புதன், 28 மார்ச், 2012

ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் மம்தாவின் அராஜகச்செயல்...!

பேயாட்சி நடந்தால்...?          

     மேற்குவங்க மாநிலத்தில் உள்ள அரசு நூலகங்களில் அரசியல் கட்சி சார்பு பெற்ற மற்றும் அனைத்து ஆங்கில ‌பத்திரிகைகள் வைக்க தடை விதித்து ''பேயாட்சி'' நடத்தும்   முதல்வர் மம்தா உத்தரவிட்டுள்ளார். அதே சமயத்தில், அரசு ஆதரவு பெற்ற தனது கட்சி மற்றும் சில வங்க‌மொழி பத்திரிகைகளுக்கு மட்டும் தாராளமாக  அனுமதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நூலகங்களில் பத்திரிக்கைகளை தடை செய்வது என்பது பொதுமக்களின் பத்திரிக்கைகளை படிக்கும் உரிமையை பறிப்பதாகும். இது ஜனநாயகத்தின் குரல்வளையையே நெரிக்கும் செயலாகும். தனது ஆட்சியின் இலட்சணங்களை - விமர்சனங்களை மக்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்காகவே மம்தா  அரசியல்  முதிர்ச்சி இல்லாமல் செய்த செயல்.   
            என்ன தான் பத்திரிக்கைகளை மேற்கு வங்க மக்களிடமிருந்து விலக்கி வைத்தாலும், மம்தாவின் ''அவல'' ஆட்சியின் ''பெருமைகள்'' மக்களுக்கு தெரியாமலா போய்விடும்...
              மம்தாவின் இந்த அராஜகச் செயலை மேற்கு வங்க மாநில மக்கள் மட்டுமல்ல இந்திய மக்கள் அனைவரும் கண்டிக்கவேண்டும்.
                 மேற்கு வங்கத்தில் தற்போது அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் நூலகங்கள் என மொத்தம் 2842 நூலகங்கள் மாநிலம் முழுவதும் உள்ளன. இந்த நூலகங்கள் எல்லாம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான  இடதுசாரிகள் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. அத்தனை நூலகங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ''கண சக்தி'' பத்திரிகை உட்பட அனைத்து எதிர்க்கட்சியினரின் பத்திரிக்கைகளும் இந்த நூலகங்களில் நுழைவதை  மம்தா தடை செய்திருக்கிறார்.  நல்ல வேலை சி. பி. எம் - னால்  ஆரம்பிக்கப்பட்ட  நூலகங்கள் என்பதால் அத்தனையையும்   மூடிவிடாமல் விட்டு விட்டார்களே...! மமதையில் எதையும் செய்வார் மம்தா..!
நன்றி : The Hindu / 31.03.2012

போப்போர்ஸ் பீரங்கி ஊழல், கார்கில் சவப்பெட்டி ஊழல், ஆயுத பேர ஊழல் - இன்றும் பணம் ராணுவம் வரை பாய்கிறது...!                  அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் 1980 - களில்  நடைபெற்ற போப்போர்ஸ் பீரங்கி ஊழல்...  ராஜீவ் காந்தியும் அவரது குடும்பம் மற்றும் இத்தாலிய நாட்டு தொழிலதிபர் கோட்ரோச்சி சம்பந்தப்பட்ட ஊழல்... இன்றைக்கு அந்த ஊழலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டனையில்லாமல் தப்பித்து விட்டார்கள். இன்று போப்போர்ஸ் பீரங்கி ஊழல் விசாரணை என்பது புதைக்குழிக்குள்  போய்விட்டது. மக்களும் அதை மறந்துவிட்டார்கள். 
                    அடுத்து  1991  - ஆம் ஆண்டில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியாட்சியின் போது இந்தியாவிற்கும் பாகிஸ்தான் நாட்டிற்கும் இடையே நடைபெற்ற 
கார்கில் போரில் மரணமடைந்த நமது நாட்டுப் படைவீரர்களை அடக்கம் செய்வதற்கு அன்றைய பாஜக அரசு சவப்பெட்டிகளை அமெரிக்காவிலிருந்து வரவழைத்தது. ( நம் நாட்டில் சவப்பெட்டி செய்வதற்கு ஆளில்லையாம் ) சாதாரணமாக ஒரு பெட்டிக்கு ஆகிற விலையை விட பலமடங்கு தொகையை கொடுத்து இறக்குமதி செய்தது. சவப்பெட்டியிலேயும் பல கோடி ஊழல். சவப்பெட்டியிலேயும், சுடுகாட்டுக்கூரையிலேயும் ஊழல் செய்கிற ஆட்சியாளர்களைத் தான் நமக்கு கிடைத்த ஆட்சியாளர்கள். அவங்க வெட்கப்படுகிறார்களோ இல்லையோ நாம் வெட்கப்படவேண்டும். இப்போது அந்த சவப்பெட்டி ஊழல் விசாரணை அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. மக்களும் அதை மறந்துவிட்டார்கள்.
                 அதே பாஜக கூட்டணியில் ஆட்சிக் காலத்தில் இன்னொரு மெகா ஊழல்.... அது ஆயுத பேர ஊழல்...  அந்த ஆட்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த சமதா கட்சியின் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டசின் ''கேர்ள் பிரெண்ட்'' ( GIRL FRIEND ) ஜெயா ஜெட்லி என்ற அம்மையார் பெர்னாண்டசின் படுக்கையறையில் ஆயுத வியாபாரியிடம் கட்டுக்கட்டாக பணம் பெற்றதை நாமெல்லோரும் தொலைக்காட்சியில் பார்த்தோம்.  அந்த ஊழல் விசாரணையும் காற்றோட போயாச்சி... மக்களும் அதையும் மறந்துவிட்டார்கள்...
                  இப்போது மன்மோகன் சிங் அலங்கோல ஆட்சியில் நடைபெறும் ஊழல் அலங்கார அணிவகுப்பில் இன்னொன்றும் புறப்பட்டு கிளம்பியுள்ளது.  இது இந்திய இராணுவத்தில் இன்னொரு புதுவகையான ஊழல். இது இராணுவ  அணிவகுப்பில்  வைக்கப்பட்ட கண்ணிவெடி போன்றது. இதற்காக தேசமே தலை குனிகிறது.
                  இராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனப் பிரதிநிதி தனக்கு ரூ. 14 கோடி இலஞ்சம் தர முன் வந்ததாக இந்திய இராணுவத் தலைமைத் தளபதியே வெளிப்படையாக பத்திரிகை ஒன்றிற்கு  அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளதைக் கண்டு நாடே அதிர்ந்துள்ளது. 
                இராணுவம் நிர்ணயித்துள்ள தரத்தை விட குறைவான தரத்தில் உள்ள 600 வாகனங்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்தால் ரூ. 14 கோடியைத் தருவதாக அந்த குறிப்பிட்ட நபர் தன்னிடம் தெரிவித்ததாகவும்,   இராணுவத் தலைமைத் தளபதியிடமே ஒரு நபர் வந்து இலஞ்சம் அளிப்பது தொடர்பாக பேச்சு நடத்துகிறார் என்றால்  அவருக்கு எந்த அளவுக்கு துணிச்சல் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் தனது  பேட்டியில் இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் வி. கே. சிங் தெரிவித்திருக்கிறார்.  இதற்கு முன்பிருந்தவர்கள் இப்படித்தான் அவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டார்கள் என்றும், தனக்குப் பிறகு வருபவர்களும்  பணம் பெற்றுக் கொள்வார்கள் என்றும் அந்த நபர் தன்னிடம் தெரிவித்ததாகவும்  ஜெனரல் வி. கே. சிங் குறிப்பிட்டிருக்கிறார்.
                இது மட்டுமல்ல இன்னொரு அதிர்ச்சியான தகவலையும் கூறியிருந்தார். இலஞ்சம் கொடுக்க முன்வந்த இந்த விஷயத்தை 2010 - ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே மத்திய பாதுகாப்பு அமைச்சருக்கு சொல்லிவிட்டேன் என்ற தகவலையும் வெளியிட்டிருந்தார். 
              நமக்கு என்ன கேள்வி எழுகிறது என்றால்...? 
           1 . இத்தனை மாதங்களாக பாதுகாப்பு அமைச்சரோ அல்லது மத்திய அரசோ இலஞ்சம் கொடுக்க வந்த நபர் மீது ஏன் விசாரணை நடத்த உத்திரவிடவில்லை...? 
      2 . தளபதி  இந்த தகவலை என்னிடம் சொல்லும் போது அதைக்கேட்டு அதிர்ந்து போனேன்... உறைந்து போனேன்... என்றெல்லாம் சொல்லும் பாதுகாப்பு அமைச்சர் நியாயமாக - உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கியிருக்க வேண்டாமா...?   
          3   . இத்தனை மாதங்கள் கழித்து இப்போது இந்த விஷயத்தை வெளியிட்ட தலைமைத் தளபதி ஏன் முன்பே வெளியிடவில்லை...?  தனது வயது பிரச்சனையில் அரசு தனக்கு சாதகமாக நடந்துகொள்ளவில்லை என்பதால் இப்போது இந்த விஷயத்தை வெளியாக்கிவிட்டாரோ..?
            4 .  பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட ராணுவ அதிகாரி லெப். ஜெனரல் தேஜீந்தர் சிங் தான் தனக்கு 14 கோடி ரூபாய் இலஞ்சம் கொடுக்க வந்தவர் என்று அப்போதே தெரிந்திருந்தும் மத்திய அரசும், பாதுக்காப்புத்துறை அமைச்சரும், தலைமைத் தளபதியும் இன்று வரை அவர் மீது விசாரணையோ அல்லது நடவடிக்கையோ எடுக்காததேன்...? 
            இப்படியெல்லாம் கேள்விகள் மக்களுக்கு எழுகின்றன. மத்திய அரசு தான் பதில் சொல்லவேண்டும்.

வெள்ளி, 23 மார்ச், 2012

காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்... ஆனால்...!

மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!      


       அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையே காந்தியும் விரும்பினார். சுதந்திரப்போராட்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார். அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்காட்டுவார்.  
                  இப்படித்தான் இந்த தேசத்தின் விடுதலையை போராட்டத்தின் மூலமாகவும், புரட்சியின் மூலமாகவும் தான் பெறமுடியும் என்று பிரிட்டிஷாருடன் சினங்கொண்டு போராடிய பகத்சிங் என்ற மாவீரனை இழந்துவிட்டோம். காந்தி நினைத்திருந்தால் அன்றைக்கிருந்த பிரிட்டிஷ் அரசுடன் பேசி பகத்சிங்கை தூக்குமேடையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். அதைத்தான் அன்றைக்கு நாட்டில் பலரும் எதிர்ப்பார்த்தார்கள். இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல தலைவர்களும் தொண்டர்களுமே எதிர்ப்பார்த்தார்கள். 
                  இதை புரிந்துகொண்ட காந்தி, 1931 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கராச்சியில் நடைபெறவிருக்கும்   காங்கிரஸ் மாநாட்டிலும் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்று எதிர்ப்பார்த்தார். மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று தன்னை நிர்பந்தம் செய்வார்கள் என்று முன் கூட்டியே அறிந்துகொண்டார். அப்படி நடக்கும் பட்சத்தில் அவர்கள் கட்டளைப்படி,  தான் பிரிட்டிஷ் அரசிடம் பேசி பகத்சிங்கை  தூக்கு தண்டனையிலிருந்து  காப்பாற்ற வேண்டி வரும் என்பதை உணர்ந்தார். அப்படியெல்லாம் ஒன்றும் நடந்துவிடக்கூடாது என்பதில் காந்தி தீவிரம் காட்டினார்.  
            அதனால்  அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் இர்வினை ( Irwin) சந்தித்து, கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன் பகத்சிங்கை தூக்கில் போடும்படி   கேட்டுக்கொண்டவர் தான் ''மகாத்மா'' என்று சொல்லக்கூடிய காந்தி என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அதனால் தான் பிரிட்டிஷ் அரசாங்கம் கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே   பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களை தூக்கிலிட முடிவு செய்து, 1931  மார்ச் மாதம் 24  - ஆம் தேதியை தூக்கிடும் தேதியாக அறிவித்தது. 
              ஆனால் அந்த 24 - ஆம் தேதிவரைக் கூட காத்திருக்க முடியாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களை தூக்கிலிடுவதற்கு துடித்தார்கள். அதனால் 23 - ஆம் தேதியே இரவு 7.04 மணிக்கே வழக்கத்திற்கு மாறாக - மரபுக்கு மாறாக மூவரையும் தூக்கிலிட்டார்கள். 
வழக்கமாக தூக்கு தண்டனை என்பது விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே நிறைவேற்றுவது தான் மரபு. ஆனால் அந்த மரபைக்கூட அன்றைய ஆட்சியாளர்கள் மீறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 24  - ஆம் தேதி விடியற்காலை தூக்கிலிட வேண்டியவர்களை 23 - ஆம் தேதி இரவே அவசர அவசரமாக தூக்கிலிட்டனர். பகத்சிங்கை கொல்வதில் காந்தியை விட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இன்னும் ஒரு மடங்கு  வேகம் காட்டினர்.
                 லாகூர் சிறையிலிருந்த பகத்சிங்கை தூக்கிலிடுவதற்கு தயார்படுத்துவதற்காக சிறைக்காவலர்கள் முன் கூட்டியே 23 - ஆம் தேதி மாலையே அழைத்தார்கள். மறுநாள் தான் தூக்கு தண்டனை என்று அறிந்திருந்த பகத்சிங், முன்கூட்டியே முதல் நாளே தூக்கிலிடப் போகிறார்கள் என்பதை அறிந்திருக்கவில்லை. அதனால் காவலர்கள் அழைத்த போது, '' நான் இங்கே ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன். அதனால் தொந்தரவு செய்யாதீர்கள்'' என்று சிறைக்குள்ளிருந்து குரல் கொடுக்கிறார். வேறு யாரோ போராளி சிறைக்குள்ளே புகுந்து இருவரும் ஏதோ திட்டம் தீட்டுகிறார்களோ என்று காவலர்கள் பயந்துவிட்டனர். சிறிது நேரம் கழித்து அவரே வெளியே வருகிறார். உள்ளே பார்த்தால் அவரோடு வேறு யாரும் இல்லை. ஆனால் அவர் கையில் ஒரு புத்தகம் இருந்தது.  மாமேதை லெனின் எழுதிய '' அரசும் புரட்சியும் '' ( STATE AND REVOLUTION ) என்ற புத்தகம் தான் அது. அதுவரையில் அந்த புத்தகத்தை படித்துக்கொண்டிருந்ததால், நான் ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன்  என்று சொன்னார். 
               அந்த புத்தகத்தை காவலர்கள் வாங்கிப்பார்த்த போது, அந்த புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் '' இந்த புத்தகத்தை இந்திய மக்கள் அனைவரும் படிக்கவேண்டும் '' என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார். இது தான் இந்திய மக்களுக்கு அவர் கடைசியாக விடுத்த வேண்டுகோள்......   இன்னும் எழுதுகிறேன்....

வியாழன், 22 மார்ச், 2012

இன்சூரன்ஸ் மீது சத்தம் போடாமல் குறி வைத்த மத்திய பட்ஜெட்...!

சேமிப்பை ஒழித்துக் காட்டும் மத்திய அரசின் முயற்சி...!

           இதுவரை இந்திய மக்களின் சேமிப்பு நிதியின் மீதான மத்திய அரசின்   கொள்கை என்பது ''வரி விலக்கு - வரி விலக்கு - வரி விலக்கு'' ( EXEMPT -  EXEMPT - EXEMPT ) என்பதாகும். ஆனால் அமெரிக்காவின் கட்டளைப்படி  ''வரி விலக்கு - வரி விலக்கு - வரி விதிப்பு'' ( EXEMPT -  EXEMPT -TAX )என்ற கொள்கை மாற்றத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க விசுவாசிகளான மத்திய ஆட்சியாளர்கள் முயற்சி செய்து வந்தனர். இதை 2004 - ஆம் ஆண்டிலேயே அன்றைய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தன்னுடைய பட்ஜெட் உரையில் கோடிட்டுக் காட்டினார் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. 
             அதன் பொருள் என்னவென்றால், இதுவரையில் மக்கள் சேமிப்புக்காக தாங்கள் சேருகிற இன்சூரன்ஸ், பி. எப்., தேசிய சேமிப்பு பத்திரம், வங்கி சேமிப்பு போன்ற சேமிப்புகளுக்கு அந்தந்த ஆண்டுகளுக்கும் ''வரி விலக்கு'' பெறுகிறார்கள். அதேப்போல் அந்த சேமிப்புகளுக்கு ஆண்டுதோறும் கொடுக்கப்படும் வட்டி மற்றும் போனஸ் ஆகிய வருமானத்திற்கும் ''வரி விலக்கு'' பெறுகிறார்கள். அதேப்போல் இறுதியில் முதிர்வுத் தொகைகளை திரும்பப்பெறும் போதும் ''வரி விலக்கு'' பெறுகிறார்கள். இது மக்களிடம் சேமிப்பை ஊக்குவிப்பதற்காக கொடுக்கப்பட்ட வரிச்சலுகை ஆகும்.
        ஆனால்,  இப்போதோ... முதிர்வுத்தொகைக்கு ''வரி விதிப்பு'' என்ற கொள்கை மாற்றத்திற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கான அறிகுறிகள் இந்த பட்ஜெட்டில் தெரிகிறது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
              அண்மையில் சென்ற 16 - ஆம் தேதி  பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியினால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என்பது சாதாரண மக்களுக்கு எதிரான பல்வேறு முன்மொழிவுகளை கொண்ட பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகளும், பல்வேறு எதிர்க்கட்சிகளும் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியும், குட்டிக்காட்டியும் வருகின்றன. 
               அப்படிப்பட்ட இந்த பட்ஜெட்டில் இன்சூரன்ஸ் சேமிப்பில் இதுவரை வழக்கமாக கொடுக்கப்பட்ட வருமானவரிச் சலுகை என்பது   இந்த முறை கடுமையாக ''இறுக்கப்''பட்டுள்ளது. 
            அதாவது இன்சூரன்ஸ் சேமிப்பில் இதுவரை.... வருமானவரிச் சட்டம் - பிரிவு - 80 C  அடிப்படையில் ஒருவர் தான் தேர்ந்தெடுக்கும் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரிமியம் என்பது அந்த பாலிசியின் காப்புத்தொகையில் 20 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும். உதாரணத்திற்கு ஒருவர் ரூ.1,00,000 காப்புத்தொகைக்கு இன்சூரன்ஸ் எடுக்கிறார் என்றால் அவர் கட்டவேண்டிய பிரிமியம் என்பது  ரூ. 20,000 - மாகவோ அல்லது அதற்கு குறைவாகவோ இருக்கவேண்டும்.   இருபது சதவீதத்திற்கு மேல் பிரிமியம் இருந்தால், வருமானவரிச் சலுகைக்கு இருபது சதவீதம் மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். அதேப்போல் மக்கள் கட்டக்கூடிய பிரிமியம் இருபது சதவீதத்திற்கும் அதிகமாக   இருந்தாலும், திரும்பப்பெறும் முதிர்வு பலன் மற்றும் இறப்பு ஈடு தொகை எவ்வளவு இலட்சமாக இருந்தாலும், கோடியாக இருந்தாலும் இவைகளுக்கும் வருமானவரிச் சட்டம் - பிரிவு - 10 (10 D ) அடிப்படையில்  வருமானவரிச் சலுகை உண்டு. அதன் மூலம் ஒரு பைசா கூட வரி பிடித்தம் செய்யாமல் முழு தொகையும் மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
              ஆனால், 2012  - 2013 மத்திய பட்ஜெட்டில் மக்களின் எதிர்கால சேமிப்பான இன்சூரன்சில் மத்திய அரசு கடுமையை காட்டியுள்ளது. அது என்னவென்றால்...
            காப்புத்தொகையில் 20 சதவீதமாக அனுமதிக்கப்பட்ட பிரிமியத்தொகை என்பது   இனி வருங்காலத்தில்  10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு....  ரூ.1,00,000 காப்புத்தொகை என்றால், பிரிமியம் என்பது  ரூ. 10,000 - மாகவோ அல்லது அதற்கு குறைவாகவோ இருக்கவேண்டும். பத்து சதவீதத்திற்கு மேல் பிரிமியம் இருந்தால் பத்து சதவீதம் மட்டுமே வரிச் சலுகைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதுமட்டுமல்ல, பத்து சதவீதத்திற்கும் மேல் பிரிமியம் கட்டக்கூடிய அந்த பாலிசியின் முதிர்வு பயன் அல்லது இறப்பு ஈடு பெறும் போது வருமானவரி பிடித்தம் செய்யப்பட்டு பாலிசிதாரருக்கு தரப்படும். 
              இந்த மாற்றம் என்பது 01 - 04 - 2012 தேதிக்கு பிறகு எடுக்கும் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு மட்டுமே பொருந்தும். 
            இன்று இதை மக்கள் அனுமதித்தால் நாளை அனைத்துப் பாலிசிகளுக்கும் வருமானவரி பிடித்தம் செய்ய  மத்திய அரசு தயங்காமல் முயற்சி மேற்கொள்ளும் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. 
          இது உழைப்பால் சேர்த்த மக்களின் சேமிப்புகள் அனைத்திற்கும்  படிப்படியாக வரிவிதிப்பதற்கான முன்னோட்டமாகும். ஏற்கனவே வங்கிகளில் ''FIXED DEPOSIT '' என்று சொல்லக்கூடிய ''நிரந்தர வைப்புநிதியின்'' முதிர்வுத்தொகைக்கு வருமானவரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதையும் மத்திய அரசு சத்தமில்லாமல் புகுத்தியது. இதை அறியாத மக்கள் - குறிப்பாக பணி ஓய்வு பெற்றவர்கள்  தங்கள் பணத்தை பத்திரமாக இருக்கும் என்றும், பலமடங்கு பெருகும் என்றும் இந்த வைப்புநிதியில் தான் போட்டுவைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. PAN CARD வைத்திருப்பவர்களிடம் 10 சதவீதமும், PAN CARD இல்லாத ''பஞ்சப்பரதேசிகளிடம்'' 20 சதவீதமும் வருமானவரியாக பிடித்தம் செய்யப்படுகிறது என்கிற உண்மையை மக்களிடம் சொல்லவேண்டும்.
            இப்படியே மக்கள் வங்கி சேமிப்பு, இன்சூரன்ஸ் சேமிப்பு போன்றவற்றிற்கு வருமானவரி விதிக்கும் அரசின் போக்கை அனுமதித்தால் அடுத்து PROVIDENT FUND ,  தபால் அலுவலக சேமிப்பான NSC பத்திரம் போன்ற  அனைத்து சேமிப்பிற்கும்  வருமான வரி விதிக்கும் தைரியம் மத்திய அரசுக்கு வந்துவிடும்.
               இரயில் கட்டணத்தை உயர்த்தியதற்காக இரயிவே அமைச்சரை பதவி விலகச் செய்த மம்தா, சாதாரண மக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் பொது பட்ஜெட்டைக் கொடுத்த மத்திய நிதியமைச்சரை பதவி விலக சொல்வாரா..?

புதன், 21 மார்ச், 2012

அமெரிக்க வரலாற்றில் புதிய திருப்பம் - மே 1 அன்று முழு வேலை நிறுத்தம்...!


             பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமெரிக்காவில் கடந்த ஆறு மாதங்களாக ''வால் ஸ்ட்ரீட்டை  கைப்பற்றுவோம்'' போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்கள் மீது அமெரிக்க அரசு  கடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. இந்த வாரத்தில் மட்டும்  73 பேர் கைது செய்யப்பட்டனர்.           கடந்த ஆறு மாதங்களில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தைத் தாண்டிவிட்டது. 
          முதன்முதலில் கடந்த ஆண்டு செப்டம்பர் 17 - ஆம் தேதியன்று ''சுக்கோட்டி பூங்காவில்'' தான் இந்தப் போராட்டம் துவக்கப்பட்டது. பிறகு அந்த போராட்டம் என்பது நாடு முழுதும் பரவியது. போராட்டம் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவு பெறுவதையொட்டி, அந்தப் பூங்காவை மீண்டும் கைப்பற்றப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர். அவர்களின் முயற்சியை முறியடிக்க கைது மற்றும் மிரட்டல் போன்ற வழிகளில் காவல்துறையினர் இறங்கினர்.
          எந்தவிதத் தொய்வும் இல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால், சுக்கோட்டி பூங்கா முன்பாக நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டுவிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நீதிகோரும் அமைப்புகள் ஆகியவை ஆதரவு தெரிவித்திருந்தன. தங்கள் அமைப்புகளின் உறுப்பினர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். நாடு முழுவதும் நடந்து வரும் அடக்குமுறையைக் கண்டித்து வரும் ''மே 1 -  ஆம் தேதியன்று முழு வேலை நிறுத்தம்'' நடத்த பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
              அன்று அமெரிக்க மக்கள் அனைவரும் பணிகளுக்குச் செல்லாமலும், மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்காமலும் இருக்க வேண்டும் என்று அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அந்த ஒரு நாளில் மக்கள் எந்த செலவையும் செய்ய வேண்டாம் என்ற வித்தியாசமான கோரிக்கையையும் முன்வைத்திருக்கிறார்கள். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரிவினர் ''வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம்'' போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மன்ஹாட்டன் நகரைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சித் தலைவர்களில் ஒருவரான டானிஸ் ரோட்ரிக்ஸ் காவல்துறையினரின் அடக்குமுறை நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்தார். போராட்டக்காரர்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்கும் வகையில் மன்ஹாட்டன் நகரக் கவுன்சிலில், போராடுபவர் உரிமைப் பாதுகாப்பு மசோதா கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
             அவரது கருத்துக்கு தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நகரக்கவுன்சில் உறுப்பினர்களும் இத்தகைய மசோதாவை நிறைவேற்றத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் பொது இடங்களை ஆர்ப்பாட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற சட்டத்தில் ஒபாமா கையெழுத்திடுகிறார். அது அமலுக்கு வந்துவிட்டால் நகர கவுன்சில் தீர்மானம் செல்லாததாகி விடும்.

ஆசிரியர்களும் போராட்டக் களத்தில்

           லாஸ் ஏஞ்சல்சில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பேரணியாக வலம் வந்துள்ளனர். கல்விக்கான பட்ஜெட்டில் எக்கச்சக்க வெட்டை ஒபாமா தலைமையிலான அரசு செய்யப் போகிறது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் வேலை பறிபோகப்போகிறது. இதுவரையில் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணிநீக்கம் செய்யப்போகிறோம் என்கிற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில்தான் அதிகமான அளவில் ஆசிரியர்கள் வேலையிழக்கிறார்கள். இவர்களுக்குப் பதிலாக புதிதாக ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை.
         அப்படி நியமிக்காத பட்சத்தில் சுமார் 40 விழுக்காடு பள்ளிக்கூடங்கள் இழுத்து மூடப்பட்டாலும் ஆச்சரியமில்லை. இது ஒட்டுமொத்த கலிபோர்னியாவின் கல்வித்துறையையே முடக்கி விடும் என்கிறார்கள் ஆசிரியர்கள். வேலை நீக்கத்திற்கு அடையாளமாக வழங்கப்பட்டுள்ள இளஞ்சிவப்பு அட்டைகளைக் கைகளில் ஏந்தியவாறு ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்றனர்.அமெரிக்கக் கல்வித்துறை தனது சொந்த ஊழியர்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தையே மரியாதை இல்லாமல் நடத்துகிறது என்கிறார் போராடும் ஆசிரியர்களில் ஒருவரான ஜோஸ் லாரா. நடைமுறையில் என்ன பிரச்சனைகள் என்பது பற்றிக் கவலைப்படாமல் அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஐக்கிய ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான வாரன் பிளெட்சர், கலிபோர்னியா நிர்வாகம் மட்டும் எந்தக் கவலையும் இல்லாமல் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்தால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
அதோடு, ஒட்டுமொத்த மாகாணத்தின் கல்வித்துறையே முடங்கிவிடும் என்கிறார். தங்களின் வேலை நீக்கம் மற்றும் வாழ்வாதாரப் பாதிப்பு என்பதோடு நிற்காமல், மாணவர்களின் கல்வி முழுமையாகப் பாதிக்கப்பட்டுவிடும் என்று எச்சரிக்கை மணியை ஒலிக்க விடுகிறார்கள் ஆசிரியர்கள். மாகாண நிர்வாகமோ, தந்திரமான மக்களை முன்னிறுத்துகிறார்கள். வரியைக் கூட்டினால் இதைச் சமாளித்துவிடலாமே என்று மக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் இந்தத் திட்டத்தோடு, முதியோர் கல்வி, இளங்கலை மற்றும் சிறுவர்களுக்கான திட்டங்கள் ஆகியவற்றை இல்லாமல் போகச் செய்யும் திட்டம் அமெரிக்க அரசுக்கு உள்ளது. ஜூன் 30 - ஆம் தேதிக்குள் பட்ஜெட் பற்றாக்குறையைப் போக்குவதற்கான வேலைகளை நாங்கள் முடித்தாக வேண்டும் என்கிறது நிர்வாகம்.
       இந்நிலையில்தான் நாடு முழுவதும் நடக்கும் ''வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம்'' போராட்டங்களின் ஒரு பகுதியாக கல்வித்துறை ஊழியர்களும் பங்கேற்கப் போகிறார்கள். 
         மே 1 - ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் நாடு தழுவிய முழு வேலை நிறுத்தத்தில் அவர்களும் களமிறங்குகிறார்கள். 99 சதவிகித மக்களில் நாங்களும் ஒருபகுதிதான் என்று அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு புதிய உற்சாகத்தை அளிக்கும் வகையில் பல்வேறு துறையினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 

செவ்வாய், 20 மார்ச், 2012

காக்கை குருவி எங்கள் ஜாதி - சிட்டுக்குருவிக்கு அடைக்கலம் கொடுப்போம்

                இயற்கையின் படைப்புகளில் வண்ணமிகு படைப்புகளில் பூக்களுக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பவை பறவை இனங்கள் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது. அவற்றில் மனிதனோடு இணைந்து வாழ்ந்த பறவைகள் பலவற்றை இன்று காண முடியவில்லை. அவற்றில் சிட்டுக்குருவியும் ஒன்று. இன்று அவை அருகி வருகின்றன என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள். இன்றைய அவசர உலகில் இயற்கையைப் போற்றுவோர் எண்ணிக்கை குறைந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
              பணம் சேர்ப்பது, வசதிகளைப் பெருக்குவது என்று உலகம் இயந்திரமயமாகி வருகிறது. நுகர்வோரியத்தை வளர்த்துவரும் பெரும் நிறுவனங்கள் தொடுக்கும் விளம்பரப் போரில் மதிமயங்கி நிற்கும் மக்கள் இயற்கை அழிக்கப்படுவதை அறியவில்லை என்று கூடக் கூறமுடியாது. அறிய மறுக்கிறார்கள் என்பதே யதார்த்தமான உண்மை. .புலிகளும் யானைகளும் காண்டாமிருகங்களும் எண்ணிக்கை குறைந்து வருவதைப் பற்றி கவலைப்படும் அரசு கூட , சிட்டுக் குருவிகள் மறைந்து வருவதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
          இவை குறைவதற்கான காரணங்களைத் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. யுனைடெட் கிங்டமைச் (பிரிட்டன் அயர்லாந்து ஸ்காட்லாந்து உள்ளிட்டவை) சேர்ந்த முன்னணி நாளிதழ் ஒன்று, சிட்டுக்குருவிகள் அழிந்து  வரும் மர்மத்தைக் கூறுவோருக்கு ரொக்கப்பரிசு வழங்குவதாக அறிவித்தது. 

காரணங்கள் பல 

     சிட்டுக்குருவிகள் சிறிய புழுக்களையும், பூச்சிகளையும் உண்டு வாழ்பவை. இன்று இவைகளும் அருகி வருகின்றன. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சி மருந்துகளும் உரங்களும் புழுக்களையும் பூச்சிகளையும் அழித்துவிடுகின்றன. நீரைத் தூய்மைப்படுத்தும் குளோரினும் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டும் சிறு உயிர்களுக்கு எதிரிகளாகும். பெட்ரோல் பயன்பாட்டால் உருவாகும் புகை வாயு மண்டலத்தை மாசுபடுத்துவதை அறிவோம். அதைத் தவிர்க்க துத்தநாகம் இல்லாத பெட்ரோல் பயன்பாட்டுக்கு வந்தது.
இவ்வகை பெட்ரோல் உருவாக்கும் புகையில் உற்பத்தியாகும் மெத்தைல் நைட்ரேட் சிட்டுக்குருவியின் உணவுகளான புழு பூச்சிகளை அழித்து விடுகின்றன.  பெருகிவரும் நவீன அங்காடிகளின் பெருக்கமும் சிட்டுக்குருவிகள் நகர்ப்புறத்தை விட்டு விலகியதற்குக் காரணமாகும். நம்ம ஊரு பலசரக்குக் கடைகளில் வெளியில் சாக்குகளில் திறந்தபடி வைக்கப்பட்டிருக்கும் தானியங்களும், கடைக் குப்பைகளில் கிடக்கும் தானியங்களும் அவற்றுக்கு உணவாக இருந்தன. இன்று பிளாஸ்டிக் பொட்டலங்களில் அடைத்து வைக்கப்படும் பொருட்கள் சிந்துவதில்லை. அங்காடிகளுக்குள் குருவிகள் செல்ல முடிவதில்லை. அன்றைய ஓட்டு வீடுகளிலும், கூரை வீடுகளில் காணப்பட்ட ஓட்டைகளும் பொந்துகளும் இன்றைய கான்கிரீட் வீடுகளில் கிடைப்பதில்லை. சாய்வாக மாட்டப் பட்ட புகைப்படங்களின் பின்புறமும் இன்று கிடைப்பதில்லை. விரிவாக்கத்துக்கும் வசதிப் பெருக்கத்துக்கும், மின்சாரம் மற்றும் தொலைபேசி வசதிக்காகவும், மரங்களும் வெட்டப்படுவதால் அவற்றின் குடியிருப்புகள் உருவாக வெளிகள் இல்லை.
            வீட்டுத் தோட்டங்களும் மறைந்துவிட்டன. அலைபேசியும் இவற்றுக்கு எதிரியாகிவிட்டன. அலைபேசி கோபுரங்கள்  உருவாக்கும் மின்காந்தக் கதிர்கள் சிட்டுக்குருவி முட்டைகளின் உயிர்ச்சத்தை அழித்து விடுகின்றன. எனவே அவை மனித நடமாட்டமுள்ள பகுதிகளை விட்டு விலகிச் செல்கின்றன. 

நாம் செய்ய வேண்டியது என்ன?                                                                                                          

        நிலைமை இப்படியே சென்றால் எதிர்காலச் சந்ததிகளுக்கு சிட்டுக்குருவிகளை புகைப்படங்களில் மட்டுமே காட்டமுடியும். அந்த சங்கடத்தைத் தவிர்க்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். மனிதன் உள்ளிட்ட எந்தவொரு இனமும் உயிர் வாழ்வதற்கு பல காரணிகள் உண்டு. அவற்றில் உணவு, இருப்பிடம், மறுஉற்பத்தி, எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு ஆகியவை முக்கியமானவையாகும். இவை குறைந்து வருவதால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.பறவை ஆர்வலர்களும், பறவை இயல் நிபுணர்களும் சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்கும் இயக்கத்தைக் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள்.
         ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ம் நாளை உலக சிட்டுக்குருவி தினமாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். ஒவ்வொரு வீட்டின் கதவுகளும் சிட்டுக்குருவிகளின் வருகைக்காகத் திறந்துவிடப்படவேண்டும். அன்றாட வாழ்வில் அவை சந்தித்து வரும் தடைகளைப் பற்றி மக்கள் உணர வேண்டும். அவற்றைக் களைய எடுக்க வேண்டிய திட்டமான நடவடிக்கைகளை நாம் தீர்மானிக்க வேண்டும். உணவும் இருப்பிடமும் அவற்றின் இன்றியமையாத் தேவைகளாகும். அவற்றை அளிக்க வேண்டும். மொட்டை மாடிகளில் அரிசிக் குருணை, கேழ்வரகு போன்ற தானியங்களைச் சிதறி விட வேண்டும். தானியங்களை அகன்றவாயுள்ள தகர டப்பாக்களில் போட்டு வைக்க வேண்டும். மதுரையில் ஒரு வீட்டில் வெளிச்சுவரில் இரண்டு கல்சட்டிகளை பதித்து வைத்துள்ளார்கள். ஒன்றில் வீட்டில் மிச்சம் விழும் உணவும் தானியங்களும் போடப்படும். மற்றொன்றில் தண்ணீர் நிரப்பப்படும். அங்கு பல பறவைகள் உண்டு தாகம் தணித்து இளைப்பாறிச் செல்வதைக்கண்டு அவ்வீட்டார் மன நிறைவடைகிறார்கள்.
       அதேபோல் இருப்பிடமும் ஏற்பாடு செய்ய வேண்டிய அதற்கெனத் தயாரிக்கப்படும் கூண்டுகளை வீட்டில் உள்ள மரங்களில், வெயிலும், மழையும் பாதிக்காத சுவர்களில் பதித்து வைக்க வேண்டும். வீடுகளின் ஜன்னல்களில் கூட அவற்றை கட்டிவிட முடியும். ஆனால் பூனைகள் அவற்றைத் தாக்கி அழிக்காதபடி கூண்டுகளைப் பொருத்தவேண்டும்.வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் விழும் இயற்கைக் குப்பைகளை மண்குழிகளில் கொட்டி மக்கும் படி விட வேண்டும். அப்போது அதில் உருவாகும் புழுக்கள் சிட்டுக்குருவிகளுக்கு உணவாகும். சிட்டுக்குருவிகள் பெருகுவதால் பலன் தரும் மரங்களில் செடிகளில் உண்டாகும் புழுக்கள் தொந்தரவு இருக்காது. மார்ச் 20ல் உலக சிட்டுக்குருவி தினத்தில் இயற்கையாய் வாழ்வோம், இயற்கையோடு வாழ்வோம், இயற்கையை வாழ வைப்போம் என்ற உறுதியை மனமுவந்து ஏற்போம்.

திங்கள், 19 மார்ச், 2012

எல். ஐ . சி. பணியில் 25 ஆண்டுகள் இன்று நிறைவு செய்கிறேன் - பெருமையடைறேன்....!

             இன்று மார்ச் 19 இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் 1987 - இல் இந்தியாவின் மிக உயர்ந்த பொதுத்துறை நிறுவனமான எல். ஐ. சி - இல் சேர்ந்த நாள்.. சமூக அக்கறையை எனக்கு ஊட்டி வளர்த்த அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தில் என்னை இணைத்துக்கொண்ட நாள்... 25 ஆண்டுகள் எல். ஐ. சி. பணி... சங்கப்பணி... மக்கள் சேவையில் - தேச நலப்பணியில் 25 ஆண்டுகள்.. பெருமையாய் இருக்கிறது. மிகுந்த பெருமையுடன் நான் பயணித்து வந்த இருபத்தைந்து ஆண்டுகளை திரும்பிப் பார்க்கிறேன்..  
                       இன்று என்னை புதுப்பித்துக் கொண்டு சமூக மாற்றத்திற்கான ஆழமான நம்பிக்கையுடன் என் சங்கமும், செங்கொடியும் வழிகாட்டும் பாதையில் முன்னே செல்கிறேன்... இந்த நாளில் எனை ஈன்ற என் தாய் - தந்தை, கல்விக்கண் திறந்த என் ஆசிரியர்கள், எனக்கு பணி கொடுத்து அதற்கேற்ற ஊதியம் கொடுத்து சமூகத்தில் எனை உயர்த்திய என் நிறுவனம் எல். ஐ. சி., சுயநலம் நீக்கி சமூக அக்கறையை என்னுள் வளர்த்த என் சங்கம், என்னை உயர்ந்த மனிதனாக்கிய என் செங்கொடி இயக்கம், நான் பணிபுரியும் இயக்கங்களான எல். ஐ. சி. முகவர்கள் சங்கம், முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், சி. ஐ. டி. யு.,  புதுவை அறிவியல் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையம்,   என் நல விரும்பிகளான என் அன்பு உடன்பிறப்புகள், என் அருமை நண்பர்கள், என் இனிய தோழர்கள், என் அனைத்து இயக்கங்களுக்கும் திரைமறைவில் துணை நிற்கும் என் அன்பு மனைவி, என் பாசமிகு மகள்கள் அனைவருக்கும் இந்த நாளில் என் நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்... 

வியாழன், 15 மார்ச், 2012

அரசியல் பிழைப்புகளுக்காக மம்தா பானர்ஜி போடும் மார்க்சிஸ்ட் வேஷம்...!

            நேற்று முன் தினம் மத்திய இரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி ஒரு ''அற்புதமான'' இரயில்வே  பட்ஜெட்டை வழங்கினார். கடந்த எட்டு  ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த பயணிகள் கட்டணத்தை இந்த பட்ஜெட்டில் தாறுமாறாக உயர்த்தி சாதனைப்படுத்தி இருக்கிறார்.  அதுமட்டுமில்லாது நடைமேடை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சரக்கு இரயில் கட்டணம் பட்ஜெட்டுக்கு முன்பே காதும் காதும் வைத்தார் போல் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இரயில் நிலையங்கள் விமான நிலையங்கள் அளவுக்கு தரம் உயர்த்துவதற்கு இரயில் நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்கப் போவதாகவும் முன்மொழிந்திருக்கிறார். 
                 இவைகள் அத்தனையும் தினேஷ் திரிவேதியின் சொந்தக் கருத்தில் உதித்தவையல்ல. அல்லது இது தினேஷ் திரிவேதி தன் விருப்பப்படி தனிப்பட்ட முறையில் தாயாரித்த இரயில்வே பட்ஜெட்டும் அல்ல. மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவில் உருவான பட்ஜெட் இது. ஏற்கனவே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவாகி ஏற்றுக்கொள்ளப்பட்டு உருவான பட்ஜெட் தான் இது. அமைச்சரவையில் பங்கு பெற்றும் , அரசுக்கு உள்ளேயே  இருந்து கொண்டும் , ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அனைத்து முடிவுகளையும் அமைச்சரவைக் கூட்டங்களில் ஏற்றுக் கொண்டும், மம்தாவின் வழி காட்டலோடும் செயல்படுகிற ஒரு அமைச்சர் தான் இந்த இரயிவே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி என்பதை மக்கள் மறந்திருப்பார்கள் என்று மம்தா பானர்ஜி நினைத்துவிட்டார் போலும்.  
              இரயில்வே பட்ஜெட்டை  தினேஷ் திரிவேதி படித்து முடித்தவுடன், மம்தா அம்மையாருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டிருக்கிறது. கொதித்துப் போய்விட்டாராமாம். அதே கோபத்தில் பிரதமருக்கு,  பயணிகள் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு சுமையை ஏற்படுத்திய இரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியை பதவி நீக்கம் செய்யுங்கள் என்று வேகமாக ஆணையிட்டார். நல்ல வேலை தூக்கில் போடுங்கள் என்று சொல்லவில்லை.
               அவர் தான் மம்தாவின் கட்சியை சேர்ந்தவராயிற்றே, பிரதமருக்கு ஆணையிட்டதற்கு பதிலாக தன கட்சியை சேர்ந்த தினேஷ் திரிவேதிக்கே பதவி விலகச் சொல்லி ஆணையிட்டிருந்தால், மாட்டேன் என்றா சொல்லிவிடுவார். அல்லது கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் மக்களின் தலையில் அதிக சுமையை ஏற்றிவிட்டீர்களே... அதனால் நாங்கள் அரசுக்குக் கொடுத்துவந்த ஆதரவை திரும்பப்பெருகிறோம் என்று சொல்லி கட்டண உயர்வை திரும்பப்பெற முயற்சி செய்திருக்கலாம். ஆக கட்டண உயர்வு என்ற முக்கியமான பிரச்னையை திசைத்திருப்புவதற்காக தன்னை ஒரு கம்யூனிஸ்டை போல காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்.  மம்தா இது மாதிரியான செயல்பாட்டின் மூலம் மேற்குவங்க மாநில மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்.  
                மக்களுக்கெதிரான மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும், அநீதிகளை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குரல் கொடுப்பது போல் தாமும் கொடுத்தால் தான் மேற்குவங்கத்தில்  அரசியல் பிழைப்பு நடத்த முடியும் என்ற கட்டாயம் மம்தா பானர்ஜிக்கு இருக்கிறது.

இலங்கையில் கால் பதிக்க துடிக்கிறது அமெரிக்கா - அதற்கு இந்தியா ஏன் அதரவு தரவேண்டும்...?

       ஜெனீவாவில் நடந்துவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான கண்டனத்  தீர்மானம் ஒன்று  அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் ஆகிய நாடுகளில் மனித உரிமை மீறல்களை தயங்காமலும், அச்சமில்லாமலும் செய்த அமெரிக்கா தான் இந்த கண்டனத் தீர்மானத்தைக் கொண்டுவருகிறது. இதன் மூலம்  மனித உரிமைகள் மீது அக்கறையுள்ள மனித நேயமிக்க நாடாக தன்னை உலக நாடுகள் மத்தியில் காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 
           இலங்கைத் தமிழர்கள் மீது அமெரிக்காவிற்கு திடிரென்று அப்படி என்ன அவ்வளவு அக்கறை...? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. பிறகு ஏன் இலங்கை அரசின் மீது அமெரிக்கா கண்டனத் தீர்மானம் கொண்டுவரவேண்டும். 
             பொதுவாக அமெரிக்கா ஒரு நாட்டின் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவருகிறது என்றால்,  ஒன்று அந்த நாட்டின் மீது ஆக்கிரமிப்பு செய்யப்போகிறது அல்லது போர் தொடுக்கப்போகிறது என்று பொருள் அல்லது ஒரு நாட்டில் உள்ள எதோ ஒன்றை  எதிர்ப்பார்த்து அது கிடைக்காமல் போய் அதனால் அந்த நாட்டின் மீது எரிச்சல் அடைந்திருக்கிறது அல்லது கோபம் அடைந்திருக்கிறது என்றும் பொருள். 
           இலங்கை அரசின் மீது அமெரிக்காவிற்கு அப்படி என்ன எரிச்சல்...? அப்படி என்ன கோபம்...?   அமெரிக்கா எதிர்ப்பார்த்த  ஒன்று என்ன இலங்கையில் கிடைக்காமல் போய்விட்டது...?  ஆம்... அமெரிக்கா தன் கைக்கு வரும் என்று எதிர்ப்பார்த்த ஒன்று அதன் கைக்கு கிடைக்காமல் போனது தான் இலங்கை மீதான அதன் எரிச்சல்.

             அமெரிக்கா நீண்ட காலமாகவே இலங்கையின் வடபகுதியில் உள்ள திரிகோணமலை மீது ஒரு கண் வைத்திருந்தது. அதற்கு காரணம் உண்டு...! இலங்கையின் தென் கடற்கரைப் பகுதியில் இந்தியப்பெருங்கடலில் - இந்திய தென் முனையிலிருந்து  சுமார் 2200 கிலோ மீட்டர் தொலைவில் ''டீகோ கார்சியா - DIEGO GARCIA'' என்ற தீவு உள்ளது. நீங்க உலக வரைபடத்தைப் பார்த்தால்  கண்ணுக்குத் தெரியாத தீவு ஒன்று தெரியும். அது இங்கிலாந்திற்கு சொந்தமான தீவு ஆகும். ஆனால் அந்த தீவை அமெரிக்கா தன் கைவசம் வைத்துள்ளது.  அந்த தீவில் தான் அமெரிக்காவிற்கு சொந்தமான விமானப்படை மற்றும் கடற்படை தளங்கள் உள்ளன. அதை படத்தில் காணலாம்.  அதுமட்டுமல்லாது. நிறைய ஆயுதங்களும்,  ஏவுகணைகளும் அங்கே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த படைத்தளம் என்பது  ஆசியப்பகுதியில் உள்ள இராக்,  ஈரான்,  இந்தியா, சீனா, வடகொரியா  போன்ற நாடுகளை தன் இராணுவப்பார்வைக்குள் வைத்துக்கொள்வதற்காகவே 1971 - ஆம் ஆண்டில்  அமெரிக்காவால் நிறுவப்பட்டது.  முன்பு இராக் நாட்டோடு போர் செய்த போது இங்கிருந்து தான் படைகள் எல்லாம் உடனுக்குடன் அங்கு அனுப்பப்பட்டது. இப்போதும் கூட ஈரானை தாக்குவதற்காக இங்கு படைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
              சகல வசதிகளோடு இந்த தீவு இருந்தாலும், அமெரிக்கா திருப்தியடையவில்லை. காரணம், இந்த தீவானது மேலே சொன்ன நாடுகளிலிருந்து மிக தொலைவில் உள்ளது. அதனால் அமெரிக்கா இந்த நாடுகளுக்கு அருகில் வரவேண்டும் என்று ஆசைப்பட்டது. அப்போது தான் திருகோணமலை அதன் கண்ணில் பட்டது. அந்தப்பகுதி கிடைத்துவிட்டால் இந்தியாவிற்கு பக்கத்திலேயே வந்து விடலாம் என்பது மட்டுமல்ல... அரபு நாடுகளிலிருந்து இலங்கை கடற்பகுதி வழியாக  சீனாவிற்கு செல்லும் எண்ணெய் கப்பல் போக்குவரத்தையும் நிறுத்திவிடலாம் என்பது போன்ற கனவில் அமெரிக்கா கனவு கண்டது. ஆனால் திருகோணமலையோ  அப்போது விடுதலைப்புலிகள் வசம் இருந்தது. அதனால் அமெரிக்காவிற்கு  விடுதலைப்புலிகளின் தயவு தேவைப்பட்டது. 
              எனவே விடுதலைப்புலிகளின் நட்பைப் பெறுவதற்கும்,  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மீண்டும் பிரதமராக வந்துவிடக்கூடாது என்ற அமெரிக்காவின் எதிர்ப்பார்ப்புக்கும்,   ராஜீவ்காந்தியின் உயிர் விலைப்பேசப்பட்டது. விடுதலைப்புலிகளும் பழி தீர்த்துக்கொண்டனர். அமெரிக்காவின் எண்ணமும் நிறைவேறியது. பிறகு விடுதலைப்புலிகளும் அமெரிக்காவும் நண்பர்கள் ஆனார்கள்.
              இந்த நட்பைப் பயன்படுத்தி விடுதலைப்புலிகள் வசம் இருக்கும் திருகோணமலைக்கு குடிபெயர்ந்து விடலாம் என்று வடைக்காக காத்திருந்த குள்ளநரிப் போல் காத்திருந்தது. ஆனால் இலங்கை ஒரே நாடாக இருந்தால் அது நிறைவேறாது என்பதை உணர்ந்த அமெரிக்கா, ஏற்கனவே தனி நாடு என்ற கோரிக்கையுடன் உள்நாட்டிலேயே இலங்கை அரசுடன் போராடிக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்து இலங்கை இராணுவத்துடன் மோதவிட்டது. விடுதலைபுலிகளுக்கும், இராணுவத்திற்கும் நடைபெற்ற கடுமையான சண்டையில் விடுதலைப்புலிகள் அமைப்பு பூண்டோடு அழிக்கப்பட்டு, பிரிவினைவாதம்  ஒழிக்கப்பட்டுவிட்டது. 

              இன்று திருகோணமலை என்பது ஒன்றுபட்ட இலங்கையில் ஒரு பகுதியாக உள்ளது. அமெரிக்கா என்ற குள்ளநரி எதிர்ப்பார்த்த வடை கிடைக்காமல் போய்விட்டது. அமெரிக்காவின் நீண்ட காலக் கனவு நிறைவேறாமல் போய்விட்டது. இது தான் இன்றைக்கு அமெரிக்காவுக்கு இலங்கை மீது உண்டான எரிச்சலும் கோபமும் ஆகும். அதனால் தான் இலங்கை அரசின் மீது மனித உரிமை மீறல் எதிரான கண்டனம் என்ற பெயரில் தன் எரிச்சலையும் கோபத்தையும் அமெரிக்கா வெளிகாட்டியுள்ளது. 
                இந்த சூழ்நிலையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஏன் இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை இங்குள்ள அரசியல் கட்சிகள் சற்று சிந்திக்க வேண்டும். தேர்தல் ஓட்டுக்காக இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூச்சல் போடுவது என்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. இந்த தீர்மானத்தை அமெரிக்கா ஏன் கொண்டுவரவேண்டும்..? என்பதை தமிழர்கள் நன்கு யோசிக்கவேண்டும். இலங்கை தமிழர்கள் மீது அமெரிக்காவிற்கு அப்படி என்ன அக்கறை என்பதையும் யோசிக்க வேண்டும்...?
            நியாயப்படிப் பார்த்தால் இந்த கண்டனத் தீர்மானத்தை இந்தியா தான் கொண்டுவந்திருக்க வேண்டும். ஏனென்றால் இலங்கையில் நடைபெற்றக் கொடுமைகளை நேரடியாகப்பார்த்து இரத்தக்கண்ணீர் வடித்தவர்கள் நாம் தான். அப்பாவித் தமிழர்கள், நம்முடைய சகோதர- சகோதரிகள், நம் வீட்டுக் குழந்தைகளும், வயதானவர்களும் தான் கொடுமையான முறையில் கொல்லப்பட்டனர். இன்றைக்கு மிச்ச மீதி இருக்கிற தமிழர்களும் தன் சொந்த நாட்டிலேயே வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். இதை நம் மத்திய - மாநில அரசுகள் கண்கூடாகப் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றன. அப்படி இருக்கையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தனியாக ஒரு தீர்மானத்தை கொண்டுவர இங்குள்ள மத்திய - மாநில அரசுகளுக்கு ஏன்  எண்ணம் வரவில்லை...? அமெரிக்கா கொண்டுவந்த இந்த தீர்மானத்தை ஆதரிக்கக் கூச்சல் போடும் எதிர்கட்சிகள், இந்திய அரசு இலங்கை அரசுக்கு எதிராக தனியாக கண்டனத் தீர்மானம் ஒன்றைக்கொண்டு வரவேண்டும்  என்று ஏன் கூச்சல் எழுப்பத் துணியவில்லை.

             ஏன் அமெரிக்காவின் வாலை பிடித்துக்கொண்டு அலைய வேண்டும்...? நமக்கென்று தனித்தன்மையும், மனித நேயமும், அநீதிகளுக்கெதிரான போர்க்குணமும் உண்டு. அதை நாம் காப்பாற்றுவோம்.

திங்கள், 12 மார்ச், 2012

அமெரிக்காவைப் போலவே பயங்கரவாத எதிர்ப்பு மையம் இங்கெதற்கு...?

             ஐ.மு.கூட்டணி-2 அரசு தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு மையம் ( National Counter Terrorism Centre   ) அமைப்பது குறித்து தன்னிச்சையாக அறிவித்திருக்கும் முடிவை,  ஐக்கிய முற்போக்கு  கூட்டணியில் உள்ள சில கட்சிகள் உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள், ‘மாநிலங்களின் உரிமைகளில் கை வைத்திடும் மற்றோர் ஆக்கிரமிப்பு நடவடிக்கை இது’ என்று மிகவும் சரியாகவே சீற்றத்துடன் எதிர்த்திருக்கின்றன.
              இது மத்திய - மாநில உறவுகள் மீது புதியதொரு விவாதத்தை முடுக்கி விட்டிருக்கிறது. நம் அரசமைப்புச் சட்டத்தின் முதல் வாக்கியமே ‘‘பாரதம் எனப்படும் இந்தியா என்பது மாநிலங்களின் ஓர் ஒன்றியமாகும்’’ என்றுதான் தொடங்குகிறது என்பதைத் துரதிர்ஷ்டவசமாக  ஐக்கிய முற்போக்கு கூட்டணி - 2 அரசுக்கு நாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. இந்த வரையறையிலிருந்து தான் நம் நாட்டின் கூட்டாட்சி அமைப்பு தொடங்குகிறது. நம் நாட்டின் உச்சநீதிமன்றத்தாலும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சமாக இது உயர்த்திப் பிடிக்கப்பட்டிருக்கிறது.
         கடந்த சில ஆண்டுகளாகவே மாநிலங்களின் உரிமைகளும், நம் அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவமும் மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக அரிக்கப்பட்டு, அதனை ஒரேகுடையின் கீழான அமைப்பாக மாற்றுவதற்கான வேலை துவங்கிவிட்டது. 1977 - லேயே, தோழர் ஜோதிபாசுவை முதல்வராகக் கொண்டு மேற்கு வங்கத்தில் முதல் இடது முன்னணி அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோதே, நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கேற்ப மத்திய- மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மாற்றியமைக்கக்கூடிய விதத்தில் ஒரு 15 அம்சக் கோரிக்கை சாசனத்தை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. இதனைத் தொடர்ந்து 1983 - இல் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான தொடர்புகள் குறித்து காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்களின் முன் முயற்சிகளின் காரணமாக பல சிறப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன.
         இவற்றில் முதல் சிறப்பு மாநாடு அப்போது ஜம்மு-காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா அவர்களால் நடத்தப்பட்டது. இவ்வாறு மாநாடுகள் நடைபெற்றதன் விளைவாகவே மத்திய-மாநில உறவுகள் மீதான சர்க்காரியா ஆணையம் 1983 - இல் அமைக்கப்பட்டது. ஆணையம் தன் அறிக்கையை 1988  இல் சமர்ப்பித்தது. அது அளித்திட்ட பரிந்துரைகளில் பல மத்திய அரசின் கோப்புகளில் தூசி படிந்து கிடப்பது தொடர்கின்றன. இடது சாரிக் கட்சிகள் வெளியில் இருந்து அளித்த ஆதரவின் துணை கொண்டு ஆட்சியில் நீடித்து வந்த ஐ.மு. கூட்டணி-1 அரசு, இப்பிரச்சனை மீது 2007 ஏப்ரலில் எம்.எம்.புஞ்சி  தலைமையில் ஓர் ஆணையத்தை அமைத்தது. அது தன் அறிக்கையை 2010இல் சமர்ப்பித்தது. ஆனால் அதன் பரிந்துரைகள் மீதும் எவ்விதமான விவாதமும் இதுவரை நடைபெறவில்லை, உருப்படியான காரியம் எதுவும் அமல்படுத்தப்படவும் இல்லை.
         அறிவித்திருக்கும் தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு மையம் தொடர்பாக எழுந்துள்ள நியாயமான கவலைகளைப் போக்கும் விதத்தில் பிரதமர், இந்த அமைப்பு மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்காது என்று உறுதி அளிக்க முயற்சித்திருக்கிறார். ஏழு மாநில முதலமைச்சர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம் ஒன்றில், ‘‘இவ்வாறு அரசாங்கம் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் அமைத்ததன் மூலம், மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயுள்ள அதிகார ஒதுக்கீடுகள் மற்றும் அரசமைப்புச் சட்ட விதிகளைப் பாதிக்கும் எதையும் அரசு செய்யாது’’ என்று எழுதியிருக்கிறார். நாடு முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு இடையே ஓர் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டியதன் தேவையை விளக்கி, பிரதமர் மேலும், ‘‘இதன் காரணமாகத்தான் தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் தனியொரு அமைப்பாக உருவாக்கப்படாமல் புலனாய்வு பீரோவின் ஒரு பிரிவாக அமைக்கப்பட்டிருக்கிறது’’ என்றும் கூறியிருக்கிறார்.
           பிரதமர் இவ்வாறு இந்த அமைப்பை அமைப்பது தொடர்பாக அளித்துள்ள விளக்கத்திலேயே முன்னுக்குப் பின் முரண்படுகிறார். புலனாய்வு பீரோ இந்த வேலையை ஏற்கனவே செய்து கொண் டிருக்கும்போது, பின் எதற்குப் புதிதாக ஓர் அமைப்பு? மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, இதே ஐ.மு.கூட்டணி அரசாங்கம், தேசியப் புலனாய்வு ஏஜென்சி - யை அமைத்தது. அந்த அமைப்பை உருவாக்குவதற்கான சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் மேலும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன? நாடாளுமன்றத்தில் தேசியப் புலனாய்வு ஏஜென்சி அமைப்பது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்ற சமயத்தில், இடதுசாரிக் கட்சிகள் மாநிலங்களின் உரிமைகள் தொடர்பாக தங்கள் நியாயமான கவலைகளைத் தெரிவித்தன.
              அதாவது ‘சட்டம் - ஒழுங்கு’, குற்றவியல் புலனாய்வு மற்றும் குற்றவியல் வழக்குகளில் நீதிவழங்குதல் ஆகிய அனைத்தும் மாநிலங்களின் பட்டியலில் உள்ள உரிமைகளாகும். இவ்வாறு ஓர் அமைப்பு மத்திய அரசால் அமைக்கப்படும்போது, அது மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுவதாகாதா என்று தங்கள் கவலைகளைத் தெரிவித்தன. இதற்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், இந்த அமைப்பு அமைக்கப்பட்டபின் அதன் முதல் ஆறு மாத கால அனுபவங்களின் அடிப்படையில் , இப்பிரச்சனை மீண்டும் நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திடலாம் என்று உறுதி அளித்தார். ஆயினும் இது நடைபெறவே இல்லை. இந்தப் பின்னணியில்தான் தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு மையம் அமைக்கப்படுதல் என்பதும் அதன் உண்மையான குறிக்கோள்கள் குறித்து நியாயமான சந்தேகங்களையும் கவலைகளையும் எழுப்பி இருக்கிறது. தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்திற்கு சோதனைகள் செய்வதற்கும், கைது செய்வதற்கும் அதிகாரம் அளிக்கப்படுதல் என்பது அவற்றை இந்த அமைப்பு துஷ்பிரயோகம் செய்வதற்கு ஏராளமான வாய்ப்பு வசதிகளைச் செய்து தந்திருக்கிறது.
           அமெரிக்காவில் உள்ள எப்.பி.ஐ. உட்பட அனைத்து நவீன ஜனநாயக நாடுகளின் அனுபவமும் இதுதான். இந்தியாவில் உள்ள சூழ்நிலையின் பின்னணியில், அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சிக் கட்டமைப்பும் மாநிலங்களின் உரிமைகளும் பறிக்கப்பட இது இட்டுச் செல்லக்கூடும். மேலும் இந்தியாவில் இதுவரை புலனாய்வு பீரோ என்பது மத்திய ஆட்சியாளர்களின் எடுபிடியாகவே இருந்து வந்திருக்கின்றன. எனவேதான் எதிர்க் கட்சிகளின் தலைமையில் இயங்கும் மாநில அரசாங்கங்கள் இவ்வாறு நியாயமான சந்தேகங்களை எழுப்பி இருக்கின்றன. தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் அமைக்கப்படுவது தொடர்பாக அவசர அவசரமாக ஐமுகூ அரசு அறிவித்திருப்பதைப் பார்க்கும்போது, நாட்டில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதைவிட, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்துதான் அவ்வாறு அது செய்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. அவ்வாறிருப்பின் அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
          மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டார். அப்போது மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘‘அமெரிக்காவில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் குறித்து புரிந்துகொள்வதற்காக இப்பயணம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக’’ கூறப்பட்டிருந்தது. அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் உளவுப் பிரிவு களில் பணியாற்றி வந்த மூத்த அதிகாரிகளை அவர் சந்தித்தார். பின்னர் 2010 ஜூலையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ஒரு பயங்கரவாத எதிர்ப்புக்கான கூட்டுறவு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்கள். இதனைத் தொடர்ந்து 2010 நவம்பரில் புதியதொரு உள்நாட்டு பாதுகாப்பு பேச்சுவார்த்தை  அறிவிக்கப்பட்டது. இப்பேச்சு வார்த்தையில் மத்திய அரசின் உள்துறை அமைச்சரும் அமெரிக்க அரசின் உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளரும்  கலந்து கொண் டார்கள்.
           இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் காலத்தில் அமெரிக்க அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட போர்த்தந்திர உடன்படிக்கையின் ஒரு பகுதியேயாகும். இதனை ஐ.மு.கூட்டணி அரசும் மிகவும் தீவிரத்துடன் முன்னெடுத்துச் சென்றது. இதன் காரணமாகத்தான் அமெரிக்க அரசின் பயங்கரவாத எதிர்ப்புக்கான உதவி அமைப்பு  நமது நாட்டில் 79 காவல்துறை பயிற்சி வகுப்புகளை நடத்தி, 1500  - க்கும் மேற்பட்ட இந்திய சட்ட அமலாக்க அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்திருக்கிறது. இதனை புதுதில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரக செய்திக்குறிப்பு வெளியிட்டிருக்கிறது.
          தேச விரோத பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கிட நாட்டு மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் இந்திய நாடாளுமன்றம் எப்போதும் அரசின் நடவடிக்கைகளுக்கு எவ்விதக் கட்சி வித்தியாசமுமின்றி ஒரே மனிதனாக நின்று உறுதுணையாக இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாகத்தான் தேசியப் புலனாய்வு ஏஜென்சிக்கான சட்டமுன்வடிவும் மற்றும் பல்வேறு சட்டங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. ஆயினும் இதனை நம் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளில் அமெரிக்க அரசின் ஏஜென்சிகள் ஊடுருவ அளித்திட்ட அனுமதியாக அரசு கருதிவிடக்கூடாது. அமெரிக்க அரசின் நிறுவனக் கட்டமைப்பை இந்தியாவில் அமைத்திட அளிக்கப்பட்ட உரிமமாக இதனை ஐ.மு.கூட்டணி அரசாங்கம் கருதிடக்கூடாது. பயங்கர வாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் அமெரிக்காவில் உள்ளது போன்ற கட்டமைப்புகளை இந்தியாவில் கொண்டுவர முயற்சிப்பது என்பது நாட்டிற்கும், நாட்டின் ஜனநாயக மாண்புகளுக்கும் நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கும் பேரழிவினை உருவாக்கிடும். அமெரிக்காவின் குவாண்டனாமோ சிறையில் கைதிகள் அனுபவித்த மனிதாபிமானமற்ற காட்டு மிராண்டித்தனமான அடக்குமுறைக் கொடுமைகளே இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
               எந்த விதத்தில் பார்த்தாலும், ஐ.மு. கூட்டணி-2 அரசானது தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு மையம் அமைப்பது தொடர்பாக தற்போது செயலற்று உறக்க நிலையில் இருந்திடும் மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலின்  சிறப்பு அமர்வைக் கூட்டி, இது தொடர்பாக விவாதத்தை நடத்த வேண்டும். தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் முழுமையான விவாதத்தினை மேற்கொள்ள வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி

வெள்ளி, 9 மார்ச், 2012

தனியார் மருத்துவமனைகளின் செவிலியர்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டம் - வேடிக்கைப் பார்த்த தமிழக அரசு...!

               தமிழ்நாடு குறிப்பாக சென்னை, மருத்துவ உலகின் மாநகராய்  திகழ்கிறது என்று பலரும்   பெருமையாக கூறுவதுண்டு.  அந்த அளவிற்கு சென்னை மாநகர் மற்றும் சென்னையை  சுற்றிலும்  மருத்துவமனைகளும், மருத்துவக்கல்லூரிகளும், மருத்துவ ஆராய்ச்சி அமைப்புகளும் ஏராளம்...ஏராளம்.... சிகிச்சைக்கான கட்டணமோ தாராளம்... தாராளம்...
            காரணம் இந்த மருத்துவமனைகள் அனைத்தும் தனியார் மருத்துவமனைகளே. சென்னையில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் அப்பல்லோ, விஜயா, இசபெல் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய தனியார் மருத்துவமனைகளே இருந்து வந்தன. ஆனால் தற்போது நூற்றுக்கணக்கான தனியார் மருத்துவமனைகள் உருவாகியுள்ளன. இந்தியாவில் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாக அமலுக்கு வந்தபின்னர் மருத்துவத்துறையிலும் தனியார் முதலீடுகள் பெருமளவு நுழைந்து விட்டன. அந்த அளவிற்கு மருத்துவத்துறை என்பது இலாபம் சம்பாதிக்கும் வர்த்தகத் துறையாக மாறிவிட்டது. 
        சென்னையில் அப்பல்லோ மருத்துவமனை மட்டுமே  பல இடங்களில் கிளைகளை திறந்திருக்கின்றன.  சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுதுமே பல இடங்களில் இதன் கிளைகள் மற்றும் தகவல் மையங்கள் இயங்குகின்றன. இது மட்டுமல்லாமல், மியாட், டிரிப்பிள் எம், வாசன், குளோபல், ஸ்ரீராமச்சந்திரா போன்ற  பெரிய மருத்துவமனைகளும்  பெருமளவு தோன்றி இருக்கின்றன. இந்த அனைத்து மருத்துவமனைகளிலும் இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களைக் கொண்டு கொடுக்கப்படும் நவீனமயமான மருத்துவசேவை என்பதால்    அவை அனைத்தும் காசு உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதாகும். என்றாலும்  இலவச படுக்கைகள் பெயரளவுக்கே  அந்த மருத்துவமனைகள் வைத்துள்ளன. எனவே இந்த மருத்துவமனைகளில்  வசதி படைத்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் மருத்துவத்திற்காக  வருகிறார்கள் அல்லது மருத்துவக் காப்பீடு செய்துள்ளவர்கள் வருகிறார்கள்.
                  இப்படிப்பட்ட இந்த மருத்துவமனைகளுக்குத் தான் மத்திய - மாநில அரசுகள் போட்டிப்போட்டுக்கொண்டு சலுகைகளை வருகின்றன. மத்திய அரசு TAX - HOLIDAY என்ற பெயரில் வருமான வரி விலக்கு அளிக்கிறது. நோயாளிகளின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், மருந்து மற்றும் அந்நிய செலாவணி சட்டங்களை இந்த மருத்துவமனைகள் காற்றில் பறக்கவிடுவதை மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை. மாநில அரசோ மின்சாரம் மற்றும் குடிநீர் போன்றவற்றை தாராளமாக விநியோகம் செய்கிறது. பல சமயங்களில் இவைகளுக்கான கட்டணத்திற்கு விலக்கு அளிப்பதும் அல்லது கட்டவேண்டிய கட்டண பாக்கிகளை வசூல் செய்யாமல் கண்டுகொள்ளாமல் இருப்பதும் அல்லது தள்ளுபடி செய்வதுமான வேலைகளை மாநில அரசாங்கமோ மனதார செய்கின்றது. நகராட்சி அல்லது மாநகராட்சிகளுக்கு கட்டவேண்டிய வரிகளுக்குக்கூட விலக்கு அளிக்கப்படுகிறது.
             இப்படியாக பல்வேறு வழிகளில்  பல்கிப் பெருகி நாள்தோறும் பல ஆயிரம் கோடிகளை  வருவாயாக  ஈட்டும் இந்த தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு இல்லை. கேள்வி கேட்டால் பணிநீக்கம். விலைவாசிக்கேற்ப ஊதிய உயரவு என்ற பழக்கமே இல்லை.  அதனால் அரசின் குறைந்தபட்ச சம்பளமும் அமல்படுத்தப்படமாட்டாது. தொழில் மற்றும் தொழிலாளர் சம்பந்தப்பட்ட எந்த சட்டப் பாதுகாப்பும் இந்த மருத்துவமனைகளில் கிடையாது.   இப்படியான  நவீன சுரண்டல்களில்  சிக்கித்தவிக்கும் இந்த மருத்துவமனை ஊழியர்கள், குறிப்பாக செவிலியர்கள் கடந்த சில நாட்களாக பொறுத்தது போதும் என பொங்கி எழுந்துவிட்டனர். சென்னையில் கடந்த சில நாட்களாக நடை பெற்ற போராட்டங்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது  அப்பல்லோ, போர்டீஸ் மலர் மற்றும் டிரிப்பிள் எம் எனப்படும் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் ஆகிய மருத்துவமனைகளில்  பணிபுரியும் செவிலியர்கள் நடத்திய வீரமிக்க போராட்டம்தான்.
           இவர்களின் போராட்டத்தால் நிலைகுலைந்து போன  டிரிப்பிள் எம் மருத்துவமனை தனது மருத்துவமனை செவிலியர்களை அழைத்துப்பேசி சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. அதனால் அந்த மருத்துவமனை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் மிகப்பெரிய மருத்துவமனையான அப்பல்லோ தொடர்ந்து செவிலியர்களை பழிவாங்கி வருகியது. பணிக்கு உடனடியாக திரும்பாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மிரட்டியும் பார்த்தது.  புதிய செவிலியர்களை தேர்வு செய்ய முன்னணி ஆங்கில நாளிதழ்களில் விளம்பரங்களை வெளியிட்டு மிரட்டியது. இவை எதற்கும் அஞ்சாமல் செவிலியர்கள் நேற்றுவரை போராடினர். ஆனால்   இதுபோன்ற பிரச்சனைகளில் உடனடியாகத் தலையிடாமல் தமிழக அரசு மவுனம் சாதிப்பது என்பதும், வேடிக்கைப் பார்ப்பது என்பதும்  எந்த வகையிலும் சரியானதுமல்ல....முறையானதுமல்ல... இது வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல.
         பல்வேறு சூழ்நிலைகளில்  கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்று, கவுரவமான வேலையும், நியாயமான வருமானமும்  கிடைக்கும் என்று நம்பி தனியார் துறையில் நுழைந்துள்ள லட்சக்கணக்கான ஊழியர்களின் - இளைஞர்களின் எதிர்காலம் குறித்த பிரச்சனை என்பதை தமிழக அரசு மறந்துவிட்டது.  போராடும் செவிலியர்களை அழைத்துப் பேச மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டிய தமிழக அரசு பாராமுகமாய் இருந்தது என்பது கண்டிக்கத்தக்கது.  
          இனியாவது பணி நிரந்தரம், நியாயமான சம்பளம், தொழிலாளர் நலச்சட்டங்கள் ஆகியவற்றை அமல்படுத்த கறாராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசு தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால்   மனிதவள மேம்பாட்டில் தமிழகம் நாட்டில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்று பெருமை பேசி பயனில்லாமல் போய்விடும்.

புதன், 7 மார்ச், 2012

ராகுல் காந்தி மட்டுமல்ல... காங்கிரஸ் கட்சியே பாடம் கற்க வேண்டும்...!


வடை போச்சே...!
              நேரு.. இந்திரா காந்தி... ராஜீவ் காந்தி... அடுத்து இன்று ராகுல் காந்தி என்ற வாரிசு அரசியலை மத்தியில் மீண்டும் நிலைநாட்டுவதற்கு நேரம் பார்த்து காங்கிரஸ் கட்சியில் உள்ள நேரு குடும்ப விசுவாசிகளும் , சோனியா காந்தியும் காய் நகர்த்தினார்கள். அதற்காக ராகுல் காந்தியை முன்னிறுத்தி தான் முன்பு நடந்த பீஹார் மற்றும் ஒடிசா மாநிலத் தேர்தல்களை காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்து மண்ணைக் கவ்வியது. 
               அதேப்போல் தான்  இம்முறை காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்தி வகையறாக்களும் நடந்து முடிந்த உத்திரபிரதேசம் உட்பட ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் பெரும் முயற்சி செய்தனர். வெறும் 2014 - ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கிற பாராளுமன்றத்தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு உத்திரபிரதேசத்தின் வெற்றியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று காங்கிரஸ் கட்சி பகல் கனவு கண்டது.   அதற்காக இப்போது பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங்கை வரவிருக்கும் குடியரசுத்தலைவர் தேர்தலில் நிற்க வைத்து குடியரசுத்தலைவராக்கி விட்டு, பிறகு இந்த இளவரசரை பிரதமராக பட்டாபிஷேகம் செய்து உட்கார வைக்கலாம் என்ற கருத்தை காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே உலாவ விடப்பட்டது. மீண்டும் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் பதவியில் உட்கார வைப்பதில் ஒருமித்தக்கருத்து உருவாக்கப்பட்டது.
                  அதற்காகவே உத்திரபிரதேச மாநில தேர்தல் பிரச்சாரங்களில் ராகுல் காந்தி மட்டுமே பிரதானமாக ஈடுபட்டார். அவருக்குத் துணையாக அவரது அன்னையும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தியும், ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்காவும் அவரது கணவரும் சூறாவளியாக பிரச்சாரம் செய்தார்கள். பிரியங்காவின் குழந்தைகளைக் கூட காங்கிரஸ் கட்சி விட்டு வைக்கவில்லை. அவர்களையும் அந்தக் கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் இறக்கிவிட்டது.           
              இவ்வளவு செய்தும் அந்த மாநில மக்கள் நேரு - இந்திரா குடும்ப வாரிசுகளை தூங்கி எறிந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
               அந்த அளவிற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி காலத்தில் கடுமையான விலைவாசி உயர்வினால் மக்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர் என்பது தான் வெளிப்படையான உண்மை.               

தனக்கெதிராகவே போராடும் மம்தா பானர்ஜி...!


                    தனது சொந்த அரசுக்கு எதிராகவே முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராடிக் கொண்டிருக்கிறாரா? இதுதான் கடந்த சில நாட்களாக மேற்குவங்க மக்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வரும் கேள்வியாகும். பிப்ரவரி 28 ஆம் தேதியன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அனைத்துத் தொழிற்சங்கத்தினரும் இணைந்து நடத்தினார்கள். காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளின் தொழிற்சங்கங்கள் கூட இதில் பங்கேற்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்த நிலையில், இதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. நாடு முழுவதும் பெரும் வெற்றி பெற்ற இந்த வேலைநிறுத்தம், மேற்குவங்க மாநிலத்தைப் பொறுத்தவரை முழு அடைப்புப் போராட்டமாகவே இருந்தது. இந்த மாபெரும் வெற்றியைப் பொறுக்க முடியாத திரிணாமுல் காங்கிரசார், வன்முறை வெறியாட்டத்தில் இறங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜாதவ்பூர் பகுதிக்குழு அலுவலகம் மீது தாக்குதல் நடந்தது. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் சட்ட ஒழுங்கு நிலை எவ்வளவு மோசமாகப் போய்விட்டது என்பதற்கு இதைவிடப் பெரிய எடுத்துக்காட்டு இருக்க முடியாது. காவல்துறையில் இருக்கும் கான்ஸ்டபிள் தாரக் தாஸ் என்பவர்தான் இந்தத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். அவர் அதில் ஈடுபட்டிருந்தார் என்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டபோது அதைப் படமெடுக்க பத்திரிகையாளர்கள் முனைந்தனர். அப்போது பத்திரிகையாளர்களையும் தாக்கினர். தாரக் தாசும் அந்த வன்முறையில் நேரடியாக இறங்கியிருந்தார். இது குறித்து துறைவாரியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. வன்முறை வெறியாட்டத்தில் கான்ஸ்டபிள் தாரக் தாஸ் ஈடுபட்டது உண்மைதான் என்பது நிரூபணமானது. அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்து காவல்துறை உத்தரவிட்டது. இந்நிலையில்தான் இந்த சம்பவம் ஜோடிக்கப்பட்டது என்றும், பொய்யான செய்திகளைப் பத்திரிகையாளர்கள் பரப்புகிறார்கள் என்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார். இத்தனைக்கும் எந்தக் காவல்துறை விசாரணை நடத்தி தாரக் தாஸ் மீதான குற்றச்சாட்டு உண்மைதான் என்று சொல்லி அவரைத் தற்காலிக நீக்கம் செய்துள்ளதோ, அந்தத் துறைக்கு மம்தா பானர்ஜிதான் அமைச்சராவார். அவர் இதோடு நிற்கவில்லை. இந்த சம்பவத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்த சதிக்கு எதிராக பேரணியும் நடத்தியிருக்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களோடு சேர்ந்து கான்ஸ்டபிள் தாரக் தாஸ் நடத்திய வன்முறை வெறியாட்டம், பத்திரிகையாளர் பாதிப்பு, மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடல், துறை விசாரணை, குற்றம் நிரூபணம் என்று அனைத்துமே மார்க்சிஸ்ட் கட்சியின் சதி என்று மம்தா பானர்ஜி சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் மட்டுமல்ல, பார்க் தெரு, கட்வா மற்றும் ஃபல்டா ஆகிய மூன்று இடங்களில் பாலியல் பலாத்காரக் கொடூரங்கள் நிகழ்ந்தன. இந்த மூன்றிலும் பலாத்காரமே நடக்கவில்லை என்று தடாலடியாக மம்தா பானர்ஜி அறிவித்தார். மூன்று சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் துவங்குவதற்கு முன்பாகவே “சிபிஎம் சதி” என்ற பல்லவியை அவர் பாடினார். விசாரணைகளுக்குப்பிறகு மூன்று சம்பவங்களிலும் பாலியல் பலாத்காரம் நடந்தது உண்மைதான் என்பது தெரிய வந்திருக்கிறது. இவற்றிலும் மம்தா பானர்ஜி தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் காவல்துறைதான் விசாரணை செய்து முடித்திருக்கிறது. ஆனாலும் தனது பொய்ப்பிரச்சாரத்தை அவர் நிறுத்தவில்லை. அவசரப்பட்டுக் கருத்து தெரிவிக்காமல் தனக்குக் கீழே இயங்கும் காவல்துறை விசாரித்த பிறகு பேசியிருக்கலாமே என்று சொந்தக் கட்சிக்காரர்களே முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள்.அவருக்கு ஆதரவாக இருந்தவர்களே விலகி நிற்கத் துவங்கியுள்ளனர். பிரபல வழக்கறிஞரான அருனவ கோஷ் என்பவர் கூறுகையில், காவல்துறை விசாரித்து வரும் விவகாரங்கள் மற்றும் நீதிமன்றங்களில் விசாரணையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக தெருக்களில் முதலமைச்சரே பேரணி நடத்துவதால் என்ன பலன்? அவருடைய பதவிக்கு அது அழகு சேர்க்கவில்லை. அவருக்கென்று பல வேலைகள் உள்ளன. அவற்றை அவர் பார்ப்பது நல்லது என்கிறார். இத்தகைய கருத்துக்கள்தான் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே உலாவிக்கொண்டிருக்கின்றன. மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராகச் செய்தி வெளியிட்டு வந்த பல பத்திரிகைகள் கூட “தனக்கெதிராகவே போராட்டம் நடத்துகிறார் மம்தா” (டைம்ஸ் ஆப் இந்தியா) என்று வர்ணித்துள்ளன.

செவ்வாய், 6 மார்ச், 2012

உன் அண்டை வீட்டானை ( நேசி ) சந்தேகி...

இது தமிழக அரசே  கற்றுக்கொடுக்கும் பாடம்...
         
       சென்னை நகரில் வீடுகளை வாடகைக்கு விடுபவர்கள் யாருக்கு விடுகிறோம், அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர், எங்கு பணியாற்றுகிறார் என்பது உட்பட அனைத்து விவரங்களையும் புகைப்படத்துடன் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டுமென தமிழக அரசு தடாலடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
           அதேபோல கல்லூரியில் பயிலும் பிற மாநில மாணவர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. சமீபத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு நிலை மோசமடைந்து உள்ளது. கொலை, கொள்ளை அதிகரித்து உள்ளது. வங்கிக் கொள்ளை பெருகி உள்ளது.
            இந்தப் பின்னணியில் அரசின்மீது மக்களின் அதிருப்தி மேலோங்கத் தொடங்கியது. மக்களின் கவனத்தைத் திருப்பவும்; அரசு மிகவும் கறாராக செயல்படுவதாகக் காட்டவும்; வங்கிக் கொள்ளையர் என்று முத்திரைக் குத்தப்பட்டு 5 வட இந்தியர்கள் என்கவுன்டரில் போலீசாரால் கொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து கொலை, கொள்ளைகளில் ஈடுபடுபவர்கள் வட இந்தியர்கள் என்ற கருத்து காவல்துறையாலும் ஊடகங்களாலும் வேகமாக பரப்பப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவே வட இந்தியர்களை கண்காணிக்க வேண்டும் என்கிற ஒரு மனோநிலை சமூகத்தின் தலையில் திணிக்கப்பட்டு இப்போது அரசு உத்தரவாகவும் வந்துள்ளது.
           மேலோட்டமாகப் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க இவையெல்லாம் தேவைதான் என்று அப்பாவிக் குடிமகன்/குடிமகள் நம்பவும் பேசவும் செய்கிற சூழல் உருவாக்கப்படுகிறது. ஆனால் இதன் தொடர் விளைவுகளை - ஆபத்தான பாசிச மனோநிலையை பற்றி நாம் கவலை கொண்டாக வேண்டும். கொஞ்சம் நிதானமாக சில செய்திகளை அசை போட்டு சில கேள்விகளை எழுப்பிப் பாருங்கள்! இந்திரா காந்தியை கொன்றவன் ஒரு சீக்கியன் என்பதற்காக மொத்த சீக்கியர்களையும் பகையுணர்வோடு அணுகுகிற சூழல் உருவானது நியாயந்தானா? எங்கோ குண்டு வைத்தவன் ஒரு இஸ்லாமியன் என்பதற்காக உலகெங்கும் தாடி வைத்தவனை எல்லாம் சந்தேகப்படவில்லையா? ஏன் அப்துல் கலாம் என்ற பெயரை கொண்டிருந்ததற்காக அமெரிக்க விமான நிலையத்தில் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் கேவலமான முறையில் ஒரு முறைக்கு இருமுறை சோதனைக்கு உட்படுத்தப்படவில்லையா? இவை நியாயமா? இதையெல்லாம் நாகரீக சமூகம் அனுமதிக்க முடியுமா? கொள்ளைக்காரனுக்கும் திருடனுக்கும் பயங்கரவாதிக்கும் மதம் ஏது? மொழி ஏது? இனம் ஏது? அதுபோகட்டும்.
               தமிழகச் சிறைகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டிருப்பவர்கள் எல்லாமே வட நாட்டுக்காரர்களா? அல்லவே. ஆகப் பெரும்பான்மையோர் தமிழர்கள் தாமே! சரி. இங்கே வட நாட்டுக்காரர்களை சந்தேகப்படலாம் என்றால் மும்பையில் சிவசேனாக்காரர்கள் தமிழர்களுக்கு எதிராய் முழக்கமிடுவது சரியென்று ஆகிவிடாதா? பீகாரிகளெல்லாம் திருடர்கள், மும்பையை விட்டு வெளியேற வேண்டும் என நவநிர்மாண் சேனா கூறுவது நியாயமாகி விடாதா? ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர்களை சந்தேகக்கண்கொண்டு பார்ப்பது சரியென்றாகிவிடாதா? அமெரிக்காவில் இந்திய மாணவர்களை வேவு பார்க்க ஒரு கருவியைக் காலில் பொருத்திய கொடுமையை இது நியாயப்படுத்திவிடாதா? ஹிட்லரின் பாசிசமும் முசோலினியின் நாசிசமும் சூனியத்திலிருந்து உருவாகவில்லை. முதலில் யூதர்களுக்கெதிரான வெறுப்பை விதைத்துத்தானே பாசிசம் வளர்ந்தது? இங்கும் முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கித்தானே இந்து மதவெறி அமைப்புகள் ஆட்டம் போடுகின்றன? சமூகத்தில் எல்லோருமே திருடர்கள் அல்ல. வகுப்பறையில் பக்கத்தில் இருப்பவரை விரோதியாகப் பார்க்கத் தொடங்கினால்; தெருக்களில் ‘இது எங்க ஏரியா உள்ள வராதே’ என குரல் கொடுக்கத் தொடங்கினால்; ஒவ்வொரு வீட்டாரும் பக்கத்து வீட்டில் குடியிருப்பவரை சந்தேகக்கண்கொண்டு பார்க்கத்தொடங்கினால் அப்புறம் நிம்மதியாக வாழ முடியுமா? பக்கத்து வீட்டுக்காரன் சந்தேகத்துக்கு உரியவன்.             
            பக்கத்து மாநிலத்தவனை நம்ப முடியாது. வட நாட்டான் திருடன்.பக்கத்து நாடுகளோ நமது விரோதிகள். இப்படியே வெறுப்பை பிரச்சாரம் செய்தால் விளைவு என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்! தமிழ்நாட்டில் வேலை கிடைக்காமல் தானே வயிற்றுப் பிழைப்புக்காக தமிழன் அண்டை மாநிலங்களுக்கும், கடல் கடந்தும் ஓடுகிறான். தன் பிள்ளைகுட்டிகளை, மனைவியை, தாயை, பிறந்த மண்ணை பிரிந்து எங்கெங்கோ ஓடுகிறான். இங்கே பிழைக்க வந்திருக்கிற வட இந்தியர்களின் கதியும் அதுதானே! பெரும்பான்மையான மக்களை வறுமைப்படுகுழியில் தள்ளிவிட்டு; ஒரு சிறு கூட்டத்தை சகல வசதியும் உள்ளவர்களாக மாற்றிய அரசின் தவறான கொள்கைகள் தானே கொலை, கொள்ளைகளின் மூலாதாரம்? இதை உணராமல் அரசு தவறான பாதையில் பயணப்பட்டுக்கொண்டே இருக்குமானால் சமூக விரோதச் செயல்கள் பெருகத்தான் செய்யும்.
           ஒரு விழுக்காடு வேலையின்மை பெருகினால் 10 விழுக்காடு சமூகக் குற்றங்கள் பெருகும் என்கிற அடிப்படை சமூக அறிவியலை மறந்து வேலையின்மையை விஷக்காளானாய் வளர்த்துக் கொண்டிருப்பது யார்? மத்திய மாநில அரசுகள் அல்லவா? வேலையின்மையால் வளரும் அதிருப்தியை மக்களிடையே பகைமையைத் தூண்டி தணிக்க நினைக்கிறதா? தப்பிக்க நினைக்கிறதா? அப்படியென்றால் திருடனைக் கண்டுபிடிப்பது எப்படி? சில மேதாவிகள் கேள்வி எழுப்புகிறார்கள்? தமிழக காவல்துறையில் புலனாய்வுப் பிரிவுக்கு என்ன வேலை? முன்னாள் அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் ஏன் ஆளுங்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உடன்பிறவா கூட்டம் இவர்களை வேவு பார்ப்பதுதானா காவல்துறையின் ஒரே பணி? காவல்துறை லஞ்சத்துறையாக இல்லாமல் - ஆட்சியாளர்களின் எடுபிடியாக, ஏவல் நாயாக இல்லாமல் - சமூக விரோதிகளின் பங்காளிகளாக இல்லாமல் சேவை செய்தாலே சட்டம் ஒழுங்கு சரிபாதி சரியாகி விடும். செய்வார்களா? அதைவிடுத்து பிரச்சனை தலைவலி யாகும்போது திசை திருப்புவதற்காக பக்கத்து மாணவனையும், பக்கத்து வீட்டாரையும் சந்தேகிக்க தூண்டுவது பாசிசத்துக்கு தீனி போடுவதாகும். “உன் அண்டை அயலானை நேசி” என்றார் ஏசு. “உன் அண்டை அயலானை சந்தேகி” என்கிறது தமிழக அரசு. ஏன் இந்தக் கொலைவெறி?
-சு.பொ.அகத்தியலிங்கம்

சனி, 3 மார்ச், 2012

பங்குச்சந்தை சூதாட்டத்தில் ஓ.என்.ஜி.சி - மக்கள் நிதியை இறக்கியது எல்.ஐ.சி.

               2011-12ம் நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 40 ஆயிரம் கோடி ரூபாயைத் திரட்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்திருந்தது. முதலாளித்துவக் கொள்கைகள் அதன் குரு பீடமான அமெரிக்காவில் உருவாக்கிய நெருக்கடியால் பங்குச் சந்தைகளின் தலைக்கு மேல் வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தியப் பங்குச்சந்தையும் இதற்கு விதிவிலக்கல்ல. 40 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கில் பிப்ரவரி 29 ஆம் தேதி வரையில் 1,145 கோடி ரூபாயை மட்டுமே திரட்ட முடிந்தது. .
                பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன் பங்குகளை விற்றதன் மூலம் இந்த நிதி திரட்டப்பட்டது. ஆனால் வரும் மத்திய நிதிநிலை அறிக்கையின்போது பெரும் முதலாளிகளுக்கு ''சலுகைகள்'' வழங்குவதற்கு நிதியிருப்பை ''உத்தரவாதம்'' செய்து கொள்ளவும் அவசரகதியில் எவ்வளவு அள்ளினாலும் குறையாமல் லாபம் தரும் ஓ.என்.ஜி.சியின் (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கழகம்) பங்குகளை சூறையாட மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. அதன் படி 42.80 கோடி பங்குகளை ஒரு பங்குக்கு ரூ.290 என்ற விலைக்கு விற்பதாகவும் அறிவிப்பு செய்தனர். இதன்மூலம் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரும் என்று அவர்கள் திட்டம் தீட்டினர்.
               ஆனால் பங்குகள் விற்பனைக்கு வந்த மார்ச் 1 அன்று மந்த நிலை நிலவியதால் 29.22 கோடி பங்குகளுக்குத்தான் பதிவு செய்யப்பட்டது. அதன் காரணமாக குறுக்கு வழியில் துடிப்போடு இறங்கிய மத்திய அரசு, மிகவும் பாதுகாப்பான நிதி நிறுவனங்கள் என்று மக்களால் அழைக்கப்படும் எல்.ஐ.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகிய இரண்டையும் இறக்கிவிட் டது. எஞ்சியுள்ள பங்குகள் அனைத்தையும் வாங்கியாக வேண்டும் என்ற உத்தரவுகள் பறந்தன என்றும்  செய்திகள் வெளியாகியுள்ளன.
                  அதற்காக திரைமறைவில் பல வேலைகள் நடந்தன. 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் தான் திரளும் என்ற நிலையில், எஞ்சியுள்ள பங்குகள் அனைத்தையும் எல்.ஐ.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை வாங்கியுள்ளன. எல்.ஐ.சி. மட்டும் 12 கோடி பங்குகளை வாங்கியிருக்கிறது. இதன்மூலம் பங்குச்சந்தைக்கு உயிர் கொடுக்கும் முயற்சியும் நடந்திருக்கிறது. அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்றாலும் ஓ.என்.ஜி.சி. பங்குகளை சூதாட்டத்தில் இறக்கியதோடு, மக்களின் பெரும் நம்பிக்கையைப் பெற்றுள்ள இரண்டு பெரும் பொதுத்துறை நிறுவனங்களின் பணத்தையும் அதில் போட்டிருக்கிறார்கள்.
                 உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் சலுகைசார் முதலாளித்துவக் கொள்கையைத்தான் மறைமுகமாக இங்கு அரங்கேற்றுகிறார்கள். சட்ட ரீதியான சலுகைகள், அரசு நிதியுதவி மற்றும் சிறப்பு வரிச்சலுகைகள் போன்றவற்றையே சலுகைசார் முதலாளித்துவக் கொள்கையின் அம்சங்களாகச் சொல்கிறார்கள். பெரும் முதலாளிகளின் கொள்ளைக்கு பங்குச்சந்தை கேந்திரமானதாக இருந்து வருகிறது. அதில் நிலவும் மந்தத்தைப் போக்க கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களைப் பணயம் வைக்கிறார்கள். வந்தால் பெரும் முதலாளிகளுக்கு, போனால் மக்கள் தலையில் என்பதுதான் ஆட்சியாளர் களின் தாரக மந்திரமாக உள்ளது. இந்தத் தாரக மந்திரங்களுக்கு எதிராக வலுவான முழக்கங்கள் எழுந்து வருகின்றன. நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலை நிறுத்தம் என்று சொல்லுமளவுக்கு பிப்ரவரி 28 அன்று அனைத்துப்பகுதியினரும் இணைந்து போராடியிருக்கிறார்கள். ஓ.என்.ஜி.சி. பங்கு விற்பனை போன்ற ஏமாற்று வேலைகள் மக்களின் போராட்டக் குணத்திற்கு உரமிடும் வேலையையே செய்யும். போராட்ட அலைகள் தீவிரமாகும்.

வெள்ளி, 2 மார்ச், 2012

மோட்டார் வாகன சட்டம் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை பள்ளியிலேயே கற்றுக்கொடுங்கள்...!

                            
 இன்றைய இளையத்தலைமுறை         
 நாளைய தேசத்திற்கு வழிகாட்டும்...!   

          இன்றைக்கு சாலை விபத்தென்பது ஒரு அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. தொலைக்காட்சியானாலும், செய்தித்தாளானாலும் சாலை  விபத்தும்,   மரணமும் இல்லாமல் இல்லை என்றே சொல்லலாம்.    விபத்தில்லாத நாளே இல்லை தான். இதற்கென்ன காரணமாக இருக்கும். 1 ) போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுவது.      2 ) கவனக்குறைவும் மற்றும் தூக்கமின்மையும். 3 ) குடித்துவிட்டு போதையில் வண்டி ஓட்டுவது.   4 ) செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது. 5 ) கண்மூடித்தனமான அதிவேகமாக வாகனம் ஓட்டுவது. இவைகள் தான் சாலை விபத்திற்கு மிக முக்கிய காரணிகளாகும்.  இவைகள் மட்டுமல்ல சாலை விபத்திற்கான காரணிகள் பல வகைகள் இருக்கின்றன.    இப்படிப்பட்ட  சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
               இதன்படி மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவருக்கு அதிகபட்சம் 4 ஆண்டு சிறையும், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவருக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்.
          இதேபோல் மத்திய அரசு கொண்டு வரும் சட்டதிருத்தத்தில் 43 வகையான சாலை விதிமீறல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை வருமாறு:-

          1. சிவப்பு சிக்னலை மீறி வாகனம் ஓட்டுவது.  2. இன்டிகேட்டர் போடாமல் இடதுபுறம் நோக்கி வாகனத்தை ஓட்டிச் செல்வது.  3. அனுமதி இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்துவது.  4. மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்வது. 5. ஹெல்மட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது. 6. நம்பர் பிளேட் இல்லாமை. 7. பயணிகளிடம் கார் ஓட்டுனர் தவறாக நடந்து கொள்வது. 8. வாடகை கார்-ஆட்டோ டிரைவர் அதிக கட்டணம் வசூலிப்பது.        9. வாடகை கார் டிரைவர், பயணி அழைக்கும்போது வரமறுப்பது. 10. இரவில் லைட் போடாமல் செல்வது. 11. ஹாரன் இல்லாமல் வாகனம் ஓட்டுவது. 12. சைலன்சர் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.  13. எண் சரியாக தெரியாத நம்பர் பிளேட்டுடன் வண்டி ஓட்டுவது. 14. சாலையில் வாகன நிறுத்தகோட்டை கடந்து சென்று நிற்பது. 15. சட்டத்திற்கு உட்பட்ட திசையில் வாகனம் ஓட்ட மறுப்பது. 16. வாகனம் ஓட்ட அனுமதி பெறாதவரை வண்டி ஓட்டச் செய்வது. 17. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது. 18. 18 வயதுக்குட்பட்ட மைனர்கள் வாகனம் ஓட்டுவது. 19. அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது (முதல் குற்றம்). 20. அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது (அடுத்தடுத்து செய்யும் குற்றம்)  21. வேகமாக வாகனம் ஓட்டுவதற்கு உடந்தையாக இருப்பது. 22. ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது (முதல் குற்றம்) 23. ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது (2-வது குற்றம்) 24. பதிவு செய்யாத வாக னங்களை ஓட்டிச் செல்வது. 25. மஞ்சள் கோட்டை கடப்பது. 26. சில ரோடுகளில் அமல்படுத்தப்படும் போக்குவரத்து தடை நேரத்தை மீறுவது. 27. ஒரு வழிப்பாதை, இடதுபுறம்-வலதுபுறம் செல்ல தடை, ஹாரன் அடிக்கத் தடை போன்றவற்றை மீறுவது. 28. வாகனங்களில் அதிக புகை வெளியேறுவது. 29. அதிக ஒலியுடன் ஹாரன் ஒலிப்பது. 30. நடத்துனர் சீருடை அணியாமல் இருப்பது. 31. டிரைவர் சீருடை அணியாமல் இருப்பது. 32. நடத்துனர் ‘பேட்ஜ்’ அணியாமல் இருப்பது. 33. சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது. 34. பயணிகள் வாகனத்தில் சரக்குகளை ஏற்றி செல்வது. 35. வாகனங்களில் அமர்ந்து புகை பிடிப்பது. 36. வாகனங்களில் வண்ண விளக்குகளை பயன்படுத்துவது. 37. வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவது.
38. தவறான முறையில் முன்புறம் செல்லும் வாகனத்தை முந்துவது. 39. மது அருந்தி விட்டு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது. 40. வாடகைக்கு பயன்படுத்த அனுமதி பெறாமல் வாகனம் ஓட்டுவது. 41. ஓடும் வாகனத்தில் டிரைவர் ஏறுவது. 42. ஓடும் வாகனத்தில் பயணிகள்  ஏறுவது. 43. சட்டப் பிரிவு 192 (1) (2 அல்லது அதற்கும் மேற்பட்ட தடவை குற்றம் செய்வது)                                                                                                                                                     இது நல்ல விஷயம் தான். சாலை விபத்துகளை குறைப்பதற்கு மேலே சொல்லப்பட்ட விதிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அதை சட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தமுடியுமா ? என்பது தான் நமது கேள்வி.                                                                                                                                                       பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் வாகன சட்டங்களை பற்றிக் கற்றுத்தரவேண்டும். இவைகளை பாடத்திட்டத்திலேயே சேர்க்கவேண்டும். ஓய்வு நேரங்களில் மாணவர்களை நெரிசலான சாலைகளுக்கு அழைத்துச்சென்று விதிமுறைப்படி வாகனப் போக்குவரத்துகளை சரி செய்வது  மற்றும் சிக்னல் மூலம் சாலைகளில் வாகனங்களை முறையாக அனுமதிப்பது போன்றவற்றை நேரிடையாக செய்முறைகள் வாயிலாக கற்றுத்தருவதன் மூலமே எதிர் காலத்தில் சாலைவிபத்துக்களை குறைக்கமுடியும்.             
மத்திய அரசுக்கு ஆலோசனையாக : நீங்கள் கொண்டுவரும் சட்டத்திருத்தத்தில் இன்னொன்றையும் நீங்கள் சேர்க்கலாம். அதாவது...
                     சமீபக்காலமாக நாட்டிலுள்ள சிறிய சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் காரில் செல்பவர்கள் தான்  சாலை விபத்து ஏற்பட்டு குடும்பத்தோடு மரணமடைபவர்கள். இந்த மாதிரியான விபத்துக்களில் சிக்கிக்கொள்வது பெரும்பாலும் வாடகைக்கார்கள் ( டாக்ஸி ) தான்.  இந்த விபத்துக்கள் பெரும்பாலும்  நடுநிசி பன்னிரண்டு மணி முதல் விடியற்காலை ஐந்து மணி வரை நடப்பவையாக இருக்கின்றன.  தன் முதலாளி சம்பாதிப்பதற்காக கார் ஓட்டுனர் தூக்கமில்லாமலும், ஓய்வில்லாமலும் வாகனம் ஓடுவது தான் இது போன்ற விபத்துக்களுக்கு காரணம். எனவே நடுநிசிக்கு பிறகு விடியற்காலை ஐந்து மணி வரை சாலைகளில் கார் ஓடுவதை நிறுத்தவேண்டும். அம்புலன்ஸ், பஸ், லாரி, வேன் போன்ற வாகனங்களை வழக்கம் போல் அனுமதிக்கலாம். கார் மட்டும் ஐந்து மணி நேர தூக்கத்திற்குப் பின் - ஓய்விற்குப்பின் ஓட்டுவது தான் அதில் பயணம் செய்பவர்கள்  அவர்கள் போய் சேரவேண்டிய இடத்திற்கு நலமுடன் போய் சேரமுடியும்.