ஊடகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊடகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 ஜூலை, 2015

ஹேமமாலினி கார் விபத்தில் மரணமடைந்த குழந்தை...!


              முன்னாள் இந்தி திரைப்பட நடிகையும், மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாக்கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினி சென்ற கார் நேற்றிரவு இராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் செல்லும் வழியில் தவுசா என்ற இடத்தில் அதிக வேகமாக சென்றதால், கட்டுப்பாடு இழந்து எதிரில் வந்த காருடன் மோதியதில் அம்மையாருக்கு முகத்தில் ''பலத்த'' அடிப்பட்டு, நெற்றியில் ''பலத்த'' காயமும் ஏற்பட்டு உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார். அனால் அவர் உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை. உடனே அம்மாநில சுகாதார அமைச்சர் மருத்துவமனைக்கு ஓடிப்போய் பார்க்கிறான். மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே மருத்துவமனைக்கே நேரில் போய் காயமடைந்த அம்மையாரை பார்த்து மக்கள் பணி ஆற்றினார். 
               ஒரு நடிகை தடுக்கி விழுந்தாலும் மிகப்பெரிய செய்தியாக ஆக்கிவிடும் இந்த நாட்டில், ஹேமமாலினியின் கார் விபத்தும், நெற்றிக்காயமும் பரபரப்பான செய்தியாகவே அன்றிரவு தீயாய் பரவியது. ''பரபரப்பான - சூடான செய்திகளே''    இல்லாமல் காய்ந்து போய்கிடந்த நம்ப பத்திரிக்கைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் மிகப்பெரிய விருந்தாக இந்த நடிகையின் செய்தி கிடைத்துவிட,  ஒரே பரபரப்பை உண்டாக்கி மின்னல் வேகச் செய்தியாக மாறிவிட்டது. ஆனால் எல்லா பத்திரிக்கைகளும், ஊடங்களும் வரம்பு மீறி காரை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தினால் உண்டான நடிகையின் நெற்றிக்காயங்களுக்கு கவலைப்பட்டார்களே தவிர, அந்த நடிகையின் கார் எதிரில் வந்த காரில் வேகமாக மோதியதால்,  அந்த காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த  அனைவரும் பலத்த காயம் அடைந்ததோடல்லாமல், அவர்களின் நான்கு வயதே ஆன குழந்தை அந்த இடத்திலேயே மரணம் அடைந்து  மிகப்பெரிய கொடுமையான சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால் அதைப்பற்றி எந்த பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், ஏன் அந்த குழந்தையின் மரணத்திற்கு காரணமான அந்த நடிகையும் கவலைகொள்ளவில்லை என்பது தான் உண்மை. 
           அது மட்டுமல்ல நடிகையை மருத்துவமனைக்கு ஓடோடி வந்து அக்கறையுடன் பார்த்த இராஜஸ்தான் முதலமைச்சரும்,  சுகாதார அமைச்சரும் நடிகைக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால்  இறந்து போன அந்த குழந்தையைப் பற்றியோ அல்லது பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த குடும்பத்தை பற்றியோ அவர்கள் எந்தவிதமான கவலையும் கொள்ளவில்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை.  

திங்கள், 21 ஜனவரி, 2013

ராகுல் Vs மோடி - கருத்தைத் திணிக்கும் ஊடகங்கள்...!




என்னுடைய இந்த படைப்பு வண்ணக்கதிரில் பிரசுரமானது
**********************************************                      
        அனேகமாக இன்று எல்லா செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், வலைத்தளங்களிலும் ஒரே தலைப்பைக் கொண்ட பட்டிமன்றங்கள் தான். பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் தங்களது ''கருத்துத் திணிப்பு'' வேலையை ஆரம்பித்துவிட்டார்கள்.  ''ராகுல் Vs மோடி'' - 2014 தேர்தலில் வெற்றிப்பெறப் போவது யார்...? என்பது தான் இன்றைக்கு சூடான செய்தியாக மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக 2014 தேர்தல் வரை இந்த செய்தி தான் ஓடிக்கொண்டிருக்கும். மக்களிடையே கட்டாய கருத்தைத் திணிக்கும் வேலையை  இன்று பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் தொடங்கிவிட்டன. இவர்களுக்கு தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனையை விட  யார் வெற்றிப் பெற்றுவிடக் கூடாது என்ற சிந்தனையில் தெளிவாக இருக்கிறார்கள். இதைத் தான் அமெரிக்காவும், அந்நிய - இந்திய பெருமுதலாளிகளும் எதிர்ப்பார்க்கின்றனர்.  காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா...?  பா. ஜ. க ஆட்சிக்கு வருமா...? ராகுல் வந்தா நல்லாயிருக்குமா...? மோடி வந்தா நல்லாயிருக்குமா...? இப்படியான கருத்துக்கள் மக்கள் மத்தியில் திணிக்கப்படுகின்றன. அந்த இரண்டு பேரில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அமெரிக்காவிற்கும், அந்நிய - இந்திய பெருமுதலாளிகளுக்கும் சந்தோசம் தான். ஆனால் எந்த காரணம் கொண்டும் மக்களின் மூன்றாவது பார்வை இடதுசாரிக் கட்சிகள் மீது திரும்பிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அதுவும் 2004 தேர்தலைப் போல் இடதுசாரிக் கட்சிகள் 62 இடங்களில் வெற்றிபெற்றது போல் இந்த முறையும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக  இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதற்கான பிள்ளையார் சுழியை தான் இன்று ஊடகங்கள் போட்டிருக்கின்றன.
            ஆனால் உண்மை என்னவென்றால், அந்த இரண்டு கட்சிகளில் எது ஆட்சிக்கு வந்தாலும், இந்த இரண்டு பேரில் யார் பிரதமாராக வந்தாலும் இந்த நாடு நாசமாக போய்விடும் என்பதையும்,  மக்கள் மோசம் போவார்கள் என்பதையும் இந்திய மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.
               கடந்த பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான கூட்டணியின் தவறான ஆட்சியினாலும், இன்றைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணியின் தவறான  ஆட்சியினாலும் நாட்டில் ஏற்பட்டிருக்கும் விலைவாசி உயர்வு மற்றும் ஊழல்களில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவிக்கும் இந்திய மக்களுக்கு தப்பித்தவறிக்கூட ''மாற்று சிந்தனை'' வந்துவிடக்கூடாது என்கிற பயம் அமெரிக்கா மற்றும் அந்நிய - இந்திய பெருமுதலாளிகளுக்கு இருக்கின்றன என்பது தெளிவாக தெரிகிறது. இடதுசாரிக்கட்சிகள் மீது மக்களின் பார்வை திரும்பி விடக் கூடாது என்பதற்காகத் தான் இப்படிப்பட்ட கருத்துத் திணிப்பை இன்றைக்கு ஊடகங்கள் அவசர அவசரமாக கையில் எடுத்துக்கொண்டுள்ளது.
             அதுமட்டுமல்ல, இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஜனநாயகப்பூர்வமான பலக் கட்சி அரசியல் முறை என்பது அமெரிக்காவிற்கு பல ஆண்டுகளாக எரிச்சலூட்டும் விஷயமாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ளது  போல் ''இரண்டு கட்சி ஆட்சி முறையை'' இந்தியாவிற்குள்ளும்  திணிப்பதற்கு பல ஆண்டுகளாக அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. இந்த ஆட்சி முறையை தான் அந்நிய - இந்திய பெருமுதலாளிகளும் விரும்புகின்றனர். அதற்காகத் தான் இந்திய மக்களின் எண்ணங்களில் அதற்கான கருத்துக்களை திணிக்க வேண்டிய கட்டாயத்தில்  இன்றைய ஊடகங்கள் இறங்கியுள்ளன.
             யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை மக்களின் ''வாக்குரிமை'' சம்பந்தப்பட்டது. மக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு சுதந்திரமான சிந்தனைகள் தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இது போன்றக் கருத்துத் திணிப்பு என்பது மக்களின் சுதந்திரமான எண்ண ஓட்டங்களை - சுதந்திரமான சிந்தனைகளை தடை செய்கின்ற விஷயமாகும். இது தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்ல. பத்திரிகை ஜனநாயகத்திற்கும் எதிரானது. கருத்து திணிப்பு என்பது கருத்து சுதந்திரமல்ல. அது போல் செய்வது என்பது பத்திரிகை தர்மமுமல்ல என்பதை பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சிக்காரர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.
           ஊடகங்கள் இத்தோடு நிற்கமாட்டார்கள், அடுத்து வரும் காலங்களில் ''தேர்தல் கருத்துக் கணிப்பு'' என்ற பெயரில் இன்னொரு கருத்துத் திணிப்பை நடத்துவார்கள். கருத்துக் கணிப்பு என்கிற முடை நாற்றமெடுத்த குப்பைகளை மக்களின் மூலைகளில் வண்டி வண்டியாய் கொட்டுவார்கள். தேர்தலுக்கு முன்பே கருத்துக் கணிப்பு என்ற பெயரில் இவர்களாகவே தேர்தல் முடிவுகளை அறிவித்துவிடுவார்கள். இவர்களாகவே பதவியேற்பு விழாவையும் நடத்தி முடித்துவிடுவார்கள். இப்படித் தான் மக்கள் நடக்கவேண்டும் என்கிற தங்களின் விருப்பத்தை இப்படியெல்லாம் திணிப்பார்கள். வாக்காளர்களின் வாக்குரிமை என்பது வாக்களிக்கும் உரிமை மட்டுமல்ல. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தேர்ந்தெடுக்கும் உரிமையும் சேர்ந்தது தான் என்பதை மக்கள் உணர வேண்டும். இது போன்று கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்களின் எண்ண ஓட்டங்களை - சிந்தனை ஓட்டங்களை தங்கள் விருப்பப்படி திசைமாற்றுவது என்பது வாக்களர்களின் வாக்குரிமைக்கு எதிரானது என்பதையும், ஜனநாயகத்திற்கு முரணானது என்பதையும்  ஊடகங்களுக்கு மக்கள் தான் பாடம் கற்பிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அந்த வேலையை செய்யாது.   அல்லது தலைமைத் தேர்தல் ஆணையம் வழக்கம் போல் இது போன்ற ''கருத்துத் திணிப்புகளையும், கருத்துக் கணிப்புகளையும்'' வேடிக்கைப் பார்க்காமல், ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட செயல்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும். மக்களுக்கு வாக்களிப்பு சம்பந்தமான சுதந்திரமான சிந்தனைகளுக்கும், சுதந்திரமான தேர்தலுக்கும் தேர்தல் ஆணையம் உத்திரவாதப்படுத்தவேண்டும்.

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

ஊரு ரெண்டுபட்டா ஊடகங்களுக்கு தான் கொண்டாட்டம்...!

                     ''ஈரைப்  பேன் ஆக்கி... பேனை  பெருமாள் ஆக்கிறதுன்னு''  ஒரு பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வேலையை இன்றைக்கு ஊடகங்கள் ரொம்பப் பிரமாதமா செய்யறாங்க
               இன்றைக்கு முல்லைப்பெரியாறு அணை  சம்பந்தமான பிரச்சனை என்பது தமிழகத்திலும் கேரளாவிலும் பற்றி எரிகிற பிரச்சனையாக இருக்கிறது. இந்த இரண்டு மாநிலங்களின் எல்லைப்பகுதிகளிலும் பதற்றமாக இருக்கிறது. இவ்விரண்டு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் மோதிக்கொள்கிறார்கள். உணர்வுப்பூர்வமாக எழுந்துள்ள இந்த பதற்றங்களை தணிப்பதற்கு எந்தவிதமான   முயற்சிகளையும்  செய்யாமால், அந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்கும்  வேலையை   தான் இன்றைக்கு ஊடகங்கள் செய்துவருகின்றன.
              பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் தனியார் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்ததிலிருந்து மக்களின் உணர்ச்சிகளையும், வேதனைகளையும் காசாக்கி அதில் இலாபம் கொழிக்கும் வெறியோடு தான் ஊடகங்கள் அலைகின்றன. 
                 அப்படித் தான் ஒரு முறை ''அப்போதைய முன்னாள் முதல்வர்'' செல்வி ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போது அவரது ''ரத்தத்தின் ரத்தங்கள்''  சேலம் அருகில் கல்லூரி மாணவிகள் வந்த பேருந்தினை மாணவிகளோடு கொளுத்தினர். அதில் நான்கு மாணவிகள் பரிதாபமாக இறந்துபோனார்கள் என்பதை நீங்கள் மறந்திருப்பீர்கள். அந்த பஸ் எரியும் போது அருகில் இருந்த சன் தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள், எரியும் அந்த பஸ்ஸில் மாணவிகளும் சேர்ந்து  எரிகிறார்களே என்று பதட்டப்பட்டு அவர்களை காப்பாற்ற முயற்சி செய்யாமல், அந்த பஸ்சும் மாணவிகளும் எரிவதை நிதானமாக படம் எடுத்து அதை சன் தொலைக்காட்சியில் திரும்பத்திரும்பக் காட்டி காசாக்கினார்கள்.
               ஊடகங்கள் இன்று மனசாட்சியே இல்லாமல் இலாப நோக்கத்தோடு நடந்துகொள்வது என்பது வருத்தமளிக்கும் விஷயமாகும். ''BREAKING NEWS'', ''சற்று முன்'' என உணர்ச்சிமிக்க செய்திகளை தொடர்ந்து தொலைக்காட்சிகளில் காட்டிக்காட்டி கோடிக் கோடியாய்  சம்பாதித்து  விடுகின்றனர்.
               இது போன்ற சூடான செய்திகளை - உணர்ச்சிமிக்க செய்திகளை தொலைக்காட்சிகள் மட்டும் காசாக்குவதில்லை. பல தினப்பத்திரிக்கைகளும், வாரப்பத்திரிக்கைகளும்  கூட இப்படித் தான் பரப்பரப்பாக செய்திகளை போட்டு பத்திரிக்கையின் விற்பனையை கூட்டிவிடுகின்றனர்.      
             கொலை, கொள்ளை, திரைப்பட கலைஞர்களின் கிசுகிசு, அரசியல்வாதிகளின் அந்தரங்கம்,   சாமியார்களின் பாலியல் இவைகளெல்லாம் ஊடகங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் ரொம்ப சுவாரசியமாக பத்திரிகைகளில் பல மாதங்களுக்கு எழுதி தள்ளிவிடுவார்கள். தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பிக்கொண்டே இருப்பார்கள். இவைகளினால் இவர்களுக்கு கோடிக் கோடியாய் கொட்டிக்கொண்டே இருக்கும்.
             ஆனால் இவர்கள் ஒரு தொழிற்சங்கமோ அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளோ நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக, உழைப்பாளி மக்களுக்காக நடத்தும் இயக்கங்களையோ அல்லது போராட்டங்களையோ ஒரு சிறு துளி  கூட  தொலைக்காட்சிகளில் காட்ட மாட்டார்கள். பத்திரிகைகளில் அச்சிட மாட்டார்கள். இதை கூசாமலும் அச்சப்படாமலும் இன்றைய ஊடகங்கள் செய்கின்றன. இவர்களாகவே கூட மக்கள் பிரச்சனைகளையோ  - சமூக அவலங்களையோ   படம்பிடித்துக்காட்டவார்களா என்றால் -  பிரசுரிப்பார்களா என்றால் அதை செய்யமாட்டார்கள். ஏனென்றால் அதில் அவர்கள் எதிர்ப்பார்ப்பது போல் வருமானமோ இலாபமோ வராது என்பது தான் காரணம்.
இதில் இலாபம் கிடைக்கின்றது என்றால் மகாராஷ்டிரா மாநிலத்திலும், ஆந்திர மாநிலத்திலும் தினம் தினம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு சாகிறார்களே. அதை காட்டியிருப்பார்கள்.
              இப்படித்தான் இன்றைக்கு இலாபவெறி பிடித்து ஊடகங்கள் முல்லைப்பெரியாறு பிரச்சனைகளை ஊதி பெரிதாக்கி அதில் இலாபம் சம்பாதிக்க, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு  ஊடகங்களின் கண்களும், பார்வைகளும் தமிழக - கேரள  எல்லைப்பகுதி சூடான - பரப்பரப்பான செய்திகளுக்காக  உறங்காமல்  காத்துக்கொண்டிருக்கின்றன. இப்போதும் இந்த இரு மாநிலங்களின் இரண்டு எல்லைப்பகுதிகளிலும் இந்த ஊடகங்களின் காமிராக்கள் இரவும் பகலும் ''ஏதாவது நடக்காதா'' என்று நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு  கால் கடுக்க நின்றுகொண்டிருக்கின்றன.
              உலகமயம் - தாராளமயம் - தனியார்மயம் - இவைகளுக்கு வருமானம் - இலாபம் குவிப்பு - சொத்து சேர்ப்பு - இவைகள்   மட்டுமே தெரியும். மனிதநேயம் - ஒற்றுமை - ஒருமைப்பாடு - இவைகளைப் பற்றி அறியாது. அதைப்பற்றி கவலையும் படாது.

சனி, 9 ஜூலை, 2011

கருணாநிதியும் மமதையும் ஒட்டிப்பிறந்தது..!

"உலகிலேயே, குறிப்பாக இந்தியாவில் மீடியாக்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திவிட முடியும். அதற்குத் தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல'' என்று  சமீபத்தில் கொக்கரித்திருக்கிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இது புதிதல்ல. ஆட்டைக்கடிப்பதும், மாட்டைக்கடிப்பதும் கருணாநிதிக்கு ஒன்றும் புதிதல்ல. வழக்கமான ஒன்று தான். கடந்த இவரது குடும்ப ஆட்சியில் தான் குடும்ப உறுப்பினர்கள் ஆடிய ஆட்டத்தையும் கொட்டத்தையும் அடுக்கடுக்காக ஆதாரத்தோடு ஊடகங்கள் வெளியிட்டபோது திருடனுக்கு தேள் கொட்டியது போல் உள்ளுக்குள்ளேயே வெந்துகொண்டிருந்த கருணாநிதி, நேற்று மகள்.. இன்று பேரன் என ஒவ்வொருவராக விசாரணை வையத்துக்குள் வரும்போது கொதித்துப்போய் ஊடகங்களின் மீது வார்த்தைகளைக் கொட்டுகிறார். ஊடகத்தின் மூலம் தனக்கு வேண்டாதவர்களை இழிவுபடுத்தும் வழிமுறைக்கு வித்திட்டதே கருணாநிதியும் அவர் சார்ந்த இயக்கமும் தான் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. கடந்த காலங்களில் காமராஜ், பக்தவத்சலத்தில் தொடங்கி, இன்று எம் ஜி ஆர்., ஜெயலலிதா வரை  யார் யாரையெல்லாமோ, ஊடகம் கையிலிருக்கிறது என்கிற மமதையிலும் இறுமாப்பிலும் இழிவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடியபோது கிடைக்காத ஞானோதயம் இப்போது தனது மகளும், பேரனும் "மெகா' ஊழலில் ஈடுபட்டு சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு சீரழியும் போதுதான் கருணாநிதிக்கு ஏற்பட்டிருக்கிறது. அவரது குறளோவியத்தில் ''பிறர்க்கின்னா முற்பகல் செயின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்'' என்ற குறளுக்கு என்ன பொருள் எழுதியிருக்கிறார் என்பதை படிக்கச் சொல்லுங்கள். இந்த வயசிலாவது புரிகிறதா என்று பார்ப்போம்.