மன்மோகன் சிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மன்மோகன் சிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 ஜூலை, 2014

பிசாசு போய், பேய் வந்தது... டும்...டும்...டும்...!

                
                பத்து நாட்களுக்கு முன் புத்தம்புது பிரதமர் மோடி தலைமையிலான பிஜேபி அரசின் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ‘இப்படியே போனால், மன்மோகன் சிங் கடந்த இருபது ஆண்டுகளில் சாதிக்க முடியாததை... இரண்டே ஆண்டில் நரேந்திர மோடி சாதித்து விடுவார் என்றே தோன்றுகிறது. அட, இந்தியாவை வெளிநாட்டுக்காரர்களிடம் மொத்தமாக விலை பேசுவதைத்தான் சொல்கிறேன்' என்று எழுதியிருந்தேன்.
            அந்நிய முதலீட்டு மோகத்தில் திளைத்துக் கொண்டிருந்த மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் அரசுகூட இத்தனை வேகமெடுக்கவில்லை. பாதுகாப்புத்துறை, காப்பீட்டுத் துறை, ரயில்வே துறை என்று அனைத்திலும் அதிரடியாக அந்நிய முதலீட்டை நோக்கி மோடி அரசு, அசுர வேகமெடுத்திருப்பதைத்தான் அதில் சுட்டிக்காட்டியிருந்தேன்.
‘தொழில்வளர்ச்சி' என்கிற பெயரில் விவசாயத்துக்கு ஒட்டுமொத்தமாக வேட்டு வைக்கும் வேலையை மன்மோகன் சிங் ஆரம்பித்து வைத்தார், தற்போது அதை படுவேகமாக முடித்து வைக்கும் வேலை மோடி சிரமேற்கொண்டுவிட்டார் என்பதைத்தான் அதில் சுட்டிக் காட்டியிருந்தேன்.
           இதற்கு பின்னூட்டம் போட்ட நண்பர்களில் சிலர், நான் என்னவோ மோடிக்கு எதிரி போலவும், 'வளர்ச்சி'க்கு எதிரி போலவும் சித்தரித்தார்கள். சிலரோ... மோடி இப்போதுதானே வந்திருக்கிறார் என்று வக்காலத்தும் வாங்கியிருந்தார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம், 'வந்த வேகத்திலேயே பன்னாட்டு மற்றும் இந்நாட்டு முதலாளிகளின் உத்தரவுகளை நிறைவேற்றி முடித்துவிட வேண்டும்' என்று மோடி காட்டி வரும் வேகம் துளிகூட புரியவில்லையா... அல்லது புரிந்து கொள்ள விரும்பவில்லையா என்று எனக்குப் புரியவில்லை.
                  நண்பர்களே... நான் எந்த சார்பும் இல்லாமல், இயற்கை சார்பு, உயிரின சார்பு ஆகிய நிலைகளை மட்டுமே எடுத்துக் கொண்டுதான் இதையெல்லாம் எழுதுகிறேன் என்பதை முதலில் தங்களுக்குத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.
         எனக்கு காவி, கதர், கறுப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை என்று எந்தக் கலரும் இல்லை. நான்... பச்சை, மஞ்ச, ஒயிட், ரோஸ், சிவப்பு, பிங்க இப்படி எந்தத் தமிழனும் இல்லை. இந்த பூமியில் வசிக்கும் ஏதோ ஒரு ஜந்து என்பதோடு முடித்துக் கொள்ளுங்கள்.
          இதை எதற்காக வலிந்து சொல்கிறேன் என்றால், சொல்கிற விஷயத்தில் இருக்கும் உண்மையை மட்டுமே பாருங்கள். இவனுடைய பின்னணி என்ன... இவன் எதற்காக இதைச் சொல்கிறான்... இவன் இந்தக் கலர் ஆளாக இருப்பானோ... என்றெல்லாம் மூளையைத் திருப்பி சிந்திக்க ஆரம்பித்து, முக்கியமாக சிந்திக்க வேண்டிய விஷயத்தை நீங்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.
சரி விஷயத்துக்கு வருகிறேன்.
            தன்னுடைய ஆட்சிக்காலத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு எதிராக ஆயிரம் அநியாயங்களை செய்திருந்தாலும், நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்தம் என்கிற ஒன்றின் மூலமாக... ஓரளவுக்கு விவசாயிகளின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைப்பதை உறுதிப்படுத்தவே செய்தார் மன்மோகன் சிங்.
            'விவசாய நிலங்களை தொழிற்சாலைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக கையகப்படுத்தும்போது, கிராமப்புறங்களில் சந்தை விலையில் 4 மடங்கும்... நகர்ப்புறங்களில் 2 மடங்கும் விலையாகக் கொடுக்கப்பட வேண்டும்' என்பதுதான் அந்த உத்தரவு. 'இதை உடைத்தே தீருவது' என்று பன்னாட்டு மற்றும் இந்நாட்டு பெரும் தொழிலதிபர் கூட்டம் கங்கணம் கட்டிக்கொண்டு அப்போதே திரிந்தது. ஆனால், விவசாயிகளின் ஓட்டு வங்கி மீதான அன்பு காரணமாக, தொழிலதிபர்களின் நெருக்கடிக்கு பணியாமல் போக்குக் காட்டினார் மன்மோகன் சிங்.
             தற்போது நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக வந்தமர்ந்திருக்கும் நிதின் கட்கரி, மூச்சுக்கு முந்நூறு தடவை இந்த சட்டத்தை திருத்துவோம்... என்றே பேசிக் கொண்டிருக்கிறார். அதாவது, இதில் விவசாயிகளுக்கு சாதகமாக இருக்கும் அம்சங்களை எல்லாம் நீக்கிவிட்டு, பன்னாட்டு... இந்நாட்டு முதலாளிகளுக்கு ஆதரவான திருத்தங்களைச் செய்வதுதான் அவருடைய ஒரே குறிக்கோள். இதற்கான வேலைகளில் படுமும்முரமாக இருக்கிறார் நிதின் கட்கரி.
          இதுவாவது, விவசாயிகளின் வாழ்க்கையைத்தான் அழிக்கும். ஆனால், இந்திய விவசாயத்தையே அழிக்கக் கூடிய வேலைக்கு இன்றைய தினம் அனுமதியை அள்ளி வழங்கிவிட்டது 'வளர்ச்சி நாயகன்' நரேந்திர மோடியின் அரசு.
             ஆம், பி.டி எனும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் பரிசோதனைக்கு இத்தனை காலமாக நீடித்த தடைகளையெல்லாம் மீறி, தற்போது 15 விதமான உணவுப் பயிர்களில் இந்தப் பரிசோதனையைச் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
              உணவுப் பயிரில்லாத பருத்தியில் மட்டுமே இதுநாள் வரை இந்தியாவில் பி.டி.ரகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ரகத்தை குஜராத் மாநிலத்தில்தான் அதிகம் விளைவிக்கிறார்கள். இந்த பருத்தியைப் போட்டால், பொன்னே விளையும் என்றெல்லாம் புளுகிப் புளுகித்தான் விவசாயிகளின் தலையில் கட்டிக் கொண்டிருக்கிறது அமெரிக்க நிறுவனமான மான்சான்டோ. இதற்கு அந்த மாநிலத்தை ஆண்ட மோடியும் ஏக சப்போர்ட். இதேபோலத்தான் இந்தியா முழுக்கவே பல்வேறு மாநில அரசுகளும் ஆதரவளித்துக் கொண்டுள்ளன. ஆனால், இந்த பி.டி பருத்தி பல் இளிக்க ஆரம்பித்துவிட்ட சங்கதி குஜராத்திலிருந்தே சில மாதங்களுக்கு முன் வெடித்து வெளிர ஆரம்பித்தது. பி.டி பயிருக்கு ஜால்ரா தட்டிக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகளால்கூட இதை மறைக்க முடியவில்லை. மீடியாக்களில் இந்த விஷயம் வெளிச்சம் போடப்பட்டது.
            இந்நிலையில், அரிசி, கத்திரிக்காய், கடுகு உள்பட 18 விதமான உணவுப் பயிர்களுக்கு அனுமதியை வழங்கியிருக்கிறது மோடி அரசு. பருத்தியாவது, பஞ்சாக மாறி ஆடையாக வந்து தோலில்தான் அமரும். ஆனால், உணவுப் பயிர்கள்? இதுகாலம் வரை இங்கே உரம், பூச்சிக்கொல்லி என்று தெளிக்கப்பட்ட ரசாயனங்களில் விளைந்ததைத் தின்றதற்கே... புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் இந்த மனிதகுலம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில், உணவுப்பயிர்களின் விதைக்குள்ளேயே பூச்சிகளுக்கு எதிரான விஷ மரபணுவைப் புகுத்தும் தொழில்நுட்பத்தில் விளைந்த மரபணுமாற்று விதைகளில் விளையும் உணவுப் பயிர்கள் வந்தால்...  நாம் என்னென்ன கதிக்கு ஆளாகப் போகிறோமோ?!
              இந்த பயத்தால்தான் ஐரோப்பிய நாடுகள் பலவும் இந்த மரபணு மாற்று உணவுப் பயிர் உற்பத்திக்கு தங்கள் நாடுகளில் தடைவிதித்துள்ளன என்பதை மறந்துவிட் வேண்டாம்.
'கேட்டால்... கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசு போட்டு வைத்திருந்ததைத்தான் நாங்கள் அமல்படுத்தியிருக்கிறோம்' என்று ரயில் கட்டண உயர்வு, இந்தித் திணிப்பு போன்ற விவகாரங்களில் பல்டி அடித்தது போலவே இதிலும் மோடி பல்டி அடிப்பார். கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசுதான் மரபணு மாற்று உணவுப் பயிர்களுக்கு அடிபோட்டு வைத்தது உண்மைதான். ஆனால், சூழல் ஆதரவாளர்கள், இயற்கை விவசாயிகளின் எதிர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுகளை அடுத்து காங்கிரஸ் அரசு கொஞ்சம் அடங்கியே இருந்தது. 'இந்தியாவில் போதுமான பாதுகாப்புகளை உறுதிப்படுத்திக் கொண்டுதான் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அனுமதிக்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் கறாராகக் கூறியிருக்கிறது.
             இதுமட்டுமா, கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விவசாயக் குழு கூட, 'இந்தியாவில் மரபணு மாற்றுப் பயிர்கள் தேவையே இல்லை. இதை பரிசோதிப்பதற்கு போதுமான ஆய்வகங்களோ... ஆய்வாளர்களோ இங்கில்லை' என்றே அறிக்கை கொடுத்திருக்கிறது.
           ஆகக்கூடி, ஒரு எமனை இழுத்து வருவதற்குத்தான் காங்கிரஸ் அரசு கடந்த காலத்தில் அத்தனை பிரயத்தனம் செய்தது. 'காங்கிரஸ் செய்த தவறுகளைச் செய்ய மாட்டோம். அதற்கு தீர்வுகளைக் காண்போம்' என்று சூளுரைத்த மோடி, பிறகு எதற்காக காங்கிஸ் அரசு செய்த அதே தில்லுமுல்லு திருகுதாளங்களைச் செய்ய வேண்டும்?
            உண்மையில் கதர் கால அநியாயங்களைத் துடைக்க வேண்டும் என நினைத்தால், ஓயாமல் இந்திய பாரம்பர்யம் பற்றி வாய்கிழிய பேசிக் கொண்டிருக்கும் பிஜேபியும், அதன் பிரதமர் மோடியும் என்ன செய்திருக்க வேண்டும். இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்துக்கு புத்துயிர் ஊட்டியிருக்க வேண்டும். நம்முடைய பாரம்பரிய விதைகளின் மூலமே பன்னாட்டு வீரிய விதைகளை மிஞ்சிய மகசூலை அள்ளும் விவசாயிகள் இப்போது பெருகிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய நாட்டு மாடுகள் மூலமாகவே போதுமான இயற்கை உரத்தைப் பெற முடியும் என்பதை நிருபித்துக் கொண்டுள்ளனர். இந்த விவசாயிகளையெல்லாம் பார்த்து பாடம்படித்து, எங்களுக்கு அந்நிய தொழில்நுட்பமான மரபணு மாற்று விதைகள் தேவையில்லை என்று பாரம்பரிய விதைகளை உயர்த்திப் பிடித்திருக்க வேண்டும். பன்னாட்டு மாடுகள் தேவையில்லை, உள்நாட்டு மாடுகளே போதும் என்று அவற்றை பெருக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லையே!
            கேட்டால், '120 கோடி இந்தியர்களுக்கு உணவு புகட்ட, பாரம்பரிய விவசாயத்தால் முடியாது' என்று பசுமைப் புரட்சியின் அப்பாக்களும் அம்மாக்களும் முப்பது நாற்பது ஆண்டுகளாக எடுத்துக் கொண்டிருக்கும் அதே வாந்தியை மறுபடி மறுபடி எடுக்கிறார்கள், விஞ்ஞானிகள் என்கிற பெயரில் திரியும் அஞ்ஞானிகள் சிலர்.
           இங்கே திருமணங்களிலும், கேளிக்கை நிகழ்வுகளிலும், நட்சத்திர உணவு விடுதிகளிலும், லட்சக்கணக்கான உணவு விடுதிகளிலும் தினம் தினம் சமைக்கப்பட்டு, உண்ணாமல் வீணடிக்கப்படும் உணவைக் கணக்கிட்டால், இன்னும் ஒன்பது இந்தியாவுக்கு உணவிட முடியும். இப்படி வீணடிப்பதைக் கட்டுப்படுத்தினால், வெட்டிச் செலவுகளும் மட்டுப்படும். 
           இதையெல்லாம் விட்டுவிட்டு, இப்படி மன்மோகன் சிங் செய்து வந்த அதே விஷயங்களை கையில் எடுத்து, அமெரிக்காவின் உத்தரவுகளை சிரமேற்று நிறைவேற்றுவதற்கு எதற்காக மோடி பிரதமராகியிருக்க வேண்டும். இதைவிட தெரிந்த பிசாசே மேல் என்று இருந்திருக்கலாமோ!
         இப்படி மன்மோகன் சிங் செய்து வந்த அதே விஷயங்களை கையில் எடுத்து, அமெரிக்காவின் உத்தரவுகளை சிரமேற்று நிறைவேற்றுவதற்கு எதற்காக மோடி பிரதமராகியிருக்க வேண்டும். இதைவிட தெரிந்த பிசாசே மேல் என்று இருந்திருக்கலாமோ!
வாலு போய் கதி வந்தது...டும் டும் டும்...
பிசாசு போய், பேய் வந்தது... டும் டும் டும்!

பின்குறிப்பு:  
இன்னுமொரு இடியையும் இறக்கியிருக்கிறது மோடி அரசு.
          'அரிசி, கோதுமை போன்ற தானியங்களுக்கு இதுநாள் வரை ஊக்கத் தொகையை தந்து கொண்டிருந்த மாநில அரசுகள் இனி கொடுக்கக் கூடாது' என்பதுதான் அந்த உத்தரவு.
        அரிசி, கோதுமைக்கு... மத்திய அரசின் விலையுடன், மாநில அரசின் ஊக்கத்தொகை கொடுக்கப்படுவதற்குக் காரணமே... நாட்டுக்கே உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றத்தான். இதுவும்கூட சொற்பமே. இதையும்கூட கொடுக்கக் கூடாது என்று கிடுக்கிப்பிடி போட்டுவிட்டார் மோடி.
            'இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளை ஒரேயடியாக ஒழித்துவிட்டு, பன்னாட்டு மற்றும் இந்நாட்டு முதலாளிகளிடம் நிலங்களை மொத்தமாக அடகு வை' என்பது உலக வர்த்தக நிறுவனத்தின் மறைமுக உத்தரவு. இதை கடைசி வரை மன்மோகன் சிங் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், அறுதிப் பெரும்பான்மையுடன் இதைக் கையில் எடுத்துவிட்டார் மோடி.
-ஜூனியர் கோவணாண்டி         
நன்றி : ''பசுமை விகடன்''
                  தேர்தலுக்கு முன்பு மோடியை ஆதரித்த விகடன் உள்ளிட்ட பத்திரிகைகள் இப்போது தான் உண்மையை உணர்ந்து எழுதுகிறார்கள்.            

புதன், 12 பிப்ரவரி, 2014

முதலைக்கண்ணீர் வடிக்கும் மன்மோகன் சிங்...!

                           கடந்த 5-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆறு நாட்களாக மக்களவையும், மாநிலங்களவையும் நடத்த முடியாமல் முடக்கப்பட்டிருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. கடந்த 10 ஆண்டுகளாகவே நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்றால் இப்படித் தான் நடக்கிறது. நாடாளுமன்றம் ஒரு நாள் முழுதும் முழுமையாக தன்னுடைய அலுவல்களை கவனித்ததாக சமீபக் காலமாக வரலாறு இல்லை. எதிர்கட்சியான பாரதீய ஜனதாக்கட்சிவும், ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சி மறைமுகமாகவும், இந்த இரு கட்சிகளும் இரகசிய உடன்பாடு செய்துகொண்டு பாராளுமன்றத்தை முடக்கும் வெட்கக்கேடான வேலைகளை ''வெற்றிகரமாக'' செய்து வருவதை நாடு நன்கறியும்.
                 ஆனால் இந்த முறை நாடு சற்று வித்தியாசமாக நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நேரத்தில், கடைசி கூட்டத்தொடரான இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியுடன் சேர்ந்துகொண்டு ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும்  நேரடியாக களத்தில் இறங்கி இரு அவைகளையும் நடக்கவிடாமல் முடக்குகிறார்கள் என்பதும் வெட்கக்கேடானது. ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரிப்பதை எதிர்த்து - ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தை விரும்பக்கூடிய காங்கிரஸ் கட்சி எம்.பி-க்களே அரசின் செயலை எதிர்த்து அரசிற்கு எதிராக பாராளுமன்றத்திற்குள்ளேயே போராட்டம் நடத்தி கடந்த ஆறு நாட்களாக பாராளுமன்ற அலுவல்களை நடத்தவிடாமல் முடக்கிவருகிறார்கள். 
           அதேப்போல் இன்றும் பாராளுமன்றத்தில் இடைக்கால இரயில்வே பட்ஜெட்டை இரயில்வே அமைச்சர் தாக்கல் செய்து வாசிக்கும் போது அவரை வாசிக்க விடாமல் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் இடையூறு செய்திருக்கிறார்கள். பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீதும், பாராளுமன்ற நடவடிக்கைகளின் மீதும் மக்கள் நம்பிக்கை இழக்கும் வண்ணம் பாரதீய ஜனதாக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கும் செயலில் ஈடுபடுவது என்பது இந்த நாட்டின் சாபக்கேடாகும்.
              இப்படியெல்லாம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாராளுமன்ற முடக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், இது வரை அதைத் தடுப்பதற்கு எந்தவித முயற்சியையும் எடுக்காமல் வாய் மூடி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த பிரதமர் மன்மோகன் சிங், இன்று தான் தனது வாயைத் திறந்திருக்கிறார். 
             நாடாளுமன்றத்தில் நடக்கும் காட்சிகளை பார்க்கும்போது தமது இதயத்தில் இருந்து ரத்தம் வழிந்தோடுவதாக பிரதமர் கூறியிருப்பதை பார்த்தால், இத்தனை ஆண்டுகளாக பிரதமர் ''கும்பகர்ணனைப்'' போல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாரோ என்ற சந்தேகம் வருகிறது. இன்று பிரதமரின் இதயத்திலிருந்து இரத்தம் வழிதொடுவது, இரயில்வே பட்ஜெட்டை இடையூறு செய்கிறார்கள் என்பதற்காக அல்ல. இன்னும் அமெரிக்காவின் ''ஆணைப்படி'' நிறைவேற்றப்படவேண்டிய நிலுவையில் உள்ள மசோதாக்களை பாராளுமன்ற முடக்கத்தினால் முடியாமல் போய்விடுமோ...? - தன் எஜமானின் நிராசையாக போய்விடுமோ...? என்ற ஏமாற்றத்தில் வந்த ''வேதனை குமுறல்'' தான் அது. மன்மோகன் சிங் விடுவது என்பது ''முதலைக் கண்ணீர்'' தான் என்பது நமக்கு தெரியாதா என்ன...?

புதன், 5 பிப்ரவரி, 2014

மன்மோகன் சிங் - ராகுல் காந்தி - கருணாநிதி - இவர்களின் தேர்தல் பயம்...!

 தீக்கதிர் நாளிதழுக்காக நான் வரைந்த கார்ட்டூன்...! எப்படி இருக்கு...? உங்கள் கருத்தோ அல்லது கவிதையோ எழுதுங்கள்...!

செவ்வாய், 7 ஜனவரி, 2014

மிஸ்டர் மன்மோகன்... தலைவலிக்கு மாற்று திருகுவலி அல்ல...!

  கட்டுரையாளர் : தோழர். ஜி. ராமகிருஷ்ணன்     
                                 தமிழ் மாநிலச்செயலாளர்,                  
                                 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                        
               பிரதமர் மன்மோகன் சிங் பொதுவாக பத்திரிகையாளர்களை சந்திப்பதே இல்லை. கடந்த பத்தாண்டுகால ஆட்சிக்காலத்தில் மூன்றுமுறை மட்டுமே பத்திரிகையாளர்களை அழைத்து பேசியுள்ளார்.                 அவருடைய பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் பிரதமராக மாட்டேன் என்று கூறியுள்ளதோடு அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு ஏற்பட்டதையே தமது பதவிக்காலத்தின் முக்கியமான தருணமாகவும், சாதனையாகவும் கருதுகிறேன் என்று திருவாய் மலர்ந்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி-1 அரசுக்கு இடதுசாரிக்கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்து வந்தன. குறைந்தபட்ச செயல்திட்டத்திற்கு மாறாக அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டில் மன்மோகன் சிங் அரசு கையெழுத்திட முயன்றதால் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிக்கட்சிகள் வாபஸ்பெற்றன.
               நாட்டின் இறையாண்மைக்கும், சுயாதிபத்தியத்திற்கும் பேராபத்தை இந்த உடன்பாடு விளைவிக்கும் என்பதாலேயே இடதுசாரிக் கட்சிகள் இந்த முடிவை எடுத்தன. இது மிகவும் சரியான ஒன்று என்பதை காலம் நிரூபித்துள்ளது.அமெரிக்க நிறுவனங்கள் நிறுவும் அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் குறைந்தபட்ச இழப்பீடு வழங்குவதற்கான ஷரத்துகளைக் கூட உடன்பாட்டிலிருந்து நீக்க வேண்டுமென அமெரிக்க அரசு நிர்ப்பந்தம் செய்கிறது.
                      மன்மோகன் சிங் அரசும் இதற்கு வளைந்து கொடுத்தே வந்துள்ளது. இந்த உடன்பாடு ஏற்பட்ட பிறகுதான் நாட்டில் சமூக, பொருளாதார தொழில்நுட்பத்துறையில் வளர்ச்சி அதிகரித்தது என்று மன்மோகன்சிங் கூறியுள்ளார். ஆனால் உண்மையில் இந்தியாவின் சுயசார்புக்கு பல்வேறு வழிகளில் ஆபத்து ஏற்பட்டது இந்த உடன்பாடு எட்டப்பட்டபிறகு தான். குறிப்பாக சில்லரை வர்த்தகத்தில் கூட அந்நியரை அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
               அதுமட்டுமின்றி காப்பீட்டுத்துறை, வங்கி போன்ற கேந்திரமான துறைகளிலும் அந்நிய முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கமுதலாளிகள் வெளிப்படையாகவே மிரட்டுகின்றனர். நாட்டின் சமூகப் பொருளாதார தொழில்நுட்பத்துறைக்கு அமெரிக்கா எந்தவகையில் உதவியுள்ளது என்று விளக்கவில்லை பிரதமர். விளக்குவதற்கு ஒன்றுமில்லை என்பதுதான் இதற்கு காரணம்
       இடதுசாரிக்கட்சிகள் ஆதரவுடன் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்றவை நிறைவேற்றப்பட்டன. இன்றைக்கு இவற்றைத்தான் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு தன்னுடைய சாதனையாக கூறிக்கொள்கிறது.
             சுதந்திர இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர் மட்ட ஊழல்கள் மலிந்த ஆட்சியாக ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்தது. தமது அரசின் மீது ஊழல் புகார் கூறப்படுவதாகவும் 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த போதும் 2009 தேர்தலில் மீண்டும் மக்கள் வாக்களித்து ஐமுகூ ஆட்சி அமைந்தது என்றும் பிரதமர் கூறியுள்ளார். அலைக்கற்றை வரிசை ஊழலுக்கான அடித்தளம் முந்தைய பாஜக ஆட்சிக் காலத்திலேயே போடப்பட்டுவிட் டது.
             எனினும், 2009ம் ஆண்டிற்கு பிறகு தான் ஐமுகூ அரசின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து ஊர்வலம் போல அணிவகுத்தன என்பதை மறந்து விடமுடியாது. குறிப்பாக, மத்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை தலைமை அதிகாரி பல்வேறு முறைகேடுகளை வெளிக்கொணர்ந்தார்.
                 நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் பெருமளவு ஊழல் நடந்ததாக தகவல்கள் வெளிவந்தன. இதில், பிரதமர் அலுவலகமே நேரடியாக குற்றம் சாட்டப்பட்டது. ஐ.மு.கூ. - 2 ஆட்சி காலத்தில்தான் இயற்கை வளங்கள் பெருமளவு சூறையாடப்பட்டன என்பது நிதர்சனமான உண்மை. இந்த கொள்ளையை தொடரவேண்டும் என்பதற்காகவே பன்னாட்டு மற்றும் உள் நாட்டு முதலாளிகள் தாராளமயமாக்கல் கொள்கையைப் பின்பற்றும் மோடி பிரத மராக வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்து வருகின்றனர்.
           நரசிம்மராவ் பிரதமராகவும், இப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் நிதியமைச்சராகவும் இருந்த காலத்தில்தான் தாராளமயமாக்கல் கொள்கை எனும் நாசகர பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து வந்த ஆட்சிகள் இதே பாதையைத்தான் பின்பற்றின. இன்றைக்கு நாடு அனுபவித்துக் கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை போன்ற பிரச்சனைகளுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்குவது இந்தக் கொள்கை கள்தான்.
              ஆனால், பிரதமர் தனது பேட்டியில் இந்த கொள்கைகள் தொடரும் என்று கூறியுள்ளார். இதிலிருந்தே ஆட்சியாளர்கள் கடந்த கால அனுபவத்திலிருந்து எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. பிரதமர் பதவிக்கு தகுதியானவர் ராகுல்காந்தி என்றும் மன்மோகன்சிங் முன்மொழிந்துள்ளார். அவர் பேட்டியளித்ததன் நோக்கமே இதை கூறத்தான்.
                           இந்திய நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு மாறாக, பிரதமர் வேட்பாளர் மோடி என்று பாஜக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களுக்கு போட்டியாக காங்கிரஸ் கட்சியும் புறப்பட்டிருப்பதையே இது காட்டுகிறது. மறுபுறத்தில், பிரதமர் வேட்பாளர் என்று பாஜகவால் பரிவட்டம் கட்டப்பட்டுள்ள நரேந்திரமோடி, மன்மோகன்சிங் பேட்டி குறித்து கருத்து தெரிவிக்கையில், நாட்டில் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்.
                     இதற்கு காரணம் பாஜகவும் ஆதரிக்கும் தாராளமயமாக்கல் கொள்கைத்தான். இந்திய விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்துள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென இடதுசாரிக்கட்சி கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதை பற்றி வாய்திறக்க மோடி மறுக்கிறார். ஏனென்றால் பல்வேறு சந்தர்ப்பங்களில் விவசாயிகளுக்கு எதிரான கொள்கையை செயல்படுத்த காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு துணை நின்ற கட்சிதான் அது. பாஜக ஆட்சி க்கு வந்தாலும் இதே கொள்கைகளைத் தான் அவர்கள் தொடர்வார்கள்.
                அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட் டை நிறைவேற்ற கைதூக்கி ஆதரவு தெரிவித்த கட்சிதான் அது. இதை மறைக்கத்தான் கடந்த கால வரலாற்றுப் பெருமை என்று தங்களது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன் நிறுத்துகிறார் மோடி. ஒளரங்கசீப் ஆட்சிக்காலம் குறித்தெல்லாம் அவர் பேசுவது இதற்காகத்தான். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு விஷேச அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவை மறுபரிசீலனை செய்வோம் என்று கூறுவதன் மூலம் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை தீவிரப்படுத்தவே அந்தக் கட்சி முயல்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.காங்கிரசும், பாஜகவும் ஒன்றுக்கொன்று மாற்று அல்ல.
                தாராளமயமாக்கல் கொள்கையை தடம் மாறாமல் பின்பற்றுவதில் அவர்களுக்குள் அபூர்வ ஒற்றுமை உள்ளது. மோடி ஆட்சிக்கு வந்தால் பேரழிவு என்று மன்மோகன்சிங் கூறுகிறார். காங்கிரஸ் கட்சியால் பேரழிவு என்று மோடி கூறுகிறார். ஆனால், இந்த இரு கட்சிகளுமே நாட்டிற்கு பேரழிவை தரும் பாதையைத்தான் முன்நிறுத்துகின்றன. இந்த இரு பேரழிவு சக்திகளும் ஒருசேர முறியடிக்கப்பட வேண்டும். தலைவலிக்கு மாற்றாக திருகுவலியை ஏற்க முடியாது. காங்கிரசுக்கு மாற்றாக பாஜகவை ஏற்க முடியாது.
          இரு வலிகளுக்கும் நிவாரணம் தேடும் வகையில், மாற்று வழியை, மாற்றுக் கொள்கையை முன்நிறுத்துவதே தேசத்திற்கு இப்போதைய தேவையாகும். இந்த அடிப்படையில்தான் மதச்சார்பற்ற மாநிலக்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பெரும்பணியில் இடதுசாரிக்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
நன்றி:
 

வியாழன், 3 அக்டோபர், 2013

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா....?


                                                                                                                                                            
          குற்றவாளி என கருதப்படும் எம். பி., மற்றும் எம்.எல்.ஏ., -க்களின் பதவிப்பறிப்பை தடுக்கும் அவசரச்சட்டம் ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் அவசரமாக குடியரசுத்தலைவரின் தபால் பெட்டியில் போட்டுவிட்டு, அவசரமாக அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். அமெரிக்காவிலிருந்து திரும்பி வருவதற்குள் குடியரசுத்தலைவரும் அவசரமாக கையெழுத்திட்டு விடுவார் என்ற நம்பிக்கையில் தான் பிரதமரும் அவசரமாக கிளம்பிப்போனார். ஆனால் மாநிலங்களவையில் இதற்கான மசோதா ஒன்று நிலுவையில் உள்ள போது, இப்படிப்பட்ட அவசரச்சட்டத்தின் மீது பிரதமருக்கு அப்படியென்ன அவசரம் இருக்கிறது...? அப்படி ஏன் அவசரம் காட்டுகிறார் என்பதை புரிந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமரின் இந்த அவசர செயலை மிகக் கடுமையாக விமர்சித்தனர். பிரதமரின் இந்த அவசர செயல் என்பது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது என்று குற்றஞ்சாட்டினர்.
          இந்த சூழ்நிலையில் தான், பத்திரிக்கையாளர் கூட்டத்திற்கு அழைப்பில்லாமலேயே அவசரமாக ஆஜரான காங்கிரஸ் கட்சியின் ''குட்டித்தலைவர்'' ராகுல் காந்தி ''இந்த அவசரச்சட்டம்  முட்டாள்தனமானது. அதை கிழித்து குப்பையில் தூக்கி எறியவேண்டும்.'' என்று கடுமையாக சாடினார். ராகுல் காந்திக்கு உண்மையிலேயே சட்டத்தின் மீது எரிச்சலா... அல்லது பிரதமரின் மீது எரிச்சலா...'' என்பதை அவரது அம்மா தான் அறிவார். அதனால் தான் அவரது அம்மா சோனியா காந்தி உடனடியாக அமெரிக்காவில் இருந்த மன்மோகன் சிங்கிடம் தன் மகன் செய்த ''அவசரக்குடுக்கை'' தனத்திற்கு சமாதானப்படுத்தினார். மன்மோகன் சிங்கிற்கும் அமெரிக்காவில் செய்யவேண்டிய பல்வேறு வேலைகளைவிட ராகுல் காந்தியின் பேச்சு பெரும் சுமையாகப் போய்விட்டது.
           நாட்டில் எல்லோருடைய எதிர்ப்பார்ப்பும் மன்மோகன் சிங் பதவி விலகிவிடுவார் என்பதில் தான் இருந்தது. என்னென்றால் மன்மோகன் சிங் ரொம்ப ரோஷக்காரர். ராகுல் காந்தியின் பேச்சால் தன்னுடைய மரியாதை அமெரிக்காவிலேயே போய்விட்டது. அதனால் நான் பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று சொல்லிவிடுவார் என்று எல்லோரும் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் அந்த ரோஷக்காரர் ராகுல் காந்தியின் நாடகத்திற்கு பதில் நாடகம் போடாமல், அவசரமாக குடியரசுத்தலைவரை சந்தித்தார். அவசரமாக சட்டவல்லுனர்களை சந்தித்தார். அவசரமாக மந்திரிசபையை கூட்டினார். அவசர அவசரமாக ''அவசரச்சட்டத்தை'' திரும்பப்பெறுவதாக நேற்று முடிவெடுத்துவிட்டார்.
            இத்தனை நிகழ்வுகளிலும் ஒரு சந்தேகம் என்னன்னா....? இந்த அவசரச்சட்டம் குடியரசுத்தலைவரிடம் அனுப்புவதற்கு முன்பு மந்திரி சபை கூட்டத்திலும், காங்கிரஸ் கட்சியின் தலைமையிடத்திலும் கலந்தாலோசிக்கப்பட்டே அனுப்பப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் ''குட்டித்தலைவர்'' ராகுல் காந்தியிடமும் ஆலோசனை செய்யாமலா இருந்திருப்பார்கள். இந்த அவசரச்சட்டத்தின் மீது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து எதிர்ப்பு கிளம்பியவுடன், ஆளும்கட்சியின் ''குட்டித்தலைவராக'' அந்த எதிர்ப்பில் தானும் பங்கெடுத்துக்கொண்டு மக்கள் மத்தியில் தன்னை ஒரு ''கதாநாயகனாக'' காட்டிக்கொள்ள ராகுல் நடத்திய நாடகம் தான் இது என்பது மக்களுக்கு நன்றாக புரியும்.
             அவசரச்சட்டத்தை கிழித்து குப்பையில் போடவேண்டும் என்று பேசுவது என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பது கூட அறியாமல், தான் காட்டிய எதிர்ப்புக்குப்பின் அந்த அவசரச்சட்டம் திரும்பப்பெறப்பட்டதன்  மூலம் தான் ''கதாநாயகன்'' ரேஞ்சிக்கு உயர்ந்துவிட்டோம் என்று ராகுல் காந்தி சந்தொஷப்பட்டுக்கொண்டிருப்பார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா....?
            நாடு இன்னும் என்னென்னத்த எல்லாம் தாங்கவேண்டி வருமோ தெரியில... ஒரு பக்கம் மோடி... இன்னொரு பக்கம் ராகுல்... முடியில...!

சனி, 24 ஆகஸ்ட், 2013

நாட்டையே தொலைத்தவர்கள் கோப்புகளை தொலைத்துவிட்டார்கள் - சாதனை ஆட்சியாளர்கள்...!


                                                
சரித்திர சாதனை....!
                                                        
        
          சுதந்திர இந்தியாவில் இதுவரை 14 பிரதமர்கள் பதவி வகித்திருக்கிறார்கள். அவர்கள் யாருக்குமே இல்லாத பெருமைகள் இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மட்டுமே உண்டு. தனது ஒன்பது ஆண்டு பதவிக் காலத்தில், இதற்கு முன் எந்தப் பிரதமரின் ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு ஊழல்களும் முறைகேடுகளும் நடந்திருக்கின்றன என்று அவர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அதைவிடப் பெரிய சாதனை, ஒரு மிக முக்கியமான வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய 257 கோப்புகளை காணவில்லை, மாயமாக மறைந்து விட்டன என்று கிஞ்சித்தும் கூச்சமில்லாமல் சொல்லும் முதல் அரசும் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாகத்தான் இருக்கும்.
             நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பான 257 கோப்புகள் சொல்லி வைத்தாற்போல காணாமல் போவது என்பது எப்படி நடந்திருக்க முடியும்? மாயமாய் மறைந்துவிட்ட 257 கோப்புகளில், 157 கோப்புகள், நரசிம்மராவில் தொடங்கி அடல் பிகாரி வாஜ்பாய் வரையிலான நான்கு பிரதமர்கள் பதவியில் இருந்த 1993 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பானவை. ஏனைய 100 கோப்புகள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தவை. இதில் வேடிக்கை என்னவென்றால், 2006 முதல் 2009 வரை, சம்பந்தப்பட்ட துறை, நேரடியாக பிரதமர் மன்மோகன் சிங்கின் பொறுப்பில் இருந்தது என்பதுதான்.
           இந்தக் கோப்புகள் என்னென்ன பிரச்னைகள் தொடர்பானவை தெரியுமா? நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான விண்ணப்பங்கள், அந்த விண்ணப்பங்கள் பற்றிய விவரங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் என்ன காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன என்பது தொடர்பான குறிப்புகள், சுரங்க ஒதுக்கீட்டிற்காக என்னென்ன விதிமுறைகளும், வரைமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டன என்கிற விவரங்கள், ஒதுக்கீடு பெறப்பட்டதால் லாபமடைந்த நிறுவனங்களும் அவர்களது பின்னணியும், மாநில அரசு அல்லது மத்திய நிலக்கரி அமைச்சகத்தால் இன்னாருக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கோரும் பரிந்துரைகள் போன்றவைதான் காணாமல்போன கோப்புகளில் காணப்பட்ட விவரங்கள்.
           உதாரணத்திற்கு, காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டாலின் நிறுவனம் அளித்திருந்த தவறான தகவல்கள், இன்னொரு காங்கிரஸ் எம்.பி.யான விஜய் தாப்தாவின் கோரிக்கையைப் பரிசீலிக்கும்படி பணித்த மாநில, மத்திய அரசுகளின் பரிந்துரைகள் போன்றவையும் இந்த காணாமல்போன கோப்புகளில் காணப்பட்டவைதான்.
             ஆரம்பம் முதலே, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான சி.பி.ஐ.யின் விசாரணையை முடக்கவும், தடம் புரளச் செய்யவும் என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் அரசு செய்து வந்திருக்கிறது. இதனை உணர்ந்துதான் உச்ச நீதிமன்றம் தனது நேரடிக் கண்காணிப்பில் சி.பி.ஐ. இந்த விசாரணையைத் தொடர வேண்டும் என்று உத்தரவிட்டது.
             அப்படியும்கூட, சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்திற்கு அளித்த வழக்கு நிலவர வரைவு அறிக்கையை சட்ட அமைச்சரும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும் மாற்றியும் திருத்தியும், அந்த அறிக்கையை நீர்த்துப்போகச் செய்தனர் எனும்போது, இப்போது ஒட்டுமொத்தமாக கோப்புகளே காணாமல் போயிருப்பதாகக் கூறுவதில் வியப்பொன்றும் இல்லை.
               அது மத்திய அரசோ, மாநில அரசோ பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்திய நிர்வாக அமைப்பின் சிறப்பே, தேவைப்படுகிற எந்தவொரு கோப்பையும் 24 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து விடலாம், நகலெடுத்து விடலாம் என்பதுதான். ஒவ்வொரு கோப்பும் ஒன்றுக்கு நான்கு இடங்களில் பதிவாகும் விதத்தில் அமைந்ததுதான் இந்திய நிர்வாக அமைப்பு. ஆனால், அரசு கூறுகிறது, குறிப்பிட்ட 257 கோப்புகள் சம்பந்தப்பட்ட எல்லா தடயங்களும் மறைந்துவிட்டன என்று.
              கோப்புகளைக் கண்டுபிடித்துக் கொண்டு வாருங்கள் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் தேடுதல் குழு ஒன்று அமைத்தார்கள். அந்தக் குழுவின் பரிந்துரை என்ன தெரியுமா? விண்ணப்பித்தவர்களிடமிருந்து அவர்கள் கொடுத்த தகவல்களை மறுபடியும் கேட்டு வாங்கலாம் என்பது. குற்றவாளியிடம் காரணம்கூறச் சொல்லும் கதையாக அல்லவா இருக்கிறது இது!
              கோப்புகளைக் காணவில்லை என்றால் உடனே என்ன செய்ய வேண்டும்? அதைப் பாதுகாக்கத் தவறியவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதுதானே நியாயம்? கோப்புகளைத் தேடி எடுக்கக் குழுவை அமைத்திருக்கிறார்களே தவிர, அதற்குப் பொறுப்பான அதிகாரிகளைக் கைது செய்து விசாரணை நடத்தவில்லையே, ஏன்? இதிலிருந்தே எதையோ மறைக்கப் பார்க்கிறார்கள் என்று தெரிகிறது.
                 பிரதமர் உள்ளிட்ட முக்கியமான நபர்கள் மாட்டிக் கொள்வதைவிட கோப்புகளைத் தொலைத்ததற்கு உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தையும், எதையும் மறந்துவிடும் மக்கள் மன்றத்தின் விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்வது என்று முடிவெடுத்து விட்டார்களோ என்னவோ?
              மிக முக்கியமான கோப்புகளைக்கூட பத்திரமாகப் பாதுகாக்கத் தெரியாத அரசின் பாதுகாப்பில் 120 கோடி இந்தியர்களின் தலையெழுத்தும் வருங்காலமும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றம் நடந்தால் என்ன நடக்காமல் முடங்கினால்தான் என்ன?
நன்றி :




வியாழன், 15 ஆகஸ்ட், 2013

கூண்டுக்கிளியாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங்...!

 



    
      தனக்கென்று தனியாக சுதந்திரமே இல்லாமல் நம் நாட்டு பிரதமர் இன்று காலை சுதந்திரதினத்தை  கொண்டாடினார். முதல்ல மன்மோகன் சிங்கிற்கு சுதந்திரத்தை கொடுங்கப்பா.. பாவம்.. அவரால சுதந்திரமா  நடமாடவே முடியல... சுதந்திரமா கொடியேத்த முடியல... எங்கோ உயரமான இடத்துல - மக்களுக்கும் அவருக்கும் தொடர்பே இல்லாத இடத்துல கண்ணாடிக் கூண்டுக்குள்ள ''ஷோகேஸ்'' பொம்மை மாதிரியே நின்னுகிட்டு பேசறாரு... அப்பக்கூட அவரா அவர் விருப்பத்திற்கு சுதந்திரமா பேச முடியுதா... முடியலையே... அமெரிக்க எஜமா  சொல்லுற மாதிரியும், இத்தாலி அம்மா சொல்லுற மாதிரியும், இந்திய பெருமுதலாளிங்க சொல்லுற மாதிரியுமில்ல அவர் பேசவேண்டியிருக்கு... அடப்பாவமே... சாப்புடறது எப்படின்னு தான் தெரியல... இதத்தான் சாப்பிடணும்ன்னு மாதாமாதம் எழுதிக்கொடுத்துடுவாங்களோன்னு சந்தேகமாத்தான் இருக்குது... முதல்ல பிரதமர் கையில சுதந்திரத்தை கொடுங்கப்பா... பொது மக்களே நெருங்கமுடியாத பிரதமர்... இவர் பொதுமக்களுக்காக எப்படி சிந்திப்பார்.... பொதுமக்களுக்காக என்ன பேசுவார்... மக்களைப் பற்றி சிந்திக்காத பிரதமரின் சுதந்திரதின உரை....

சனி, 8 ஜூன், 2013

எங்க நாட்டு ''உலகம் சுற்றும் வாலிபனுங்க'' மன்மோகன் சிங்....!

கடந்த 2004 - ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 2013 - ஆம் ஆண்டு வரை நம்ப நாட்டு பிரதமர் மொத்தம் 67 நாடுகளுக்கு பிரயாணம் பண்ணியிருக்கிறாருங்க. இந்த 67 - ல  62 பயணத்திற்கு மட்டும் ரூ.642 கோடி ரூபாய் இந்திய அரசு செலவு செய்திருக்கிறதாம். இன்னும் 5 பயணத்திற்கான செலவு கணக்கிடப்பட்டு வருகிறதாம். அது எவ்வளவு இருக்குமோ....? மொத்தத்துல எங்க பிரதமரு உலகம் சுற்றும் வாலிபருங்கோய்...!

செவ்வாய், 28 மே, 2013

மன்மோகன் சிங் ஐ.பி.எல் - க்கு நன்றி சொல்லவேண்டும்...!


                                                                                                                                                      


                                                                                                                                                            

வியாழன், 16 மே, 2013

மக்களையே சந்திக்காமல் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பிரதமர் - ஜனநாயகத்தில் இப்படியும் ஒரு கோளாறு....!




              பிரதமர் என்பவர் மக்களவைத்தேர்தலில் போட்டியிட்டு மக்களை சந்தித்து வாக்குகளை பெற்று மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் அவருக்கு மக்களை பற்றிய சிந்தனையும், மக்களைப் பற்றிய அக்கறையும், இன்னும் சொல்லப்போனால் நாளை அடுத்தத் தேர்தலில் மக்களை சந்திக்க வேண்டுமே என்ற மக்களைப் பற்றிய அச்சமும் இருக்கும். பிரதமரை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறைதான் உண்மையான ஜனநாயகம் ஆகும். அப்போது தான் பிரதமரின் திட்டங்களும், செயல்பாடுகளும் மக்களைச் சார்ந்ததாக இருக்கும்.
         ஆனால் நம் நாட்டு பிரதமரோ, மக்களை சந்திக்காமல் - மக்களின் தயவு இல்லாமல் - மக்களின் ஓட்டுக்களை பெறாமல், சட்டமன்ற உறுப்பினர்களால் - அதுவும் அவருக்கு சம்பந்தமில்லாத மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டு, ''நேர் வழியில்'' வராமல், ''பின்பக்க வழியில்'' வந்து பிரதமாராக பொறுப்பேற்று கொள்வதால், மக்களைப் பற்றிய உண்மையான சிந்தனையோ, அக்கறையோ அவருக்கு கிடையாது என்பது அவரது நடவடிக்கைகளிலிருந்தும், செயல்பாடுகளிலிருந்தும், அரசை நடத்தும் விதங்களிலிருந்தும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். இது தான் நம் ஜனநாயகத்தில் உள்ள கோளாறு.
         யார் இந்த நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர அவரை முன்மொழியும் அமெரிக்க ஏகாதிபத்தியமோ, இந்திய-வெளிநாட்டு பெருமுதலாளிகளோ அல்லது அவரை வழிமொழியும் சட்டமன்ற உறுப்பினர்களோ அல்ல என்பதை இந்திய மக்கள் புரிந்து கொள்ளும் காலம் வரும்.

சனி, 15 டிசம்பர், 2012

கோவணத்தையும் உருவப் போறாராம் மன்மோகன் சிங்... ஜாக்கிரதை...!

                       இன்றைக்கு புதுடெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு FICCI ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் மன்மோகன் சிங் ஒரு ''அபாய சங்கை'' ஊதியிருக்கிறார்.நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சீர்திருத்தக் கொள்கைகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுமாம். அதுவும் வேகமாக நடைமுறைப்படுத்தப்படுமாம். அப்படின்னா என்ன அர்த்தம்...?ஜெனங்க கொஞ்ச நெஞ்சம் போட்டிருக்கிற கோவணத்தையும் உருவிடுவாருன்னு அர்த்தம். ஜெனங்களை ஒட்டுத் துணி இல்லாம அலையவிட்டுடுவாருன்னு அர்த்தம். தனது அமெரிக்க எஜமான் இட்ட கட்டளைய சிறப்பா செய்யப்போறாருன்னு அர்த்தம். அப்படின்னா இதற்கு பேரு தான் சீர்த்திருத்தமா...?
         உண்மையிலேயே சீர்த்திருத்தம் என்றால் என்ன...? அம்மணமா அலைந்தவனை ஆடை அணிய சொல்லுறது ஒரு வகை சீர்த்திருத்தம். குழந்தைத் திருமணம் கூடாதுன்னு தடுக்கிறது ஒரு வகை சீர்த்திருத்தம். கணவன் இறந்துட்டா மனைவி உடன்கட்டை ஏறி உயிர் துறப்பதை ஒழித்து கட்டியது என்பது ஒரு வகை சீர்த்திருத்தம். சமூக விடுதலை, பெண் விடுதலை - இவைகளுக்காக போராடுவது என்பது கூட ஒரு வகை சீர்த்தித்தம் தான். இதெல்லாம் சமூக சீர்த்திருத்தம்.
             அனால் மன்மோகன் சிங்கோ சொல்லுவது ''பொருளாதார சீர்த்திருத்தமாம்''. அப்படி என்ன பொருளாதார சீர்த்திருத்தம் செய்யப்போறாரு என்று கேட்டால், பெட்ரோல் - டீசல் - சமையல் காஸ் விலைகளை மனசாட்சியே இல்லாம உயர்த்த போறாருங்க.  நாம் அன்றாடம் பயன்படுத்துற பருப்பு, சமையல் எண்ணெய், மளிகை சாமான்கள், காய்கறிகளின் விலைகளை தாறுமாறாக உயர்த்த போறாருங்க. கண்டபடி வரிவிதிப்புகள் இருக்கும். ஜெனங்க கட்ட வேண்டிய வங்கி வட்டிகளை அதிகப்படுத்திடுவாரு. ஜெனங்களுக்கு கொடுக்கவேண்டிய வட்டிகளை குறைச்சிடுவாரு. மக்களுக்கு நியாயமாக கொடுக்க வேண்டிய மானியத்தை வேட்டிடுவாரு.   வேலையின்மையும், வேலையிழப்பும் அதிகமாகும். மக்களுக்கு சொந்தமான பொதுத்துறைப் பங்குகளை தயக்கமே இல்லாமல் தைரியமாக வித்துடுவாரு. இப்படியாக ஜெனங்கப் போட்டிருக்கக்கூடிய சட்டை, துண்டு, வேட்டி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக உருவிட்டு, கடைசியாக ஜெனங்களுக்கு ஏதாவது போக்குக்காட்டிட்டு அவங்க போட்டிருக்க கோவணத்தையும் உருவிடுவாரு. அதுமட்டுமல்ல.... இன்னொரு பக்கம் பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகையை தாராளமாக தருவாரு. அதுமட்டுமா... மானியங்களை அவர்களுக்கு கொட்டிக்கொடுப்பாரு. ஒரு பக்கம் ஜெனங்க மேல மிகப்பெரிய சுமையை தூக்கி வைப்பாரு. இன்னொரு பக்கம் பெருமுதலாளிகளை குஷிப்படுத்திடுவாறு. இதற்கு பேரு தான் பொருளாதார சீர்த்திருத்தமாம். மன்மோகன் சிங் சொல்லுறாரு. இப்படி செய்தால் தான் நாட்டில அவர் ''எதிர்பார்க்கிற'' பொருளாதார வளர்ச்சி இருக்குமாம்.
         இதை மட்டும் சொல்லலைங்க.   இதுவரையில் அரசு மேற்கொண்ட ''பொருளாதார சீர்திருத்த'' நடவடிக்கைகள் ஒரு தொடக்கம் தானாம்.  இன்னமும் ஏராளமான ''சீர்திருத்தக் கொள்கைகள்'' நடைமுறைப்படுத்தப்பட வேண்டியிருக்கிறதாம்.  அப்படி செய்தால் மன்மோகன் சிங்கை ''ஒரு செயல்படும் பிரதமர்ன்னு'' அமெரிக்கா  ஒத்துக்குமாம். இன்னுமொரு பொன்மொழியை மன்மோகன் சிங் உதிர்த்திருக்கிறார். இந்த மாதிரியான ''பொருளாதாரச் சீர்திருத்தங்களை'' எதிர்க்கக் கூடியவர்கள் ''பழமைவாதிகளாம்''. யாரை சொல்கிறார் என்று புரிகிறதா....? மக்களை பாதிக்கின்ற - மக்கள் மீது சுமையை ஏற்றுகின்ற - ஏழை மக்களை மேலும் ஏழ்மை ஆக்குகின்ற இதுபோன்ற ''முட்டாள்தனமான'' பொருளாதாரச் சீர்த்திருத்தத்தை எதிர்ப்பவர்கள் இடதுசாரிகள். தான் என்பதை நாடு மறந்துவிடக்கூடாது. பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளிக்கொடுத்து, அவர்களை மேலும் செழிக்கச் செய்யும் ''தறுதலைத்தனமான'' பொருளாதாரச் சீர்த்திருத்தத்தை எதிர்ப்பவர்கள் இடதுசாரிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பதை நாடு மறந்துவிடக்கூடாது.
          அப்படியென்றால் பிரதமர் மன்மோகன் சிங் இதன் மூலம் என்ன திருகு வேலை செய்கிறார் என்றால்.... ''மக்களுக்காக நான் சீர்த்திருத்தம் செய்யப்போறேன். அதை இடதுசாரிக் கட்சிகள் எதிர்க்கின்றன. அப்படியென்றால் அவர்கள் உங்களுக்கு எதிரானவர்கள்'' என்று சொல்லாமல் சொல்லி, வெறும் இலவசங்களுக்கும், தொலைக்காட்சி சீரியல்களுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் மயங்கிப்போன சிந்தனை இல்லாத இந்திய மக்களை இடதுசாரிக்கட்சிகளுக்கு எதிராக திருப்புவதற்கான திருகு வேலையையும் மன்மோகன் செய்திருக்கிறார்.
          ''பொருளாதார சீர்த்திருத்தம்'' என்ற பெயரில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு செய்யும் மோசடி வேலைகளை மக்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பது தான் நமது கேள்வி...? 

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

மன்மோகன் சிங்கின் பொய்யும் புரட்டும்....!

        பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் பொன்விழாவை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மன்மோகன் சிங்கிற்கு ''கவுரவ டாக்டர் பட்டம்'' அளிக்கப்பட்டது. நாட்டை பற்றியே சிந்திக்காத ஒருவருக்கு எதற்கு டாக்டர் பட்டம்...?  இது போல் இருபதுக்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மன்மோகன் சிங்கிற்கு  ''கவுரவ டாக்டர் பட்டம்'' அளித்துள்ளன . இத்தனை டாக்டர் பட்டம் எதற்கு...? யாருக்கும் உதவாத பட்டம்...! நாட்டிற்கோ அல்லது  நாட்டு மக்களுக்கோ உதவாத டாக்டர் பட்டம் எதற்கு...? அதை தூக்கி எறியவேண்டும். 
          பல் பொருள் சில்லரை வர்த்தகத்தில் நாடாளுமன்ற ஒப்புதலை பெற்ற மறுநாளே  நடைபெற்ற அந்த பட்டமளிப்பு விழாவில், அறிவு ஜீவிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார். விழாவிற்கு வந்திருந்தவர்கள் காதுகளில் பூச் சுற்றியிருக்கிறார்.
         சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டால் விவசாயிகளும், நுகர்வோர்களும் பலனடைவார்களாம். புதிய தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி சந்தையில் புதிய முதலீட்டையும் அந்நிய நேரடி முதலீடு  அறிமுகப்படுத்துமாம். அடுத்து உணவு சில்லரை விற்பனையில் பெரும் விநியோக சங்கிலி, தொழில் நுட்பம், நிர்வாகச் செயல் அனுபவத்தை இந்தியா கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டுமாம். அந்நிய நேரடி முதலீட்டால் விவசாயிகள் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறதாம். நாட்டில் உள்ள நமது நுகர்வோரும் பலன் அடைவார்களாம். இப்படியெல்லாம் பேசி அந்த ''பொருளாதார மேதை''  எல்லோர் நாக்கிலும் தேனை தடவியிருக்கிறார்.
         ஆனால் உண்மை நிலை என்ன...? 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டினை அனுமதிப்பதற்கு மார்க்சிசிட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிக்கட்சிகளும், மற்ற எதிர் கட்சிகளும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கும் சூழ்நிலையில் சென்ற வெள்ளியன்று, பல்பொருள் விற்பனையில் சர்ச்சைக்குரிய நேரடி அந்நிய முதலீடு வாக்கெடுப்பில் அரசு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்ததால் குறுக்கு வழியில் வென்றது. அந்நிய நேரடி முதலீடு வரக்கூடாது என்ற தீர்மானத்தை ஆதரித்து 109 வாக்குகளும்,  அதற்கு எதிராக 123 வாக்குகள் கிடைத்தன.
          பாராளுமன்ற எண்ணிக்கையை வைத்து மன்மோகன் சிங் வெற்றிபெற்றிருக்கலாம். அதுவே மக்களிடமிருந்து கிடைத்த அனுமதி சீட்டாகாது. அந்நிய நேரடி முதலீட்டை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று பொருளாகாது. மக்கள் முழுமையாக எதிர்க்கிறார்கள். மக்களின் நாடி தெரியாதவர் பல்கலைக்கழக விழாவில் கண்டபடி நாடி ஜோசியம் சொல்கிறார்.

வியாழன், 22 நவம்பர், 2012

கசாப்பின் திடீர் தூக்கும், இன்றைய இரவு விருந்தும் பாராளுமன்றத்தை முடக்கவா மிஸ்டர் மன்மோகன் சிங்...?

        இன்று நவம்பர் 22 - ஆம் தேதி சொன்னது போல் பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பமானது. இது குளிர்காலக் கூட்டத்தொடர் என்பதாலேயே இந்த கூட்டத்தொடர் தேதி நெருங்க நெருங்க பிரதமர் மன்மோகன் சிங்குக்கு குளிர் சுரமே வந்துடுத்து.

திங்கள், 24 செப்டம்பர், 2012

ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா வெற்றிபெற இந்திய தேசத்தை விலை பேசும் மன்மோகன் சிங்....!






 இந்திய மஹா ஜெனங்களே...!

மேலே உள்ள படத்தைப் பாத்தீங்களா..? மாமனும் மச்சானும் கொஞ்சி குலாவுறாங்க... இவ்வளவு கொஞ்சலும் கெஞ்சலும் எதற்கு....?
கொஞ்ச நேரம் டி. வி. பொட்டி, மெகா சீரியல், விளம்பரம், இலவசங்கள் போன்ற மாயையிலிருந்தும், மயக்கத்திலிருந்தும் கொஞ்சம்  விடுபட்டு வெளியில வாங்களேன். ஓ... வந்துட்டீங்களா...! இப்போ கொஞ்ச நேரம் கண்ணை மூடிகிட்டு... உங்க கண்ணை மூடிகிட்டு உங்களோட நினைவுகளை சற்றே பின்னோக்கி செலுத்துங்கள். ரொம்ப தூரம் போகவேண்டாம். மே 2004 முதல் நவம்பர் 2008 வரையிலான காலகட்டத்தில் நாட்டில் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்திப் பாருங்கள். 
         கடந்த 2004 முதல் 2008 வரையில் இடதுசாரிகளின் தயவோடு ஆட்சியிலிருந்த முதலாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் நம் நாட்டில்,  பெட்ரோல் விலை என்பது  ரூபாய் 35 - லிருந்து ரூபாய் 40 - க்குள் தான் இருந்தது. சமையல் எரிவாயுவின் விலை என்பது  ரூபாய் 280 தான் இருந்தது. மன்மோகன் சிங் - ப.சிதம்பரம் கூட்டாளிகள் பெட்ரோல் - டீசல் - மண்ணெண்ணெய் - சமையல் கேஸ் விலைகளை உயர்த்துவதற்கு முற்பட்ட போதெல்லாம், இடதுசாரிகளின் நிர்பந்தம் காரணமாக  அவர்களால் உயர்த்த முடியாமல் போனது. எண்ணெய் வகைகள், பருப்பு வகைகள், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களை ஆன்  - லைன் வர்த்தகத்தில் சேர்த்திட மன்மோகன் சிங் துடித்த போதும் இடதுசாரி கட்சிகள் நிர்பந்தம் காரணமாக அவ்வாறு அவரால் செய்ய முடியவில்லை. பொதுத்துறை பங்குகளை விற்க முயன்ற போதும், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி மூதலீட்டை நுழைக்க முயன்ற போதும், இன்சூரன்ஸ் மற்றும் வங்கி போன்ற நிதித்துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்த முயன்ற போதும், அமெரிக்காவின் கட்டளைப்படி தேச நலனுக்கு எதிராக - மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட துணிந்த போதும் அவைகளுக்கு எதிராக பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்தின் வெளியிலும் இடதுசாரி கட்சிகள்  போராட்டங்கள் நடத்தியும், மீறி செய்தால் ஆதரவை திரும்பப்பெறுவோம் என்று மிரட்டியும் ஒரு குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வதற்கு இடதுசாரி கட்சிகள் அந்த ஆட்சிக்கு வழிகாட்டினர் என்பதால் நாட்டில் மேலே சொன்ன இடைப்பட்ட காலங்களில் விலைவாசி உயர்வே இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ்க்கை நடத்தினர். 
             ஆனால், தான் நினைத்த படி எதையுமே சாதிக்கமுடியவில்லை  என்பது  அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எரிச்சலையும் கோபத்தையும் ஊட்டியது. 2004 - ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில், ஆட்சி செய்வதற்கு காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கு போதிய எண்ணிக்கை இல்லாததால், 62 எம்பி - க்களை கொண்ட இடதுசாரி கட்சிகளின் தயவில் ஆட்சி செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் தான், அந்த ஆட்சியை  மக்களுக்கு எந்தவிதமான இடையூறும்  செய்யாமல் சரியான  பாதையில் செலுத்த முடிந்தது. ஆனால் தான் நினைத்தபடி எதையும் சாதிக்க முடியாமல் அமெரிக்கா  ஏமாந்துபோனது. 
              2009 - ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மீண்டும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு தான் ஆட்சி நடத்த முடியும் என்ற  சூழ்நிலை அமைந்துவிடக்கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சியைவிட அமெரிக்கா தான் துடித்தது. அதனால் 2009 - நாடாளுமன்றத்தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவின் தலையீடு என்பது இருந்தது. மீண்டும் மன்மோகன் சிங்கே பிரதமராக வேண்டும் என்பதற்காகவும், 2004 - ஆம் ஆண்டு தேர்தலை விட காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் அதிக இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவும், 2004 - ஆம் ஆண்டு தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 62 இடங்களில் வெற்றிபெற்று, அமெரிக்காவின் ஆசைகளை நடத்தவிடாமல் மன்மோகன் ஆட்சிக்கு வழிகாட்டிய இடதுசாரிக் கட்சிகளின் எண்ணிக்கையை குறைக்க  வேண்டும் என்பதற்காகவும், அவர்களது தயவில் மீண்டும் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவும் அமெரிக்கா காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் வேலைகளை செய்தது.
           அமெரிக்க உளவுத்துறை - சி.ஐ.ஏ - வும், இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் மற்றும் துணை தூதர்களும், தூதரக அதிகாரிகளும்  காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் களத்தில் இறங்கினர். தேர்தல் அறிவிப்பு வெளியான நாட்களிலிருந்து சி. ஐ. ஏ - வின் தலைவர் வெளிப்படையாகவே புதுடெல்லியில் தங்கியிருந்து காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகங்களையும், ஆலோசனைகளையும் வழங்கிவந்தார். அவ்வப்போது அவரை இந்திய நாட்டின் அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சந்தித்து ஆலோசனைகளை பெற்று வந்தார். அமெரிக்க தூதர்கள் எல்லோரும் கூட்டணிக்கட்சித் தலைவர்களோடும், மற்ற சிறு கட்சிகளின் தலைவர்களோடும் பேச்சுக்களை நடத்தி காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை சிதராமல் பார்த்துக்கொண்டனர். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெறுவதற்கு ரூபாய் ஒரு இலட்சம் கோடிக்கு மேல் அமெரிக்கப் பணம் இந்தியாவில் இறக்கிவிடப்பட்டு செலவு செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிக் கட்சிகளின் ஆட்சி நடந்த மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் மட்டுமே இடதுசாரிகளின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என்பதற்காகவே மிக அதிகமாக செலவு செய்யப்பட்டது மட்டுமல்ல, சி. ஐ. ஏ - வும், தூதர்களும் பல்வேறு தில்லுமுல்லுகளை செய்து தீவிரமாக தேர்தல் வேலைகளையும் செய்தார்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. 
                 அமெரிக்காவின் இத்தனை சித்து  விளையாட்டுகளின் மூலமாகத்தான் காங்கிரஸ் கட்சித் தலைமயிலான கூட்டணிக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரமுடிந்தது. இடதுசாரிக் கட்சிகளின் தயவு இல்லாமல் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக உட்கார முடிந்தது. இடதுசாரிகட்சிகளின் எண்ணிக்கை குறைக்க முடிந்தது. இந்த சித்து விளையாட்டுகளில் இன்றைய அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.
           இந்த ஆண்டு இறுதியில் நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தல்களில் ஜார்ஜ் புஷ் இரண்டாவது முறையாக வெற்றிபெறுவதற்கு ''ஒசாமா பின்லேடன்'' உதவினார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ''இரட்டை கோபுர தகர்ப்பு நாடகம்'' நடத்தி அந்த பழியை ''ஒசாமா பின்லேடன்'' மீது சுமத்தி, ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் ஒசாமா பின்லேடன் தொலைக்காட்சியில் தோன்றி மீண்டும் அமெரிக்காவை தாக்குவேன் என்று சொல்லுவது போல மற்றொரு நாடகத்தை நடத்தி தான் ஜார்ஜ் புஷ் இரண்டாவது முறையாக வெற்றிபெற முடிந்தது.
           ஆனால் இப்போது இந்த ஜனாதிபதி தேர்தலில் நிலைமை வேறு விதமாக இருக்கிறது. சென்ற  ஜனாதிபதி தேர்தலின் போது  வீழ்ந்துவிட்ட அமெரிக்காவின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவேன் என்று சொல்லி வெற்றிபெற்ற ஒபாமாவால் அவ்வாறு செய்யமுடியாமல் திணறினார் என்பது மட்டுமல்ல, நாட்டை முன்பைவிட மோசமான பொருளாதார நிலைமைக்கு இட்டுச்சென்றுள்ளார் என்பது தான் உண்மை. இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமை  என்பது மட்டுமல்ல பல இலட்சம் இளைஞர்களின் வேலையிழப்பு  என்பதும் ஒபாமாவிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அங்கும் விலைவாசி உயர்வு, வருமானத்திற்கு அதிகமான செலவு போன்ற பொருளாதார நெருக்கடிகள் மக்களின் கழுத்தை நெருக்கியது. அதனால் விழிப்படைந்த இளைஞர் கூட்டம்   கடந்த பத்து மாத காலமாக தொடர்ந்து நடத்தி  வரும் '' வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம்'' போராட்டம் என்பது ஒபாவிற்கு பின்னாடி பச்சை மிளகாய் வைத்தது போல் இருக்கிறது.
            இதையெல்லாம் தாண்டி ஒபாமாவுக்கு  வெற்றி என்பது எட்டாக்கனியாக போய்விடுமோ என்ற அச்சம் தொற்றிக்கொண்டது. அவரது வெற்றிக்கு மன்மோகன் சிங்கின் ஒத்துழைப்பு மிக அவசியமாக தேவைப்படுகிறது. அதற்கு அமெரிக்க பொருளாதாரத்தை கொஞ்சமாவது தூக்கி நிறுத்துவது போல காட்டிக்கொள்ளவேண்டும். ''ஆதலினால் இந்திய பொருளாதாரத்தை நாசம் செய்வீர்'' என்று ஒபாமா மன்மோகன் சிங்கிற்கு கட்டளையிட, ஏற்கனவே தன் கட்சியின் வெற்றிக்கு ''ஒத்துழைப்பு'' கொடுத்த ஒபாமாவிற்கு அவர் எதிர்ப்பார்ப்பது போல் இந்தியாவை விலைபேசி விற்றுவிட்டால், அதையே ஒரு சாதனையாக மக்களிடம் சொல்லி ஓட்டுக்களை பெற்று வெற்றிபெற்று விடலாம் என்ற கணக்கில் தான் மன்மோகன் சிங்கும் தன்  நண்பரின் வெற்றிக்காக, சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதித்தல், இன்சூரன்ஸ், வங்கி, விமானம் போன்றத் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்துதல், உழைப்பாளி மக்களின் பென்ஷன் நிதியை பங்கு சந்தைக்கு திறந்து விடுதல், பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்றல் போன்ற ''பொருளாதார சீர்த்திருத்தங்களை'' செய்ய மன்மோகன் சிங் துணிந்திருக்கிறார் என்பது தான் உண்மை. இது ஒபாமாவிற்கு மன்மோகன் சிங் செய்யும் நன்றிக்கடன் ஆகும்.

            இந்திய மஹா ஜெனங்களே... ரௌத்திரம் பழகுங்கள்... கோபப்படுங்கள்... அநியாயங்களைக் கண்டு கோபப்படுங்கள்... நாமிருக்கும் நாடு நமதென்பதை அறியுங்கள்...  

சனி, 22 செப்டம்பர், 2012

உத்தமரைப் போலவே நடிக்கும் பிரதமரே...! மக்கள் எழுவார்கள் ஜாக்கிரதை...!

பக்கத்தில் காந்தியை வைத்துக்கொண்டே 
பொய்யை மட்டுமே பேசும் 
இந்திய பிரதமர்...!

         நேற்று முன் தினம் தான் இந்திய மக்கள் மிகுந்த எழுச்சியோடு  ஒரு வீரம் செறிந்த போராட்டத்தை வெற்றிகரமாக முடித்த அடுத்த நாளே - நேற்று 21 - ஆம் தேதி இரவு பிரதமர் மன்மோகன் சிங் அவசர அவசரமாக முன்னெப்போதும் இல்லாத பழக்கமாக - வழக்கத்திற்கு மாறாக தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடம் உரையாற்றியது என்பது மன்மோகன் சிங்கிற்கு உதறல் ஏற்பட்டிருக்கிறது என்பதை தான் காட்டுகிறது. 
          நாடுதழுவிய போராட்டம் என்பது வழக்கமாக இடதுசாரிகள்  பலமாக உள்ள மேற்குவங்கம், கேரளா மற்றும் திரிபுரா  போன்ற மாநிலங்களில் மட்டுமே வெற்றிகரமாக நடைபெறும் என்கிற நிலை மாறி, நேற்று முன்தினம் இடதுசாரி கட்சிகள் மற்றும் சில எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்த நாடுதழுவிய கடையடைப்புப் போராட்டத்தில் நாடு முழுதுமுள்ள வணிகர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றிபெறச் செய்தது என்பது மக்களின் எழுச்சியை காட்டியது மட்டுமல்ல, மன்மோகன் சிங்கிற்கு பீதியையும் உண்டாக்கியிருக்கிறது. 20 - ஆம் தேதி இரவு மன்மோகன் தூங்கியே இருக்கமாட்டார் என்பது போல தான் தோன்றுகிறது. அதனால் தான் அவசர அவசரமாக அடுத்த நாளே மக்களை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. 
            தொலைக்காட்சியில் மன்மோகன் சிங்கின் பேச்சைப் பாத்தீங்கன்னா... ''இந்த  பூனையும் பாலை குடிக்குமா..?'' என்று தான் நமக்கு தோன்றும். சத்தியமே தவறாத உத்தமரைப் போலவே பேசினாரு. காந்திக்கு அடுத்தது நம்ப நாட்டில உத்தமரு யாருன்னு கேட்டா... சந்தேகமே வேண்டாம்... அது மன்மோகன் சிங்கு தானுங்க... அப்படி பேசினாருங்க.
           20 - ஆம் தேதி போராட்டம் வெற்றியடைந்ததால் மக்களெல்லாம் இடதுசாரிகள் பின்னால் சென்றுவிட்டது போல் ''அவங்களை நம்பாதீங்க... அவங்களை நம்பாதீங்க.... உங்களை திசைத் திருப்பப் பார்க்கிறாங்க...உங்களை குழப்பப் பார்க்கிறாங்க... பொய் பிரச்சாரம் செய்யுறாங்க... அதனால அவங்கள நம்பிடாதீங்க... என்  கைகளை பலப்படுத்துங்க...'' தொலைக்காட்சி பேச்சு முழுக்க மன்மோகன் சிங்கின் அலறல் சத்தம் தான் அதிகம் கேட்டது. என்னமா நடிக்கிராருங்க அந்த ஆளு... சிவாஜி கணேசன் எல்லாம் பிச்சை  எடுக்கணும். அப்படியொரு நடிப்பு. சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடித்தாருங்க...
             ஆனால் அவர் பேச்சில உண்மையே இல்லைங்க. பொய் பொய்யா பேசினாரு... அதுவும் பக்கத்திலேயே காந்தி பொம்மையை வைத்துக்கொண்டு அவர் பேசிய பேச்சை காந்தி கேட்டிருந்தார்னா.... கையில் இருக்கிற தடியை எடுத்து மன்மோகன் சிங் தலையில ஓங்கி ஒன்னு கொடுத்திருப்பாரு..
             ''சாதாரண மக்களுக்கு மானியம் கொடுத்து கொடுத்து பொருளாதாரம்      சீர்குலைந்து போயிடுத்தாமாம். அதனால தான் பொதுமக்களுக்கு இதுவரை கொடுத்துவந்த  மானியத்தை வெட்டுறாங்களாமாம். அதனால ஏற்படுகிற கஷ்டத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமாமாம்'' என்று சொல்லிக்கொண்டே தொலைக்காட்சியில தனது  பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த பொதுமக்களின் காதுல ஒரு கூடை பூவை மன்மோகன் சுத்தினாரு பாருங்க... மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு பிரதமர் மக்கள் மீது அக்கறையில்லாமல் இப்படித்தான் நடந்துகொள்வார் என்பதற்கு மன்மோகன் சிங்கே ஓர் உதாரணம். 
              ''மக்களுக்கு மானியம் வழங்குவதற்கு அரசிடம் பணம் காய்க்கும் மரமில்லை'' என்று மன்மோகன் சிங் ஆணவமாக பேசியிருக்கிறார். ''சரி.. எங்களுக்கு கொடுப்பதற்கு பணம் காய்க்கும் மரம் உன்ன்களிடம் இல்லை தான்... ஆனால் பெருமுதலாளிகளுக்கு நீங்கள் பல இலட்சம் கோடி அளவிற்கு மானியங்களும், வரிச் சலுகைகளும் தொடர்ந்து கொடுக்கிறீர்களே... அது மட்டும் எந்த மரத்தில் காய்க்கிறது....'' என்று நான் கேட்கவில்லை. விழித்துக்கொண்ட மக்கள் கேட்கிறார்கள். 
               மக்களுக்கு கொடுப்பதற்கு அரசாங்கத்திடமே  பணம் காய்க்கும் மரம் இல்லை என்றால், அரசு உயர்த்திய விலையை கொடுத்து வாங்குவதற்கு மக்களிடம் மட்டும் பணம் காய்க்கும் மரம் இருக்குமா... என்கிற குறைந்த பட்ச அறிவு கூட மன்மோகன் சிங்கிற்கு இல்லையா...? என்று மக்கள் கேட்கிறார்கள்.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

கரியை காசாக்கிய காங்கிரஸ் கட்சியும், காசைக் கரியாக்கும் பாரதீய ஜனதா கட்சியும்...!

        கடந்த மூன்று நாட்களாகவே இந்திய பாராளுமன்றத்தில் அனல் பறக்கிறது. பாராளுமன்றத்தின் மக்களவை  மற்றும் மாநிலங்களவை ஆகிய   இரு அவைகளும் நடத்த முடியாமல்  பாரதீய ஜனதா கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளினால் முடக்கப்பட்டிருக்கின்றன. சென்ற வாரம் மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் கிளப்பிவிட்ட புயல் ஓயவே இல்லை. திடிரென்று வந்த ''தானே'' புயல் மாதிரி, தலைமை கணக்கு தணிக்கையாளர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையே ஆட்டம் காண வைத்திருக்கிறது என்பது உண்மை தான்.  
              இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊழல்.... 2 ஜி-ஸ்பெக்ட்ரம் ஊழலையே   மிஞ்சி விட்ட மெகா  ஊழல்... அரசின் கையிலிருந்த  நிலக்கரி சுரங்கங்களை தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு   திறந்துவிடப்பட்டதில் அரசுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய  வருமான இழப்பு என்பது 1.86 இலட்சம் கோடி என்ற தகவலை தலைமை கணக்கு தணிக்கையாளர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துயிருக்கிறார். இது ''திருவிளையாடல்'' எப்போது நடந்தது என்றால்...  நிலக்கரி சுரங்கம்  பிரதமரின் கட்டுப்பாட்டில் இருந்த காலக்கட்டத்தில்  தான் என்பது குறிப்பிடத்தக்கது.

             பாராளுமன்றத்தை முடக்குவதற்கு வாய்ப்புகளை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கு இந்த அறிக்கை என்பது மிகப்பெரிய அல்வா துண்டு போல கிடைத்துவிட விட்டேனா பார் என்று குழப்பத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கி கடந்த மூன்று நாட்களாக பிரதமர் பதவி  விலகவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் முடக்கி வருகின்றனர். ''விடாக்கண்டன்- கொடாக்கண்டனான'' நம்ம பிரதமர் மன்மோகன் சிங் வழக்கம் போல் இதுவரை வாயையே திறக்கவில்லை. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட ''தலை'' ஆடவில்லை... ஆனால்  ''வால் '' மட்டும் துடித்து ஆடியது. ஆம்... பிரதமரின் வாலாக ஒட்டிக்கொண்டிருக்கக்கூடிய மத்திய அமைச்சர் நாராயணசாமி தலைமை கணக்கு தணிக்கையாளரை  மிரட்டுவதுபோல் பேசினார். தலைமை கணக்கு தணிக்கையாளர் அரசை கலந்தாலோசிக்காமல் அறிக்கையை நேரடியாக தாக்கல் செய்தது என்பது தவறானது என்று கர்ஜித்தார். தலைமை கணக்கு தணிக்கையாளர் என்பவர் இந்திய அரசியல்சாசன சட்டப்படி பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்டவர் என்பதையே இந்த  அமைச்சர் மறந்துவிட்டு பேசினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஒட்டிக் கொண்டிருக்கக்கூடிய திமுகஉள்லிட்ட கட்சிகளும் வாயை திறக்கவில்லை.
             ஆனால் ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகளெல்லாம் பேசவே முடியாமல் ஆடிப்போயிருக்கின்றன. இன்னொரு பக்கம் இந்த ஊழலை காரணம் காட்டி வரும் 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி விட்டு  தாங்கள்    எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியினர் துடித்துக்கொண்டிருக்கின்றனர்.
         கர்நாடகா மாநிலத்தில் இதே போல் நிலக்கரி ஊழலில் சிக்கி நாறிக்கொண்டிருக்கிற பாரதீய ஜனதா கட்சி தங்களை உத்தமர்களைப் போல் காட்டிக்கொள்ள பாராளுமன்றத்தைப் பயன்படுத்துகின்றனர். தாங்கள் தான் ஊழலை ஒழிக்க வந்த பரமாத்மா போல் ஊழலுக்கு காரணமான மன்மோகன் சிங் பதவி விலகும் வரை ஓயமாட்டோம் என்று கூறி  இரு அவைகளையும் நடத்தவிடாமல் கடந்த மூன்று நாட்களாக பாராளுமன்றத்தையே முடக்கிவருகின்றனர். இது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரான செயல் ஆகும்.பாராளுமன்ற ஜனநாயகத்தின் குரல்வளையையே நெரிக்கும் செயலாகும்.
            அது மட்டுமல்லாமல், குற்றம்  சாட்டப்பட்ட பிரதமர் தன்னுடைய கருத்துக்களை பாராளுமன்றத்தில் எடுத்துரைப்பதற்கும், இந்த ஊழல் சம்பந்தமாக மற்ற எதிர்க்கட்சிகளும் பாராளுமன்றத்தில்  தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்வதற்குமான  வாய்ப்பைகளை  தடுக்கின்ற  செயலாகும். பறிக்கின்ற செயலாகும். . இப்படி மற்றவர்களை பேசவிடாமல், பாராளுமன்றத்தில் அடாவடித்தனமாக தகராறு செய்வதன்  மூலம், தாங்கள் மட்டுமே ஊழலுக்கு எதிராக  குரல் கொடுப்பவர்கள் போலவும், பாரதீய ஜனதா கட்சி மட்டுமே ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று என்பது போலவும்  ஆன கருத்துக்களை மக்களிடம் உருவாக்கவே பாரதீய ஜனதா கட்சி  இந்த பாராளுமன்ற சீர்குலைவு வேலைகளை செய்து நாடகம் ஆடி வருகின்றனர்.  
                உண்மையிலேயே பாரதீய ஜனதா கட்சியினர் ஊழலுக்கு எதிராக போராடுகின்றார்கள் என்றால், நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும்...? இந்த ஊழல் சம்பந்தமாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அரசை வற்புறுத்தியிருக்க வேண்டும். இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட பிரதமரையும், கோடிக்கணக்கான அரசின் பணத்தை சுருட்டிய பெருமுதலாளிகளையும் விசாரணைக்குள்  உட்படுத்த வேண்டும் என்று போராடியிருக்க வேண்டும்.
             அதேப்போல், இந்திய பன்னாட்டு பெருமுதலாளிகள் கோடிகோடியாய் கொள்ளையடித்த மக்கள் பணத்தையும் அதனால் சேர்த்த சொத்துக்களையும் அரசு பறிமுதல் செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்து  பாரதீய ஜனதா கட்சியினர் வலுவாக நாடாளுமன்றத்தில் போராடியிருக்கலாமே...? ஏன்  செய்யவில்லை...?
          ஏனென்றால், பாரதீய ஜனதா கட்சியினர் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக செயல் படுவார்களே தவிர எதிராக  செயல்பட மாட்டார்கள். இவர்களின் தேர்தல் செலவை கவனிப்பவர்கள் அவர்கள் தானே...? பாரதீய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியினை போலவே மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாதர்ககள். பெருமுதலாளிகளுக்கு ஆதரவானவர்கள்.

சனி, 14 ஜனவரி, 2012

மொத்தத்தில் உங்கள் ஆட்சியே ஒரு அவமானம் தான் மிஸ்டர் மன்மோகன் சிங்..!

                    பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுடன் குழந்தைகள் பிறப்பு ஆகியவற்றுக்கு எதிரான குடிமக்கள் அமைப்பின் ஆய்வு அறிக்கையை சென்ற செவ்வாய்க்கிழமை  10 - ஆம் தேதியன்று புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார். இந்தியாவில் உள்ள 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளில் 42 விழுக்காட்டினர், ஊட்டச் சத்துக் குறைபாடுகளுடன் எடை குறைவாக இருப்பதாகவும், இவர்களில் 59 விழுக்காட்டினர் உடல்வளர்ச்சிக் குன்றியவர்களாக இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கையில் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டு  பிரதமர் மன்மோகன் சிங் பேசிய போது நம் நாட்டில் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன்  பிறப்பதென்பது  ஒரு தேசிய அவமானம் என்று தெரிவித்தார்.  இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான விஷயம் பாருங்கள். ஒரு நாட்டை ஆளும் பிரதமரே இப்படி பேசியிருக்கிறார் என்பது மட்டுமல்ல. கடந்த எட்டு ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பிரதமருக்கு இப்போது தான் இது  தெரிகிறது என்றால்  இதை விட ஒரு வெட்கக்கேடான விஷயம் வேறு இருக்கமுடியாது என்று தான் சொல்லவேண்டும். 
              மன்மோகன் சிங்கின் இரண்டாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் ஆரம்பக் காலம் தொட்டே நாடு தாறுமாறாகத் தான் சென்றுகொண்டிருக்கிறது. நாட்டையே உலுக்கிய ஏகப்பட்ட ஊழல்கள், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைக்கப்பட்ட இந்திய கருப்புப்பணம்,
தாறுமாறான விலைவாசி உயர்வு, பன்னாட்டு கம்பெனி முதலாளிகளுக்கு மானியம் மற்றும்  வரிச்சலுகைகள் , சாதாரண மக்களுக்கு வருமானம் கூடாமல் வரிச்சுமைகள் மட்டும்  கூடுவது, சீரழிந்து போகும் போத விநியோகமுறை  போன்ற இவைகளெல்லாம்  நாட்டின் அன்றாட நிகழ்ச்சியாக மாறிவிட்டது. 
            அதிகரித்துக்கொண்டேப் போகும் வேலையில்லாத் திண்டாட்டம், தேவைக்கேற்றாற்போல் உயராத ஊதியம், விண்ணைமுட்டும் விலைவாசி, கூடிக்கொண்டேப் போகும் வரிச்சுமைகள் - இவைகளினால் வாங்கும் சக்தி குறைந்து,  வறுமையும், வறியவர்களும் அதிகரித்துக்கொண்டே  போகின்றனர். வறுமையில் உள்ளவர்கள் மேலும் கடுமையான வறுமைக்குத் தள்ளப்படுவது தான் 59 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல், உடல்வளர்ச்சிக் குன்றி நோஞ்சான் குழந்தைகளாய் இருப்பதற்கான முக்கிய காரணமாகும். இதை பிரதமர் மன்மோகன் சிங் அறியாததல்ல. வறியவர்கள் மேலும் வறியவர்கள் ஆகவேண்டும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகவேண்டும். இது தான் அவர் ஆட்சியின் கொள்கையாகும். இது இந்த ஆட்சியின் அவமானமில்லையா..? 
                         இது மட்டுமல்ல, மத்திய அரசின் உணவுக் கிடங்குகளில் கோடிக்கணக்கான டன் உணவு தானியங்கள் பசியில் வாடும் மக்களுக்கு கிடைக்காமல் மக்கிப்போகியும், எலிகளுக்கு தீனியாகவும் வீணாகிப் போகிறது. இப்படி  வீணாகிப் போகும் தானியங்களை வறுமையில் வாடும் மக்களுக்கு விநியோகம் செய்யலாமே என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கேள்வி கேட்டபோது, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கோபப்பட்டார். மக்கி வீணாகும் தானியங்களை வறுமையில்  வாடும் மக்களுக்குத் தரப்படாமல் அவர்கள் பசியால் செத்துக்கொண்டிருப்பதை வேடிக்கைப்பார்ப்பது தான் மத்திய அரசின் கொள்கை முடிவா...? இது இந்த ஆட்சியின் அவமானமில்லையா..?   
                ஆம்... வீணாகும் தானியங்களை வறுமையில் வாடும் மக்களுக்கு தரக்கூடாது என்பது அரசின் முடிவு என்பதை மன்மோகன் சிங் தெரிந்தோ தெரியாமலோ அன்றே வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். உண்மை தான் இது தான் இவர் ஆட்சியின் கொள்கை  முடிவு என்பதை மறந்துவிடாதீர்கள்.
               இதில் மிகப்பெரிய சூழ்ச்சியே இருக்கிறது என்பதை நீங்கள் நன்றாக  புரிந்து கொள்ளவேண்டும். மேலே சொன்ன அத்தனையையும் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் திட்டமிட்டே செய்கிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். இந்த  விஷயத்தைப்  பொறுத்தவரையில், மன்மோகனின் அமெரிக்க ஏகாதிபத்திய எசமானின் கட்டளைப்படி தான் மன்மோகன் நடந்துகொள்கிறார்.  
                இதிலிருக்கும் மிகப்பெரிய சூழ்ச்சி என்னவென்றால், ஐந்து வயதுக்குபட்ட குழந்தைகளுக்கு இந்த ஐந்து வயதுக்குள் கட்டாயமாக கிடைக்கவேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், அந்தந்த வயதில் இருக்கவேண்டிய உடல் வளர்ச்சியுமில்லாமல்  நோஞ்சான் குழந்தைகளாக இருந்தால் தான், அவர்களுக்கு அந்த ஐந்து வயதுக்குள்    கிடைக்கவேண்டிய மூளை வளர்ச்சி என்பது கிடைக்காமல் போய்விடும். அப்போது தான் பள்ளிக்கு செல்வதும், பாடங்கள் படிப்பது என்பதும் இல்லாமல் மந்தமாக போய்விடும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை என்பது மேலும் குறைந்து போகும். குழந்தைகளின் இயற்கையான சிந்தனைத்திறனும் குறைந்துபோகும். அப்போது தான், நாட்டைப்பற்றிய சிந்தனையோ, சமூகத்தைப் பற்றிய சிந்தனையோ வளராமல் போகும். அதனால், எது நடந்தாலும் கேள்விக்கேட்க மாட்டார்கள். ஆடு மாடுகளை போல் வளர்ந்துவிடுவார்கள். அடிமைகளைப்போல் குறைந்த கூலிக்கு வேலை செய்வார்கள். இது தான் 2020 - இல் வருங்கால இந்தியா என்பதை மறந்துவிடாதீர்கள்.
             அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் இந்தியா ஒரு பலவீனமான நாடாக பலம் இழந்துவிடும். இப்போது இருக்கும் 59 சதவீத ஊட்டச்சத்து இன்றி, எடை குறைந்து, உடல் வளர்ச்சி இல்லாமல் இருக்கும்  இந்த குழந்தைகளின் எதிர்காலத்தில் ராணுவத்தில் கூட சேரமுடியாது போகும். அடுத்த பதினைந்து ஆண்டுகளில் இந்திய ராணுவமும் பலமிழந்து இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். இன்றைக்கு ஈராக் நாட்டை சீரழித்த அமெரிக்க இருபது ஆண்டுகளுக்கு முன்பே ஈராக் நாட்டின் மீது பொருளாதார தடைவிதித்ததால், உயிர் காக்கும் மருந்துகள் கூட அந்த நாட்டு மக்களுக்கு கிடைக்காமல் போனது. அதனால் அன்று ஐந்து வயதுக்குட்பட்ட லட்சக்கணக்கான குழந்தைகள் மருந்துகள் கிடைக்காமல், கொடிய நோயினால் இறந்துபோனார்கள். அதன் பலன் என்ன தெரியுமா...? இருபது ஆண்டுகள் கழித்து இன்று இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குட்பட்ட இளைஞர்களே அந்த நாட்டில் இல்லாமல் போய்விட்டார்கள். இன்று அந்த தேசத்தை காப்பதற்கு போராடுவதற்கு இளைஞர்கள் இல்லாமல் போனதால் தான் அமெரிக்காவின் கையில் சிக்கி சீரழிந்து போனது. இதே சூழ்ச்சியை தான் அமெரிக்கா நம் நாட்டிலேயும் செய்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.
                    மொத்தத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியே ஒரு அவமானம் என்பது தான் உண்மை.