கட்டுரையாளர் : அ.மார்க்ஸ், எழுத்தாளர்
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ராஜோசோனா கிராமத்திற்குச்
சென்றார் Open இதழின் செய்தியாளர் ஹைமா. அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில்
ஒன்றாம் வகுப்புப் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரியும் ஒரு 57 வயதுப் பெண்ணை
நேர்காண்பது அவரது பயணத்தின் நோக்கம். பள்ளி நேரம் போக டாய்லெட், குளியலறை
எந்த வசதியுமில்லாத ஒரு பத்தடிக்குப் பத்தடி ‘வீட்டில்’ வசிக்கும் அப்பெண்ணின் பெயர் யசோதாபென் சிமன்லால் மோடி. குஜராத் முதலமைச்சர் நரேந்திர
மோடியின் தள்ளி வைக்கப்பட்ட மனைவி. அன்று காலை அந்த அரசுப் பள்ளிக்குத்
தன்னைக் காண வந்த ஹைமாவைப் பார்த்து எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளப்
பொங்கும் ஆர்வத்துடனும், இதழ் விரிந்த புன்னகையுடனும் ஓடிவந்த யசோதாவின்
தோற்றத்தை இப்படி விவரிக்கிறார் ஹைமா.
“சற்றுப் பொருந்தாத ஜாக்கெட், எளிய
பிரின்டட் புடவை, சற்றே வளைந்த முதுகு, சுருக்கங்கள் விழுந்த முகம், வேலை
செய்து கரடு தட்டிப்போன கரங்கள், அழுக்கேறியுள்ள வெடிப்புகள் நிறைந்த
பாதங்களில் ரப்பர் செருப்புகள்...” சுமார் 39 ஆண்டுகளுக்கு முன் வெறும்
ஏழாம் வகுப்பு படித்திருந்த 18 வயது யசோதாவிற்கும், அப்போது அரசியல்
ஏணியில் இவ்வளவு உயரம் ஏறியிராத நரேந்திர மோடிக்கும் அக்னி சாட்சியாகப்
பெரியோர்களின் ஆசியுடன் திருமணம் நடந்துள்ளது. எவ்வளவு நாட்கள்
சேர்ந்திருந்தார்களோ தெரியவில்லை. அரசியலில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த
மோடிக்கு இந்தப் படிக்காத கிராமத்துப் பெண்ணைப் பிடிக்கவில்லை. ஒரு சில
நாட்களிலேயே தந்தை வீட்டுக்கு அனுப்பப்பட்ட யசோதா அதன்பின் விட்ட படிப்பைத்
தொடர்ந்து, ஆரம்பப் பள்ளி ஆசிரியைப் பயிற்சியையும் முடித்து, ஒரு சில
அரசுப் பள்ளிகளில் பணியாற்றி, 92ம் ஆண்டு முதல் ராஜோசோனா வில் ஆசிரியையாகப்
பணியாற்றுகிறார். அநேகமாக சென்ற மாதத்தோடு அவர் ஓய்வும் பெற்றிருப்பார்.
அது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிராமம். மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல
பெயர். பள்ளியில் பயிலும் முஸ்லிம் சிறார்களின் முன்னேற்றத்தில் அவர்
காட்டும் அக்கறையை அனைவரும் பாராட்டுகின்றனர். ஒரு வேளை கணவரின்
பாவங்களுக்கான பிராயச்சித்தமாக இருக்குமோ....?
யசோதாவின் ஒரே ஆசை,
எதிர்பார்ப்பு எல்லாம் என்றாவது ஒரு நாள் அகமதாபாத்திலுள்ள முதலமைச்சர்
அலுவலகம் அல்லது வீட்டிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வரும் என்பதுதான்.
பாவம் யசோதா, மோடியின் தொலை பேசி வேறொரு பெண்ணைப் பின் தொடரக் கட்டளை
இட்டுக் கொண்டிருப்பதை அறியார்.
“என் கதையச் சொல்கிறேன்” என ஓடி வந்த
யசோதாவை பள்ளித் தலைமை ஆசிரியர் பிரவீண்குமார் வியாசின் இரும்புக் குரல்
தடுத்து நிறுத்தியது. “பள்ளி நேரத்தில் பேசக் கூடாது. வகுப்புக்குப் போ” என
அவர் ஆணையிட்டார். “இடைவேளையின் போது கொஞ்ச நேரம் பேசுறேன்” என யசோதா
கெஞ்சியதற்கு வியாஸ் மசியவில்லை. பத்திரிக்கையாளர்கள் யாருடனும் யசோதா
பேசக் கூடாது என்பது மேலிடத்து ஆணை. பரிதாபமாகத் திரும்பிச் சென்ற யசோதா
சற்று நேரத்தில் ஓடி வந்தார். “மன்னியுங்கள், என் கணவருக்கு எதிராக நான்
எதுவும் சொல்லமாட்டேன். அவர் பெரிய அதிகாரத்தில் உள்ளவர். என் பிழைப்புக்கு
ஒரே ஆதாரம் இந்த வேலைதான். இதுக்கும் எதுவும் ஆபத்து வந்துவிடக் கூடாது”
எனச் சொல்லித் திரும்பிப் பாராது நடந்தார். இடையில் பிரவீண்குமார் யார்
யாருடனோ தொலை பேசினார். பின் யசோதாவின் வகுப்பறைக்கு ஓடினார். ஹைமா
மீண்டும் யசோதாவைச் சந்தித்துப் பேச முயற்சித்தபோது அவர் வீறிட்டார். நான்
உங்களோடு பேச விரும்பவில்லை எனச் சொல்லி நகர்ந்தபோது ஒரு கணம் நின்று
அப்புறம் பேசலாம் எனச் சைகை செய்தவாறே அகன்றார். சற்று நேரத்தில் ஏகப்பட்ட
வாகனங்கள் பள்ளியை நோக்கி வந்தன. வண்டிகளைப் பள்ளி வளாகத்திற்குள்
நிறுத்திவிட்டுடு இறங்கியவர்கள் தலைமை ஆசிரியரின் அறையை நோட்டம் விட்டவாறு
சிறிது நேரம் நின்று விட்டுக் கலைந்தனர். மாலையில் பள்ளி விட்டதுதான்
தாமதம். தலையைக் குனிந்தவாறே ஓடி வந்த யசோதா அங்கு நின்றிருந்த ஆட்டோ
ஒன்றில் ஏறி 20 கி.மீ தூரத்தில் இருந்த தன் சகோதரனின் வீட்டிற்கு ஓடினார்.
சற்று நேரத்தில் ஒரு இளைஞன் அங்கு வந்தான். திகைத்து நின்ற ஹைமாவிடம் தன்
பெயர் பிரகாஷ் என்றும் ‘ராம் சேது’ என்கிற அரசு இதழ் ஒன்றின் நிருபர்
எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை விரைவாக அந்த கிராமத்தை விட்டு
வெளியேறுமாறு எச்சரித்துவிட்டுச் சென்றான்.
கிராமத்து மக்கள் சொன்னவற்றில்
ஒன்று: யசோதாவின் ஒரே பொழுது போக்கு ஜோசியம் பார்ப்பது. எல்லா
ஆரூடக்காரர்களிடமும் அவர் கேட்கும் கேள்வி அகமதாபாத்திலிருந்து அழைப்பு
வருமா என்பதுதான். ஜோசியர்கள் “நிச்சயம் வரும்” என்று நம்பிக்கை ஊட்டிக்
கொண்டே இருக்கின்றனராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக