செவ்வாய், 3 மார்ச், 2015

மோடியின் முகத்தில் கரியை பூசிய மாநிலங்களவை...!


                       மக்களவையில் ராட்சச பலத்தை வைத்துக்கொண்டு தன்  இஷ்டப்படி ஆட்டம் போடுகிற மோடியின் முகத்தில் மாநிலங்களவை நன்றாக கரியை பூசியிருக்கிறது. வழக்கம்போல் ஆளும்கட்சியின் தலைமை எழுதிக்கொடுத்த உரையை சென்ற மாதம் புதிய ஆண்டிற்கான நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் வாசித்துச்சென்றார். ஆனால் கருப்புப் பணத்தை மீட்கவும், உயர்மட்ட ஊழலை தடுக்கவும் மோடி தலைமையிலான அரசு தவறிவிட்ட நிலையில், குடியரசுத்தலைவர் தனது உரையில் அதைப்பற்றி குறிப்பிடவில்லை என்று கூறி, அந்த உரையின் மீதான திருத்தம் ஒன்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் தோழர்.சீத்தாராம் யெச்சூரி, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்ற மாநிலங்களவை உறுப்பினர்களான தோழர்.டி.கே.ரங்கராஜன், தோழர்.பி.ராஜீவ் ஆகியோர் மாநிலங்களவையில் தாக்கல் செய்தனர்.
                  இந்த குறிப்பிட்ட  திருத்தத்தின் மீது பிரிவு வாரி வாக்கெடுப்பு கோருவது என்று எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு முடிவெடுத்து களத்தில் இறங்கின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தம் 233-ன் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தினார். ஆனால் அந்த திருத்தத்தின் மீது வாக்கெடுப்பு கோர வேண்டாம் என்றும், அப்படி கோருவது என்பது குடியரசுத் தலைவர் உரைக்கு மரியாதையாக இருக்காது என்றும் நாடாளுமன்ற அலுவல்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு மாநிலங்களவை உறுப்பினர்களிடம் கெஞ்சியிருக்கிறார். ஆனால் குடியரசுத் தலைவர் உரை என்பது அரசின் தயாரிப்பே என்பதனால் அதில் திருத்தம் கோருவது தவறல்லவே  என்று எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வாக்கெடுப்பு நடத்தவேண்டி விடாப்பிடியாக நின்று, வாக்கெடுப்பு நடத்துவதைத் தடுக்க ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு வகையான முயற்சிகளையும்  முறியடித்து  ஒற்றுமை காத்தனர் என்று தான் சொல்லவேண்டும்.
                 பின்னர் வேறுவழியின்றி, திருத்தம் 233-ன் மீது பிரிவுவாரி வாக்கெடுப்பு நடத்த அவை தலைவர் ஹமீத் அன்சாரி ஒப்புக்கொண்டதைத் அடுத்து நடைபெற்ற பிரிவுவாரி வாக்கெடுப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுவந்த திருத்தத்திற்கு ஆதரவாக 118 வாக்குகளும், எதிராக 57 வாக்குகளும் பதிவாகி தீர்மானம் வெற்றி பெற்றது. மாநிலங்களவையின் இந்த சம்பவம் மோடியையும், அவரது கட்சினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது என்பது தான் உண்மை. உலக அரங்கில் தன்னை மாபெரும் தலைவராக காட்டிக்கொள்ளும் மோடிக்கு இது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

கருத்துகள் இல்லை: