நினைவுகள் அழிவதில்லை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள் அழிவதில்லை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

நினைவுகள் அழிவதில்லை - தியாகிகளின் வீர வரலாறு அழிவதில்லை...!

      
    
          
இயக்குனர் மற்றும் படக்குழுவினருடன் நான்
           புதுச்சேரி சி.ஐ.டி.யு சார்பில், இயக்குனர் பகத்சிங் கண்ணன் இயக்கத்தில் உருவான ''நினைவுகள் அழிவதில்லை'' திரைப்படத்தை புதுவை ராஜா திரையரங்கில் நேற்றும், இன்றும் காலை 9.30 மணி காட்சியாக திரையிடப்பட்டது.
            குத்துப்பாட்டு, வன்முறை, பலாத்காரம், வெட்டுக்குத்து, டுமில்... டுமில்..., கொலை, இரட்டை அர்த்த வசனங்கள் என அனைத்து மசாலாக்களும் கலந்தப் படங்களை மட்டுமே போட்டிப்போட்டுகொண்டு திரையிடப்படும் இன்றைய சூழ்நிலையில், மேலே சொன்ன எவையும் இல்லாமல் தேசபக்தி, வீரம், தோழமை, அரசியல் விடுதலை, சமூக விடுதலை, பொருளாதார விடுதலை, கோபமூட்டும் வசனங்கள், விரசமில்லாத காதல் போன்ற சினிமாவிற்கே இல்லாத இலக்கணங்களோடு ''மாற்றத்திற்காக'' மாறுபட்டு எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் தமிழக திரையரங்குகள் திரையிடுவதற்கு தயங்கின என்பது வெட்கக்கேடானது.
           இந்த சூழ்நிலையில் தான் தமிழகத்திலுள்ள இடதுசாரி தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு., அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சங்கம், விவசாயிகள் சங்கம் என பல்வேறு அமைப்புகளும் இணைந்து திரையிட முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடனும் நிதியுடனும் நேற்றும், இன்றும் காலை காட்சியில் மட்டும் திரையிட முயற்சி செய்யப்பட்டு, கடினமான ஏற்பாடுகளுக்கு பின் திரையிடப்பட்டது.
          நான், என் மனைவி மற்றும் மகள்கள் மட்டுமல்லாது, எல்.ஐ.சி முகவத்தோழர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், டாக்டர் அம்பேத்கர் பயிற்சி வகுப்பில் படிக்கும் மாணவ- மாணவியர் என 30 பேர் இன்று ஒரே காட்சியில் அந்த திரைப்படத்தை பார்த்தோம் என்பது மறக்க முடியாத இனிமையான நிகழ்ச்சியாகும். இயக்குனர் பகத்சிங் கண்ணன் அவர்களும், அந்த திரைப்படத்தில் நடித்த கலைஞர்களும் தோழர்களோடு தோழர்களாக சேர்ந்து படம் பார்த்தார்கள். அரங்கு நிறைந்த காட்சி என்பது மனதிற்கு நிறைவைத் தந்தது.
         நினைவுகள் அழிவதில்லை - இந்திய விடுதலை என்பது கத்தியின்றி, இரத்தமின்றி, யுத்தமின்றி, சத்தமின்றி யாசித்துப்பெற்றதல்ல. மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மற்றும் கையூர் தியாகிகள் அப்பு, மணி, அபுபக்கர், சங்கர் போன்ற வீர இளைஞர்கள் தூக்குமேடை ஏறி உயிர்த்தியாகம் செய்து பெற்ற சுதந்திரம் இது என்பதை உணர்த்தும் திரைப்படம் இது. இந்த தேசத்தின் விடுதலையைப் பெற்றுத் தந்ததில் செங்கொடி இயக்கத்திற்கும் மாபெரும் பங்கிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் புரட்சிகரத் திரைப்படம் இது. ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கும், பண்ணையாரின் சுரண்டலுக்கும் அடங்கிப்போன கையூர் மக்களை அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் எதிராக எழுச்சிபெற்ற வீர வரலாற்றை திரை ஓவியமாக நம் கண் முன்னே நிறுத்திய இயக்குனர் பகத்சிங் கண்ணன் அவர்களை நிச்சயம் நெஞ்சாரப் பாராட்டவேண்டும். நாட்டைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், சமூக அக்கறையுமில்லாமல் இலாபம் ஒன்றே குறிக்கோளாக திரைப்படம் எடுப்போர் மத்தியில் இப்படியொரு திரைப்படத்தை உருவாக்கிய அத்துணை நல்லிதயங்களுக்கும் புரட்சிகர நல்வாழ்த்துகள்.
         நம் நாட்டின் மறைக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வரலாறுகளும், விடுதலைப் போராட்டத்தலைவர்களும் ஏராளம்...ஏராளம். அப்படி மறைக்கப்பட்ட வரலாற்று வரிசையில் கையூர் தியாகிகள் வரலாறும் ஒன்று. அந்த வீர வரலாற்றுச் செய்திகள் கொஞ்சமும் தொய்வில்லாமல் படமாக்கப்பட்டு காட்டப்படுகிறது. ஆங்காங்கே அனல்தெறிக்கும் வசனங்கள், உணர்ச்சிமிக்க பாடல்கள், இயக்கத்தோடு கலந்த காதல், புரட்சிகர இயக்கம் செய்யும் மாற்றங்கள், அடக்குமுறைக்கு எதிரான முழக்கங்கள் என பல இடங்களில் தோழர்களின் கைத்தட்டல்களையும், ஆரவாரங்களையும் கேட்க முடிந்தது. ஏராளமான காட்சிகளில் வசனங்கள் மெய்சிலிர்க்கச் செய்கின்றன. அதேப்போல் படத்தில் வரும் பல சம்பவங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றன. மொத்தத்தில் படம் அருமை. ஒரு வீர வரலாற்றை தெரிந்து கொண்டோம் என்ற மனநிறைவை ஏற்படுத்தியது. மனம் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. மனசுக்குள் ஒரு தாக்கத்தை உண்டுபண்ணிவிட்டது இந்தத் திரைப்படம்.
         கல்வி கற்றுக்கொடுக்கும் போதே அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் எதிராக மாணவர்களை தயார்படுத்தும் பள்ளி ஆசிரியராக இயக்குனர் பகத்சிங் கண்ணனே அருமையாக நடித்திருக்கிறார். ஒரு ஆசிரியர் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு சரியான இலக்கணம் வாழ்ந்திருக்கிறார் அந்த கையூர் ஆசிரியர். உண்மையிலேயே அந்த ஆசிரியரைப் பார்த்து இன்றைய சமூக அக்கறையில்லாத பள்ளி ஆசிரியர்கள் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.
        உங்கள் ஊரில் இந்த திரைப்படத்தை திரையிட்டால் உங்கள் குடும்பத்துடன், நண்பர்கள்,  உறவினர்களுடன், தோழர்களுடன் கண்டிப்பாகப் பாருங்கள்.   

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

நினைவுகள் அழிவதில்லை - திரைப்படம்

 
 கட்டுரையாளர் : அ. குமரேசன்     
                             ஆசிரியர், தீக்கதிர்     
                   இன்று தங்களது உரிமைகளைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடுகிற எளிய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் அழியாமல் இருக்க வேண்டிய நினைவு, கேரளத்தின் கையூர் தோழர்கள் போராட்டம். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நடந்த நாட்டு விடுதலைப் போராட்டம், ஆட்சியாளர் ஆசியோடு வட்டார ஜமீன்தார்களும் பண்ணையார்களும் வளைத்துப் போட்டிருந்த நிலங்களை மீட்பதற்கான போராட்டம் இரண்டும் இணைந்த மகத்தான வரலாறு அது. 1940களில் பரவிய அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கையூர் கிராமத்துக்கு அனுப்பப்பட்ட ஒரு காவலரை மக்கள் சூழ்ந்து கொள்ள, தப்பித்து ஓடிய அவர் ஒரு ஆற்றில் குதித்ததும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதும், அதை ஒரு சாக்காகப் பயன்படுத்திக்கொண்ட காவல்துறையினர் பெரும்படையாக ஊருக்குள் புகுந்து வேட்டையாடியதும், கொலைக்குற்றம் சாட்டப்பட்ட அப்பு, சிறுகண்டன், குஞ்ஞாம்பு நாயர், அபுபக்கர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டதும், இந்திய விவசாயிகள் இயக்கத்தின் முதல் தியாகிகளாக அவர்கள் வீர முழக்கமிட்டதும் மக்களுக்காகப் போராட முன்வருவோருக்கெல்லாம் மிகப்பெரும் ஈர்ப்பு விசையாக அமைந்த அத்தியாயங்கள்.
           இறுதி நாட்களின்போது தங்களைச் சந்திக்க வந்த தோழர்களிடமும் குடும்பத்தினரிடமும் அவர்கள் கேட்டுக்கொண்டது: “எங்களுக்காக யாரும் அழ வேண்டாம். ஆனால் நாங்கள் எதற்காகத் தூக்குமேடை ஏறினோம் என்ற கதையை எல்லோருக்கும் சொல்லுங்கள்.” நாடு முழுவதும் எடுத்துச் சொல்லப்பட வேண்டிய அவர்களது கதையை, அன்று எழுத்தாளர் நிரஞ்சனா கன்னடத்தில் எழுதினார். கன்னடத்திலிருந்து மலையாளத்திற்குச் சென்றது, தமிழில் தோழர் பி.ஆர். பரமேஸ்வரன் மொழிபெயர்ப்பில் ‘நினைவுகள் அழிவதில்லை’ என்ற நாவலாக வந்தது. தமிழகத்தில் பெரும்பகுதி மக்களிடம் இவர்களது கதையைச் சொல்கிற நோக்கத்துடன் வந்திருக்கிறது இந்தப் படம். தமிழகப் பின்னணியில் கச்சிதமாகப் பொருத்திக் கூறப்பட்டிருப்பது படத்தின் ஒரு சிறப்பு.
          தாங்கள் கஞ்சி குடிப்பதற்கு வழியில்லாதவர்களாக, அதன் காரணம் என்னவென்றும் தெரியாதவர்களாக இருந்த மக்களிடம் அரசியல் உண்மைகள் முதல் உழைப்புச் சுரண்டல் ரகசியம் வரையில் விளக்குகிறார்கள் இளம்தோழர்கள். கிராமப்பள்ளிக் குழந்தைகளின் ஆசிரியராக வருகிறவர் பள்ளிக்கு வெளியே பெரியவர்களுக்கு இந்தப் பாடங்களை விளக்குகிறார். உண்மையின் ஒளியில் உள்ளம் தெளிவாகும் விவசாயத் தொழிலாளிகளின் போர்க்குரல் அரசுக் கோட்டைக் கதவுகளோடு வட்டார நில முதலையின் மாளிகைச் சுவரையும் உடைக்கவல்லதாய் எழுகிறது... அந்தப் போராளிகள் தாக்குதல்களை எதிர்கொள்வதும், காதல் - திருமணம் - குடும்பம் ஆகிய வாழ்க்கை இன்பங்களை இழக்க நேரிடுவதும் அன்று அவர்கள் தங்கள் முதுகைக் கொடுத்துப் போட்ட சாலையில்தானே நாம் இன்று பயணிக்கிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, பல இடங்களில் கண் கலங்கச் செய்கின்றன.
           திரைப்பட ஆக்கத்தின் முக்கியமான வெற்றி இது. எதற்காக அன்றைய தலைமுறையின் கதையை இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும்? இக்கால நகரம் ஒன்றில், வீட்டுமனை கொள்ளை வர்த்தகத்துக்காக, இன்றைய சுயநல அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்தோடும், அதிகாரவர்க்கத்தின் துணையோடும் எளியவர்களின் குடியிருப்பிடங்களைக் கைப்பற்றுகிறது ஒரு கும்பல். அதைத் தட்டிக்கேட்கும் சில இளைஞர்கள் மீது வன்முறை வழக்கு பாய்கிறது. தப்பிப்பதற்காக ஊரைவிட்டு ஓடுகிற அந்த இளைஞர்கள் ஒரு நண்பனின் கிராமத்தை வந்தடைந்து, அங்கே இந்த வரலாற்று வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவரான ஒரு பெரியவரைச் சந்திக்கிறார்கள். அவர், இவர்களுக்கு தன் நினைவில் அழியாத கதையைக் கூற, வரலாறு திறக்கிறது. பெரியவர் கதையைச் சொல்லி முடிக்கிறபோது, அந்த இளைஞர்கள் தாங்கள் தொடர்ந்து இயங்க வேண்டிய களம் எது என்ற ஞானம் பிறந்தவர்களாக நகரத்திற்குத் திரும்புகிறார்கள். படத்தின் இந்த முடிப்பு, இடையுறாமல் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரட்சிகர மக்கள் இயக்கங்களில் பங்கேற்பதன் தேவையை உணர்த்துகிறது. “எங்கள் கதையை எல்லோருக்கும் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டவர்களின் எதிர்பார்ப்பு இதுவாகத்தானே இருக்க முடியும்?
            போராளியின் காதலி போராட்டத் தகவல்களைக் கொண்டுசேர்க்கிற தொண்டராகவும் பங்களிப்பது கிராமத்துப் பசுமையின் ஈரம். இவர்களுக்கு வழிகாட்டுகிற ஆசிரியர் எல்லா ஊர்களிலும் தேவைப்படுகிற தோழர். போராளிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை இறுக்கமாக அமைத்து, ஏழைகளின் உழைப் பையும் அவர்கள் வீட்டுப் பெண்களையும் சூறையாடுகிற ஜமீன்தார் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நகைச்சுவையை சேர்த்திருப்பது இறுக்கத்தைத் தளர்த்த உதவுவதோடு, சுரண்டல் கும்பல்களை எள்ளலுக்கு உரியவர்களாகச் சித்தரிப்பதாகவும் அமைந்திருக்கிறது
            குகன், அருண், காயத்ரி, அமரமணி உள்ளிட்டோர் கதாபாத்திரங்களின் முக்கியத் துவத்தை மனதில் உள்வாங்கிக்கொண்டு நடித்திருக்கிறார்கள். கூடவே ஒத்துழைத்துள்ள கூத்துக் கலைஞர்களும் நாடகக் கலைஞர்களும் கையூர் மக்களைக் கண்முன் நிறுத்துகிறார்கள்.காதலின் மென்மை, செங்கொடி இயக்கத்தின் கம்பீரம் இரண்டையும் கவித்துவச் சொற்களோடு பதிவு செய்திருக்கும் தனிக்கொடி, நா.வே. அருள், சி.எம்.குமார் ஆகியோரின் உயிர்ப்பான பாடல்களுக்கு இசையால் உடல் வார்த்திருக்கிறார் இசையமைப்பாளர் பி.ஆர். ரஜின். நாற்பதாம் ஆண்டுகளின் கிராமத்தைக் காட்டியிருக்கிறார் கலை இயக்குநர் இளஞ்செழியன்.
                மேலிருந்து பார்க்கிற கோணத்தில் நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. கதைமாந்தர்களின் சொந்த வாழ்க்கைக் கோணத்திலிருந்து பகிர்ந்து கொள்வதாகத் திரைக்கதை அமைக்கப்படவில்லை. ஆயினும் செய்தியைச் சொல்கிற ஆவணப் பதிவாகிவிடாமல் உணர்வைப் பகிர்ந்து கொள்கிற கலைப் படைப்பாக வந்திருப்பது தொகுப்பாளர் பீ.லெனின் பங்களிப்பு.
          பிரச்சாரத்திற்காகத்தான் இந்தப் படைப்பு என்பதை ஒளிவு மறைவில்லாமல் ஒப்புக்கொண்டு, ஆனால் பிரச்சார நெடி அளவு மிஞ்சிடாமல் உருவாக்கியிருப்பது இயக்குநர் பகத்சிங் கண்ணன் உழைப்பு.
            ஒரு பாடல் காட்சிக்கே கோடிக்கணக்கில் செலவிடப்படுகிற, ஒரு முகத்தை நெருக்கமாகக் காட்டுவதற்கே பல்லாயிரம் ரூபாய் தேவைப்படுகிற தொழில்நுட்ப வணிகச் சூழலில் ஒரு சவால்மிக்க பணியைச் செய்திருக்கிறார்கள் அக்னி கலைக் கூடத்தினர்.
            மக்களின் நினைவில் அழியாமல் பதிய வைக்க வேண்டிய கதையைச் சொல்கிற இந்த ஆக்கம் மக்களிடம் பரவலாகச் செல்வது மாற்றத்திற்காகப் போராடுகிற இயக்கங்களின் கையில் இருக்கிறது.

(‘நினைவுகள் அழிவதில்லை’ திரைப்படம் இன்று திரையரங்குகளுக்கு வருகிறது. ‘தீக்கதிர்’ ஏப்ரல் 9 இதழில் வெளியான எனது பட அறிமுகக் கட்டுரை இது.)