கடந்த ஏழு மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தான் ஆட்சி வந்தால் தமிழகம் மின்வெட்டுகள் இல்லாத மாநிலமாக பிரகாசிக்கும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ஆட்சியிலும் முன்னைவிட கடுமையான அளவில் மின்வெட்டுகள் அமல்படுத்தப்பட்டு தமிழகம் மிக மோசமான நிலையில் இருண்டு கிடக்கிறது.
எதிர்காலத்தில் திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்காலம் ''இருண்ட காலம்'' என்று தமிழ்நாடு சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். எப்போதுமே ஏதாவது ஒரு பிரச்சனையை வைத்துகொண்டு தான் திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வரும். முன்பெல்லாம் மொழிப் பிரச்சனை, நதி நீர் பிரச்சனை என போய் இப்போது மின்வெட்டுப் பிரச்சனையை கையிலேடுத்துக்கொண்டுள்ளன. கொஞ்ச காலத்துக்கு இப்படியே ஓடும். மக்களுக்கு பழகிவிடும். பிறகு மறந்துவிடுவார்கள். அதற்குள் இந்த திராவிட கட்சிகள் வேறு பிரச்சனையை கண்டுபிடித்துவிடுவார்கள். மக்களை ஏதாவது ஒரு பிரச்சனையில் மூழ்கடித்து நிம்மதியை குலைத்தால் தான் இவர்கள் நிம்மதியாக மாறி மாறி ஆட்சி செய்யமுடியும்.
சமீபத்தில் தான் தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறை காரணமாக, மின் விநியோகக் கட்டுப்பாட்டு முறைகளை தமிழக அரசும், மின்சார வாரியமும் அறிவித்தன. அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று திங்கள்கிழமை முதல் மின்வெட்டு நேரம் 2 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் 4 மணி நேரம் மின்வெட்டு நேரமாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பு கூறுகின்றது.
இந்த சூழ்நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நெருங்கிவிட்ட சூழ்நிலையில், மின்வெட்டால் மாணவ - மாணவியர்களின் படிப்பு பாதிக்காமல் இருப்பதற்காக, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
இந்த ஜெனரேட்டர்களை அரசே வாடகைக்குப் பெற்று வழங்கும் என்றும், அதை இயக்குவதற்கான டீசல் உள்ளிட்ட அனைத்துச் செலவைகளையும் அரசே ஏற்கும் என்றும் முதல்வர் அறிவித்திருக்கிறார்.
இந்த தொடர் மின்வெட்டினால் வீட்டிலிருக்கும் போது படிக்கமுடியாமல் இந்த மாணவ - மாணவியர் கஷ்டப்படுவது முதல்வருக்கு தெரியாதா...? அந்த நேரத்தில் அந்த குழந்தைகளுக்கு எப்படி உதவுவார்...? இன்றைய இந்த பள்ளிப் பிள்ளைகள் தான் இரண்டு ஆண்டுகள் கழித்து வரும் பாராளுமன்றத்தேர்தலிலும், நான்கரை ஆண்டுகள் கழித்து வரப்போகும் தமிழக சட்டமன்றத்தேர்தலிலும் வாக்களிக்கப்போகிறார்கள் என்பதை இந்த இரு திராவிடக்கட்சிகளும் மறந்துவிடக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக