வியாழன், 3 அக்டோபர், 2013

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா....?


                                                                                                                                                            
          குற்றவாளி என கருதப்படும் எம். பி., மற்றும் எம்.எல்.ஏ., -க்களின் பதவிப்பறிப்பை தடுக்கும் அவசரச்சட்டம் ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் அவசரமாக குடியரசுத்தலைவரின் தபால் பெட்டியில் போட்டுவிட்டு, அவசரமாக அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். அமெரிக்காவிலிருந்து திரும்பி வருவதற்குள் குடியரசுத்தலைவரும் அவசரமாக கையெழுத்திட்டு விடுவார் என்ற நம்பிக்கையில் தான் பிரதமரும் அவசரமாக கிளம்பிப்போனார். ஆனால் மாநிலங்களவையில் இதற்கான மசோதா ஒன்று நிலுவையில் உள்ள போது, இப்படிப்பட்ட அவசரச்சட்டத்தின் மீது பிரதமருக்கு அப்படியென்ன அவசரம் இருக்கிறது...? அப்படி ஏன் அவசரம் காட்டுகிறார் என்பதை புரிந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமரின் இந்த அவசர செயலை மிகக் கடுமையாக விமர்சித்தனர். பிரதமரின் இந்த அவசர செயல் என்பது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது என்று குற்றஞ்சாட்டினர்.
          இந்த சூழ்நிலையில் தான், பத்திரிக்கையாளர் கூட்டத்திற்கு அழைப்பில்லாமலேயே அவசரமாக ஆஜரான காங்கிரஸ் கட்சியின் ''குட்டித்தலைவர்'' ராகுல் காந்தி ''இந்த அவசரச்சட்டம்  முட்டாள்தனமானது. அதை கிழித்து குப்பையில் தூக்கி எறியவேண்டும்.'' என்று கடுமையாக சாடினார். ராகுல் காந்திக்கு உண்மையிலேயே சட்டத்தின் மீது எரிச்சலா... அல்லது பிரதமரின் மீது எரிச்சலா...'' என்பதை அவரது அம்மா தான் அறிவார். அதனால் தான் அவரது அம்மா சோனியா காந்தி உடனடியாக அமெரிக்காவில் இருந்த மன்மோகன் சிங்கிடம் தன் மகன் செய்த ''அவசரக்குடுக்கை'' தனத்திற்கு சமாதானப்படுத்தினார். மன்மோகன் சிங்கிற்கும் அமெரிக்காவில் செய்யவேண்டிய பல்வேறு வேலைகளைவிட ராகுல் காந்தியின் பேச்சு பெரும் சுமையாகப் போய்விட்டது.
           நாட்டில் எல்லோருடைய எதிர்ப்பார்ப்பும் மன்மோகன் சிங் பதவி விலகிவிடுவார் என்பதில் தான் இருந்தது. என்னென்றால் மன்மோகன் சிங் ரொம்ப ரோஷக்காரர். ராகுல் காந்தியின் பேச்சால் தன்னுடைய மரியாதை அமெரிக்காவிலேயே போய்விட்டது. அதனால் நான் பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று சொல்லிவிடுவார் என்று எல்லோரும் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் அந்த ரோஷக்காரர் ராகுல் காந்தியின் நாடகத்திற்கு பதில் நாடகம் போடாமல், அவசரமாக குடியரசுத்தலைவரை சந்தித்தார். அவசரமாக சட்டவல்லுனர்களை சந்தித்தார். அவசரமாக மந்திரிசபையை கூட்டினார். அவசர அவசரமாக ''அவசரச்சட்டத்தை'' திரும்பப்பெறுவதாக நேற்று முடிவெடுத்துவிட்டார்.
            இத்தனை நிகழ்வுகளிலும் ஒரு சந்தேகம் என்னன்னா....? இந்த அவசரச்சட்டம் குடியரசுத்தலைவரிடம் அனுப்புவதற்கு முன்பு மந்திரி சபை கூட்டத்திலும், காங்கிரஸ் கட்சியின் தலைமையிடத்திலும் கலந்தாலோசிக்கப்பட்டே அனுப்பப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் ''குட்டித்தலைவர்'' ராகுல் காந்தியிடமும் ஆலோசனை செய்யாமலா இருந்திருப்பார்கள். இந்த அவசரச்சட்டத்தின் மீது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து எதிர்ப்பு கிளம்பியவுடன், ஆளும்கட்சியின் ''குட்டித்தலைவராக'' அந்த எதிர்ப்பில் தானும் பங்கெடுத்துக்கொண்டு மக்கள் மத்தியில் தன்னை ஒரு ''கதாநாயகனாக'' காட்டிக்கொள்ள ராகுல் நடத்திய நாடகம் தான் இது என்பது மக்களுக்கு நன்றாக புரியும்.
             அவசரச்சட்டத்தை கிழித்து குப்பையில் போடவேண்டும் என்று பேசுவது என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பது கூட அறியாமல், தான் காட்டிய எதிர்ப்புக்குப்பின் அந்த அவசரச்சட்டம் திரும்பப்பெறப்பட்டதன்  மூலம் தான் ''கதாநாயகன்'' ரேஞ்சிக்கு உயர்ந்துவிட்டோம் என்று ராகுல் காந்தி சந்தொஷப்பட்டுக்கொண்டிருப்பார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா....?
            நாடு இன்னும் என்னென்னத்த எல்லாம் தாங்கவேண்டி வருமோ தெரியில... ஒரு பக்கம் மோடி... இன்னொரு பக்கம் ராகுல்... முடியில...!

கருத்துகள் இல்லை: