இலஞ்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலஞ்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

தமிழக மக்களின் கோபத்தை நீர்க்கச் செய்துவிடாதீர்கள்...!


           கடந்த ஐம்பது ஆண்டு காலமாக  திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சிசெய்து தமிழ்நாட்டையே சீரழித்துவிட்டதை உணர்ந்துகொண்ட தமிழக மக்களின் கோபத்தை, தாங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த இரு கழகங்களால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொண்ட தமிழக மக்களின் அதிருப்தியை வழக்கம்போல் திசைத்திருப்பும் வேலைகளில் ஊடகக்காரர்களோடு சேர்ந்து ஒரு கூட்டம் இறங்கியுள்ளது.  தமிழகத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.சகாயம் அவர்கள் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வரவேண்டும் என்று கடந்த சில தினங்களாக முகநூலிலும், வாட்ஸ்ஆப்பிலும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இன்று மதுரையில் அவரை முன்னிறுத்தி ஒரு பேரணிக்கும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.  ஜெயலலிதாவிற்கு எதிராக திரும்பிவிட்ட ஆனந்தவிகடன் போன்ற ஊடகங்கள் இதை ஊதி பெரிதாக்குகின்றன. 
             ஆனால் எல்லாவற்றையும் இழந்து தள்ளாடிக்கொண்டிருக்கும் தமிழகத்தை மறுமலர்ச்சி அடையச்செய்ய வேண்டிய இந்த சூழ்நிலையில் இதுபோன்ற திசைத்திருப்பலும், குழப்பமும் தேவை தானா என்பதை சிந்தித்துப்பார்க்கவேண்டும். 
          சகாயம் என்பவர் ஒரு நேர்மையான அரசு அதிகாரி என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ''இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் உயர்த்து'' என்ற முழக்கத்துடன், ஊழலாலும், இலஞ்சத்தாலும்  புரையோடிப்போன தமிழக அரசில் பணிபுரியும் ஓர் அரசு உயர்அதிகாரி என்பதிலும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. தமிழகத்தில் இலஞ்சமே இல்லாமல் அரசுப்பணியாற்றும் ஊழியரைப் பார்க்கும்போது அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் தான் இருக்கும். அப்படி அதிசயக்கத்தக்கவராக திரு.சகாயம் தெரிவதில் ஆச்சரியமும் இல்லை. ஆனால்  அவரைப்போன்றே  நேர்மையாக பணிசெய்யும்  அரசு அதிகாரிகள்  தமிழகத்தில் நிறைய இருக்கிறார்கள். இதுபோன்று நேர்மையாக பணிசெய்யும் அரசு அதிகாரிகளை தொடர்ந்து  பணிசெய்ய அனுமதியுங்கள். 
                   நாட்டுக்கு நேர்மையான ஆட்சியாளர்கள் தேவை என்று நீங்கள் எப்படி கவலைப்படுகிறீர்களோ...அதேப்போல் அந்த ஆட்சியாளர்களை வழிநடத்த நேர்மையான அதிகாரிகளும் தேவை என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.  ஆட்சி என்பது இரட்டை மாட்டு வண்டி போலவாகும். வண்டி தடம் மாறாமல் நேர்வழியில் செல்லவேண்டுமென்றால் இரண்டு மாடுகளும் சரியாக செல்லவேண்டும். ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அந்த இரண்டு மாடுகள் போன்றவர்கள். 
               தவிர தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அப்படியிருக்க நீங்கள் சொல்வது திரு.சகாயம் எதாவது  ஒரு தொகுதியில் மட்டும் தான் நிற்க முடியும்.  இவரோடு சேர்ந்து வெற்றிபெறும் மற்ற மந்திரிகளோ அல்லது எம்எல்ஏக்களோ இவரைப்போன்று நேர்மையாளர்களாக தான் இருப்பார்கள் என்பது கேள்விக்குறியே.
         அதுமட்டுமல்லாது, கடந்த ஐம்பது ஆண்டுகளாக திமுக - அதிமுகவின் தனிமனித துதியால் தான் தமிழ்நாடு சீரழிந்து நாறிப்போனது. மீண்டும் கண்மூடித்தனமான அதே துதியை சகாயம் விஷயத்திலும் பாடாதீர்கள். 
            மேற்குவங்கம், கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்களைப் போல் கூட்டணி ஆட்சியால் தான் ஊழலை முற்றிலுமாக ஒழிக்கமுடியும். நேர்மையான, எளிமையான, மக்களுக்கான நிர்வாகத்தை அளிக்கமுடியும். அந்த மாநிலங்களை ஆட்சி செய்த இடதுசாரி கட்சிகள் மீது சொத்து குவிப்பு வழக்கோ, ஊழல் குற்றச்சாட்டுகளோ இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
           இப்படித்தான் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன்பு, ஊழல் பெருச்சாளிகளான காங்கிரஸ் கட்சி மற்றும் பாரதீய ஜனதக்கட்சிகளுக்கு எதிராக மக்கள் திரும்பிய போது, ஊடகங்களும், கார்ப்போரேட் கம்பெனிகளும் அன்னா ஹசாரே என்ற ''யோக்கியவானை'' காட்டி மக்களை குழப்பி - திசைத்திருப்பி கடைசியில் ஊழல் மற்றும் மதவாதக் கட்சியான பிஜேபிக்கு வாக்களிக்கச்செய்தனர். அதே செயலைத்தான் இப்போதும் ஊடகங்களும், ஒரு சில என்.ஜி.ஓ-க்களும் சேர்ந்து தற்போது தெளிவான  சிந்தனையில் இருக்கக்கூடிய தமிழக மக்களை திரு.சகாயம் அவர்களைக் காட்டி குழப்புகிறார்கள். தெளிந்த குட்டையை குழப்பி மீன்பிடிக்கப் பார்க்கிறார்கள். 
        அவர்களுக்கு சொல்லிக்கொள்வதெல்லாம், திமுக., அதிமுக கட்சிகள் மீதான மக்களின் கோபத்தை - அதிருப்தியை தவறாக திசைத்திருப்பி நீர்க்கச்செய்துவிடாதீர்கள். அப்படி செய்தால் அந்த இரு கட்சிகளுக்கே மீண்டும் சாதகமாக முடிந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள் என்பது தான்.  

வெள்ளி, 11 ஜனவரி, 2013

உங்கள் பணம் உங்கள் கையில் - வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் இலஞ்சம்...!


















             இதுவரையில் நம் நாட்டில் முதியோர் உதவித் தொகை மற்றும் கல்வி உதவித் தொகை போன்ற அரசின் நல உதவித் திட்டங்கள் மட்டுமே ''பணமாக'' மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. அதே சமயத்தில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், எரிவாயு, பெட்ரோல், டீசல், உரம் போன்ற அன்றாட தேவைகளான இத்தனை அத்தியாவசியப் பொருட்களுக்கான மானியம் மட்டும் அந்தந்த பொருட்களாகவே ரேஷன் கடைகளில் கொடுக்கப்பட்டு வந்தன. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த இந்த முறையை சீர்படுத்தி, மேலும் பல்வேறு உணவு பொருட்களை இணைத்து மானிய விலையில் மக்களுக்கு கொடுப்பதற்கு பதிலாக, இதுவரையில் ரேஷன் கடைகளில்  மானிய விலைகளில் கொடுக்கப்பட்டு வந்த இத்தனைப் பொருட்களின் விநியோகத்தையும்  நிறுத்தி ரேஷன் கடைகளையெல்லாம் மூடிவிட்டு அந்த பொருட்களுக்கு இதுவரையில் மறைமுகமாக கொடுக்கப்பட்ட மானியத் தொகையினை மக்களுக்கு நேரடியாக பணமாக கையில கொடுக்கப்போராங்கலாம். இதற்கு ''உங்கள் பணம் உங்கள் கையில்'' என்று கவர்ச்சிகரமான பெயர் வைத்திருக்கிறார்கள். இது மக்களை மயக்கும் ஏமாற்று வித்தை.  பொறியில் வடை வைத்து எலிகளை பிடிப்பது போல், ஓட்டுகளை பொறுக்குவதற்கு 2014 தேர்தலை மனதில் வைத்து காங்கிரஸ் கட்சி இவ்வாறு செயல்படுகிறது. 
          ரேஷன் கடைகளில் கொடுக்கப்பட்ட உணவு பொருட்களை நிறுத்துவது என்பதும், ரேஷன் கடைகளை மூடுவது என்பதும் ''உணவு உரிமைக்கு'' எதிரானது. மக்களுக்கு உணவு அளிக்க வேண்டியது என்பதும், உணவு பாதுகாப்பு என்பதும்  மத்திய அரசின் தலையாய கடமையாகும். இது மனித உரிமையோடு சம்பந்தப்பட்டது. அப்படியென்றால் உணவுப் பொருட்களை வழங்காமல் பணமாக கொடுப்பது என்பது மனித உரிமைக்கு எதிரானது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். இது 1948 - ஆம் ஆண்டில் உணவு உரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை என்று பிரகடணம்  செய்த  ஐநா சபைக்கு எதிரானது.
         அது மட்டுமல்லாது மானியம் என்பது உணவுப் பொருட்களாக கொடுக்காமல் பணமாக கொடுக்கப்பட்டால், குடும்பத்தலைவர் அந்த பணத்தை தன் குடும்பத்திற்கான  உணவு பொருட்களை தான் வாங்குவார் என்பது என்ன நிச்சயம்...? ஆட்சியாளர்கள் ஒரு பக்கம் மதுக்கடைகளையும், ''பார்''களையும்  திறந்துவிட்டு, இன்னொரு பக்கம் குடும்பத்தலைவரிடம் உணவுப் பொருட்களுக்கு பதில் பணத்துக் கொடுத்துவிட்டு, அவர் உணவுப் பொருட்களைத் தான் வாங்குவார் என்று அரசு எப்படி எதிர்பார்க்கிறது...?  இது அரசுக்கு மக்கள் மீது இருக்கும்  போலியான அக்கறையை அல்லவா காட்டுகிறது...? இதனால் பட்டினிச் சாவு  மேலும் அதிகரிக்கும் என்பது ஆட்சியாளருக்கு தெரியாதா...?
      அப்படியென்றால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் உண்மையான நோக்கம் என்ன...?  எப்படியோ மக்கள் கையில் காசைக் கொடுத்தா 2014 - லில் தங்கள் கையில் ஒட்டுக் கிடைக்கும் என்று பகல் கனவு காண்கிறார்கள் என்பது மட்டும் நமக்கு புரிகிறது. காசைக் கொடுத்தா மக்கள் பல்லை இளித்துக் கொண்டே தங்களுக்கே ஓட்டைப் போட்டுவிடுவார்கள் என்று நினைப்பில்,  மன்மோகன் சிங் - ப. சிதம்பரம் கூட்டாளிகள்  அரசாங்கத்தின் நிதியையே - மக்களின் பணத்தையே வாக்காளர்களுக்கு  இலஞ்சமாக கொடுக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இதை ஏன் இந்திய தேர்தல் ஆணையம் புரிந்துகொள்ளவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது...?  காங்கிரஸ் கட்சி ஓட்டுக்காக அரசாங்கத்தின் கஜானாவிலிருந்து பணத்தை மக்களுக்கு விநியோகம் செய்கிறது.  தலைமை தேர்தல் ஆணையரும், மற்ற இரு ஆணையர்களும் இதை எப்படி வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்...?
        இப்போதும் நேரம் கடந்துவிடவில்லை. சென்ற புத்தாண்டு தினத்தன்று தான் முதலில் இருபது மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை மேலும் நாடு முழுதும் மத்திய அரசாங்கம் கொண்டுசெல்வதற்கு முன், தேர்தல் ஆணையம் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை மத்திய அரசே  ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் கோரிக்கை எழுந்ததே தவிர, இது போல் ஓட்டுக்கு ''இலஞ்சம்'' கொடுப்பதை மத்திய அரசே செய்வது என்பதும், காங்கிரஸ் கட்சி இது போல் இலஞ்சம்  கொடுத்து  தேர்தல் மோசடி செய்யத் துணிந்திருப்பது என்பதும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை தேர்தல் ஆணையம் புரிந்துகொண்டு செயல்படவேண்டும்.

புதன், 28 மார்ச், 2012

போப்போர்ஸ் பீரங்கி ஊழல், கார்கில் சவப்பெட்டி ஊழல், ஆயுத பேர ஊழல் - இன்றும் பணம் ராணுவம் வரை பாய்கிறது...!











                  அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் 1980 - களில்  நடைபெற்ற போப்போர்ஸ் பீரங்கி ஊழல்...  ராஜீவ் காந்தியும் அவரது குடும்பம் மற்றும் இத்தாலிய நாட்டு தொழிலதிபர் கோட்ரோச்சி சம்பந்தப்பட்ட ஊழல்... இன்றைக்கு அந்த ஊழலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டனையில்லாமல் தப்பித்து விட்டார்கள். இன்று போப்போர்ஸ் பீரங்கி ஊழல் விசாரணை என்பது புதைக்குழிக்குள்  போய்விட்டது. மக்களும் அதை மறந்துவிட்டார்கள். 
                    அடுத்து  1991  - ஆம் ஆண்டில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியாட்சியின் போது இந்தியாவிற்கும் பாகிஸ்தான் நாட்டிற்கும் இடையே நடைபெற்ற 
கார்கில் போரில் மரணமடைந்த நமது நாட்டுப் படைவீரர்களை அடக்கம் செய்வதற்கு அன்றைய பாஜக அரசு சவப்பெட்டிகளை அமெரிக்காவிலிருந்து வரவழைத்தது. ( நம் நாட்டில் சவப்பெட்டி செய்வதற்கு ஆளில்லையாம் ) சாதாரணமாக ஒரு பெட்டிக்கு ஆகிற விலையை விட பலமடங்கு தொகையை கொடுத்து இறக்குமதி செய்தது. சவப்பெட்டியிலேயும் பல கோடி ஊழல். சவப்பெட்டியிலேயும், சுடுகாட்டுக்கூரையிலேயும் ஊழல் செய்கிற ஆட்சியாளர்களைத் தான் நமக்கு கிடைத்த ஆட்சியாளர்கள். அவங்க வெட்கப்படுகிறார்களோ இல்லையோ நாம் வெட்கப்படவேண்டும். இப்போது அந்த சவப்பெட்டி ஊழல் விசாரணை அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. மக்களும் அதை மறந்துவிட்டார்கள்.
                 அதே பாஜக கூட்டணியில் ஆட்சிக் காலத்தில் இன்னொரு மெகா ஊழல்.... அது ஆயுத பேர ஊழல்...  அந்த ஆட்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த சமதா கட்சியின் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டசின் ''கேர்ள் பிரெண்ட்'' ( GIRL FRIEND ) ஜெயா ஜெட்லி என்ற அம்மையார் பெர்னாண்டசின் படுக்கையறையில் ஆயுத வியாபாரியிடம் கட்டுக்கட்டாக பணம் பெற்றதை நாமெல்லோரும் தொலைக்காட்சியில் பார்த்தோம்.  அந்த ஊழல் விசாரணையும் காற்றோட போயாச்சி... மக்களும் அதையும் மறந்துவிட்டார்கள்...
                  இப்போது மன்மோகன் சிங் அலங்கோல ஆட்சியில் நடைபெறும் ஊழல் அலங்கார அணிவகுப்பில் இன்னொன்றும் புறப்பட்டு கிளம்பியுள்ளது.  இது இந்திய இராணுவத்தில் இன்னொரு புதுவகையான ஊழல். இது இராணுவ  அணிவகுப்பில்  வைக்கப்பட்ட கண்ணிவெடி போன்றது. இதற்காக தேசமே தலை குனிகிறது.
                  இராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனப் பிரதிநிதி தனக்கு ரூ. 14 கோடி இலஞ்சம் தர முன் வந்ததாக இந்திய இராணுவத் தலைமைத் தளபதியே வெளிப்படையாக பத்திரிகை ஒன்றிற்கு  அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளதைக் கண்டு நாடே அதிர்ந்துள்ளது. 
                இராணுவம் நிர்ணயித்துள்ள தரத்தை விட குறைவான தரத்தில் உள்ள 600 வாகனங்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்தால் ரூ. 14 கோடியைத் தருவதாக அந்த குறிப்பிட்ட நபர் தன்னிடம் தெரிவித்ததாகவும்,   இராணுவத் தலைமைத் தளபதியிடமே ஒரு நபர் வந்து இலஞ்சம் அளிப்பது தொடர்பாக பேச்சு நடத்துகிறார் என்றால்  அவருக்கு எந்த அளவுக்கு துணிச்சல் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் தனது  பேட்டியில் இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் வி. கே. சிங் தெரிவித்திருக்கிறார்.  இதற்கு முன்பிருந்தவர்கள் இப்படித்தான் அவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டார்கள் என்றும், தனக்குப் பிறகு வருபவர்களும்  பணம் பெற்றுக் கொள்வார்கள் என்றும் அந்த நபர் தன்னிடம் தெரிவித்ததாகவும்  ஜெனரல் வி. கே. சிங் குறிப்பிட்டிருக்கிறார்.
                இது மட்டுமல்ல இன்னொரு அதிர்ச்சியான தகவலையும் கூறியிருந்தார். இலஞ்சம் கொடுக்க முன்வந்த இந்த விஷயத்தை 2010 - ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே மத்திய பாதுகாப்பு அமைச்சருக்கு சொல்லிவிட்டேன் என்ற தகவலையும் வெளியிட்டிருந்தார். 
              நமக்கு என்ன கேள்வி எழுகிறது என்றால்...? 
           1 . இத்தனை மாதங்களாக பாதுகாப்பு அமைச்சரோ அல்லது மத்திய அரசோ இலஞ்சம் கொடுக்க வந்த நபர் மீது ஏன் விசாரணை நடத்த உத்திரவிடவில்லை...? 
      2 . தளபதி  இந்த தகவலை என்னிடம் சொல்லும் போது அதைக்கேட்டு அதிர்ந்து போனேன்... உறைந்து போனேன்... என்றெல்லாம் சொல்லும் பாதுகாப்பு அமைச்சர் நியாயமாக - உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கியிருக்க வேண்டாமா...?   
          3   . இத்தனை மாதங்கள் கழித்து இப்போது இந்த விஷயத்தை வெளியிட்ட தலைமைத் தளபதி ஏன் முன்பே வெளியிடவில்லை...?  தனது வயது பிரச்சனையில் அரசு தனக்கு சாதகமாக நடந்துகொள்ளவில்லை என்பதால் இப்போது இந்த விஷயத்தை வெளியாக்கிவிட்டாரோ..?
            4 .  பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட ராணுவ அதிகாரி லெப். ஜெனரல் தேஜீந்தர் சிங் தான் தனக்கு 14 கோடி ரூபாய் இலஞ்சம் கொடுக்க வந்தவர் என்று அப்போதே தெரிந்திருந்தும் மத்திய அரசும், பாதுக்காப்புத்துறை அமைச்சரும், தலைமைத் தளபதியும் இன்று வரை அவர் மீது விசாரணையோ அல்லது நடவடிக்கையோ எடுக்காததேன்...? 
            இப்படியெல்லாம் கேள்விகள் மக்களுக்கு எழுகின்றன. மத்திய அரசு தான் பதில் சொல்லவேண்டும்.