ஞாயிறு, 27 ஜனவரி, 2013

விஸ்வரூபம் - தணிக்கை குழு உறுப்பினர் ஹசன் முகம்மது ஜின்னா விளக்கம்...!

       
















     
          ''விஸ்வரூபம்'' படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் அளித்தது பற்றி இஸ்லாமிய அமைப்புகளினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு தணிக்கை குழு உறுப்பினராக இருக்கக்கூடிய திரு.  ஹசன் முகம்மது ஜின்னா விளக்கம் அளித்துள்ளார்.
( தி.மு.க.வைச் சேர்ந்த இவர் கடந்த சட்டசபை தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டவர். தேர்தல் பிரசாரத்தின் போது  ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரையும் சந்தித்து வாழ்த்து பெற்றவர்.  விஸ்வரூபம் சர்ச்சையி்ல் இவரையும் இழுத்துள்ளனர் )

ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
         தணிக்கைத் துறையில் பல மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எந்த மதத்தின் உணர்வையும் புண்படுத்தப்படுவதையும் தணிக்கைத்துறை விதிகள் அனுமதிப்பதில்லை. அதே நேரத்தில், படத்தைத் தணிக்கை செய்யும் உறுப்பினர்களும் தங்கள் சொந்த மதத்தின் கண்ணோட்டத்தில் தணிக்கை முறையைக் கையாள்வதில்லை.
             வழிகாட்டும் முறைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், சமுதாயத்தின் அமைதியைக் குலைக்கக்கூடிய வகையிலோ, உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ, வக்கிரம் மற்றும் ஆபாசம் நிறைந்ததாகவோ காட்சிகள் இருப்பின் அவை நீக்கப்படுகின்றன.
           விஸ்வரூபம் படத்தைப் பொறுத்தவரை, தமிழில் அது தணிக்கை செய்யப்படுவதற்கு முன்பே இந்தி மொழியில் அப்படம் தணிக்கை செய்யப்பட்டது. அதன்பிறகே, தமிழ்ப் பதிப்பு மற்றும் தெலுங்கு தணிக்கை செய்யப்பட்டது. இந்தியிலும், தெலுங்கிலும் தணிக்கை செய்யப்பட்டபோதும் அந்தந்த மொழியறிந்த இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.
            ஒரு படம், வேறு மொழியில் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டிருந்தால் அதில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பது ஒரு நெறிமுறையாகும்.
               அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட மொழியில் உள்ள வசனம் மற்றும் பாடல் வரிகளின் தன்மை, காட்சியமைப்புகளால் அந்த மொழி பேசும் பகுதியில் ஏற்படக்கூடிய தாக்கம் ஆகியவை கவனத்தில் எடுத்து கொள்ளப்படவேண்டும் என்பதும் வழிகாட்டு நெறி முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
            அதனடிப்படையிலேயே ஒவ்வொரு படமும் தணிக்கைக்குள்ளாகிறது. படத்தை தணிக்கை செய்த உறுப்பினர்களில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நான் இடம் பெற்றிருந்தேன் என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதேஅளவுக்கு ஒரு படத்திற்கானத் தணிக்கை முறைகளில் அதில் பங்குபெறும் மற்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானதாகும் என்பதும் உண்மை.
             தணிக்கைத் துறை உறுப்பினர், அவருடைய கருத்தைத்தான் பதிவு செய்ய முடியுமே தவிர, பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின் அடிப்படையிலேயே சான்றிதழ் வழங்கப்படும். தலிபான், அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களும் ஏற்பதில்லை. அவற்றுடன் இந்திய முஸ்லிம்களை இணைக்காதீர்கள் என்பதே இங்குள்ளவர்களின் நிலைப்பாடும் வேண்டுகோளுமாகும்.
                 இத்தகைய தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றிய காட்சிகளுடன் ஆங்கிலத்தில் ஹாலிவுட் படங்கள் பல வெளிவந்துள்ளன. வந்துகொண்டும் இருக்கின்றன. அவற்றுக்கு இந்தியா உள்பட பல நாடுகளிலும் தணிக்கைச் சான்றிதழ் அளிக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகின்றன.
        நான் என் கடமையிலிருந்து ஒருபோதும் தவறியதில்லை, எந்தவகையிலும் இஸ்லாத்திற்கு      எதிரானதாகவோ, அமைதியையும் அன்பையும் விரும்பும் இஸ்லாமிய சகோதரர்களைத் தவறான வகையில் சித்தரிக்கும் விதத்திலோ உள்ள காட்சிகளை மட்டுமல்ல, இந்து மதம், கிறிஸ்தவ மதம் உள்பட எந்தவொரு மதம் அல்லது ஒரு சமுதாயம், மொழி, இனம் பற்றிய தவறான உள்நோக்கம் கொண்ட சித்தரிப்புகள் இருக்குமானால் என் எதிர்ப்பு பலமாகவே வெளிப்படும்.
          அதை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். தணிக்கைத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையிலேயே என் கருத்தையும் முடிவுகளையும் தெரிவிக்கிறேன்.
            நான் ஏற்கனவே கூறியது போல, இறுதி முடிவு என்பது, படத்தைப் பார்க்கும் தணிக்கைத்துறை உறுப்பினர்களின் பெரும்பான்மையான கருத்துகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகிறது.
                 தற்போதைய நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. அதுவரை பொறுத்திருக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.

இவ்வாறு ஜின்னா கூறியுள்ளார்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

எது சரியான வழி. சிறப்பான வழி. வெற்றிகரமான வழி..?
தமிழகத்தில் விஸ்வரூபம் படம் ஓடாது என்று பி.ஜெய்னுலாப்தீன் தொலைக்காட்சி செய்தி ஒன்றில் சொல்லிக் கொண்டிருந்தார். ஜெய்னுலாப்தீன் வடிவில் பால்தாக்கரேயைப் பார்த்தேன். இந்த அறிவிப்பும் மிரட்டலும் முட்டாள்தனமானது. கண்டிக்கத்தக்கது. வேடிக்கையானது.

அமைதியை விரும்புகின்ற, கடினமாக உழைக்கின்ற, அப்பாவியான தமிழக முஸ்லிம்கள் மீது சேறும் கல்லும் வாரி இறைத்திருக்கின்றார் கமல் ஹாஸன். கமல் கண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் ஒட்ட நறுக்கப்பட வேண்டும் என்பதிலும் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை. அவருடைய விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும் என்பதிலும் குப்பைத் தொட்டியில் வீசப்பட வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை. இந்திய வரலாற்றிலேயே விஸ்வரூபம் போன்று மோசமான படம் எடுக்கப்பட்டதில்லை. ஒப்புக்கொள்கின்றேன்.

ஆனால் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்வதாக அறிவிப்பதும் அரசாங்கத்தையும் மக்களையும் மிரட்டுவதும் எந்தவகையிலும் சரியானதல்ல. இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு இயைந்ததும் அல்ல. பால் தாக்கரே போன்ற பாசிஸ்டுகள் வேண்டுமானால் அவ்வாறு மிரட்டல் இட்டு காரியத்தைச் சாதித்துக் கொண்டிருக்கலாம். சட்டத்திலிருந்துத் தப்பித்துவிட்டிருக்கலாம். ஆனால் முஸ்லிம்கள் இவ்வாறு நடந்துகொள்வது எந்த வகையிலும் அழகு அல்ல.

வெளிப்படையாக மிரட்டல் விடுத்ததன் மூலமாக பி.ஜே கமல் ஹாஸனைப் போன்றுதான் நடந்துகொண்டிருக்கின்றார். இஸ்லாத்தைக் குறித்தும் தமிழக முஸ்லிம்களைக் குறித்தும் கமலுக்கு இழிவான, கேவலமான கருத்து இருந்தது. தன்னுடைய அந்த இழிவான கருத்தை ஒட்டுமொத்த தமிழக மக்கள் மீது சினிமா பைத்தியங்கொண்ட, அப்பாவியான, அன்பான மக்கள் மீது திணிக்க முற்பட்டார் கமல். பி.ஜேயும் அதே தொனியில்தான் குரல் கொடுத்துள்ளார். இது நல்லதல்ல.

இது நம்முடைய நோக்கத்திற்கே கேடு விளைவிப்பதாகத்தான் முடியும். இப்போது காலம் மாறிவிட்டது. ஆட்டத்திற்கான விதிகளும் நெறிகளும் மாறிவிட்டன என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். பால்தாக்கரேயாலேயே ஷாரூக்கானின் ‘மை நேம் இஸ் கான்: ஐயம் நாட் எ டெரரிஸ்ட்‘ படத்தைத் தடை செய்ய முடியவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இது போன்ற தாக்கரே தனமான மிரட்டல்கள் இந்தக் காலத்தில் உதவாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இது போன்ற மிரட்டல்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்திற்குத்தான் உதவும். கமல்ஹாஸனுக்குத்தான் உதவும். பி.ஜே.யின் இந்த மிரட்டலிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ளுமாறு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பைக் கேட்டுக்கொள்கின்றேன்.

கமலுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து நீண்ட, நீண்ட, நீண்ட சட்டப் போரில் அவரை இழுத்து அடிப்பதுதான் சரியான வழிமுறையாக இருக்கும். நீதிமன்றமாக அலைய விடுங்கள். ஆற்றல் அனைத்தையும் உறிஞ்சி விடுங்கள். நிச்சயமாக அவர் மண்டியிடுவார். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எதனையும் செய்வார். இன்றைய நீதிமன்ற அமைப்பு இருக்கின்ற நிலையில் இதெல்லாம் சாத்தியமா என நீங்கள் கேட்கலாம். அந்த வெறிபிடித்தவன் சட்டச் சிக்கல்களிலிருந்து மிக இலாகவமாக தப்பித்து வந்துவிட மாட்டானா, என்றும் நீங்கள் கேட்கலாம். சரிதான். அந்த வாய்ப்பும் இருக்கின்றதுதான். என்றாலும் சட்டரீதியாகத் தீர்வும் நீதியும் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கின்றது. சட்டரீதியாக இதனை அணுகுவதுதான் சரியான வழிமுறை ஆகும்.

பெயரில்லா சொன்னது…

அடுத்ததாக, இஸ்லாத்தின் அமைதித் தூதை எடுத்துரைப்பதற்காக கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், அரங்கக் கூட்டங்கள்,பொதுக்கூட்டங்கள், தேநீர் விருந்து நிகழ்ச்சிகள் போன்றவற்றை அதிக அளவில் நடத்த வேண்டும். கருத்து சுதந்திரத்தின் எல்லைகள் என்ன என்பதைக் குறித்தும் இஸ்லாம் சொல்வதென்னவென்பதைக் குறித்தும் பேச வேண்டும். விஸ்வரூபம் போன்ற கேடுகெட்ட,இழிவான, அருவருப்பான படங்கள் ஏன் தடை செய்யப்பட வேண்டும் என்பதையும் ஆணித்தரமாக, அழுத்தம்திருத்தமாக எடுத்துரைக்கலாம். திரைப்படங்களில் முஸ்லிம்கள் தொடர்ந்து தவறாகச் சித்திரிக்கப்படுவது தொடர்பான நம்முடைய கவலையை,குமுறலை, வேதனையை, கோபத்தை வெளிப்படுத்துவதற்காக அனைத்துவிதமான அமைதியான, ஆக்கப்பூர்வமான,சட்டத்திற்குட்பட்ட வழிமுறைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக நம்முடைய மார்க்கம் நம்முடைய செயல்களிலும் அன்றாட வாழ்விலும், நடப்புகளிலும் வெளிப்பட வேண்டும். இனிய மார்க்கத்தின் அன்பான அறவுரைகள் நம்முடைய செயல்பாடுகளில் புலப்பட வேண்டும். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான அவதூறு பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு இது ஒன்றே வழி. ஒன்றைக் கவனித்தீர்களா?முஸ்லிம்களை வில்லன்களாய், தேசத் துரோகிகளாய்,பயங்கரவாதிகளாய்ச் சித்திரித்து எண்ணற்ற படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த கேப்டனும் அர்ஜுனும் போட்டி போட்டுக்கொண்டு கமலை விட அதிகமான எண்ணிக்கையில் இத்தகைய படங்களை எடுத்திருக்கின்றார்கள். ஆனால் அவற்றால் உங்களைப் பற்றியும் என்னைப் பற்றியும் நம்முடைய நண்பர்களின் கருத்து மாறிவிட்டதா, என்ன? மக்கள் திரைப்படப் பிம்பங்களைவிட இரத்தமும் சதையுமாய் உயிர்த்துடிப்புள்ள மனிதர்களைப் பார்த்துதான் உங்களையும் என்னையும் பார்த்துத்தான் தாக்கம் பெறுகின்றார்கள்.

சகோதர சமுதாயங்களைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுடனான நம்முடைய நட்பும் உறவும் நம்முடைய செயல்பாடுகள், நடத்தை,அணுகுமுறை, பழகும்விதம் ஆகியவற்றைப் பொருத்தே அமையுமே தவிர திரைப்படங்களில் தவறாகச் சித்திரிக்கப்படுகின்ற மாயைகளின் அடிப்படையில் அல்ல என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நம்முடைய செயல்பாடுகளும் நடத்தையும் அன்பும் பண்பும் நிறைந்ததாய், நேசமும் பாசமும் மிகுந்ததாய், சத்தியமும் வாய்மையும் ததும்பியதாய் இருக்குமேயானால் எத்தனை கமல்கள் வந்தாலும் எத்தனை கேப்டன்களும் அர்ஜுன்களும் எத்தனை படம் எடுத்தாடினாலும் எத்தனை விஸ்வரூபங்கள் வந்தாலும் உறவையோ நட்பையோ பாதிக்க முடியாது என்பதுதான் உண்மை.இந்த நாள் வரை இஸ்லாத்தை ஏற்றவர்களில் 99 சதவீதத்தினர் நம்முடைய நடத்தையையும் கனிவையும் பார்த்துதான் வந்திருக்கின்றார்கள் என்பதும் உண்மை.
விஸ்வரூபத்தை எதிர்கொள்வதற்கு இதுதான் சரியான வழி. சிறப்பான வழி. வெற்றிகரமான வழி.

-T.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்