பாரதீய ஜனதா கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதீய ஜனதா கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

எச்சரிக்கை : மதவெறியை முன்மொழியும் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை...!


 கட்டுரையாளர் : தோழர். ஜி. ராமகிருஷ்ணன்,          
                                 மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)          

           அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது, போன்ற அம்சங்களில் மட்டுமல்ல, வேறு பல கோணங்களிலும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலையே மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
          வெளிநாடுகளில் வாழும் “இந்துக்கள் துன்புறுத்தப்பட்டால் அவர்களுக்கு இந்தியா அடைக்கலம் தரும்” என பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை கூறுகிறது. இந்தியர்கள் பல கோடிப் பேர் சிங்கப்பூர், மலேசியா, அரேபிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு பணிகளில் உள்ளனர். ஒரு பகுதியினர் அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்றவர்களாகவும் ஆகி விட்டனர்.
          இவர்களில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என இந்தியாவின் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்துக்கள் பாதிக்கப்பட்டால் மட்டும்தான் இந்திய அரசு அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் என்றால் இது ஒரு வகுப்புவாத அணுகுமுறை என்பதைத் தவிர வேறென்ன? சொந்த நாட்டு மக்களையே மதத்தின் அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்கும் இந்தப் பார்வை மிகவும் ஆபத்தானது அல்லவா? தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் நிறவெறி கொடுமைக்கு ஆளானபோது, காந்திஜி அவர்கள் அனைவருக்காகவும் போராடினார். பாதிக்கப்பட்ட இந்தியர்கள் எந்த மதத்தை, எந்த சாதியைச் சார்ந்தவர்கள் என்று காந்திஜி வேறுபடுத்தி பார்க்கவில்லை.           
          தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவான சேதுக்கால்வாய் திட்டத்தையும் பாஜக தடுப்போம் என கொக்கரிப்பது வகுப்புவாத கண்ணோட்டத்தோடுதான். புராணங்களின் அடிப்படையில் வளர்ச்சியை தடுப்பது முறையா?பாஜக தேர்தல் அறிக்கை வகுப்புவாத அணுகுமுறையை கொண்டதாக மட்டுமல்ல, தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் நலன்களுக்கு முற்றிலும் விரோதமானதாக உள்ளது.
             நலிந்த பிரிவினருக்கு சமூக நீதி, அதிகாரம் அளித்தல் என்று துவங்கும் பாஜகவின் தேர்தல் அறிக்கை “கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் போன்றவற்றில் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கக்கூடிய ஒரு பொருளாதார நிலைமையை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுப்போம்” எனக் கூறுகிறது. தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தற்பொழுது அமலாகி வரும் இடஒதுக்கீடு பற்றி பாஜக அறிக்கையில் எதுவும் இல்லை. அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற வார்த்தை ஜாலத்தை வைத்து நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை ஒழித்திட பாஜக சதிவலை பின்னுகிறது.
            பல ஆயிரம் ஆண்டுகள் நீடித்த அநீதியான சாதிய முறையினால்தான் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால்தான் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அது தொடர்வதும் அவசியமாகிறது. “அரசியல் தளத்தில் ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற ஜனநாயகம் உள்ளது. ஆனால் பொருளியல் வாழ்க்கையில் இந்த ஜனநாயகம் அல்லது சமமான வாய்ப்பு இல்லை” என டாக்டர் அம்பேத்கார் கூறினார். ஒரு சிலர் டாலர் பில்லியனராக கொழுப்பதும், பெரும்பான்மையினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாடுவதும் நீடிக்கும் தேசத்தில் அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது ஏமாற்று வித்தையே.
             மேலும், சமூக ரீதியிலும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை யினத்தைச் சார்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது முக்கியமான அம்சம். இதையும் பாஜக வகுப்புவாதக் கண்ணோட்டத்துடன் நிராகரிக்கிறது.சிறுபான்மை மக்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் வறுமையில் வாடுவதாக கூறும் பாஜக, அவர்களுடைய முன்னேற்றத்திற்கு உருப்படியான எந்தத் திட்டத்தையும் தனது தேர்தல் அறிக்கையில் முன்வைக்கவில்லை.
              நவீன இந்தியாவில் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற சொல்லாடலை பாஜக பயன்படுத்துகிறது. ஆனால், இஸ்லாமிய சிறுபான்மை மக்களுடைய கல்வி, வேலைவாய்ப்பு , வாழ்வாதாரம் போன்ற பிரச்சனைகளைப் பற்றி ஆய்வு செய்த நீதிபதி சச்சார் குழு அறிக்கை பற்றியோ, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரை பற்றியோ ஏதும் கூறவில்லை. இந்த பரிந்துரைகளை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்த கட்சிதான் பாஜக என்பதை மறந்துவிடமுடியாது. பொருளாதாரக் கொள்கையில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் வேறுபாடு இல்லை என்பது மட்டுமல்ல, பாஜக ஒரு வகுப்புவாத கட்சி என்பதை அது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையே மேலும் அம்பலப்படுத்துகிறது.
         இத்தகைய வகுப்புவாதக் கட்சியோடு மதிமுக, பாமக, தேமுதிக உடன்பாடு வைத்திருப்பதும், இதுவரையில் பாஜக தேர்தல் அறிக்கை பற்றி அதிமுக தலைமை வாய் திறக்காததும் ஏன் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு அந்த கட்சிகளுக்கு உண்டு.
          எனவே, வகுப்புவாதத்திற்கு எதிராக, மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக, உறுதியாக போராடி வரும் இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டுமென வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறோம்.

''மோடியும், குஜராத்தும்'' - ஆனந்த விகடனின் உண்மை கட்டுரை

            குஜராத் முதல்வராக இருக்கும் நரேந்திர மோடி இந்திய நாட்டின் பிரதமர் (?) வேட்பாளர் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தம்பட்டம் அடித்து வருகிறது. அவரைப் பற்றிய பல்வேறு தகவல்களை பூதாகரமாகக் கூறி வருகிறது. ஆனால் உண்மை நிலை என்ன என்பதை 16-4-2014 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளியான ப.திருமாவேலன் கட்டுரை புட்டுப்புட்டு வைக்கிறது. கட்டுரையின் பகுதிகள் வருமாறு:

             எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சைதான். 2002ல் ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, குஜராத்தை இந்தியாவின் சொர்க்க புரியாக மாற்றிவிட்டார் என்ற நினைப்பு, நாடு முழுவதும் விதைக்கப் பட்டது. குஜராத்திகள் பிறப்பால் தொழில் சமூகத்தினர், பிரிட்டிஷ் ஆட்சி கிழக்கு இந்தியக் கம்பெனி மூலமாக வர்த்தகம் செய்த காலத்திலேயே தொழிற்சாலைகள் தொடங்கியது இந்தப் பகுதியில்தான். “மோடி, நன்கு சுழலும் தங்கச் சக்கரத்தைப் பெற்றார். அதை நிறுத்தாமல் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருப்பதுதான் மோடியின் சாதனை” என்றார் சமூகவியலாளர் தீ பாங்கர் குப்தா. இதனை அமர்த்தியா சென் ஏற்றுக்கொள்ளவில்லை. “குஜராத்தில் புதிய தொழிற்சாலைகள் வந்திருக்கின்றன. நிறைய சாலைகள் அமைத்திருக்கிறார்கள்.
             கட்டுமானப் பணிகள் வேகமாக நடக் கின்றன. ஆனால், ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை இதைவைத்து மட்டுமே அளவிட முடியாது. 1000 குழந்தைகள் பிறந்தால் மருத்துவ வசதி இல்லாமல் அதில் எத்தனை குழந்தைகள் குஜராத்தில் இறந்துபோகின்றன என்பதைப் பாருங்கள். அது கேரளாவைவிட மூன்று மடங்கு அதிகம். அதேபோல் கல்வி மற்றும் மருத்துவத்துறைகளில் கேரளா, தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசத்தை விடவும் குஜராத் பின்தங்கித்தான் இருக்கிறது”என்கிறார் சென். மோசம், மிக மோசம் என்பதையே ஒவ்வொரு மாநிலமும் தங்கள் ஸ்டேட் டஸாக வைத்திருந்ததால் ஏற்பட்ட சலிப்பு, `குஜராத் முன்னேறி விட்டதோ.... அதே ஃபார்முலா இந்தியாவுக்கும் பொருந்துமோ!”என்ற நப்பாசை நம்பிக்கையை வளர்த்துவிட்டது!

தொழிலதிபர்களின் அதிபர்..!


          இந்தியத் தொழில் துறை வர்க்கம், தனக்குச் சாதகமான பிரதிநிதியாக மோடியைக் கணிக்கிறது.`குஜராத்தில் தொழில் முதலீடு செய்யுங்கள்’ என்று மோடி அழைப்பதைப் போல வேறு எந்த மாநில முதல்வரும் அழைக்கவில்லை என்பது மட்டுமல்ல; அடிமாட்டு விலைக்கு நிலங்களையும், 0 சதவீதமும் வட்டியுடன் நிதி உதவியும் வேறு எந்த மாநிலமும் தர முன்வரவில்லை என்பதும் காரணம். சலுகைக்கு மேல் சலுகைகள் வழங்குவதன் மூலமாக பல்வேறு தொழிற்சாலைகளை மாநிலத்துக்குள் கொண்டுவரும் தந்திரத்தை மோடி கடைப்பிடிக்கிறார். இது தொழில் அதிபர்களுக்குச் சாதகமான அம்சம். ஒரு காலத்தில் பெரு முதலாளிகள் தரப்பு, அனைத்து இந்திய தேசியத்தைக் கட்டமைத்தது போலவே இப்போதும் இணைந்து செயல்பட்டு, மோடிக்கு ஆதரவு தருகிறது!

மோடித்துவா..!

              `நான் ஓர் இந்து தேசியவாதி. இன்னும் எளிதில் புரியும் வகையில் சொல்லவேண்டுமானால், நான் இந்து என்ப தால் இந்து தேசியவாதி’ என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டவர் நரேந்திர மோடி. இந்தியா என்பது பன்முகத் தன்மைகொண்டது. இந்தியாவின் பெருமை என்பதே வேற்றுமையில் ஒற்று மைதான். ஆனால், `இங்கு இருப்பது ஒரேஒரு தேசியம்தான். அது இந்து தேசி யம், அதுதான் இந்திய தேசியம்‘ என்றுசொல்லக்கூடிய தத்துவத்தின் பிரதிநிதி யாக நரேந்திரமோடி தன்னை அடை யாளப்படுத்திக் கொள்வதைப் பெருமை யாக நினைக்கிறார். தனிப்பட்ட மோடிஎப்படிப்பட்டவராகவும் இருக்கலாம். ஆனால், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் பிரதமர் பதவிக்கு ஆசைப் படுகிறவர், தன்னைப் பச்சையாக `இந்து தேசியவாதி’ என்று அழைத்துக் கொள்வது சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலானது. சட்டம் - ஒழுங்கு கெடுமானால் நிம்மதி இழக்கக்கூடியவர்கள் பெரும் பான்மையினரும்தான். காங்கிரஸ் கட்சியை இந்திய நாட்டுப் பற்று காப்பாற்றுவது போல, தங்களை இந்து மதப்பற்ற காப் பாற்றும் என்று மோடி நினைக்கலாம். ஆனால், மக்கள் நலன் சாராத இந்த மாய மாத்திரைகள், விரைவிலேயே அவலமாகக் கிழிந்து தொங்கும். அயோத்தி அலையில் 1999ல் ஆட்சியைப் பிடித்தபாஜகவை 2004ல் வீட்டுக்கு அனுப்பி யவர்கள் `இந்துக்கள்’ தானே தவிர... சிறுபான்மையினர் அல்ல.  இந்து பிம்பம் ஆட்சிக்கு வரப் பயன்படலாம். ஆட்சியை எப்போதும் காப்பாற்றாது என்பதற்கு உதாரணம்... வாஜ்பாய்!

தான், தான் மட்டுமே...!

              அரசியல் என்பதே, ஒருவரை வீழ்த்தி விட்டு இன்னொருவர் அதிகாரத்தை அடைவதுதான். அதைப் பச்சையாக, பட்டவர்த்தனமாக நடத்துபவராக நரேந்திர மோடி இருக்கிறார்.சோம்நாத்தில் இருந்து அயோத்திக்கு அத்வானி ரத யாத்திரை புறப்பட்டபோது, அதனை ஏற்பாடு செய்கிற பொறுப்பில் இருந்தவர் நரேந்திர மோடி. 23 ஆண்டு களுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவம் தான் மோடியை குஜராத்துக்கு அறிமுகம் செய்தது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான `ஏக்தா யாத்ரா’ என்ற ஒற்றுமை யாத்திரையை முரளி மனோகர் ஜோஷி நடத்தியபோது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மோடி முகம் அறிமுகம் ஆனது. இன்று மோடியால் வீழ்த்தப்பட்டுக் கிடப்பவர்கள் யார்? அதே அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும்தான்.
              அத்வானியிடம் இருந்து `பிரதமர் வேட்பாளர்’ என்ற மகுடத்தைப் பறித்து, ஜோஷியிடம் இருந்து அவரு டைய தொகுதியைப் பறித்து மோடி ஆடியது தவறான ஆட்டங்கள். `மோடி இல்லாவிட்டால் பாஜக ஆட்சிக்கு வர முடியாது’ என்ற பிம்பத்தை உருவாக்கி, மற்ற தலைவர்கள் அனைவருக்குமே அவர்கள் பயப்படும் தொகுதிகளை ஒதுக்கி நரேந்திர மோடி செய்த வேலைகள், நரசிம்மராவ் காலத்தில்கூட காங்கிரஸில் நடக்காதவை.மோடியை அரசியலுக்கு அழைத்து வந்தவர் சங்கர் சிங் வகேலா. இவர் தனது புல்லட்டில் எப்போதும் மோடியை உட்காரவைத்துக் கொண்டு குஜராத்தை வலம் வருவார். 1995ம் ஆண்டு தேர்தலில் குஜராத் சட்டமன்றத்தை பாஜக கைப் பற்றியபோது சங்கர் சிங் வகேலா தான் முதல்வராக இருந்திருக்க வேண்டும்.
              ஆனால், அத்வானியிடம் இருந்த தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வகேலாவைத் தடுத்து கேஸூபாய் படேலை முதல்வர் ஆக்கினார் மோடி. கேஸூபாய் படேலை வாழ்த்தி... வகேலாவைக் கட்சியைவிட்டுத் துரத்தி... இத்தனையும் அத்வானி ஆசீர் வாதத்துடன் நடத்தினார் மோடி. 2002ம் ஆண்டு குஜராத் படுகொலையால் தலைகுனிந்த பிரதமர் வாஜ்பாய். முதல்வர் மோடியைப் பதவி விலகச் சொன்னபோதும் தடுத்தவர் அத்வானி. ஆனால், அந்த அத்வானியின் பிரதமர் கனவைக் காவு வாங்கினார் மோடி!பாஜக ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் மோடி ஒரு பக்கமும், மற்ற அனைவரும் இன்னொரு பக்கமும் சக்கரத்தைச் சுழற்று வார்கள். ஏனெனில், இரண்டாம் நபரோடு அரவணைக்கும் ஆளாக மோடி இல்லை!

சிறுபான்மையினர் சினம்..!

               இந்தியப் பிரிவினைக்குப் பின் நடந்த மிகப்பெரிய மதவெறிப் படுகொலை 2002ல் குஜராத்தில் தான் நடந்தது. குஜராத் எப்போதும் அமைதிப் பூங்காவாக இருந்தது இல்லை. 1969ல் 512 பேரையும், 1985ல் 300 பேரையும், 1992ல் 152பேரையும், பலிவாங்கிய குஜராத், 2002ல் சுமார் 1,200 பேரை (அரசுக் கணக்கின்படி) புதைத்தது. கரசேவர்கள் வந்த ரயில் பெட்டிக்குத் தீ வைக்கப்பட்டதால், எதிர்வினையாக இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று விளக்கம் சொன்னாலும், அரசும் போலீசும் நினைத்திருந்தால், அந்தச் சாவுகளில் பாதியைத் தடுத்திருக்கலாம். `எல்லாம் முடியட்டும்; இரண்டு நாட்கள் காத்திருப்போம்‘ என்று கைகட்டி வேடிக்கை பார்த்தது மோடி அரசு. `ஆட் சிக்கு வந்த சில மாதங்களில் நடந்தது என்பதால் எப்படிச் சமாளிப்பது என்று அவருக்குத் தெரியவில்லை’ என்று விளக்கம் சொல்கிறார்கள்.`காரில் போய்க்கொண்டு இருக்கிறோம்.
                 ஒரு நாய்க்குட்டி மீது நம் கார் மோதி அது இறந்துவிடுகிறது. அப்போது நாம் வருத்தப்படுகிறோம் அல்லவா? அது போன்றதுதான் 2002ம் ஆண்டு நிகழ்வும்‘ என்று இப்போது சமாளிக்கத் தெரிந்தவருக்கு போலீஸைப் பயன்படுத்தக் தெரியாதா? `ஒன்றின் எதிர்வினை இன்னொன்று’ என்று நியாயப்படுத்தினார் மோடி. இஸ்லாமியர்களையே தன்னுடைய பிராண்ட் அம்பாஸிடர்களாக மோடி நியமித்து பிரச்சாரம் செய்தாலும், அந்த மக்கள் மனதில் பயமும் பீதியும் படிந்திருப்பது மோடியின் உண்மையான சொரூபம் தெரியும் என்பதால்தான்!மேலும், என்கவுண்ட்டர் என்ற பெய ரால் சிறுபான்மையினரைக் கொன்று தீர்த்த சம்பவங்கள் ரத்தம் உறையவைக்கின்றன. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 32 போலீஸ் உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதியப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதும் அதிலிருந்து ஜாமீனில் வந்தவர்கள், ஒரு மாநில முதலமைச்சரையே குற்றம் சாட்டுவதும் இதுவரை இந்தியா பார்க்காதது!

மர்மங்களின் மனிதர்..!

                 `நான் ஒரு திறந்த புத்தகம்‘ என்று எல்லா அரசியல்வாதிகளும் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், யாரும் திறக்க முடியாத புத்தகமாக மோடி இருக்கிறார். திருமணம் செய்து கொள்ளாதவராக அவரைக் காட்டுகிறார்கள். 13 வயதில் ஜசோதாபென் என்பவருக்கும் இவருக்கும் திருமணம் நடந்தது. பின்னர், இவர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு இரண்டு ஆண்டுகாலம் இமயமலைக்குப் போய்விட்டு, குஜராத் திரும்பினாலும், 32 ஆண்டுகள் தனது சொந்த வீட்டுக்கே வராமல் போனதால் அந்தப் பந்தம் அப்படியே அறுந்தது என்றும் சொல்லப்படுகிறது.அந்தப் பெண் ஒரு பள்ளியின் ஆசிரியையாக வேலை பார்த்துள்ளார். மோடி, முதல்வர் ஆன பிறகு அவர் யார் பார்வையிலும்படாமல் மறைத்து வைக்கப்பட்டார்.
               அவரை 2002ம் ஆண்டுக்குப் பிறகு பேட்டி எடுக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். இன்று வரை அவரது இருப்பு, மறைமுகமாக இருக்கிறது. சமீபத்தில் தான் மாதுரி சோனியின் கதை பிரபலமானது. அந்தப் பெண்ணை 62 நாட்கள் குஜராத் உளவுத் துறை வேவு பார்த்தது. ஆந்திர சினிமாக்களை மிஞ்சும் ரியல் மசாலா.மோடி அரசால் வஞ்சிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஐபிஎஸ். அதிகாரிகளான குல்தீப் ஷர்மா, ஸ்ரீகுமார், வன்சரா, சஞ்சீவ்பட், ராகுல் ஷர்மா, ரஜ்னீஷ் ராய் போன்றவர்கள் சொல்லும் கதைகள் பதற்றமானவை.மோடிக்கு அடுத்த இடத்தில் இருந்த, `அவருக்கு அடுத்து இவர்தான்‘ என்று சொல்லப்பட்ட, அத்வானி மற்றும் அருண் ஜெட்லி ஆசீர்வாதம் பெற்ற குஜராத் வருவாய் துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா, திடீரென ஒருநாள் செத்துக் கிடந்த மர்மம் எத்தனையோ ஆண்டுகள் ஆகியும் இன்னும் விலகவில்லை!

கொள்கை என்ன..?

               `காங்கிரசிடம் இருந்து விடுதலை’ என்று மோடி முழங்குகிறார். ஆனால், காங்கிரஸில் இருந்து பாஜக எந்த வகையில் மாறுபட்டது என்பதை இன்று வரைவிளக்கவே இல்லை. மாற்றம், வளர்ச்சி என்று மையமாகப் பேசுகிறாரே தவிர, தன்னுடைய கொள்கை, ஆட்சி நடத்தும் வழிமுறை பற்றி பேசவே இல்லை. புதிய பொருளாதாரக் கொள் கையை அமல்படுத்தி 24 ஆண்டுகள் கடந்து விட்டன. பொருளாதாரமும் நிதியும் கோமாவில் தான் கிடக்கின்றன. இதே பொருளாதாரக் கொள்கையைத்தான் (1998-2004) பாஜக ஆட்சியும் பின் பற்றியது.ஒரு காலத்தில் சுதேசி, சுதேசி என்று அதிகம் பேசியது பாஜக தான். இன்று அதை மறந்தும் சொல்வது இல்லை.
               சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அமல்படுத்தத் துடித்தது காங்கிரஸ் என்றால், 26 சதவிகிதம் முதலீடு வரலாம் என்றது பாஜக அரசு. 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுக்கு வசதியான வழிமுறைகளை பாஜக ஆட்சியே பாதைபோட்டுக் கொடுத்தது. காங்கிரசும் ஆ.ராசாவும் அதற்குள் புகுந்து புறப்பட்டார்கள். லோக்பால், லோக் அயுக்தா பற்றி மோடி தெளிவுப்படுத்தவில்லை. `பலவீனமான பிரதமராக இருப்பதால் அண்டை நாடுகள் மிரட்டுகிறது’ என்கிறாரே தவிர, மோடியின் வெளியுறவுக் கொள்கை இன்னும் சொல்லப்படவில்லை. அண்டை நாடுகளுடன் சண்டைக்கு நிற்கப் போகிறோம் என்றால் ராணுவச் செலவு அதிகமாகி, இந்தியாவின் கடன் இரண்டு மடங்கு ஆகும் என்பதைத் தவிர பயன் இருக்காது.மேடையில், ஏறுகிறார்; கையை வீசுகிறார்; கர்ஜிக்கிறார்; காற்றில் கலக்கிறது வார்த்தைகள். ஆனால், எதுவுமே மனதில் நிற்கவில்லை. வளர்ச்சி, மாற்றம் என்ற வாய்மொழி வார்த்தைகள் மட்டும் போதாதே!

யார் பிரதமர்..?

             இதில் என்ன சந்தேகம்? பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைத்தால், மோடிதான் பிரதமர், தனிப்பெரும்பான்மையை பாஜக அடைய முடியாமல் போனால் மற்ற கட்சிகளின் ஆதரவைத் தேட வேண்டி வரும். அப்போது? `நரேந்திர மோடியைத் தவிர வேறு யாரை முன்மொழிந்தாலும் நாங்கள் ஆதரிக்கத் தயார்’ என்று கட்சிகள் நிபந்தனை விதிக்கும். அப்போது, பாஜக என்ன முடிவு எடுக்கும்? ஆர்எஸ்எஸ் என்ன அறிவுரை சொல்லும்? இதை எதிர் பார்த்துத்தான் 87 வயதிலும் அத்வானி. காந்தி நகரில் நிற்கிறார். ராஜ்நாத் சிங், ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி போன்றவர்கள் மோடியை சகித்துக் கொண்டு சும்மா இருக்கிறார்கள்.இப்படி ஒரு சூழ்நிலை உருவாகுமானால் மோடி என்ன மாதிரியான முடிவு எடுப்பார் என்பதைக் கணிப்பது கஷ்டம். மோடி போன்ற ஒரு கேரக்டர் பிரதமர் ஆகிறார் என்பதை நினைத்தால், பலருக்கும் பயமாக இருக்கிறது. அவர் பிரதமர் ஆக முடியாமல் போனால் என்ன ஆகும் என்று யோசித்தால், அந்தப் பயம் இன்னும் அதிகமாகிறது.!
             
 நன்றி : ஆனந்தவிகடன் மற்றும் Theekkathir Tamil Daily..

சனி, 1 மார்ச், 2014

மாறுகிறது மோடியின் குரல்...!


ஆக்கம் :
தோழர். க.சுவாமிநாதன், பொருளியல் அரங்கம்,          
               நாற்காலியில் உட்கார்ந்த பிறகு குரல் மாறுவது அரசியல் வாடிக்கை. ஆனால் நாற்காலிக் கனவிலேயே மோடியின் குரல் மாறியுள்ளது. 
             புதுதில்லியில் அகில இந்திய வணிகர் கருத்தரங்கில் உரையாற்றிய போது, “வியாபாரத்தில் பன்னாட்டுச் சவால்கள் வருவது பற்றி நாம் அச்சப்பட வேண்டாம். அவற்றையெல்லாம் வாய்ப்புகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் 10 அடிகள் முன்னேறினால், நாம் 15 அடி போக வேண்டும். ஓடக்கூடாது... சந்திக்க வேண்டும்.” வணிகர்கள் மாநாட்டில் உட்கார்ந்து கொண்டு ''பன்னாட்டு மூலதனத்தை தவறாக நினைக்காதீர்கள்'' என்று தரப்படும் சிக்னல் இது. 
           ''இதைத்தானே இவ்வளவு நாளா நானும் சொன்னேன்'' என்று மன்மோகன் சிங் சொல்லலாம். மாறுகிறது மோடியின் குரல். வணிகர்கள் உஷார்....!  

நன்றி :
 

சனி, 1 செப்டம்பர், 2012

நரவேட்டை நரேந்திர மோடியின் பிரதமர் கனவு தகர்ந்தது....!

        கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில்  இதே நரேந்திர மோடியின் அன்றைய ஆட்சிகாலத்தில், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை காரணம் காட்டி, நரோடா பாட்டியாவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான தீர்ப்பு நேற்று முன் தினம் ஆகஸ்ட் 30 - ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு என்பது, இத்தனை ஆண்டு காலமாக அந்த இனப் படுகொலையை நேரில் பார்த்து, தீர்ப்புக்காக காத்திருந்த அந்த பகுதி மக்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்திருக்கிறது. 
           நரோடாவில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக இந்து மதவெறியர்கள் நடத்திய கொடுஞ்செயல்களை இன்றைக்கும் எங்களால் மறக்க முடியவில்லை என்று அதை நேரில் பார்த்தவர்கள் அந்த சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சி அளித்திருக்கிறார்கள் . பதைபதைக்க இஸ்லாமியப் பெண்களின் மேலாடை உருவி, கூட்டாக கற்பழித்துக்  கொல்லப்பட்டுக் கிடந்த பெண்களைப்  பார்த்த அந்த மக்கள், அந்த பெண்களின் மானத்தை மறைக்க நாங்கள் எங்கள் துப்பட்டாவை பயன்படுத்தி  மூடினோம். அங்கிருந்த ஆண்களும் கூட தங்கள் முகத்தை திருப்பிக்கொண்டு தாங்கள் அணிந்திருந்த சட்டையை கழற்றி அந்த பெண்களின் மானத்தை மறைத்தார்கள். துணியின்றி கிடந்த சடலத்தை செய்தித்தாள்களைக்  கொண்டு மூடி மறைத்தோம் என்றெல்லாம் நரோடா மக்கள் சாட்சியளித்திருக்கிறார்கள்.
              அது மட்டுமல்ல வயது வித்தியாசமில்லாமல் மொத்தம் 97 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் என கொல்லப்பட்டார்கள். எரியும் நெருப்பில் வீசி எறியப்பட்டார்கள். பன்னிரெண்டு நாள்  சிசுக்கூட இந்த கொலை பாதகச்செயலிலிருந்து தப்பவில்லை. மதவெறிக் கூட்டத்தினர், அந்த சிசுவை கொன்று தீயில் எரிந்தது  என்பது மிகக்கொடுமையானது. இத்தனை மாபாதகச் செயல்களுக்கும் கொல்வதற்கு  நீண்ட வாளும், தீயிட்டுக் கொளுத்துவதற்கு மண்ணெண்ணையையும் அருகிலிருந்து கொடுத்து உதவிய ''மாபாதகி'' தான் இந்த மாயா பென்  கோத்னானி என்பவள்.   இவள் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவள். அதுமட்டுமல்ல, அத்வானியின் சீடராக இருந்து வகுப்புவாத அரசியலுக்கு  வந்தவள் என்கிற பெருமையும் இவளுக்கு உண்டு. மேலும் அத்வானியைப் போலவே  சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலிருந்து இந்தியாவிற்கு வந்த குடும்பங்களில் இவளது குடும்பமும் ஒன்று. 
                அந்த படுகொலைகள் நடந்த காலத்தில் இந்த கோத்னானி குஜராத்தில் மோடி அமைச்சரவையில் அமைச்சர் பதவியில் இல்லை. முதலமைச்சர் பொறுப்பிலிருந்து தான் விலக முடியாது என்பதற்கு மோடி இதையே ஒரு வாதமாக இப்போது வைக்கிறார். ஆனால் இந்த படுகொலை சம்பவத்திற்கு பிறகு குற்றஞ்சாட்டப்பட்டு, விசாரணையில் உள்ள ஒருவளை  மோடி எப்படி  அமைச்சராக்கினார் என்பது அன்றே மிகப்பெரிய கேள்விக்குறியாய் எழுந்தது. தான் நினைத்தது போல் படுகொலைகளை முன்னின்று நடத்தியதற்கு பரிசாகவும், தான் அந்த சம்பவம் நடந்த இடத்திலேயே இல்லை என்றும், காந்தி நகரில் இருந்தேன் என்றும்  நீதிமன்றத்தில் அவள் சொன்ன பொய்க்கு நன்றிக்கடனாகவும் தான் இந்த மகா கொடுமைக்காரி கோத்னானிக்கு அமைச்சர் பதவியை கொடுத்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மோடி இவளை குஜராத் அரசின் குழந்தைகள் மற்றும்  பெண்கள் நலத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார்.
               ஒருவழியாக நடைபெற்ற  நரவேட்டையின் விசாரணையிலிருந்து நரேந்திர மோடி விலக்கப்பட்டது என்பது  ஒரு சோகம் என்றாலும், விசாரணையின் முடிவில் வந்த தீர்ப்பு என்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களும், மனிதநேயமுள்ளவர்களும், மதநல்லிணக்கம் வேண்டுவோர்களும், மதசார்பற்ற கொள்கையாளர்களும் ஓரளவு எதிர்ப்பார்த்த  தீர்ப்பாக அமைந்துள்ளது என்று சொல்லலாம். அவர்களது நம்பிக்கை வீண் போகவில்லை.
            அதேப்போல், சம்பவத்தை நேரில் பார்த்த நரோடாவில் வசிக்கும் மக்கள் '' கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் நிம்மதியில்லாமல் இருந்தோம். இந்த தீர்ப்பின் மூலம் இப்போது தான் எங்களுக்கு நிம்மதி வந்தது'' என்று பெருமூச்சிவிட்டு பேசினார்கள். 
courtesy : The Hindu
            ஆனால், பாகிஸ்தான்  பயங்கரவாதி அஜ்மல் கசாப்பின் தூக்குதண்டனையை கொண்டாடும் பாரதீய ஜனதா கட்சியும், சிவசேனாவும் குஜராத் சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைக்கேட்டு வாயடைத்துப் போய்விட்டனர் என்பது தான் உண்மை. 
            பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் போதே பிரதமர் பதவியை நோக்கிய அவரது கனவு என்பது இந்த தீர்ப்புக்குப் பிறகு தகர்க்கப்பட்டு விட்டது. இன்னும் சொல்லப்போனால், அருகில் வந்துகொண்டிருக்கக்கூடிய  குஜராத் சட்டமன்றத்  தேர்தலில் கூட, இந்த தீர்ப்பின் காரணமாக மோடியின் கதி மட்டுமல்ல, பாரதீய ஜனதா கட்சியின் கதி கூட அதோ கதியாகத் தான் இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

கரியை காசாக்கிய காங்கிரஸ் கட்சியும், காசைக் கரியாக்கும் பாரதீய ஜனதா கட்சியும்...!

        கடந்த மூன்று நாட்களாகவே இந்திய பாராளுமன்றத்தில் அனல் பறக்கிறது. பாராளுமன்றத்தின் மக்களவை  மற்றும் மாநிலங்களவை ஆகிய   இரு அவைகளும் நடத்த முடியாமல்  பாரதீய ஜனதா கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளினால் முடக்கப்பட்டிருக்கின்றன. சென்ற வாரம் மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் கிளப்பிவிட்ட புயல் ஓயவே இல்லை. திடிரென்று வந்த ''தானே'' புயல் மாதிரி, தலைமை கணக்கு தணிக்கையாளர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையே ஆட்டம் காண வைத்திருக்கிறது என்பது உண்மை தான்.  
              இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊழல்.... 2 ஜி-ஸ்பெக்ட்ரம் ஊழலையே   மிஞ்சி விட்ட மெகா  ஊழல்... அரசின் கையிலிருந்த  நிலக்கரி சுரங்கங்களை தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு   திறந்துவிடப்பட்டதில் அரசுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய  வருமான இழப்பு என்பது 1.86 இலட்சம் கோடி என்ற தகவலை தலைமை கணக்கு தணிக்கையாளர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துயிருக்கிறார். இது ''திருவிளையாடல்'' எப்போது நடந்தது என்றால்...  நிலக்கரி சுரங்கம்  பிரதமரின் கட்டுப்பாட்டில் இருந்த காலக்கட்டத்தில்  தான் என்பது குறிப்பிடத்தக்கது.

             பாராளுமன்றத்தை முடக்குவதற்கு வாய்ப்புகளை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கு இந்த அறிக்கை என்பது மிகப்பெரிய அல்வா துண்டு போல கிடைத்துவிட விட்டேனா பார் என்று குழப்பத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கி கடந்த மூன்று நாட்களாக பிரதமர் பதவி  விலகவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் முடக்கி வருகின்றனர். ''விடாக்கண்டன்- கொடாக்கண்டனான'' நம்ம பிரதமர் மன்மோகன் சிங் வழக்கம் போல் இதுவரை வாயையே திறக்கவில்லை. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட ''தலை'' ஆடவில்லை... ஆனால்  ''வால் '' மட்டும் துடித்து ஆடியது. ஆம்... பிரதமரின் வாலாக ஒட்டிக்கொண்டிருக்கக்கூடிய மத்திய அமைச்சர் நாராயணசாமி தலைமை கணக்கு தணிக்கையாளரை  மிரட்டுவதுபோல் பேசினார். தலைமை கணக்கு தணிக்கையாளர் அரசை கலந்தாலோசிக்காமல் அறிக்கையை நேரடியாக தாக்கல் செய்தது என்பது தவறானது என்று கர்ஜித்தார். தலைமை கணக்கு தணிக்கையாளர் என்பவர் இந்திய அரசியல்சாசன சட்டப்படி பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்டவர் என்பதையே இந்த  அமைச்சர் மறந்துவிட்டு பேசினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஒட்டிக் கொண்டிருக்கக்கூடிய திமுகஉள்லிட்ட கட்சிகளும் வாயை திறக்கவில்லை.
             ஆனால் ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகளெல்லாம் பேசவே முடியாமல் ஆடிப்போயிருக்கின்றன. இன்னொரு பக்கம் இந்த ஊழலை காரணம் காட்டி வரும் 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி விட்டு  தாங்கள்    எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியினர் துடித்துக்கொண்டிருக்கின்றனர்.
         கர்நாடகா மாநிலத்தில் இதே போல் நிலக்கரி ஊழலில் சிக்கி நாறிக்கொண்டிருக்கிற பாரதீய ஜனதா கட்சி தங்களை உத்தமர்களைப் போல் காட்டிக்கொள்ள பாராளுமன்றத்தைப் பயன்படுத்துகின்றனர். தாங்கள் தான் ஊழலை ஒழிக்க வந்த பரமாத்மா போல் ஊழலுக்கு காரணமான மன்மோகன் சிங் பதவி விலகும் வரை ஓயமாட்டோம் என்று கூறி  இரு அவைகளையும் நடத்தவிடாமல் கடந்த மூன்று நாட்களாக பாராளுமன்றத்தையே முடக்கிவருகின்றனர். இது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரான செயல் ஆகும்.பாராளுமன்ற ஜனநாயகத்தின் குரல்வளையையே நெரிக்கும் செயலாகும்.
            அது மட்டுமல்லாமல், குற்றம்  சாட்டப்பட்ட பிரதமர் தன்னுடைய கருத்துக்களை பாராளுமன்றத்தில் எடுத்துரைப்பதற்கும், இந்த ஊழல் சம்பந்தமாக மற்ற எதிர்க்கட்சிகளும் பாராளுமன்றத்தில்  தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்வதற்குமான  வாய்ப்பைகளை  தடுக்கின்ற  செயலாகும். பறிக்கின்ற செயலாகும். . இப்படி மற்றவர்களை பேசவிடாமல், பாராளுமன்றத்தில் அடாவடித்தனமாக தகராறு செய்வதன்  மூலம், தாங்கள் மட்டுமே ஊழலுக்கு எதிராக  குரல் கொடுப்பவர்கள் போலவும், பாரதீய ஜனதா கட்சி மட்டுமே ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று என்பது போலவும்  ஆன கருத்துக்களை மக்களிடம் உருவாக்கவே பாரதீய ஜனதா கட்சி  இந்த பாராளுமன்ற சீர்குலைவு வேலைகளை செய்து நாடகம் ஆடி வருகின்றனர்.  
                உண்மையிலேயே பாரதீய ஜனதா கட்சியினர் ஊழலுக்கு எதிராக போராடுகின்றார்கள் என்றால், நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும்...? இந்த ஊழல் சம்பந்தமாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அரசை வற்புறுத்தியிருக்க வேண்டும். இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட பிரதமரையும், கோடிக்கணக்கான அரசின் பணத்தை சுருட்டிய பெருமுதலாளிகளையும் விசாரணைக்குள்  உட்படுத்த வேண்டும் என்று போராடியிருக்க வேண்டும்.
             அதேப்போல், இந்திய பன்னாட்டு பெருமுதலாளிகள் கோடிகோடியாய் கொள்ளையடித்த மக்கள் பணத்தையும் அதனால் சேர்த்த சொத்துக்களையும் அரசு பறிமுதல் செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்து  பாரதீய ஜனதா கட்சியினர் வலுவாக நாடாளுமன்றத்தில் போராடியிருக்கலாமே...? ஏன்  செய்யவில்லை...?
          ஏனென்றால், பாரதீய ஜனதா கட்சியினர் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக செயல் படுவார்களே தவிர எதிராக  செயல்பட மாட்டார்கள். இவர்களின் தேர்தல் செலவை கவனிப்பவர்கள் அவர்கள் தானே...? பாரதீய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியினை போலவே மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாதர்ககள். பெருமுதலாளிகளுக்கு ஆதரவானவர்கள்.

ஞாயிறு, 3 ஜூன், 2012

பாரதீய ஜனதா கட்சியின் இலட்சணம் கொடிகட்டிப் பறக்கிறது பாரீர்...!

              
        2009 பாராளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன், முதல் பாதி ஆட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாய் ஊழல் பேய்களெல்லாம் காங்கிரஸ் மற்றும் அதன் நேசக் கட்சிகளின் ஊழல் பெரிச்சாளிகளோடு கைகோர்த்து ஆட்டம் போட்டதையும் அதன் காரணமாக அந்த பெரிச்சாளிகள் எல்லாம் பொறி வைத்து பிடிக்கப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டதையும் இந்த நாடே பார்த்து வெட்கி தலை குனிந்தது. எதோ ஊழலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போலவும், தாங்கள் ஊழல் கரையற்ற புனிதமான கட்சியைப் போலவும், ஊழலை ஒழிப்பதற்காகவே தாங்கள் அவதாரம் எடுத்தது போலவும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் துள்ளிக்குதித்து வந்ததையும் இந்த நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்கள்.   
       இப்போது இரண்டாம் பாதி ஆட்டம் துவங்கி இருக்கிறது. இம்முறை காங்கிரஸ் - திமுகவைப் போல் ஊழலோடு ஓட்டிப் பிறந்த பாரதீய ஜனதா கட்சியின் ஊழல் பெரிச்சாளிகளும், ஊழல் பேய்களும் சேர்ந்தாடிய ஆட்டம். இவர்களை பொறி வைத்தெல்லாம் பிடிக்கவில்லை. ஊழல் குற்றம் புரிந்த பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் முறையான விசாரணை நடத்தப்பட்டு ஒவ்வொருவராக சிறைக்குள் தள்ளப்படுகிறார்கள்.
             ஒரு மாதத்திற்கு முன்பு தான், பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சியின் போது இந்திய இராணுவத்திற்கு ஆயுதம் வாங்கியதில் ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதற்காக, அன்றைய பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பங்காரு இலட்சுமணன் மீதான வழக்கு விசாரணை முடிந்து நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பரிசாக அளிக்கப்பட்டு இப்போது தண்டனையை அனுபவித்து  வருகின்றார். 
         சென்ற ஆண்டு தான் சட்டவிரோத சுரங்க ஊழல் விவகாரத்தில் சிக்கி மத்திய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு, 25 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின் வெளியே வந்து இன்று தலைமையை மிரட்டிக்கொண்டிருக்கும், காங்கிரஸ் கட்சிக்கு        தாவுவதற்கு நாள் பார்த்துக் கொண்டிருக்கும்,  பாரதீய ஜனதா கட்சி ஆளும் கர்நாடக  மாநிலத்தின் பதவியிழந்த முதல்வர் எடியூரப்பா மீது இன்றும் சி. பி. ஐ. நீதிமன்றத்தில் விசாரணை  நடைபெற்றுக்கொண்டு வருகிறது.
           அதுமட்டுமல்ல   கர்நாடக மாநிலத்தில் சட்ட விரோத சுரங்க தொழிலில் ஜாம்பவான்களாக விளங்கிய ரெட்டி சகோதரர்கள் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி ஆகிய இருவரும் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக பாரதீய ஜனதா மந்திரிசபையில் மந்திரிகளாக பதவி வகித்தவர்கள். இவர்களும் சட்டவிரோத சுரங்க ஊழல் புகாரில் பதவி இழந்து கைது செய்யப்பட்டனர். இவர்களின்  மற்றொரு சகோதரரான சோமசேகர ரெட்டி தற்போது பாரதீய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
           ரெட்டி சகோதரர்களுக்கு சொந்தமான, ஓபுலாபுரம் சுரங்க நிறுவனத்துக்கு கர்நாடக மாநிலத்திலும் ஆந்திர மாநிலத்திலும் பல ஏக்கர் பரப்பளவுக்கு  நிலங்கள் உள்ளன. அங்கு நடைபெற்ற கனிம சுரங்க முறைகேடு தொடர்பாக, பா. ஜ. க. - வின் முன்னாள் மந்திரி  ஜனார்த்தன ரெட்டி கடந்த செப்டம்பர் மாதம் சி.பி.ஐ. - யினால் செய்யப்பட்டார்.
            அவர் மீதான வழக்கு விசாரணை ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் உள்ள சி.பி.ஐ. தனி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கடந்த மே மாதம் 11-ந்தேதி அன்று, சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி பொறுப்பு வகித்த முதல் கூடுதல் செசன்சு நீதிபதி டி.பட்டாபி ராமராவ் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கி, ரூ.5 லட்சம் சொந்த ஜாமீனிலும் அதே தொகைக்கு இரு நபர் ஜாமீனிலும் ஜனார்த்தன ரெட்டியை விடுவித்தார்.
             ஜனார்த்தன ரெட்டியை ஜாமீனில் விடுதலை செய்வதற்கு  சி.பி.ஐ நீதிபதி பட்டாபி ராமராவிடம்  ரூ.15 கோடி தரவேண்டும் என்று பேரம் பேசப்பட்டு, அதன்படி முதல் கட்டமாக ரூ.5  கோடி நீதிபதிக்கு வழங்கப்பட்டு, பின்  ஜாமீனில் விடுவிக்கப்பட்டதும் மீதி தொகையை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விஷயங்கள் அனைத்தும் சி. பி. ஐ - யின் காதுகளுக்கு எட்ட, அதிரடியாக இறங்கிய சி. பி. ஐ., இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை  நீதிபதியின் மகன் பெயரில் ஐதராபாத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து கைப்பற்றி நீதிபதியை கைது செய்தது. 
              இதேப் போல் 2009 - இல் இதே கர்நாடக மாநிலம், கோலார் தங்கவயல் நகரப் பகுதியைச் சேர்ந்த ஒரு  தொழிலதிபர் ஹுசேன் மொஹீன் பாரூக் என்பவர்  தனக்கு ஏற்பட்டிருந்த சொத்துப் பிரச்னையைத் தீர்த்து வைக்குமாறு, அந்தத் தொகுதி பா. ஜ. க  சட்டமன்ற உறுப்பினரான  ஒய்.சம்பங்கியை அணுகி இருக்கிறார். அதற்கு ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று எம்எல்ஏ ஒய்.சம்பங்கி கூசாமல் கேட்டாராம். இதுதொடர்பாக நடைபெற்ற தொலைபேசி உரையாடலை லோக் ஆயுக்த போலீஸாரிடம் பாரூக் அளித்திருக்கிறார். சட்டப்பேரவை விடுதியில் 2009-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதியில் சம்பங்கியிடம் தொகையை பாரூக் வழங்கியபோது போலீஸார் சம்பங்கியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு லோக் ஆயுக்த சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பாஜக எம்எல்ஏ - வான  ஒய். சம்பங்கி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, சம்பங்கிக்கு மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு நேற்று சனிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டார். 
             அப்பப்பா.... தலை சுத்துதடா சாமீமீமீ... காங்கிரஸ் கட்சிக்காரனுங்க செய்த ஊழல்கள் எல்லாம் இராமாயணம் போல் நீண்டுகொண்டே போகிறது என்றால், இந்த பாரதீய ஜனதா கட்சிக்காரனுங்க செய்த ஊழல்கள் எல்லாம் மகாபாரதம் போல் நீண்டுகொண்டே போகிறதே...! 

புதன், 8 பிப்ரவரி, 2012

பொறுக்கிகளையும் புறம்போக்குகளையும் சட்டமன்றத்திற்கு அனுப்பினால் இப்படித்தான்...!

           பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான கர்நாடகாவில், நேற்று மதியம் மாநில  சட்டசபையில் பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருந்த போது, பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த அந்த மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி சட்டசபை விவாதத்தை கவனிக்காமல் தான் வைத்திருந்த  மொபைல்போனில் ஆபாச படத்தைப்  பார்த்து ரசித்து கொண்டிருந்தார் என்பது கர்நாடக மக்கள் தலைகுனிய வேண்டிய வெட்கக்கேடான விஷயமாகும். அது மட்டுமல்ல, சபையில்   அவர் அருகில் அமர்ந்திருந்த  ''பெண்கள் நலத்துறை'' அமைச்சர் சி.சி.பாட்டீலும் அவரோடு சேர்ந்துகொண்டு உற்சாகமாகப் பார்த்தார் என்பதும் வெட்கக்கேடான விஷயமாகும். 
                மக்களைப்பற்றிய சிந்தனை இல்லாதவர்களை - ஒழுக்கக்கேடானவர்களை - ஒழுன்கீனமானவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பினால் இப்படி தான் நடக்கும் என்பதை மக்கள் உணரவேண்டும். இந்த மிருகங்களின் செயல்களை கண்டிக்காமல் - தண்டிக்காமல்  தொடர்ந்து சட்டமன்றத்தில் அனுமதித்தால், சட்டசபையிலேயே காபரே நடனம் கூட கூசாமல் பார்க்கும் துணிச்சல் இவர்களுக்கு வந்துவிடும். இவர்களையெல்லாம், சட்டசபையிலிருந்து மட்டுமல்ல  அரசியலை விட்டே மக்கள் தூக்கி எறியவேண்டும். இவர்கள் சமூகத்தில் விஷப்பாம்புகள். 

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

ஊழல் சகதியில் ஓடும் அத்வானியின் ''ரதயாத்திரை''..!


            இந்தியா சுதந்திரம் பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ''ஊழல்'' என்பது ஆளும் கட்சிக்கு மட்டுமே சொந்தமானதாகவும், ஆட்சியாளர்கள் ஐந்தாண்டு கால ஆட்சிக்காலத்தில் தன் திறமைக்கேற்ப சொத்து சேர்ப்பதுமானதாகவும் தான் இருந்து வருகிறது. இந்த ''ஊழல்'' என்பது  காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் சொந்தமானதல்ல. மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி தோல்வியுறும் காலங்களில் ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா கட்சி, திமுக, அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி  போன்ற கட்சிகளும் ஊழல் செய்து சொத்து சேர்ப்பதையே தங்கள் தொழிலாக இருந்துவருகின்றனர். இவர்கள் தேச நலனுக்காகவும், மக்களுக்கு சேவைக்காகவும் மட்டுமே ஆட்சி செய்யவேண்டும் என்கிற மனப்பான்மையில்லாமல், சொத்து சேர்ப்பதற்கே ஆட்சிக்கு வரவேண்டும் என்று எண்ணுபவர்கள் தான் நாம் மாற்றி மாற்றி வாக்களித்து தேர்ந்தெடுக்கும் ஆட்சியாளர்கள் என்பதை ஏனோ இந்த மக்கள் உணர்வதில்லை..?
               2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - காமன்வெல்த் விளையாட்டு ஊழல் - லட்சக்கணக்கான கோடிகளை சாப்பிட்டு ஏப்பம் விட்ட மன்மோகன் சிங் தலைமையிலான - காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மெகா ஊழல் தான் இந்திய மக்களிடையே ஊழலுக்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 
               இந்த சூழ்நிலையில் தான், ஊழலுக்கெதிரான மக்களின் உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விளம்பரத்தைத் தேடிக்கொள்ளவும், பணம் பண்ணவும், ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சிகளான இடதுசாரி கட்சிகளின் பக்கம் மக்களின் கவனம் திரும்பாமல் இருக்கவும் 
அன்னா ஹசாரே போன்றோர் அவதாரம் எடுத்தனர்.
              அந்த வரிசையில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி இந்திய பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மூன்று நாட்களுக்கு உண்ணாவிரதமிருந்து தன்னை முன்னிலை படுத்திக்கொண்டார். தன்னை பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவித்துக்கொண்டார். 
                காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கூட்டிகிட்டு போய் விடுவானொன்னு பயந்து போய், கடந்த அக்டோபர் மாதம் 11 - ஆம் தேதி அன்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான அத்வானி ஒரு ரதத்தை எடுத்துக்கொண்டு கிருஷ்ண பரமாத்மா போல கிளம்பிட்டாரு...
                என்னமோ.. ஊழல் என்றால் என்னன்னு அத்வானிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் தெரியாதது போலவும், ஊழலை ஒழிக்க இவர்கள் தான் அவதாரம் எடுத்திருப்பது  போலவும் காட்டிக்கொள்கிறார்கள்.
               ஊழலுக்கு பேர் போன ஆட்சியினை இவர்கள் தான் கர்நாடகாவில் நடத்துகிறார்கள் என்பதை அத்வானி மறந்துவிட்டார் போலும்.. இவர் கிளம்பிய நேரம், ஊழல் குற்றச்சாட்டுகளால் பதவி இழந்த கர்னாடக மாநிலத்தின் முன்னாள் முதலவர் எட்டியூரப்பா நேற்று கைதானத்தில் அத்வானியின் ''ஊழல் எதிர்ப்பு ரதம்'' சகதியில் சிக்கிக்கொண்டது போலிருக்கிறது.
                 அதுமட்டுமல்ல, நேற்று ரதயாத்திரை மத்திய பிரதேசம் சாத்னா பகுதிக்கு வந்த போது, அந்த நிகழ்ச்சிக்கு வந்த பத்திரிக்கையாளர்களுக்கு,  ரதயாத்திரையை பற்றி பிரமாதமாய் எழுதுவதற்கு ஆயிரம் ரூபாய் - ஐ கொடுக்கப்பட்டது என்பது அம்பலத்திற்கு வந்திருக்கிறது. இப்படிப்பட்ட இவர்கள் தான் ஊழலை ஒழிக்கப்போவதாக யாத்திரை போகிறார்கள். எதோ மக்கள் நித்திரையில் இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.