செவ்வாய், 15 ஜனவரி, 2013

தலைக்கு தலை - இரத்தத்திற்கு இரத்தம் - பழிக்குப் பழி -தீர்வாகாது....!

                சென்ற வாரம் இந்திய - பாகிஸ்தான் காஷ்மீர் எல்லைகளை பிரிக்கும் ''லைன் ஆப் கண்ட்ரோல்'' எல்லைப்பகுதியில் திடீரென பாகிஸ்தான் எல்லைப்படை வீரர்கள் இந்திய எல்லையில் காவலில் இருந்த நம் படை வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு இந்திய படை வீர்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு இந்தியப்படை சுட்டதில் இரண்டு பாகிஸ்தான் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் கொடுமை என்னவென்றால், கொல்லப்பட்ட இரண்டு இந்தியப் படைவீரர்களில் ஒருவரான ஹேம்ராஜ் என்ற வீரரின் தலையை மட்டும் பாகிஸ்தான் படைவீரார்கள் துண்டித்து சென்றுவிட்டனர். இது மனித இனம் ஏற்றுக்கொள்ள முடியாத மிகப்பெரிய கொடூரம் ஆகும். இந்த கொடூரத்தை இந்திய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர்  உட்பட சில அரசியல் கட்சித்தலைவர்கள் மட்டுமே கடுமையாக கண்டித்தனர். வழக்கம் போல் ''மவுன சாமியார்'' மன்மோகன் சிங் இது பற்றி வாயை திறக்கவில்லை. என்றாலும் இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. எல்லையில் பதட்டமாக காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
              இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி இருநாட்டிலும் உள்ள அமைதியை விரும்பாத பிரிவினை சக்திகள் எப்படியாவது இந்த இரு நாடுகளுக்கும் போர் நடைபெறாதா...? அதை அரசியலாக்கி குளிர்காயலாமா என்று துடித்துகொண்டிருக்கின்றன.
             இங்கே இந்தியாவிலும், மதவாத அமைப்புகளான பாரதீய ஜனதா கட்சியும் சிவசேனா கட்சியும்  இந்த பிரச்சனைகளை அரசியலாக்கி ஆதாயம் காண துடித்துக் கொண்டிருக்கின்றன. 1999 - ஆம் ஆண்டில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கார்கில் போரை தனக்கு சாதகமாக அரசியலாக்கி ஆதாயம் கண்டது போல், தலைத் துண்டிக்கப்பட்ட படை வீரரை வைத்து அரசியலாக்கி ஆதாயம் தேடத் துடிக்கின்றன இந்த காவிக் கூட்டங்கள். மத்தியில் ஆட்சியாளர்கள், தன் நாட்டு படைவீரரை இழந்த தவிப்பும் இல்லாமலும், குடும்பத்தலைவரை இழந்து தவிக்கும் அந்த படைவீரரின்  குடும்பத்திற்கு - அதுவும் அவரது தலை கிடைக்காத இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு ஆறுதல் தரவேண்டும் என்ற பொறுப்பும் இல்லாமலும் இருக்கும் சூழ்நிலையை பாரதீய ஜனதா கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. மக்களுக்கு இன உணர்வைத் தூண்டி அதில் குளிர் காயலாம் என்று துடித்துக்கொண்டிருக்கிறது. நேற்று உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கொல்லப்பட்ட படைவீரரின் குடும்பத்தினரை சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் பாரதீய ஜனதா கட்சியினர் சந்தித்து ஆறுதல் கூற சென்றவர்கள் விஷமத்தனமாக பேசியிருக்கிறார்கள். அதிலும் நாடாளுமன்ற எதிர்கட்சித்தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ''இந்திய ராணுவ வீரர் ஹேம்ராஜின் தலையை பாகிஸ்தான் தராவிட்டால் பாகிஸ்தானின் 10 வீரர்களின் தலையையாவது நம் படைவீரர்கள் துண்டித்து எடுத்துவர வேண்டும்'' என்று பேசியிருப்பது மக்களின் உணர்வுகளை தூண்டும் செயலாகும்.
           இந்த பதட்டமான சூழ்நிலையில் இரு நாடுகளும் அமைதி காப்பதே இப்போதைய அவசியத் தேவையாகும். எந்த சூழ்நிலையிலும் தங்களது பொறுப்புகளை மறந்து செயல்படக்கூடாது. 2003 - ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையிலிருக்கும் ''போர்நிறுத்த'' ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறி இருப்பது என்பது கண்டிக்கத்தக்கது. அதுமட்டுமல்ல இந்த இரு நாடுகளுக்கும் இடையில் பலக் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இது போன்ற சம்பவம் நடந்திருக்கிறது என்பது அமைதியை விரும்புபவர்கள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
          இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு நாடுகளின் ஆட்சியாளர்களும், இந்த நாடுகளிலுள்ள எதிர்கட்சிகளும் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும். இரு நாடுகளின் அமைதிக்கோ - ஒற்றுமைக்கோ பாதகம் வராமல் ஒத்துழைக்க வேண்டும். இது தான் இரு நாடுகளுக்கும் இன்றைய அவசியத் தேவை என்பதை உணர்ந்து செயல் படவேண்டும். பேச்சுவார்த்தை மட்டுமே இருநாடுகளின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் தீர்வாகுமே தவிர தலைக்குத் தலை - இரத்தத்திற்கு இரத்தம் - பழிக்குப் பழி தீர்வாகாது. பாரதீய ஜனதாக் கட்சி மற்றும் சிவசேனா போன்ற மதவாத கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக இந்த பிரச்சினையை பெரிதாக்குகின்றன என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.    

கருத்துகள் இல்லை: