சனி, 21 பிப்ரவரி, 2015

மோடியின் அழுக்குக் கோட்டு ஏலவிற்பனை சட்டவிரோதமானது...!


                      சென்ற மாதம் குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் இந்தியா வந்தபோது, ஒரு நீண்டகால பால்யநண்பன் தன்னை பார்க்க வருவது போல நரேந்திரமோடி  புது சொக்காவெல்லாம் போட்டுக்கொண்டு தீபாவளியே கொண்டாடினார். நிமிட்டுக்கு நிமிட்டு புது சொக்காதான் சும்மா சோக்கா போட்டிருந்தார். அதில் இந்திய மக்களே இதுவரையில் பார்த்திராத வகையில் விலையுயர்ந்த கொட்டு அணிந்து நூற்றுக்கணக்கான கேமராவுக்கு முன்னாடி ஒபாமாவோடு தோட்டத்தில்  வலம் வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒன்று - 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதுவது போல அவர் அணிந்திருந்த புதிய கோட்டில் ''நரேந்திர தாமோதர்தாஸ் மோடி... நரேந்திர தாமோதர்தாஸ் மோடி....'' என்று நேர்கோட்டில் எழுதப்பட்டு டிசைன் செய்யப்பட்டிருந்தது. அப்படி எழுதலன்னா ஒபாமாவிற்கு இவரை அடையாள தெரியாதாமா....! மற்றொன்று - அந்த கோட்டு என்பது இங்கிலாந்து நாட்டில் தைக்கப்பட்டு மோடிக்கு அனுப்பப்பட்ட ரூ. 10 இலட்சம் மதிப்புள்ள கொட்டு என்பது தான் இந்திய மக்களை ''ஆ...வென்று'' வாயை திறக்கவைத்தது. ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப்படுகிற கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டின் பிரதமர் இப்படியெல்லாம் விலையுயர்ந்த ஆடை அணிவதை பார்த்து ஊடகங்களிலும், வலைத்தளங்களிலும் மோடிக்கெதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதனையடுத்து, அந்த கோட்டு மோடியே காசுகொடுத்து தைக்கவில்லை என்றும்,   மோடிக்கு பரிசு பொருளாக வந்த கோட்டு என்றும் மோடி தரப்பிலிருந்து மாற்றி சொல்லப்பட்டது.
                அதன் பிறகு ''தர்மப்பிரபுவான'' மோடி தான் அணிந்து ஒபாமாவோடு வலம் வந்த அந்த அழுக்குக் கோட்டை பொதுமக்கள் மத்தியில் ஏலம் விட்டு வரும் தொகையை பொதுக்காரியத்திற்கு பயன்படுத்தப் போவதாக கொஞ்சமும் கூசாமல் அறிவித்தார். பல்வேறு சட்டச்சிக்கல்களால் சேர்த்து தைக்கப்பட்ட அந்த கோட்டு என்பது  பிரதமர் என்ற வகையில் மோடியே  தன்னுடைய பதவிக்கு தானே வைத்துக்கொண்ட வேட்டு என்பது தான் உண்மை. குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் முதலமைச்சர் போன்ற உயர் பதவிகள் வகிப்போர் தங்களது பதவிக்காலத்தில் தங்களுக்கு வழங்கப்படுகிற ''விலைவுயர்ந்த'' பொருட்களை தங்களது சொந்தப்பொருட்களாக மூட்டைக்கட்டி வைத்துக்கொள்ளாமல், அரசு கருவூலத்தில் ஒப்படைக்கவேண்டும் என்று அலுவலக  விதிமுறையும் இந்திய சட்டமும் சொல்கின்றன. அதையெல்லாம் மோடி காற்றில் பறக்கவிட்டிருக்கிறார் என்பதையும் இந்த நாடு உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
                         அதுமட்டுமல்ல, ஏலம் நடைபெற்ற கடந்த மூன்று நாட்களாக மோடியின் அழுக்குக்கோட்டின் விலை உயர்ந்துகொண்டே போனது. இறுதியாக நேற்று 4.31கோடி அளவிற்கு விலைபோனது. இங்கும் மோடிக்கு எதிராக சட்டச்சிக்கல் இருக்கிறது. இப்படியாக ஏலம்விட்டு வரும் தொகையை பொதுக்காரியங்களுக்கு பயன்படுத்தி, பிரதமர் மோடி   மக்கள் மத்தியில் தன்னை ஒரு வள்ளலாக காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார் என்பதும் உண்மை. சட்டப்படியும் விதிமுறைப்படியும் ஏலத்தில் கிடைக்கும் தொகையையும் அரசு கருவூலத்தில் தான் சேர்க்கவேண்டும்.
                 மேற்சொன்ன மோடியின் இரண்டு வகையான விதிமீறல்களையும், சட்டமீறல்களையும் சி.பி.ஐ விசாரணை செய்யவேண்டும். ஏற்கனவே பரிசுப்பொருட்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் ஏலம் சம்பந்தமாக ஜெயலலிதா மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் மீதான விசாரணை முன்னுதாரணமாக இருக்கின்றன.

கருத்துகள் இல்லை: