பக்கத்தில் காந்தியை வைத்துக்கொண்டே
பொய்யை மட்டுமே பேசும்
இந்திய பிரதமர்...!
நேற்று முன் தினம் தான் இந்திய மக்கள் மிகுந்த எழுச்சியோடு ஒரு வீரம் செறிந்த போராட்டத்தை வெற்றிகரமாக முடித்த அடுத்த நாளே - நேற்று 21 - ஆம் தேதி இரவு பிரதமர் மன்மோகன் சிங் அவசர அவசரமாக முன்னெப்போதும் இல்லாத பழக்கமாக - வழக்கத்திற்கு மாறாக தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடம் உரையாற்றியது என்பது மன்மோகன் சிங்கிற்கு உதறல் ஏற்பட்டிருக்கிறது என்பதை தான் காட்டுகிறது.
நாடுதழுவிய போராட்டம் என்பது வழக்கமாக இடதுசாரிகள் பலமாக உள்ள மேற்குவங்கம், கேரளா மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்களில் மட்டுமே வெற்றிகரமாக நடைபெறும் என்கிற நிலை மாறி, நேற்று முன்தினம் இடதுசாரி கட்சிகள் மற்றும் சில எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்த நாடுதழுவிய கடையடைப்புப் போராட்டத்தில் நாடு முழுதுமுள்ள வணிகர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றிபெறச் செய்தது என்பது மக்களின் எழுச்சியை காட்டியது மட்டுமல்ல, மன்மோகன் சிங்கிற்கு பீதியையும் உண்டாக்கியிருக்கிறது. 20 - ஆம் தேதி இரவு மன்மோகன் தூங்கியே இருக்கமாட்டார் என்பது போல தான் தோன்றுகிறது. அதனால் தான் அவசர அவசரமாக அடுத்த நாளே மக்களை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
தொலைக்காட்சியில் மன்மோகன் சிங்கின் பேச்சைப் பாத்தீங்கன்னா... ''இந்த பூனையும் பாலை குடிக்குமா..?'' என்று தான் நமக்கு தோன்றும். சத்தியமே தவறாத உத்தமரைப் போலவே பேசினாரு. காந்திக்கு அடுத்தது நம்ப நாட்டில உத்தமரு யாருன்னு கேட்டா... சந்தேகமே வேண்டாம்... அது மன்மோகன் சிங்கு தானுங்க... அப்படி பேசினாருங்க.
20 - ஆம் தேதி போராட்டம் வெற்றியடைந்ததால் மக்களெல்லாம் இடதுசாரிகள் பின்னால் சென்றுவிட்டது போல் ''அவங்களை நம்பாதீங்க... அவங்களை நம்பாதீங்க.... உங்களை திசைத் திருப்பப் பார்க்கிறாங்க...உங்களை குழப்பப் பார்க்கிறாங்க... பொய் பிரச்சாரம் செய்யுறாங்க... அதனால அவங்கள நம்பிடாதீங்க... என் கைகளை பலப்படுத்துங்க...'' தொலைக்காட்சி பேச்சு முழுக்க மன்மோகன் சிங்கின் அலறல் சத்தம் தான் அதிகம் கேட்டது. என்னமா நடிக்கிராருங்க அந்த ஆளு... சிவாஜி கணேசன் எல்லாம் பிச்சை எடுக்கணும். அப்படியொரு நடிப்பு. சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடித்தாருங்க...
ஆனால் அவர் பேச்சில உண்மையே இல்லைங்க. பொய் பொய்யா பேசினாரு... அதுவும் பக்கத்திலேயே காந்தி பொம்மையை வைத்துக்கொண்டு அவர் பேசிய பேச்சை காந்தி கேட்டிருந்தார்னா.... கையில் இருக்கிற தடியை எடுத்து மன்மோகன் சிங் தலையில ஓங்கி ஒன்னு கொடுத்திருப்பாரு..
''சாதாரண மக்களுக்கு மானியம் கொடுத்து கொடுத்து பொருளாதாரம் சீர்குலைந்து போயிடுத்தாமாம். அதனால தான் பொதுமக்களுக்கு இதுவரை கொடுத்துவந்த மானியத்தை வெட்டுறாங்களாமாம். அதனால ஏற்படுகிற கஷ்டத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமாமாம்'' என்று சொல்லிக்கொண்டே தொலைக்காட்சியில தனது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த பொதுமக்களின் காதுல ஒரு கூடை பூவை மன்மோகன் சுத்தினாரு பாருங்க... மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு பிரதமர் மக்கள் மீது அக்கறையில்லாமல் இப்படித்தான் நடந்துகொள்வார் என்பதற்கு மன்மோகன் சிங்கே ஓர் உதாரணம்.
''மக்களுக்கு மானியம் வழங்குவதற்கு அரசிடம் பணம் காய்க்கும் மரமில்லை'' என்று மன்மோகன் சிங் ஆணவமாக பேசியிருக்கிறார். ''சரி.. எங்களுக்கு கொடுப்பதற்கு பணம் காய்க்கும் மரம் உன்ன்களிடம் இல்லை தான்... ஆனால் பெருமுதலாளிகளுக்கு நீங்கள் பல இலட்சம் கோடி அளவிற்கு மானியங்களும், வரிச் சலுகைகளும் தொடர்ந்து கொடுக்கிறீர்களே... அது மட்டும் எந்த மரத்தில் காய்க்கிறது....'' என்று நான் கேட்கவில்லை. விழித்துக்கொண்ட மக்கள் கேட்கிறார்கள்.
மக்களுக்கு கொடுப்பதற்கு அரசாங்கத்திடமே பணம் காய்க்கும் மரம் இல்லை என்றால், அரசு உயர்த்திய விலையை கொடுத்து வாங்குவதற்கு மக்களிடம் மட்டும் பணம் காய்க்கும் மரம் இருக்குமா... என்கிற குறைந்த பட்ச அறிவு கூட மன்மோகன் சிங்கிற்கு இல்லையா...? என்று மக்கள் கேட்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக