கட்டுரையாளர் : சீத்தாராம் யெச்சூரி,
பொதுச்செயலாளர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது 21-வது அகில இந்திய மாநாட்டில்,
இந்திய ஆளும் வர்க்கங்களால் பின்பற்றப்படும் தற்போதைய கொள்கைகளுக்கு
மாற்றாக திட்டத்தின் அடிப்படையில், தற்போதைய முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ
வர்க்க ஆட்சியை, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான மக்கள் ஜனநாயக
முன்னணியால் அகற்றும் குறிக்கோளுடன், கட்சியையும், வர்க்க-வெகுஜன அமைப்புகளையும் வலுப்படுத்துவதற்கான உறுதியையும், இடது ஜனநாயக முன்னணியை
உருவாக்குவதற்காக வலுவான மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்துவதற்கான
உறுதியையும் இரட்டிப்பாக்கியுள்ளது.
நாட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள பன்முகத் தாக்குதல்களிலிருந்து அவர்களை விடுவித்திட இது ஒன்றே வழியாகும்.
முழுமையான உட்கட்சி விவாதம்
கட்சியின்
மாநாடு, அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கை மற்றும் அரசியல்
தீர்மானம் ஆகிய இரு முக்கிய தீர்மானங்களை முழுமையாக விவாதித்து
நிறைவேற்றியுள்ளது. இவற்றின் வரைவுகள் இரு மாதங்களுக்கு முன்பே `பீப்பிள்ஸ்
டெமாக்ரசி’ இதழில் வெளியிடப்பட்டு, முழுமையாக உட்கட்சி விவாதத்திற்கு
உட்படுத்தப்பட்டிருந்தன. கட்சி உறுப்பினர்களிடமிருந்தும், கட்சிக்
கிளைகளிலிருந்தும் அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கை மீது முறையே
1432 திருத்தங்களும், 136 திருத்தங்களும் வரப்பெற்று அவை பரிசீலனைக்கு
உட்படுத்தப்பட்டு, அகில இந்திய மாநாடு அவற்றில் 29-ஐ
ஏற்றுக்கொண்டிருக்கிறது.
அதேபோன்று வரைவு அரசியல் தீர்மானத்தின் மீது
2,552 திருத்தங்களும், 248 பரிந்துரைகளும் வரப்பெற்றன. அவற்றில் 74
ஏற்றுக்கொள்ளப்பட்டன. அகில இந்திய மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கையில்,
மாநாட்டுப் பிரதிநிதிகள், அரசியல் - நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கை
மீது 259 திருத்தங்களையும், வரைவு அரசியல் தீர்மானத்தின் மீது 473
திருத்தங்கள் மற்றும் 5 பரிந்துரைகளையும் முன் வைத்தனர். இவற்றில்
அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கை மீது 11 திருத்தங்களும்,
வரைவு அரசியல் தீர்மானத்தின் மீது 55 திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
ஸ்தாபன பிளீனம்
இத்தீர்மானங்கள்
மீதான பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஏராளமாக எழுத வேண்டியது அவசியமாகும்.
சாராம்சத்தில், அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கையானது, இடது
ஜனநாயக முன்னணியைக் கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதை
அடிக்கோடிட்டுக் கூறியிருக்கிறது. போராட்டங்களில் இடதுசாரி சக்திகளின்
ஒற்றுமையை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும். கட்சி
மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகள் சுயேச்சையான முறையில் வலுவாக
இருந்தால் தான், இவ்வாறு இடது ஜனநாயக முன்னணியை வலுவாகக் கட்டுவதும்
சாத்தியமாகும். எனவே, இத்தீர்மானங்களின் அடிநாதமாக இருப்பது, கட்சி மற்றும்
வெகுஜன அமைப்புகளின் செயல்பாடுகளை இன்னும் வலுப்படுத்துவது என்பதேயாகும்.
எனினும் இந்தக் குறிக்கோளை எய்த வேண்டுமானால், கட்சி ஸ்தாபனத்தின் தற்போதைய
நிலை என்ன என்பது குறித்தும், வர்க்க, வெகுஜன அமைப்புகளின் செயல்பாடுகள்
குறித்தும் ஒரு முழுமையான ஆய்வினை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கையின்கீழ் மேற்கொண்டுள்ள
முடிவுகளின்படி கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு, அத்தகைய ஆய்வு மிகவும்
அவசியமாகும். இந்தக் குறிக்கோளை எய்துவதற்காக, கட்சியின் அகில இந்திய
மாநாடு இந்தாண்டு இறுதிக்குள் ஸ்தாபனம் குறித்து ஒரு பிளீனத்தை (சிறப்பு
மாநாடு) நடத்திடவும் தீர்மானித்திருக்கிறது.
சுரண்டல்களுக்கு எதிராகஇரண்டு கால்கள்
மக்கள்
எதிர்கொள்ளும் பன்முகப்பட்ட பிரச்சனைகள் மீது பெரும் போராட்டங்களை
வலுப்படுத்துவதற்கு, பொருளாதாரச் சுரண்டல் சார்ந்த பிரச்சனையுடன் சமூக
ஒடுக்குமுறைப் பிரச்சனையையும் ஒன்றிணைத்து கூர்மையான திட்டமிடலை
மேற்கொள்வது அவசியமாகும். தற்போதைய இந்திய சமூகத்தில், தலித்துகள்,
பழங்குடியினர், பெண்கள் மற்றும் மதச்சிறுபான்மையினர் ஆகியோர் மீது
ஏவப்பட்டுள்ள சமூக ஒடுக்குமுறை வடிவங்களுக்கு எதிரான போராட்டங்கள் அத்தகைய
வலுவான மக்கள் இயக்கங்களைக் கட்டுவதற்கு ஒரு முக்கிய அம்சம்
ஆகும். இந்தியாவில் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் ஒரு கால்
என்றால், சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மற்றொருகால் ஆகும்.
இவ்விரு போராட்டங்களும் பின்னிப்பிணைந்து வலுப்படுத்தி முன்னெடுத்துச்
செல்லப்படுவது அவசியம் என்கிற நமது புரிதலை கட்சியின் 21-வது மாநாடு
மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தி இருக்கிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு
முக்கிய கவனம் தரப்படவில்லையெனில் அது, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான
போராட்டங்களை, பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களுடன் இணைக்க
முடியாத நிலையை ஏற்படுத்திவிடும். விளைவு, நாட்டு மக்களில் சுரண்டப்படும்
பெருவாரியான மக்களை விடுவிப்பதற்குரிய விதத்தில் வர்க்கப் போராட் டங்களை
நடத்த முடியாத நிலையை ஏற்படுத்தி விடும்.
எனவேதான் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி, தன் குறிக்கோளை விரைவில் எய்த வேண்டுமானால் இவ்விரு
கால்களின் மீதும் முதலில் நின்று, நடந்து, பின்னர் ஓட வேண்டியது அவசியம்
என்று கட்சியின் அகில இந்திய மாநாடு அழுத்தமாக வலியுறுத்திக் கூறி
இருக்கிறது.
மக்கள் இயக்கமே நமது பலம்!
கட்சியின் சுயேச்சையான
பலம் மற்றும் அதன் தலைமையின்கீழ் கட்டமைக்கப்படும் மக்கள் இயக்கங்களின்
பலம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தேர்தல்களிலும் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடங்கள் கிடைத்திருக்கின்றன என்று மீண்டும் ஒருமுறை
அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கை உறுதி செய்திருக்கிறது. கடந்த
கால அனுபவம் நமக்கு அதைத்தான் எவ்விதப் பிசிறுமின்றி நடைமுறைப்படுத்திக்
காட்டி இருக்கிறது. அத்தகைய பலத்தின் அடிப்படையில்தான் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி கேரளம், மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய
மாநிலங்களில் குறிப்பிடத்தக்க முறையில் தேர்தல் வெற்றிகளைப் பதிவு செய்ய
முடிந்தது.
தேர்தல் உடன்பாடுகள்
அரசியல் நடைமுறை உத்தி குறித்த
ஆய்வறிக்கையானது, மாநிலங்களில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகளுடனான தேர்தல்
கூட்டணிகள் மட்டுமே ஆளும் வர்க்கங்களின் தற்போதைய ஆட்சிக்கு அடிப்படை
மாற்றாகஅமைந்திட முடியாது என்பதையும் காட்டியிருக்கிறது. மாநிலக் கட்சி
களுடன் தொகுதி உடன்பாடுகள்கூட கட்சியின் சுயேச்சையான வலுவின்
அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகின்றன.
எனவே, மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன பலம் மற்றும் போராட்டங்களில் வலுவான
தலையீடுகள் ஆகியவற்றுக்கு அதிமுக்கியத்துவம் கொடுப்பதன் அடிப்படையிலேயே
கட்சியின் அரசியல் நடைமுறை உத்தி அமைந்திட வேண்டும். தேர்தல் நடைபெறும்
காலங்களில் சில மாநிலங்களில் மாநிலக்கட்சிகளுடன் சில உடன்பாடுகள்
தேவைப்படலாம். ஆயினும், அத்தகைய தேர்தல் உத்தி அடிப்படையில் இடது ஜனநாயக
முன்னணியை வலுப் படுத்துவதற்கான குறிக்கோளை எய்துவது நோக்கி முன்னேற
முடியாது.
இதனை நமது சுயேச்சையான பலம் மற்றும் போராட்டங்களில் தலையிடக் கூடிய தகுதியை ஒருமுகப்படுத்துவதன் அடிப்படையில் மட்டுமே எய்திட
முடியும். மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசியல் தீர்மானமானது, ஒரு
பக்கத்தில் மிகவும் மூர்க்கமான முறையில் பின்பற்றப்படும் நவீன தாராளமயப்
பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும், மறுபக்கத்தில் மிகவும்
வெறித்தனமாகக் கட்டவிழ்த்துவிடப்படுகிற மதவெறிக்கெதிராகவும் மக்கள்
போராட்டங்களை வலுப்படுத்தவேண்டியதன் தேவையை அழுத்தமாகத் தெரிவித்துள்ளது.
மோடி
அரசாங்கமானது, நாட்டு மக்களில் பெரும்பான்மையோரின் அடிப்படை
வாழ்வாதாரங்களைக் காவு கொடுத்து சர்வதேசமற்றும் இந்திய மூலதனம் கொள்ளை
லாபம் ஈட்ட வழிவகை செய்து தருகிறது. அதே சமயத்தில், அந்நிய நேரடி மூலதனம்
ஆதிக்கம் செலுத்தக்கூடிய விதத்தில் அனைத்துத்துறைகளையும் அவசர அவசரமாகத்
திறந்து விட்டுக்கொண்டும் இருக்கிறது. “வளர்ச்சி’’ “வளர்ச்சி’’ என்று
ஆட்சியாளர்கள் என்னதான் தம்பட்டம் அடித்தாலும், இதன்பின்னே மறைந்திருக்கும்
உண்மையான நோக்கம் என்னவெனில், நாட்டையும், நாட்டின்வளங்களையும் அந்நிய
மற்றும் இந்திய கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம்ஈட்டுவதற்காகத் தங்குதடையற்ற
சுரண்டலுக்கு முழுமையாகத் திறந்துவிடுவதேயாகும். இவற்றின் காரணமாக நம்
நாட்டு மக்களில் பெரும்பான்மையோரின் வாழ்க்கை மிக வேகமாக வீழ்ச்சி அடைந்து
கொண்டிருக்கிறது. இத்தகைய கொள்ளை லாப வேட்டையால் விரல்விட்டு எண்ணக்கூடிய
ஒருசிலர் ஆதாயம் அடைந்திருக்கிறார்கள்; பெரும்பணக்காரர்களுக்கும், ஏதும்
இல்லாதவர்களுக்கும் இடையேயான இடைவெளி மிகவும் அபாயகரமான முறையில்
விரிவடைந்து கொண்டிருக்கிறது.
விவசாயியின் துயரம்
நம்
விவசாயத்தைப் பற்றிக்கொண்டுள்ள நெருக்கடி தொடர்வதிலிருந்து இதனை நன்கு காண
முடியும். வட இந்தியாவின் பல மாநிலங்களில் பருவமழை காலம் தவறி
பெய்திருப்பதன் காரணமாக, பயிர்கள் முழுமையாக நாசம் அடைந்து, விவசாயிகளுக்கு
மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் உணவுப் பாதுகாப்பை
உத்தரவாதப்படுத்துவதற்கு ஒரு முன்நிபந்தனை, கடும் நெருக்கடிக்கு உள்ளாகி
இருக்கிற விவசாயிகளைப் பாதுகாப்பதே ஆகும். ஆனால் அதற்குப் பதிலாக, மோடி
அரசாங்கமானது மிகவும் கருணையற்ற முறையில் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தைக்
கொண்டு வந்திருக்கிறது. இது விவசாயிகளின் வாழ்வில் மேலும் கூடுதலாக
துன்பதுயரங்களை ஏற்படுத்துவதுடன், நம் ஒட்டுமொத்த விவசாயத்துறையில்
காணப்படும் நெருக்கடியை மேலும் ஆழமாக்கிடும்.
தொழிலாளியின் அவலம்
நாட்டிலுள்ள
தொழிலாளர் நலச் சட்டங்களில், உழைக்கும் மக்களுக்கு இதுநாள்வரை இருந்து
வந்த கொஞ்சநஞ்ச உரிமைகளைக்கூடப் பறிக்கும் விதத்தில், பெரிய அளவில்
மாற்றங்களைக் கொண்டுவருதல் உட்பட எண்ணற்ற தொழிலாளர்நல விரோதச் சட்டங்களைக்
கொண்டுவர ஆட்சியாளர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி எதிர்காலத்தில் மோடி அரசாங்கத்தின் இத்தகைய
நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை உக்கிரப்படுத்திடும்.
விஷம் கக்கும் மோடி அரசு
அதேபோன்று,
மோடி அரசாங்கமானது, இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக
அடித்தளங்களுக்கு எதிராகவும், நாட்டிலுள்ள மதச்சிறுபான்மையினரின் உயிர்
வாழ்விற்கு எதிராகவும், மதவெறி நஞ்சைக் கக்கிக்கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ்
மற்றும் அதன் துணை அமைப்புகள் பலவும் மறுமதமாற்றம் என்றும், காதலுக்கு
எதிரான `புனிதப் போர்’ என்றும் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன.
மோடி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பல அமைச்சர்களும், ஆளும் பாஜக
எம்பி-க்களும் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக விஷத்தைக் கக்கும்
பேச்சுக்களை தங்குதடையின்றித் தொடர்ந்து மேற் கொண்டு வருகின்றனர்.
நாட்டின் சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று
பெயரளவிற்குக்கூட உறுதி அளிப்பதற்கு, மோடி அரசாங்கம் முன்வரத் தயாராயில்லை.
அரசின் இத்தகைய அடாவடித்தனம் மதச்சிறுபான்மையினர் மத்தியில்
பாதுகாப்பின்மையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய இழிமுயற்சிகளின்
மூலமாக, ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்கள் இந்து வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்தி,
அதன் மூலம் அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்களை அடைந்திட முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. இவர்களது முயற்சிகள், நம் இந்தியக்குடியரசின்
அடித்தளங்கள் மீது கருணையற்ற முறையில் ஏவப்பட்டுள்ள தாக்குதல்கள்
மட்டுமல்ல; மக்கள் தங்கள் வாழ்வாதாரங்கள் அரிக்கப்படுவதற்கு எதிரான
போராட்டங்களில் ஈடுபடும்போது அவர்களின் ஒற்றுமையை மத அடிப்படையில் சிதைத்து
சின்னாபின்னப்படுத்தும் சதியும் ஆகும்.
எதேச்சதிகார ஆட்சியை நோக்கி...
இப்படியாக,
மோடி அரசாங்கம் நவீன தாராளமயப் பொருளாதாரத் தாக்குதல்களுடன் மதவெறி
நஞ்சையும் இணைத்து, மக்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்துக்கொண்டிருக்கிறது. இப்போது மேலும் கூடுதலாக, மோடி அரசாங்கமானது தன்னுடைய
குறிக்கோள்களை எய்துவதற்காக, நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகளைக் கூட சிதைத்திட
நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. நம் ஜனநாயகக் கட்டமைப்பினை சிதைத்து
சின்னாபின்னப்படுத்துவதன் மூலம் ஓர் எதேச்சதிகார ஆட்சிமுறையை நோக்கிச்
சென்று கொண்டிருக்கிற அறிகுறி தெரியத் தொடங்கி இருக்கிறது. கட்சியின் 21வது
அகில இந்திய மாநாடு, இந்திய நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும்
ஏவப்பட்டுள்ள மேற்படி மும்முனைத் தாக்குதல்களுக்கு எதிராகத் தன் கடும்
எதிர்ப்பினைப் பிரகடனம் செய்திருக்கிறது. இம்மூன்றும் நாட்டையும் நாட்டு
மக்களின் வாழ்வையும் சூறையாடக்கூடிய `திரிசூலமாக’ மாறுவதை மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி தடுத்திடும் என்றும் 21வது அகில இந்திய மாநாடு உறுதிபட
அறிவித்திருக்கிறது. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாட்டின்
ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டையும், நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக
அடித்தளங்களையும் பாதுகாக்கக் கூடிய அதே சமயத்தில், நாட்டு மக்களின்
நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கான வேலையில் முன்னிலும் பன்மடங்கு
செயலூக்கத்துடன் இறங்கிடும்.
நன்றி : தீக்கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக