திங்கள், 21 ஜனவரி, 2013

ராகுல் Vs மோடி - கருத்தைத் திணிக்கும் ஊடகங்கள்...!




என்னுடைய இந்த படைப்பு வண்ணக்கதிரில் பிரசுரமானது
**********************************************                      
        அனேகமாக இன்று எல்லா செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், வலைத்தளங்களிலும் ஒரே தலைப்பைக் கொண்ட பட்டிமன்றங்கள் தான். பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் தங்களது ''கருத்துத் திணிப்பு'' வேலையை ஆரம்பித்துவிட்டார்கள்.  ''ராகுல் Vs மோடி'' - 2014 தேர்தலில் வெற்றிப்பெறப் போவது யார்...? என்பது தான் இன்றைக்கு சூடான செய்தியாக மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக 2014 தேர்தல் வரை இந்த செய்தி தான் ஓடிக்கொண்டிருக்கும். மக்களிடையே கட்டாய கருத்தைத் திணிக்கும் வேலையை  இன்று பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் தொடங்கிவிட்டன. இவர்களுக்கு தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனையை விட  யார் வெற்றிப் பெற்றுவிடக் கூடாது என்ற சிந்தனையில் தெளிவாக இருக்கிறார்கள். இதைத் தான் அமெரிக்காவும், அந்நிய - இந்திய பெருமுதலாளிகளும் எதிர்ப்பார்க்கின்றனர்.  காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா...?  பா. ஜ. க ஆட்சிக்கு வருமா...? ராகுல் வந்தா நல்லாயிருக்குமா...? மோடி வந்தா நல்லாயிருக்குமா...? இப்படியான கருத்துக்கள் மக்கள் மத்தியில் திணிக்கப்படுகின்றன. அந்த இரண்டு பேரில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அமெரிக்காவிற்கும், அந்நிய - இந்திய பெருமுதலாளிகளுக்கும் சந்தோசம் தான். ஆனால் எந்த காரணம் கொண்டும் மக்களின் மூன்றாவது பார்வை இடதுசாரிக் கட்சிகள் மீது திரும்பிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அதுவும் 2004 தேர்தலைப் போல் இடதுசாரிக் கட்சிகள் 62 இடங்களில் வெற்றிபெற்றது போல் இந்த முறையும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக  இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதற்கான பிள்ளையார் சுழியை தான் இன்று ஊடகங்கள் போட்டிருக்கின்றன.
            ஆனால் உண்மை என்னவென்றால், அந்த இரண்டு கட்சிகளில் எது ஆட்சிக்கு வந்தாலும், இந்த இரண்டு பேரில் யார் பிரதமாராக வந்தாலும் இந்த நாடு நாசமாக போய்விடும் என்பதையும்,  மக்கள் மோசம் போவார்கள் என்பதையும் இந்திய மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.
               கடந்த பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான கூட்டணியின் தவறான ஆட்சியினாலும், இன்றைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணியின் தவறான  ஆட்சியினாலும் நாட்டில் ஏற்பட்டிருக்கும் விலைவாசி உயர்வு மற்றும் ஊழல்களில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவிக்கும் இந்திய மக்களுக்கு தப்பித்தவறிக்கூட ''மாற்று சிந்தனை'' வந்துவிடக்கூடாது என்கிற பயம் அமெரிக்கா மற்றும் அந்நிய - இந்திய பெருமுதலாளிகளுக்கு இருக்கின்றன என்பது தெளிவாக தெரிகிறது. இடதுசாரிக்கட்சிகள் மீது மக்களின் பார்வை திரும்பி விடக் கூடாது என்பதற்காகத் தான் இப்படிப்பட்ட கருத்துத் திணிப்பை இன்றைக்கு ஊடகங்கள் அவசர அவசரமாக கையில் எடுத்துக்கொண்டுள்ளது.
             அதுமட்டுமல்ல, இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஜனநாயகப்பூர்வமான பலக் கட்சி அரசியல் முறை என்பது அமெரிக்காவிற்கு பல ஆண்டுகளாக எரிச்சலூட்டும் விஷயமாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ளது  போல் ''இரண்டு கட்சி ஆட்சி முறையை'' இந்தியாவிற்குள்ளும்  திணிப்பதற்கு பல ஆண்டுகளாக அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. இந்த ஆட்சி முறையை தான் அந்நிய - இந்திய பெருமுதலாளிகளும் விரும்புகின்றனர். அதற்காகத் தான் இந்திய மக்களின் எண்ணங்களில் அதற்கான கருத்துக்களை திணிக்க வேண்டிய கட்டாயத்தில்  இன்றைய ஊடகங்கள் இறங்கியுள்ளன.
             யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை மக்களின் ''வாக்குரிமை'' சம்பந்தப்பட்டது. மக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு சுதந்திரமான சிந்தனைகள் தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இது போன்றக் கருத்துத் திணிப்பு என்பது மக்களின் சுதந்திரமான எண்ண ஓட்டங்களை - சுதந்திரமான சிந்தனைகளை தடை செய்கின்ற விஷயமாகும். இது தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்ல. பத்திரிகை ஜனநாயகத்திற்கும் எதிரானது. கருத்து திணிப்பு என்பது கருத்து சுதந்திரமல்ல. அது போல் செய்வது என்பது பத்திரிகை தர்மமுமல்ல என்பதை பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சிக்காரர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.
           ஊடகங்கள் இத்தோடு நிற்கமாட்டார்கள், அடுத்து வரும் காலங்களில் ''தேர்தல் கருத்துக் கணிப்பு'' என்ற பெயரில் இன்னொரு கருத்துத் திணிப்பை நடத்துவார்கள். கருத்துக் கணிப்பு என்கிற முடை நாற்றமெடுத்த குப்பைகளை மக்களின் மூலைகளில் வண்டி வண்டியாய் கொட்டுவார்கள். தேர்தலுக்கு முன்பே கருத்துக் கணிப்பு என்ற பெயரில் இவர்களாகவே தேர்தல் முடிவுகளை அறிவித்துவிடுவார்கள். இவர்களாகவே பதவியேற்பு விழாவையும் நடத்தி முடித்துவிடுவார்கள். இப்படித் தான் மக்கள் நடக்கவேண்டும் என்கிற தங்களின் விருப்பத்தை இப்படியெல்லாம் திணிப்பார்கள். வாக்காளர்களின் வாக்குரிமை என்பது வாக்களிக்கும் உரிமை மட்டுமல்ல. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தேர்ந்தெடுக்கும் உரிமையும் சேர்ந்தது தான் என்பதை மக்கள் உணர வேண்டும். இது போன்று கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்களின் எண்ண ஓட்டங்களை - சிந்தனை ஓட்டங்களை தங்கள் விருப்பப்படி திசைமாற்றுவது என்பது வாக்களர்களின் வாக்குரிமைக்கு எதிரானது என்பதையும், ஜனநாயகத்திற்கு முரணானது என்பதையும்  ஊடகங்களுக்கு மக்கள் தான் பாடம் கற்பிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அந்த வேலையை செய்யாது.   அல்லது தலைமைத் தேர்தல் ஆணையம் வழக்கம் போல் இது போன்ற ''கருத்துத் திணிப்புகளையும், கருத்துக் கணிப்புகளையும்'' வேடிக்கைப் பார்க்காமல், ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட செயல்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும். மக்களுக்கு வாக்களிப்பு சம்பந்தமான சுதந்திரமான சிந்தனைகளுக்கும், சுதந்திரமான தேர்தலுக்கும் தேர்தல் ஆணையம் உத்திரவாதப்படுத்தவேண்டும்.

கருத்துகள் இல்லை: