிராகவும், நாட்டிலுள்ள மதச்சிறுபான்மையினரின் உயிர் வாழ்விற்கு எதிராகவும், மதவெறி நஞ்சைக் கக்கிக்கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் பலவும் மறுமதமாற்றம் என்றும், காதலுக்கு எதிரான `புனிதப் போர்’ என்றும் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. மோடி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பல அமைச்சர்களும், ஆளும் பாஜக எம்பி-க்களும் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக விஷத்தைக் கக்கும் பேச்சுக்களை தங்குதடையின்றித் தொடர்ந்து மேற் கொண்டு வருகின்றனர். நாட்டின் சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெயரளவிற்குக்கூட உறுதி அளிப்பதற்கு, மோடி அரசாங்கம் முன்வரத் தயாராயில்லை. அரசின் இத்தகைய அடாவடித்தனம் மதச்சிறுபான்மையினர் மத்தியில் பாதுகாப்பின்மையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய இழிமுயற்சிகளின் மூலமாக, ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்கள் இந்து வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்தி, அதன் மூலம் அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்களை அடைந்திட முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. இவர்களது முயற்சிகள், நம் இந்தியக்குடியரசின் அடித்தளங்கள் மீது கருணையற்ற முறையில் ஏவப்பட்டுள்ள தாக்குதல்கள் மட்டுமல்ல; மக்கள் தங்கள் வாழ்வாதாரங்கள் அரிக்கப்படுவதற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடும்போது அவர்களின் ஒற்றுமையை மத அடிப்படையில் சிதைத்து சின்னாபின்னப்படுத்தும் சதியும் ஆகும்.

எதேச்சதிகார ஆட்சியை நோக்கி...              

           இப்படியாக, மோடி அரசாங்கம் நவீன தாராளமயப் பொருளாதாரத் தாக்குதல்களுடன் மதவெறி நஞ்சையும் இணைத்து, மக்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்துக்கொண்டிருக்கிறது. இப்போது மேலும் கூடுதலாக, மோடி அரசாங்கமானது தன்னுடைய குறிக்கோள்களை எய்துவதற்காக, நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகளைக் கூட சிதைத்திட நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. நம் ஜனநாயகக் கட்டமைப்பினை சிதைத்து சின்னாபின்னப்படுத்துவதன் மூலம் ஓர் எதேச்சதிகார ஆட்சிமுறையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற அறிகுறி தெரியத் தொடங்கி இருக்கிறது. கட்சியின் 21வது அகில இந்திய மாநாடு, இந்திய நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் ஏவப்பட்டுள்ள மேற்படி மும்முனைத் தாக்குதல்களுக்கு எதிராகத் தன் கடும் எதிர்ப்பினைப் பிரகடனம் செய்திருக்கிறது. இம்மூன்றும் நாட்டையும் நாட்டு மக்களின் வாழ்வையும் சூறையாடக்கூடிய `திரிசூலமாக’ மாறுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடுத்திடும் என்றும் 21வது அகில இந்திய மாநாடு உறுதிபட அறிவித்திருக்கிறது. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டையும், நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களையும் பாதுகாக்கக் கூடிய அதே சமயத்தில், நாட்டு மக்களின் நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கான வேலையில் முன்னிலும் பன்மடங்கு செயலூக்கத்துடன் இறங்கிடும். 
நன்றி : தீக்கதிர்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளரை வரவேற்போம்...!

 
                 ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடந்த 14-ஆம் தேதி முதல் இன்று வரை ஆறு நாட்கள் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இறுதி நாளான இன்று வரும் மூன்று ஆண்டுகளுக்கான கட்சியின் புதிய மத்தியக்குழு உறுப்பினர்களையும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சியின் புதிய பொதுச்செயலாளராக தோழர்.சீத்தாராம் யெச்சூரி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கட்சியின் அமைப்பு விதிப்படி ஒருவர் மூன்று முறை மட்டுமே கட்சிப்பொறுப்பில் இருக்கமுடியும் என்பதால், கடந்த மூன்று மாநாடுகளில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்.பிரகாஷ் காரத் அவர்களுக்கு பதில் தோழர்.யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சி மக்களுக்கான போராட்டங்களை மேலும் முன்னெடுத்துச்செல்லும். கட்சி இன்னும் வீறுகொண்டு எழும். அதற்காக வழிகாட்டவிருக்கும்  புதிய பொதுச்செயலாளர், புதிய  அரசியல் தலைமைக்குழு  மற்றும் புதிய மத்தியக்குழு ஆகியோர் பின்னால் நாம் அணிவகுத்து நிற்போம். ஒன்றுபடுவோம்... போராடுவோம்... வெற்றிபெறுவோம்... புதியதோர் உலகம் செய்வோம்...
              புதிதாய் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் தோழர்.சீத்தாராம் யெச்சூரி வாழ்த்தி வரவேற்போம். புரட்சிகர நல்வாழ்த்துகளை உரித்தாக்குவோம். வாழ்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி....!

செவ்வாய், 3 மார்ச், 2015

மோடியின் முகத்தில் கரியை பூசிய மாநிலங்களவை...!


                       மக்களவையில் ராட்சச பலத்தை வைத்துக்கொண்டு தன்  இஷ்டப்படி ஆட்டம் போடுகிற மோடியின் முகத்தில் மாநிலங்களவை நன்றாக கரியை பூசியிருக்கிறது. வழக்கம்போல் ஆளும்கட்சியின் தலைமை எழுதிக்கொடுத்த உரையை சென்ற மாதம் புதிய ஆண்டிற்கான நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் வாசித்துச்சென்றார். ஆனால் கருப்புப் பணத்தை மீட்கவும், உயர்மட்ட ஊழலை தடுக்கவும் மோடி தலைமையிலான அரசு தவறிவிட்ட நிலையில், குடியரசுத்தலைவர் தனது உரையில் அதைப்பற்றி குறிப்பிடவில்லை என்று கூறி, அந்த உரையின் மீதான திருத்தம் ஒன்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் தோழர்.சீத்தாராம் யெச்சூரி, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்ற மாநிலங்களவை உறுப்பினர்களான தோழர்.டி.கே.ரங்கராஜன், தோழர்.பி.ராஜீவ் ஆகியோர் மாநிலங்களவையில் தாக்கல் செய்தனர்.
                  இந்த குறிப்பிட்ட  திருத்தத்தின் மீது பிரிவு வாரி வாக்கெடுப்பு கோருவது என்று எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு முடிவெடுத்து களத்தில் இறங்கின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தம் 233-ன் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தினார். ஆனால் அந்த திருத்தத்தின் மீது வாக்கெடுப்பு கோர வேண்டாம் என்றும், அப்படி கோருவது என்பது குடியரசுத் தலைவர் உரைக்கு மரியாதையாக இருக்காது என்றும் நாடாளுமன்ற அலுவல்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு மாநிலங்களவை உறுப்பினர்களிடம் கெஞ்சியிருக்கிறார். ஆனால் குடியரசுத் தலைவர் உரை என்பது அரசின் தயாரிப்பே என்பதனால் அதில் திருத்தம் கோருவது தவறல்லவே  என்று எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வாக்கெடுப்பு நடத்தவேண்டி விடாப்பிடியாக நின்று, வாக்கெடுப்பு நடத்துவதைத் தடுக்க ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு வகையான முயற்சிகளையும்  முறியடித்து  ஒற்றுமை காத்தனர் என்று தான் சொல்லவேண்டும்.
                 பின்னர் வேறுவழியின்றி, திருத்தம் 233-ன் மீது பிரிவுவாரி வாக்கெடுப்பு நடத்த அவை தலைவர் ஹமீத் அன்சாரி ஒப்புக்கொண்டதைத் அடுத்து நடைபெற்ற பிரிவுவாரி வாக்கெடுப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுவந்த திருத்தத்திற்கு ஆதரவாக 118 வாக்குகளும், எதிராக 57 வாக்குகளும் பதிவாகி தீர்மானம் வெற்றி பெற்றது. மாநிலங்களவையின் இந்த சம்பவம் மோடியையும், அவரது கட்சினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது என்பது தான் உண்மை. உலக அரங்கில் தன்னை மாபெரும் தலைவராக காட்டிக்கொள்ளும் மோடிக்கு இது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

சனி, 28 பிப்ரவரி, 2015

சிறுபான்மையினருக்கு எதிராக விஷம் கக்குவதா...? - சீத்தாராம் யெச்சூரி, எம்.பி.,

                      நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக்குழுத்தலைவர் தோழர்.சீத்தாராம் யெச்சூரி,எம்.பி., பேசியது வருமாறு :-                                    

               நிலம் கையகப்படுத்தல் சட்ட முன்வடிவு தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு ஆழமாகப் பரிசீலித்து எண்ணற்ற பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன் தலைவராக இருந்தவர் தான் இப்போது மக்களவைத் தலைவராக இருக்கிறார். நிலம் கையகப்படுத்தல் சட்ட முன்வடிவில் ''உள் கட்டமைப்பு திட்டங்கள்'' என்பதன்கீழ் எவையெல்லாம் வருகின்றன. மின்சார உற்பத்தி நிலையங்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், சாலைகள், நெடுஞ்சாலைகள், தண்ணீர் விநியோகம் மற்றும் இதர திட்டங்கள் என்று அரசாங்கம் அறிவிக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது. இவ்வாறு எதை வேண்டுமானாலும் அரசாங்கம் ''உள் கட்டமைப்பு திட்டத்தின்'' கீழ் வகைப்படுத்தி அதற்காக நிலத்தை எடுத்துக் கொள்ளலாம் என்கிற விதத்தில் இது அரசாங்கத்திற்கு வழிவகை செய்து தருகிறது. எனவே இந்தப் பிரிவை நீக்கிட வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தது. இப்போது ஆட்சியிலிருப்பவர்களின் தலைமையில் அமைந்த நாடாளுமன்றக்குழு தான் அறிவித்தது. அப்போது அவ்வாறு செய்தவர்கள் இப்போது அதே சட்ட முன்வடிவை தாக்கல் செய்திருக்கிறார்கள். இச்சட்டமுன்வடிவின் மீது நாங்கள் சில திருத்தங்களை முன்மொழிந்தோம். நாங்கள் கொண்டுவந்த திருத்தங்களை அப்போது அவர்களும் (பாஜக) ஆதரித்தார்கள். இதுவே நாங்கள் இந்த அரசின்மீது வைக்கும் குற்றச்சாட்டாகும். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போது நாங்கள் சொல்லும் திருத்தங்களையெல்லாம் ஆதரித்தீர்கள்.
             ஆனால் இப்போது ஆளும்கட்சி வரிசைக்கு சென்றபின் எதிர்க்கிறீர்கள். இந்தச் சட்டமுன்வடிவானது மக்கள் விரோத, பொருளாதார விரோத, நாட்டிற்கு எதிரான ஒன்று.. எனவே இதனைத் தொடர்ந்து நாங்கள் எதிர்ப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய சட்டங்கள் எதற்கும் விதிவிலக்கு அளிக்கக்கூடாது என்று பரிந்துரைத்திருந்தது. இப்போது 13 சட்டங்களுக்கு விதிவிலக்கு கொடுத்து பட்டியலிட்டிருக்கிறது. இவ்வாறு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கும் அம்சங்களில் தனியார் கல்விநிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளையும் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
             அடுத்து, கடந்த ஒன்பது மாத கால ஆட்சியில் ஊழல்கள் எதுவும் இல்லை என்று அவைத் தலைவர் கூறியிருக்கிறார். ஐமுகூ-1 ஆட்சிக்காலத்தின் போது கூட ஊழல்கள் எதுவும் இல்லை. பியூஸ் கோயல், மின்சாரத்துறை இணை அமைச்சர் : எப்போதும் ஊழல்கள் இருந்து வந்திருக்கின்றன. ஐமுகூ-2 காலத்தில் அவை வெளியே வந்தன. சீத்தாராம் யெச்சூரி: மாண்புமிகு அமைச்சரின் கருத்தோடு ஒத்துப்போகிறேன்.
            ஐமுகூ-1 ஆட்சிக்காலத்தில் இந்த ஊழல்கள் அனைத்தும் உருவாயின. ஆனால் அவை ஐமுகூ-2 ஆட்சிக்காலத்தின்போது வெளிச்சத்திற்கு வந்தன. இப்போது, இவர்களின் ஒன்பது மாத கால ஆட்சியில் உருவாகும் ஊழல்கள், பின்னர் தெரிய வரும். ஒவ்வோராண்டும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாம் உரையாற்றுகிறோம். பொதுவாக குடியரசுத் தலைவர் உரையில் அரசாங்கம் சென்ற ஆண்டு என்ன செய்தது என்பதும், அடுத்த ஆண்டு என்ன செய்ய இருக்கிறது என்பதும் இருக்கும். இப்போது ஒரு விநோதமான சூழ்நிலையைப் பெற்றிருக்கிறோம். சென்ற ஆண்டு குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை, இப்போது ஆற்றிய உரையில் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் அவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார். பல திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
             நேரு - காந்தி குடும்பத்தின் பெயரில் முன்பிருந்தன. இப்போது அவற்றை ஷ்யாமா பிரசாத் முகர்ஜிக்கள், தீன் தயாள் உபாத்யாய்கள் என்று மாற்றி இருக்கிறீர்கள். இத்திட்டங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு கிடைத்திருப்பது என்ன? அவைத்தலைவர் ஒரு தடவை மார்கரெட் தாச்சர் கூறியதை மேற்கோள் காட்டினார். அவர் மேற்கோள்மட்டும் காட்டவில்லை, உண்மையில் அதனை நடைமுறைப்படுத்திக் கொண்டுமிருக்கிறார்.
           “அரசாங்கத்தின் வேலை வர்த்தகம் செய்வது இல்லை’’ என்று மார்கரெட் தாச்சர் கூறினார். ஆனால், நீங்கள் வர்த்தக நிறுவனங்களுக்கு எல்லாம் விதிவிலக்கு கொடுத்திருக்கிறீர்களே, ஏன்?  “அரசாங்கத்தின் வேலை வர்த்தகம் செய்வது கிடையாது.’’ வர்த்தகம் மேற்கொள்வதை வர்த்தகர்கள் பார்த்துக்கொள்ளட்டும். நீங்கள் அதனைச் செய்ய வேண்டாம். அவர்களுக்காக நீங்கள் ஏன் இவ்வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்? உண்மையில் அவர்களின் (கார்ப்பரேட்டுகளின்) நலன்களை நீங்கள் மேம்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. எனவேதான் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் விதிவிலக்கு அளித்திருக்கிறீர்கள். இது நாட்டு மக்களுக்கு எவ்விதத்திலும் பயனளிக்கப்போவதில்லை. அடுத்து, குடியரசுத் தலைவர் உரையின் முதல் 25 பத்திகள், இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியம் பற்றி பேசுகிறது. நீங்கள் குறிப்பிடும் மக்கள் யார்?
            ஷ்யாமா பிரசாத் முகர்ஜி மற்றும் தீன் தயாள்உபாத்யாயா ஆகியோர் குறித்துக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், நாம் பெற்ற வளம் நிறைந்த வரலாற்றுப் பாரம்பரியம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. நம் நாட்டில் கவுதம புத்தர், மகாவீர் ஜெயின் ஆகியோரிடமிருந்து நாம் பெற்ற வளமான வரலாற்றுப் பாரம்பர்யம் குறித்தோ, உபநிஷத்துகள் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் காணப்படும் புண்ணியத் தலங்கள் குறித்தோ எதுவும் இல்லை. இந்த அரசு மக்களுக்குச் சொல்லும் நிகழ்ச்சி நிரல் ஒன்று.
                ஆனால், அது பின்பற்றும் உண்மையான நிகழ்ச்சி நிரல் வேறு. இந்த அரசு பின்பற்றும் உண்மையான நிகழ்ச்சி நிரல் என்ன? ஜிகாத் காதல், வீட்டுக்குத் திரும்புவோம்  மற்றும் அது தொடர்பான அறிக்கைகள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. தொடர்ந்து வெளியிடப்பட்டும் வருகின்றன. இந்து நாகரிகத்தைப் புகழ வேண்டும், இந்துக்கள் மட்டுமே இந்த நாட்டின் முன்னோர்கள், அவர்கள் மட்டுமே இந்த நாட்டின் வாரிசுகள் என்ற விதத்தில் அந்தப் பிரச்சாரங்கள் அமைந்துள்ளன. உண்மைக்கும் இதற்கும் வெகுதூரமாகும். இது குறித்து இந்த அவையில் முன்பும் கூறியிருக்கிறேன். இவ்வாறான கிட்டப்பார்வையுடன் விஷயங்களை அணுகினோமானால், இப்போதுள்ள இந்தியா, தொடர்ந்து நீடித்திருக்க முடியாது. நாம் நம் பிரதமரிடம் சென்ற கூட்டத் தொடரின்போது என்ன கேட்டோம்? நம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், இந்திய தண்டனைச் சட்டத்தின் குற்றப்பிரிவுகளை ஈர்க்கும் விதத்திலும் பேசி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். எந்த உறுதிமொழியும் அவரால் கொடுக்கப்படவில்லை. பிரதமர் ஒரு கிறித்துவக் குழுவினரின் விழா ஒன்றுக்குச் சென்றிருந்தபோது அங்கே சகிப்புத்தன்மை குறித்து போதனைகள் செய்துள்ளார். நல்லது. ஆனால் நம் அரசமைப்புச்சட்டமானது மக்களுக்கு வாக்குறுதிகளை மட்டுமல்ல, சமத்துவத்தையும் உத்தரவாதப்படுத்தி இருக்கிறது. இந்துக்கள் அல்லாதவர்கள் நாட்டில் இந்துக்களுக்குச் சமமாகக் கருதப்படுவார்கள் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதுதான் அவர்களின் உண்மையான நிகழ்ச்சிநிரல். நிச்சயமாக இத்தகைய நிகழ்ச்சி நிரல் நாட்டின் எதிர்கால நலன்களுக்கோ, நம் புகழுக்கோ ஏற்றதல்ல.  இவ்வாறு நம் நாட்டில் பல்வேறு மதத்தினருக்கிடையேயும் இருந்துவந்த சமரசப் பண்பை மறுதலிக்கும் விதத்தில் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது மிகவும் மோசமான விஷயமாகும். 
              நோபல்பரிசு வாங்கிய அமர்த்தியாசென் மீது அவதூறை அள்ளி வீசியது போன்று, பாரத ரத்னா மற்றும் நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா மீது அவதூறை அள்ளி வீசியிருப்பது போன்று மிகவும் மோசமான விஷயங்கள் நம் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய மோசமான கருத்துக்கள் நம் ஜனநாயகத்திற்கே குந்தகம் விளைவிக்கக் கூடியவைகளாகும். இந்த அரசு, நம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் துரதிருஷ்டவச மான நிலையை மிகவும் வேதனையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்துக்கள் மட்டுமே இந்த நாட்டின் முன்னோர்கள் என்று பேசுபவர்கள் இன்றைய தினம் நாடு முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் இயக்கததின் தலைவர் அன்னை தெரசா குறித்து என்ன கூறியிருக்கிறார்? “அன்னை தெரசாவின் பணி உள்நோக்கம் கொண்டது. கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்ற வேண்டுமென்கிற ரகசிய நோக்கம் அதில் இருந்தது’’ என்கிறார். வேறொரு தருணத்தில் அவர் கூறுகிறார்: “இந்துஸ்தான் என்பது இந்து ராஷ்ட்ரம். இதுதான் உண்மை. இந்த சிந்தனையுடன் நாம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம். இந்த தேசத்தை மாபெரும் தேசமாக மாற்றிட அனைத்து இந்துக்களும் அணிதிரள வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். நீங்கள் விரும்பினால் அனைத்து இந்துக்களையும் அணிதிரட்டுங்கள். பிறப்பால் நானும் ஒரு இந்து தான். ஆனால் ஒரு நாத்திகனாக, ஒரு கம்யூனிஸ்ட்டாக மாறி இருக்கிறேன். உங்கள் சிந்தனையோட்டத்தின்படி “யார் இந்து?’’ துணைத் தலைவர் : இந்து மதத்தில் நாத்திகத்திற்கும் இடம் உண்டு. சீத்தாராம் யெச்சூரி : காலம் காலமாய் இவ்வாறு இருந்து வந்திருக்கிறது.
          ஆர்எஸ்எஸ் தலைவர் மேலும், “சங் பரிவாரத்திற்கு இது சாதகமான நேரம்’’ என்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு இன்று நடைபெறுவது என்னவென்றால், மக்கள் மத்தியில் தெளிவாய்த் தெரியக்கூடிய விதத்தில் வெளியே கூறப்படாத நிகழ்ச்சிநிரல் ஒன்று இவர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இன்றைய ஆட்சியாளர்களின் அரசியல் குறிக்கோள் என்ன? முன்பே இவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, “அரசாங்கம் 10 ஜன்பத்திலிருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது’’ என்று கூறிக்கொண்டிருந்தார்கள். இன்றைய நிலைமை என்ன? பாஜகவின் முன்னாள் தலைவர், தற்போது உள்துறை அமைச்சராக இருப்பவர், என்ன சொல்கிறார். ரிமோட் கண்ட்ரோல் என்கிற பேச்சுக்கே இடமில்லை. நாங்களும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் ஒன்றுதான். இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைப் பண்புக்கான உச்சி மாநாட்டில் அவர் என்ன கூறினார்?
           “ஆர்எஸ்எஸ் வெளிசக்தி அல்ல. நாங்கள் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள்தான். நான் ஆர்எஸ்எஸ்-இலிருந்து வந்திருக்கிறேன். பிரதமரும் ஓர் ஆர்எஸ்எஸ் தொண்டர்தான். நாங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களாக இருக்கிறோம். நாங்கள் இறக்கும்வரை அதில் நீடிப்போம்.’’ இவ்வாறு, இது ஓர் ஆர்எஸ்எஸ் அரசாங்கம் என்பது தெள்ளத்தெளிவான ஒன்று. நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருப்பது என்ன? மிகவும் மட்டரகமான வாக்கு வங்கி அரசியல் நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எப்படி? சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பைப் பரப்புவதன்மூலம் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்று. சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பைப் பரப்புவதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் மட்டுமல்ல, நம் நண்பர், பராக் ஒபாமாவும், இதுகுறித்துக் கூறியதைக் கேட்டோம். துணைத்தலைவர் : அவர் உங்கள் நண்பரா? சீத்தாராம் யெச்சூரி : இல்லை, அவர் நம் நண்பர், பிரதமரின் நண்பர். பராக் ஒபாமா இதுகுறித்து இரு தடவை குறிப்பிட்டிருக்கிறார். அவர் இந்தியாவிலிருந்து சென்ற பின் வெள்ளை மாளிகையிலிருந்துகூட இது குறித்து அறிக்கை வெளியானது. எனவே, இதனை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். உலகம் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்தியமக்கள் துன்பத்திற்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்கள் இன்றைய தினம் பின்பற்றிவரும் அவர்களின் உண்மையான நிகழ்ச்சிநிரலைப் பின்பற்றிவருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் பின்பற்றி வரும் நிகழ்ச்சிநிரல் நாட்டின் நலன்களுக்கு உதவாது. 
 
புதுடெல்லியிலிருந்து : தோழர். Sanmuga Veeramani

ஞாயிறு, 18 மே, 2014

காங்கிரஸ் கட்சி மீதான வெறுப்பு : பாஜக அறுவடை

 கட்டுரையாளர் : தோழர். சீத்தாராம் யெச்சூரி, எம்.பி.,                             
                                 அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்,                    
                                 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                                          
              16வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து இறுதியாகத் தேர்தல் ஆணையம் தன் அறிக்கையை தாக்கல் செய்த பின்னர், அனைத்துப் பெரிய அரசியல் கட்சிகளும் தங்கள் ஆய்வினையும் மதிப்பீடுகளையும் முடிவு செய்யும். தேர்தல் முடிவுகள் குறித்து பூர்வாங்கமான ஆய்வினை மேற்கொள்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு மே 18 அன்று கூடுகிறது. அதனைத் தொடர்ந்து மத்தியக்குழு ஜூன் 7, 8 தேதிகளில் கூடுகிறது. அப்போது சம்பந்தப்பட்ட மாநிலக் குழுக்களும் தங்கள் மாநிலம் குறித்த பூர்வாங்க ஆய்வுகளை அளித்திடும். 1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனுதாப அலை வீசியதை அடுத்து அன்றைக்கு 542 மக்களவை இடங்களில் 405 இடங்களைப் பெற்று ராஜீவ் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. 
             அதன்பின்னர் முப்பது ஆண்டுகளுக்குப்பின்னர் முதன்முறையாக பாஜக மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக முன்னேறியிருக்கிறது. பாஜக தன்னுடன் பயணம் செய்த தேஜ கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளைத் தூக்கிஎறிந்துவிட்டு தனியாகவே ஆட்சி அமைக்கும் நிலையினைப் பெற்றிருக் கிறது.தேர்தல் பிரச்சாரத்தின்போதே, நாளும் தங்கள் மீது ஏவப்படும் தாக்குதல் களிலிருந்து நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்தில் ஓர் அரசாங்கம் முன்வராதா என்று மக்கள் ஏங்கத் துவங்கியிருந்ததைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
               காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கம், அதிலும் குறிப்பாக கடைசி ஈராண்டு காலத்தில், மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விலைவாசி உயர் வாலும், பொருளாதார மந்தத்தாலும் அதனைத் தொடர்ந்து உருவான வேலையில்லாத் திண்டாட்டத்தாலும் பொருளாதாரச் சுமைகளை ஏற்றியது மட்டுமல்லாமல், நாட்டின் செல்வாதாரங் களையும் மிகப்பெரிய ஊழல்கள் மூலமாக கொள்ளையடித்தனர். இவற்றின் விளைவாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட விரக்தியை பாஜக தேர்தல் வெற்றிக்கு மிகவும் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டது. இந்தப் பின்னணியில், பாஜக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பண பலத்துடனும், ஊடகங்களின் மூலமாகவும் தனக்குச் சாதகமாக மிகவும் வலுவான பிரச்சாரத்தை மேற்கொண்டது. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை மிகவும் வெற்றிகரமான முறையில் சித்தரித்ததுடன், இந்துத்துவா நிகழ்ச்சி நிரலையும் `வளர்ச்சி’ மற்றும் `நல்லதோர் அரசாங்கம்’ ஆகியவற்றிற்கான உறுதி மொழிகளையும் மிகவும் சாமர்த்தியமாக இணைத்து தேர்தல் பிரச்சாரத்தை பாஜக மேற்கொண்டது.
            முதலாவதாக, 2002இல் குஜராத்தில் முஸ்லிம்கள் மீது இனப்படுகொலைகள் நடைபெற்றதைத் தொடர்ந்தே, நரேந்திர மோடி, இந்துத்துவா மதவெறியை முன் னெடுத்துச் செல்வதற்கு, சரியானதொரு நபராக ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரத்தால் முன்னிறுத்தப்பட்டு வந்தார். எனவேதான், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரம் எதிர்காலத்தின் பிரதமராக அவரை முன்னிறுத்துவதே போதுமானது என்றும், வேறு எவ்விதமான பிரச்சாரமும் தேவையில்லை என்றும் கருதின. பாஜக பிரச்சாரத்தின் வலுவான அடிநாதமாக இது தொடர்ந்தது.இரண்டாவதாக, பெரும்பான்மை யைப் பெறுவதற்கு இந்துத்துவாவை முன்னிறுத்தினால் மட்டும் போதாது என்கிற கடந்த கால அனுபவம் அவர் களை எச்சரித்தது. எனவேதான் இம்முறை, நரேந்திர மோடி பிரதமரானால் மட்டுமே, இந்தியா முழுமையும் குஜராத் போல வளர்ச்சியடையும் என்று பாஜக சரடு விட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது.
குஜராத், பாலும் தேனும் ஆறாக ஓடும் மாநிலமாக சித்தரிக்கப்பட்டது. `வாஷிங்டன் போஸ்ட்’ செய்தியாளர்ராம லக்ஷ்மி, “மோடி புராணத்தை உருவாக்குதல்’’ என்னும் தன்னுடைய செய்திக்கட்டுரையில் சுட்டிக்காட்டி யிருப்பதைப்போல, பாஜகவின் பிரச்சார மேலாளர்கள், அயோத்தியை யும், ராமரையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு, மிகவும் புத்தி சாலித்தனத்துடன் குஜராத்தையும் அதன் தற்போதைய கடவுளான மோடியையும் சுற்றி இந்தி யர்களைத் திரட்டியிருக்கிறார்கள். நாட்டு மக்களின் மனதில் குஜராத், “பாலும் தேனும் ஆறாக ஓடும் மாநிலமாகவும், இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கமாகவும், அங்கே உள்ள அனைவரும் வேலை பார்ப்பது போலவும், அனைவருக்கும் எப்போதும் மின்சாரம் உண்டு என்பது போலவும், விவசாயிகள் பேரானந்தத்துடன் வாழ்வது போலவும், அங்கேயுள்ள நெடுஞ்சாலைகள் உலகிலேயே சிறந்தவை போலவும், ஊழல் நோய் அண்டாத மாநிலம் போலவும்’’ கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
          மறுபக்கத்தில், காங்கிரஸ் தரப்பில் நடைபெற்ற பிரச்சாரம் முற்றிலுமாக வலுவிழந்த நிலையில் அமைந்திருந்தது. இவ்வாறு மோடி குறித்து எழுப்பப்பட்ட அண்டப்புளுகுகளை, ஆகாசப் புளுகுகளை உடைத்தெறியக்கூடிய விதத்தில்வலுவான முறையில் அமையாதிருந்தது.  குஜராத் வளர்ச்சி மாடல் தொடர்பான உண்மையான புள்ளிவிவரங்களை அது அடுக்க முயன்ற போதிலும், காங்கிரசின் கடந்த கால நடவடிக்கைகளால் வெறுப் படைந்திருந்த மக்கள் அக்கட்சி கூறுவதை நம்பத் தயாராக இல்லை. ஐமுகூ அரசாங்கம் மக்கள் மீது வறுமையை யும் பொருளாதாரச் சுமைகளையும் திணிக்கும் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கியபோதே, காங்கிரசின் தோல்வி தொடங்கிவிட்டது. மேலும், காங்கிரஸ் தலைமை, தன் ஆட்சிக்காலத்தில் தான் மக்களுக்கு அளித்த அரசியலமைப்புச் சட்ட உரிமைகளை - கல்விபெறும் உரிமை, தகவல் பெறும் உரிமை, பழங்குடியினருக்கு வன நிலங்கள் மற்றும் வன உற்பத்தியில் அளித்த உரிமை, கிராமப்புற வேலைவாய்ப்பு உரிமை, முதலானவற்றைக் கூட - (இவற்றில் எவ்வளவோ குறைபாடுகள் இருந்தபோதிலும்கூட) மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவும், இவ்வாறு எடுத்துச் சொல்வதன் மூலம் தன் ஊழியர்களுக்கு உற்சாகமூட்டவும்கூடத் தவறிவிட்டது.
          மேலே குறிப்பிட்டிருக்கும் அனைத்து நடவடிக்கைகளுமே, இடதுசாரிகளின் செல்வாக்கின்கீழ் ஐமுகூ-1 அரசாங்கம் இருந்தபோது தொடங்கப்பட்டவைகளாகும். இவை ஐமுகூ-2 அரசாங்கத்தின் காலத்தில் அமல்படுத்தப்பட்டது. இவற்றைஅமல்படுத்தியதன் மூலம் இடதுசாரி களுக்கு ஒரு கவுரவத்தை கொடுக்க காங்கிரஸ் விரும்பாதிருந்த போதிலும், தனக்காகவாவது இவற்றை அக் கட்சி பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும்.இவ்வாறு அக்கட்சி கூற முன்வராத திலிருந்தே இவற்றை அது இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாகத்தான் மேற்கொண்டது என்பது மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந் நடவடிக்கைகளின் மீது அதற்கிருந்த நேர்மையின்மைதான் இதற்குக் காரணமாகும். இத்துடன் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அது பின்பற்றியதிலிருந்த வெறியுடன் மெகா ஊழல்களும் இணைந்ததும்தான் பாஜக பிரச்சாரத்தை எதிர்ப்பதற்குத் திராணியற்ற நிலைக்கு அதனைத் தள்ளிவிட்டது. ஆயினும், இத்தேர்தல்கள், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து ஆழமான பரிசீலனை மேற்கொள்வதற்காக சில முக்கிய பிரச்சனைகளையும் முன்னுக்குக் கொண்டு வந்துள்ளன.
          தேர்தலில் பண பலம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இருந்துள்ளது. பாஜக பிரச்சாரத்தில் பணம் ஆறாய் ஓட அனுமதிக்கப்பட்டது. மறுபக்கத்தில், இவ்வாறு பணம், வாக்காளர் களுக்குக் விலைக்கு வாங்கக்கூடிய விதத்தில் பல்வேறு இழிவழிகளிலும் பயன்படுத்தப்பட்டது. வாக்காளர்களுக்குப் பணம் தரும் பழக்கத்தைப் பல கட்சிகளும் நடைமுறைப்படுத்தியுள்ளன. தேர்தல் ஆணையம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பணத்தை பறிமுதல் செய்துள்ளது. பணம் மட்டுமல்ல, மது மற்றும் பல்வேறுவிதமான இலவசப் பொருள்களையும் பறிமுதல் செய்துள்ளது.
             கூடுதலாக, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தங்கள் கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் உயிருடன் இருக்க முடியாது என்பது போன்ற பயங்கரவாத மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களும் நடைபெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து மிக விரிவான அளவில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி மோசடியாக வாக்களித்தல் மற்றும் இடதுசாரிகள் மீது வன்முறையைக் கட்ட விழ்த்து விட்டிருப்பதன் மூலம், இடது சாரிக் கட்சிகளின் மக்கள் செல்வாக்கை உண்மையாகப் பிரதிபலிக்க முடியாத அளவிற்கு தேர்தல் முடிவுகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன.
              தேர்தல் ஆணையத்திற்கு எண்ணற்ற முறையீடுகள் அளிக்கப்பட்டபோதிலும், இவற்றைச் சரிசெய்திட அதனால் முடியவில்லை என்பது துரதிர்ஷ்டமாகும். கடும் விலைவாசி உயர்வாலும், மெகா ஊழல்களாலும் மக்கள் மிகப்பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், இடதுசாரிக் கட்சிகளால் அவற்றைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற முடிய வில்லை. இடதுசாரிகள் தங்கள் நிலையை திரிபுராவில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்துடன், நிலை நிறுத்திக்கொண்டுள்ள அதே சமயத்தில், கேரளாவிலும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ள அதே சமயத்தில், இத்தேர்தல் முடிவுகள் பலவீனங்களை அடையாளம் கண்டு, அவற்றை சரிப் படுத்துவதற்கான தேவையையும் உணர்ந்துள்ளன.முறையான தேர்தல் சீர்திருத்தங்கள் மூலமாக இத்தகு சிதைவுகளை ஆழமான முறையில் சரிசெய்ய வேண்டியது நாட்டின்முன் எழுந்துள்ள அவசர மற்றும் அவசியத் தேவையாகும்.
           எடுத்துக்காட்டாக, அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி உதவி அளித்தல், அரசியல் கட்சிகள் செலவினங்களுக்குக் கட்டுப்பாடுகள் கொண்டுவருதல் (தற்சமயம் வேட்பாளர்களுக்கு மட்டுமே அத்தகைய கட்டுப்பாடுகள் உள்ளன) போன்ற பிரச்சனைகள் ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவைகளாகும். நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடை கொடுப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று ஒளிவுமறைவின்றி அறிவித்திருக்கிற ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான்.
             மாறாக,கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய ஜனநாயக நடைமுறைக்கு நிதி அளித்திடலாம் என்றும், ஆயினும் அத்தகைய நிதிதேர்தல் ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் ஓர் அமைப்பிற்கோ அல்லது அரசால் அமைக்கப்படும் ஒரு நிறுவனத்துக்கோ தான் செல்ல வேண்டும் என்றும், அந்த அமைப்பு தேர்தலை நடத்திட செலவு செய்திட வேண்டும் என்றும் கூறுகிறோம். மேற்கத்திய நாடுகள் பலவற்றின் நடைமுறை இதுதான். முக்கியமாக, நம்முடைய தேர்தல் நடைமுறையில் ஒரு பகுதி விகிதாச்சார பிரதிநிதித்துவம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே வாதிட்டுக் கொண்டிருக்கிறது.தற்சமயம் பாஜக பெற்றிருக்கும் மிகப் பெரிய வெற்றிக்குப்பின்பும் கூட, அது பெற்றுள்ள வாக்கு சதவீதம் என்பது 50 சதவீதத்திற்கும் மிகவும் குறைவுதான். இதன் பொருள், நாட்டு மக்களில் பாஜக விற்கு எதிராக வாக்களித்தவர்கள் அதிகம்என்பதேயாகும். போட்டியிடும் வேட் பாளர்களில் அதிக வாக்குகளைப் பெற் றவர் வென்றவராகக் கருதப்படுவார் என்கிற தற்போது நம்முடைய தேர்தல் நடை முறையில் உள்ள முரண்பாடு அல்லது குறைபாடு இது.
       பக்குவப்பட்ட பல ஜனநாயக நாடுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர்கள் மட்டுமே ஆட்சிக்கு வரமுடியும். ஒருபகுதி விகிதாச்சார பிரதிநிதித்துவ அமைப்பு முறை கொண்டுவரப்பட்டால் தற்போது மிகவும் பூதாகரமான முறையில் அதிகரித்து, மக்களின் ஜனநாயகக் கருத்தை சிதைக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும் பணபலம் மற்றும் புஜபலத்தின் செல்வாக்கைக் குறைத்திட கணிசமான அளவிற்கு உதவிடும். இரு மக்களவைத் தொகுதிகளை ஒன்றாக இணைத்து, ஒவ்வொரு வாக்காளருக்கும் இரு வாக்குகள் கொடுத்து, ஒரு வாக்கை குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கும், மற்றொரு வாக்கை அதன் கொள்கை மற்றும் திட்டத்தின் அடிப்படையில் ஓர் அரசியல் கட்சிக்கும் அளித்திடலாம். அதேபோன்று அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு முன்னுரிமைப் பட்டியலை முன்னதாகவே அளித்திடும்.
           தேசிய அளவில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கும் சதவீதத்தின் அடிப்படையில், ஒவ்வொரு கட்சிக்கும் அது முன்னதாகவே அளித்துள்ள முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் இடங்களை நிரப்பிடும். இத்தகைய பரிந்துரைகளையும், சீர்திருத்தங்களையும் ஆழமாகப் பரிசீலனை செய்வதற்கான தருணம் இப்போது வந்திருக்கிறது. மேலும், இப்போது நடைபெற்ற தேர்தல்கள் தற்போதுள்ள சட்டங்களில் உள்ள பல ஓட்டைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. எடுத்துக்காட்டாக, பல தொகுதிகளில் தேர்தல் வேலைகள் தொடங்கிய பின்னர் நரேந்திர மோடி தன் வேட்புமனுவைத் தாக்கல் செய்ததை நாடு பார்த்தது.
           பல தொகுதிகளில் தேர்தலின் முதல் கட்டம் நடைபெறத் துவங்கிய பின்னே, பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. வாரணாசியில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில், நரேந்திர மோடி குஜராத்திலிருந்து வீடியோ பேச்சு ஒன்றை வெளியிடுகிறார். அது தேசிய அளவில் ஒளிபரப்பப்பட்டது. இவ்வாறு இப்போதுள்ள சட்டங்களில் ஏராளமான ஓட்டைகள் காணப்படுகின்றன. பாஜக வெற்றி தொடர்பாக அக்கட்சி யால் அவிழ்த்து விடப்பட்ட சரடுகள் அனைத்தும் விரைவில் மாயைதான்என்பது மக்கள் மத்தியில் வெட்ட வெளிச்சமாகிவிடும். எதிர்காலத்தில் ஏராள மான சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். பாஜக விற்கு இத்தேர்தல் பிரச்சாரத்திற்காக நிதி உதவி செய்தவர்கள் அவ்வாறு செலவு செய்ததை எவ்வளவு விரைவாகத் திரும்ப எடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாகத் திரும்ப எடுப்பதில் மிகவும் குறியாக இருப்பார்கள்.
          இதன் பொருள் மக்கள் மீது மேலும் சுமைகள் ஏற்றப்படும் என்பதாகும். மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்பதை மறந்து விடுவார்கள். பாஜகவின் அடிநாதமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்துத்துவா பிரச்சாரம் நம் நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகஅடித்தளங்களுக்கே வேட்டு வைக்கக்கூடியவைகளாகும். இவை இரண்டையும் எப்படி வலுவாக எதிர்கொள்ளப் போகிறோம் என்பதைப் பொறுத்தே நாட்டின், நாட்டு மக்களின் எதிர்காலம் அமையவிருக்கிறது.
         ஒரு பக்கத்தில், சமூக நல்லிணக்கம், நாட்டின் ஒற்றுமை, நாட்டு மக்களின் ஒற்றுமை மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயகஅடித்தளங்களை பாதுகாக்கக்கூடிய விதத்தில் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றிடவும், மறுபக்கத்தில் மக்கள்விரோத பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பதுடன் நம் நாட்டிற்குத் தேவையான மாற்று மக்கள் ஆதரவு கொள்கைதிசைவழிக்கான போராட்டத்தை நடத்திடவும் இவ்வாறு இவ்விரண்டு திசைகளி லும் வெகுஜன போராட்டங்களை வலுப் படுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபூண்டிருக்கிறது.இத்தேர்தல்களுக்குப்பின்னர், இடது சாரிகள் வலுவாகவுள்ள இடங்களில் நம்மீது ஏவப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் எதிர்ப்புத் தாக்குதல்களை உறுதியுடன் எதிர்த்து முறியடித்திடும் அதேசமயத்தில், இவ்விரு திசைவழிகளிலும் மிகப் பிரம்மாண்டமான முறையில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும். உறுதி மேற்கொள்வோம்

பீப்பிள்ஸ் டெமாக்ரசி-தமிழில் : ச.வீரமணி         

புதன், 1 ஜனவரி, 2014

ஏகாதிபத்திய எதிர்ப்பு மேலும் வலுப்படவேண்டும்...!

 கட்டுரையாளர் : தோழர். சீத்தாராம் யெச்சூரி     
                                தலைமைக் குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                   
        முதலாளித்துவப் பொருளாதாரம், 2008ல் உலகப் பொருளாதாரத்தைப் பீடித்த நெருக்கடியிலிருந்து மீண்டுவிட பகீரதப்பிரயத்தனம் செய்தபோதிலும், அது தன்னுடைய நெருக்கடியிலிருந்து மீளமுடியாமல் 2013லும் தொடர்ந்து தள்ளாடிக்கொண்டும், தடுமாறிக்கொண்டும் தான் இருந்தது. சோசலிச சீனத்தைத் தவிர, இந்தியா உட்பட பொருளாதார ரீதியாக வளர்ந்து வந்த மற்ற அனைத்து நாடுகளும் 2008-ல் நெருக்கடிக்குத் தாக்குப்பிடித்த போதிலும், பின்னர் தொடர்ந்து அதனைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தள்ளாடத் தொடங்கிவிட்டன. உலகப் பொருளாதார நெருக்கடி 2013-ல் ஐந்தாவது கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது.
               இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அது மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் புதிய நெருக்கடிக்கான விதைகளையே விதைத்துள்ளது. எவ்விதக் கட்டுப்பாடுமில்லாது இருந்து வந்த ஏகாதிபத்திய உலக மயம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குஉலகில் சமத்துவமின்மையை உருவாக்கியதாலும், உலகில் பெரும்பான்மையான மக்களின் வாங்கும் சக்தியையும் வீழ்ச்சியுற வைத்ததாலும், பொருளாதார வளர்ச்சியில் நெருக்கடி யை ஏற்படுத்தியது. இதிலிருந்து எப்படியாவது மீள வேண்டும் என்பதற்காக அது “மலிவான’’ அல்லது “எளிய’’ தவணைகளில் கடன்களை அளித்தது. இது உலகில் உற்பத்தி வளர்ச்சிக்குப் பாய்ச்சலை ஏற்படுத்தும் என்றும், அதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த தேவைகளையும் தாங்கிப் பிடித்திடலாம் என்றும் முதலாளித்துவம் நம்பியது. ஆனால் கடன் வாங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் கடனைத் திருப்பிக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டதால், 2008 பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்து பல பன்னாட்டு நிதிநிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்பட்டது. இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக முதலாளித்துவ நாடுகளில் ஆட்சி புரிந்த அரசுகள் முதலாளிகளுக்கு முழுமையான அளவில் நிதியை வாரி வழங்கின. அவ்வாறு செய்ததன் மூலம் கார்ப்பரேட்டுகளின் திவால் நிலைமைகள் அரசின் திவால் நிலைமைகளாக மாறின.
                 இதனை அடுத்து, அரசாங்கங்கள் தங்கள் திவால்தன்மையைச் சரிக்கட்டுவதற்காக, தாங்கள் சமூகநலத்திட்டங்களுக்காக ஒதுக்கி வைத்த தொகைகளையும், தொழிலாளர்களின் ஊதியங்களையும் வெட்டிக் குறைத்தன, புதிதாக எவரையும் வேலைக்கு எடுக்கவில்லை, ஊழியர்களின் வேலை நேரங்களையும் அதிகரித்தன. ஓய்வூதியம் மற்றும் இதர உதவித் திட்டங்களையும் தயவு தாட்சண்யமின்றி வெட்டியுள்ளன. இவ்வாறு இவை மேற்கொண்ட நடவடிக்கைகள் உலகப் பொருளாதார நெருக்கடியில் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது இவற்றின் விளைவாக மக்களின் வாங்கும் சக்தி மிகவும் குறுகியதால், அது பொருளாதார நிலைமை மேலும் சுருங்குவதற்கு இட்டுச் சென்றுள்ளது. நாம் 2014-ல் அடி எடுத்து வைக்கக்கூடிய இன்றைய நிலையில், உலகப் பொருளாதாரம் இந்நெருக்கடி வலைக்குள் சுற்றி வளைக்கப்பட்டு மேலும் ஆழமாகச் சிக்கும் நிலைக்கு அநேகமாகத் தள்ளப்படலாம். முதலாளித்துவ அமைப்புக் குள்ளேயே மேற்கொள்ளப்படும் எந்தவித சீர்திருத்தமும் மக்களுக்கு நிவாரணத்தை வழங்கிட முடியாது என்பதை இது மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறது. முதலாளித்துவத்திற்கு அரசியல் மாற்றாக விளங்கக் கூடியமாற்று சமூக - பொருளாதார அமைப்பு முறை தான் இந்நெருக்கடியிலிருந்து மக்களைக் காப்பாற்றி அவர்களுக்கு நிவாரணத்தை அளித்திட முடியும்.
                எனவே 2014ஆம் ஆண்டில் உலகின் பல நாடுகளில் மக்கள் தங்கள் சமூக மாற்றத்திற்கான போராட்டங்களை வலுவாக முன்னெடுத்துச் செல்வார்கள் என்பது திண்ணம். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக இவ்வாறு மக்கள் உலகம் முழுதும் சக்தி மிக்க போராட்டங்களை நடத்தினார்கள். குறிப்பாக, ஐரோப்பிய நாட்டு மக்கள், அதிலும் குறிப்பாக கிரீஸ், போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி நாட்டு மக்கள் வீரம் செறிந்த போராட்டங்கள் பலவற்றை நடத்தியதைப் பார்த்தோம். மக்கள் மத்தியில் இவ்வாறு கோபாவேசம் மிகவும் ஆக்ரோஷமாக வளர்ந்தோங்கி இருந்ததன் காரணமாக, அந்நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஆளும் அரசாங்கங்கள் பல மண்ணைக் கவ்வின. இவ்வாறு மக்கள் மத்தியில் கோபம் இருந்த போதிலும், உலகம் முழுதும் அரசியலில் வலதுசாரிப்பக்கம் சாய்மானம் நிகழ்ந்திருப்பதும் நடந்திருக்கிறது. எனினும், அதே சமயத்தில் ஜப்பான், போர்ச்சுக்கல், செக் குடியரசு, சிலி போன்ற நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதாயம் அடைந்துள்ளதையும் பார்க்க முடிகிறது.
                 ஏகாதிபத்தியம் தனக்கேற்பட்ட நெருக்கடியின் சுமைகளை மூன்றாம் உலக நாடுகளின் மீது ஏற்ற மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக அந்நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களைக் கூறிடலாம். இந்நாடுகளில் அமைந்துள்ள முற்போக்கான ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நவீன தாராளமய எதிர்ப்பு அரசாங்கங்கள், இந்தியா போன்ற நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களை எவ்விதக் கூச்ச நாச்சமுமின்றித் தழுவிக் கொண்ட மூன்றாம் உலக நாடுகளைப் போல் அல்லாமல், மக்களுக்கு நிவாரணம் அளித்திட மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியமானது, வெனிசுலாவில் சாவேஸ் மரணத்திற்குப் பின் அத்துணைக்கண்டத்திலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அணுகுமுறை கைவிடப்படலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்தது. அதிலும் குறிப்பாக சாவேஸுக்குப் பின் பொறுப்புக்கு வந்த மதுரோ மார்ச்சில் நடைபெற்ற தேர்தலில் மிகக் குறுகிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியம் இதில் மிக நம்பிக்கையுடன் இருந்தது. ஆயினும், டிசம்பரில் நடைபெற்ற நகராட்சிகளுக்கான தேர்தல்களில் சாவேஸின் சோசலிஸ்ட் கட்சி மகத்தான வெற்றி பெற்று, மக்கள் தொடர்ந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் மனோபாவத்துடனேயே இருப்பதை உறுதிப்படுத்தினார்கள். முதலாளித்துவத்திற்கு மாற்று நவீன தாராளமயம் அல்ல, மாறாக சோசலிசம்தான் என்பதை உலகுக்குப் பறைசாற்றும் வண்ணம், இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெற்று வரும் முற்போக்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன.
.               இவ்வாறு, நவீன தாராளமய ஏகாதிபத்தியம் விளைவித்துள்ள துன்ப துயரங்களுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கும் மாமருந்தாக, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் முற்போக்கு நடவடிக்கைகளில் 2014-ஆம் ஆண்டு திகழும் என்பதும் திண்ணம். இத்தகைய சூழ்நிலைகளில், அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய உலகளாவிய மேலாதிக்கத்தை ஒருமுனைப்படுத்துவதற்காக, உலகைத் தன்னுடைய ஒரு துருவ உலகாக உருவாக்கிட மேற்கொண்டிடும் முயற்சிகள், அதற்கு அவ்வளவு எளிதானவைகளாக இல்லாமல் மிகவும் கடினமாகிவிட்டன. அது, இந்தத் தடவை சிரியாவிற்கு எதிராக மற்றொரு ஏகாதிபத்திய ராணுவ ஆக்கிரமிப்பைக் கட்டவிழ்த்துவிட முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், இதில் ஐ.நா.வை ஈடுபடுத்த அமெரிக்க மேற்கொண்ட முயற்சிகளை ரஷ்யாவும் சீனாவும் தங்கள் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாகத் தகர்த்துவிட்டன. இராக்கில் ராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொண்டது போலவே ஈரானிலும் மேற்கொள்ள மெரிக்காவிற்கு நமைச்சல் எடுத்தபோதிலும், அதனால் அதில் வெற்றிபெற முடியவில்லை.
                  அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்பிராந்தியத்தில் பதற்றம் இல்லாதவாறு அமையக்கூடிய விதத்தில், ஈரானுடன் ஒருவிதமான ஒப்பந்தத்தை செய்துகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம், மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்காவில் உள்ள சுதந்திர நாடுகளின் உள்விவகாரங்களில் தன்னுடைய கிரிமினல்தனமான தலையீடுகளைத் தொடர்கிறது. ``அரபு வசந்தம்’’ போன்று மெய்யான ஜனநாயகங்களுக்காக இந்நாடுகளில் இயக்கங்கள் நடைபெற்றபோதிலும், இந்நாடுகள் பலநெருக்கடிக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. எகிப்தில் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், முஸ்லீம் கட்சியின் செல்வாக்கின் கீழ் அடிப்படைவாதத்தை மேம்படுத்த முயன்றதால், அதற்கு எதிராக ராணுவம் தலையிட வேண்டியிருந்தது. அமெரிக்காவால் தூண்டப்பட்ட சிரியா மீதான உள்நாட்டு யுத்தம் லெபனான் போன்ற அண்டை நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது.
                       அமெரிக்க ஆக்கிரமிப்பின் விளைவாக, இராக்கில் பல்வேறு குழுக்கள் சண்டையிட்டுக் கொள்வதன்மூலம் பெரும்பான்மையான அப்பாவி மக்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று துனீசியா, லிபியா ஆகிய நாடுகளிலும் கிளர்ச்சிகள் நீடிக்கின்றன. சூடான் இரு நாடுகளாகப் பிரிந்திருக்கிறது. சோமாலியாவில் மிகவும் பயங்கரமானமுறையில் மோதல் தொடர்கிறது. இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய மேலாதிக்கத்தை விரிவாக்கிடுவதற்காக அனைத்து நாடுகளிலும் தலையிட்டுக் கொண்டிருப்பது தொடர்கிறது. அமெரிக்காவின் இத்தகைய மேலாதிக்க முயற்சிகளை புவிவெப்பமயமாதல் மற்றும் உலக வர்த்தக அமைப்பின்கீழ் விவசாயம் தொடர்பான ஒப்பந்தம் ஆகியவை குறித்த சர்வதேச பேச்சுவார்த்தைகளின்போதும் பார்க்க முடிகிறது. சமீபத்தில் முதலாவது நிகழ்ச்சிநிரல் தொடர்பாக வார்சாவிலும், இரண்டாவது நிகழ்ச்சிநிரல் தொடர்பாக பாலியிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, வளர்ந்த (முதலாளித்துவ) நாடுகள் பொருளாதாரத்தில் மீட்சி அடைவதற்கு சாதகமான நிலைமைகளை உருவாக்கக்கூடிய விதத்தில் வளர்முக நாடுகளை மிரட்டிப் பணியவைத்திடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதைப் பார்த்தோம்.
                 துரதிர்ஷ்டவசமாக, இத்தகைய ஏகாதிபத்தியவாதிகளின் முயற்சிகளை எதிர்த்து நின்று வளர்முக நாடுகளின் பக்கம் அணிகோர்த்து நிற்பதற்குப் பதிலாக, அவர்களுடன் இணைந்து நின்று வளர்முக நாடுகளின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, இந்தியா ஏகாதிபத்தியத்தின் இத்தகைய நிர்ப்பந்தங்களுக்கு அடி பணிந்து போவது என்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவால் இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் மிகவும் முரட்டுத்தனமாக நடத்தப்பட்டிருக்கும் நிகழ்ச்சியிலிருந்தாவது, இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எடுபிடியாகக் குறைத்திருப்பவர்கள் தங்கள் கண்களைத் திறந்துகொள்ள முன்வர வேண்டும். ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக இந்தியாவை மாற்றியுள்ள இந்திய அரசாங்கத்தின் கொள்கையை மாற்றி அமைத்திட அரசாங்கத்தின் மீது வலுவான முறையில் நிர்ப்பந்தத்தை அளித்திட, 2014-ஆம்ஆண்டில், நாட்டு மக்கள் முன்வர வேண்டும்.
                 ஏகாதிபத்தியம் தன்னுடைய நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்காக, நம் நாட்டைச் சுற்றிலும் உள்ள அண்டை நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு மிகவும் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில் இது மிகவும் முக்கியமாகும். சமீபத்திய தேர்தல்களுக்குப்பின் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்றதன்மை, வங்க தேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள சமயத்தில் அடிப்படைவாத சக்திகள் உருவாக்கியுள்ள உள்நாட்டுப் பதற்ற நிலைமை, இந்தியாவிற்கு உண்மையான ஆபத்தாக இருக்கக்கூடிய விதத்தில் பாகிஸ்தானுக்குள் ஆப்கானிஸ்தானுடைய தலிபான் பயங்கரவாதம் பொங்கி வழிந்துகொண்டிருப்பது, மாலத்தீவில் உள்ள அரசியல் ஸ்திரமற்றதன்மை, இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே தொடரும் இனப் பதற்ற நிலைமை - இவை அனைத்துமே அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய மேலாதிக்க முயற்சிகளை பிரயோகிப்பதற்கு வளமான சூழ்நிலைகளாகும். இந்நிலையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையை உறுதியுடன் எடுக்கக்கூடிய விதத்தில் 2014-ஆம் ஆண்டில் இந்தியா வலுப்படுத்தப்பட வேண்டும்.
                  மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்திய அரசை இந்நிலைக்குப் பணிய வைக்க முடியும். எனவே, 2014-ஆம் ஆண்டு இந்திய மக்களைப் பொறுத்தவரை, நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்திட வலுவான முறையில் மக்களைத் திரட்டுவதற்கான ஆண்டாகும். அதே சமயத்தில், சர்வதேச வளர்ச்சிப் போக்குகளின் எதிர்மறை அம்சங்கள் நம் நாட்டின் மீது விழாத விதத்தில், மிகவும் உறுதியான முறையில் நவீன தாராளமய எதிர்ப்பு/ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையினைப் பின்பற்றி, நாட்டைப் பாதுகாத்திடவும் வேண்டும். இதனை அடையக் கூடியவிதத்தில் வளர்முக நாடுகளுடன் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்திட வேண்டும். 2013-ஆம் ஆண்டு, உலகம் முழுதும் உள்ள மக்களின் விடுதலைக்காகவும், மனித குலத்தின் பொன்னான மார்க்கத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் மனிதரான நெல்சன் மாண்டேலாவின் மரணத்துடன் முடிந்திருக்கிறது.
                இன ஒடுக்கல் முறையிலிருந்து விடுதலை பெறுவதற்காகத் தென்ஆப்பிரிக்க மக்கள் நடத்திய போராட்டத்திற்குத் தலைமை தாங்கியபோது அவர் விடுத்த எழுச்சிமிகு அறைகூவல்: “உலகம் முழுதும் உள்ள மனிதகுலம் முழுமையாக அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறும் வரை - போராட்டம் தொடரும்.’’ முற்போக்கு உலகத்துடன் நாமும் இணைந்து நின்று அவருக்கு அஞ்சலி செலுத்தியபோது, அவர் விடுத்துச்சென்றுள்ள அறைகூவலை முன்னெடுத்துச் செல்வதற்கான நம் தீர்மானத்தை இரட்டிப்பாக்கிக் கொள்வோம், 2014ல் மக்கள் போராட்டங்களை வலுப்படுத்திடுவோம்.

தமிழில்: ச.வீரமணி  
நன்றி :