சமீப காலமாக தான் பிரதமாராகவே ஆகிவிட்டதாக கனவு கண்டுகொண்டு
ஆட்டம் போடுவதும், மேடைகளிலும் பேட்டிகளிலும் முன்னாள் பிரதமர் நேருவை
பலவாறு சாடுவதும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், அன்று
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடைசெய்தவருமான சர்தார் வல்லபாய் பட்டேலை தலையில்
தூக்கிக்கொண்டு ஆடுவதுமான நரேந்திரமோடியின் வேலைகளும் லீலைகளும்
சகித்துக்கொள்ளமுடியாமல் போகிறது. இவரது இந்த ஆட்டத்தை பி.ஜே.பி - காரர்களே
சகித்துக் கொள்வார்களா என்ற சந்தேகம் வருகிறது.
வல்லபாய் பட்டேல் மீது மோடிக்கு அப்படி என்ன காதல்... பாசம்....? பொதுவாகவே
காதல் என்பது சாதி, மதம், மொழி, இனம், நாடு பார்க்காமல் வருவது. ஆனால்
பி.ஜே.பி கட்சியை சேர்ந்த மோடிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பட்டேல் மீது
இப்படியொரு பாசம் வந்திருக்கிறதென்றால் அதை ''காதல்'' என்று தானே
சொல்லவேண்டும். ஆனால் இது திடீரென்று வந்ததல்ல. திட்டம் போட்டு வந்தது
தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
குஜராத்
''காந்தியின் மாநிலம்'' என்ற பெயரையும், புகழையும், வரலாற்றையும்
மாற்றவேண்டும். அதற்கு அதே மாநிலத்தை சேர்ந்த இன்னொரு தலைவர்
தேவைப்பட்டார். அதிலும் அவர் இந்துமத உணர்வாளராகவும் இருக்கவேண்டும்.
அப்படி ஒரு தலைவர் மோடிக்குத் தேவைப்பட்டார். அவர் தான் வல்லபாய் பட்டேல்.
பட்டேல் அப்பட்டமான ''காவி மனிதர்'' என்று தன்னைக் காட்டிக்கொள்ளவில்லை
என்றாலும், இந்துமத உணர்வாளராகவும் இந்துமத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-வுடன்
மென்மைத்தன்மையுடனும் வாழ்ந்திருக்கிறார் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
அதனால் தான் மோடி தனக்குத்தானே ''சின்ன சர்தார்'' என்ற நாமத்தை
சூட்டிக்கொண்டார்.
அதுமட்டுமல்லாமல், பட்டேல் அன்றைய
தினம் கம்யூனிஸ்ட் கட்சிக்கெதிரான - கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்கேதிரான
கொள்கையை உடைய காங்கிரஸ் கட்சிக்காரர்களில் முதன்மையானவர். அதனால் தான்
இவர் உள்துறை அமைச்சராக பதவி வகித்த போது, அந்த அமைச்சர் பொறுப்பை
கம்யூனிஸ்ட்டுகளை அடக்குவதற்கும், ஒடுக்குவதற்கும் அவர்களுக்கு எதிராக
பயன்படுத்தினார். கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் உரிமைப் போராட்டங்களை
கடுமையாக அடக்கி ஒடுக்கினார் என்பதற்காகவே அவருக்கு ''இரும்பு மனிதர்''
பட்டப்பெயர் அளிக்கப்பட்டது. அந்த ''இரும்பு மனிதர்'' என்ற நாமத்தின்
மீதும் நம்ப ''நமோ''-விற்கு ஈர்ப்பு வந்துவிட்டது என்று தான் சொல்ல
வேண்டும். எப்படியாவது அந்த நாமத்தை ''சுட்டு'' தன் பெயரோடு
சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், காங்கிரஸ் கட்சியிலிருந்த வல்லபாய்
பட்டேலை அவரைக் கேட்காமலேயே பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்த்துக் கொண்டு,
பட்டேலின் முகமூடியை எடுத்து மாட்டிக்கொண்டார்.
அது
போலவே மோடிக்கு பட்டேல் மீதான ''காதலுக்கு'' இன்னொரு காரணமும் இருக்கிறது.
இந்திய அரசியல் சாசனத்தில் சிறுபான்மை இனத்துவருக்கான
இடஒதுக்கீட்டை அன்றே வல்லபாய் பட்டேல் கடுமையாக எதிர்த்திருக்கிறார்
என்பதும், அவரது எதிர்ப்பினாலேயே
சிறுபான்மை இனத்துவருக்கான இடஒதுக்கீடு இந்திய அரசியல் சாசனத்தில்
இடம்பெறாமல் போய்விட்டது என்பதும் இன்றைக்கும் மறக்கமுடியாத அன்றை அரசியல்
நிகழ்வு யாராலும் மறுக்கமுடியாது.
அதுமட்டுமல்ல 1947
பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள்
இந்தியாவிற்கு விரட்டியடிக்கப்பட்டதைப் போல, இந்தியாவில் இருந்து
முஸ்லீம்களும் விரட்டியடிப்பட வேண்டும் என்று வல்லபாய் பட்டேல் கொதித்தார்
என்பதும், ஆனால் நேரு பட்டேலின் அத்தகைய கருத்துக்களை
கடுமையாக எதிர்த்தார் என்பதும், இஸ்லாமியர்கள் இந்தியாவின் ஓர் அங்கம்
என்பதை உணர்த்தி, பட்டேலின் அத்தகைய கருத்துகளுக்கு நேரு முற்றுப்புள்ளி
வைத்தார் என்பதும் மறக்கப்பட்ட வரலாறு.
நேருவின் மீதான எரிச்சலுக்கும், பட்டேல் மீதான ''அதீதமான காதலுக்கும்'' அன்றைய இந்த நிகழ்வுகள் தான் காரணம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அதனால் தான்
பிரதமர் பதவிக்காகவும், ஓட்டுக்காகவும் அவ்வப்போது பச்சோந்தியைப் போல் நிறம் மாறிக்கொண்டிருக்கும் நரேந்திரமோடி
மேலே சொன்ன அந்த வரலாற்றுப் பிழைகளை மறக்காமல், '' தான் ஒரு
வல்லபாய் பட்டேல்'' என்றும், அன்றைய பட்டேல் ''ஒரு மோடி'' என்றும்
பிதற்றித் திரிந்துகொண்டிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக