சாத்தானின் எச்சமே முதலாளித்துவம்...! ~ போப் பிரான்சிஸ்
முதலாளித்துவத்தை இப்படியொரு கடினமான வார்த்தைகளால் பொதுவுடைமைவாதிகள் மற்றும் இடதுசாரிகள் கூட வர்ணித்ததில்லை. ஆனால், போப் பிரான்சிஸ் இப்படிக் கூறியிருக்கிறார்.பொலிவியாவில் நடைபெற்ற உலக மாநாட்டு அரங்கத்தில் ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர் நிற்கவில்லை. உலக பொருளாதார ஒழுங்கினை மாற்றி அமைக்க முன்வருமாறு அடித்தட்டு மக்களுக்கு அறைகூவலும் விடுத்துள்ளார். அடித்தட்டு மக்களுக்கு வேலை, குடியிருக்க இடம், நிலம் ஆகிய புனிதமான உரிமைகளை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
''மாற்றங்கள், உண்மையான மாற்றங்கள், கட்டமைப்பு மாற்றங்கள் வேண்டும் என்று கேட்பதற்கு நாம் அஞ்ச வேண்டியதில்லை'' என்றும் அவர் தன் உரையில் உற்சாகம் அளித்தார். போப் பதவியை ஏற்ற பின் ஆற்றியுள்ள மிக நீண்ட, உணர்வுப்பூர்வமான, ஆவேசமான உரை அது. அமெரிக்க வெற்றி என்று பீற்றிக் கொள்ளப்படும் வன்முறை நடவடிக்கைகளின் போது அமெரிக்காவின் பூர்வீகக்குடிகள் மீது ரோமன் கத்தோலிக்க திருச்சபையினால் நடத்தப்பட்ட பாவச்செயல்களுக்கு பல்லாயிரக்கணக்கான பொலிவிய மக்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் போப் பிரான்சிஸ். சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்கள், ஏழைகள், வேலையில்லாதோர், நிலங்களை இழந்தோர் ஆகியோருக்காக செயல்படும் பிரபல இயக்கங்களின் இரண்டாவது உலக மாநாட்டின் பிரதிநிதிகள் மத்தியில் நிகழ்த்தப்பட்டது அந்த உரை. முதலாவது மாநாடு வாடிகன் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பொலிவிய ஜனாதிபதி ஈவோ மொரேல்சும் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய போப் பிரான்சிஸ், ''கூச்சநாச்சமின்றி லாபம் தேடும் முதலாளித்துவப் போக்கினை சாத்தானின் எச்சம்'' என்று விமர்சித்தார். இந்த விமர்சனத்தை நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இடதுசாரி கருத்துடைய பிஷப் ஒருவர் கூறியிருந்தார். அதனால் அன்றைய பொலிவிய சர்வாதிகாரிகளால் அவர் கொல்லப்பட்டார் என்பது நினைவு கூறத்தக்கது. போப் பிரான்சிஸ் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் சாந்தா குரூஸ் செல்லும் வழியில் அந்த பிஷப் கொல்லப்பட்ட இடத்தில் பிரார்த்தனை செய்தார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இடதுசாரி சார்புடைய மதகுருக்கள் ஓரங்கட்டப்படுவதாக ஒரு கருத்தோட்டம் நிலவி வருவதை சமனப்படுத்தும் முயற்சியாக இவ்வாறு பிரார்த்தனை செய்தார் என்றும் மேற்கத்திய ஊடகங்கள் எழுதின.வளரும் நாடுகளுக்கு மலிவான விலையில் உழைப்பையும், மூலப்பொருட்களையும் வழங்கும் நாடுகளாக ஏழை நாடுகளை மாற்றக்கூடாது என்றும் அவர் தன் உரையில் சுட்டிக்காட்டினார். சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதன் மூலம் புதிய காலனியாதிக்க நடைமுறையைத் திணிக்க முதலாளித்துவ முகாம்கள் (ஐரோப்பிய ஒன்றியம், ஐ.எம்.எப்., டபிள்யு.டி.ஓ. போன்ற அமைப்புகள்) முயன்று வருவதை அவர் கண்டனம் செய்தார். முதலாளித்துவத்தின் உடும்புப்பிடியில் இருந்து பூமித்தாயைப் பாதுகாக்கும் பொறுப்பு மக்களுக்கு உள்ளது என்றும் அதற்கான கால அவகாசம் குறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பொறுத்துக் கொள்ள முடியாதுதற்போதைய முதலாளித்துவ அமைப்பை நாம் பொறுத்துக் கொள்ள முடியாது. விவசாயிகள், தொழிலாளிகள், பல்வேறு சமுதாயங்கள் இந்த அமைப்பை பொறுத்துக் கொள்ள மறுத்து வருகின்றனர். நாம் தாயாகக் கருதும் பூமியும் இந்த அமைப்பை பொறுத்துக் கொள்ள மறுக்கிறது என்ற போப், சர்வதேச நிதி அமைப்புகளையும் விட்டு வைக்கவில்லை. சர்வதேச நிதியம் மற்றும் சில வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி உதவி கொள்கைகளையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.மக்களின் ஆளுமையை அவர்களுடைய கையில் இருந்து பறிப்பதற்கு எந்தவொரு சக்திக்கும் உரிமை கிடையாது. அவை அந்த உரிமையைத் தங்களதாக்கிக் கொள்ளும் போதெல்லாம் காலனியாதிக்கத்தின் புதிய வடிவம் தோன்றுவதை நாம் காண்கிறோம். இவை சமாதானமும், நேர்மையும் உருவாகும் வாய்ப்புக்கு குந்தகம் விளைவிக்கின்றன என்றும் அவர் கூறினார். புதிய காலனி அமைப்பு கார்ப்பரேட் நிறுவனங்களும், கடன் அமைப்புகளும், பல்வேறு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களும், உழைக்கும் மக்கள், ஏழை மக்களின்அடி வயிற்றை இறுக்கிக் கட்டும்பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் திணிப்பு ஆகிய வடிவங்களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். தொழிற்சங்கங்களை அவர் நியாயப்படுத்தினார். அத்துடன் வேலைகளை உருவாக்கும் கூட்டுறவு சொசைட்டிகளை அமைக்கும் ஏழை மக்களையும் அவர் பாராட்டினார்.
''மூலதனம் ஒரு தெய்வமாக மாறினால், மக்களின் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறினால், பணத்தின் மீதான பேராசை ஒட்டு மொத்த சமூகப்பொருளாதார அமைப்பின் தலைமைக்கு வந்தால், சமுதாயம் அழிக்கப்படும். இது மனிதர்களை தண்டிப்பதுடன், அவர்களை அடிமைகளாக மாற்றி விடும். மனித சகோதரத்துவத்தை ஒழித்து விடும். மக்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்திவிடும். நம்முடைய பொது வீடான பூமியையும் அது அபாயத்தில் ஆழ்த்தி விடும்'' என்று அவர் எச்சரித்தார்.
கட்டுரை : தாஸ்
நன்றி : தீக்கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக