சனி, 11 பிப்ரவரி, 2012

என்னை கவர்ந்த தொழிற்சங்கத்தலைவர் - தோழர் உ.ரா.வரதராஜன்


           ஆயிற்று! இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆயிற்று. WR என்று நாங்கள் அன்போடு அழைக்கும் தோழர்.உ.ரா.வ்ரதராஜன் மறைந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.   
         தோழர் WR அவர்கள் 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது நான் பள்ளி மாணவி. அப்பா நாளிதழில் வெளியான அவருடைய பெயரைப்பார்த்து விட்டு ‘இவர் என்னுடைய நண்பர்’ என்று கூறி அப்பா இளவட்டமாய்த் திரிந்த காலத்தில் WR கையெழுத்திட்டு அளித்த புத்தகம் ஒன்றையும் காண்பித்தார். தேர்தல் முடிவுகள் வந்தபின் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் WR. அப்போது கல்கியில் அவருடைய புகைப்படம் அட்டையில் வெளியாகி இருந்தது. அப்பா மிகவும் சந்தோஷப்பட்டார். அதன்பின் சட்டமன்ற்த்தில் அவர் பேசியது குறித்தெல்லாம் நாளிதழ்களில் பார்க்கும்போது தூரத்தில் இருந்து சந்தோஷப்படும் நண்பராக அப்பா இருந்தார். 
            WR ஒரு கம்யூனிஸ்ட், தொழிற்சங்கவாதி, மொழிவளம் உள்ளவர் என்பதைத் தவிர்த்து அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்பது அப்பா சொல்லித்தான் எனக்குத் தெரியும். அவர் இலக்கிய ஆர்வம் மிக்கவர். ‘அருவி’, 'ஆதவன்’ ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராய் இருந்து அப்போது எழுத வந்த இளைஞர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். தேனருவி, மலர் வண்ணன், பூதலூர் முத்து என்று அப்பாவின் நண்பர்கள் பலருடன் எழுத்து மூலமே அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. ஒரத்தநாட்டில் மட்டும் 300 சந்தாக்களை அப்பாவும் அவருடைய நண்பர்களும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். ‘சர்வோதய இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட WR கதர் ஆடையையே அணிந்து வந்தார். அவர் மாநிலம் முழுவதும் சென்று காந்தீயக் கொள்கைகளை பிரசாரம் செய்து வந்தார். ம.பொ.சி.யின் இயக்கத்தில் சிறிது காலம் பணியாற்றினார். அவர் பி.காம்.பட்டதாரி. வேலை கிடைக்காமல் இருந்தார். சென்னையில் ரிசர்வ் வங்கியில் வேலை கிடைத்தது. அதன்பின் தொழிற்சங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். தொழிற்சங்கத் தொடர்புகள் அவருடைய கொள்கைகளையும் வாழ்க்கைப் பாதையையும் மாற்றின. தொழிற்சங்கம் மூலம் மார்க்சிஸ்ட் கட்சியின் பால் ஈர்க்கப்பட்டு, கட்சியின் முழுநேர ஊழியரானார். அதன்பின் அவருடைய பணிப்பளு அதிகமானதால் பழைய நண்பர்களுடன் ஓர் இடைவெளி ஏற்பட்டு தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இப்போது மாதிரி கைபேசி, மின்னஞ்சல் எல்லாம் உண்டா என்ன? கடிதப் பரிமாற்றம் ஒரு கட்டத்தில் நின்றுபோக தொடர்பறுந்து போனது. இவையெல்லாம் அப்பா எனக்கு சொன்ன தகவல்கள்.      
          காலச்சுழற்சியில் WR டெல்லியிலிருந்து கட்சிப்பணி செய்துவிட்டு, மீண்டும் தமிழகம் வந்தார். அப்போது நான் கட்சியில் இருந்தேன். ’தீக்கதிர்’ நாளிதழின் அலுவலகத்துக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அவர் தீக்கதிரின் முதன்மை ஆசிரியர். மிகச் சாதாரணமாக ஒரு கட்சி உறுப்பினராக நான் அறிமுகம் ஆனேன் அவருக்கு. மிகுந்த தோழமையுடன் பேசுவார். அவர் டெல்லியில் இருந்த காலத்தில் தீக்கதிருக்கு முதன்முதலாக ஓர் இணையதளத்தை உருவாக்கினேன். ஒருநாள் தோழர் ஒருவர் அவரிடம் இந்தத் தகவலைச் சொல்ல ‘‘இதை ஏன் என்னிடம் முன்னமே தெரியப்படுத்தவில்லை?’’ என்று வருத்தப்பட்டாலும், வருத்தத்தைவிட அதில் மகிழ்ச்சி அதிகம் இருந்தது. அதன்பின் அவர் என்னிடம் பேசியவிதத்தில் ஒருவித கூடுதல் உரிமையும் அன்பும் வெளிப்பட்டன. நான் எப்போதாவது எழுதுவதை வாசித்து வந்தார் என்பது அவ்வபோது அவருடைய பேச்சில் வெளிப்படும். அதன்பின் ஒரு நாள் ‘காவியனின் மகள் நான்’ என்றேன். அவர் பார்த்த பார்வையை இன்றைக்கும் மறக்க் முடியாது. நாற்காலியில் அமர்ந்திருந்தவர் துள்ளி எழுந்து வந்து என் கரஙகளைப் பற்றிகொண்டார். ‘இதை ஏன் என்னிடம் முன்னமே தெரியப்படுத்தவில்லை?’ என்றார் இப்போதும். தன் நண்பரின் மகள் என்கிற பாசம் அவர் ஸ்பரிசத்தில் தெரிந்தது. அதன்பின் அவர் என்னிடம் பேசிய விதத்தில் தந்தைமையை உணர்ந்தேன்.
                அப்பா தமிழாசிரியராய் இருந்து ஓய்வு பெற்றார், WR முதன்மை ஆசியராய் இருக்கும் அதே தீக்கதிர் நாளிதழுக்கு, நாகப்பட்டினம் நிருபராய் ஆனார். பழைய காலம் போலவே இப்போதும் WR ஆசிரியர். அப்பா அதில் எழுதுபவர். அவர்கள் நிறைய கூட்டங்களில் சந்தித்துக்கொண்டார்கள். அப்பாவைப் பார்க்கும்போதெல்லாம் என்னையும், என்னைப் பார்க்கும்போதெல்லாம அப்பவையும் அன்போடு விசாரிப்பார். ஒரு கட்டத்தில் வேலைப்பளுவால் நான் ‘தீக்கதிர்-வண்ணக்கதிர்’ பகுதிக்கு எதுவும் எழுதாமல் இருந்தபோது அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. ‘உன் பங்களிப்பு எதையும் நான் கொஞ்ச நாட்களாக வண்ணக்கதிரில் பார்க்கவில்லை. ஏன் எழுதுவதில்லை?’ என்று உரிமையோடு கேட்டு எழுதச் சொல்லி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். பேஸ்புக்கில் எனக்கு நண்பரானார்.                           
                எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். நான் ‘செங்கடல்’ படப்பிடிப்புக்காக ரயிலில் ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்தபோது வந்தது அந்த அழைப்பு. ஒரு பத்திரிகையாளர் அழைத்தார்.’WR எங்கே?’ என்றார். ‘ஏன்?’ என்றேன். நாளைக்கு வெளியாகவிருக்கும் நக்கீரனில் ‘அவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியாவதாக தகவல். உறுதிப்படுத்த முடியுமா?’ என்றார். நாடி நரம்பெல்லாம் அதிர்ந்து ரயிலை விட வேகமாக தடதடத்தன. பேச்சு வரவில்லை. என்னால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. ‘நிச்சய்ம்..இந்தச் செய்தி பொய்யாக இருக்கவேண்டும்’ என்கிற பதைபதைப்போடு கைபேசியில் இரவு முழுக்க ஒவ்வொருவராக அழைத்து அவர் குறித்து விசாரித்தபோது, யாருக்கும் தெரியவில்லை. அவர் ஒரு வாரமாகக் காணவில்லை என்பதைத் தவிர வேறு யாருக்கும் எதுவும் தெரியவில்லை. பேசிய நண்பர்கள் எல்லோரும் நான் சொல்வது தவறான தகவலாக இருக்கக்கூடும் என்றார்கள். அவர் அப்படி தற்கொலை செய்து கொள்ளக்கூடியவர் அல்ல என்றார்கள். நானும் அப்படியே நம்பினேன். மறுநாள் ராமேஸ்வரம் சென்றவுடன் நக்கீரன் வாங்கிப்பார்த்தேன்...அந்தக் கடிதம்...அந்த வரிகள்..மனம் கலங்கிப்போனது. எங்கிருந்தாவது திடீரென வந்து ‘இதோ! நான் இருக்கிறேன்’ என்று சொல்ல மாட்டாரா என்று மனம் ஏங்கத் தொடங்கியது. அதன்பின் நடந்ததெல்லாம் எல்லோருக்கும் தெரியும். 
                      அவருடைய உடல் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்துக்கு வந்தடைந்தபோது, கண்ணீரோடு அவரின் இறுதி நிகழ்வுகளை கேமிராவில் சேமித்தேன். ஊர்வலம் கிளம்பி, மின்மயானத்தை அடைந்து அவருடைய உடலை மின்சாரத்திற்குத் தின்னக் கொடுத்து அவர் புகையாய் மாறி புகைபோக்கியின் வழியாக மேலே காற்றோடு கலந்தது வரை ஒவ்வொரு கணத்தையும் படம்பிடித்தேன். வீட்டுக்கு வந்து கணினியில் இணைத்து அந்தப்படஙக்ளைப் பார்க்க முயன்றபோது முதல் இரண்டு படங்களுக்கு மேல் பார்க்க முடியாதபடி என்னை ஏதோ ஒரு உணர்வு ஆட்கொண்டது. கண்களை இருட்டிக்கொண்டு மயக்கம் வருவது போன்றிருந்தது. அதன்பின் பலமுறை அந்தப் படஙக்ளைப் பார்க்க நான் முயன்றபோது இதே போன்றதொரு உணர்வு மேலோங்கி இன்று வரை பார்க்கப்படாத படங்களாகவே அவை இருக்கின்றன. ஒருவேளை அழகும், கம்பீரமும் நிறைந்த தோழர் WR-ன் உருவத்தை அப்படி சிதைந்து, அடையாளம் தெரியாமல் கருத்துப் போய் இருப்பதை பார்க்க முடியவில்லையோ என்னால் என்று தோன்றுகிறது. ஆனால் உடலை அருகில் இருந்து பார்த்த எனக்கு படங்களைப் பார்க்க வலுவில்லாமல் போனது ஏன் என்று புரியவில்லை.                                         இன்றுவரை ஜீரணிக்க முடியாத மரணமாக அவருடைய மரணம் இருக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல. ஒரு துயரை இன்னொரு துயர் வந்து மறக்கச் செய்யும். அப்படித்தான் இவருடைய மரணம் வந்து, என்னால் மறக்க முடியாமல் அனுபவித்து வந்த ஒரு துயரைக் கடக்க வைத்தது. இவருடைய மரணத்தோடு ஒப்பிடுகையில் எவ்வித துயரமும் தூசியாய்த் தெரிந்தது எனக்கு. கனத்த மனத்துடன் இருந்த எங்கள் தோழர் WR-ன் உடலைச் சுமந்து மிதந்த போரூர் ஏரியை கடக்கும்போதெல்லாம் இன்றைக்கும் கண்ணீர் விடுவது வாடிக்கையாகி விட்டது. அவருடைய பேஸ்புக் பக்கத்துக்கு தினமும் சென்று பார்ப்பேன். அவர் உயிருடன் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் செய்திகளும் அலைக்கழித்தன. கொஞ்ச நாள் கழித்து அவருடைய பாஸ்வோர்ட் தெரிந்த யாரோ அவருடைய கணக்கை டீ-ஆக்டிவேட் செய்தனர். அன்றைக்குத் தான் அந்தப் பக்கத்துக்குச் செல்வதை நிறுத்தினேன். திடீரென்று ஒரு நாள் முன்னால் வந்து ’நான் உயிரோடுதான் இருக்கிறேன்’ என்று அவர் சொல்ல ‘இதை ஏன் என்னிடம் முன்னமே தெரியப்படுத்தவில்லை?’ என்று அவர் பாணியில் நான் கேட்கவேண்டும் என்று மனம் ஆசைப்படுகிறது. ஆசைப்படுவதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன?
நன்றி : கவின் மலர் 

4 கருத்துகள்:

kashyapan சொன்னது…

மனதை நெகிழச்செய்கிறது.கவின் மலரினெழுத்து. அவர் ஏரியில் மிதந்தபோதே அடையாளம் கண்ட காவல்துறையும் ,அவர்களுடைய எஜமானர்களும் அரசியல் லாபத்திற்காக அதனை வேளிப்படுத்தாமல் இருந்தது மன்னிக்க முடியாத ஒன்று.72ம் ஆண்டு சென்னையில் நடந்த அகில இந்திய A.I.I.E.A மாநாட்டில் அவர் தூய்மையான இந்தியில் பேசியது இன்றும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.---காஸ்யபன்

puduvairamji.blogspot.com சொன்னது…

அற்புதமான வரலாற்று நிகழ்வினை நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழர்....

nakkiran prakash சொன்னது…

enakku kanneer varugirathu nakkiranil nan padhivu seidha katturaigalil kaneer vazhinthada nan ezhuthiya ezhuthukkal wrv patriyathuthan adhai menndum ninaivukku kondu vandha thozharin ezhuthukkalum avar engalai pondra aayirakkanakkana thozhargalin kanneerai sonnatharkku nandri andha uthamarin meedhu vizhundha pazhiyai naan thudaikka muyandrathu en vaazh nalil kidaitha bakkiam avaraaaaai indha gadhikku aalakiyarvargalai naan mannikka thayaraga illai

nakkiran prakash சொன்னது…

enakku kanneer varugirathu nakkiranil nan padhivu seidha katturaigalil kaneer vazhinthada nan ezhuthiya ezhuthukkal wrv patriyathuthan adhai menndum ninaivukku kondu vandha thozharin ezhuthukkalum avar engalai pondra aayirakkanakkana thozhargalin kanneerai sonnatharkku nandri andha uthamarin meedhu vizhundha pazhiyai naan thudaikka muyandrathu en vaazh nalil kidaitha bakkiam avaraaaaai indha gadhikku aalakiyarvargalai naan mannikka thayaraga illai