நேரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 ஜனவரி, 2014

''குட்டித்தலைவர்'' ராகுல் காந்திக்கு ஒரு கடிதம்...!


                                                                                                                                                                        
''குட்டித்தலைவர்'' ராகுல்ஜி அவர்களே...!
          
                 அண்மையில் நீங்கள் கேரளாவிற்கு சென்றிருந்த போது வீரசாகசங்களை செய்து காட்டினீர்கள். என்னத்தான் உங்க கட்சி ஆட்சி செய்யற மாநிலமா இருந்தாலும், அதுக்காக ஓடும் போலீஸ் வண்டியிலேயா உட்கார்ந்து கொண்டு பயணம் செய்வது...? இந்திய மக்கள் இந்த வீரசாகசத்தைப் பார்த்து பரவசப்படுவார்கள் என்று எதிர்ப்பார்த்தீர்கள். ஆனால் மக்கள் முகம் சுளித்தார்கள். நீங்கள் செய்த அந்த செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று விமர்சனம் செய்தார்கள்.
                இது ஒரு புறமிருக்க, அங்கே பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது, ''காங்கிரஸ் கட்சி விரும்பினால், எத்தகைய பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்'' என்று பேசியிருக்கிறீர்கள். இத்தனைக் காலமாக உங்களை சுற்றியிருப்பவர்கள் தான் உங்களை உசுப்பேற்றித் திரிந்துகொண்டிருந்தார்கள். இப்போது தான் நீங்கள் முதல் முறையாக ''பிரதமர் பதவிக்கு நான் தயார்'' என்று உங்களது இந்த சின்ன(த்தனமான) ஆசையை திருவாய் மலர்ந்திருக்கிறீர்கள். ஏதோ இந்த நாட்டு மக்களெல்லாம் தங்களுக்கு வழிநடத்துவதற்கு ஏற்ற சரியான தலைவர்கள் இல்லாதது போல, ஆளாளுக்கு ''நான் தான்  பிரதமர்... நான் தான் பிரதமர்'' - ன்னு சொல்லிக்கிட்டு திரியிறீங்களே, உங்களுக்கு கூச்சமாக இல்லை. நீங்களெல்லாம் கொஞ்சம் கூட வெட்கப்படவே மாட்டீங்களா மிஸ்டர் ராகுல்...?
                எந்த முகத்தோடு நீங்கள் ஒட்டுக்கேட்க வருவீர்கள்...? கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் செய்த சாதனைகள் தான் என்ன...?
              சிறப்பாக செயல்படுகின்ற அரசுடைமை செய்யப்பட்ட வங்கிகளை நாசப்படுத்தி, வங்கித்துறையை தனியாருக்கு திறந்துவிட்டீர்கள். இது 42 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வசமிருந்த வங்கிகளை தேசவுடைமை செய்த உங்கள் பாட்டி இந்திரா காந்திக்கு நீங்கள் செய்த துரோகமில்லையா மிஸ்டர் ராகுல்...?
               தேசவுடைமை செய்யப்பட்ட எல்.ஐ.சி - யை ஒழித்துக்கட்டி தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளை வாழவைப்பதும், இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை மேலும் மேலும் உயர்த்தி அந்நிய கம்பெனிகள் கொள்ளையடிக்க துணை போவதுமான உங்கள் செயல், 57 ஆண்டுகளுக்கு முன் தனியார் வசமிருந்த 245 இன்சூரன்ஸ் கம்பெனிகளை தேசவுடைமை செய்து, எல்.ஐ.சி - யை தோற்றுவித்தாரே உங்கள் கொள்ளு தாத்தா நேருவுக்கு நீங்கள் செய்த துரோகமில்லையா மிஸ்டர் ராகுல்...?
            உங்களை நம்பி நாட்டை ஒப்படைத்தால், இந்தியாவில் எல்லாத் துறைகளிலும் அந்நிய நேரடி முதலீடு நுழைவதற்கு அனுமதி அளித்து, அந்நிய முதலாளிகள் இந்த தேசத்தின் வளங்களையும், பொருளாதாரத்தையும் சுரண்டுவதற்கும், கொள்ளையடிப்பதற்கும் தாராளமாக அனுமதி அளித்தீர்களே....? ''பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ.  நாங்கள் சாகவோ'' என்று இடதுசாரிக்கட்சிகள் எல்லாம் பாராளுமன்றத்திலும், வெளியிலும் போராடினாலும், அதையும் மீறி பாரதீய ஜனதாக் கட்சியோடு கூட்டு சேர்ந்து அந்நிய நேரடி முதலீட்டிற்கு இரத்தின கம்பளம் விரித்தீர்களே...? இது ஒட்டு மொத்த தேசத்திற்கே நீங்கள் செய்த துரோகமில்லையா மிஸ்டர் ராகுல்....?
            1991 - ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இந்திய அரசியலில் உள்ளே நுழைந்த மன்மோகன் சிங்கை, 2004 - ஆம் ஆண்டு பிரதமராக பதவியுயர்வு கொடுத்து, அவரால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட LPG - தாராளமயம், தனியார்மயம், உலகமயம் போன்ற மயங்களை படிப்படியாக கூர் சீவிவிட்டு, சாதாரண மக்களின் கண்களில் மண்ணைத்தூவி அவர்களின் வாழ்வாதாரத்தையே மாயமாக்கி ஒழித்து கட்டிவிட்டீர்களே. இது உங்களை நம்பி வாக்களித்த ''ஆம் ஆத்மி'' என்ற சாதாரண மக்களுக்கு நீங்கள் செய்த துரோகமில்லையா மிஸ்டர் ராகுல்...?
                      கடந்த  ஐந்து ஆண்டுகளில் தேசத்திற்கெதிராக - மக்களுக்கெதிராக நீங்கள் செய்த ''அமெரிக்க சார்பு திருவிளையாடல்களை'' இன்னும் சொல்லிகிட்டே போகலாம். இவ்வளவும் செய்துவிட்டு, இதே மக்களைப் பார்த்து ''நான் பிரதமர் பதவிக்கு தயார்'' என்று எப்படி கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், வெட்கமில்லாமல் அறிவிக்கிறீர்கள்.  அரசியல் காரணத்திற்காக கொலைசெய்யப்பட்டு கொல்லப்பட்ட உங்கள் பாட்டி இந்திரா காந்தி மற்றும் உங்கள் அப்பா ராஜீவ் காந்தி ஆகியோர்களை நினைவுப்படுத்தி மக்களின் அனுதாபத்தை பெற்று எப்படியாவது வெற்றிபெற்றுவிடலாமென்று பகற்கனவு காணாதீர்கள் மிஸ்டர் ராகுல். நீங்களும், உங்கள் அம்மாவும் மன்மோகன் சிங்குடன் சேர்ந்து நேருவுக்கும், இந்திராவுக்கும் நீங்கள் செய்த துரோகங்களையும், மக்களுக்கும், நாட்டிற்கும் எதிராக நீங்கள் செய்த துரோகங்களையும் மக்கள் மறக்கமாட்டார்கள். உங்களை மன்னிக்கமாட்டார்கள். இனியும் மக்கள் ஏமாறமாட்டார்கள் மிஸ்டர் ராகுல்.
                                                                  இப்படிக்கு உங்கள் ஆட்சியினால் மோசம் போன
                                                                                          சாதாரண குடிமகன்   

வெள்ளி, 1 நவம்பர், 2013

வல்லபாய் பட்டேல் மீது மோடிக்கு என்ன அப்படியொரு ''காதல்''....?

             
               சமீப காலமாக  தான் பிரதமாராகவே ஆகிவிட்டதாக கனவு கண்டுகொண்டு ஆட்டம் போடுவதும், மேடைகளிலும் பேட்டிகளிலும் முன்னாள் பிரதமர் நேருவை பலவாறு சாடுவதும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், அன்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடைசெய்தவருமான சர்தார் வல்லபாய் பட்டேலை தலையில் தூக்கிக்கொண்டு ஆடுவதுமான நரேந்திரமோடியின் வேலைகளும் லீலைகளும் சகித்துக்கொள்ளமுடியாமல் போகிறது. இவரது இந்த ஆட்டத்தை பி.ஜே.பி - காரர்களே சகித்துக் கொள்வார்களா என்ற சந்தேகம் வருகிறது.
          வல்லபாய் பட்டேல் மீது மோடிக்கு அப்படி என்ன காதல்... பாசம்....? பொதுவாகவே காதல் என்பது சாதி, மதம், மொழி, இனம், நாடு பார்க்காமல் வருவது. ஆனால் பி.ஜே.பி கட்சியை சேர்ந்த மோடிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பட்டேல் மீது இப்படியொரு பாசம் வந்திருக்கிறதென்றால் அதை ''காதல்'' என்று தானே சொல்லவேண்டும். ஆனால் இது திடீரென்று வந்ததல்ல. திட்டம் போட்டு வந்தது தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
          குஜராத் ''காந்தியின் மாநிலம்'' என்ற பெயரையும், புகழையும், வரலாற்றையும் மாற்றவேண்டும். அதற்கு அதே மாநிலத்தை சேர்ந்த இன்னொரு தலைவர் தேவைப்பட்டார். அதிலும் அவர் இந்துமத உணர்வாளராகவும் இருக்கவேண்டும். அப்படி ஒரு தலைவர் மோடிக்குத் தேவைப்பட்டார். அவர் தான் வல்லபாய் பட்டேல். பட்டேல் அப்பட்டமான ''காவி மனிதர்'' என்று தன்னைக் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும், இந்துமத உணர்வாளராகவும்  இந்துமத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-வுடன் மென்மைத்தன்மையுடனும் வாழ்ந்திருக்கிறார் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அதனால் தான் மோடி தனக்குத்தானே ''சின்ன சர்தார்'' என்ற நாமத்தை சூட்டிக்கொண்டார்.
         அதுமட்டுமல்லாமல், பட்டேல் அன்றைய தினம் கம்யூனிஸ்ட் கட்சிக்கெதிரான - கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்கேதிரான கொள்கையை உடைய காங்கிரஸ் கட்சிக்காரர்களில் முதன்மையானவர். அதனால் தான் இவர் உள்துறை அமைச்சராக பதவி வகித்த போது, அந்த அமைச்சர் பொறுப்பை கம்யூனிஸ்ட்டுகளை அடக்குவதற்கும், ஒடுக்குவதற்கும் அவர்களுக்கு எதிராக பயன்படுத்தினார். கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் உரிமைப் போராட்டங்களை கடுமையாக அடக்கி ஒடுக்கினார் என்பதற்காகவே அவருக்கு ''இரும்பு மனிதர்'' பட்டப்பெயர் அளிக்கப்பட்டது. அந்த ''இரும்பு மனிதர்'' என்ற நாமத்தின் மீதும் நம்ப ''நமோ''-விற்கு ஈர்ப்பு வந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். எப்படியாவது அந்த நாமத்தை ''சுட்டு'' தன் பெயரோடு சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், காங்கிரஸ் கட்சியிலிருந்த வல்லபாய் பட்டேலை அவரைக் கேட்காமலேயே பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்த்துக் கொண்டு, பட்டேலின் முகமூடியை எடுத்து மாட்டிக்கொண்டார். 
           அது போலவே மோடிக்கு பட்டேல் மீதான ''காதலுக்கு'' இன்னொரு காரணமும் இருக்கிறது.  இந்திய அரசியல் சாசனத்தில் சிறுபான்மை இனத்துவருக்கான இடஒதுக்கீட்டை அன்றே வல்லபாய் பட்டேல் கடுமையாக எதிர்த்திருக்கிறார் என்பதும், அவரது எதிர்ப்பினாலேயே சிறுபான்மை இனத்துவருக்கான இடஒதுக்கீடு இந்திய அரசியல் சாசனத்தில் இடம்பெறாமல் போய்விட்டது என்பதும் இன்றைக்கும் மறக்கமுடியாத அன்றை அரசியல் நிகழ்வு யாராலும் மறுக்கமுடியாது.
         அதுமட்டுமல்ல 1947 பிரிவினையின் போது  பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள் இந்தியாவிற்கு விரட்டியடிக்கப்பட்டதைப் போல, இந்தியாவில் இருந்து முஸ்லீம்களும் விரட்டியடிப்பட வேண்டும் என்று வல்லபாய் பட்டேல் கொதித்தார் என்பதும், ஆனால் நேரு பட்டேலின் அத்தகைய கருத்துக்களை கடுமையாக எதிர்த்தார் என்பதும், இஸ்லாமியர்கள் இந்தியாவின் ஓர் அங்கம் என்பதை உணர்த்தி, பட்டேலின் அத்தகைய கருத்துகளுக்கு நேரு முற்றுப்புள்ளி வைத்தார் என்பதும் மறக்கப்பட்ட வரலாறு.
            நேருவின் மீதான எரிச்சலுக்கும், பட்டேல் மீதான ''அதீதமான காதலுக்கும்'' அன்றைய இந்த நிகழ்வுகள் தான் காரணம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அதனால் தான் பிரதமர் பதவிக்காகவும், ஓட்டுக்காகவும் அவ்வப்போது பச்சோந்தியைப் போல் நிறம் மாறிக்கொண்டிருக்கும் நரேந்திரமோடி மேலே சொன்ன அந்த வரலாற்றுப் பிழைகளை மறக்காமல்,  '' தான் ஒரு வல்லபாய் பட்டேல்'' என்றும், அன்றைய பட்டேல் ''ஒரு மோடி'' என்றும் பிதற்றித் திரிந்துகொண்டிருக்கிறார்.