இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டின் மதுரை பொதுக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரியின் எழுச்சி உரை :
''இந்தியாவிற்கு
விதவிதமான கட்சிகளால் அமைக்கப்படுகிற விதவிதமான அரசாங்கங்கள் தேவையில்லை;
வேறுபட்ட கொள்கைகளே உடனடித்தேவை” என்று முழக்கமிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி
எம்.பி., நாட்டின் வளமிக்க இளைய தலைமுறையின் ஒட்டுமொத்த திறனையும்
முழுமையாகப் பயன்படுத்தி இந்தியாவை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்
செல்வதற்கான மாற்றுக்கொள்கைகள் இடதுசாரிக்கட்சிகள் வசமே உள்ளன என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்திய மாணவர் சங்கத்தின் 14 வது அகில இந்திய
மாநாட்டு பேரணி-பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சங்கத்தின் முன்னாள்
தலைவருமான சீத்தாராம் யெச்சூரி, உலகிலேயே மிக அதிகமான இளைய தலைமுறையை
பெற்றிருக்கும் ஒரே நாடு இந்தியாவே என்றும், மொத்த மக்கள் தொகையில் 25
வயதிற்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 54 சதவீதம் என்றும் குறிப்பிட்டார். இத்தனை மிகப்பெரிய இளைய சக்தியின் திறமைகள், ஆளும்வர்க்கத்தால்
வீணடிக்கப்பட்டு வருகின்றன என்று குற்றம் சாட்டிய அவர், ஆளும் வர்க்க
கட்சிகளால் நாட்டின் நலன்கள் சூறையாடப்படுவது, இந்த இளைய சக்தியின் மீதான
கடுமையான தாக்குதலும் ஆகும் என்றும் கூறினார்.
ஊழல்களும்,
மிகப்பெரிய அளவில் நடக்கும் கொள்ளைகளும் வெறுமனே ஒரு தவறான செயல் என்ற
அளவில் மட்டும் பார்க்கப்படுவதைத் தாண்டி, நாட்டின் இயற்கை வளத்தையும்,
மனித வளத்தையும் ஒட்டுமொத்தமாக சூறையாட புறப்பட்டிருக்கிற மிகப்பெரும்
தீமைகள் என்று உணர்ந்து, அவற்றை எதிர்த்து நிற்க வேண்டியது அவசியம்
என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாடாளுமன்றத்தை
காங்கிரசும், பாரதீய ஜனதா கட்சியும் முடக்கி வருகின்றன. இந்த கூட்டத்தொடர் முழுவதையும்
அவை முடக்கப்போகின்றதே என்பதே உண்மை. நிலக்கரி ஊழலில் தங்களது ரகசியங்கள்
வெளிவந்து விடக்கூடாது என்பதில் இரண்டு கட்சிகளுமே ஒற்றுமையாக
இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதித்தால், இவர்களது
அலமாரிகளிலிருந்து ஏராளமான எலும்புக்கூடுகள் புறப்பட்டு வரும் என்பதால்
தான், விவாதத்தைத் தவிர்ப்பதற்காக நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள்.
ஒவ்வொரு கூட்டத் தொடரையும் இதே போல் முடக்குவதே இவர்களது திட்டமாக
இருக்கிறது. மேட்ச் பிக்சிங் என்று கூறப்படும் சூதாட்டத்திற்கு,
நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சியும், காங்கிரசும் சேர்ந்து நடத்தும் நாடகமே
மிகச்சிறந்த சான்று என மிகக்கடுமையான முறையில் யெச்சூரி சாடினார். கல்வி
உரிமைச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மூன்றாண்டுகள்
உருண்டோடி விட்டன. ஆனால், இன்று வரையில் இச்சட்டம் அமல்படுத்தப்படவில்லை.
இச்சட்டத்தின்படி நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் கட்டப்படவேண்டும். ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு இலவச
பாடப்புத்தகங்கள் உட்பட அனைத்து வசதிகளையும் செய்து தரப்படவேண்டும். இதையெல்லாம் செய்வதற்கு ஒரு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி செலவாகும். ஐந்தாண்டு காலத்திற்கு ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் கோடி செலவாகும். ஆனால்,
இதற்கு பணமில்லை என்று கைவிரிக்கிறது மன்மோகன் அரசு; மறுபுறத்தில் 2 ஜி
ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்த நாட்டு மக்களின் சொத்து ரூ.1 லட்சத்து 76 ஆயிரம்
கோடி அளவிற்கு சூறையாடப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் அரசு பதவியேற்கும்
போது, அடுத்த நூறு நாட்களில் உணவுப் பாதுகாப்புச்சட்டத்தை கொண்டு வருவோம்
என்று உறுதியளித்தது. ஆனால், மூன்றாண்டுகள் ஓடிவிட்டன. இதுவரை அச்சட்டம்
நிறைவேற்றப்படவில்லை. நாடு முழுவதும் அனைத்துக் குடும்பங்களுக்கு மாதம்
ஒன்றுக்கு 35 கிலோ அரிசி, கிலோ 2 ரூபாய் விலையில் அளிக்கப்பட வேண்டும்
என்று இடதுசாரிக்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதை
அமல்படுத்துவதற்கு மொத்தம் ரூ. 1 லட்சம் கோடி இந்த அரசுக்கு செலவாகும்.
ஆனால், பணமில்லையென்று கைவிரிக்கிறது. மறுபுறத்தில் நிலக்கரி ஊழலில் ரூ.1
லட்சத்து 86 ஆயிரம் கோடி அளவிற்கு நாட்டின் வளம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்டார். இந்தியாவில்
தொடர்ச்சியாக அரசு அமலாக்கி வரும் புதிய பொருளாதார கொள்கைகள், மேலும்
மேலும் மெகா ஊழல்களுக்கு புதிய பாதைகளைத் திறந்து விட்டுள்ளது மட்டுமல்ல,
பெரும்பணக்காரர்களின் லாபத்திற்காக ஏழைகளின் வயிற்றில் ஓங்கி அடிக்கிறது.
கடந்த
ஆண்டு பட்ஜெட்டில் பெரும் பணக்காரர்களுக்கு ரூ.5.28 லட்சம் கோடி
வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டது. அதே பட்ஜெட்டில் ரூ.5.21 லட்சம் கோடி
அரசுக்கு பற்றாக் குறை என்று காட்டப்பட்டது. ஏழைகளுக்கு மானியத்தை
வெட்டிவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அந்தப் பணத்தை வாரி வழங்குகிற
நாசகார கொள்கை, அரசின் கொள்கையாக அமலாக்கப்பட்டு வருகிறது என்றும்
சீத்தாராம் யெச்சூரி சாடினார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசா கைது
செய்யப்பட்டார்; ஐபிஎல் ஊழலில் அமைச்சர் சரத்பவார் சிக்கினார். இன்றைக்கு
நிலக்கரி ஊழலில் நாட்டின் பிரதமரே நேரடியாக பொறுப்பேற்க வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது. அலிபாபாவும், 40 திருடர்களைப் போல மன்மோகன் அமைச்சரவை
நாட்டையே கொள்ளை யடித்துக் கொண்டிருக்கிறது என்றும் யெச்சூரி
குற்றம்சாட்டினார்.
இவர்களுக்கு மாற்றாக ஆட்சியைப் பிடிக்க பாரதீய ஜனதா கட்சி தீவிரமாக
முயற்சிக்கிறது. ஆனால், அக்கட்சிக்கு அந்த களம் இல்லை என்பதே உண்மை.
ஆனாலும் கூட, நரேந்திரமோடியும், நிதின்கட்காரியும் பிரதமர் பதவிக்கு
இப்போதே தயாராகிவிட்டார்கள் என் றும் அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக