புதன், 1 பிப்ரவரி, 2012

நீர்த்து போன தொழிற்தகராறு சட்டம் தொழிலாளர்களை பலி வாங்குகிறது....!


   கிடப்பில் போடப்படும்  ஜனநாயக வழிமுறை
                             குர்கானில் துவங்கி தமிழகத்தின் ஹூண்டாய் வரையில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட சம்பவங்கள் புதுச்சேரியின் ஏனாம் பகுதியில் தொழிற்சங்கத்தலைவரைக் கொல்வதில் போய் முடிந்துள்ளது. தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு எதிராக காவல்துறையைப் பயன்படுத்துவது ஜனநாயக நாட்டிற்கு அழகில்லை என்பதுதான் நியதி. தொழிலாளர்கள் பிரச்சனையில் காவல் துறை தலையீடு என்பது கடும் கண்டனத்துக்குரியது. இத்தகைய பிரச்சனைகளைத் தொழிலாளர்கள் துறை தான் தீர்க்க வேண்டும். ஆனால் ஆளும் வர்க்கத்தினர் இந்த வழிமுறையைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள் என்பதைத் தான் அண்மையில் நடந்துள்ள சம்பவங்கள் காட்டுகின்றன.
                    தொழிலாளர்கள் உரிமைகளில் அரசின் தலையீடு என்பது ஒன்றும் புதிதல்ல. சட்ட ரீதியாக முதலாளிகளுக்கு ஆதரவான நிலையை உருவாக்கும் வேலைகளுக்கும் பஞ்சமில்லை. 100 தொழிலாளர்களுக்கு மேல் பணி புரியும் தொழிற்சாலைகளில், தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கவோ, கதவடைப்புச் செய்யவோ, தொழிற்சாலையை மூடவோ அரசின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்கிற தொழிற்தகராறு சட்டத்தின் விதியைத் திருத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சிக்கிறது. குறைந்தது 1000 தொழிலாளர்கள் என்று முதலில் அதை மாற்றிவிட்டு, பின்னர் விதியையே தூக்கிவிடுவதுதான் திட்டம். இத்திட்டத்திற்கு அச்சாரம் போட்டது பாஜக தலைமையிலான அரசாகும். மக்கள் விரோத நடவடிக்கைகளில் காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டுக்கும் எந்த வித வேறுபாடுமில்லை என்பதற்கு இது மற்றொரு சான்றாகும். தொழிலாளி குரல் எழுப்பினால் அது சட்டம்- ஒழுங்குப்பிரச்சனை என்று அடுத்த விநாடியே முடிவு செய்து விடுகிறார்கள். அதுதான் ஏனாமிலும் நடந்திருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன.
                      தொழிலாளர்கள் உரிமைக்குரலை எழுப்பும் போது, எழுப்ப வேண்டிய இடம் உள்ளிட்ட பல்வேறு சட்டரீதியான அம்சங்கள் பற்றியெல்லாம் ஆட்சியாளர்கள் பேசுகிறார்கள். ஆனால், எந்த விதமான நியாயமான காரணமுமின்றி 75, 80 விழுக்காடு தொழிலாளர்களை காலம் காலமாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற பெயரில் குறைவான கூலி கொடுத்துச் சுரண்டும் செயல் பற்றி எந்தக்கவலையும் தெரிவிப்பதில்லை. சட்டப்பூர்வமாக தொழிற்சங்கம் அமைப்போம் என்றால், அவர்களை முதலாளிகள் வேலையிலிருந்து தூக்கும்போது, அதற்கு ஆதரவாக முட்டுக்கொடுக்கும் காரியத்தில்தான் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் ஈடுபடுகிறார்கள். ஒரு படி மேலேபோய், அரசுத்துறைகளில்கூட ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற நாசகர முறையை அமலாக்குகிறார்கள்.
                  இதற்கு மாறாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சிகளில்தான், தொழிலாளர்கள் பிரச்சனை என்றால் அதில் காவல்துறை தலையீடு கூடாது என்று தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து. அந்த மாநிலங்களில் பிரச்சனை எழும்போது தொழிலாளர், முதலாளிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகியவை பங்கேற்கும் முத்தரப்பு பேச்சு வார்த்தைகளின் மூலமாகத்தான் தீர்வு காணப்பட்டிருக்கிறது. இத்தகைய அணுகுமுறைதான் தொழில் அமைதிக்கு இட்டுச் செல்லும் என்பதே நிதர்சனமான உண்மை.

கருத்துகள் இல்லை: