நாடாளுமன்ற
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தீர்மானத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக்குழுத்தலைவர் தோழர்.சீத்தாராம் யெச்சூரி,எம்.பி., பேசியது வருமாறு :-
நிலம்
கையகப்படுத்தல் சட்ட முன்வடிவு தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு ஆழமாகப்
பரிசீலித்து எண்ணற்ற பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன் தலைவராக இருந்தவர்
தான் இப்போது மக்களவைத் தலைவராக
இருக்கிறார். நிலம் கையகப்படுத்தல் சட்ட முன்வடிவில் ''உள் கட்டமைப்பு
திட்டங்கள்'' என்பதன்கீழ் எவையெல்லாம் வருகின்றன. மின்சார உற்பத்தி
நிலையங்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், சாலைகள், நெடுஞ்சாலைகள், தண்ணீர்
விநியோகம் மற்றும் இதர திட்டங்கள் என்று அரசாங்கம் அறிவிக்கலாம் என்று
குறிப்பிட்டிருக்கிறது. இவ்வாறு எதை வேண்டுமானாலும் அரசாங்கம் ''உள் கட்டமைப்பு திட்டத்தின்'' கீழ் வகைப்படுத்தி அதற்காக நிலத்தை
எடுத்துக் கொள்ளலாம் என்கிற விதத்தில் இது அரசாங்கத்திற்கு வழிவகை செய்து
தருகிறது. எனவே இந்தப் பிரிவை நீக்கிட வேண்டும் என்று நாடாளுமன்ற
நிலைக்குழு பரிந்துரைத்தது. இப்போது ஆட்சியிலிருப்பவர்களின்
தலைமையில் அமைந்த நாடாளுமன்றக்குழு தான் அறிவித்தது. அப்போது அவ்வாறு
செய்தவர்கள் இப்போது அதே சட்ட முன்வடிவை தாக்கல் செய்திருக்கிறார்கள்.
இச்சட்டமுன்வடிவின் மீது நாங்கள் சில திருத்தங்களை முன்மொழிந்தோம். நாங்கள்
கொண்டுவந்த திருத்தங்களை அப்போது அவர்களும் (பாஜக) ஆதரித்தார்கள். இதுவே
நாங்கள் இந்த அரசின்மீது வைக்கும் குற்றச்சாட்டாகும். எதிர்க்க ட்சி வரிசையில் இருக்கும்போது நாங்கள் சொல்லும் திருத்தங்களையெல்லாம் ஆதரித்தீர்கள்.
ஆனால் இப்போது ஆளும்கட்சி வரிசைக்கு சென்றபின் எதிர்க்கிறீர்கள். இந்தச்
சட்டமுன்வடிவானது மக்கள் விரோத, பொருளாதார விரோத, நாட்டிற்கு எதிரான
ஒன்று.. எனவே இதனைத் தொடர்ந்து நாங்கள் எதிர்ப்போம் என்று தெரிவித்துக்
கொள்கிறேன். நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய சட்டங்கள் எதற்கும் விதிவிலக்கு
அளிக்கக்கூடாது என்று பரிந்துரைத்திருந்தது. இப்போது 13 சட்டங்களுக்கு
விதிவிலக்கு கொடுத்து பட்டியலிட்டிருக்கிறது. இவ்வாறு விதிவிலக்கு
அளிக்கப்பட்டிருக்கும் அம்சங்களில் தனியார் கல்விநிறுவனங்கள் மற்றும்
தனியார் மருத்துவமனைகளையும் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
அடுத்து, கடந்த
ஒன்பது மாத கால ஆட்சியில் ஊழல்கள் எதுவும் இல்லை என்று அவைத் தலைவர்
கூறியிருக்கிறார். ஐமுகூ-1 ஆட்சிக்காலத்தின் போது கூட ஊழல்கள் எதுவும்
இல்லை. பியூஸ் கோயல், மின்சாரத்துறை இணை அமைச்சர் : எப்போதும் ஊழல்கள்
இருந்து வந்திருக்கின்றன. ஐமுகூ-2 காலத்தில் அவை வெளியே வந்தன. சீத்தாராம்
யெச்சூரி: மாண்புமிகு அமைச்சரின் கருத்தோடு ஒத்துப்போகிறேன்.
ஐமுகூ-1
ஆட்சிக்காலத்தில் இந்த ஊழல்கள் அனைத்தும் உருவாயின. ஆனால் அவை ஐமுகூ-2
ஆட்சிக்காலத்தின்போது வெளிச்சத்திற்கு வந்தன. இப்போது, இவர்களின் ஒன்பது
மாத கால ஆட்சியில் உருவாகும் ஊழல்கள், பின்னர் தெரிய வரும். ஒவ்வோராண்டும்
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாம்
உரையாற்றுகிறோம். பொதுவாக குடியரசுத் தலைவர் உரையில் அரசாங்கம் சென்ற
ஆண்டு என்ன செய்தது என்பதும், அடுத்த ஆண்டு என்ன செய்ய இருக்கிறது என்பதும்
இருக்கும். இப்போது ஒரு விநோதமான சூழ்நிலையைப் பெற்றிருக்கிறோம். சென்ற
ஆண்டு குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை, இப்போது ஆற்றிய உரையில் இல்லை.
எதிர்க்கட்சித் தலைவர் அவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார். பல திட்டங்களின்
பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
நேரு - காந்தி குடும்பத்தின் பெயரில்
முன்பிருந்தன. இப்போது அவற்றை ஷ்யாமா பிரசாத் முகர்ஜிக்கள், தீன் தயாள்
உபாத்யாய்கள் என்று மாற்றி இருக்கிறீர்கள். இத்திட்டங்கள் மூலம் நாட்டு
மக்களுக்கு கிடைத்திருப்பது என்ன? அவைத்தலைவர் ஒரு தடவை மார்கரெட் தாச்சர்
கூறியதை மேற்கோள் காட்டினார். அவர் மேற்கோள்மட்டும் காட்டவில்லை,
உண்மையில் அதனை நடைமுறைப்படுத்திக் கொண்டுமிருக்கிறார்.
“அரசாங்கத்தின் வேலை வர்த்தகம் செய்வது இல்லை’’ என்று மார்கரெட் தாச்சர்
கூறினார். ஆனால், நீங்கள் வர்த்தக நிறுவனங்களுக்கு எல்லாம் விதிவிலக்கு
கொடுத்திருக்கிறீர்களே, ஏன்? “அரசாங்கத்தின் வேலை வர்த்தகம் செய்வது
கிடையாது.’’ வர்த்தகம் மேற்கொள்வதை வர்த்தகர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.
நீங்கள் அதனைச் செய்ய வேண்டாம். அவர்களுக்காக நீங்கள் ஏன் இவ்வேலைகளைச்
செய்து கொண்டிருக்கிறீர்கள்? உண்மையில்
அவர்களின் (கார்ப்பரேட்டுகளின்) நலன்களை நீங்கள் மேம்படுத்திக்
கொண்டிருக்கிறீர்கள். இது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. எனவேதான் தனியார்
கல்வி நிறுவனங்களுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் விதிவிலக்கு
அளித்திருக்கிறீர்கள். இது நாட்டு மக்களுக்கு எவ்விதத்திலும்
பயனளிக்கப்போவதில்லை. அடுத்து, குடியரசுத் தலைவர் உரையின் முதல் 25
பத்திகள், இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியம் பற்றி பேசுகிறது. நீங்கள்
குறிப்பிடும் மக்கள் யார்?
ஷ்யாமா பிரசாத் முகர்ஜி மற்றும் தீன்
தயாள்உபாத்யாயா ஆகியோர் குறித்துக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால்,
நாம் பெற்ற வளம் நிறைந்த வரலாற்றுப் பாரம்பரியம் குறித்து எதுவும்
குறிப்பிடப்படவில்லை. நம் நாட்டில் கவுதம புத்தர், மகாவீர் ஜெயின்
ஆகியோரிடமிருந்து நாம் பெற்ற வளமான வரலாற்றுப் பாரம்பர்யம் குறித்தோ,
உபநிஷத்துகள் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் காணப்படும் புண்ணியத்
தலங்கள் குறித்தோ எதுவும் இல்லை. இந்த அரசு மக்களுக்குச் சொல்லும்
நிகழ்ச்சி நிரல் ஒன்று.
ஆனால், அது பின்பற்றும் உண்மையான
நிகழ்ச்சி நிரல் வேறு. இந்த அரசு பின்பற்றும் உண்மையான நிகழ்ச்சி நிரல் என்ன?
ஜிகாத் காதல், வீட்டுக்குத் திரும்புவோம்
மற்றும் அது தொடர்பான அறிக்கைகள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன.
தொடர்ந்து வெளியிடப்பட்டும் வருகின்றன. இந்து நாகரிகத்தைப் புகழ வேண்டும்,
இந்துக்கள் மட்டுமே இந்த நாட்டின் முன்னோர்கள், அவர்கள் மட்டுமே இந்த
நாட்டின் வாரிசுகள் என்ற விதத்தில் அந்தப் பிரச்சாரங்கள் அமைந்துள்ளன.
உண்மைக்கும் இதற்கும் வெகுதூரமாகும். இது குறித்து இந்த அவையில் முன்பும்
கூறியிருக்கிறேன். இவ்வாறான கிட்டப்பார்வையுடன் விஷயங்களை அணுகினோமானால்,
இப்போதுள்ள இந்தியா, தொடர்ந்து நீடித்திருக்க முடியாது. நாம் நம்
பிரதமரிடம் சென்ற கூட்டத் தொடரின்போது என்ன கேட்டோம்? நம் அரசமைப்புச்
சட்டத்திற்கு எதிராகவும், இந்திய தண்டனைச் சட்டத்தின் குற்றப்பிரிவுகளை
ஈர்க்கும் விதத்திலும் பேசி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
கேட்டிருந்தோம். எந்த உறுதிமொழியும் அவரால் கொடுக்கப்படவில்லை. பிரதமர்
ஒரு கிறித்துவக் குழுவினரின் விழா ஒன்றுக்குச் சென்றிருந்தபோது அங்கே
சகிப்புத்தன்மை குறித்து போதனைகள் செய்துள்ளார். நல்லது. ஆனால் நம்
அரசமைப்புச்சட்டமானது மக்களுக்கு வாக்குறுதிகளை மட்டுமல்ல, சமத்துவத்தையும் உத்தரவாதப்படுத்தி இருக்கிறது. இந்துக்கள் அல்லாதவர்கள் நாட்டில்
இந்துக்களுக்குச் சமமாகக் கருதப்படுவார்கள் என்று எதுவும்
குறிப்பிடப்படவில்லை. இதுதான் அவர்களின் உண்மையான நிகழ்ச்சிநிரல்.
நிச்சயமாக இத்தகைய நிகழ்ச்சி நிரல் நாட்டின் எதிர்கால நலன்களுக்கோ, நம் புகழுக்கோ ஏற்றதல்ல. இவ்வாறு நம் நாட்டில் பல்வேறு
மதத்தினருக்கிடையேயும் இருந்துவந்த சமரசப் பண்பை மறுதலிக்கும் விதத்தில்
இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக் கிறது.
இது மிகவும் மோசமான விஷயமாகும்.
நோபல்பரிசு வாங்கிய அமர்த்தியாசென் மீது
அவதூறை அள்ளி வீசியது போன்று, பாரத ரத்னா மற்றும் நோபல் பரிசு பெற்ற அன்னை
தெரசா மீது அவதூறை அள்ளி வீசியிருப்பது போன்று மிகவும் மோசமான விஷயங்கள்
நம் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய மோசமான கருத்துக்கள் நம்
ஜனநாயகத்திற்கே குந்தகம் விளைவிக்கக் கூடியவைகளாகும். இந்த அரசு, நம்
அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும்
அளித்துவரும் துரதிருஷ்டவச மான நிலையை மிகவும் வேதனையுடன் தெரிவித்துக்
கொள்ள விரும்புகிறேன். இந்துக்கள் மட்டுமே இந்த நாட்டின் முன்னோர்கள் என்று
பேசுபவர்கள் இன்றைய தினம் நாடு முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ் இயக்கததின் தலைவர் அன்னை தெரசா குறித்து என்ன கூறியிருக்கிறார்?
“அன்னை தெரசாவின் பணி உள்நோக்கம் கொண்டது. கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்ற
வேண்டுமென்கிற ரகசிய நோக்கம் அதில் இருந்தது’’ என்கிறார். வேறொரு
தருணத்தில் அவர் கூறுகிறார்: “இந்துஸ்தான் என்பது இந்து ராஷ்ட்ரம். இதுதான் உண்மை. இந்த சிந்தனையுடன் நாம் முன்னேறிச் சென்று
கொண்டிருக்கிறோம். இந்த தேசத்தை மாபெரும் தேசமாக மாற்றிட அனைத்து
இந்துக்களும் அணிதிரள வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். நீங்கள்
விரும்பினால் அனைத்து இந்துக்களையும் அணிதிரட்டுங்கள். பிறப்பால் நானும்
ஒரு இந்து தான். ஆனால் ஒரு நாத்திகனாக, ஒரு கம்யூனிஸ்ட்டாக மாறி
இருக்கிறேன். உங்கள் சிந்தனையோட்டத்தின்படி “யார் இந்து?’’ துணைத் தலைவர் :
இந்து மதத்தில் நாத்திகத்திற்கும் இடம் உண்டு. சீத்தாராம் யெச்சூரி :
காலம் காலமாய் இவ்வாறு இருந்து வந்திருக்கிறது.
ஆர்எஸ்எஸ் தலைவர்
மேலும், “சங் பரிவாரத்திற்கு இது சாதகமான நேரம்’’ என்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு இன்று நடைபெறுவது என்னவென்றால், மக்கள் மத்தியில்
தெளிவாய்த் தெரியக்கூடிய விதத்தில் வெளியே கூறப்படாத நிகழ்ச்சிநிரல் ஒன்று
இவர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இன்றைய ஆட்சியாளர்களின்
அரசியல் குறிக்கோள் என்ன? முன்பே இவர்கள் எதிர்க்கட்சி வரிசையில்
இருந்தபோது, “அரசாங்கம் 10 ஜன்பத்திலிருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலமாக
செயல்பட்டுக் கொண்டிருக்கிறது’’ என்று கூறிக்கொண்டிருந்தார்கள். இன்றைய
நிலைமை என்ன? பாஜகவின் முன்னாள் தலைவர், தற்போது உள்துறை அமைச்சராக
இருப்பவர், என்ன சொல்கிறார். ரிமோட் கண்ட்ரோல் என்கிற பேச்சுக்கே இடமில்லை.
நாங்களும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் ஒன்றுதான். இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைப்
பண்புக்கான உச்சி மாநாட்டில் அவர் என்ன கூறினார்?
“ஆர்எஸ்எஸ் வெளிசக்தி
அல்ல. நாங்கள் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள்தான். நான் ஆர்எஸ்எஸ்-இலிருந்து
வந்திருக்கிறேன். பிரதமரும் ஓர் ஆர்எஸ்எஸ் தொண்டர்தான். நாங்கள் குழந்தைப்
பருவத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களாக இருக்கிறோம். நாங்கள்
இறக்கும்வரை அதில் நீடிப்போம்.’’ இவ்வாறு, இது ஓர் ஆர்எஸ்எஸ் அரசாங்கம்
என்பது தெள்ளத்தெளிவான ஒன்று. நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருப்பது
என்ன? மிகவும் மட்டரகமான வாக்கு வங்கி அரசியல் நம் நாட்டில் நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. எப்படி? சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பைப்
பரப்புவதன்மூலம் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மிகவும் ஆபத்தான
ஒன்று. சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பைப் பரப்புவதை ஒட்டுமொத்த
உலகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் மட்டுமல்ல, நம் நண்பர், பராக்
ஒபாமாவும், இதுகுறித்துக் கூறியதைக் கேட்டோம். துணைத்தலைவர் : அவர்
உங்கள் நண்பரா? சீத்தாராம் யெச்சூரி : இல்லை, அவர் நம் நண்பர், பிரதமரின்
நண்பர். பராக் ஒபாமா இதுகுறித்து இரு தடவை குறிப்பிட்டிருக்கிறார். அவர்
இந்தியாவிலிருந்து சென்ற பின் வெள்ளை மாளிகையிலிருந்துகூட இது குறித்து
அறிக்கை வெளியானது. எனவே, இதனை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். உலகம்
நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்தியமக்கள் துன்பத்திற்கு ஆளாகிக்
கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்கள் இன்றைய தினம் பின்பற்றிவரும்
அவர்களின் உண்மையான நிகழ்ச்சிநிரலைப் பின்பற்றிவருவதை நிறுத்திக் கொள்ள
வேண்டும். அவர்கள் பின்பற்றி வரும் நிகழ்ச்சிநிரல் நாட்டின் நலன்களுக்கு
உதவாது.
புதுடெல்லியிலிருந்து : தோழர். Sanmuga Veeramani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக