முன்னாள் இந்தி திரைப்பட நடிகையும், மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினி சென்ற கார் நேற்றிரவு இராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் செல்லும் வழியில் தவுசா என்ற இடத்தில் அதிக வேகமாக சென்றதால், கட்டுப்பாடு இழந்து எதிரில் வந்த காருடன் மோதியதில் அம்மையாருக்கு முகத்தில் ''பலத்த'' அடிப்பட்டு, நெற்றியில் ''பலத்த'' காயமும் ஏற்பட்டு உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார். அனால் அவர் உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை. உடனே அம்மாநில சுகாதார அமைச்சர் மருத்துவமனைக்கு ஓடிப்போய் பார்க்கிறான். மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே மருத்துவமனைக்கே நேரில் போய் காயமடைந்த அம்மையாரை பார்த்து மக்கள் பணி ஆற்றினார்.
ஒரு நடிகை தடுக்கி விழுந்தாலும் மிகப்பெரிய செய்தியாக ஆக்கிவிடும் இந்த நாட்டில், ஹேமமாலினியின் கார் விபத்தும், நெற்றிக்காயமும் பரபரப்பான செய்தியாகவே அன்றிரவு தீயாய் பரவியது. ''பரபரப்பான - சூடான செய்திகளே'' இல்லாமல் காய்ந்து போய்கிடந்த நம்ப பத்திரிக்கைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் மிகப்பெரிய விருந்தாக இந்த நடிகையின் செய்தி கிடைத்துவிட, ஒரே பரபரப்பை உண்டாக்கி மின்னல் வேகச் செய்தியாக மாறிவிட்டது. ஆனால் எல்லா பத்திரிக்கைகளும், ஊடங்களும் வரம்பு மீறி காரை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தினால் உண்டான நடிகையின் நெற்றிக்காயங்களுக்கு கவலைப்பட்டார்களே தவிர, அந்த நடிகையின் கார் எதிரில் வந்த காரில் வேகமாக மோதியதால், அந்த காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் பலத்த காயம் அடைந்ததோடல்லாமல், அவர்களின் நான்கு வயதே ஆன குழந்தை அந்த இடத்திலேயே மரணம் அடைந்து மிகப்பெரிய கொடுமையான சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால் அதைப்பற்றி எந்த பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், ஏன் அந்த குழந்தையின் மரணத்திற்கு காரணமான அந்த நடிகையும் கவலைகொள்ளவில்லை என்பது தான் உண்மை.
அது மட்டுமல்ல நடிகையை மருத்துவமனைக்கு ஓடோடி வந்து அக்கறையுடன் பார்த்த இராஜஸ்தான் முதலமைச்சரும், சுகாதார அமைச்சரும் நடிகைக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் இறந்து போன அந்த குழந்தையைப் பற்றியோ அல்லது பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த குடும்பத்தை பற்றியோ அவர்கள் எந்தவிதமான கவலையும் கொள்ளவில்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக