பொதுவாக நம் தமிழ்நாட்டில் அரசியல் கட்சித்தலைவர்கள் மீதும், சினிமா நடிகர்கள் மீதும் தான் நம் இளைஞர்கள் கண்மூடித்தனமாக பற்றுதல் வைப்பார்கள். அவர்களின் தலைவர்கள் அல்லது நாயகர்கள் இறந்துவிட்டால் கண்மூடித்தனமாக சாலைகளில் போகும் பேருந்து, கார் போன்ற வாகனங்களை அடித்து நொறுக்குவதும், சாலைகளில் போக்குவரத்துகளை நிறுத்துவது, கடை அடைப்புக்கு மிரட்டுவது, அடைக்காத கடைகளையும் அடித்து நொறுக்குவது போன்ற மக்கள் நலன் சார்ந்த - தேசபக்திமிக்க ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடுவார்கள். இதைத்தான் அவர்களுக்கு அவர்களின் தலைவர்களும், கதாநாயகர்களும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிந்ததே. தங்களின் ஆதர்ஷ புருஷர்கள் இறந்துவிட்டால் அவர்கள் கற்றுக்கொடுத்ததுபோல் சரியாக கச்சிதமாக செய்துமுடிப்பார்கள். இப்படிப்பட்ட இளைஞர்களைத் தான் நாம் இதுவரை நேரில் பார்த்திருக்கிறோம்.
ஆனால் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் நேற்று முன் தினம் இரவு மறைந்த செய்தியை கேட்டதிலிருந்து அதே தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களது சோகத்தை - துக்கத்தை சற்று வித்தியாசமாக அமைதியான முறையில் வெளிகாட்டுகிறார்கள். ஆனால் இவர்கள் எப்போதும் போல் வாகனங்களை நொறுக்கவில்லை. கடைகளை அடித்து உடைக்கவில்லை. கடைகள் அடைப்பைக் கூட சொல்லவில்லை. மாநிலம் முழுதும், ஊர் முழுதும், வீதிகளெங்கும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என பல இடங்களிலும் நம் இளைஞர்கள் ஏராளமான - உயரமான கலாமின் படங்களை வைத்து, மாலைகள் போட்டு, மெழுகுவத்திகள் ஏற்றி அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தியது என்பது நமக்கெல்லாம் சற்று வித்தியாசமாக தெரிந்தது. அந்த அளவிற்கு நம் இளைஞர்களை ஒழுக்கமிக்கவர்களாக அப்துல் கலாம் செதுக்கியிருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, முகநூல், ட்விட்டர் மற்றும் வாட்சாப் போன்றவற்றை பயன்படுத்தும் இளைஞர்கள் தங்களின் சிந்தனைக்கு தகுந்தாற்போல் கலாமுக்கு அஞ்சலி செய்கிறார்கள். முகநூலையும், ட்விட்டரையும், வாட்சாப்பையும் திறந்தால் போதும், கலாமின் படங்களும், வீடியோக்களும் அருவி போல வந்து கொட்டுகின்றன. விதவிதமாய் யோசிக்கிறார்கள். எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்பதே வியப்பாக இருக்கிறது. கலாமின் படங்களையும், நிகழ்வுகளையும் அலசி ஆராய்ந்து, உருவாக்கி பதிவிடுகிறார்கள். அதில் சிலவற்றை இங்கே நான் பதிவிட்டிருக்கிறேன் பாருங்கள்.
அதுமட்டுமல்ல, கலாமின் மீதுள்ள பற்றுதல் காரணமாக இவர்கள் மனதில் தோன்றுகிறவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த சொல்லி வாட்சாப்பிலும், முகநூலிலும் பதிவிட்டு, அதை உடனடியாக மற்றவர்களுக்கும் பகிர சொல்கிறார்கள். இதை பார்த்து படித்துவிட்டு ஆர்வக்கோளாறு காரணமாக அடுத்தவர்களுக்கு பகிர்ந்து அந்த செய்தியை நாடு முழுதும் பரப்பச் செய்கிறார்கள். அதில் வெறித்தனமான பற்றுதல் தான் இருக்கிறதே தவிர, அறிவுப்பூர்வமான சிந்தனை என்பது கிடையாது. அதையெல்லாம் படிக்கும் போது நம்மாலேயே தாங்கமுடியலடா சாமீ... என்று அவர்கள் மீது கோபம் தான் வருகிறது. அதில் சிலவற்றை பாருங்கள்...!
தகவல் - 1 : அப்துல் கலாமின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய அரசை வலியுறுத்தவேண்டும். உடனடியாக இதை அனைவருக்கும் பகிருங்கள்.
தகவல் - 2 : கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவிக்கவேண்டும். அனைவருக்கும் இதை பகிருங்கள்.
தகவல் - 3 : லெனின் உடலைப்போல கலாமின் உடலையும் பதப்படுத்தி பாதுகாக்கவேண்டும். இதை வலியுறுத்தி அனைவருக்கும் பகிருங்கள்.
தகவல் - 4 : பாம்பன் பாலத்திற்கு அருகில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை போல கலாமுக்கு உயரமான சிலை வைக்கவேண்டும் என்பதை அனைவருக்கும் பகிருங்கள்.
தகவல்கள் - 5 : என்றைக்கும் இல்லாத வகையில் கலாமின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது. நாமெல்லாம் இந்தியன் என்று சொல்வதற்கு பெருமைப்படவேண்டும்.
இப்படியொரு வாசகத்தை படம் போட்டு பெருமைப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் குடியரசுத்தலைவராக கலாம் பொறுப்பிலிருந்த போது இதே அமெரிக்கா தான், கலாம் அமெரிக்காவிற்கு சென்றபோது அவரை ஒரு நாட்டின் குடியரசுத்தலைவர் என்று கூட பார்க்காமல், அவரது ஆடைகள் அனைத்தையும் அவிழ்த்து அரை நிர்வாணமாக்கி சோதனை செய்து அவமானப்படுத்தினார்கள் என்பதை இந்த இளைஞர்கள் மறந்துவிட்டார்கள் என்பது தான் வேதனையான நிகழ்வாகும்.
இவைகளையெல்லாம் படிக்கும் போது எப்படி இப்படிஎல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறார்கள் என்று ஒரு பக்கம் வியப்பாக இருந்தாலும், இன்னொரு பக்கம் இவர்கள் அறிவோடு சிந்திக்கமாட்டார்களா என்று எரிச்சலாகவும் கோபமாகவும் இருக்கிறது. இன்றைய இந்த இளைஞர்களுக்கு கலாமின் மீது இந்த அளவிற்கு பற்றுதலா கண்மூடித்தனமாக...? ஆச்சரியம் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக