பல்வேறு நிர்வாக கோளாறு காரணமாக நஷ்டத்தில் தள்ளாடும் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தூக்கி நிறுத்த பிரதமர் மன்மோகன் சிங் எவ்வளவோ முயற்சிகளை செய்தார். பெருமுதலாளிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டால் தாங்கமாட்டார்கள் என்று கண்ணீர் வடித்தார். விஜய் மல்லையா யார்...? என்று கேட்டால், இந்திய இளைஞர்களை வேறு சிந்தனைகள் எதுவுமில்லாமல் தன்னிலை மறந்து மயங்கச் செய்யும் மதுபானங்களை தயாரித்து விற்பனை செய்யும் ஒரு சாராய வியாபாரி என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அடுத்து அழகிய உள்நாட்டு - வெளிநாட்டு மாடல் அழகிகளை தனி விமானத்தில் தன்னோடு அழைத்துக்கொண்டு ''ஊதாரி செலவுகளை'' செய்து உலகம் சுற்றும் ''ஊதாரி வாலிபன்''
இது போன்ற ஊதாரி செலவுகளினால், இவரது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே கிங் பிஷர் விமான சேவை பாதிக்கப்பட்டிருந்தது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பல விமானங்கள் ரத்து செய்தது என்பதும் பத்திரிகைகளில் வந்த செய்தியாகும்.
இப்படிப்பட்ட சூழலில் தனக்கு நிதியுதவி செய்யும்படி மத்திய அரசிடம் நேரடியாகவே கோரிக்கையை வைத்தார். அப்போது தான் பிரதமர் மேலே சொன்னது போல் வாய் மலர்ந்து கண்ணீர் விட்டார். ஒரு சமயத்தில் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல். ஐ. சி - யிடம் கூட கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு நிதியுதவி செய்யும்படி கேட்கப்பட்டதாகவும், எல்.ஐ.சி மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டுக்கொண்டிருந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு, நஷ்டத்தை ஈடுசெய்ய அரசுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ.1200 கோடி நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. இதேப்போல மற்றொரு அரசுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியும் ரூ.160 முதல் 200 கோடி வரை நிதியுதவி அளிக்க உத்தரவாதம் அளித்துள்ளது என்பது யாரும் எதிர்பாராதது. மேலும் கிங்பிஷர் செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகையான ரூ 360 கோடிக்கு பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய இரண்டி வங்கிகளும் உத்தரவாதம் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
நிச்சயமாக இது ஒரு மிகப்பெரிய கொள்ளையாகும். ஏற்கனவே விஜய் மல்லையா உட்பட பல பெருமுதலாளிகளும், அரசியல்வாதிகளும் அரசுத்துறை வங்கிகளிடம் வாங்கிய மொத்த கடன் தொகையான ரூபாய் ஒரு இலட்சம் கோடிக்கும் மேலான கடன்கள் வங்கியிடம் திரும்பக் கட்டப்படாமல், அந்தத் தொகையும் அதோடு அதன் வட்டியும் சேர்ந்து இரண்டு இலட்சத்திற்கும் மேலான தொகைகளை, நாமெல்லாம் சொல்லுவோமே ''காந்தி கணக்கு'' - அதில் சேர்க்கப்பட்டு அதற்கு மத்திய அரசாங்கத்தாலேயே ''வராக்கடன்'' என்ற பெயரும் சூட்டபட்டிருக்கும் சூழ்நிலையில், மேலும் மேலும் இப்படிப்பட்ட பெருமுதலாளிகளுக்கு நிதியுதவி அளிப்பது என்பது மத்திய அரசே அனுமதிக்கும் ''பகல் கொள்ளை''யாகும்.
வேலையின்மை காரணமாக வங்கிகளில் கொள்ளையடித்தால் என்கவுண்டர் கொலை தான் தண்டனை என்று சொல்லுகிறது காவல்துறை. அரசின் அனுமதி பெற்று விஜய் மல்லையா போன்ற பெருமுதலாளிகள் செய்யும் கொள்ளைக்கு என்ன தண்டனை...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக