ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

தன்மானத்தையும் சுயமரியாதையையும் இழந்து கிடக்கும் தமிழ்நாடு...!


 தமிழக மக்கள் பற்றிய உளவியல் ரீதியான ஆய்வு....!                           
              
             ''மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு'' என்று சுயமரியாதையும், பகுத்தறிவும் தந்தை பெரியாரால் கற்றுத்தரப்பட்டு திராவிட இயக்கம் வளர்ந்த தமிழ்நாடு இது. தமிழ் மொழி ஊக்குவிப்பு, இந்தி எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு என பல்வேறு நல்ல அம்சங்ககளை தமிழக மக்களுக்கு ஊட்டி இயக்கம் வளர்த்து, பின்னாளில் அண்ணாவால் திராவிட இயக்கம் அரசியல் கட்சியாய் மாறி மக்களின் நம்பிக்கையை பெற்று அவர்களின் ஆதரவோடு தமிழ்நாட்டின் 1967-ஆம் ஆண்டில் அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் அரியணையில் ஏறியது. அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதி முதலமைச்சர் ஆனார். அப்போது பிடித்தது தமிழ்நாட்டிற்கு ''சனி'' - இன்று வரை விடவில்லை. இந்தியாவில் ஊழலை கண்டுபிடித்தவர்கள் காங்கிஸ் கட்சிக்காரன்கள் தான். ஆனால் மாட்டிக்கொள்ளாமல் விஞ்ஞானப்பூர்வமாக எப்படி ஊழல் செய்வது என்பதை கண்டுபிடித்தவர்கள் திமுகக்காரர்கள் தான். தமிழ் மொழி, தமிழக மக்கள் என்ற சிந்தனை மாறி, புதிய புதிய திட்டங்களை  அறிவிப்பதும்,  அதில் திட்டம் போட்டு தங்களுக்கான பங்குகளை கணக்குப்போட்டு கொள்ளையடிப்பதும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பதுமாக திமுகவின் ஆட்சி என்பது திசைமாறியது.                  சுயமரியாதையும், பகுத்தறிவும் தங்களுக்குள் ஊறிப்போன அன்றைய தமிழ்நாட்டு மக்கள் ஆட்சியில் இருப்பவர்கள் கொள்ளையடிப்பதையும், சொத்து சேர்ப்பதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த சமயத்தில் தான் சினிமாவில் நல்லவனாகவும், வாரிக்கொடுக்கும் வள்ளலாகவும், பெண்களின் பாதுகாவலனாகவும், தொழிலாளர்களின் தோழனாகவும் நடித்து, முற்போக்குப் பாடல்களுக்கு  வாயசைத்து தமிழ்நாட்டு மக்களை கவர்ந்த எம்.ஜி.ஆர் ஊழலையும், கொள்ளையையும் பிடிக்காத உத்தமராய் திமுகவை விட்டு வெளியேறினார். 1972-ஆம் ஆண்டில் அண்ணா திமுக என்ற புதிய கட்சியை தொடங்கினார். ஏற்கனவே ஒரு நேர்மையான கதாநாயகனாக தமிழ்நாட்டின் மக்களின் மனதில் நிறைந்துவிட்ட எம்.ஜி.ஆரால்,   தான்  ஊழலில்லாத நல்லாட்சியை மக்களுக்கு தருவேன் என்று ஊர்  ஊராய் பிரச்சாரம் செய்து மிக சுலபமாக தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை பெறமுடிந்தது. கருணாநிதி செய்த ஊழலால் வெறுத்துப்போன தமிழ்நாட்டு மக்கள் ஊழலை ஒழிக்கவந்த பரமாத்மாவாக பார்த்தார்கள். அதன் காரணமாக 1977-ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் அண்ணா திமுகவை வெற்றிபெற செய்து எம்.ஜி.ஆரை முதலைமைச்சராக அரியணை ஏற்றுகிறார்கள். அனால் ஆட்சி மாறியதே ஒழிய, ஆட்சி முறையில் மாற்றமில்லை. எம்ஜிஆர் சொன்னது போல் ஊழலை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியவில்லை. திமுக ஆட்சிக்காலத்தில் விதைக்கப்பட்ட ஊழல்களே அண்ணா திமுக ஆட்சிக்காலத்திலும் பின்தொடர்ந்தது. அதுமட்டுமல்ல, சினிமாவில் நடித்தது போல், ஆட்சிக்கு வந்தவுடன் எம்ஜிஆரால் நிஜத்தில் தான் ஒரு தொழிலாளர்களின் தோழனாக நடிக்கக்கூட முடியவில்லை. தங்களின் உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர்களை, விவசாயிகளை, மீனவர்களை, தன் கையிலிருந்த காவல் துறையை கொண்டு துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினார். சர்வாதிகார முறையில் அடக்குமுறைகளை கையாண்டார்.
               இப்படியாக  ஊழல்களும் , தொழிலாளர் விரோத செயல்களும் மலிந்துவிட்டாலும்,  மக்களின் மனதில் வெறுப்பு ஏற்படுவதற்கு பதிலாக ''நல்லவன்'' என்ற  ''சினிமா எம்ஜிஆர் பிம்பம்''  தான் தமிழ்நாட்டு மக்களின் கண்ணுக்கு முன்னால் நின்றது. இந்த காலக்கட்டத்தில் தான் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு பாதைகளிலிருந்து, தமிழ்நாட்டு மக்கள் திசை மாறினார்கள்.  அதன் காரணமாக தான் எம்ஜிஆர் மூன்று சட்டமன்றத்தேர்தல்களிலும்  வெற்றி பெற்று,  தான் சாகும் வரை தொடர்ந்து பத்து ஆண்டுகள் முதலைமைச்சராகவே வாழ்ந்தார். அதன் பிறகு தமிழ்நாட்டு மக்கள் ஊழலையும் ஊழல்வாதிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வரத்தொடங்கினார்கள்.
                எம்ஜிஆரின் மரணத்திற்கு பிறகு அண்ணா திமுக ''வாரிசுத் தகராறில்'' சிக்கி எம்ஜிஆரின் மனைவியான ஜானகியின் தலைமையில் ஓர் அணியாகவும், எம்ஜிஆரின் கதாநாயகிகளில் ஒருவரான ஜெயலலிதாவின் தலைமையில் மற்றோர் அணியாகவும் உடைந்து போக, பத்து ஆண்டு காலமாக மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியாமல் பதவி சுகத்தை இழந்துவிட்ட திமுக மீண்டும் துளிர் விட ஆரம்பித்தது. 1989-ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் சுயமரியாதையிலிருந்து சறுக்க ஆரம்பித்தார்கள். யாரை ஊழல்வாதிகள் என்று பத்து ஆண்டுகளுக்கு முன்பு  தூக்கி எறிந்தார்களோ, அவர்கள் தூய்மையானவர்களாக கருதப்பட்டார்கள். அவர்களையே தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் அரியணை ஏற்றினார்கள். பத்து ஆண்டு கால காத்திருப்புக்கு பின் மீண்டும் கருணாநிதியே முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டு ஆண்டுகால திமுக ஆட்சி 1991-ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் வருகிறது. அந்த நேரத்தில் இரண்டுபட்ட அண்ணா திமுக, எம் ஜி ஆரின் கதாநாயகி ஜெயலலிதாவின் தலைமையில் ஒன்றுபட்டு நின்றது. மக்களின் கவனம் எம்.ஜி.ஆரின் கதாநாயகி ஜெயலலிதாவின் மீது ஈர்த்தது. அதுவரையில் ஜெயலலிதாவை  கதாநாயகியாக பார்த்த தமிழ்நாட்டு மக்கள் , 1991-ஆம் ஆண்டு தேர்தலில் எம்.ஜி.ஆரின் வாரிசாக - கட்சித்தலைவராக பார்க்கத் தொடங்கினார்கள்.
                கருணாநிதியின் குடும்ப அரசியலில் வெறுப்புற்ற தமிழ்நாட்டு மக்கள் எம்.ஜி.ஆரின் வாரிசான ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திமுகவை தேர்ந்தெடுத்தார்கள். ஜெயலலிதா முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். ஒரு பெண் மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். அதை வரவேற்கவேண்டும். ஒரு நடிகை நாடாள வந்தார். அதிலும் தப்பில்லை. வரவேற்கலாம். அனால் இவரது ஆட்சியிலோ  அலங்கோலங்களும், அவஸ்தைகளும், எங்கும் ஆர்ப்பரிப்பும், எதிலும் ஆடம்பரமும், தொழிலாளர் விரோதமும், ஒரு ரூபாய் சம்பளம் பெற்றதும், ஆனால் வியக்கத்தக்க ஆடம்பர வாழ்க்கையும், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பும் தமிழ்நாட்டு மக்களை முகம் சுளிக்கவைத்தன. அதனால் 1991-ஆம் ஆண்டு ஊழல்வாதியாக தூக்கியெறியப்பட்ட கருணாநிதி, ஐந்து ஆண்டுகள் கழித்து,  தமிழ்நாட்டு மக்களின் கண்களுக்கு உத்தமராக தெரிந்தார். அதன் காரணமாக 1996-ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தமிழ்நாட்டு மக்கள் திமுகவையே வெற்றிபெற செய்தார்கள். கருணாநிதி மீண்டும் முதலமைச்சர் ஆனார். இந்த தேர்தலில் இருந்து  தான் தமிழ்நாட்டு மக்கள் ஊழலை - இலஞ்சத்தை மனதார அங்கீகாரம் செய்ய தொடங்கினார்கள். யார் குறைந்த ஊழல் செய்தவர்கள் என்ற ''அளவுகோலை'' வைத்து ஓட்டுப்போட ஆரம்பித்தார்கள்.  கருணாநிதி தான்  முதலமைச்சர் பதவிக்கு வந்தவுடன் ''ஒரு தவறு செய்தால் - அதை தெரிந்து செய்தால் - அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்'' என்று எம்.ஜி.ஆர் பாணியில் முதல் வேலையாக சென்ற ஐந்தாண்டில் ஊழல் புரிந்து சொத்துகளை சேர்த்தார் என்று குற்றம் சாட்டி ஜெயலலிதாவையும், அவரது கூட்டாளி அமைச்சர்களையும் சிறைக்குள் தள்ளினார். அவர்கள் மீது ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகள் போட்டார். தன்னை ஊழல்களுக்கு அப்பாற்பட்ட யோக்கியனாக தமிழ்நாட்டு மக்களுக்கு காட்டிக்கொண்டார். நம்பவைத்தார்.
                ஆனால்  அந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் மக்களின் எண்ண அலைகளை - மனநிலையை புரிந்துகொண்ட கருணாநிதியும் அவரது கூட்டாளி அமைச்சர்களும் முன்பை விட ஊழலில் கைத்தேர்ந்தவர்கள்  ஆனார்கள். கட்சியிலும், ஆட்சியிலும் முற்றிலுமாக  குடும்ப அதிக்கம் - தலையீடு, அடுத்த பல தலைமுறைகளுக்கு வேண்டிய சொத்து குவிப்பு, அனைத்துத்துறைகளிலும் ஊழல் -  இலஞ்சம் - சிபாரிசு என  தமிழ்நாடு ஊழலில் புதிய பரிணாம வளர்ச்சியை காணத்தொடங்கியது. முதலமைச்சரும், அவரது அமைச்சர்களும், கட்சித்தலைவர்களும் முடிந்தவரை கொள்ளையடிப்பதும், சொத்து சேர்ப்பதும், இடையூறாக இருப்பவர்களை வெட்டிச்சாய்ப்பதுமாக அந்த ஐந்து ஆண்டுகளில் எந்தவித அச்சமில்லாமலும், கூச்சமில்லாமலும் செய்தார்கள். மாநிலத்தில் ஊழல் பெருக்கெடுத்து ஓடியது.                 இதன் காரணமாக 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் சொந்த அறிவைப் பயன்படுத்தாமல், மீண்டும்  ''ஊழல் அளவுகோலை'' பயன்படுத்தி ''இவருக்கு அவரே பரவாயில்லை'' என்று அண்ணா திமுகவிற்கு வாக்களித்து ஜெயலலிதாவை மீண்டும்  ஆக்கினார்கள்.  ஜெயலலிதா முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவுடன் உத்தமர் ஆகிவிட்டார். அதனால் சென்ற ஐந்து ஆண்டுகளில் ஊழல் புரிந்த கருணாநிதியின் மீது ஊழல் வழக்கு போட்டு, நடுராத்திரியில் கைது செய்து சிறைக்குள் தள்ளி ''பழிக்குப்பழி'' தீர்த்துக்கொண்டார். ஆனாலும் அந்த ஐந்து ஆண்டுகளில் ஊழல் குறைந்த பாடில்லை. ஊழல் என்பது புதிய புதிய வகைகளில் பரிணாம வளர்ச்சி அடைந்தது. முதலமைச்சர் அதிகார திமிரில் தொழிலாளர்களுக்கு எதிரான - அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஆனந்தம் அடைந்தார். பாதிப்படைந்த மக்கள் அவருக்கு எதிராக திரும்பினார்கள். அதனால் 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் ''ஊழல் அளவுகோலை'' பயன்படுத்தி ''இவருக்கு அவரே மேல்'' என்று கூறி அண்ணா திமுகவை தோற்கடித்து திமுகவை தேர்ந்தெடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஊழல் காரணமாக தூக்கியெறியப்பட்ட கருணாநிதியையே மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் உட்காரவைத்து அழகு பார்த்தார்கள்.
               இந்த முறை ஜெயலலிதாவின் மீது ''பழிக்குப்பழி - பதில் கைது '' என்ற நடவடிக்கையெல்லாம் கிடையாது. காரணம் இருவரும் ''பழிக்குப்பழி'' நடவடிக்கைகளில் மாறி மாறி ஈடுபடுவதால், இந்த இருவரும் அல்லாமல் மூன்றாவதாக வேறு ஒருவரை தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துவிடப் போகிறார்கள் என்ற பயம் கருணாநிதி - ஜெயலலிதா ஆகிய இருவர் உள்ளத்திலும் எழுந்துவிட, இருவருமாக சேர்ந்து கையெழுத்திடப்படாத ''புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு'' வந்துவிட்டார்கள்.  இந்த ஐந்தாண்டுகளில் என்னால் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவையும் சுருட்டி விடுகிறேன். அடுத்த பல தலைமுறைகளுக்கும் சொத்து சேர்த்துவிடுகிறேன். அடுத்த ஐந்தாண்டிற்கு தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் உங்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். மிச்சமுள்ளதை நீங்கள் சுருட்டிக்கொள்ளுங்கள். சொத்து சேர்த்துக்கொள்ளுங்கள். வேறு யாரையும் அனுமதிக்காமல் இப்படியே ஐந்தாண்டிற்கு ஒரு முறை நாம் இருவரும் மாறிமாறி ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டையே கொள்ளையடித்து சூறையாடிவிடலாம் என்று வெளியில் ''எலியும் பூனையுமாக'' இருந்துகொண்டு  அவர்களுக்குள்ளாகவே ''புரிந்துணர்வு ஒப்பந்தம்'' போட்டுகொண்டு ஒற்றுமையுடன்  ஏமாற்று அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
                  தமிழ்நாட்டு மக்களும் ஊழலோடு  சமரசம் செய்துகொண்டார்கள். ஊழல் செய்வது தவறில்லை என்கிற அளவிற்கு சமரசம் செய்துகொண்டுவிட்டார்கள். ஊழல் செய்யுங்கள் - சொத்து சேர்த்துக்கொள்ளுங்கள் - எங்களுக்கும் கொஞ்சம் கொடுங்கள் என்கிற வகையில் ஊழலுக்கு  அங்கீகாரம் கொடுத்துவிட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும்  தரும் வகைவகையான இலவசங்களுக்கும், ஓட்டுக்கு தரும் 1000-2000-த்துக்கும் மயங்கி தன்மானத்தையும், சுயமரியாதையையும் இழந்து கையேந்தி நிற்கிறார்கள். தமிழ்நாடு என்ற குழந்தையை ஐந்தாண்டுகளுக்கு அய்யாவிடமும், பிறகு ஐந்தாண்டுகளுக்கு அம்மாவிடமும் கொடுத்துவிட்டு வேடிக்கைப்பார்க்கிறார்கள். தந்தை பெரியார் தந்துவிட்டுப் போன தன்மானமும், சுயமரியாதையும், பகுத்தறிவும் எங்கே போனது. தமிழ்நாட்டு மக்கள் அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு வெட்கமில்லாமலும், கூச்சமில்லாமலும், சுயநினைவே இல்லாமலும்   இவர்கள் இருவருக்கும் பின்னால் நிற்கிறார்கள் என்பது தான் வேட்கக்கேடாய் இருக்கிறது.
               தமிழ்நாட்டு மக்கள் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வரை இப்படித்தான் நடந்துகொண்டு வருகிறார்கள் என்பதை உளவியல் ரீதியாக கூர்ந்து பார்ப்பவர்களுக்கு புரியும். 

கருத்துகள் இல்லை: