ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

பெண்கள் படிப்பதில் எத்தனை தடைகள்...!






                 இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் வங்கிகளில் அவ்வளவாக கூட்டம் இருக்காது. இருக்கின்ற கொஞ்ச அளவிலான கூட்டம் கூட சில எண்ணிக்கையில் ஆண்கள் மட்டுமே இருப்பார்கள். பெண்களின் எண்ணிக்கை என்பது ஒன்றிரண்டு தான் இருக்கும். மகளிர் சுய உதவிக்குழுக்கெலெல்லாம் நாட்டின் பல பகுதிகளில் தொடங்கப்பட்ட பின், பெண்கள் வங்கி கணக்குகள் தொடங்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. அதனால் வங்கிகளில் அதிக அளவில்  பெண்களை பார்க்கமுடிந்தது. வங்கி போன்ற பொது இடங்களில் வருகை புரியாமல் வீட்டிலேயே புழுங்கி இருந்த இலட்சக் கணக்கான பெண்கள் வங்கிகளுக்கு வருவதும், சேமிப்பு கணக்கில் பணம் போடுவதும், கடன் வாங்குவதும், கடனை நேர்மையாக திருப்பி கட்டுவதும் போன்ற வங்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பிறகு மத்தியில் அப்போது ஆட்சி செய்தவர்களும் சரி, இப்போது ஆட்சி செய்பவர்களும் சரி பல்வேறு பொருளாதார மாற்றங்களை மக்களின் கருத்தைக் கேட்காமலேயே, பொது மக்களுக்கு சமையல் கேஸ், மண்ணெண்ணெய், அரிசி போன்ற ரேஷன் பொருட்கள் ஆகியவற்றுக்கு கொடுக்கப்படும் மானியத் தொகையையும், முதியோர் பென்ஷன் போன்றவற்றையும் இனி அவரவர் வங்கிக் கணக்கில் தான் போடப்படும் என்று முடிவெடுத்ததினால், அதுவரையில் வீட்டிலேயே இருந்து வந்த மற்ற பெண்கள் இலட்சக்கணக்கானோர் வங்கிக்கணக்கை துவக்கவேண்டிய கட்டாயத்தை  மத்திய - மாநில அரசுகள் ஏற்படுத்தி விட்டன. எனவே அதுவரையில் நமக்கு வங்கிக் கணக்கே தேவையில்லை. அதற்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை என்றிருந்த பெண்களும் வங்கி கணக்கை தொடங்க கட்டாயமாக்கப்பட்டனர். இந்த பெண்களை பொறுத்த வரையில் வங்கி கணக்கு என்பது ஒரு வேண்டாத தொல்லை. கடந்த காலங்களில் வயதானவர்களுக்கு மாதம்  பொறந்தா பென்ஷன் பணம் மணி ஆர்டர் மூலமாகவோ, அங்கன்வாடி மூலமாகவோ அவர்களை தேடி வந்துவிடும். இதுவரையில் சமையல் எரிவாயுவிற்கு மானியத்தை கழித்துக்கொண்டு தான் பணம் பெற்றுக்கொண்டார்கள். இதுவரையில் மண்ணெண்ணையையும் அரிசியையும் ரேஷன் கடைகளில் ஒழுங்காகத்தான் போட்டுகிட்டிருந்தாங்க. அதை எல்லாத்தையும் நிறுத்திபுட்டு எரிவாயுக்கான மானியத் தொகையையும், மண்ணெண்ணெய் அரிசிக்கான தொகையையும் வங்கிக் கணக்கில் மட்டுமே தரப்படும் என்று மத்திய அரசு கட்டயப்படுத்தியதால், நாட்டிலுள்ள பெரும்பான்மையான பெண்கள் வங்கிக் கணக்கை ஆரம்பிச்சிட்டு மாதம் பொறந்தா வங்கி வாசலில் வந்து நிற்க வேண்டியதாய் போய்விட்டது. 
          இவைகளினால் என்னாச்சு...? இப்போது எல்லா வங்கிகளிலும் ஆண்களை விட பெண்களின் கூட்டமே அதிகம் காணப்படுகிறது. இதுவும் வரவேற்கத்தக்க மாற்றமே. மழைக்குக்கூட வங்கி பக்கம் ஒதுங்காத பெண்கள் அவர்களுக்கு தொல்லை தான் என்றாலும் இப்போது மாதம் தோறும் வங்கிக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுல என்ன கொடுமை என்றால், அப்படி வரும் பெரும்பாலான பெண்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். எழுதப்படிக்கத் தெரியாதவர்கள். தாய் மொழியை கூட படிக்க முடியாத அவர்களை இப்படி ஒரு நாள் வங்கியில் வந்து நிறுத்துவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. அப்படி மாதந்தோறும் நான் வங்கிக்கு போகும் போதெல்லாம், அந்த பெண்கள் படிப்பறிவு இன்மையால் தங்களின் பண வரைவு சீட்டை வைத்துக்கொண்டு அதை செய்வதற்கு படித்த ஆட்களை தேடி அல்லாடுவதை நேரில் பார்த்திருக்கிறேன். நாமும் பொறுமையுடன் அந்த சீட்டை பூர்த்தி செய்துக்கொடுத்தால், அவர்களது இடது கை பெருவிரல் தன்னிச்சையாக - ஒரு அணிச்சை செயலாக ''நீல நிற மையை'' தேடும். கொஞ்சும் கூச்சமில்லாமல் பெருவிரலை அதில் ஒற்றி எடுத்து வரைவு சீட்டில் அவசர அவசரமாக பதித்து, பணத்தை பெறுவதற்கு கவுண்டரை நோக்கி ஓடுவார்கள்.
               இந்த காட்சிகளை எல்லா வங்கிகளிலும் தினமும் பார்க்கலாம். இந்த பெண்கள் ''நாம் படிக்கவில்லையே... நம்மால் வரைவு சீட்டை கூட எழுத முடியவில்லையே... கையெழுத்து போடாமல் ''கைநாட்டு'' வைக்கிறோமே'' என்று ஒரு போதும் வேதனை பட்டதுமில்லை... அதற்காக வெட்கப்பட்டதுமில்லை. ஆனால் அதைப் பார்த்த நாம் தான் வேதனைப்பட்டோம். சமூகத்தில் இன்னும் படிப்பறிவில்லாமல் இருக்கிறார்களே என்று வெட்கப்பட்டோம்.
             முதலில் எழுதப்  படிக்க தெரியாத படிப்பறிவில்லாத அந்த பெண்களுக்கு  எழுத, படிக்க, கையெழுத்துப் போட கற்றுத்தரவேண்டும். அவர்கள் எழுதுவதற்காக வங்கிகளிலோ மற்ற இடங்களிலோ அடுத்தவர்கள் தயவை எதிர்ப்பார்த்து நிற்கக்கூடாது என்றெல்லாம் சிந்தித்தோம். சரி அவர்களுக்கு எழுத்தறிவு வகுப்பெடுப்பது தான் சிறந்ததாக இருக்கொமென்று முடிவெடுத்தோம். மீண்டும் ''அறிவொளி இயக்கத்தை'' தூசித்தட்டி தொடங்குவோம். அதையும் ''பெண்களுக்கு கல்வி கொடுக்கவேண்டும். கல்வி ஒன்றினால் மட்டுமே சமூக விடுதலையை அடையமுடியும்'' என்று முழங்கிய  புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 125-ஆவது பிறந்தநாளன்று தொடங்குவது தான் பொருத்தமாக இருக்குமென்று சென்ற ஏப்ரல் 14-ஆம் தேதியன்று புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் கல்வி மையத்தின் சார்பில் நடத்துவது என்றும் முடிவாக்கப்பட்டது.
                  படிப்பதற்கு பெண்களை வரவழைக்க வேண்டுமே... என்ன செய்வது...? உற்சாகத்துடன் களத்தில் இறங்கினோம். பாண்டிச்சேரி இலாசுபேட்டை பகுதியில் உள்ள பின் தங்கிய மக்கள், உழைப்பாளி மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளான சலவையாளர் நகர், சேத்திலால் நகர், மடுவுபேட், சாமிபிள்ளை தோட்டம், கொட்டுபாளையம் ஆகிய வசதியற்ற குடும்பங்கள் வாழும் இடங்களுக்கு வீடுவீடாக நடந்தே சென்றோம். ஒவ்வொரு வீடாக பெண்களை சந்தித்து எழுத படிக்க தெரிந்து கொள்ள மாலை நேர வகுப்பிற்கு வாருங்கள். எழுத படிக்க தெரிந்துகொண்டால் வங்கிகளில் நீங்களாகவே சுதந்திரமாக யாருடைய தயவுமில்லாமல் தன்னிச்சையாக வரைவு சீட்டுகளை எழுதலாம். அதில் உங்கள் கையெழுத்தையும் இடலாம். என்றெல்லாம் சொல்லி, இதுவரையில் அர்த்தமில்லாமல் வாழ்ந்த வாழ்க்கையை பயனுள்ள வாழ்க்கையாக மாற்றிக்கொள்ளுங்கள். வாருங்கள் படிக்கலாம். என்றெல்லாம் அழைத்தபோது அவர்களும் உற்சாக மிகுதியில் ''வருகிறோம்.. வருகிறோம்'' என்று சொன்ன போது அவர்களது முகத்தில் ஒரு வகையான நம்பிக்கை ஒளி தெரிந்தது. நமக்கும் உற்சாகமாய் இருந்தது. ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்த்தோம்.
              பெண்களுக்கான அந்த எழுத்தறிவு வகுப்பை நடத்தி பாடம் சொல்லித் தருவதற்கு, பள்ளி ஆசிரியர்கள் திருமிகு.ஆர்.ஜெயராமன் அவர்களும், திருமிகு.வத்சலா அவர்களும், திருமிகு.ஹேமாவதி அவர்களும், திருமிகு.கே.ரமணன் அவர்களும் மிகுந்த ஆவலுடன் ஒப்புக்கொண்டனர். இவர்களெல்லாம் அந்த காலத்தில் அர்ப்பணிப்புணர்வுடன் அறிவொளி இயக்கத்தை வளர்த்தவர்கள். அறிவொளி இயக்கத்தோடு வாழ்ந்தவர்கள். இன்றைக்கும் இந்த வகுப்பிற்கும் இவர்களே பொருத்தமானவர்கள் என்று தேர்ந்தெடுத்தோம். இந்த இயக்கத்திற்கு ''மீண்டும் அறிவொளி இயக்கம்'' என்று பெயரிட்டோம்.
              திட்டமிட்டபடி டாகடர் அம்பேத்கரின் பிறந்தநாளான சென்ற 14-ஆம் தேதி சிறப்பாக தொடங்கப்பட்டது. வருகிறேன் என்று சொன்ன பெண்களில் சிலபேர் வந்திருந்தார்கள். மற்றவர்கள் இன்று தமிழ் புத்தாண்டு, கோயிலுக்கு போய்விட்டார்கள்... நாளை வருவார்கள் என்று சொன்னார்கள். அன்றே முதல் வகுப்பும் தொடங்கப்பட்டது. வந்திருந்த பெண்களுக்கு கட்டணம் பெறாமல் சிலேட்டுகளும், எழுது பொருட்களும் கொடுக்கப்பட்டன. பெண்களும் மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் பெற்றுக்கொண்டார்கள். தினமும் வகுப்பிற்கு வாருங்கள் என்று அழைத்தால் வரமாட்டார்கள் என்பதால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் என வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வந்தால் போதும் என்றெல்லாம் சொல்லி அனுப்பினோம். ஒரு நாள் விட்டு அடுத்த வகுப்பு வந்தது. ஒரே ஒரு பெண் மட்டும் வந்திருந்தார்கள். வெகு நேரம் காத்திருந்தோம். யாரும் வருவதாக தெரியவில்லை. என்ன காரணம் என்று வந்திருந்த அந்த அம்மாவிடம் கேட்டபோது தான் தெரிந்தது. அந்த பெண் ''இன்று பிரதோஷம்.. எல்லோரும் கோயிலுக்கு போயிருப்பாங்க.. நானும் போகணும்னு'' என்று சொல்லி விட்டு வந்திருந்த அந்த ஒரு பெண்மணியும் கிளம்பிவிட்டது. எனவே அன்றைக்கு வகுப்பில்லை. பாடம் சொல்லித்தர வந்திருந்த ஆசிரியர் தோழர்.ஆர்.ஜெயராமன் அவர்கள், அந்த காலத்து அறிவொளி இயக்க அனுபவங்களை எல்லாம் சொல்லி, ஆரம்பத்தில் இப்படித் தான் இருக்கும். மக்களிடம்  பேசிப்பேசி நாம்ப தான் அவர்களுக்கு புரியவைக்க வேண்டும். வாங்க மீண்டும் அவர்களை சந்தித்து பேசுவோம் என்று உற்சாகமூட்டினார்.
              அடுத்து இன்றும் வகுப்பறையை திறந்து வைத்து அந்த பெண்களின் வருகைக்காக காத்திருந்தோம். இன்றும் யாரும் வரவில்லை. அப்போது தான் தெரிந்தது இன்று அமாவாசை என்று. அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம்,  வெள்ளிகிழமை, விசேஷ நாட்கள் போன்ற நாட்களில் இந்த பெண்கள் கோயில், பூசை, வழிபாடு என்று மும்முரமாய் இறங்கிவிடுவார்கள் என்பதை இப்போது தான் புரிந்து கொண்டோம். ஆணாதிக்க சமூகம் பெண்களுக்கு கல்வியை கொடுக்காமல்,  எப்படியெல்லாம் கட்டிப் போட்டிருக்கிறார்கள் என்பதை எங்கள் கண்முன்னே பார்த்தோம்.
           இவைகள் மட்டுமில்லாமல், வீட்டிலிருக்கும் ஆண்கள் பெண்களிடம், ''இனிமேல் என்னத்த படிக்கப்போற... இப்போ படிச்சி என்ன செய்யப்போற... அதெல்லாம் ஒன்னும் படிக்க போகவேண்டாம்...'' என்றெல்லாம் ஆதிக்க உணர்வுடன்  ''தடையுத்தரவு'' போட்டிருக்கிறார்கள் என்றும் அந்த பகுதிகளிலிருந்து தகவல்கள் வந்தது.
             என்றாலும், இப்படிப்பட்ட தடைகளை எல்லாம் உடைத்து அந்த பெண்களுக்கு பாடம் சொல்லித்தர வேண்டும் என்று மீண்டும் முயற்சி செய்கிறோம். பிற்போக்குத்தனமான மதவெறி பிடித்த தீவிரவாதிகள் மத்தியில், மலாலா என்ற 17 வயது சிறுமியால் பெண்களை அழைத்து வந்து கல்வி கொடுக்க முடிகிறதென்றால்,  இங்கே நாமும் ஏன் முயற்சி செய்யக்கூடாது என்ற உணர்வு எனக்குள் கொழுந்து விட்டு எரியத் தொடங்கிவிட்டது. 

கருத்துகள் இல்லை: