7 - ஆம் அறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
7 - ஆம் அறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 நவம்பர், 2011

“ஏழாம் அறிவு” திரைப்படம் மறைக்கும் ''உயிரியல் யுத்த'' வரலாறு...!

                ''ஏழாம் அறிவு'' படத்தின் முடிவில் கதாநாயகன் சூர்யா சொல்வார்: “தமிழர்களுக்கு வரலாறு தெரியாததால், அறிவியல் கண்டுபிடிப்புகளை இழந்து விட்டார்கள்.” உண்மை தான். தமிழர்களுக்கு வரலாறு தெரியாததால் தான், ''ஏழாம் அறிவு'' போன்ற வரலாற்றை திரிக்கும் பிரச்சாரப் படங்களை எடுத்து வியாபாரம் செய்ய முடிகின்றது. போதி தர்மர் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் சரி தானா, என்ற சர்ச்சை ஒரு புறம் இருக்கட்டும்.
              படத்தின் முக்கிய கதைக்கரு, ''உயிரியல் யுத்தம் (Biological warfare)'' பற்றியது. 6 ம் நூற்றாண்டில் “தமிழனான” போதி தர்மர், சீனா சென்றிருந்த சமயத்தில், அங்கு பரவிய வைரஸ் தொற்று நோயை தடுக்கும் மருந்தை கண்டுபிடித்துக் கொடுத்திருந்தார். இன்றைய சீனர்கள், அதே வைரசை இந்தியாவில் பரப்பி, இந்திய மக்களை கொல்வதற்கு முனைகின்றனர். இதுவரை நடக்காத கற்பனைக்கதை தான் இது. இருப்பினும், “வரலாற்றின் முக்கியத்துவம்” உணர்ந்த இயக்குனர், உண்மையான வரலாற்றுக் கதையை எடுத்து படமாக தயாரித்திருக்கலாம். “உயிரியல் யுத்தம், இருபத்தியோராம் நூற்றாண்டிற்கான நவீன போரியல் முறை” என்று இயக்குனரே நினைத்துக் கொண்டிருக்கலாம். “பயங்கரவாத எதிர்ப்பு போர்” குறித்து அமெரிக்கா பிரச்சாரம் செய்த மிகைப் படுத்தப் பட்ட அச்சமூட்டல்களின் பாதிப்பில் அவ்வாறு நினைக்கிறார் போலும். சீனாவும், இந்தியாவும் ஏற்கனவே உயிரியல் போரினால் பாதிக்கப் பட்ட நாடுகள் தான். இவை பற்றிய தகவல்களை வரலாற்று நூல்களில் இருந்து எடுத்து படமாக தயாரித்திருந்தால், “ஏழாம் அறிவின்” உயரிய நோக்கத்தை நாம் பாராட்டலாம்.
               ஏழாம் அறிவை தயாரித்தவர்களின், முதலாம் அறிவில் உள்ள அரசியல் சார்புத் தன்மை, கடந்த நூற்றாண்டின் வரலாற்றை கூட பின்னோக்கிப் பார்க்க விடாது தடுக்கின்றது. இன்றைய நவீன உலகில் மட்டும் தான், பரிசோதனை சாலைகளில் உருவாக்கப்படும் நோய்க் கிருமிகள் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது, என்று நினைப்பது தவறு. பண்டைய காலங்களில், நச்சுப் பாம்புகளை பிடித்து விடுவதும் உயிரியல் போர் முறைக்குள் அடங்கும். இருப்பினும், ஐரோப்பிய காலனிய காலகட்டத்தின் பொழுது தான், பெருந்தொகையான மக்களை அழிக்கும் நோய்க் கிருமிகள் வேண்டுமென்றே பரப்பப் பட்டன. அமெரிக்க கண்டத்தில் வாழ்ந்த செவ்விந்திய பூர்வகுடிகளின் அழிவுக்கு காரணம், ஐரோப்பியர் காவிக் கொண்டு சென்ற கிருமிகள் என்பது வரலாற்றுத் தகவல். வெளி உலகில் இருந்து தனிமைப் படுத்தப்பட்ட கண்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு, அந்த நோய்களை எதிர்க்கும் சக்தி இருக்கவில்லை. ஆரம்பத்தில் தற்செயலாக அந்த கிருமிகள் தொற்றியிருந்தாலும், பிற்காலத்தில் இனவழிப்பு செய்யும் நோக்கில் வேண்டுமென்றே பரப்பப் பட்டன.
           நம்மில் பலருக்கு, சின்னம்மை என்ற நோய் தொற்றியிருக்கலாம். அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத காலத்தில், பாமர மக்கள் அதனை “அம்பாளின் சீற்றத்தால் தொற்றும் நோய்” என்று நம்பியதால் தான், அதற்கு “அம்மை நோய்” என்று பெயர் வந்தது. சின்னம்மை பண்டைய தமிழர் சமுதாயத்தில் இல்லாத நோய். காலனிய காலத்தில் ஆங்கிலேயரால் கொண்டு வந்து பரப்பப் பட்டது. இந்த உண்மை இன்று எத்தனை தமிழருக்கு தெரியும்? ஏழாம் அறிவு திரைப்படத்தின் கதை அதுவாக இருந்திருந்தால், தமிழர்களுக்கு ஒரு வரலாற்று உண்மையை எடுத்துச் சொன்ன பெருமை கிடைத்திருக்கும். “ஆங்கிலேயர்கள் அதனை உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தவில்லை.” என்று சப்பைக் கட்டு கட்டலாம். இந்தியாவில் அம்மை நோயை வேண்டுமென்றே பரப்பியதற்கான வரலாற்று ஆவணம் எதுவும் இது வரை கிடைக்கவில்லை. அமெரிக்க கண்டத்தை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் அங்கே அம்மை நோயை பரப்பியதற்கான ஆதாரங்கள் உள்ளன.
                      1763 ம் ஆண்டு, அதாவது இந்தியாவை காலனிப் படுத்திக் கொண்டிருந்த அதே காலத்தில், வட அமெரிக்காவில் காலனிய போர் நடந்து கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், பிரெஞ்சு ஏகாதிபத்தியமும், இன்று கனடா என்று அறியப்படும் நிலத்திற்காக போரிட்டுக் கொண்டிருந்தன. அப்போது அங்கே வாழ்ந்த செவ்விந்திய பழங்குடி மக்களை இனவழிப்பு செய்வது ஆங்கிலேயரின் நோக்கமாக இருந்தது. வடஅமெரிக்காவில் பிரிட்டிஷ் படைகளின் தலைமைத் தளபதியான Sir Jeffrey Amherst, இவ்வாறு கூறினார்:”… சின்னம்மை நோய்க் கிருமிகளை ஏவி விட்டாவது, இந்த செவ்விந்திய இனங்களை குறைக்க வேண்டும்.” அவரின் உத்தரவின் பேரில், சின்னம்மை நோய்க் கிருமிகள் உள்ள போர்வைகள், செவ்விந்திய மக்களுக்கு கிடைக்கும் வண்ணம் வீசப் பட்டன. அதனால், பல ஆயிரம் செவ்விந்தியர்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்க சுதந்திரப்போர் காலத்திலும் சின்னம்மை நோய் வேண்டுமென்றே பரப்பப் பட்டது. ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற புதிய அமெரிக்க அரசு, உயிரியல் ஆயுதத்தை மேலும் விரிவாக்கியது. 1942 ம் ஆண்டு, அமெரிக்காவில் 400 கறுப்பின கைதிகள் பரிசோதனை எலிகளாக பயன்படுத்தப் பட்டனர். அவர்களுக்கு தெரியாமலே, மலேரியா நோய்க் கிருமிகள் தொற்ற வைக்கப் பட்டன. பிற்காலத்தில், ஜெர்மனியில் நியூரன்பேர்க் போர்க்குற்ற நீதிமன்றத்தில், நாஜி வைத்தியர்கள் அதனை தமது தரப்பு சாட்சியமாக முன் வைத்தார்கள்.
            இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜப்பானின் உயிரியல் ஆயுத விஞ்ஞானியாக இருந்தவர் Dr. Shiro Ishii. அவர் ஜப்பான் சக்கரவர்த்தியின் படைகளின் ஆக்கிரப்பில் இருந்த சீனாவின் மஞ்சூரியா மாநிலத்தில் பணியாற்றினார். அங்கிருந்த சீன, ரஷ்ய, அமெரிக்க கைதிகளின் மீது உயிரியல் கிருமிகளை தொற்ற வைத்து பரிசோதனை நடத்தினார். 1931 ம் ஆண்டு, ஜப்பான் மஞ்சூரியா மாநிலத்தை ஆக்கிரமித்ததில் இருந்து, 580000 சீனர்கள் உயிரியல் ஆயுதங்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது, Dr. Shiro Ishii யின் குழுவினால்  பாக்டீரியா தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கையாகும். அமெரிக்கர்களிடம் ஜப்பான் சரணடைந்த பின்னர், Dr. Shiro Ishii க்கு மன்னிப்பு வழங்கப் பட்டது.
            இலட்சக்கணக்கான சீன மக்களை படுகொலை செய்த கொலைகாரன், சுதந்திரமாக திரிய விடப்பட்டான். அநேகமாக, அமெரிக்காவின் உயிரியல் ஆயுத திட்டத்திற்கு, அவரின் உதவி பெறப் பட்டிருக்கலாம். Dr. Shiro Ishii வின் குழுவை சேர்ந்த சிலரை, சோவியத் இராணுவம் கைது செய்திருந்தது. உயரியல் ஆயுத பரிசோதனையால் பாதிக்கப்பட்ட சீன மக்களின் சாட்சியங்களை ஆதாரமாக கொண்டு, அவர்கள் மேல் வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால், அமெரிக்காவின் அன்றைய தூர கிழக்காசிய கட்டளைத் தளபதி மக் ஆர்தர், இவையெல்லாம் “கம்யூனிசப் பொய்கள்” என்று கூறினார். சில வருடங்களின் பின்னர், மக் ஆர்தரின் படைகள், கொரியாப் போரின் போது உயிரியல் ஆயுதங்களை பிரயோகித்தன. சீனாவில் கம்யூனிசப் புரட்சியின் பின்னர், இரகசியமாக ஊடுருவிய அமெரிக்க விமானங்கள் விசிறிய கிருமிகள், பயிர்களை அழித்து நாசமாக்கின. நிச்சயமாக, அமெரிக்கா இன்று வரை இந்த உண்மைகளை மறுத்து வருகின்றது.
             1971 ம் ஆண்டு, கியூபாவில் பன்றிக் காய்ச்சல் என்ற புது வகை நோய் பரவியது. பல தசாப்தங்களுக்குப் பின்னர், பல உலக நாடுகளில் அந்த தொற்று நோய் பரவியிருந்ததை பலர் அறிந்திருப்பீர்கள். அன்று, பனாமாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த காஸ்ட்ரோ எதிர்ப்பு கியூபர்களிடம், பன்றிக் காய்ச்சல் கிருமிகளை கொடுத்ததாக, ஒரு சி.ஐ.ஏ, அதிகாரி பின்னர் ஒத்துக் கொண்டார். 1981 ம் ஆண்டு, கியூபாவிலும், (சோஷலிச) நிகராகுவாவிலும் ஒரு புதிய வகை தொற்று நோய் பரவியது. கியூபாவில் 188 பேர் மரணமடைந்தனர். நிக்கராகுவாவில் சுமார் 50000 பேருக்கு நோய் தொற்றி இருந்தது. 1988 ல், கியூப எதிர்ப்புரட்சியாளரான Eduardo Arocena , சி.ஐ.ஏ.யின் பணிப்பின் பேரில் நோய்க் கிருமிகளை கியூபாவினுள் கடத்திச் சென்றதாக தெரிவித்தார். 1996 ம் ஆண்டு, கிருமிநாசினி தெளிக்கும் அமெரிக்க விமானங்கள், கியூப வான்பரப்பில் தென்பட்டன. இதன் விளைவாக, உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை பாதிக்கப் பட்டது. இந்த சம்பவம் குறித்து, கியூபா ஐ.நா. மன்றத்தில் முறையிட்டுள்ளது.
        சில வருடங்களுக்கு முன்னர், இந்தியாவிலும், இலங்கையிலும் பரவியிருந்த சிக்கின்குனியா போன்ற மர்மமான தொற்று நோய்கள் கூட, உயிரியல் போரினால் ஏற்பட்டிருக்கலாம். இவை குறித்த தகவல்களை, ஏழாம் அறிவு போன்ற திரைப்படத்தில் எடுத்துக் கூறியிருந்தால், அது தமிழ் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஊட்டியிருக்கும். மாறாக, அமெரிக்க அரசின் வெளிவிவகார கொள்கைக்கு இசைவாக எடுக்கப்படும் ஹாலிவூட் படங்களின் பாணியில் எடுக்கப் பட்டுள்ளது. தமிழனுக்கு, இந்திய தேசிய வெறி ஊட்டுவதற்காக தயாரிக்கப் பட்டது தான், ஏழாம் அறிவு. அதிகார வர்க்கத்தின் நலன் சார்ந்த அரசியல் பிரச்சாரத்தை, வரலாறு என்று கற்றுத் தருகின்றது. ஆறு அறிவும் இல்லாதவர்களுக்கே, ஏழாம் அறிவு தேவைப்படுகின்றது.

- நன்றி: கலையகம் வலைப் பூ 

திங்கள், 31 அக்டோபர், 2011

7 - ஆம் அறிவு - ஆறாம் அறிவே இல்லாமல் எடுக்கப்பட்ட படம்...!

               பொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் என்றால் மூளையை கழட்டிவெச்சுட்டு தான் படத்தை பார்க்கவேண்டும். ஆனால் சமீபகாலமாக தான் தமிழ்ப் படங்கள் ஒரு புதிய பரிமாணத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. வெறும் ஆபாசங்களை  மட்டுமே வியாபாரமாக்கி  வருமானத்தையும் லாபத்தையும் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த தமிழ்த் திரைப்படங்கள் இப்போது தான் சமூகத்தை எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கின்றன. சமூகத்திலிருக்கும் அவலங்களையும் படம் பிடித்து காட்டத் தொடங்கியிருக்கின்றன. காதலில் ஆபாசத்தை கலந்து  கொச்சைப்படுத்தி வந்த திரைப்படங்கள் இன்று, காதலைக்கூட மென்மையாக, அழகாக, தரமானதாக காட்டத்தொடங்கியிருக்கின்றன.   அதற்கு காரணம் இப்போது வருகிற இளையத்தலைமுறை இயக்குனர்களின் சிந்தனையும், பார்வையும், அவர்கள் கற்ற பாடமும்  தான். 
              இப்படிப்பட்ட சூழலில் தான், சமீபத்தில் தீபாவளியன்று வெளியான இரண்டு தமிழ்ப் படங்களில் ஒன்று,  இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் மூளையில்   உதித்த ''ஏழாம் அறிவு'' என்ற திரைப்படம். வரலாற்று ஆராய்ச்சி - அறிவியல் ஆராய்ச்சி என பல ஆராய்ச்சிகளை  செய்து எடுக்கப்பட்ட திரைப்படமாக விளம்பரம் செய்யப்பட்டு, இளைஞர்களிடையே  பல்வேறு எதிர்ப்பார்ப்புகளை உண்டுபண்ணி திரையிடப்பட்ட  திரைப்படம் தான் இது.  அதனால் இளைஞர் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் படம் முழுதும் ஒரு ''உடான்ஸ்'' படமாக போனதில் இளைஞர்களுக்கு  ஒரு ஏமாற்றம் தான். வழக்கம் போல் காதில் பூ சுற்றுகிற வேலையை தான் இந்த படமும் செய்திருக்கின்றது.  
            இந்தப் படத்தில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், ''உண்மைக் கதை'' என்ற பெயரில் ''ஆறாம் அறிவு'' கூட  இல்லாமல் எடுக்கப்பட்டது இந்த ''ஏழாம் அறிவு'' திரைப்படம்.
                 எப்போதோ மன்னர்கள் ஆட்சி காலத்துல,  இந்தியாவிலேயே  பொறந்து ஆட்சி செஞ்சிகினு  வந்த போதிதர்மன் என்ற பல்லவ மன்னன்னு  ஒருத்தன்,  சீனாவுல  கொடிய உயிர்கொல்லி நோயினால  பாதிச்ச ஜெனங்களுக்கு  தன்னுடைய மருத்துவ திறனால் சீன மக்களை குணமாக்கியட்டாராமா..! இவனுடைய மருத்துவம் திரும்பவும்  இந்தாயாவுக்கே போயிடக்கூடாதுன்னு  சீனர்களே அவனுக்கு விஷம் கொடுத்து கொன்று  சீனாவிலேயே புதைச்சிட்டாங்களாம். இப்படி தானுங்க     அந்த ''கதை''  ஆரம்பமாவுது.
             பிறகு போதிதர்மனின் மரபணு சோதனைங்கறாங்க.. அந்த போதிதர்மனின் வாரிசான இன்றைய நூற்றாண்டு இளைஞன் ஒருத்தன கண்டுபிடிக்கறாங்க. அந்த பையன் கூட ஒப்புரான போதிதர்மன் மாதிரியே இருக்கானுங்க. இதெல்லாம்  நான் மெய்மறந்து பாத்துகிட்டு இருந்தேனுங்களா..! என் காத கவனிக்காம விட்டுட்டேனுங்க... திடீர்னு காதுல பார்த்தா... அய்யோ எவ்வளவோ பெரிய பூ என் காதுல சுத்தி வெச்சிருக்காங்க.. நான் பயந்து போயி பக்கத்துல இருக்கிறவங்கல பாத்தா  அவங்க காதிலேயும் அப்படி தான் பூவா சுத்தியிருக்காங்க...!
            இநதியாவுல  ஏதோ ஒரு மூலையில் இந்த பையன கண்டுபிடிச்ச விஷயம்  எப்படியோ  சீனாவுல  தெரிஞ்சு போயிடுதாம்.  அங்கிருந்து அவனை கொன்று சாகடிக்க ஒரு வில்லனை   அனுப்புராங்கலாம். அப்படி வருபவன் சீனாவிலிருந்து சும்மா வரவில்லை. இந்தியாவில் கொடிய விஷநோயைப் பரப்புவதற்கு கூடவே நோயை பரப்பும் வைரசையும்  கொண்டு வருகிறானாம்.
அந்த வைரசை ரோட்டில் திரியும் நாய்க்கு செலுத்துகிறானாம். இதுக்கு பேர் தான் Bio-war - உயிரியல் போராம். 
              இதை அப்படியே ஒரு சினிமாத்தனமாக - முட்டாள்தனமாக பார்க்கமுடியாது. இந்த திரைப்படத்தில் இல்லாத ஒன்றை சீனாவோடு சம்பந்தப்படுத்தி சீனாவை வம்புக்கு இழுப்பானேன். 
           ஏற்கனவே அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்திய மக்களை சீனாவிற்கு எதிராக திருப்பிவிடும் வேலையில் இறங்கியிருக்கிறது. அதற்கு பத்திரிகை மற்றும்  தொலைக்காட்சிகள் போன்ற ஊடகங்களை பயன்படுத்தி சீனாவிற்கு எதிரான பொய்ப்  பிரச்சாரத்தை செய்து வருகிறது. மக்களும் அதை உண்மை என்று நம்பும்படியாகத் தான் செய்யப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான், சீனாவைப்பற்றி தவறான தகவல்களை இந்தப் படம் தருகிறது.
            அறிவுப்பூர்வமான சிந்தனை இல்லாத அறிவியல் நுணுக்கங்களும், விளைவுகளை எண்ணாத வரலாற்று திரிபுகளும் எதிர்மறையாக அமைந்துவிடும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.  அவைகளை  யாராலும் ஒருபோதும் ஒப்புக்கொள்ள முடியாது.
             பயோ - வார் என்கிற உயிரியல் போர் என்பது இன்றைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்துகொண்டிருக்கிற வேலை என்பதை முதலில் அந்த திரைப்படத்தை தயாரித்தவர்களும், இயக்குனரும், கதாநாயகனும் தெரிந்துகொள்ளவேண்டும். ஒரு நாட்டைப்பற்றியோ அல்லது ஒரு பொருளைப் பற்றியோ எழுதுகிறோம் என்றால் முதலில் அதைப்பற்றிய தகவல்களை தேடவேண்டும். நிறைய படிக்கவேண்டும். பிறகு தான் அதைப்பற்றியான சரியான முடிவுக்கு வரமுடியும்.
             அப்படியெல்லாம் செய்யாமல் எடுக்கப்பட்ட இந்த படம் ஒரு அரை வேக்காடு தான். ''7 - ஆம் அறிவை'' எடுப்பதற்கு முன் ஆறாம் அறிவை பயன் படுத்தி இருக்கவேண்டும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
( பயோ-வாரைப் பற்றி பிறகு எழுதுகிறேன்..)