தொழிற்சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழிற்சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 ஜனவரி, 2015

தொழிற்சங்கத்தின் தேவையை உணர்ந்த ஐ.டி நிறுவன ஊழியர்கள்...!

                 
       உலகமயத்தின் இந்திய குழந்தைகளில் ஐ.டி கம்பெனிகளும் ஒன்று. புதுடெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் உட்பட நாடு முழுதும் பரவியிருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் கணினி அறிவியல் (CS) போன்ற பாடங்களை கொண்ட  பி.இ / பி.டெக் என வகைவகையாய் படித்துக் கொண்டிருக்கும் போதே, ''வளாக நேர்காணல்'' - Campus Interview என்ற பெயரில் தனக்கு நேரம் பாராமல் இலாபத்தை ஈட்டிக்கொடுக்க கல்லூரிகளாலும், பல்கலைக்கழகங்களாலும் தயார்செய்யப்பட்ட   ''நவீன அடிமைகளை''  IT Professionals என்ற பெயரில் தேர்ந்தெடுத்து அழைத்து சென்றுவிடுகிறார்கள். பெரும்பாலும் ஐ.டி கம்பெனிகள் வெளியூர்களிலிருந்து தான் இது மாதிரியான இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் பெற்றோர்களிடமிருந்து  பிரித்து அழைத்து சென்றுவிடுகிறார்கள். அதற்கும் காரணம் இருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே 30 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரையில் சம்பளம் என்றதும் பெற்றோர்களும் தங்களால் சம்பாதிக்க முடியாததை தன் பிள்ளைகள் செய்கிறார்கள் என்ற பிரமிப்புடன் சந்தோஷமாக அனுப்பிவைத்துவிடுகிறார்கள்.
               இன்றைய தனியார் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும்   படிக்கும் போதே இந்த இளைஞர்கள் எண்ணங்களில் ''மல்டி நேஷனல் கம்பெனிகள்'' பற்றியும்,  ''ஐ.டி கம்பெனிகள்'' பற்றியும் கனவையும், இலட்சியத்தையும் மூளைச்சலவை செய்து விதைத்து விடுகிறார்கள். அரசு துறையில் வேலை செய்வது பற்றியே அவர்களின் மனதில் எண்ணம் உருவாகாமல் திசைத்திருப்பி விடுகிறார்கள். அரசுத்துறையை விட அதிக சம்பளம் கிடைக்கும் எனது மட்டுமே சொல்கிறார்களே தவிர,  பணி பாதுகாப்பு இருக்கிறது என்பதையும், 58 அல்லது 60 வயது வரை நிரந்திர வேலைவாய்ப்பு என்பதையும், Provident Fund, Gratuity, Bonus, வகைவகையான விடுப்புகள், அதையும் விரும்பும்போது எடுத்துக்கொள்ளும் உரிமைகள், குடும்பத்தினருக்கு மருத்துவ வசதி, இன்சூரன்ஸ் பாதுகாப்பு, பென்ஷன், பணிக்காலத்தில் மரணம் ஏற்பட்டால் வாரிசுதாரருக்கு வேலைவாய்ப்பு என போராடிப்பெறப்பட்ட பல்வேறு உரிமைகள் அரசு துறைகளில் வேலை செய்வதால் மட்டுமே கிடைக்கும் என்பதை திட்டமிட்டே மறைத்து விடுகின்றனர்.  மல்டி நேஷனல் கம்பெனிகளில் - ஐ.டி கம்பெனிகளில் வேலை செய்வதால் அபரிதமான சம்பளம், துரிதமான பதவி உயர்வு, வேலைக்கு ஏற்றார் போல் அவ்வப்போது சம்பள உயர்வு, வெளிநாட்டு பயணம், வெளிநாட்டு பணி போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை சொல்லி அவற்றின் மீது ஒருவிதமான மயக்கத்தையும், ஈர்ப்பையும் உண்டாக்கிவிடுகிறார்கள். அந்த நிறுவனங்களில் நிரந்தர வேலைவாய்ப்பு என்பதே இல்லை என்பதையோ.... இவர்களின் பணிக்கு அரசு பாதுகாப்போ அல்லது பணி  பாதுகாப்போ இல்லை என்பதையோ, இவர்களின் 30 - 35 -ஆவது வயதில் நிறுவனத்திலிருந்து விரட்டியடிக்கப்படுவார்கள் என்பதையோ, இவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் என்பது சொற்பமே என்பதையோ அல்லது  இரவு நேரவேலை,  அதிக நேரவேலை மற்றும் வீட்டுவேலை போன்ற புதிய பணிக்கலாச்சாரம் பற்றியோ  அந்த இளைஞர்களுக்கு எடுத்து சொல்லாமல் திட்டமிட்டு மறைத்துவிடுகிறார்கள். 
            அவர்களும் அந்த மயக்கத்திலேயே பொறியியல் படிப்பை முடித்ததும் வீட்டை விட்டு - பெற்றோர்களை விட்டு பறந்துவிடுகிறார்கள். புதிய சூழல், புதிய கலாச்சாரம், புதிய நட்பு, தங்கள் தாய் - தந்தையர் செய்யாத புதிய பணி, புதிய நடை -உடை- பாவனை ஆகியவை தங்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை கூட அறியாமல் பிடித்துவிடுகிறது. கம்பெனியின் ''டிஜிட்டல் திறவுகோலை'' பெருமையுடன் கையில் வைத்துக்கொண்டு தங்களை தாங்களே சிறைப்படுத்திக்கொண்டு மணிக்கணக்காய் வேலை, எளிதில் யாரும் உள்ளே நுழையவும் முடியாத, வெளியேறவும் முடியாத  சிறைக்கதவு,  வாரத்தில் இரண்டு நாள் இடுமுறை என்றாலும் ''work at home'' என்ற பெயரில் வீட்டிலும் ஓய்வில்லாத வேலை, அவர்களின் மன இறுக்கத்தைப் போக்க ''weekend party'' என்ற பெயரில் கலாச்சார சீரழிவு, பெண்கள் மீதான பாலியல் சீண்டல்களும், தாக்குதல்களும் அவர்கள் அறியாமலேயே அவர்கள் அனுமதியின்றி ஆளுமை செய்கின்றது. 
            சென்ற வாஜ்பேயி காலத்தில் அந்நிய - இந்திய பெருமுதலாளிகளுக்கு சாதகமாக ''தொழிலாளர் நலச்சட்டங்கள்''  நாசம் செய்யப்பட்டதால், மூன்று மாத முன்னறிவிப்பு இன்றி இ-மெயில் மூலமாகவே இந்த கம்பெனிகளில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞர்கள் வேலையை விட்டு அனுப்பப்பட்டனர். வேலையை இழந்த இளைஞர்களும்,  நிர்வாகத்தின் இந்த மோசமான நடவடிக்கைகளை எதிர்க்கவேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் இதுவரையில் அச்சத்தோடே வேலை செய்துகொண்டிருந்தார்கள். அப்படி வேலையிழந்த பல இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள். இன்னும் சிலபேர் மனநிலை பாதிக்கப்பட்டு வீதிகளில் திரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்படியே தொடர்ந்து வேலையில் நீடிப்பவர்கள் கூட அதிகபட்சம் 35 ஆவது வயதில் சக்கையாக பிழியப்பட்டு வீதியில் தூக்கியெறியப்படுகிறார்கள். இப்படியாக கேள்விக்குறியோடு வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த இளைஞர்களிடம்  உங்கள் பணிப் பாதுபாப்பிற்கும், உங்களுக்கு மறுக்கப்பட்டிருக்கும் உரிமைகளுக்கும், பணியிலிருக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கும் உங்களுக்கென்று தனியாக ஒரு தொழிற்சங்கம் தேவையில்லையா....? ஏன் உங்களுக்கென்று ஒரு தொழிற்சங்கம் தொடங்கக்கூடாது....? என்று கேட்டால், ''தொழிற்சங்கம்'' என்றாலே ஒரு அருவருப்பான வார்த்தைபோல முகம் சுளிப்பார்கள். நாங்க நல்லாத்தான் இருக்கோம்... யூனியன் எல்லாம் தேவையில்லை... யூனியன் என்றால் சிகப்பு கொடி பிடிக்க சொல்லுவாங்க... கோஷம் போடுவாங்க... ஸ்ட்ரைக் பண்ண சொல்லுவாங்க... அதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை சார்.... என்று சொல்லிவிட்டு நம்மை விட்டு ஒதுங்கி ஓடிவிடுவார்கள்.
           இப்படிப்பட்ட இவர்கள் தான் இன்று தங்களுக்கென்று - தங்கள் பணி பாதுகாப்புக்கென்று தனி அமைப்பு ஒன்றை ஆரம்பித்து போராடுகிறார்கள் என்பது வரவேற்கவேண்டிய அம்சமாகும். இன்று TCS என்று சொல்லக்கூடிய டாட்டாவிற்கு சொந்தமான ஐ.டி கம்பெனியில் பணிபுரியும் 25,000 இளைஞர்களை ஒரே சமயத்தில் வெளியேற்றப்பட இருக்கிறார்கள் என்ற அநீதியை எதிர்த்து இன்று இவர்கள் துணிச்சலுடன் ஒரு தனி அமைப்பை உருவாக்கி கொடிபிடித்து போராடுகிறார்கள். போராடினால் தான் வாழ்க்கை என்பதை இப்போதாவது உணர்ந்த அந்த இளைஞர்களை நெஞ்சார வாழ்த்துவோம். உழைப்பாளி மக்களுக்காக போராடும் அமைப்பையும் இணைத்து போராடுங்கள். அப்போது தான் உங்கள் போராட்டம் வலுப்பெறும். வெற்றிபெறும்.

புதன், 1 பிப்ரவரி, 2012

நீர்த்து போன தொழிற்தகராறு சட்டம் தொழிலாளர்களை பலி வாங்குகிறது....!


   கிடப்பில் போடப்படும்  ஜனநாயக வழிமுறை
                             குர்கானில் துவங்கி தமிழகத்தின் ஹூண்டாய் வரையில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட சம்பவங்கள் புதுச்சேரியின் ஏனாம் பகுதியில் தொழிற்சங்கத்தலைவரைக் கொல்வதில் போய் முடிந்துள்ளது. தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு எதிராக காவல்துறையைப் பயன்படுத்துவது ஜனநாயக நாட்டிற்கு அழகில்லை என்பதுதான் நியதி. தொழிலாளர்கள் பிரச்சனையில் காவல் துறை தலையீடு என்பது கடும் கண்டனத்துக்குரியது. இத்தகைய பிரச்சனைகளைத் தொழிலாளர்கள் துறை தான் தீர்க்க வேண்டும். ஆனால் ஆளும் வர்க்கத்தினர் இந்த வழிமுறையைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள் என்பதைத் தான் அண்மையில் நடந்துள்ள சம்பவங்கள் காட்டுகின்றன.
                    தொழிலாளர்கள் உரிமைகளில் அரசின் தலையீடு என்பது ஒன்றும் புதிதல்ல. சட்ட ரீதியாக முதலாளிகளுக்கு ஆதரவான நிலையை உருவாக்கும் வேலைகளுக்கும் பஞ்சமில்லை. 100 தொழிலாளர்களுக்கு மேல் பணி புரியும் தொழிற்சாலைகளில், தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கவோ, கதவடைப்புச் செய்யவோ, தொழிற்சாலையை மூடவோ அரசின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்கிற தொழிற்தகராறு சட்டத்தின் விதியைத் திருத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சிக்கிறது. குறைந்தது 1000 தொழிலாளர்கள் என்று முதலில் அதை மாற்றிவிட்டு, பின்னர் விதியையே தூக்கிவிடுவதுதான் திட்டம். இத்திட்டத்திற்கு அச்சாரம் போட்டது பாஜக தலைமையிலான அரசாகும். மக்கள் விரோத நடவடிக்கைகளில் காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டுக்கும் எந்த வித வேறுபாடுமில்லை என்பதற்கு இது மற்றொரு சான்றாகும். தொழிலாளி குரல் எழுப்பினால் அது சட்டம்- ஒழுங்குப்பிரச்சனை என்று அடுத்த விநாடியே முடிவு செய்து விடுகிறார்கள். அதுதான் ஏனாமிலும் நடந்திருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன.
                      தொழிலாளர்கள் உரிமைக்குரலை எழுப்பும் போது, எழுப்ப வேண்டிய இடம் உள்ளிட்ட பல்வேறு சட்டரீதியான அம்சங்கள் பற்றியெல்லாம் ஆட்சியாளர்கள் பேசுகிறார்கள். ஆனால், எந்த விதமான நியாயமான காரணமுமின்றி 75, 80 விழுக்காடு தொழிலாளர்களை காலம் காலமாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற பெயரில் குறைவான கூலி கொடுத்துச் சுரண்டும் செயல் பற்றி எந்தக்கவலையும் தெரிவிப்பதில்லை. சட்டப்பூர்வமாக தொழிற்சங்கம் அமைப்போம் என்றால், அவர்களை முதலாளிகள் வேலையிலிருந்து தூக்கும்போது, அதற்கு ஆதரவாக முட்டுக்கொடுக்கும் காரியத்தில்தான் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் ஈடுபடுகிறார்கள். ஒரு படி மேலேபோய், அரசுத்துறைகளில்கூட ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற நாசகர முறையை அமலாக்குகிறார்கள்.
                  இதற்கு மாறாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சிகளில்தான், தொழிலாளர்கள் பிரச்சனை என்றால் அதில் காவல்துறை தலையீடு கூடாது என்று தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து. அந்த மாநிலங்களில் பிரச்சனை எழும்போது தொழிலாளர், முதலாளிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகியவை பங்கேற்கும் முத்தரப்பு பேச்சு வார்த்தைகளின் மூலமாகத்தான் தீர்வு காணப்பட்டிருக்கிறது. இத்தகைய அணுகுமுறைதான் தொழில் அமைதிக்கு இட்டுச் செல்லும் என்பதே நிதர்சனமான உண்மை.

வெள்ளி, 27 ஜனவரி, 2012

புதுவை ''யானாம்'' - உழைக்கின்ற கூட்டம் கொதிப்படைந்து போனால்....!

               யானாம் - புதுச்சேரி பிரஞ்ச் காலணியில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிறு பகுதி. புதுச்சேரியை பொறுத்தவரை பல பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் நிறைந்த ஒரு சிறிய  மாநிலம். இங்கு  பல்வேறு வரிச் சலுகைகளும், மானியங்களும், இலவசமாக இடமும், இலவச மின்சாரமும், குடிநீரும், மிக குறைந்த சம்பளத்திற்கு மனிதவளமும், கண்டுகொள்ளப்படாத தொழிலாளர் சட்டங்களும், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது மிக குறைவான இலஞ்ச  செலவுகளும் - ஆகிய அனைத்தும்  ஒட்டு  மொத்தமாக ஒரே இடத்தில் வசதியாக கிடைக்கும் மாநிலமாக புதுச்சேரி இருப்பதால் இங்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இங்கே  பெரிய - சிறிய தொழிற்சாலைகளை தொடங்கி இலாபத்தைக் குவிக்கின்றனர். ஹிந்துஸ்தான் யூனி லீவர்ஸ், வேர்ல்பூல், நெய்செர், எல் அண்ட் டி, ஜெனரல் ஆப்டிகல்ஸ், குட் நைட், ஏ. டி. எம் மெஷின் - போன்ற பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இங்கே தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.
                 அப்படித்தான், ஆந்திர மாநிலத்தின் இடையே இருக்கும் புதுச்சேரி பகுதியான யானாம் பகுதியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ''ரீகேன்சி செராமிக்ஸ் லிமிடெட்''  ஒன்று பிரசித்திப்பெற்ற டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கென ஒரு தொழிற்சங்கம் அமைத்து, தனகளது பணி நிரந்தரத்திற்காகவும், ஊதிய உயர்வுக்காகவும் இருபது நாட்களாக போராடி வருகின்றனர். இந்த உரிமைக்கான போராட்டத்தை சகித்துக்கொள்ள முடியாத நிர்வாகம்,   தொழிற்சங்கத் தலைவர் எம். எஸ். முரளி மோகன் உட்பட சில தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.  இதனால் கோபமடைந்த தொழிலாளர்கள் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தினர்.                         போராடிய தொழிற்சங்கத்தலைவர் முரளி மோகன்யும்  மற்றும் சில தொழிலாளர்களையும் , அந்த தொழிற்சாலை முதலாளிகளின் அடிவருடிகளாக இருக்கும் போலீசார் நேற்று முன் தினம் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். அங்கு ''நடந்தது'' என்னவென்று தெரியவில்லை. தொழிற்சங்கத்தலைவர் முரளி மோகன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக போலீஸ்காரர்கள் அறிவித்திருக்கிறார்கள். இதைக்கேட்ட தொழிலாளர் தோழர்கள் கோபம் கொண்டு கொதித்தெழுந்தனர். தலைவன் கொல்லப்பட்டதால் கோபமுற்ற உழைப்பாளிகள், கொலைக்குக் காரணமான காவல் நிலையத்தை அடித்து நொறுக்கி இருக்கின்றனர். தொழிலாளர்களை அடக்குவதற்கு போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள். அந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு தொழிலாளி இறந்துவிட்டதாக கூட சொல்லப்படுகிறது.   
                      அதேப்போல்,  ரீகேன்சி செராமிக்ஸ் லிமிடெட் - இன் தலைமை அதிகாரி கே. சி. சந்திரசேகர் வீடும் தாக்குதலுக்கு  உள்ளானது மட்டுமல்லாது, அவரே அவரால் ஏமாற்றமடைந்த  அந்த தொழிலாளர்களாலேயே அடித்துக் கொல்லப்பட்டார் என்பது கொதித்தெழுந்த மக்கள் விழித்தெழுந்தால் என்னாகும் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் ஆகும்.

சனி, 20 ஆகஸ்ட், 2011

தோழர். எம். கே. பாந்தே மறைவு - உலக உழைப்பாளி வர்க்கத்திற்கே பேரிழப்பு.

             சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைமைக்குழு  உறுப்பினரும், முதுபெரும் தொழிற்சங்கத்தலைவரும், உழைப்பாளி வர்க்கத்தின் உன்னதமான தோழருமான தோழர்.  எம். கே.  பாந்தே அவர்கள்  இன்று அதிகாலை நடுநிசிக்குப் பிறகு 12.30 மணி அளவில்  மாரடைப்பால்   ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் காலமானார். 
             தோழர். பாந்தே அவர்களின் இறுதிவரை அயராத தொழிற்சங்கப் பணியும், அரசியல் பணியும் வியக்கத்தக்கது. சர்வதேச தொழிற்சங்க மேடைகளிலும், இந்திய தொழிற்சங்க மேடைகளிலும்   தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரான தாராளமயம், தனியார்மயம், உலகமயம் - இவைகளை எதிர்த்து  இறுதி வரை கடுமையாக குரல் கொடுத்து வந்தவர். 
                  இந்த ஆண்டு தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் 22 - ஆம் தேதி அன்று புதுடெல்லியில் எல். ஐ. சி முகவர் சங்கம் - LICAOI சார்பில் முகவர்களுக்கெதிரான அரசின் நடவடிக்கைகளை கண்டித்து நடத்தப்பட்ட தர்ணா போராட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றியதும் , அடுத்த நாள் 23 - ஆம் தேதி கடுமையாக உயர்ந்துவரும் விலைவாசி உயர்வைக் கண்டித்து அதே இடத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து நடத்திய மிகப்பிரம்மாண்டமான பேரணியில் உரையாற்றியதும் நான் அவரை கடைசியாக பார்த்த நிகழ்ச்சி. இன்றும் நெஞ்சைவிட்டு அகலாத உரை - காட்சி.
                 அவரது மறைவு என்பது உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பேரிழப்பாகும்.
                    மறைந்த தோழர். எம். கே. பாந்தே அவர்களுக்கு வீரவணக்கத்தையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.