இன்று தான் அந்த சோக நாள். கடந்த 2004 - ஆம் ஆண்டு இதே தினத்தில் கும்பகோணத்தில் படிக்கவந்த 93 பள்ளிக்குழந்தைகளை நம் கண் முன்னாலேயே தீக்கு இரையாக்கினோம். இன்னும் அந்த சோகம் அடங்கவில்லை. என்றாலும், கல்வி வியாபார அரக்கர்களின் கோரப்பசிக்கு -அறியாமையில் உழலும் பெற்றோர்களின் பேராசைக்கு நாளுக்கொரு பள்ளிக் குழந்தைகளை பலி கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம். அது அன்றாட நிகழ்வாக மாறிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் யாருக்கும் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படாதது அதைவிட சோகமானது.
இன்று கூட சென்னை பெரம்பலூரில் 93 பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டுவந்த ஒரு தனியார் பள்ளிக்கூடத்தின் பஸ் ஒன்று சாலையில் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கவிழ்ந்ததில் 63 மாணவ-மாணவியர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். 93 குழந்தைகளை ஒரே பஸ்ஸில் வருவதற்கு பள்ளி நிர்வாகம் எப்படி துணிந்தது என்று தெரியவில்லை...? நிற்பதற்கோ அல்லது உட்காருவதற்கோ வசதியில்லை என்பதை தெரிந்திருந்தும், தங்கள் குழந்தைகள் அந்த பஸ்ஸில் பயணம் செய்ய பெற்றோர்கள் எப்படி அனுமதித்தார்கள் என்பதும் நமக்கு புரியவில்லை. அதுமட்டுமல்ல அந்தக் பள்ளிக் குழந்தைகள் அத்தனை பெரும் சென்னைக்குள்ளேயே வசிப்பவர்கள் அல்ல. பக்கத்து மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சேரலி, கல்பாடி, மருவத்தூர், ஏரையூர், அகரம்சிகூர் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் இருந்து நகரத்தில் படிக்க வந்த குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியாளர்களின் சூழ்ச்சியால் கல்வி கடைச்சரக்காக மாறிப்போன பிறகு, இலாப வேட்கையின் காரணமாக எங்கோ ஒரு மூலையில் மிகக்குறைந்த விலைக்கு இடத்தை வாங்குகிறார்கள். பள்ளிக்கூடமோ அல்லது கல்லூரியோ அல்லது இரண்டுமோ, பெற்றோர்களிடமே கட்டணமாக பெருந்தொகைகளை பெற்று கட்டிடமாக எழுப்பிவிடுகிறார்கள். தங்களின் விளம்பர உத்தியால் எங்கோ ஒரு மூலையில் வசிக்கும் பெற்றோர்களையும், மாணவ மாணவியர்களையும் உசுப்பேற்றி தங்கள் பள்ளிக்கு அல்லது கல்லூரிக்கு ஈர்த்துவிடுகிறார்கள். மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை தூரம், நேரம், பாதுகாப்பு எதைப்பற்றியும் நினைத்துப் பார்க்காமல் அங்கே சேர்த்துவிடுகிறார்கள். குழந்தைகளும் ஏராளமான எதிர்காலக் கனவுகளுடன் விடிந்தவுடன் பஸ்ஸில் சென்று பொழுது சாய்வதற்குள் வீடுவந்து சேர்ந்துவிடுகிறார்கள்.
இந்த பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் தங்கள் கல்லூரி அல்லது பள்ளிகளுக்கு மாணவ மாணவியர்களை பக்கத்து மாவட்டம், பக்கத்து மாநிலம், தொலைதூர நகரம் மற்றும் எங்கோ இருக்கும் கிராமங்களிலிருந்தெல்லாம் விடியற்காலையிலிருந்தே அழைத்துவர தொடங்குகிறார்கள். பள்ளிக்கூடம் அல்லது கல்லூரி வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பே போய் சேரவேண்டும் என்று அம்புலன்சை விட மிக மோசமான வேகத்தில் செல்கிறார்கள். இந்த பேருந்துகள் அதிகப்பட்சம் 90 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று பிள்ளைகளை அழைத்துவருகிறது.
இன்னும் எழுதுகிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக