புதன், 15 ஏப்ரல், 2015

விரிவான இடதுசாரி ஒற்றுமையை உருவாக்குவோம்...! - பிரகாஷ்காரத்


           விசாகப்பட்டினத்தில் துவங்கிய கட்சியின் 21-வது அகில இந்திய மாநாட்டை துவக்கிவைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர்.பிரகாஷ்காரத் ஆற்றிய உரை :- 
               ஆந்திர மாநில விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க தெலுங்கானா ஆயுதப்போராட்டம் நடைபெற்ற மண்ணில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அகில இந்திய மாநாட்டை நடத்துகிறது.
         இந்த நேரத்தில் அந்தவீரமிகு போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தலைவர்களுக்கும், ஒன்றுபட்ட ஆந்திரப்பிரதேசத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டுவதில் அரும்பாடுபட்ட தலைவர்கள் பி.சுந்தரய்யா, எம்.பசவபுன்னையா, சி.ராஜேஸ்வரராவ் ஆகிய தலைவர்களுக்கும் நம் மரியாதை செலுத்துகிறோம். தேசிய அரசியலில் நம்முன் பல்வேறு சவால்கள் எழுந்துள்ள நிலையில் 21வது அகில இந்திய மாநாட்டைநாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். கடந்த ஓராண்டாக நாட்டில் வலதுசாரி சக்திகளின் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதை நேரில் கண்டு வருகிறோம். அந்த சக்திகள் பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் கலாச்சாரம் என சகல துறைகளிலும் ஊடுருவி உள்ளது.

கார்ப்பரேட் - மதவெறி கூட்டு                  

            முதலாவதாக, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கூட்டு நிறுவனமாக செயல்படத் தொடங்கிவிட்டது. இதில், பிரதான கூட்டாளி என்ற முறையில் ஆர்எஸ்எஸ் அரசின் அனைத்து முடிவுகளிலும் அதிகமாக தலையிடுகிறது. இரண்டாவதாக, மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றவுடன், பதவிக்கு வந்த மோடி அரசு தனதுஅலுவலகத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைமையிலான இந்துத்வா சக்திகளின் அலுவலகமாக மாற்றிவிட்டது.
            மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அது ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயலுக்கேற்ப மட்டுமல்லாமல், நாட்டிலுள்ள மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கிவிட்டது. அந்தநிறுவனங்கள் தங்களது புதிய தாராளமய, பொருளாதாரக் கொள்கைகளை மோடி அரசாங்கத்தின் மூலம் மிகத்தீவிரமாக அமல்படுத்த தொடங்கிவிட்டன. கடந்த10 மாதங்களுக்குள் நாட்டின் வளத்தை மோடி அரசு மிகப்பெரிய கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது.

பலன் பெற்றது யார்?                    

             கனிம வளங்கள், நிலக்கரி சுரங்கங்கள், காப்பீடு, ரயில்வே, நிலம் என அனைத்தும் மிகப்பெரிய உள்நாட்டுமற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம்தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வரி 5 விழுக்காடாக குறைக்கப்பட்டதோடு, சொத்து வரி முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்பட்டுள்ளது.
             மோடி அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் யார் பலன் அடைந்தார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய முதலாளியான கவுதம் அதானியின் சொத்து மட்டும் 2014ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டிற்குள் 25ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. ஒருபுறம் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளை கடைபிடிக்கும் மோடி அரசு, மறுபுறம் உழைக்கும் மக்கள் மீதும் அவர்களின் உரிமைகள் மீதும் கொடூர தாக்குதல்களைத் தொடங்கி உள்ளது. தங்களது விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்ற துயரத்திலும், இடுபொருட்களின் விலை அதிகரித்துவிட்டது என்ற கவலையிலும் விவசாயிகள் உள்ளனர்.மேலும், வேளாண் மற்றும் பாசனத்துறை மீதான தனது முதலீட்டை அரசு கணிசமாக குறைத்துக் கொண்டுவிட்டது.
              எதிர்பார்க்காத பருவத்தில் பெய்த மழையால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டதோடு, அதனால் நஷ்டம் அடைந்த பல விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. விவசாய தொழிலாளர்களுக்கும், கிராமப்புற ஏழைகளுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதும் அரிதாக மாறிவிட்டது.

பழங்குடி மக்களை வெளியேற்றத் திட்டம்                    

               சாமானிய மக்களுக்கோ கடுமையான விலைவாசியிலிருந்து நிவாரணம் கிடைக்கவில்லை. தொழிலாளர் நலச்சட்டங்களில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்து உழைக்கும் மக்களின் உரிமைகள் மீதும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. புதிய சுரங்கம் மற்றும்கனிம வளச்சட்டத்தை இயற்றி பழங்குடி மக்களை அவர்களது இருப்பிடத்திலிருந்து அகற்றும் நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளன.

அனைத்துத் துறையிலும் மதவெறி                  

                 மூன்றாவதாக, இந்துத்துவா சக்திகள் தங்களின் மதவாத செயல்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துவதற்கான வழிகளை மோடி அரசு திறந்து விட்டுள்ளது. கல்வித்துறையில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆர்எஸ்எஸ் கற்றுக் கொடுக்கிறது. ஆராய்ச்சி மற்றும்கலாச்சார நிறுவனங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அதுவே தீர்மானிக்கிறது. மறுபுறம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக விஷம் கக்கக்கூடிய பிரச்சாரம் தீவிரமாக நடைபெறுகிறது. மறு மதமாற்றம் சிறுபான்மை மக்களின் தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் அம்மக்களின் உணவு மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான அத்துமீறல்கள், மாட்டிறைச்சி மீதான தடை ஆகியவை இதில் அடங்கும்.

பெண்கள் நடமாட்டத்தை ஒடுக்க சதி                    

              பொது வாழ்விலும், பொது இடங்களிலும் பெண்களின் நடமாட்டத்தை ஒடுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் மீது சமூக ரீதியாகவும், உடைக்கட்டுப்பாடு போன்றவற்றை திணிப்பதிலும் இந்துத்வா சக்திகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

அமெரிக்காவுக்கு சேவகம்                  

              இறுதியாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச்சேர வேண்டும் என்று துடிக்கும் மோடி அரசு அதற்கேற்ப தனது வெளியுறவுக் கொள்கைகளை மாற்றி வருகிறது. அந்தக் கொள்கைகள் வலதுசாரி சக்திகளின் செயல்பாடுகளை எதிரொலிக்கும் வகையில் உள்ளன. ஆசியாவில் தனது கொள்கைகளை விரிவாக்கத் துடிக்கும் அமெரிக்காவுடன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளியாக செயல்படுவதற்கான நடவடிக்கைகளில் மோடி அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மோடி அரசு, அமெரிக்க நிர்பந்தத்திற்கு அடிபணிந்து நமது பொருளாதாரத்தை வெளிநாட்டு முதலீடுகளுக்காக மேலும் திறந்துவிட்டதோடு, அறிவுச்சொத்துரிமை விஷயத்திலும் இந்தியாவின் நலன்களை பலி கொடுத்துவிட்டது.

தீவிரம் அடையும் போராட்டங்கள்                

              தங்களது வாழ்வுரிமையை பாதுகாப்பதற்காக ஏற்கெனவே உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவினர் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்திற்கு எதிராகவிரிவான இயக்கங்கள் தொடங்கி உள்ளன.
             தொழிலாளர் நலச்சட்டங்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களை எதிர்த்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்தி வருகின்றன.ஏற்கெனவே, நிலக்கரி சுரங்கங்களை தனியார்மயமாக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நிலக்கரி மசோதாவை எதிர்த்து நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை நடத்தினர். காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை எதிர்த்துஅத்துறையில் உள்ள ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
         இதேபோல் மோடி அரசாங்கத்தின் மோசமான கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பிரிவினரும் தங்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தெருக்களில் இறங்கியுள்ளனர்.

முரண்பாடு முற்றும்             

                 தனியார் பெரு நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு ஆதரவான மோடி அரசின் கொள்கைகளால் வரும் நாட்களில் உழைக்கும் மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடுகள் ஏற்படப்போகிறது. எனவே, இத்தகைய காலகட்டத்தில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தை ஒருங்கிணைத்து வலதுசாரி சக்திகளின் சவால்களை முறியடிப்பது குறித்து கட்சியின் மாநாடு விவாதிக்க உள்ளது.

மேற்குவங்கத் தோழர்களுக்கு பாராட்டு                  

            நம் நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தனித்தும், இடதுசாரி அணியையும் வலுவாக கட்டும் கடமை நம் முன் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி சக்திகளுக்கு குறிப்பாக, மேற்குவங்கத்தில் ஏற்பட்ட பின்னடைவிலிருந்து நாம் மீண்டு வரவேண்டி உள்ளது. கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறும்இந்த வேளையில் மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் கொடூரமான தாக்குதல்களை எதிர்கொண்டு இயக்கங்களை நடத்தி வரும் ஆயிரக்கணக்கான நமது கட்சி ஊழியர்களையும், இடதுசாரி கட்சிகளின் தொண்டர்களையும் பாராட்டுகிறோம். தற்போதுகூட, அம்மாநிலத்தில் நகராட்சி தேர்தல்களில் ஆளும் கட்சி கொடூரமான வன்முறையை ஏவி உள்ளது. இதில் நமது தோழர்கள் சுபாஷ் முகோபாத்தியாயா, மனேஷ் முகர்ஜி ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அவர்கள் மாநாட்டில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் குணமடைய மாநாட்டின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டு எழுவோம்!          

            கடந்த அகில இந்திய மாநாட்டிற்குப் பின்னர் மேற்குவங்க மாநிலத்தில் உயிர் நீத்த 99 தோழர்களின் தியாகம் வீண்போகாது. மக்களின் ஆதரவோடு நாம் மீண்டெழுந்து இத்தகைய சக்திகளை தோற்கடிப்போம்.

அனைத்து இடதுசாரிகளையும் ஒருங்கிணைப்போம்!        

            நாட்டில் வலதுசாரி சக்திகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், இடதுசாரி ஒற்றுமையை மேலும் விரிவுபடுத்த வேண்டிய முக்கியமான தருணத்தில் நாம் உள்ளோம். விரிவான இடதுசாரி அணியில் அனைத்து இடதுசாரி கட்சிகளும், குழுக்களும், தனி நபர்களும் இணைய வேண்டும். இடதுசாரி கட்சிகளின் வெகுஜன அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் பணியிலும் நாம் ஈடுபட வேண்டி உள்ளது. வலுவான இடதுசாரி ஒற்றுமை உருவானால், மற்ற ஜனநாயகசக்திகளை நம்மால் திரட்டி வலுவான இடது மற்றும் ஜனநாயக மாற்றை உருவாக்க முடியும். எனவே, கட்சியின் 21வது மாநாடு கட்சிக்கு புதிய வழியை காட்டும். அந்த வகையில் இந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதியை பாதுகாக்கவும், இடது மற்றும் ஜனநாயக மாற்றை உருவாக்கவும், கட்சிக்கு இம்மாநாடு வழிகாட்டும். வலுவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவோம். விரிவான இடது ஒற்றுமையை கட்டுவோம். இடது மற்றும் ஜனநாயக மாற்று அணியை உருவாக்கும் பணியை நோக்கி முன்னேறுவோம்.

இவ்வாறு தோழர்.பிரகாஷ்காரத் பேசினார்.

நன்றி : தீக்கதிர்

கருத்துகள் இல்லை: