பதினேழு நாட்கள் நடைபெறவேண்டிய பாராளுமன்ற இரு அவைகளும் 24 மணிநேரங்களே தனது அலுவல்களை கவனித்து, பல்வேறு அமளிகளுக்கு நடுவே, அவசரகதியில் விவாதங்கள் எதுவும் நடைபெறாமலும் மக்களின் பிரச்சனைகள் பற்றி எதுவும் விவாதிக்காமலும் நேற்றோடு முடிவுக்கு வந்தது என்பது வாக்களித்த இந்திய மக்கள் தலைகுனிய வேண்டிய நிகழ்வாகும்.
2009 - லிருந்து பல்வேறு ஊழல்களை நிகழ்த்தி சாதனை படைத்து வரும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தற்போதைய புதிய ஊழலான நிலக்கரி சுரங்க ஊழலை காரணம் காட்டி, காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் மறைமுகக் கூட்டாக இந்த மழைக்கால கூட்டத்தொடர் இயங்காமல் முடக்கி வைத்ததில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. பாராளுமன்ற முடக்கம் என்பது நமக்கு புதிதில்லை தான். ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக பாராளுமன்ற முடக்கம் என்பது ஒரு நடைமுறை வழக்கமாகிப் போய்விட்டது. மக்களால் தங்கள் கட்சி ஆட்சிப் பொறுப்பிலிருந்து தூக்கியெறிந்த பின்னர் 2004 - ஆம் ஆண்டிலிருந்து பாரதீய ஜனதா கட்சி ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படாமல், நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளை நடக்கவிடாமல் முடக்குவதையே தொழிலாக கொண்டு வருகிறது. இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேட்கும் கேள்விகளிலிருந்தும் அது சம்பந்தமான விவாதங்களிலிருந்தும் தப்பித்துக்கொள்ள காங்கிரஸ் கட்சிக்கும் இந்த சூழல்கள் தான் தேவைப்படுகின்றன.
அதுவும் இந்த முறை இந்திய பாராளுமன்ற வரலாற்றிலேயே, ஒரு கூட்டத்தொடர் முழுமையாக எந்தவித ஆக்கப்பணிகள் நடைபெறாமலும், விவாதங்கள் இல்லாமலும், கூச்சல் - குழப்பங்களோடு அனைத்து நாட்களும் முடக்கப்பட்டது என்பது இதுவே முதல் முறையாகும். இந்த செயல் என்பது இந்த நாட்டிற்கே அவமானம் என்பதும், வாக்களித்த மக்களுக்கு இவர்கள் காட்டும் அவமரியாதை என்பதும் யாராலும் மறுக்கமுடியாது.
இது போன்ற நடவடிக்கைகள், எதிர்காலத்தில் பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவார்கள் என்பதையும், எதிர்காலத்தில் பாராளுமன்ற நடவடிக்கை என்பது ஒரு கேலிக்கூத்தாக மாறிவிடும் என்பதையும் இந்த இரு கட்சிகளும் முதலில் உணரவேண்டும்.
இது போன்ற ஜனநாயக விரோத செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க அரசு உருப்படியாக ஏதாவது யோசித்தாகவேண்டும். இதற்காக அரசு, குறிப்பாக மக்களவைத்தலைவரும், மாநிலங்களவைத்தலைவரும் அனைத்துக்கட்சித்தலைவர்களுடன் கூடி கலந்தாலோசித்து, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் அல்லது கடுமையாக்க வேண்டும். அப்போது தான் இது போன்ற கூத்தெல்லாம் தடுத்து நிறுத்த முடியும்.
பாராளுமன்றமோ அல்லது சட்டமன்றமோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நான்கு விதமான உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்கள்....
(1) அவை நடவடிக்கைகளில் தவறாமல் கூட்டத்தொடர் முழுதும் அவைக்கு வந்திருந்து விவாதங்களில் பங்குகொள்ளும் உறுப்பினர்கள். நம் நாட்டில் இவர்கள் மிகச் சிலராகத் தான் இருப்பார்கள். பெரும்பாலும் இவர்கள் இடதுசாரிக்கட்சியை உறுப்பினர்களாக தான் இருப்பார்கள். இவர்கள் தான் கூட்டத்தொடரின் ஆரம்ப நாளிலிருந்து, இறுதி நாள் வரையில் கண்டிப்பாக அவைக்கு வந்திருந்து அனைத்து விவாதங்களிலும் பங்குகொள்பவர்கள். அதனால் தான் எந்தவிதமான மக்கள் விரோத - தேச விரோத மசோதாக்கள் அமைச்சர்களால் கொண்டுவரப்பட்டால் உடனே எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் - வலுவான விவாதங்களில் பங்கு கொள்பவர்கள் இடதுசாரிகளாக தான் இருப்பார்கள்.
(2) இந்த வகை உறுப்பினர்கள் கடமைக்கென்று அவைக்கு வருவார்கள். ஆனால் அவை நடவடிக்கைகளில் எதிலும் நாட்டம் இல்லாமல் அவையிலேயே தூங்குபவர்கள்.
(3) தங்களை எதற்காக மக்கள் தேர்ந்தேடுத்தார்கள் என்ற சிந்தனையே இல்லாமல், அவைக்கே வராமலும், ஜனநாயகக் கடமைகளை ஆற்றாமலும் வெளியே ''வேறு'' வேலைகளை பார்த்துக்கொண்டிருப்பவர்கள். தங்களுடைய பதவியை பாதுகாத்துக்கொள்ள தேவையான குறைந்த பட்ச ''கட்டாய வருகையின் தேவைக்காக'' எப்போதாவது மன்றத்திற்கு வந்து அவைக்கு வெளியே உள்ள வருகைப்பதிவேட்டில் கையோப்பம் இட்டு செல்பவர்கள். இவர்கள் வருகைப்பதிவேட்டில் கையொப்பம் இடுவார்களே தவிர அவையை எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள். இவர்கள் மழைக்குக் கூட அவையின் பக்கம் ஒதுங்கமாட்டார்கள். ஆனால் உறுப்பினருக்கான ஊதியத்தையும், படிகளையும், சலுகைகளையும் கூசாமல் அனுபவிக்கிறவர்கள். ஜனநாயகத்தில் இப்படியும் சில ஜென்மங்கள். இவர்கள் தேசத்தின் மீதும், மக்களின் மீதும் அக்கறையில்லாதவர்கள் - பொறுப்பில்லாதவர்கள்.
(4) இந்த வகையை சேர்ந்தவர்கள் ஜனநாயகத்தில் மிகவும் ஆபத்தானவர்கள். பசுத்தோல் போர்த்திய புலிகள். இவர்கள் நாடாளுமன்றத்திற்கு தவறாமல் வருபவர்கள். ஆனால் வருகைப்பதிவேட்டில் கையொப்பம் போட்டுவிட்டு அவைக்கும் வந்து விடுவார்கள். ஆனால் ஏதாவதொரு காரணத்தை எடுத்துக்கொண்டு அவையில் கூச்சல் - குழப்பத்தை ஏற்படுத்தி அவை நடவடிக்கைகளை முடக்கிவிடுவார்கள். இவர்கள் செய்வது நாட்டிற்காக - மக்களுக்காக - நல்லதுக்காக செய்வது போலத்தான் தெரியும். ஆனால் அத்தனையும் திரைமறைவில் ஆட்சியாளர்களோடு உடன்பட்டு செய்யும் அயோக்கியத்தனம். ஜனநாயகத்தில் இது ஆபத்தான செயல். இதை தான் நாம் நேற்றுவரை நம் பாராளுமன்றத்தில் நாம் பார்த்தோம்.
உண்மையிலேயே பாரதீய ஜனதா கட்சியினர் தேசத்தின் மீது அக்கறையுள்ளவர்களாக இருந்தால், ஊழலை எதிர்ப்பவர்களாக இருந்தால் அதை பற்றி விவாதிக்க பாராளுமன்றத்தை முடக்காமல் நடத்தவிட்டிருக்க வேண்டும். நாட்டில் இத்தனைப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. அதில் பிரதமர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்றால் அதைப்பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் செய்யாமல் வேறு எங்கே பேசுவது...? அப்படி பாராளுமன்றத்தில் விவாதம் செய்யாமல் எப்படி உண்மைகள் வெளியே வரும்...? இந்த குறைந்தபட்ச அறிவுக்கூட பாரதீய ஜனதா கட்சியினற்கு இல்லாமல் போய்விட்டதா...?
இவைகள் எல்லாம் பாரதீய ஜனதா கட்சியினற்கு தெரியாமல் இல்லை. அனால் ஏன் பாராளுமன்றத்தை வெறித்தனமாக முடக்கவேண்டும். காரணம்....
ஒன்று... நிலக்கரி ஊழல் பற்றி பாராளுமன்றத்தில் விவாதித்தால், காங்கிரஸ் கட்சியின் அவலச்சணங்கள் மட்டுமல்ல, ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் - தூய்மையானவர்கள் என்று தங்களை வேஷம் போட்டுக் காட்டிக்கொள்ளும் பாரதீய ஜனதா கட்சியின் அவலச்சனங்களும் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்ற அச்சத்தில் தான் பாரதீய ஜனதா கட்சியினர் இத்தனை வெறியோடு முடக்கினார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். இந்த இரு கட்சியினரின் அலமாரிகளில் இருந்தும் எலும்புக்கூடுகள் வெளியே வந்துவிடும் என்கிற அச்சம் பாரதீய ஜனதா கட்சியினரை பேயாய் பிடித்து ஆட்டியதால் தான் பாராளுமன்றத்தை பேயாய் பிடித்து முடக்கினார்கள் என்பதை நாடு நன்கு அறியும்.
கடைசி இரண்டு வகை உறுப்பினர்களால் அரசுக்குத் தான் அனாவசிய செலவு. தேவையில்லாமல் மக்களின் வரிப்பணம் உருப்படியில்லாத இந்த ''இரு வகை'' உறுப்பினர்களுக்கு சேருகிறது. அதனால் அரசு இது போன்ற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை ''திரும்ப அழைக்கும் உரிமையை'' மக்களுக்கு தரவேண்டும். அல்லது இவர்கள் அவைக்கு வராமல் வெளியே இருக்கும் நாட்களிலும், அவைக்கு வந்து வருகைப்பதிவேட்டில் கையொப்பம் போட்டுவிட்டு வெளியேறும் நாட்களிலும், அவைக்கு வந்து கொயோப்பமும் இட்டு அவையை நடத்தவிடாமல் ரகளையில் ஈடுபட்டு அவையை ஒத்திவைக்கும் நாட்களிலும் அல்லது அவையை முடக்கும் நாட்களிலும் இந்த ''மாண்புமிகு'' உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தையும், கூட்டத்தொடர் படியையும், மற்ற சலுகைகளையும் கண்டிப்பாக வெட்டவேண்டும். அவைக்கு வாராமலேயே - அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமலேயே - அவை நடவடிக்கைகளை முடக்கிவிட்டு ஊதியம் பெறுவதும், மற்ற சலுகைகளை அனுபவிப்பதும் எப்படி நியாயமாகும்...? எப்படி முறையாகும்...? அப்படி அனுபவிப்பதை இவர்களின் மனசாட்சி எப்படி இடமளிக்கிறது...?
அனைத்து அரசுத்துறைகளிலும், அரசுத்துறை நிறுவனங்களிலும் வேலை செய்யும் ஊழியர்களோ அல்லது தொழிலாளர்களோ வேலைநிறுத்தம் செய்தால், வேலைநிறுத்தம் செய்யும் அத்தனை நாட்களையும் ''வேலை செய்யா'' நாட்களாக அறிவித்து ''NO WORK - NO PAY'' என்ற விதிகளின் அடிப்படையில் படிகள் உட்பட ஊதியத்தையும், அன்றைய மற்ற சலுகைகளையும் வெட்டுவது என்பது இன்றும் நடைமுறையில் உள்ளது. இதை அனைத்து இடதுசாரி தொழிற்சங்கங்களும் நியாயத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதே விதிமுறைகளை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ''நடத்தை விதிமுறைகளில்'' புகுத்தினால் தான் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்பது எதிர்காலத்தில் கூச்சல் - குழப்பமின்றி, முடக்குவாதமின்றி அமைதியாக நடைபெறும். தேசத்திற்கான - மக்களுக்கான ஆக்கப்பணிகளை அக்கறையோடும், கவனத்தோடும் நாடாளுமன்றத்தில் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் செம்மையாக கடமையாற்றுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக