புதன், 15 ஜூலை, 2015

காமராசர் மீது பாரதீய ஜனதாக்கட்சிக்கு என்ன திடீர் பாசம்...?


                இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், பழைய காங்கிரஸ் கட்சியின்  தலைவருமாகிய காமராசரின் பிறந்தநாள் என்பதால்,  வழக்கம் போல் தமிழ்நாட்டில் ''பலவகைப்பட்ட'' காங்கிரஸ் கட்சிக்காரர்களும், அந்த காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருக்கும் ''பலவகைப்பட்ட'' கோஷ்டிக் கட்சிக்காரர்களும், சாதிக்கட்சிகள் மற்றும்  சாதி சங்கம் என பலப்பல குழுக்களாக தனித்தனியே காமராசரின் புகழ்பாடி அவரது  சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடினார்கள். ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை என்ன விசேஷம் என்றால், இன்று  இந்த கோஷ்டிகளோடு சேர்ந்து பாரதீய ஜனதாக்கட்சியும் ''கோஷ்டிகானம்'' பாடியது தான் எல்லோருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை  வரவழைத்த நிகழ்ச்சியாக இருந்தது. ஆம்... பா.ஜ.க.-காரர்களும் தமிழ்நாடு முழுதும் எல்லா மாவட்டங்களிலும் காமராசர் சிலைக்கு ஒன்று கூடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியிருக்கின்றார்கள். 
              பாரதீய ஜனதாக்கட்சிக்கு காமராசர் மீது என்ன திடீர் பாசம் கொப்பளித்துக்கொண்டு வருகிறது....? விருதுநகருக்கு காமராசர் வாழ்ந்த இல்லத்திற்கு மோடியின் ''அடியாள்'' அண்ணன் அமித்ஷா தான்  முதலில் வருவதாக இருந்தது. ஆனால் அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் வெங்காய நாயுடு டெல்லியிலிருந்து பறந்து வந்து காமராசருக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தியிருக்கிறார். இன்னொரு பக்கம் தமிழிசை அக்கா மாலையணிவிக்குது.   என்னாப்பா இது காமராசர் மேல இவிங்களுக்கு இவ்ளோ பாசம் வந்திருக்குது. எல்லாம் அடுத்த ஆண்டு தேர்தலை கணக்கு பண்ணித்தான். பாரதீய ஜனதாக்கட்சி தமிழ்நாட்டில் கால்பதிக்க  சாதி ஓட்டுக்கு குறிவைக்கிறது என்பது பா.ஜ.கவின் கடந்த கால வரலாறு தெரிந்த யாருக்கும் புரியாமல் இல்லை. 
           அது என்ன பா.ஜ.க வின் கடந்தகால வரலாறு...? கடந்த 1966  ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி என்று நினைக்கிறேன். பாரதீய ஜனதாக்கட்சிக்கு அன்றைய பெயர் ''பாரதீய ஜனசங்'' என்று பெயராக இருந்தது. நவம்பர் 6 ஆம் தேதி அன்று அன்றைய ஜனசங்கத்தினர்   - இன்றைய பா.ஜ.க வினர், புதுடெல்லியில் மிகப்பெரிய கலவரத்தை உண்டாக்கி நாட்டையே ஸ்தம்பிக்க செய்தனர். அன்றைய தினம் புதுடெல்லியில் ஜனசங்கத்தினர்  நூற்றுக்கணக்கான வாகனங்களையும், டெல்லி அகில இந்திய வானொலி நிலையத்தின் கட்டிடத்தையும்  தீயிட்டுக்கொளுத்தி அராஜகத்தையும், அடாவடித்தனத்தையும் அரங்கேற்றினர் என்பது நாடு அறிந்த உண்மை. அவ்வாறு கொடூரமான கலவரத்தில்  ஈடுபட்ட ஜனசங்கத்தினர், அன்றைய காங்கிரஸ் கட்சியின்  அகில இந்தியத்  தலைவராய் இருந்த  காமராசர் டெல்லியில் வீட்டில் தங்கியிருந்த போது, அவர் உள்ளே இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டே அந்த வீட்டைக்கொளுத்தி அவரை உயிரோடு எரித்து  கொலை செய்ய முயற்சி செய்தனர் என்பதும்  யாராலும் மறுக்க முடியாத உண்மை.
        அப்படிப்பட்ட முன்னாள் ஜனசங்கத்தினர் தான் இன்று நாடுமுழுதும் காமராசர் சிலைக்கு கூச்சப்படாமல் மாலை அணிவித்து, சாதி அரசியலுக்கு தூபம் போடுகின்றனர் என்பதும் யாராலும் மறக்க முடியாத உண்மை...! 

கருத்துகள் இல்லை: